Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உடைந்த மனங்கள் ஒட்டாதா?

உடைந்த மனங்கள் ஒட்டாதா?.. அத்தியாயம் 18

உடைந்த மனங்கள் ஒட்டாதா?

அத்தியாயம் 18

        ஜெகன் தன் நட்பு வட்டத்தை பெரிது படுத்தினான். வேற ஊர் வந்து பிழைப்பு நடத்துகிறோம் நாலு பேரை தெரிந்திருப்பது நல்லது என்றே நினைத்தான். ஆனால், மீனாவுக்கு இதுவெல்லாம் பிடிக்காது என்று தெரியும். அதற்காக ஒரு ஆண்மகன் எவ்வளவு நாளைக்கு வீட்டுக்குள்ளே இருக்க முடியும். அவளிடம் எல்லாம் பெரிதாக தன் நட்பு வட்டத்தை அடையாளப்படுத்த மாட்டான். 

மீனாவும் அதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டாள். கணவன் இப்படி சுற்றுவதே பிடிக்காது. இதில் அவன் நட்பு வட்டத்தை தெரிந்து என்ன ஆகப்போகிறது. பெரும்பாலும் குடிக்கத்தான் ஒன்று சேருவார்கள். அந்த குடிகார கூட்டம் வேண்டாம் என்று தான் மீனா தள்ளி நிற்பாள். அத்தோடு வாரம் முழுக்க உழைப்பவன் ஒருநாள் குடும்பம் பிள்ளை குட்டிகளோடு நினைத்ததை செய்து சாப்பிட்டு, நன்றாக உறங்கி எழுந்தால் தான் என்ன?… எதுக்கு தேவையில்லாமல் வெளியில் நான்கு பேரோடு சுத்த வேண்டும். இதுதான் மீனாவின் நிலைப்பாடு. குடும்பம் பிள்ளைகள் வேலை சம்பாத்தியம் என்று இருப்பதையே அவள் விரும்பினாள். 



Advertisement

“மீனா”

“என்ன மாமா?”

 “நான், நம்ம சொத்த கேட்டு கோர்ட்ல கேஸ் போட்டு இருக்கேன்” என்றதும் புரியாமல் கணவனை பார்த்தாள்.

Advertisement

“நமக்கேது சொத்து?” 

Advertisement

“என்ன மீனா பேசுற.. நான் சொல்றது, எங்க அப்பா வீட்டு சொத்து. எனக்கு சேர வேண்டியது” என்றான் தெளிவாக..

அப்போதுதான் மீனாவுக்கு விஷயமே புரிந்தது. ஆனால் புரிந்த விஷயம் இனிப்பாகத்தான் இல்லை. ஜெகனின், தாய் தந்தை இறந்தபின் அவன் வளர்ந்தது எல்லாம் மீனா ஊரில்தான். கணவனின் வீட்டு ஆட்கள் நல்ல வசதியானவர்கள் என்று சொல்வழித்தான் மீனா கேட்டிருக்கிறாள். இவர்களின் கல்யாணம் குழந்தை பிறப்பு என்று எதற்குமே ஜெகன் வீட்டு சொந்தம் வந்தது இல்லை. காரணம் சொத்து, ஜெகனை சேர்த்துக் கொண்டால் அவனின் தந்தையின் பங்கை தர வேண்டுமே என்று ஆரம்பம் முதலே ஒற்றை வாரிசான ஜெகனை ஒதுக்கி தான் வைத்தார்கள். இவனின் பாட்டிக்கும் பெரிதான பின்புலம் இல்லாததால் அந்த காலத்திலேயே அவர்களோடு போராடி ஜெகனுக்கு உரியதை வாங்க முடியவில்லை. அந்த ஊர்காரன் என்று மட்டும் தான் மீனாவுக்கும் தெரியுமே தவிர புகுந்த வீட்டு ஊர், கோவில், உறவு என்று ஒருநாளும் அங்கு சென்றதில்லை. 

ஜெகனின் பெரியப்பா மகள் வெண்பா மட்டுமே இவர்களின் திருமணத்திற்கு வந்திருந்தாள். ஜெகனின் பெரியப்பா வீட்டு மக்கள் வெண்பாவோடு சேர்த்து ஐந்து பேர். நல்ல வசதியும் கூட அதோடு பெரிய இடத்து பழக்க வழக்கம் எல்லாம் உண்டு. அவர்களோடு தாங்கள் எப்படி போராட முடியும். அதைத்தான் மீனாவும் கணவனிடம் கேட்டால்…

Advertisement

“அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா மீனா. இன்னைக்கு அந்த சொத்தை எவ்வளவோ பெருக்கிட்டாங்க. அதுல எல்லாம் நான் பங்கு கேட்கல. எங்க அப்பாவுக்கு தாத்தா கொடுத்திருப்பாருல, அதை மட்டும் கொடுங்கன்னு கேட்கிறேன். அதைக்கூட விட்டுக் கொடுக்க மனசு இல்லனா அப்புறம் எப்படி மீனா நான் விட முடியும். எனக்கும் ரெண்டு பிள்ளைகள் இருக்குல்ல. அவங்களுக்கு நான் ஏதாவது சேர்க்க வேண்டாமா? நியாயமா எனக்கு சேர வேண்டியது தான் நான் கேட்கிறேன்”

“இப்போ என்ன பண்ணப் போறீங்க” என்றாள் கலக்கமாக மீனா.

“பொதுவான ஆளுகளை விட்டு பேசி பார்த்தோம் மீனா. அவங்க என்னை யாருன்னே தெரியாத அளவுக்கு பேசுறாங்க. அதான் என் ஃப்ரெண்ட் தினகரன் இருக்கான்ல. அவன் சப்போர்ட்ல தான் கோர்ட்ல கேஸ் போட்டு இருக்கேன்” என்றான் ஜெகன்.

மீனா இன்னும் கலவரமாகி போனாள், “தினகரன் அந்த ஊரில் பெரிய ஆள். நல்ல வசதியும் கூட.. அரசியல் செல்வாக்கு அதிகம் உள்ளவர். தினக்கூலிக்கு காய்கறி வியாபாரம் செய்யும் தங்களுக்கு அவ்ளோ பெரிய ஆட்களோடு எதற்கு பழக்கம். பயமாக இருந்தது” அதை அப்படியே கணவனிடமும் சொல்ல, 

அதுவரை அமைதியாக இருந்த ஜெகனின் முகம் கோபத்தை காட்டியது, “இப்ப என்ன சொல்ல வர மீனா. தினகரனோட பழக எனக்கு தகுதி இல்லைன்னா?”

 “ஐயோ! நான் அப்படி சொல்லலங்க.. இந்த பெரிய இடத்து பழக்க வழக்கம் எல்லாம் நமக்கு சரியா வருமா? இப்பதான் நாம கையை ஊண்டி நிற்கிறோம். ஏதாவது ஒன்னுனா என்னால தாங்கிக்க முடியாது” என்று குரல் கமர சொல்ல, 

ஜெகனின் முகமும் கனிந்தது, “இந்த மாதிரி நாலு பேரோட பழக்கம் நமக்கு தேவைதான் மீனா. எங்க பெரியப்பா வீட்டு ஆட்களுடன் நான் தனியா நிண்டு போராட முடியாது. கேஸ் போட்டு பரம்பரை சொத்த வச்சு தொடங்கின தொழில ஃபுல்லா முடக்கிட்டோம் அப்படின்னா.. எனக்கு சேர வேண்டிய பங்கை கொடுத்து விடுவாங்க” என்றவன்,

“எவ்வளவு நாளைக்கு மீனா நாமளும் அஞ்சு பத்துக்கு அல்லாடுறது. நமக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கு அவங்களுக்கும் ஏதாவது சேர்த்து வைக்க வேணாமா? ஊர் ஊரா காய்கறி வித்து என்ன சேர்க்க முடியும். எனக்கு கிடைக்க வேண்டிய பங்கு வந்துருச்சுன்னா, உழவர் சந்தையில் சொந்தமாக தொழில் போடலாம். சொந்தமாக பெரிய மார்க்கெட் பிடிக்கலாம். அதுக்கப்புறம் நம்ம ஊர்ல இருக்கிற வீடு திருப்பிட்டு, பிள்ளைகளை படிக்கும் போது பெரிய ஸ்கூல்ல விடனும், உன் கழுத்துல இருக்குற மஞ்ச கயிறு கழட்டிட்டு பெரிய தாலி செயின் வாங்கி போடணும், சொந்தமா வீடு கட்டணும், கார் வாங்கணும் நாலு காசு சேர்த்து வைக்கணும் பிள்ளைகளுக்காக..”

கணவன் இவ்வளவு தூரம் யோசிப்பதே மீனாவுக்கு சந்தோஷமாக இருந்தது. வளமான வாழ்க்கை யாருக்குத்தான் பிடிக்காது. தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்கவே மீனாவும் நினைக்கிறாள். ஆனால், இப்போதுதான் ஓரளவு மாறி வருகிறான். இந்த மாதிரி கோர்ட் கேஸ் என்று போய் திரும்பவும் ஆரம்பித்த இடத்திற்கு வந்து விடக்கூடாது. அந்த பயம் தான். ஜெகன் இவ்வளவு தூரம் தன்மையாக தன்னிடம் பேசுவதே போதுமானதாக இருக்க அமைதியாகிவிட்டாள். 

ஆனால், ஜெகன் முழுதாக தினகரனோடு ஐக்கியமாகி போலீஸ் கேஸ் என்று போகவும் பெரிய மன உளைச்சலுக்கு ஆளானால் மீனா. தற்போது தான் ஆடம்பரமாக இல்லாமல் அடிப்படையில் ஒரு நல்ல நிலையில் இருக்கிறார்கள். நல்ல உணவு, நிம்மதியான உறக்கம், பிள்ளைகளுக்கு சின்ன சின்ன வசதி என்று ஓரளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஜெகன் அடிக்கடி தினகரனோடு போவதைப் பார்க்கையில் மீனாவிற்கு தான் அடிவயிற்றில் பயம். அதுவே ஒரு பெரிய அழுத்தத்தை கொடுக்க தன் உடல் நிலையை கவனிக்க மறந்து போனாள்.

 இரண்டாவது மகன் பிறந்த போதே மீனாவுக்கு தொடர்ச்சியான மாதவிடாய் கிடையாது. அது முன்ன பின்ன என்று தான் இருக்கும். இரண்டு பிள்ளை பெற்ற பின் இனி என்ன என்று மீனாவும் அசால்டாக விட்டுவிட்டாள். அதனால் தனக்கு நாள் தள்ளிப் போனதே அவள் கவனத்தில் இல்லை. தலை சுற்றலும், கிறக்கமும் தொடர்ச்சியாக வரவும் தான் பதறிப் போனாள். இரண்டு பிள்ளைகள் பெற்றவளால் ஓரளவு கணிக்க முடிந்தது. ஆனால், அந்த முடிவு தான் அவளுக்கு சந்தோஷத்தை கொடுக்கவில்லை. இரு பிள்ளைகளை வைத்துக்கொண்டு கணவனோடு மல்லுக்கட்டி வாழ்க்கையை கொண்டு செலுத்துவதே பெரிதாக இருக்க, இதில் மூன்றாவது ஒன்றை ஏற்கவெல்லாம் தயாராக இல்லை. 

இப்படி என்று கூட ஜெகனிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை. கமுக்கமாக இருந்து கொண்டு தாயை வரவழைத்துக் கொண்டாள். அன்று இரவு வேலை முடிந்து ஜெகன் வீடு திரும்பும் போது பரமு வீட்டில் இருந்தார்.

என்னவாம் என்று நினைத்தாலும், மரியாதை நிமித்தமாக வாங்க என்று வரவேற்றான். அறைக்கு வந்து மனைவியிடம், 

“என்னடி, உங்க அம்மா வந்திருக்காங்க?”

“என்ன மாமா, எங்க அம்மா என்னைய பாக்க வரக்கூடாதா? அவங்களுக்கு எங்க நினைப்புதான். பேரன், பேத்தியை பார்க்க வந்திருக்காங்க” என்று முடிக்க,

மகள் மேல் பரமுக்கு இருக்கும் பாசம் அறிந்ததால் ஜெகனும் உண்மை என்று நம்பி விட்டான். மறுநாள் தான் மீனா தன் தாயிடம் உண்மையை சொன்னாள். 

“ஏண்டி, அறிவு கெட்டவளே! ரெண்டு பிள்ளை பெத்த உனக்கு நிலவரம் தெரிய வேணாம்” என்று தாய் சத்தம் போட,

 “ம்ச், நான் என்னத்தம்மா கண்டேன். புகழ் பொறந்தப்பவே குடும்ப கட்டுப்பாடு பண்ண சொன்னேன். அந்த டாக்டர் தான் ரத்தம் இல்லை ஆறு மாசம் போகட்டும்னு சொல்லிட்டாங்க. அதுக்கப்புறம் நடந்த பிரச்சனைல என் உடலைவே நான் பாக்கல. புகழ் இப்பத்தான் நடந்து ஓடுறான். அதனால கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்துட்டேன் போல” என்றாள் குரல் உள்ளே போக..

“உன் புருசன் குணத்துக்கு ஏழு பிள்ளை தேவை தான். குழந்தை இல்லாம எவ்வளவு பேரு அலைய உனக்கு மட்டும் கடவுள் வரிசையாக கொடுத்திருச்சு. ஆனாலும் எனக்கு பயமா இருக்கு மீனா. இது தேவைதானா? உன் புருசன் ஒன்னும் சொல்ல மாட்டானா?”

“அவர் கிட்ட நான் எதுவும் சொல்லலை. இருக்கிற பிள்ளைகளுக்கே இங்க வழிய காணோம். இதுல இன்னொரு பிள்ளை எல்லாம் என்னால தாங்க முடியாது” என்றவள் தயங்கி நின்ற தாயையும் சரிகட்டி ஹாஸ்பிடல் அழைத்துச் சென்றாள். 

எப்படியும் நாப்பது நாள் தான் வரும். கணவனுக்கு தெரியாமல் செய்து விட வேண்டும். அம்மாவுடன் இருக்க பிள்ளைகளை பார்த்துக் கொள்வார், தானும் உடம்பை தேத்தி கொள்ளலாம்.ஆனால் அவளின் கெட்ட நேரம் ஜெகன் தினகரனோடு அங்கே வந்தான். 

ஜெகன் தான் முதலில் மனைவியை பார்த்தது, யோசனையாகவே உள்ளே சென்றான். மீனா கணவனை கவனிக்கவே இல்லை. 

“இங்க என்ன பண்ற மீனா?” என்ற குரலில் அரண்டு போய் நிமிர்ந்து பார்க்க, 

நின்று இருந்தான் ஜெகன். 

“என்ன மாமா, அம்மாக்கு மேலுக்கு முடியல அதான் வந்தோம்” என்றதும்,

முகத்தில் கடுமை ஏற பார்த்தவன், “அப்படியே திரும்பி மரியாதையா வீட்டுக்கு போ இல்ல.. நீ நினைக்கிறதுதானா அப்படியே உங்க அம்மா கூட உங்க வீட்டுக்கு போயிடு. திரும்ப வந்து விடாதே” என்றவன் தினகரனோடு செல்ல, சோர்ந்து போனாள் மீனா. 

பெரிய இவன் அப்படியே பொண்டாட்டி பிள்ளை மேல பாசம் இருக்கிற மாதிரி தான். முனங்கிக் கொண்டாலும் தாயோடு வீட்டுக்கு வந்து விட்டாள். இப்போதுதான் வேலை சம்பாத்தியம் என்று அவனோடு சேர்ந்து ஓடுகிறாள். மூன்றாவது பிள்ளையை காரணம் காட்டி வீட்டில் இருந்தால், என்னவும் தப்பாக்கி போகுமோ என்ற பயம் வேறு வந்தது. ஆனாலும், கணவனை எதிர்த்து பழக்க மில்லாததால் தாயோடு வீடு வந்து விட்டாள். 

அன்று இரவு ஜெகன் வந்தபோது மீண்டும் ஒரு சண்டையை ஆரம்பிப்பான் என்று மீனா எதிர்பார்க்க, அவ்வாறு இல்லாமல் குழந்தைகளுக்கு பழம் இனிப்பு என்று வாங்கி வந்திருந்தான். சின்ன வீடு தாயும் உடன் இருப்பதால் மீனா அமைதியாகிக் கொண்டாள். 

அடுத்த நாள் வியாபாரத்துக்கு எப்பவும் போல மீனா கிளம்ப, “நீ இனி வர வேணாம் மீனா”

“ஏன் மாமா?”

“வீட்டு வேலையும் பார்த்து பிள்ளைகளையும் பார்க்கிறதே ரொம்ப சிரமம். இதுல என் கூட வியாபாரத்துக்கு வேற வந்துட்டா.. மாசமா இருக்க உனக்கு ரொம்பவும் முடியாமல் போயிரும் மீனா”

“அதெல்லாம் எனக்கு ஒன்னும் இல்ல மாமா. ஏற்கனவே ரெண்டு பிள்ளை பெத்தவ தானே.. என்ன நான் பக்குவமா பாத்துப்பேன்” என்றாள்.

“அதெல்லாம் வேணாம் மீனா. தொடர்ந்து மூணு குழந்தை, நீ தளர்ந்து போய் இருக்க, பேசாம வீட்ல ரெஸ்ட் எடு”

“நீங்க தனியா எப்படி மாமா?”

“தினகரன் கூட இருந்தான்ல சின்ன பாண்டி. அவனை இனிமே என்கூட வியாபாரத்துக்கு கூட்டிட்டு போறேன்” என்றதும் மீனா பயந்து போனாள்.

வாரத்துக்கு ஒரு நாள் குடி என்றது போய் தினமும் குடியாகிவிட்டாள். மீனா அவனோடே திரிய போய் தான் ஓரளவு கண்ட்ரோலாக இருக்கிறான். அவளும் முன்ன மாதிரி வீட்டில் இருந்து கொண்டால், கணவன் மறுபடியும் மாறி விடுவான் என்று பயமாக இருந்தது. அதை கணித்தவன் போல,

“அடியே! நீ என்ன யோசிக்கிற என்று எனக்கு தெரியுது? உன் புருசன் அவ்வளவு ஒன்னும் கெட்டவன் கிடையாது. எனக்கும் வாழ்க்கையில முன்னேறனும், பொண்டாட்டி பிள்ளைகளை நல்லா வச்சுக்கணும்னு ஆசை எல்லாம் இருக்கு. அதை திரும்ப அழித்துக்க மாட்டேன் தைரியமா இரு” அவள் கன்னத்தை தட்டி விட்டு செல்ல ஆச்சரியமாக பார்த்தாள் மீனா.

இவனை ஒரு வரையறைக்குள்ளே அடக்க முடியாது போல… அடுத்து நான்கு நாட்களுக்கு அப்புறம் மகளை நன்றாக கவனித்த பின் பரமு ஊருக்கு சென்றார். அதன் பின் தான் ஜெகன் மனைவியை கடிந்து கொண்டான். 

“எவ்வளவு பெரிய காரியம்டி பண்ண பார்த்திருக்க நீ.. எப்பவும் பெரிய இவ மாதிரி எனக்கு யோசனை சொல்லுவ? உன் புத்தி எங்க புல் மேய போயிருச்சா?”

 நான்கு நாட்கள் அமைதியாக இருந்தவன் ஆரம்பிக்கவும் கொஞ்சம் பயமாக இருந்தது. அவளுக்கே தப்பு என்று தெரியும்தான். ஆனாலும் அடிக்கடி குணம் மாறும் கணவனை வைத்துக் கொண்டு மூன்றாவது பிள்ளையை பெற்றெடுக்கும் தைரியம் இல்லை. உன்னை நம்ப முடியாது என்று வெளிப்படையாக கணவனிடம் சொல்ல முடியாதே..

அவள் அமைதியாக இருக்க, “மீனா என்ன நம்பு. உன் புருசன் முன்ன மாதிரி கிடையாது. இந்த குழந்தை என்னோட அம்மத்தா. நான் அப்படித்தான் நினைக்கிறேன். அவங்களே எனக்கு குழந்தையா வந்து பிறப்பாங்க. நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும் மீனா” மாசமாக இருப்பதால் கோபத்தோடு கொஞ்சம் கனிவையும் சேர்த்து சொல்ல, மீனா தலையாட்டி கொண்டாள். 

அவளுக்கும் இது குழந்தை தானே. வயிற்றில் வந்த மகவை அழிக்க எவ்வளவு வேதனை படுவாள். ஆனால் பத்து மாதம் சுமந்து பிள்ளை பெறும் வழியை விட, அவர்களை நல்ல முறையில் வளர்க்காமல் ஒவ்வொன்றுக்கும் ஏங்க விடும் வலி மிக அதிகம். இப்போது கணவன் நன்றாக தான் இருக்கிறான். ஆனால், எப்போது எப்படி மாறுவான் என்று சொல்ல முடியாதே.. 

மீனா எப்பவும் போல நான்கு மணிக்கு எழுந்து கொண்டாள். ஜெகன் வேலைக்குச் செல்லும் முன் கிழங்கு, கேரட் முள்ளங்கியில் இருக்கும் மண்ணை துடைத்து சுத்தம் செய்து வைத்துவிடுவாள். அப்போது தான் விற்பனை செய்ய எளிதாக இருக்கும். உறங்கும் பிள்ளைகளையும் கணவனையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு வெளியேறையில் உட்கார்ந்து தன் வேலையை செய்ய, பின்னோடு வந்து விட்டான் ஜெகன். அவன் எழுந்து வரும் சத்தம் மீனா முகத்தில் புன்னகையை வர வைத்தது. 

முன்பெல்லாம் அப்படி கிடையாது. வேலை செய்து அசதியில் நன்றாக தூங்கி விடுவான். இப்போது அவள் எழுந்து உருட்டிக் கொண்டிருக்கும்போது, மனைவியை தனியை விட்டு உறங்க மனம் வராது. அவள் எழுந்த பத்து நிமிடத்துக்கெல்லாம் ஜெகனும் எழுந்து வந்து விடுவான். 

என்னவோ மீனாவுக்கு அப்படி ஒரு ஆறுதல். அவள் செய்த வேலையை ஜெகன் செய்ய, சின்ன சிரிப்போடு எழுந்தாள் டீ போட.. அவனுக்கும் டீயை கொடுத்துவிட்டு, பிஸ்கட் தொட்டு சாப்பிட்டாள். மீனாவுக்கு காலையில் எழுந்ததும் கப கப வேணா பசிக்க ஆரம்பித்து விடும். அதிகாலையிலே மனைவி அடுப்படியை உருட்டுவதை கண்டவன், அவளுக்கு என்று தனியாகவே நிறைய வாங்கி போட்டான். அதுல எல்லாம் மீனாவுக்கு பரம திருப்தி. 

கணவனை உரசி கொண்டு அமர, “தள்ளிப்போ மீனா கை எல்லாம் மண்ணு”

 அவன் பேசியதை கண்டு கொள்ளாமல் “நாம நல்ல வாழனும் மாமா”

 ஜெகன் மனைவியை திரும்பிப் பார்த்து சிரித்தான், “நல்லா தான் மீனா வாழ்வோம்”

“யார்கிட்டயும் உதவி எதிர்பார்க்காம, கடன் வாங்காம.. நம்ம நல்லா வாழனும்”

“ம்ம்”

 “பிள்ளைகளை நல்ல ஸ்கூல்ல சேர்க்கணும்”

 “ம்ம்”

கொஞ்சம் கொஞ்சமா தொழிலில் முன்னேறனும்”

 “ம்ம்”

“காசு நிறைய சேர்ந்தா ஒரு சின்ன இடம் வாங்கி வீடு கட்டணும்”

 “ம்ம்” ஜெகன் முகத்தில் சிரிப்பு மங்கவில்லை. 

“சொந்த வீடு, நமக்குன்னு ஒரு நல்ல சம்பாத்தியம், பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு, நாம் அஞ்சு பேரும் போய் வர மாதிரி ஒரு வண்டி. போதும் வேற எதுவும் வேணாம் நிறைய பணம் கூட வேணாம்”

 “ம்ம்”

“நான் உங்களையும் பிள்ளைகளையும் பார்த்துக்கிட்டு ஒரு அமைதியான வாழ்க்கை வாழனும்”

“ம்ம்”

“நீங்க வேற பொம்பள பிள்ளை தான் வேணும்றீங்க. ஒரு நகை சீட்டு போட்டு கொஞ்சம் கொஞ்சமா பிள்ளைகளுக்கு நகை எடுக்கணும் மாமா” என்றதும்,

“உனக்கு எதுவும் வேணாமா மீனா”

“வேணும்! சரியில்லாத ஒருத்தனை இவ காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டா, எப்ப பாரு ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டே இருப்பாங்க, முன்னேற மாட்டாங்கன்னு சொன்ன சொந்தக்காரங்க முன்னாடி எல்லாம் ஆடம்பரமா இல்லாட்டியும் என் புருசன், பிள்ளைகன்னு ஒரு நல்ல வாழ்க்கை வாழனும்”

ஒற்றை கையால் மனைவியை தன்னோடு சேர்த்த அணைத்தான் ஜெகன். கட்டியவளை நினைத்து அவனுக்கு பெருமையாக இருந்தது. தனக்கென்று அவள் ஒன்றுமே கேட்கவில்லை. அவள் நினைப்பு எல்லாம் கணவன், பிள்ளைகள். அவர்களின் வளமான வாழ்க்கை. என்ன மாதிரியான பெண் இவள்.. நிச்சயம் நான் அதிர்ஷ்டசாலி தான்!…

 அவள் நெற்றியில் ஒரு முத்தம் கொடுக்க, “மாமா” என்றாள் அதிர்ந்து,

பின்ன காதலோடு பார்க்கும் கணவனை எல்லாம் கல்யாணம் ஆன ஆறு மாசத்திலே காணாமல் போனானே. 

அப்படியே அவள் கன்னத்திலும் ஒரு குட்டி முத்தம் வைக்க, சிலிர்த்து போனாள் மீனா.

“என்ன மாமா” என்றாள் ரகசியமாக,

அப்படியே அவள் உதட்டிலும் ஒரு முத்தம் வைத்தவன், “தள்ளி போயிரு எனக்கு கண்ட்ரோல் இருக்காது” என்று மெல்ல சொல்ல, 

“மாமா” என்றவளை,

 தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன், அவள் கழுத்துப் பகுதியில் முகம் புதைத்து, “கொஞ்ச நேரம் அப்படியே இரு மீனா, என்னவோ நல்லா இருக்கு “ என்றதும் முகம் சிவந்தாள். 

அழகான காலை நேரம், முகம் பூரித்தது மீனாவுக்கு.. இரண்டு பிள்ளை பெற்ற பின் வெட்கம் எல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையாகி விட்டது. ஜெகன் கூட சில நேரம் சலித்துக் கொள்வான், 

“அடி என்னடி, ஒரு ரியாக்ஷனும் கொடுக்க மாட்டேங்குற! ஆரம்பத்துல வந்த வெட்கம் எல்லாம் எங்க போச்சு”

அது ஆரம்பத்திலே ஓடிப் போச்சு. ரெண்டு பிள்ளை பெற்று பல இரவுகளை கடந்த பின் வெட்கத்தை எங்கு போய் தேட. அதுவும் சுகப்பிரசவத்தை பார்த்தவள் வெட்கத்துக்கு எங்கு போவாள். 

 கணவனோடு சேர்ந்து வியாபாரத்துக்கு சென்றால் அன்று ஜெகனை எதிர்கொள்ளவே எரிச்சலாக இருக்கும். கொஞ்சம் சீக்கிரம் என்னை விடேன் நான் தூங்கணும் என்றுதான் நினைப்பாள். கேள்விக்கு முன்னே விடை தெரிந்ததை போல, சமீப கால தாம்பத்திய வாழ்க்கை மீனாவுக்கு இருந்தது. இதுதான் அடுத்து இப்படித்தான் என்று ஜெகனை கணிக்க முடியும். பெரிதான காதல் சொற்களோ, பார்வையோ, கொஞ்சலோ இல்லாமல் ஒரு மாதிரி பழக்கப்பட்ட உணர்வுகளுக்கு கட்டுப்பட்ட நிலைதான். 

ஆனால், இன்று அப்படி இல்லாமல் கணவனின் காதல் பார்வையும் வெறும் மூன்று முத்தமுமே அவளை சிலிர்க்க செய்வது. காதலோடு சேர்ந்ததுதான் தாம்பத்தியம். அது வெறும் கடமையாகவோ இல்லை உணர்வுகளை கொட்டும் இடமாகவோ, கட்டாயமாகவோ இருந்தால் உணர்வுகள் மரணித்துப் போகும். 

சின்ன பாண்டியோடு வியாபாரத்துக்கு செல்லும் ஜெகன் வேறெங்கும் செல்லாமல் ஒழுங்காக வீடு வந்தான். பணம் கொஞ்சம் கையில் நிற்க. சேமிப்பாக மனைவியிடம் கொடுத்தான் ஜெகன். வாழ்க்கையை பெரிய நம்பிக்கையில் எதிர்பார்த்தாள் மீனா.

மசக்கை கொஞ்சம் படித்தி எடுக்க, பிள்ளைகள் இருவரையும் பால்வாடியில் விட்டு கொஞ்ச நேரம் ஓய்வாக தான் இருப்பாள். அன்று என்னவோ சமைக்க கூட தெம்பில்லாமல் சோர்வாக படுத்து கிடக்க, ஜெகன் வந்தான்.

“என்ன மாமா இந்த நேரம் வந்து இருக்கீங்க?” சோர்வாக எழுந்து நிற்க,

ஜெகன் கையில் ரெண்டு பார்சல் இருந்தது, “இன்னைக்கு காய்கறி சங்கத்துல மீட்டிங் மீனா. சாப்பாடு, ஸ்னாக்ஸ் எல்லாம் கொடுத்தாங்க. மீன் குழம்பு இருக்கு. இப்பல்லாம் உனக்கு இந்த மாதிரி தானே பிடிக்குது. அதான் குடுக்க வந்தேன்” என்றவன், 

“வீட்டுல என்ன இருக்கு”

“காலையிலிருந்து தல சுத்துது மாமா. பேசாம படுத்து கிடந்தேன். சோறும் தயிரும் தான் இருக்கு”

“எனக்கு அதை போடு”

“வேணாம் மாமா வீட்ல முட்டை கூட இல்ல”

 “முட்டை சாயங்காலம் வாங்கிட்டு வரேன் இப்ப இருக்கிறதை போடு” அதையே உண்டு விட்டு, 

“பிள்ளைகளுக்கு எடுத்து வை மீனா” என்று சொன்னவன் வேலைக்கு கிளம்ப, கணவனின் வண்டி தெருமுக்கை தாண்டி போகும் வரை நின்று பார்த்தாள் மீனா. 

கடவுளே எங்க வாழ்க்கை இப்படியே போகணும். எங்க பிள்ளைகளுக்காகவாது நல்லதாதை நடத்திக் கொடுங்க… 

ஜெகன் தினம் வருமானத்தை மனைவி கையில் கொடுத்தான். வீட்டு வேலைகளை அவளோடு சேர்ந்து பகிர்ந்து கொண்டான். பிள்ளைகளுக்கு மனைவிக்கு என்று புதுப்புது உடைகள், உணவுகளை வாங்கி கொடுத்தான். கணவனின் அதிகப்படியான அன்பு கூட பயத்தை கொடுத்தது. ஏதேனும் தவறாக நடந்து விடுமோ என்று.. அவள் பயமே ஈடேற போவது தெரியாமல் கடவுளை மறுகி வேண்டிக் கொண்டாள். 

மீனாவுக்கு நான்காம் மாதம் தொடங்கியிருந்தது. தாயைத் தவிர வெளியில் யாருக்கும் சொல்லிக் கொள்ளவில்லை. கொஞ்சம் மேலே தெரிந்த வயிற்றோடு சதை பிடிப்பு வைத்து பூரிப்பாக இருந்தாள் மீனா. அன்று சனிக்கிழமை ஜெகன் எப்பவும் போல தன் நட்பு வட்டத்தோடு இணைந்து கொண்டான். 

இது ஒன்றை மட்டும் ஜெகன் மாற்றிக்கொள்ளவே இல்லை. இப்போது மீனாவும் உடன் இல்லாமல் வேலை அவனுக்கு அதிகமாக இருக்க நிச்சயம் சனிக்கிழமை தன் நண்பர்களோடு சேர்ந்து விடுவான். ஓரளவுக்கு மேல் அவனை கட்டுப்படுத்த முடியாமல் குழந்தை பிறந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தாள் மீனா.

 ஆனால், அன்று இரவு ஜெகன் வீட்டுக்கே வரவில்லை.

“என்னாச்சு” மீனாவின் கர்ப்பம் தெரிந்த பின் அவளை தனியாகவெல்லாம் விடமாட்டான். எப்படி இருந்தாலும் நடு ராத்திரியில் கூட வீடு வந்து விடுவான்.

மீனாவுக்கு உறக்கம் இல்லை போனும் சுவிட்ச் ஆப் என்று வந்தது. இல்லை நான் எதுவும் தவறாக நினைக்க கூடாது. கணவன், அவன் ஃப்ரெண்ட்ஸோடு தான் இருக்கிறான். சும்மா நம்ம கற்பனைக்கு கண்டதும் நினைத்து வயிற்றில் இருக்கும் குழந்தையை கலவரப்படுத்தக் கூடாது என்று மீனா தன்னை தேற்றிக்கொண்டாலும் உறக்கம் அண்ட வில்லை. 

அரைகுறை தூக்கத்திலேயே எழுந்தவள், மீன் வண்டி சத்தம் கேட்கவும் வேகமாக வெளியில் சென்றாள். ஜெகனுக்கு மீன் குழம்பு அதிகம் பிடிக்கும். இன்று கணவன் வரும்போது சமையலை முடிக்க எண்ணி அவனுக்கு பிடித்த வகைகளில் எடுத்துக்கொண்ட எடுத்துக்கொண்டாள்.

 காலையில் அவசரத்துக்கு பிள்ளைகளுக்கு உப்புமா செய்தவள் பார்வை வாசலையே தொட்டு மீண்டது. அவசரமாக மதிய சமையலையும் முடித்துவிட்டு வாசலில் அமர்ந்து விட்டாள்.

மகள் பசிக்குது என்ற போது கூட, “கொஞ்சம் இருடா தமிழு அப்பா வந்துருவாரு சேர்ந்து சாப்பிடலாம்” என்று சமாதானம் செய்தாள். அவன் திரும்பி வரமாட்டான் என்பதை அறியாமல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!