Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உடைந்த மனங்கள் ஒட்டாதா?

உடைந்த மனங்கள் ஒட்டாதா?… அத்தியாயம் 23

உடைந்த மனங்கள் ஒட்டாதா?..

அத்தியாயம் 23

வெண்பாவின் வார்த்தைகளை கேட்டு ஜெகனே ஒரு நிமிடம் உறைந்து போனான். அவனுக்கு நன்றாக தெரியும் மீனா தன்னை முழுதாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று… ஏதோ தற்போது அமைதியாக இருக்கிறாள் என்பதற்காக ரொம்பவும் சீண்டி விடக் கூடாதே…

“அக்கா” என்று ஜெகன் தொடங்கும் போதே,



Advertisement

“அப்ப என் மேல தான் தப்புன்னு சொல்றீங்களா அண்ணி?…” என்றாள் மீனா.

“உன்னை மட்டுமே நான் குறை சொல்லலை மீனா. ஜெகனும் தப்பு தான். ஆனா, அவன் இருந்த சூழ்நிலைக்கு நீ அவனை விட்டு வந்து இருக்க கூடாது மீனா. அவன் உயிருக்கு போராடுற நிலையிலஇருந்தான்” தெளிவாக சொன்னாள் வெண்பா.

சபாஷ்.. கணவனை வேசி வீட்டுக்கு கூடையில் சுமந்து சென்ற நளாயினி வம்சம் தானே நாம்.. இவ்வளவு கூட ஆண்களுக்கு ஆதரவு கொடுக்காவிட்டால் எப்படி? மனதில் நினைத்தவளுக்கு முகம் சுருங்கியது.

Advertisement

“வேற என்ன அண்ணி நான் பண்ணி இருக்கணும். அவர் கூடவே இருந்து சேவை செஞ்சிருக்கணுமா?…”

Advertisement

“இப்போ சேர்ந்து தானே இருக்கீங்க” என்றதும் அர்த்தம் புரிந்தது மீனாவுக்கு…

“எப்படியும் புருஷன் பொண்டாட்டியா சேர்ந்து தான் வாழ்றிங்.க அதுக்கு எதுக்கு அப்போ பிரிஞ்சு போனேன்னு கேக்குறீங்களா அண்ணி? ரெண்டு விஷயம் தான். ஒன்னும் அவ்ளோ ரோஷப்பட்டவ இன்னைக்கு எதுக்கு உன் புருஷனை சேர்த்துக்கிட்டேன்னு அர்த்தம்.. இல்லைன்னா அன்னைக்கே உன் புருஷனுக்கு துணை நின்னு இருக்கணும்னு அர்த்தம். அப்ப என்ன நினைக்கிறீங்க அண்ணி. காசு, பணம் வந்ததும் என் புருஷன் கூட சேர்ந்துட்டேன்னு நினைக்கிறீங்களா?”

 “மீனா” என்றான் ஜெகன் மனதாங்களாக..

Advertisement

“தப்பு தான்னு ஒத்த வார்த்தையில் முடிக்கிற அளவுக்கு தான் உங்க தம்பியோட தப்பு இருக்குதா அண்ணி. மனைவிக்கான என் கடமையை சொல்றீங்களே ஒரு கணவனுக்கான கடமை என்னன்னு உங்க தம்பிக்கு தெரியுமா?.. என் புருசனுக்கு யாரும் இல்ல, அவருக்கான முதல் குடும்பம் நம்மதான்னு நினைச்சாதால தான் எல்லாத்தையும் மறந்துட்டு வேற ஊருக்கு பிழைப்ப பார்க்க வந்தோம். மனைவிக்கு உண்மையா நடந்து கிட்ட உத்தமரா இவரு.. அன்னைக்கு எங்க கையில என்ன இருந்துச்சு. இவரோட சேர்ந்து நானும் உழைச்சேன்”

“மூணாவது ஒரு பிள்ளையை நான் நினைக்கவே இல்லை. இவருக்காக.. இவர் ஆசைக்காக மட்டும் தான். அந்த பொறுப்பை கொஞ்சமாவது ஏத்து கிட்டாரா?.. நான் ஒரு முட்டாள் முதல் பிறந்த ரெண்டு பிள்ளைக்கு ஒன்னும் கிழிக்காதவன், இந்த பிள்ளைக்கு நிப்பாட்டிடுவான் நெனச்சது ஏன் தப்பு தான். இவரோட பொறுப்புகளை தட்டி கழிச்ச மாதிரி நானும் மூணு பிள்ளைகளை தட்டி விட்டுட்டு இவர் பின்னாடி நிக்கணும்னு நினைக்கிறீங்களா?” என்றாள் ஆவேசமாக.

“அப்படி சொல்லல மீனா. உன் கோபம் எனக்கு புரியுது. ஆனா, அதுல அவன் தப்பு எதுவுமே கிடையாது..” புரிய வைக்க முயன்றாள் வெண்பா.

“உங்களுக்கு என் கோபம் புரியுதே.. தவிர, அதுக்கு பின்னாடி இருக்கிற என்னுடைய நியாயம், ஏமாற்றம், எதுவுமே யாருக்குமே புரியலை அண்ணி. அவருக்கு நியாயமான காரணங்கள் இருக்கட்டுமே.. ஆனா, எனக்கு நடந்தது அநீதி தான்”

ஜெகன் எதுவும் பேசவில்லை. கைகளை கட்டி கொண்டு நிமிர்ந்து அமர்ந்தான். அவள் ஆள் மன காயங்கள் வெளிவரட்டும்.

“இந்த உலகத்துல எவ்வளவு அநீதியான விஷயங்கள் நடக்குது. எல்லாத்துக்கும் நீதி கிடைக்குதா என்ன?… இன்னைக்கு உங்க தம்பி இங்க ஒக்காந்து இருக்காரு.. அவருக்கு குடும்பமா நாங்க இருக்கோம். அதனால எல்லாரும் நியாயம் பேசுறீங்க. ஒருவேளை எதுவுமே நடக்காம போயிருந்தா?.. இவரோட குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தா?.. இவராள ஒரு குடும்பம் தகப்பனை இழந்திருந்தா? அந்த பாவத்தை எங்க கொண்டு போய் கரைக்க அண்ணி. அதையும் தாண்டி இவருக்கு இருவது வருஷமோ இல்ல ஆயுள் தண்டனையோ கிடைக்கும். அப்ப என்னோட பிள்ளைகளோட நிலைமை? அன்னைக்கு என்ன நியாயம் பேச முடியும். இன்னைக்கு ஜெகன் முழுசா நிக்கிறாரு, அதனால எல்லோருக்கும் அவர் நியாயமா தெரியுறாரு.. அன்னைக்கு எனக்கு நிக்கல எனக்கு வேற வழி தெரியல. இந்த மூன்று பிள்ளைகளுக்கும் அவர்தானே தகப்பன் என்ன நியாயம் செஞ்சுட்டாரு. அவருக்கும் சேர்த்து நான்தான் பொறுப்பேத்துக்கிட்டேன். இந்த நிமிஷம் வரைக்கும் அவரோட சுமையை என் தோள்ல நான் சுமக்கிறேன்”

வெண்பாவுக்கு, மீனாவின் பேச்சு நியாயமாகப்பட்டது. ஆனாலும், அன்றைய சூழ்நிலை. ஜெகனின் முடியாத நிலை எல்லாம் அவ்வாறு வார்த்தைகளை வரவிட்டது.

“உன்னை தப்பு சொல்லலை மீனா. அன்னைக்கு ஜெகன் இருந்த நிலைமை அப்படி?”

“அதுக்கு அவர் தானே அண்ணி காரணம். அவரோட சுய முடிவுக்கு நாங்க எல்லாரும் கஷ்டப்பட்டோம். எனக்கு கல்யாணமாகி முதல் குழந்தை பிறக்கிற வரைக்கும் எங்க அப்பா என்கூட இருந்தாரு.. ஆனாலும், இந்த நிமிஷம் வரைக்கும் ஒரு கஷ்டம்னா என் மனசு முதல்ல எங்க அப்பாவ தான் தேடும். எங்க அப்பா மட்டும் உயிரோடு இருந்திருந்தான்னு நினைக்காத நாளே இருக்காது. உங்க தம்பிக்கு தண்டனை கிடைச்சிருந்தா என்னோட மூணு பிள்ளைகளுக்கும் தகப்பனோட வாசமே கிடைச்சிருக்காது. அந்த மூணு பிள்ளைகளும் என்ன பாவம் பண்ணாங்க அண்ணி. உங்க தம்பியோட தப்புக்கு அவங்க தான் தண்டனை அனுபவிச்சாங்க”

“மன்னிச்சிரு மீனா. நான் என்னவோ சொல்ல போய் எங்கேயோ முடிஞ்சு போச்சு. அதுக்கு தான் புருஷன் பொண்டாட்டி சண்டைக்குள்ள மூணாவது மனுஷங்க போக கூடாதுன்னு சொல்லுவாங்க போல” சமதானமாகவே பேச்சை முடிக்க பார்த்தாள்.

“மன்னிப்பெல்லாம் எதுக்கு அண்ணி. கட்டிக்கிட்டவனவே சட்டையை புடிச்சு கேள்வி கேக்காம நடு வீட்ல உட்கார வைச்ச்ருக்கேன். உங்களை குத்தம் சொல்லி எனக்கு என்னாக போது சொல்லுங்க.. ஆனா, ஒரு கோபம், ஆத்திரம் மனசுல இருக்கு உண்மைதான். இன்னைக்கு தான உங்க கண்ணுக்கு நாங்க தெரிஞ்சோம். இதுக்கு முன்னாடியும் நான் ஜெகன் பொண்டாட்டி தானே. அன்னைக்கு இந்த சொந்தம் யாரும் தெரியல. குடும்பத் தலைவனை வைத்து தான் சொந்த பந்தன்னு எங்க அம்மா மறைமுகமாக சொன்னது எனக்கு புரியல. ஆனா, இன்னைக்கு புரியுது” என்றதும், எழுந்து வந்து மீனா கைகளை பிடித்து கொண்ட வெண்பா.

“அப்படிலாம் எதுவும் இல்ல மீனா. என்னவோ என் தம்பியை வைத்து நானும் தள்ளி நின்னு போனேன். அவனை நீ ஏத்துக்கில்லையேன்னு கொஞ்சம் கோபம். உன்கிட்ட பேசி இருந்தா புரிஞ்சிருக்கும்.. உன் பக்கம் இருக்குற நியாயத்தை நான் புரிஞ்சுக்காம போனேன்” வருத்தமாக சொல்ல,

மீனா திரும்பி ஜெகனை அழுத்தமாக பார்த்தவள், “ ஊருக்கு நல்லவரா இருக்கலாம். ஆனா, நாலு செவுத்துக்குள்ள இவரோட குடும்பம் நடத்துனது நானு.. என் புருஷன் எனக்கு நல்லவனா இல்லை அண்ணி”

“ஆனா, எனக்கு என் தம்பி நல்லவனா தான் இருக்கான். அந்த பாசம் தான் உன்னை யோசிக்க விடல” என்றதும்,

“நீங்க மட்டும் இல்லை. எங்க வீட்ல கூட.. யாரை கேட்டாலும் ஜெகன் மாதிரி நல்லவன் யாருமே இல்லைன்னு தான் சொல்லுவாங்க. ஊருக்கெல்லாம் எம்ஜிஆர் தான். வீட்டுக்கு தான் நம்பியாரு” என்றதும், வெண்பா முகத்தில் ஒரு மலர்ந்த புன்னகை.

அவளுக்கே அதிகமாக பேசிவிட்டோம் என்ற ஒரு நினைப்பு. எல்லோரிடமும் இப்போது தன் வாழ்க்கை அதிகமாக விமர்சிக்கப்படுவது பிடிக்கவில்லை. அதுவும் மீனாவே எதிர்ப்பதமாக விமர்சனம் செய்வது சுத்தமாக பிடிக்க வில்லை. கேள்வி கேட்கும் எல்லோரிடமும் தன்னிலை விளக்கம் கொடுப்பது போல ஒரு மனநிலை. வெண்பா கிளம்பவும் அதை மறைக்காமல் ஜெகனிடம் சொல்லிவிட்டாள் மீனா.

“எல்லார்கிட்டயும் என் கஷ்டத்தை சொல்லி நியாயம் கேட்க எனக்கு பிடிக்கலை. என் இடத்தில் இருந்து என் வலியை புரிஞ்சுக்காத யாருக்கும் என்னால விளக்கம் கொடுக்க முடியாது. திரும்பவும் என்னை யார்கிட்டயும் பேச வைக்காதீங்க ப்ளீஸ்”

 “மீனா நெஜமா நான் எங்க அக்காவ பேச சொல்லி சொல்லவே இல்லை. எனக்கே தெரியாது அவ வந்து இப்படி பேசுவான்னு” என்றான் ஜெகன்.

அது மீனாவுக்கே தெரியும் என்பதால், “நம்ம ரெண்டு பேருக்கு இடையில ஒரு இடைத்தரகர் தேவையே கிடையாது. பசிச்ச வயிறுக்கு உங்க முகம் பார்த்து சோறு போட தெரிந்த எனக்கு.. உங்க மனம் பார்த்து உணர்வுகளை புரிஞ்சுக்கவும் தெரியும். யாராவது நடுவுல ஒருத்தவங்களை வச்சு தான் நம்ம சமரசம் ஆகிக்கனும்னு அவசியமே கிடையாது”

“கல்யாணமான புதுசுல சண்டை போட்டா, பெரியவங்க சமரசம் பண்ணி வைப்பாங்க. அதுவே, அஞ்சு பத்து வருஷம் கழிச்சு சண்டைன்னு வெளியே சொல்லிக்கக்கூட மாட்டாங்க. அவங்களே சமாதானம் ஆகிப்பாங்க. வருஷம் போகப் போக தாம்பத்திய வாழ்க்கையோட புரிதல் அதிகமாகும். நான் ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது. என்ன சமாதானம் பண்ண நீங்க என்னை சுத்தி வரவும் தேவையில்லை. உங்களுக்கு எப்படியோ?.. நீங்க மாறினா என்னால உங்களை புரிஞ்சுக்க முடியும்”என்றவள் நகர்ந்து விட, ஜெகன் யோசனையானான்.

உண்மை தான் மனைவியின் வார்த்தைகள். என் மனைவியை தவிர, என்னை யார் புரிந்து கொள்வார்கள். என் மனைவி மீது எனக்கு நீண்ட காதல் உண்டு. அது மண்ணோடு மக்கும் வரை மறையாத காதல். உணர்ந்து கொள்வாள். ஒரு நாள் என் மனைவி புரிந்து கொள்வாள்.

அடுத்த நாள் ஜெகன் சரியான நேரத்துக்கு எழுந்து கொண்டான். அவனின் அரவம் உணர்ந்தாலும் மீனா கண்டுகொள்ளவில்லை எப்போதும் போல தன் வேலைகளை பார்க்க.. ஜெகன் அவளையே சுற்றி வந்தான்.

சாம்பார் கொதிக்க வைத்து இட்லி ஊத்தி விட்டு சாப்பாட்டுக்கு உலை வைக்க, ஜெகன் வேகமாக வந்து அவள் கையில் இருந்ததை வாங்கி கொண்டான். மதிய சமையலுக்கான ஆயத்தமாக தக்காளி, தயிர் சாதத்துக்கு ஒரே நேரத்தில் உலை வைத்து விடுவாள் கிட்டத்தட்ட அறுபது பேருக்கு மேல சமைக்கணும். வெந்த சாதத்தை மீனா தூக்கி மாற்றும் முன் ஜெகன் தூக்கி மாற்றினான். மீனா எதுவும் சொல்லாமல் இருக்க..

ஜெகன், ஆத்தாடி என்று முனங்கியே விட்டான். அவனுக்கு முதுகில் சுள்ளென்று வலி வந்தது. அவ்வளவு பெரிய பாத்திரத்தை தூக்கி மாற்றுவது எளிதல்ல. மனைவியை நினைத்து குற்ற உணர்வில் உள்ளுக்குள் குமைந்து போனான். மலரை பெற்ற பின் மீனா செய்த வேலை இதுதான். இத்தனை நாட்களும் இதை செய்து கொண்டுதான் இருக்கிறாள். மனதில் எவ்வளவு வைராக்கியம் வேண்டும். தனக்கு கடவுள் முன்பே சரியான புத்தியை கொடுத்திருக்கக் கூடாதா?.. நொந்து கொள்ள தான் முடிந்தது.

சமீப காலங்களில் முதலாளியாக வலம் வந்தவன்.. மீனாவுடன் முன்பு செய்த வேலைகளை தொடரவும் உடல் வலி அலண்டு எடுத்தது. மீனா வடையை தட்டி போடும்போதே ஜெகன் கடையில் வேலை செய்யும் ஒருவனை வர சொல்லிவிட்டான்.

மீனா கேள்வியாக பார்க்க, “நீ கடை வேலையும் பார்த்து வந்தவங்களையும் கவனிக்க முடியாது.. கூட இருக்கட்டும் மீனா ஒத்தாசைக்கு. நான் பிள்ளைகளை பார்க்கணும்” என்றதும்,

“கொஞ்ச நேரத்துல விமலா வந்துடுவா” என்றாள் வாய் திறந்து.

“விமலா எப்பவும் போல அவங்க வேலையை பார்க்கட்டும்” என்று முடித்தவன், அவள் மறுத்து பேசும் முன் உள் சென்று விட்டான்.

அடுத்த பத்து நிமிடத்தில் மீனாவின் அருகில் சூடான டீ வைக்கப்பட்டது. அவள் நிமிர்ந்து பார்க்க ஜெகன் தான். இன்னும் முழுதாக விடியவில்லை. இந்த அதிகாலை வேலையும் அருகருகில் கணவன், மனைவியும், சூடான டீயும் ஏதேதோ பழைய ஞாபகங்களை மீனாவினுள் கிளப்ப, எழுந்து வெளியே சென்று விட்டாள். சில நிகழ்வுகளை கடந்து வரவே முடியாது.

ஜெகன் மனைவியை ஓரளவுக்கு நன்றாக புரிந்து கொண்டான் மீனாவுக்கு தன் மீது காதலும் இருக்கிறது. அதே நேரத்தில் பெரிய அவநம்பிக்கையும் உள்ளது. தன் கணவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு இனி வருவது சிரமம் தான். அந்த நம்பிக்கையை ஜெகன் முழுதாக சிதைத்து விட்டான். நிறைய ஏமாற்றத்தை கண்டவர்கள் எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்க மாட்டார்கள். அதேபோல ஜெகன் மூலம் அதிக ஏமாற்றத்தை கண்ட மீனாவும் எதிர்காலத்தில் பெரிய நம்பிக்கை இல்லை.

தன் வாழ்வில் கடந்த பாதைகள் கொண்டு பிள்ளைகளை கரடு முரடாகவே வளர்க்கிறாள். தன்னை மாதிரியே பிற்காலத்தில் பிள்ளைகள் கஷ்டப்படுவார்களோ என்ற நினைப்பே பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பை காட்டுகிறது. அப்படி அல்லாமல் தன் பிள்ளைகள் நன்றாக வாழ்வார்கள் என்று நம்பிக்கை மட்டும் மீனாவுக்கு வரவில்லை. நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் கஷ்டப்பட்டால் எப்படி சமாளிப்பது தன்னைப்போல் திணறக்கூடாது என்று வாழ்க்கை பாடங்களை கற்பிப்பதாக அவளாகவே நினைத்துக் கொள்கிறாள்.

இதற்கு அடித்தளம் போட்டது ஜெகன். அவ்வளவு எளிதாக அதிலிருந்து மனைவியை வெளிக்கொண்டுவர முடியாது என்று தெரியும். வாய் வார்த்தையாக நிரூபிக்கவும் முடியாது. வாழும் வாழ்க்கை மட்டுமே கணவன் மீதான நம்பிக்கையை அவளுக்கு கொடுக்கும்.

அதனால்தான் ஜெகன் இவ்வளவு வசதியாக இருந்தும், மனைவியை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கொள்ள ஆசை மனதில் இருந்தும் அவளின் வேலையை விட்டு விடும்படி சொல்லவே இல்லை. மீனா அதை வருமானம் என்பதையும் தாண்டி தன் பிள்ளைகளில் ஆதாரம் என்றே நினைக்கிறாள். அதனால், அதை முன்னேற்றவே ஜெகன் நினைத்தான்.

முன்பு போல முன் கூடத்திலும் வராண்டாவிலும் கடை போடாமல் வீட்டின் அருகில் உள்ள இடத்தில் தகர செட் ஒன்று போட்டான். முதலில் அதை எதற்கென்று மீனா அறிந்து கொள்ளவே இல்லை. அறிந்த பின் தடுக்க நினைக்க..

“நீ கடை நடத்தக்கூடாதுன்னு நான் சொல்லல மீனா”

“அப்படி வேற சொல்லி தான் பாருங்களேன்” சவாலாக கேட்க.

“நான் சொல்ல வரத நீ சரியான விதத்தில் புரிஞ்சுக்கணும் மீனா. ஆட்கள் கூட்டம் அதிகமா இருக்கு வெளி வாசலில் இருந்து பார்த்தா உள்ளார வரைக்கும் தெரியுது”

 அது அவளுக்கும் தெரியும் அதனால்தான் பிள்ளைகள் உறங்கும் அறையை அடைத்தே வைத்திருப்பாள்.

“நம்ம கடைக்கு ஆம்பளை ஆட்கள் தான் அதிகம் சாப்பிட வராங்க. அவங்க வராண்டாவுலயே இருக்கறதுனால தான் ஒரு அவசரத்துக்கு நீ பாத்ரூம் போகணும்னாலும் போகாம கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்க” என்றதும் ஒரு பெரு மூச்சு மீனாவுக்கு…

உண்மை தான். எவ்வளவு பேர் நல்ல விதமாக எடுத்து கொள்வார்கள். அத்தனை ஆண்களுக்கு மத்தியில் அடிக்கடி பாத்ரூம் கதவை திறக்க அவளுக்கு விருப்பம் இருக்காது. அதனாலே கடை அடைக்கும் வரை பாத்ரூம் போக மாட்டாள்.

“அதுக்காக?..”

“அதுக்காக தான். நீ மட்டும் இல்ல விமலாவும் இருக்கு. அந்தப் பெண்ணும் பல நேரம் சங்கடப்பட்டுட்டே நிக்குது. பெருசா ஒன்னும் பண்ணல மீனா நாலு கம்பி, ரெண்டு தகரம். அதை உன் தன்மானத்துக்கு இழுக்கா பார்க்காத ப்ளீஸ்” என்று ஏதேதோ சொல்லி அவளை சரி கட்டினான்.

மேல் வாராண்டாவில் உணவு பாத்திரங்களோடு மீனா அமர்ந்து கொள்ள, தகர செட்டில் நாலு டேபிள் போட்டு விமலாவும் ஜெகனின் கடைப்பையனும் உதவிக்கு நிற்பார்கள். அது நன்றாகவே மீனாவுக்கு வசதியாக இருந்தது.

எல்லா நேரமும் ஜெகனால் பிள்ளைகளை கவனித்துக் கொள்ள முடியாது. ஏதேனும் ஒரு பிள்ளைக்கு உடல்நிலை முடியாமல் போனால் மீனா மட்டுமே பார்க்க வேண்டும். அம்மா என்றுதான் அழுவார்கள். அந்த நேரம் எல்லாம் மீனா பிள்ளைகளோடு இருக்க ஜெகன் பார்த்துக் கொள்வான்.

மீனா, விமலாவிடம் தான் சொல்லி செல்வாள். ஆனால், ஜெகன் உடையவனாக நிற்பான். அதில் மீனாவுக்கு பெரிய சங்கடம் தவிர்க்கப்பட்டது. என்னதான் நன்றாக பழகும் மக்கள் என்றாலும் அதில் சில குடிகாரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

அவர்களை எல்லாம் சிரித்துக் கொண்டே மீனாவும், விமலாவும் தள்ளி நின்று கொள்வார்கள். தெரிந்த ஆட்கள் இருப்பதால் பாதுகாப்பாக இருக்குமே தவிர அவர்களை தவிர்க்க முடியாது. ஆனால், ஜெகன் பட்டென்று பேசி அனுப்பி விடுவான். அங்கு அமர்ந்து சாப்பிடலாம் அனுமதிக்க மாட்டான். ஒரு வளர்ந்த ஆண் மகனின் துணை அங்கு இருந்த இரு பெண்களுக்கும் பாதுகாப்பாக இருந்தது.

வீடு, கடை, பிள்ளைகள், வேலை என்று எல்லாவற்றிலும் சரிசமமாக ஜெகன் துணை நின்றாலும் மீனாவுக்கு பயமாகவே இருந்தது. ஜெகனை விட்டு தள்ளியே நின்றாள். இந்தப் பாதுகாப்பின் இதம் பழகி விடுமோ என்று அச்சம் மீனாவுக்கு… தனியாக நிற்கும்போது இருந்த வைராக்கியம் துணையாக அவன் நிற்கும் மறைந்து போகுமோ தான் தோற்றுப் போவோமோ என்றெல்லாம் ஏதேதோ சிந்தனை அவளை பயமுறுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!