Skip to content
Post Views: 5,050
உடைந்த மனங்கள் ஒட்டாதா?…
அத்தியாயம் 5
மீனா வீட்டுக்கு வரும் முன்பே பரமு வீட்டுக்கு வந்து விட்டார். வீட்டின் வாசலில் நின்றிருந்த ஆட்கள் ஒரு மாதிரி பதட்டத்தை கொடுக்க அவசரமாக உள்ளே சென்றார்.
“நாமளும் ஜெகன் தம்பியை ஒரு வருஷத்துக்கு மேல பாக்குறோம். ஒரு குறை சொல்ல முடியாது. நீங்க சந்தேகப்பட்ட மாதிரி பேசவுந்தான் தம்பிக்கு கோவம் வந்துருச்சு” என்றார் ஒருவர்.
Advertisement
“என்ன ஆச்சு” என்று பரமு கேட்க.
விசயம் சொல்ல படும் போதே, ஆட்டோவில் மீனா வந்து விட்டாள். கையில் இருந்த மலரை இறக்கி விட்டவள், நேராக ஜெகன் வீடு நோக்கி மேலே ஏறினாள். மலரை தூக்கிக் கொண்ட பரமு
“மீனா” என்று அழைக்க, திரும்பி அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவள் வேகமாக சென்றாள்.
Advertisement
அங்கே அவளையும் விட அழுத்தமாக ஜெகன் நின்று இருந்தான். இன்று தான் நேருக்கு நேராக ஜெகனின் கண்களை சந்திக்கிறாள். அவளின் பார்வையில் தெரிந்த தீயில் ஜெகன் பார்வையை விலக்கி கொண்டான். ஆனாலும், அடமாக பிள்ளை அருகிலே நின்றான்.
Advertisement
அவனை கண்டு கொள்ளாமல் பிள்ளையை தூக்க போக, அவள் கையை கெட்டியாக பிடித்து இருந்தான் ஜெகன். மீனாவுக்கு மிகுந்த அதிர்ச்சி. என்ன நடக்கும் என்று எல்லோரும் அங்கேயே நின்று இருந்தார்கள். ஏனெனில் மீனா முகம் கோபத்தில் சிவந்து இருக்க, ஜெகன் முகம் அழுத்தத்தில் கடுமையாக இருந்தது.
“ஏய்! என்னப்பா பொம்பளை பிள்ளை கையை பிடிக்கிற.. என்ன இருந்தாலும் அடுத்த வீட்டு பொண்ணு?.. அவங்க பிள்ளையை தூக்கவும் தான் கோபம் வந்து இருக்கு..”
“நாட்டுல என்னென்னவோ நடக்குது. பெத்த தாய்க்கு அந்த பயம் தான். உன்னை யாரும் எதுவும் நினைக்கல ஜெகன். அதுக்காக ஒரு பொண்ணு கையை பிடிப்பியா? கையை மொத விடு” என்று ஆளாளுக்கு பேச,
Advertisement
ஜெகன் இம்மி கூட மீனா கையை விட வில்லை. அவளும் இழுத்து பார்க்க, பிடி கூட நகற்ற முடியவில்லை. மற்றவர்கள் முன் அவமானமாக இருந்தது. விமலா வேறு இருவரையும் குறுகுறுவென்று பார்த்தாள். நிச்சயம் பலருக்கு தப்பாக தான் தெரிந்து இருக்கும். இவர்கள் இருவருக்கும் இடையே வேற ஏதோ என்று…
அதன் பின் மீனா பொறுக்க வில்லை. பட்டென்று அவன் முதுகில் ஒரு அடி போட, அவனை அசைக்க கூட இல்லை. அவள் தொடர்ந்து அடிக்க, அசையாமல் வாங்கி கொண்டான் ஜெகன். ஜெகனின் கடையில் வேலை பார்க்கும் ஆட்கள் கூட வந்து விட்டார்கள்.
இது என்னடா இப்படி ஒரு பஞ்சாயத்து என்று எல்லோரும் பார்க்க.. பரமு தான்,
“மீனா என்னடி இது எல்லோரும் பார்க்க ஒரு ஆம்பள பையனா அப்படி போட்டு அடிக்கிற” என்று அதட்டல் போட்டார்.
“என் கையை விட சொல்லு ம்மா” என்று சொல்லும் போதே குரல் கலங்கி போனது. இத்தனை ஆண்டுகள் கண்ணியமான நடத்தை கேள்விக்குறியானதே என்று அழுகை வந்தது. அவள் கலங்கிய முகம் பார்த்து தான் கையை விட்டான்.
“என்ன அண்ணே” என்றான் குமரன்.
“தமிழ் அமுதா என் பொண்ணு.. தூக்கிட்டு வர எனக்கு உரிமை இல்லையா? யார் என்னை கேள்வி கேட்பது?” என்று விரப்பாக சொல்ல,
சுற்றி இருக்கும் எல்லோரும் அதிர்ச்சியாக பார்க்க, மீனா முகத்தை திருப்பி கொண்டாள். அப்படி எல்லாம் கிடையாது என்று சொல்ல முடியுமா?
“தமிழ் அமுதா மட்டுமல்ல மூன்று பிள்ளைக்கும் என் பிள்ளைகள் தான்” என்னும் அழுத்தமாக சொன்னான் ஜெகன்.
“என்ன மீனா அம்மா, ஜெகன் தம்பி சொல்றதெல்லாம் உண்மையா? மீனா வீட்டுக்காரர் தான் இந்த தம்பியா?” என்று பரமுவிடம் விமலா அம்மா கேட்க.
“ஆமாங்க இவர் தான் மீனா வீட்டுக்காரர். குடும்பத்தில் பெரிய சண்டை. ரெண்டு பேரும் பிரிஞ்சு இருந்தாங்க. பொண்டாட்டி பிள்ளைகளை தேடித்தான் ஜெகன் தம்பி இங்க வந்தது. மீனாவுக்கு தான் கொஞ்சம் பிடிவாதம் அதிகம்” உண்மையை ஒப்பு கொண்டார் பரமு…
“அட நெஜமாவா சொல்றீங்க. நம்ம ஜெகன் மாதிரி ஒரு பையனவா மீனா வேணாம்னு சொல்லுச்சு.. நாங்க எல்லாம் எங்க பிள்ளைக்கு ஜெகன் மாதிரி தான் மாப்பிள்ளை வேணும்னு நினைச்சுட்டு இருக்கோம். தங்கமான பையன்” என்றதும் மீனா உடல் இறுக தொடங்கியது.
ஜெகன் சங்கடமாக மீனாவை பார்த்தான்… “ரொம்ப தைரியம் தான் உங்க மகளுக்கு.. நாங்க என்னமோ நினைச்சுட்டு இருந்தோம். சாதாரண புருஷன் பொண்டாட்டி சண்டைக்கு பிள்ளையை பிரிச்சு கூட்டிட்டு வருவாங்களா? ஏதோ ஜெகன் தம்பி நல்ல பையனா இருக்க போயி பொண்டாட்டி பிள்ளைகளை தேடி வந்துட்டாரு.. மத்த ஆம்பளைக எல்லாம் மறுநாளே புது மாப்பிள்ளை தான். உங்க மகளுக்கு நல்ல புத்தி சொல்லுங்க” என்று ஆளாளுக்கு அறிவுரை சொன்ன படி கலைந்து சென்றார்கள்.
அவர்கள் நினைப்பில் எல்லாம் மீனா கணவன் இல்லாதவள் என்று எண்ணியிருந்தார்கள். ஏனெனில் மீனாவின் நடத்தையும் அப்படித்தான் இருக்கும். ஒரு நாள் நல்ல கிழமை கூட பூ பொட்டு என்று இருக்க மாட்டாள். சாதாரண சேலையும் இழுத்துப் பின்னிய சடையுமாகத்தான் இருப்பாள். மூன்று பிள்ளைகளைப் பெற்று எடுத்து உடல் தளர்ந்த மீனா பார்க்கவும் சுமாராகம் தான். அதனால் ஜெகனோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது மீனா கொஞ்சம் குறைவாகத்தான் தெரிந்தாள். அவர்கள் யாருக்கும் ஜெகன் தப்பானவனாக இருப்பான் என்ற நினைப்பே இல்லை.
“மீனா” என்று ஜெகன் தயக்கமாக அழைக்க,
“ஏய்! நீ பேசாத.. ஒரு வார்த்தை கூட என் முகத்தை பார்த்து நீ பேச கூடாது” மீனா முகத்தில் அப்படி ஒரு கோபம் இருந்தது.
“வாய மூடுடி, திமிர் கூடிப்போச்சு உனக்கு.. சுயபுத்தின்னு ஏதாவது இருக்கா? எத்தனை பேர் எடுத்து சொல்றோம் அன்னைக்கு தான் எங்க பேச்சை கேக்கல இன்னைக்காவது அம்மா என்று என் பேச்சைக் கேட்டு இருக்கியா?”
“அம்மா..” என்று மீனா அதட்ட,
“பேசாத.. எல்லாரும் ஒரு பக்கம் நிற்கும்போது நம்ம மேல என்ன தப்பு இருக்கும்டு கொஞ்சமாவது யோசிச்சியா? என் மேல தான் தப்பு மன்னிச்சிரு என்று அந்த பையன் எவ்வளவு நாள் இறங்கி வருவாரு? ஒரு பொம்பள உனக்கு என்னடி அவ்வளவு திமிரு..” ஜெகனை வைத்து கொண்டு பரமு அவ்வளவு பேச, தாங்க வில்லை அவளுக்கு…
அவன் அழுகாமல் தன்னை திடமாக காட்டி கொண்டாள். “பணம் தான் எல்லாம், அப்படி தானம்மா.. கை நிறைய பணம் இருந்தா எவ்வளவு தப்பு செஞ்சாலும் மறைஞ்சு போகும். அவன் நல்லவன், நான் தான் தப்பு” கண் கலங்க மீனா கேட்க.
பரமு, மகளுக்கு பதில் சொல்ல வில்லை. “மீனா” என்று அழைத்த கணவனை அவள் நிமிர்ந்து கூட பார்க்க வில்லை.
அமுதா லேசாக அசைந்து கொடுக்க, பெற்றோர் பார்வை பிள்ளை மீது திரும்பியது. மீனா நகரும் முன் ஜெகன் நகர்ந்து மகளை தூக்கி கொண்டான். தெரியாத பாவனையே இல்லை தமிழிடம், தந்தையின் கையில் அமைதியாக இருந்தாள். மீனாவுக்கு பொறுக்க முடியாமல் பிள்ளையை தூக்க போக,
“மீனா விடுடி.. அவங்க அப்பாகிட்ட தானே பிள்ளை இருக்கு. அவருக்கில்லாத உரிமையா? உனக்கென்ன வானத்தில் இருந்தா பிள்ளை வயித்துல வந்துச்சு. நீ அமைதியா போனா பரவாயில்லை. எவ்வளவு நாளைக்கு தகப்பன் கிட்ட இருந்து பிள்ளையை அண்ட விடாம பாதுகாப்ப.. நீ எங்க போய் நின்னாலும் பிள்ளைய தகப்பன் பார்க்கிறத யாரு தப்பு சொல்லுவா? ஏதாவது தகராறு பண்ண, நாளைக்கு போலீஸ் கேசுக்கு நானே முன்னாடி நின்னு சாட்சி சொல்லுவேன். உனக்கு புடிக்கல, நாங்க சொல்லியும் நீ கேக்கல தள்ளி நிக்கிற..”தாய் அவ்வளவு சொல்லியும் மீனா அசர வில்லை.
அவள் பார்வை எல்லாம் பிள்ளை மீது தான். தமிழ் அப்படி எல்லாம் யாரிடமும் ஒட்ட மாட்டாள். புகழ் கூட தாயை விட்டு தள்ளி இருப்பான். இந்த முதல் பிறந்தது எங்கும் நகராது. ஏதாவது அவசர வேலை என்று மூன்று பிள்ளைகளையும் பஸ்ஸில் அழைத்துச் சென்றால் பெரிய பெண் என்று தமிழை தான் யாரிடமாவது கொடுப்பாள். ஒரு நொடி கூட அடுத்தவரிடம் செல்ல மாட்டாள் கத்தி அழுது கொண்டு மீனாவைத்தான் தொடுப்பாள். அப்படி இருக்கும் மகள் இன்று சத்தம் இல்லாமல் தந்தை கையில் அடங்கி இருக்கிறாள். ஆக, மகளுக்கு தெரிந்து இருக்கிறது. இவன் தான் தகப்பன் என்று… தனது அடிக்கும், மிரட்டலுக்கும் பயந்து தான் தக்கபனை அஞ்சவில்லை போல…
மகளையே பார்த்து இருந்த மீனா வேகமாக கீழே இறங்கி விட்டாள். பரமுக்கு பேத்தி தன் தகப்பனிடம் இருப்பது தான் சரி என்று தோன்றியது. மகள் மனதை அவ்வளவு எளிதாக மாற்ற முடியும் என்று தோன்றவில்லை. பிள்ளையாவது தந்த இடம் ஒட்டி இருக்கட்டும். அப்போது தான் ஜெகனுக்கும் பிடிப்பு இருக்கும். வெண்பாவை பார்த்ததிலிருந்து மகள் வாழ்வை நினைத்து அவருக்கு பயம்தான்.
“மீனாவ ரொம்ப கோபப்படுத்திட்டோம் போல” என்று பெருமூச்சு விட்டான் ஜெகன்.
“குதிரைக்கு யாராவது கடிவாளம் கட்ட தான் வேணும். இப்படியே விட்டுட்டு இருந்தா, அவ பக்கம் இருக்கிற தப்பா எப்பதான் உணர்வா?” என்றார் பரமு…
உறங்கும் மகளை மடியில் வைத்திருந்தால் மீனா,
“தொட்டில் அது பாட்டுக்கு தூங்குற பிள்ளை எதுக்குடி தூக்கி வெச்சி இருக்க” என்ற தாய்க்கு பதில் சொல்ல வில்லை.
மகன் பள்ளி விட்டு வந்ததும் அவனையும் தன் மடியில் இருத்தி கொண்டாள். எப்போதும் ஒட்டிக்கொண்டே இருக்கும் தன் அக்காவை காணாமல் புகழின் கண்கள் தேடியது. எவ்வளவு நாள் சென்று நெருங்கியும் தந்தை பார்த்ததும் ஒட்டிக்கொண்ட மகளை நினைத்து அவ்வளவு அழுகை மீனாவுக்கு.. அவளின் மனதிடம், வைராக்கியம் எல்லாம் கரைவது போல ஒரு எண்ணம். நினைப்பு நெஞ்சை அடைத்தது.
ஜெகனும் மகளை நெஞ்சில் போட்டுக்கொண்டு தன் வாழ்க்கை திசை மாறியதை தான் நினைத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு பெற்றோர் கிடையாது. அவன் கை பிள்ளையாக இருக்கும் போது தந்தை இறந்திருக்க.. குழந்தையாக இருந்த அவனை தூக்கிக் கொண்டு தாய், தன் வீடு வந்து விட்டார். அவனின் அம்மா வழிபாட்டி தான் கனியம்மா.. அவனை வளர்த்ததும் அவர் தான். ஐந்து வயதிலேயே ஜெகன் தாயைப் பறிகொடுத்து இருக்க, கண்டிப்பில்லாமல் முழு செல்லமாக வளர்ந்தான்.
அவனின் தந்தை செல்வாக்கானவர் தான். தந்தை வீட்டில் ஒட்டுதல் இல்லாமல் இருந்ததால் சொத்துப் பகிர்வில் இடமில்லாமல் போனது. தனக்குரியதை கேட்டு அவனின் பதினெட்டு வயதிலே கேஸ் போட்டு விட்டான். தனக்கென்று குடும்பம் இல்லாததால் ஜெகனுக்கு நிறைய நட்பு வட்டம். நல்லவர், கெட்டவர் என்று இல்லாமல் எல்லாவற்றோடும் கலந்து பழகுவான். நட்புக்கு மிக உண்மையாக இருப்பான்.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு லோன் சம்பந்தப்பட்ட வேலையில் அமர்ந்தவன்.. கேலி கிண்டலாகத்தான் மீனாவோடு பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் காதல் எல்லாம் இல்லை. உறவு முறையில் மாமன் மகள் என்பதால் கிண்டலான பேச்சு மட்டும் தான். அதைத்தொடர்ந்த பழக்கம் மீனாவின் ஆசை என்று கல்யாணத்தில் முடிந்து விட்டது.
ஜெகனுக்கு இருபத்தி மூன்று வயது முடியும் முன்பே ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகி விட்டான். ஓரளவு நல்ல வேலை தாங்கிக் கொள்ள சுற்றமும் இருக்க ஜெகன் வாழ்க்கை தன் மனைவி மக்களோடு நன்றாகத் தான் போனது.
உடல் தளர்ந்து நடக்கக்கூட முடியாமல் போன கன்னியம்மா. தன் கடைசி காலத்தை பெரிய மகள் வீட்டில் இருந்து கழிக்க நினைத்து பெரிய மகள் வீட்டிற்கே சென்றார். அப்போதுதான் மீனாவுக்கு குழந்தை பிறந்த புதிது. பேரன் மனைவி குழந்தை என்று வாழ்க்கையில் நிறைவாகி விட்டான் என்ற எண்ணம் அந்த முதியவருக்கு…
கனியம்மா இருந்தவரை மீனா ஓரளவுக்கு பொறுப்பாகத்தான் இருந்தாள். அவர் சென்ற பின் வீடு அவள் வீடேன்றாக.. காலையில் எழுவது தொடங்கி சமைப்பது வரை எல்லாம் அவள் விருப்பம் தான். தன் படிக்கவில்லையே என்ற கவலை பெரிதாக மீனாவிடம் கிடையாது. படிப்பின் முக்கியத்துவத்தை அவள் அறியவும் இல்லை.
எப்படி இருந்தாலும் ஒரு டிகிரியோடு யாரோ ஒருவனுக்கு கட்டி வைத்து விடுவார்கள். தற்போது நன்றாக தானே இருக்கிறோம் என்ற எண்ணம். அவள் விருப்பப்பட்டால் சமைப்பாள். இல்லையா தன் தாயிடம் சொன்னால் அவர் கொண்டு வந்து கொடுத்து விடுவார். பிள்ளையையும் அவர்களைப் பார்த்துக் கொள்ள முழு ஓய்வு தான் மீனாவுக்கு…
விருப்பப்பட்ட சாப்பாடு, வாரம் ஒரு முறை சினிமா, பிள்ளையோட ஹோட்டல் செல்வது நிறைய டிரஸ் எடுப்பது என்று அவளுக்கு பிடித்த மாதிரி வாழ்ந்து கொண்டாள். ஜெகன் அப்படி ஒன்று மனைவியை கட்டுப்படுத்த மாட்டான். தன்னை நம்பி வந்த பெண் என்று எல்லாம் அவள் விருப்பம் தான்.லேசாக சோர்வாக இருந்தால் கூட,
“மாமா வரும்போது நீங்க சாப்பிட்டுட்டு எங்களுக்கு நாலு இட்லி வாங்கிட்டு வாங்க” என்று முடித்து கொள்வாள்.
மீனாவின் தந்தை இறந்த பிறகும் கூட அவளின் பழக்கவழக்கம் மாறவில்லை. எப்பவும் போல தாய் அண்ணன் கணவன் என்று எல்லோரிடமும் செல்லம் மூஞ்சி கொண்டு சந்தோசமாக தான் இருந்தாள்.
பரமு கூட சொல்வார், “மீனா, விதவிதமா போடுற டிரஸ்சும், சாப்பிடற சாப்பாடு நம்ம வாழ்க்கையை எடுத்து சொல்லாது. உன் புருஷன் என்னன்னு கேளு? பொம்பள பிள்ளை பிறந்தது தான் தெரியும். கண்ணை மூடி திறக்க குள்ள தாவணி போட்டு நிக்கும். இந்த வீட்ட தவிர கையில ஒன்னும் இல்லாம நிக்கிறீங்க. புருஷன் சம்பாதித்த வாங்கு, செலவை குறை. நீயும் வெளில போகாத.. உனக்கு என்னடி பஞ்சாயத்து இரண்டு பேர் தான் வீட்ல.. ரெண்டு பேருக்கு சமைக்க அப்படி என்ன சோம்பேறித்தனம்” என்ற தாய் எவ்வளவு எடுக்க சொன்னாலும் மீனா காதிலே வாங்க மாட்டாள்.
ஜெகனும் மனைவியை கண்டிக்க மாட்டான். அதேபோல வருமானத்தை அவள் கையிலும் கொடுத்து பழக மாட்டான். அவள் என்ன கேட்கிறாளோ வாங்கி கொடுப்பான். அத்தோடு வரவு செலவு எல்லாம் அவன் கையில்தான். அவளும் குடும்ப நிலவரம் என்ன என்று அறிய மாட்டாள். இது வேண்டும் அது தேவை என்று கணவரிடம் கேட்பாளே ஒழிய சேமிப்பு என்ற ஒன்றை அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
இந்த சொகுசு வாழ்க்கை எல்லாம் ஜெகன் நண்பன் என்று யாருக்கோ லோன் எடுத்து கொடுக்கும் வரை தான். ஐந்து லட்சம் லோன் வாங்கி கொண்டு, அவன் ஓடி விட எல்லாம் ஜெகன் தலையில் தான் விழுந்தது.
error: Content is protected !!