ஜெகனுக்கு, மனைவி தன்னை ஒரு கேள்வியும் கேட்காததே பெரும் குற்ற உணர்வாக இருந்தது. தன்னை நம்பி வந்த பெண்ணுக்கு என்ன வாழ்க்கையை கொடுத்து இருக்கிறேன். திருமணம் முடிந்து நான்கு வருடங்களை தொட்டாச்சு. திரும்பி பார்த்தால் மனைவிக்கு இரண்டு குழந்தைகளை தவிர எந்த வளமான வாழ்க்கையையும் கொடுக்கவில்லை.
வாழவே தெரியாத தனக்கெல்லாம் எதற்கு மனைவி, பிள்ளைகள். மற்றவர்கள் சொல்வது போல பெற்றவர்கள் வளர்ப்பு தான் சரியாக இருக்கும். தனக்கு யாரும் இல்லாததால் தன் வளர்ப்பு சரியாக அமையவில்லையோ என்று தன்னைத்தானே குற்ற படுத்திக் கொண்டான்.
Advertisement
இந்த நிமிடம் வரைக்கும் அவனால் வாழ்க்கையில் ஒரு தெளிவை காணவே முடியவில்லை. அடுத்து என்ன செய்வது என்றால் பெரும் குழப்பம் தான். கணவனை நம்பித்தான் என்றில்லாமல் மீனாவாக ஒரு முடிவை செயல்படுத்தியது அவனுக்கு பெரும் ஆறுதல். தன்னை எதிர்பார்த்து மனைவி நின்றிருந்தால் நிச்சயம் அவன் திகைத்துப் போய் தான் பார்த்திருப்பான். நல்ல வேலை கிடைக்கவில்லை, சரியான சாப்பாடு இல்லை, ஒரு நிலையான உறக்கம் கூட கிடையாது. இன்று மனைவி மட்டும் உடன் இருக்காவிட்டால் அவன் ஒரு அனாதை. நெஞ்சடைக்க திரும்பி மனைவியை பார்த்தான். மீனா மிக தெளிவாக இருந்தாள்.
அடுத்து என்ன செய்வது என்பதில் உறுதியாக தெரிந்தாள். இந்த முறை அவள் வாழ்க்கையையே பணயமாக வைத்துள்ளாள். கொஞ்சம் சறுக்கினாலும் இவர்களோடு சேர்ந்து விழுகப்போவது இவர்கள் பிள்ளைகள். அதனால் எவ்வளவு கடின உழைப்பையும் போட மீனா தயாராக நின்றாள். கணவனை பிரிந்திருந்த கொஞ்ச நாட்களில் வெளி உலகம் அவளுக்கு நிறைய கத்துக் கொடுத்தது. சும்மா சும்மா அவள் கணவனை குற்ற படுத்த விரும்பவில்லை.
என் புருசன் சம்பாதிக்கல, பிள்ளைகளை பார்க்கல, வீடு கட்டல, நகை எடுக்கல, காசு கொடுக்கல என்று எல்லா பொறுப்புகளையும் கணவன் மீது சுமத்துவதை விட தானும் முழு உழைப்பை போட வேண்டும் என்று புரிந்து கொண்டாள். எல்லா பெண்களும் தன்னை கையில் வைத்து தாங்கும் கணவனை தான் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு மீனாவும் விதிவிலக்கல்ல. அவளுமே தன்னை அனுசரித்துச் செல்லம் கொடுக்கும் கணவனையே அதிகம் எதிர்பார்த்தாள். இவ்வளவுக்கும் அவர்கள் காதல் கல்யாணம் முடித்தவர்கள். ஆனால் என்ன செய்ய ஜெகன் வந்து ஹீரோ மெட்டீரியல் கிடையாது. சராசரியான குறை, நிறைகளை கொண்ட ஆண்மகன். அவனை அனுசரித்து சரி கட்டி தான் இந்த வாழ்க்கையை வாழ முடியும்.
Advertisement
மீனா முன்பே சொல்லி வைத்தது போல தன் தோழியின் உதவியோடு ஒரு வீட்டை தயார் செய்து வைத்திருந்தாள். வீடு விலாசமாக இருந்தாலும் பெரிய அளவில் வசதிகள் இல்லை ஓட்டு வீடு தான்.
Advertisement
ஜெகன் வீட்டை சுற்றி பார்த்தான். ஓரளவு நகராட்சிக்கு உட்பட்டது. தண்ணி எல்லாம் வெளியில் தான் எடுக்க வேண்டும். ஓடி ஆடும் இரு பிள்ளைகளுக்கு விளையட வசதியான இடம்.. மனைவி நிறைய யோசித்து செயல்படுகிறாள் என்று ஜெகன் கண்டு கொண்டான்.
காய்கறி கடை வைப்பது தான் அவர்கள் யோசனை. அவள் தோழியின் கணவன் உழவர் சந்தையில் தனியாக மார்க்கெட் வைத்திருக்க இவளும் அதையே தேர்ந்தெடுத்து இருக்கிறாள்.
“இதெல்லாம் நமக்கு சரிவருமா மீனா?” என்றான் ஜெகன்.
Advertisement
_வரும் மாமா. நான் உங்க கூட தான் இருக்கேன்”
“தனியா நம்மளும் காய்கறி மார்க்கெட் போட போறோமா?”
“இல்ல மாமா, தனியா மார்க்கெட் போடுறதுக்கு அப்ரூவல் வாங்கணும் அதுக்கு நிறைய வேலை இருக்கு”
“அப்புறம்”
“கையில இருக்குற காச வச்சு ஒரு சின்ன குட்டியானை மாதிரி வண்டி வாங்க போறோம். கொரோனா காலத்துல இருந்து ஊர் ஊருக்கு காய்கறி விற்கிறது நல்ல வியாபாரமா இருக்கு. நாமளும் அதைத்தான் பண்ண போறோம். என் பிரண்டோட வீட்டுக்காரர் மூலமா ஏலத்துல காய்கறி எடுத்து ஊர் ஊருக்கு சேல் பண்ண போறோம்” என்றதும் ஜெகன் முகம் யோசனையானது.
இந்த வேலையை செய்யத்தான் வேண்டுமா என்று நினைத்தபோதும் மனைவி சொல்லை கேட்காமல் வேறு என்ன யோசனையை அவன் வைத்திருக்கிறான். ஒன்றும் கிடையாது. அவளாவது இவ்வளவு தூரம் யோசிச்சு செயல்படுகிறாள். மனைவியின் ஆலோசனைக்கு விட்டுக் கொடுத்தான் ஜெகன்.
மீனா அன்றே வேலையை தொடங்கி விட்டாள். கொஞ்சம் கூட சலிப்பு சோம்பேறித்தனம் எதுவும் இல்லாமல் அன்றைய வேலைகளை அப்போதே ஆரம்பித்தாள். ஜெகன் கூட சொன்னான்,
“மொத ஜனங்களோட பேசி பழகுறதுக்கு தயக்கமே காட்டக்கூடாது. யாரையும் சொந்தமா நினைச்சு பேசிடனும். அப்பத்தான் நாலு பேருக்கு மத்தியில் இணக்கமாக வாழ முடியும். வெட்டி கவுரவம், வீண் வீராப்பு நமக்கு எதுக்கு. பொழைக்க வந்தோம் பொழப்ப பாக்கணும்” என்றதும், தலையாட்டி கொண்டான்.
அடுத்த நாளே மகளை பக்கத்தில் இருந்த சிறுவர்களுக்கான பால்வாடியில் சேர்த்து விட்டாள். மகன் தற்போது தான் எட்டு வைத்து நடப்பதால் அவனை மட்டும் தன்னோடு வைத்துக் கொண்டாள். மீனாவின் தோழியின் கணவன் ஜெகனுக்கு எவ்வாறு ஏலத்தில் காய்கறி எடுக்க வேண்டும், காய்கறிகளை தரம் பிரிப்பது, அளவு பிரித்து வாங்குவது என்று எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க கவனமாக கேட்டுக் கொண்டான் ஜெகன்.
மீனாவும் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு கணவனோடு சேர்ந்து காய்கறிகளை தரம் பிரித்து தனித்தனியாக அடுக்கி விற்பனைக்கு தகுந்தவாறு கணவனுக்கு ஏற்ற வகையில் அடுக்கி வைத்து விடுவாள்.
ஆரம்பத்தில் பெரிதாக கை கொடுக்கவில்லை. ஜெகனின் பெரிய குறையே மனிதர்களுக்கு தகுந்த மாதிரி பேசி விற்பனை செய்ய தெரியாது. பட்டென்று யாரிடமும் இணக்கமாக பழக மாட்டான். அதனால் வியாபாரம் கொஞ்சம் மந்தம்தான். நாள் கணக்கில் கெடாமல் இருக்கும் பொருட்கள் அல்லவே, ரெண்டு நாள் கூட தாங்கவில்லை. நஷ்டம் வந்துவிடுமோ என்று ஜெகன் பயப்பட, மீனா கை கொடுத்தாள்.
அதிகாலையிலே எழுந்து வீட்டு வேலைகளையும் பார்த்து இரு பிள்ளைகளையும் கவனித்து அவனோடு தொழிலுக்கும் வந்து விடுவாள்.
ஜெகன் கூட, “வேணாம் மீனா ரெண்டு பிள்ளைகளை வச்சுக்கிட்டு வீட்டு வேலை பார்க்கிறதே பெருசு. இதுல நாள் முழுக்க என் கூட அலையனும். நீ வீட்ல இரு நான் பாக்குறேன்”
ஆனால் மீனா ஒத்துவரவில்லை. அவளுக்குத்தான் தன் கணவனை பற்றி முன்பே தெரியுமே!.. அவள் மனதில் இருந்த வைராக்கியம். அவளை ஓயாமல் ஓடத் தூண்டியது. அது ஒரு பெண்ணுக்கான வைராக்கியம். சொந்தமே ஆனாலும் தன்னை முன்னே விட்டு பின்னை பேசியவர்கள், இவளால் என்ன செய்ய முடியும் என்று முகத்துக்கு நேரவே வாழத் தெரியாதவள் என்று பேசியவர்கள் முன்னால் பெருமையாக வாழ்கிறோமோ இல்லையோ கௌரவமாக வாழ்ந்து விட வேண்டும்.
அவர்கள் தயவு இருப்பதால் தானே அவ்வளவு எளிதாக பேசினார்கள். வசதியாக வாழாவிட்டாலும் அவர்கள் முன் வறுமையாக வாழ்ந்து விடக்கூடாது. திரும்பவும் தோற்றுப் போனேன் என்று அவர்கள் வீட்டு வாசலை தொடக்கூடாது. நடு ஆற்றில் நின்று கொண்டு திரும்பப் போவதும், கரையை கடப்பதும் ஒரே தூரம்தான்.
திரும்ப போய் தோல்வியை ஒப்புக் கொள்வதை விட, கொஞ்சம் முயற்சி செய்து கரையை கடந்து விடுவோம். இனி யாரின் முன்பும் தரம் தாழ்ந்து போய் விடக்கூடாது என்ற வைராக்கியம் மலையாக மனதில் நின்றது.
ஜெகனுக்கு கை வராத ஒன்று, மீனாவுக்கு நன்றாகவே வந்தது. யாரிடமும் அக்கா, அம்மா, அண்ணன் என்று பேசி எளிதாக காய்கறிகளை விற்று விடுவாள். யார் காய் வாங்க வந்தாலும் என்னமோ சொந்தக்காரர்கள் போலத்தான் மீனாவின் பேச்சு இருக்கும்.
ஜெகன் கூட மனைவியை ஆச்சரியமாக பார்ப்பான், “மீனா உனக்குன்னு ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்குவ போல” கொஞ்சம் கேலியோடு பெருமையும் கலந்திருந்தது.
நீண்ட நாட்களுக்குப் பின்னான கணவனின் இலகுவான பேச்சு மனைவியின் முகத்தில் புன்னகையை வர வைத்தது. இருவர் மனவிலும் அமைதி இருந்தது. தொழிலும் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமல் ஓட மனதிற்கு பெரும் நிம்மதி.
நடுத்தர வர்க்கத்துக்கே உரிய பெரிய பிரச்சனையை கொஞ்சம் கடந்திருந்தார்கள். அதாவது வீட்டில் பண பிரச்சனை இல்லாமல் இருந்தது. ஆரம்பத்தில் இருந்து ஜெகனுக்கும், மீனாவுக்கும் பணம்தான் பெரிய பிரச்சனை. இழப்பதற்கு எதுவும் இல்லாமல் எல்லாவற்றையும் புதிதாக தான் உருவாக்க வேண்டும். ஆனால், கையில் கிடைக்கும் கொஞ்சம் வருமானம் நிறைய நம்பிக்கையை விதைத்தது.
தற்போது ஒரு குடும்பமாக ஒன்றாக வாழ்ந்தாலும் ஜெகனிடம் இருக்கும் இரு பழக்கங்களை மீனாவால் மாற்ற முடியவில்லை. ஒன்று அவன் வயது பசங்களோடு சுற்றுவது, இரண்டாவது வாரத்தில் ஒரு நாள் குடிப்பது. ஞாயிறன்று விடுமுறை என்பதால் சனிக்கிழமை இரவு அவன் நட்பு வட்டங்களோடு சுற்றிவிட்டு தாமதமாக தான் வருவான். அப்படி வரும்போது வெளி வராண்டா வேலை படுத்துக்கொள்வான். குடித்துவிட்டு வருவதால் பிள்ளைகளோடு உறங்க மாட்டான்.
கணவனின் இந்த நடவடிக்கை மீனாவிற்கு கொஞ்சமும் பிடித்தமில்லை. ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் வாழ்க்கை வழி மாறி போனதற்கு ஜெகனின் குடிப்பழக்கம் தான் காரணம். என்ன ஒன்று முன்பெல்லாம் குடித்துவிட்டு மனைவியிடம் சண்டை போடுவான். ஒரு சின்ன காரணம் கிடைத்தாலும் குடியை நோக்கி தான் ஓடுவான். தற்போது அப்படி இல்லாமல் வாரத்தில் ஒரு நாள் என்ற அளவில் குறைத்துக் கொண்டான். அது மட்டுமே மீனாவிற்கு ஆறுதல்.
ஓரளவுக்கு மேல் மீனாவால் கணவனை ஒரு கட்டத்திற்குள் வைக்க முடியவில்லை. வாரம் முழுக்க அவளோடே சேர்ந்து தொழிலுக்குப் போக, அவளோடே சேர்ந்து வீட்டுக்கு வருவான். வாரத்தில் ஒரு நாள் மட்டும் தான் அவன் நட்பு வட்டத்தோடு சேர்வது. அப்போதும் அவனைத் தடுத்தால் பழைய ஜெகன் வெளிவருவது உறுதி என்பதால் கொஞ்சம் தளர்ந்து கொடுத்துப் போவாள் மீனா. பின்ன நான் யார் என்று பெருமை பேசுபவன் இன்று ஒரு பழைய கைலி வேட்டியில் காய்கறி மூட்டையை தூக்கிக் கொண்டிருக்கிறான். அதுவே பெரிய மாற்றம். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கணவனை சரி செய்ய வேண்டும்.
சனிக்கிழமை இரவு மட்டும் தான் வீட்டிற்கு வர மாட்டான். மற்றபடி ஞாயிற்றுக்கிழமை எல்லாம் மனைவி மக்களோடு தான். மீனா வாய் திறந்து கேட்கும் முன் எல்லாவற்றையும் வாங்கி வைத்து விடுவான்.
வாழ்க்கை சுமூகமாக செல்ல ஜெகன் கணவனாக கொஞ்சம் மனைவியை நெருங்கினான். இங்கு வந்த இத்தனை நாட்களில் ஒரே அறையில் உறக்கம் என்றாலும் இன்னும் தாம்பத்திய வாழ்க்கையை எட்டவில்லை. உண்மையில் மீனா அதை மறந்தே போனாள். அவளுக்கு அந்த நினைப்பு கூட வரவில்லை.
ஆசையாக ஜெகன் அவளை அணுக, தவித்து போய் என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறி நின்றாள்.
“என்ன மாமா?”
“இன்னைக்கு என்ன விசேஷம் மீனா, பார்க்க வித்யாசமா இருக்க” குரலில் உல்லாசம்.
“அஹான், அழகா இருக்க மீனா” எவ்வளவு நாட்களுக்கு பிந்தைய வார்த்தை.
ஆனால், மீனா மனம் குளிர வில்லை. இன்றைய கணவனின் கிறக்கம் அவனின் உடல் தேவையாக மட்டுமே தெரிந்தது.
மீனாவை தன் மனைவியாக இரண்டு பிள்ளைகளின் தாயாக மட்டுமே பார்த்தான். என்றோ ஒரு காலத்தில் தான் உருகி காதலித்த காதலியாக தெரியவில்லை. இன்றைய கணவனின் இணக்கம் காதலால் அல்லாமல் வேலையின் அழுத்தத்தால் என்றால் மீனாவுக்கு தாம்பத்தியம் ஒரு கடமையாகி போகும். அது அவளுக்கு பிடிக்க வில்லை. மனம் திறந்து பேசி மன ஒற்றுமை கொள்ளாமல் உடல் ரீதியாக தொடர்புபடுத்திக் கொள்ள மீனாவுக்கு விருப்பமில்லை.
ஜெகனுக்கு பழக்கம் இல்லாத தொடர் வேலையின் அழுத்தம், ஓயாத உடல் உழைப்பு என்று ஒரு மாதிரி நெருக்கடியில் இருப்பவனுக்கு மனைவியின் சேவை அதிகமாக தேவைப்பட்டது. என் மனைவி, எனக்கான உரிமை, தாம்பத்தியம் பழக்கப்படாததும், புதிதானதும் கிடையாது.
மீனா மருகி, தயங்கி நிற்க.
“அடி என்னடி என்னவோ புது பொண்ணு மாதிரி வெட்கப்படுற” அவளை அணைத்தான். கொஞ்சம் முரட்டுத்தனமாக..
“மாமா, என்ன இது? கொஞ்சம் தள்ளிப் போங்க இப்படியா பிடிப்பீங்க” என்று அவனை தள்ளிவிட பார்க்க,
“ஏன் நமக்கு என்ன இது புதுசா? ரொம்ப ஓவரா தான் பண்ற மீனா” குரல் கொஞ்சம் மாறவும் அவள் பயந்து போனாள்.
சும்மா கிடக்கும் சங்கை ஊதி கெடுதான் ஆண்டி என்ற கதையாகி விட்டால் என்ன செய்வது. பிடிக்குது பிடிக்கவில்லை கணவனோடு இணக்கமாக நடந்து கொள்வது உன் குடும்ப வாழ்க்கைக்கு நல்லது மீனா. மனதோடு சொல்லிக் கொண்டவள் கணவனை ஏற்க தயாராகி விட்டாள்.
மீனாவின் அமைதி கண்டு ஜெகன் நெருங்க, தாராளமாக விட்டு கொடுத்தாள். வேற வழி இல்லை. நான்கு வருடங்களாக பழக்கப்பட்ட கணவனின் அருகாமை என்றாலும் இன்று விருப்பமில்லை. ஒரே ஒரு நல்ல விஷயம் மீனாவுக்கு, தாம்பத்தியத்தில் பெண்ணின் உணர்வுகளுக்கு தேவையே கிடையாது. மதிப்பும் கிடையாது. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அமைதியாக இருந்தால் போதும்.
ஜெகன் தேவை முடிந்து விலகும் போது, மீனாவுக்கு உடல் அலண்டுவிட்டது. கணவனைப் போல தன் அழுத்தத்திற்கு வடிகாலாக இருக்கவில்லை மாறாக உடல் தான் நொந்து போனது.
அவளும் என்ன செய்வாள் காலையிலிருந்து நிற்காத ஓட்டம். வீட்டு வேலைகள் முடித்து இரண்டு சின்ன பிள்ளைகளையும் பார்த்து அவனோடு, அவனுக்கு இணையாக வியாபாரமும் செய்ய வேண்டும். மாலையில் வீட்டுக்கு வந்தால் திரும்பவும் சாப்பாட்டு வேலை பிள்ளைகளை பார்ப்பது, துணி துவைப்பது என்று நொந்து போய் படுத்தால் போதும் என்று இருப்பவளை இவன் பங்குக்கு படுத்தி வைத்தான்.
என்ன செய்வது மனைவியின் கடமை. ரெண்டு பிள்ளைகளுக்குப் பின் எனக்கு கணவனை பிடிக்கவில்லை என்று சொன்னால் வெட்கக்கேடு.. அமைதியாக சுருண்டு கொள்ள,
“என்ன மீனா இங்கேயே படுத்துட்ட எழுந்து போ”
“என்ன?.. என்ன மாமா?”
“அங்க பிள்ளைங்க தனியா படுத்து கிடக்காங்க. உன் மகன் நடுராத்திரி கூட உன்னை தேடுவான்?”
இந்த நினைப்பு அரை மணி நேரத்துக்கு முன்பு எங்கு போனது என்று சூடாக கேட்க வாய் துடித்தாலும், அமைதியாக எழுந்து சென்றாள். இனி காலை எட்டு மணி வரைக்கும் அவன் உறங்குவான். அவளுக்கு வேலை நாள் நான்கு மணிக்கே துவங்கிவிடும்.
அடுத்தடுத்த நாட்களில் ஜெகனின் வேலைக்கும் வெளியில் கிடைக்கும் அழுத்தத்திற்கும் மீனா மட்டுமே வடிகால ஆகி போனாள். அவள் காதலித்து மணந்த கணவன் அவனின் அருகாமை எப்படி பிடிக்காமல் போகும். ஆனால் மீனாவிற்கு கணவன் எப்போது தன்னை விடுவான் என்று நிலையில் தான் இருந்தாள். குழந்தைகளை கவனிப்பது, வீட்டு வேலை பார்ப்பது போல கணவனை கவனிப்பதும் ஒரு வேலையாகி போனது.
ஒவ்வொரு நாள் வியாபாரம் முடிந்து வீட்டுக்கு கிளம்பும்போது ஆசையோடு பெற்றோர்களை எதிர்பார்க்கும் மகளுக்காக, அவளுக்கு பிடித்த உணவுகளாக பார்த்து தேடி தேடி வாங்குவான்.
அங்கேதான் இருக்கும் கருப்பட்டி ஜீரணி. மீனாவுக்கு மிகப் பிடிக்கும். கல்யாணமான புதிதில் எல்லாம் கருப்பட்டி ஜீரணி இல்லாமல் வீட்டுக்கு வர மாட்டான். இன்று அந்த கடையை பத்து தடவை கடந்தாலும் தன் மனைவிக்கு பிடித்த உணவு என்ற நினைப்பே இல்லை.
தினமும் வண்டியில் இருக்கும் சாமிக்கு பூ வாங்கி வைப்பவன், “என்ன மீனா உனக்கு ஜாதிப்பூ புடிக்கும் தானே” என்று ஒருநாளும் வாங்கி கொடுத்ததில்லை.
ஆனால் அவளாக கோவில் விசேஷம் என்று பூ வாங்கி தலையில் வைத்தால் மட்டும், “ஹே! மீனா உனக்கு பூ தாண்டி அழகு. என்னை அப்படியே மயக்குற!” கணவன் அணைக்கும் போது மீனாவுக்கு எப்படி தான் இருக்குமோ!..
“என்ன மீனா ஒரே சேலையவே வாரத்துல ரெண்டு நாள் கட்டுற. நாலு நல்ல சேலை தான் எடுத்துக்கோ?”
“ஏன் வாங்கிக் கொடுத்தால் வேண்டாம் என்ற சொல்லப் போறேன். எப்படி எடுத்தாலும் கணவன் ஆசையாக எடுத்துக் கொடுத்தால் சந்தோஷமாக வாங்கிக் கொள்ளலாம்” மனதில் நினைத்துக் கொண்டு,
“ஆடித்தள்ளுபடிக்கு போய் வாங்கலாம் மாமா”
“நான் எங்க அந்த கூட்டத்துக்குள் எல்லாம் வாரது. நீ போயிட்டு வா மீனா”
மீனா முகம் சுருங்கினாலும்,
“என் பிரண்டு கூட்டிட்டு நான் போயிட்டு வரேன். பிள்ளைகளை மட்டும் நீங்க ஒரு ரெண்டு மணி நேரம் பார்த்துக்கோங்க மாமா”
“ம்ச், மீனா ஒரு நாள் தான் எனக்கு லீவு இருக்கும். என்னால பிள்ளைகளை பார்க்க முடியாது. நீ கூட்டிட்டு போயிட்டு வா.. அவங்களுக்கும் டிரஸ் எடுக்கணும் தானே”
“கூட்டமா இருக்கு மாமா பஸ்ஸில் எல்லாம் பிள்ளைகளை கூட்டிட்டு போயிட்டு வர முடியாது” நானும் ஒரு நாளாவது எனக்காக செலவழிக்க வேண்டாமா!…
“காசு சேர்த்து தாரேன் பஸ்ல போக வேணாம் ஆட்டோல போய்ட்டு வந்துடுங்க. ஆனா, பிள்ளைகளை கூட்டிட்டு போ..” என்றவன்,
“எனக்கு சாப்பாடு வேணாம். நீங்க ஒரு நாள் வெளியில் சாப்பிடுங்க” என்றான் சந்தோசமாக,
ஐயோ! தாராள பிரபு. எவ்வளவு வேணாலும் செலவு செய்கிறேன். பிள்ளைகளை மட்டும் பார்க்கிற வேலையை என் பக்கம் தள்ளாத என்கிறான். அப்போது தானே குடித்துவிட்டு அவன் நட்புக்களோடு கூத்தடிக்க முடியும். இந்த ஒரு பழக்கத்திலிருந்து எப்படி கணவனை வெளியேற்ற, மனம் சோகமானது.
இந்த பரபரப்பான வாழ்க்கையில் மீனா தனக்கு நாள் தள்ளிப்போனதே மறந்து விட்டாள். இப்படி ஒன்றே அவள் சிந்தையில் கூட யோசிக்கவில்லை. ஆண் ஒன்று, பெண் ஒன்றுமாக இரு பிள்ளைகள் இருக்க அடுத்த ஒரு பிள்ளையை அவள் நினைக்கவே இல்லை.