அன்று விடியலே மீனாவுக்கு மிக சோம்பலாக தான் இருந்தது. இன்று பெரிதாக எந்த வேலையும் கிடையாது. அவளின் குட்டி சமையல் கூடம் விடுமுறை. தொழிலாளர்கள் தான் மீனாவுக்கு முகவர்கள். இன்று அவர்களுக்கு வேலை இல்லாமல் இருக்க மீனாவும் விடுமுறை விட்டு விட்டாள். நன்றாக இஞ்சி டீ போட்டு எடுத்தவள், வெளி வாசலில் அமர்ந்து கொண்டாள்.
அப்போதுதான் பரமு எழுந்து வந்தார். மகள் ஒன்றும் செய்யாமல் இருக்கவும், அருகில் வந்தவர்,
Advertisement
“என்ன மீனா அப்படியே உட்கார்ந்து இருக்க..”
“என்ன பண்ணனும்”
“இன்னைக்கு பிள்ளைகளுக்கு ஸ்கூல் இருக்கு தான” எங்கவும், ஆமாம் என்று தலையசைத்தவள் வேறு எதுவும் பேசி கொள்ள வில்லை. இனி, அவள் பேசுவதாகவும் இல்லை. போதும் என்ற அளவுக்கு எல்லோரும் அவளிடம் பேசியாச்சு…
Advertisement
பரமு, மகளையே வித்தியாசமாக பார்த்து இருக்க, மாடியிலிருந்து மூன்று பிள்ளைகளோடு இறங்கி வந்தான் ஜெகன். இப்போதெல்லாம் இது சகஜமாக நடக்கிற காரியம். பிள்ளைகள் அவர்கள் விருப்பம் போல தாய், தந்தை யாருடனும் உறங்கிக் கொள்வார்கள். அவர்கள் விருப்பம் என்றால் என்ன?.. கண்டிப்பு காட்டும் தாயை விட, தந்தையிடம் அதிக ஓட்டுதல்.
Advertisement
“இன்னைக்கு பிள்ளைகளுக்கு ஸ்கூல் இருக்கு அத்தை” என்றான் ஜெகன்.
“ஆமா, தம்பி. உன் வீட்டுக்காரி தான் என்னமோ பேய் புடிச்ச மாதிரி உட்கார்ந்து இருக்கா” என்றார் தாய்.
இப்போது இதுவும் சகஜமான ஒன்று. இருவருக்குள்ளும் சகஜமான உறவுக்கான மரியாதையை கொடுத்துக் கொண்டார்கள். அவ்வளவு நல்லவன் ஜெகேந்திரன். மீனா எதுவும் பேச வில்லை.
Advertisement
ஜெகன், மனைவியை பார்க்க. மீனா அமைதியாக டீயை ரசித்து கொண்டிருந்தாள். இருவரும் புரியாமல் பார்த்து கொண்டவர்கள்,
“அத்தை, நான் மேல கூட்டிட்டு போய் பிள்ளைகளை குளிக்க வைக்கிறேன். நீங்க பாருங்க” என்று மனைவியின் பொறுப்பை மாமியாரிடம் தள்ளி விட்டான்.
“என்ன மீனா”
“என்னம்மா?”
“என்னடி அமைதியா இருக்க?”
“என்ன பண்ணனும்?”
“புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி இருந்தா, பிள்ளைகளை யாருடி கிளப்புவா?”
“அதான் அவங்க அப்பா இருக்காரே”
“சரி, அவங்க சாப்பிட ஏதாவது பண்ணு” என்றார்,
“அதையும் அவங்க அப்பாவே பார்த்துப்பார்” என்றால் அசட்டையாக,
“ரொம்ப திமிர் பண்ணாத மீனா. ஒரு ஆம்பள ஒரு அளவுக்கு தான் இறங்கி வருவான். நமக்கு அடங்கி போறான்றதுக்காக குத்தி பாதம் பார்க்க கூடாது. அவனுக்கு இருக்கிற வசதிக்கு உன்னையெல்லாம் தேடி வந்து தாங்கணும்னு என்ன இருக்கு?.. ஆனாலும் நம்ம பொண்டாட்டி பிள்ளைன்னு வந்து நிற்கிறான் தானே. பொட்ட கழுதைக்கு என்னடி வீம்பு?”
மீனாவிடம் அசைவே இல்லை. அதே மாதிரி அமர்ந்திருந்தாள்.
“இப்ப போனாலும் கட்டிக்கிறதுக்கு ரெடியா இருக்காளுக. அந்த மனசு உன் முகத்தை தானே பார்க்கிறான். இன்னும் எம்புட்டு நாளைக்கு உன் பிடிவாதம். ஒரு அளவுக்கு மேல தூக்கி விட்டுட்டா என்னடி பண்ணுவ?.. இங்க பார் மீனா, ஆம்பள இறங்கி வர்றது பெருசு. அனுசரிச்சு கைல புடிச்சு வாழ பாரு” கோபத்தோடு அறிவுரை சொன்னவர், பேரப்பிள்ளைகளுக்கு சமைக்க உள்ளே சென்றார்.
இதோ இப்படி சுற்றி இருக்கும் எல்லோரும் இவளையே குற்றவாளியாக பேசுவது தான் மீனாவை இறுகிப் போக வைத்தது. அப்போ நான் என்ன கெட்டவளா?… அப்படியே கெட்டவளாக இருந்தாலும், நான் அப்படி தான் எனும் வீம்பு வந்து அடமாக அமர வைத்தது.
பரமு, அவசரமாக சமையலை முடிக்க.. ஜெகன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கீழே வந்தான். அப்போதும் மீனாவிடம் எந்த மாற்றமும் இல்லை. எதற்காக இந்த ஓட்டம். அதற்கு முடிவு வந்தது. அப்படித்தான் நினைத்தாள் மீனா.
மலர், தாயின் அருகில் வர, தூக்கி மடியில் அமர்த்தி கொண்டாள். ஜெகன் மனைவியை ஒரு பார்வை பார்த்தவன் பிள்ளைகளைக் கிளப்ப அவசரமாக உள்ளே சென்றான். பிள்ளைகளை குளிக்க வைத்து, உடைமாற்றி, அவசரமாக உணவு ஊட்டி பள்ளிக்கு கொண்டு சென்று விடும் வரை மீனாவிடம் ஒரு அசைவும் இல்லை. அப்படியே அமைதியாக தான் அமர்ந்திருந்தாள்.
பிள்ளைகளை விட்டு திரும்ப வந்த ஜெகனும் மனைவியை பார்த்தவன் அவள் மடியில் இருந்த மகளை வாங்க, அப்போது கூட மீனா பேசினால் இல்லை. ஒரு சலனமும் இல்லாமல் தான் அமர்ந்திருந்தாள். ஜெகனுக்கே ஒன்றும் புரியவில்லை. முன்பானால் என் மகளை நீ ஏன் தூக்குகிறாய் என்று தள்ளி வைப்பாள், கோபப்படுவாள்… இன்று என்னவோ முழு அமைதி. அவள் அண்ணன் குடும்பம் வந்து சென்றதில் இருந்தே மீனா முழுதாக அமைதியாகி விட்டாள்.
ஆம், நான்கு நாட்களுக்கு முன் தான் அவளின் மூன்று அண்ணன் குடும்பமும் வந்தார்கள். அப்போது இருந்தே மீனா நிறைய யோசித்தாள். நிறைய அமைதியாகிக் கொண்டாள். மூன்று வருடத்திற்கு முன்பிருந்த அவளின் ஆதங்கத்திற்கும், கோபத்திற்கும், ஏக்கத்திற்கும் தற்போது நியாயம் கிடையாது. அர்த்தமற்ற கோபம் ஆகிப்போனது.
வாழ்க்கை தான் எவ்வளவு விசித்திரங்களைக் கொண்டது. அன்று யாருமற்ற ஜெகேந்திரன். இன்று எல்லோருக்கும் சொந்தக்காரன். மீனாவே, அவள் அண்ணன் வீட்டவர்களை எதிர்பார்க்கவே இல்லை. அப்படி எல்லாம் வந்து செல்லும் குடும்பம் கிடையாது.
அவளின் அண்ணிகள் மூன்று பேரும் ஜெகன் தம்பி என்று இணக்கமாக அழைக்கிறார்கள். அவள் அண்ணன்கள் மரியாதை கொடுக்கிறார்கள். இதுவரை ஒருநாள் கூட தங்கிடாத தங்கை வீட்டில் நான்கு நாட்களும் இங்கு தான். கறி, மீன், ஆடு என்று வீடு அமர்க்களப்பட்டது. ஆனால் அதன் பின்னால் இருக்கும் காரணம் மீனா கிடையாது ஜெகன்.
அவனின் பூர்வீக சொத்து கைக்கு வந்துவிட்டது. நல்ல தொழில் தொடங்கி விட்டான். அரசியல் பழக்கவழக்கம் வேண்டாம் என்று மீனா அடித்துக் கொண்ட தினகரன் இன்று எம்எல்ஏ. அவரோடு ஜெகனுக்கு நல்ல நட்பு. வசதியான வாழ்க்கை பெரிய இடத்துப் பழக்கவழக்கம் எகன்று ஜெகனுக்கான மரியாதை வேறு… அவனை தங்கை கணவன் என்று சொல்லிக் கொள்வதில் அவ்வளவு பெருமை.
உண்மைதான் நாம் மதிப்பாக இருந்தால் தான், சொந்தம் என்று நாலு பேர் நம்மை தேடி வருவார்கள். எல்லாவற்றையும் உடனிருந்து பார்த்த தாய் கூட மாறிவிட்டாரே…
“உன் முகத்தை பார்த்தா அப்படி தெரியலையே?” என்றார் சந்தேகமாக,
“அண்ணங்க இங்க வந்தது உனக்கு பிடிக்கலையா மீனா”
தாயை நிமிர்ந்து பார்த்தவள், “அவங்க என்ன என் வீட்டுக்கா வந்துருக்காங்க ஜெகன் வீட்டுக்கு வந்து இருக்காங்கம்மா” என்றாள் அர்த்தமாக,
மகளை அழுத்தமாக பார்த்தவர், “இங்க பாரு மீனா புருஷன் பொண்டாட்டி சண்டை போடுறதெல்லாம் குடும்பத்துல சகஜம். அதை புடிச்சுட்டு தொங்கிக்கிட்டே இருக்க கூடாது. ஆமா தப்பு பண்ணிட்டான் இப்ப என்ன பண்ணனுங்கிற… அந்த ஜெகனை ஒதுக்கி வச்சு காலத்துக்கும் நீ அடுப்படியிலே கிடந்து கஷ்டப்படுறியா?..”
“அப்போ எல்லாத்தையும் மறந்துட்டு அவனை ஏத்துக்கிட்டு சந்தோஷமா வாழ சொல்றியா?” என்று கடுப்பாக கேட்க.
“ஆமா, அதுல என்ன தப்பு. ஜெகனை விட மோசமான ஆட்களை எல்லாம் பொண்ணுங்க ஏத்துக்கிட்டு வாழத்தான் பழகிக்கிறாங்க. உனக்கு என்னடி வந்துச்சு. ஆரம்பத்துல நீ கோவமா இருந்த.. உன் கோபம் சரின்னு நானும் அமைதியா தான் இருந்தேன். இனியும் அப்படி இருக்க முடியாது மீனா”
மீனாவுக்கு கண் கலங்கியது, “என்னால அவ்வளவு சீக்கிரம் எதையும் மறந்துட்டு வாழ முடியாதும்மா”
“அப்புறம் என்ன பண்ண போற ஒரு ஆம்பள எவ்வளவு நாளைக்கு தனியா இருப்பான். பொண்டாட்டி பக்கத்திலேயே இருந்தாலும் அடுத்த உன்னை பார்ப்பானுங்க. உன் புருஷன் தனியா இருக்கான். உன் பின்னாடியே எவ்வளவு நாளைக்கு சுத்த முடியும் ஒரு கட்டத்துல சலிச்சு போனா?” என்று நிறுத்த,
“சலிச்சுப் போனா? சொல்லும்மா என்ன சொல்ல வர”
“பெத்தவ வாய் திறந்து சொல்லனுமா? ஜெகனுக்கும் ஆசை, இளமை எல்லாம் இருக்கும். யார் சொல்லையாவது கேட்டு தடுமாறி போனா?.. உன் இடத்தில வேற ஒருத்தி வந்தா.. உன் பிள்ளைகளுக்காக கூட நீ யோசிக்க மாட்டியா மீனா. அவ்வளவு சுயநலவாதியா நீ” என்ற வார்த்தையை விட,
மீனாவுக்கு தாங்கவில்லை, “நான் சுயநலவாதியாமா? அந்த ஆளுக்கு மட்டும் தான் இளமை, ஆசை எல்லாம் இருக்கும். என் உடம்பு இரும்புல செஞ்சதா? நான் என்ன குந்திதேவியா? எனக்கு மட்டும்தான் மூணு பிள்ளைகளா?.. ஏன் அவனுக்கு மூணு பிள்ளைகள் இல்லையா?.. அதுக்கான பொறுப்பு கடமையெல்லாம் அவனுக்கு கிடையாதா?”
“ஒரு பொம்பளைக்கு மட்டும் ஆசையை அடக்கி, இளமைய ஒதுக்கி வச்சு பிள்ளைகளை வளக்கணும். அதே மாதிரி ஆம்பள தனியா நிக்க கூடாது அவங்க இளமை வீணா போயிருமா?..” எதிர் கேள்வி கேட்க.
பரமுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, “மீனா நீ விதாண்டவாதம் பண்ற, நான் நிதர்சனத்தை சொல்றேன். உன்னை மாதிரி எனக்கு அடுக்கு கேள்வி எல்லாம் கேட்க தெரியாது. அந்த ஜெகனோட நீ எவ்வளவு கஷ்டப்பட்ட?.. அப்ப நீயும், பிள்ளைகளும் தான் நல்லா வாழனும். வேற யாருக்கும் உரிமை போக கூடாது. சொத்து என் பேர பிள்ளைகளுக்கு தான். மூணு பிள்ளைகளோட உன்னை கல்யாணம் பண்ணிக்க யாரும் ரெடியா இல்ல? ஆனா, ஜெகனை கல்யாணம் பண்ணிக்க வருவாங்க. அதுதான் வித்தியாசம். ஒழுங்கா அவனோட அனுசரிச்சு வாழைப்பழகு” என்று கட்டளையாக சொல்லி விட்டார் பரமேஸ்வரி.
எல்லோருக்கும் நல்லவனாகி போனான் ஜெகன். மீனாதான் வீம்பாகவும் வறட்டு பிடிவாதத்தோடும் இருப்பதாக மற்றவர்கள் பார்வையில் பட்டது. பிள்ளைகளும் கூட தந்த இடமே அதிக ஒட்டுதல் காட்டினார்கள். மீனா எதுவும் சொல்லவில்லை. என்ன சொல்ல முடியும். பணக்காரனை என் சொந்தம் என்று சொல்வார்களா?… பிச்சைக்காரனை என் சொந்தம் என்று சொல்வார்களா?..
பெற்ற தாய் கூட மீனா பக்கம் நிற்கவில்லை. அவ்வளவு ஆசைப்பட்டு ஜெகனை காதல் திருமணம் செய்து கொண்டவள் இன்று அடியோடு வெறுக்க என்ன காரணம் என்று தெரிந்தும்.. அது மதிப்பிழந்து போகும்போது வாக்குவாதம் செய்து மேலும் மதிப்பிழக்காமல் வாய் மூடி கொண்டாள்.
ஜெகன் சகஜமாக தன் மச்சான்களோடு உறவாடினான். வீட்டுக்கு தேவையானதை பார்த்து செய்தான் பிள்ளைகளை அக்கறையாக கவனித்துக் கொண்டான். மீனாவை மட்டும்தான் அவனால் நெருங்க முடியவில்லை. வீட்டில் அவ்வளவு ஆட்களை பார்த்ததும் பிள்ளைகளுக்கு ஒரே சந்தோஷம். பள்ளிக்கு விடுமுறை, நிறைய சாப்பாடு, நிறைய விளையாட்டு என்று பயங்கர குஷியில் இருந்தார்கள்.
பரமுதான் மகளிடம் அலப்பறையை கூட்டிக் கொண்டிருந்தார்.
கண்டு கொள்ளவே இல்லை. மகளுக்கு தலை நிறைய ஜாதி பூவை சூடி விட, தன் அண்ணிகள் குறுகுறு பார்வையில் சங்கட பட்டு போனாள். காசு, பணத்தை கண்டதும் ஒட்டிக் கொண்டாள் என்று நினைப்பார்களோ?…
அவள் கணவன் அவளுக்கான உரிமை என்று நினைப்பு மட்டும் மீனாவுக்கு வருவதாய் இல்லை. சினிமா பட மாதிரி என் புருசன் எனக்கு வேணாம் நான் தனியா நிற்கிறேன். என்றெல்லாம் பேச முடியவில்லை. திருமணம் செய்து மூன்று பிள்ளைகள் பெற்ற பின் நான் தனியாக நிற்கிறேன் என்று சொல்வதெல்லாம் அவர்களை பொறுத்த வரை கேலிக்கூத்து. ஜெகனை தள்ளி வைக்க காரணமே இல்லை. அனுசரித்து ஏற்றுக்கொள். அதுதான் எல்லோரோட வாதமாக இருந்தது.
எதுவும் சொல்ல முடியாமல் மீனா அடுப்படியில் எதையோ கிண்டி கொண்டிருக்க, சட்டமாக ஹாலில் அமர்ந்திருந்தான் ஜெகன்.
“மூணு பேருக்குமே வேற ஸ்கூல் மாத்தணுக்கா. இப்ப இருக்குற ஸ்கூல் வேணாம்” என்றவன் ஒரு பெரிய ஸ்கூல் பெயர் சொல்ல,
மீனாவுக்குமே இது புது தகவல். ஆனால், எதையும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
“ரெண்டு பொம்பள பிள்ளைங்க வச்சிருக்க ஜெகன். இவ்வளவு பெரிய ஸ்கூல்ல சேர்த்தா எப்படி சேவ் பண்றது” யோசனையாக அர்ஜுன் சொல்ல,
“பிள்ளைங்க மூணு பேருக்கும் தனியா சேவிங் தொடங்கி இருக்கேன் மாமா. நகைச்சிட்டு தனியா ஓடிட்டு இருக்கு. நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்குற இடத்தை பேசி இருக்கேன்” என்று ஜெகன் சொல்லவும், எல்லோருக்கும் ஆச்சர்யம்.
“என்ன ஜெகன் சொல்ற?”
“ஆமா, மாமா எப்படியும் நாங்க இருக்கிறது வாடகை வீடு. எங்க பொழப்பும் இந்த பக்கம் தான் ஆகிப்போச்சு. மூணு பிள்ளைகள் இருக்கே.. சின்ன பசங்களா இருக்கும் போதே சொந்த வீட்ட கட்டிடுவோன்னு ஒரு யோசனை”
எல்லோருக்கும் முந்திக்கொண்டு பரமு, “நல்ல யோசனை தம்பி. சந்தோஷமா செய்யுங்க. காசு பணம் கை நிறைக்கும் போதே சொத்து வாங்கி போட்டுடனும்” என்றவர் அர்த்தமாக மகளை பார்க்க,
“அவ்வளவு பொறுப்பானவனாடா நீ” என்று பார்த்தாள் மீனா.
“பரவாயில்லையே மீனா. ஜெகன் ரொம்ப பொறுப்பா இருக்கான். உன் மக்களுக்கு இப்பவே நகை சேர்த்து வைக்கிறான். உனக்கு பெருமை தானே”
“இதுல எனக்கு என்ன பெருமை வேண்டி இருக்கு அண்ணி. அவங்க எனக்கு மட்டுமா பிள்ளைகள். அவருக்கும் தானே.. அவர் பெத்த பிள்ளைகளை, அவர் பார்க்கிறார். அது கடமை தானே, என்னத்த பெருமை வேண்டி கிடக்கு” அடுப்படியில் வெந்து சாவும் கடமை எனக்கு இருக்கிறது என்றால் அதே கடமை அவனுக்கும் இருக்கு தானே..
மீனா வெளியில் விட்டுக் கொடுக்காமல் பேசி விட்டாலும் மனதில் நிறைய இயலாமை கொட்டி கிடந்தது. நியாயமான கோபத்தை கூட ஒரு பெண்ணாக வெளிப்படுத்தக் கூடாது. இப்படி எல்லாம் மற்றவர்கள் பெருமையாக பார்க்க வாழ வேண்டும் என்று எத்தனை நாட்கள் கனவு கண்டிருப்பாள். ஆனால், அவள் மனதிற்கு எதுவும் நிறைவை கொடுக்கவில்லையே…
நிச்சயமாக இருவரும் வேறொரு துணையை தேடப் போவதில்லை. அதற்காக அவன் வந்ததும் தொற்றிக் கொண்டு ஒட்டிக்கொள்ளவும் மனதில்லை. வேறு என்ன செய்யப் போகிறாய் என்று மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கும் பதில் இல்லை. அதனால் தானோ என்னவோ முழு அமைதியாகிவிட்டாள்.
அண்ணன் குடும்பம் இருந்த வரைக்கும் அமைதியாகவே நின்று கொண்டாள். ஜெகனை எல்லாவற்றையும் எடுத்து செய்ய, அடுத்து மீனா ஒதுங்கியும் கொண்டாள். என்னவோ மனதிலே ஒரு விரக்தி…
அன்று வேலை முடித்து ஜெகன் வீடு வந்த போதும் மீனா அமைதியாகவே இருந்தாள். எப்பவும் போல பிள்ளைகளை ஜெகனை ஆசையாக பார்த்துக் கொண்டான். இன்றும் பிள்ளைகள் மாடியில் தந்தையோடு உறங்க, அவர்களுக்கு நன்றாக போர்த்தி விட்டவன் மெல்ல எட்டிப் பார்த்தான். வெளிவரான்டாவில் மனைவியின் நடமாட்டம் தெரிந்தது.
கைக்குள்ளே வளர்த்த மூன்று பிள்ளைகளை மனம் தேடுகிறதோ என்ற நினைப்போடு தான் ஜெகன் கீழே வந்தான்.
“மீனா”
பதில் சொல்லாமல் மீனா நிமிர்ந்து மட்டுமே பார்த்தாள்,
“எனக்கு மன்னிப்பு தவிர உன் கிட்ட வேற என்ன கேட்கிறதுன்னு தெரியவில்லை மீனா. உங்க அம்மா சொல்ற மாதிரி நான் உன்னை தாண்டி போக மாட்டேன். அது உனக்கும் நல்லா தெரியும்” மீனா இதழ்களில் விரத்தியான சிரிப்பு,
அந்த நம்பிக்கை ஒன்று தானே திரும்பத் திரும்ப அவளுக்கு கணவனை நம்ப தூண்டியது. என்னை தாண்டி என் கணவன் நிற்க மாட்டான் என்று அவனின் காதல் தந்த நம்பிக்கை தானே மறுபடியும் அவனோடு ஊரை விட்டு வந்து ஒரு வாழ்க்கையை வாழ சொன்னது. ஆனால் நிதர்சனம். காதலோடு உறவு கல்யாணம் வரைக்கும் தான். அதன் பின்னான பெற்றவர்கள் என்ற பரிமாணம் அது தொடங்கிய பொறுப்பும், கடமையும் நிதர்சன வாழ்க்கையை எடுத்துரைக்கிறது. அதில் பெரிய அளவில் தோற்றுப் போனவர்கள் ஜெகன், மீனா.
“என்னால உனக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க முடியாது மீனா. திரும்பவும் என் மேல நம்பிக்கை வைன்ற வார்த்தை சொல்லக் கூட எனக்கு கூசுது. ஆனா, என் மேல எந்த தப்பும் இல்ல மீனா. திவாகர் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரொம்பவும் போராடி என்னை மீட்டு ஓடி வந்தேன். ஒரு முதிர்ச்சி இல்லாத பக்குவம் இல்லாத வயசுல என்ன பண்றோம்னு தெரியாம பண்ணிட்டேன் மீனா. எப்படியாவது முன்னேறனுன்ற என்னோட அவசரம் எனக்கு கெட்டதை தேடி தந்திருச்சு. அவ்வளவு சீக்கிரம் என்ன புரிய வைக்க முடியாது. அதுக்காக உங்களை தள்ளி எல்லாம் நிக்க மாட்டேன்”
அப்போதும் மீனாவிடம் எந்த அசைவும் இல்லை.
“உனக்கு இதெல்லாம் பிடிக்கலையா மீனா” என்றான் அவள் பார்வை போகும் திசை பார்த்து, அவள் புரியாமல் பார்க்க,
“அந்த இடம்தான் நம்ம வாங்க பேசி இருக்கோம். இன்னும் ஒரு வருஷத்துல வீட்டு வேலை ஆரம்பிக்கனும் மீனா. இப்பல்லாம் அனாவசியமா எந்த செலவும் செய்றதில்லை. முழுசா சேவிங் தான் போகுது. பிள்ளைகள் பெயரில் பணம் போட, நகைச்சிட்டு போட, இடம் வாங்க இப்படித்தான் தனித்தனியா போட்டு வைக்கிறேன்”
ஜெகன் இப்படித்தான் செய்வான் என்று மீனா முன்பே அறிந்ததுதான். சண்டை போட்ட மனைவியை சமாதானம் செய்யும் செயல்களாக தான் ஜெகனின் நடத்த இருந்தது. முன்பென்றால் சேலையும், பூவும், ரெண்டு படத்துக்கு கூட்டிட்டு போனால் போதும் மீனா அப்படியே கணவனிடம் விழுந்து விடுவாள். இப்போதும் ஜெகனிடம் அதே நடைமுறைதான். கொஞ்சம் வித்தியாசமாக…
“உனக்கு எதுவுமே பிடிக்கலைல மீனா. நான் வந்தது பிள்ளைங்க என் கூட இணக்கமா இருக்கிறது. இப்ப நான் வாழ்ற வாழ்க்கை கூட உனக்கு பிடிக்கல தானே” என்றதும், மீனா முகத்தில் அப்படி ஒரு கோபம்.
அவனை நோக்கி வாயை மூடு என்று ஒரு விரலை காட்ட, கை நடுங்கியது.
“மீனா”
“இந்த உலகத்துல நீங்க நல்லா இருக்கணும். மத்தவங்க பாராட்டு அளவுக்கு ரொம்ப பெருமையா வாழனும். உங்க பிள்ளைகளோட நூறு வருஷம் நல்லா வாழனும்னு நினைக்கிற முதல் நாளை நான் தான்” லேசாக கலங்க சொன்னவள், பட்டென்று உள்ளே சென்று விட்டாள்.
சத்தியமான வார்த்தைதான். அவனை வாழ வைக்க அவனோடே போராடிய பெண். நான் நல்லா இருக்கணும் என்று என் மனைவியை தவிர வேற யார் நினைப்பார். கண்களை மூடி அப்படியே அமர்ந்து விட்டான் ஜெகன்.
அடுத்த நாளை பரமு ஊருக்கு கிளம்பி விட்டார். எப்படியோ நீங்கள் ஒரே குடும்பம் என்ற ஒரு எண்ணத்தை பிள்ளைகள் மனதில் விதைத்தாயிற்று. இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். தன்னை வைத்து மகள் இன்னும் தனியாக நிற்க விருப்பமில்லை. தானும் கிளம்பி விட்டால் இனி, அவர்கள் பாடு..
தாயின் எண்ணம் மகளுக்கா புரியாது. மறுப்பு சொல்லாமல் அமைதியாக நின்று விட்டாள். பெற்றவருக்கும் அமைதியாக செல்ல விருப்பமில்லை.
“பெத்தவ சொல்றத கேளு சாமி. ரோசப்பட்டா மனசு சுண்டிய இழுக்கும்.. பொம்பள பொறப்பு அனுசரிச்சு போ. இன்னைக்கு இல்லாட்டியும் பின்னாடி ஒரு நாள் நீ நல்லா இருப்ப” என்றதும், விரக்தியாக சிரித்தவள்,
“உன் வார்த்தை பலிக்கட்டும். நீங்க சொன்ன போது நான் கேட்கலாம்மா.. நான் தான் என் கை நிறைய வேப்பம் பூவா அள்ளி வச்சேன். உங்களுக்கு அந்த பூவுல இருக்கிற தேன் மட்டும்தான் தெரியுது. எனக்கு அந்தத் தேனோடு சேர்ந்து இருக்கிற கசப்பும் தெரியுது. ஏன்னா உண்டவ நான் தானே. கசப்புதானே, விஷம் கிடையாது. சமாளிச்சுப்பேன். நல்ல படியா போயிட்டு வாங்க.