Skip to content
Post Views: 3,626
உடைந்த மனங்கள் ஓட்டாதா?…
அத்தியாயம் 8
மீனா குடிகாரர்களையே பார்க்காதவள் என்றெல்லாம் கிடையாது. அவள் அப்பா தொடங்கி மூன்று அண்ணன்கள் வரை எல்லோரும் குடிப்பார்கள். ஆனால், அதெல்லாம் ஒரு வரையறையில் நிற்கும். தற்போது ஜெகன் குடியை தினமும் தொடர்ந்தான். அது அவ்வளவு பயத்தை கொடுத்தது மீனாக்கு…
அதை நிறுத்த சொல்லி வீட்டில் தினமும் சின்ன சின்ன சண்டை வரத் தொடங்கியது. மாதத்தில் ஒரு நாள் ஏதேனும் விசேஷ நாட்களில் என்றால் கூட பரவாயில்லை. இவன் என்னவோ உணவை உட்கொள்ளுவது போல தினமும் குடித்தான். மீனவால் யாரிடமும் இந்த பஞ்சாயத்தை கொண்டு போக முடியாது. இன்னும் அவள் தன் தாயிடம் பேசவில்லை.
Advertisement
தனியாக இருக்கிறோம் என்று நினைப்பே பெரிய அழுத்தத்தை கொடுக்க இதில் கணவன் ஒரு பக்கம் படுத்தி வைத்தான் அவளை… ஜெகனுக்கு இருப்பது அவனின் பாட்டி மட்டும்தான் அவரும் வயதானவர் சரியாக காது கூட கேட்காது. அவரிடம் என்னவென்று பேரனின் கதையை சொல்ல? தொடர்ந்து இருவரும் முட்டிக்கொண்டு தான் நின்றார்கள். நிறைமாத வயிறு சத்தமாக பேசக்கூட முடியவில்லை அவளால்… எங்கிருந்து கணவனை சரி பண்ண? மகப்பேறு மீனாவுக்கு இனிமையாக இல்லை. எப்போதடா இந்த பிள்ளையை வெளியே எடுப்போம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டாள்.
தொடர்ந்து வீட்டில் சண்டை போட்டால் வீட்டு ஓனர் எவ்வாறு பொறுப்பார். ஜெகனை அழைத்து வீட்டை காலி பண்ணும் படி சொல்ல.. அவன் தான் என்னவோ சொல்லி சமாளித்து, அவரை சரி கட்டினான். கோபம் எல்லாம் மனைவி மீது தான் திரும்பியது.
“இங்க பாரு மீனா இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங். வீட்டுக்கு, உனக்கு, பிள்ளைக்கு என்ன தேவையோ அதை மட்டும் என்கிட்ட கேட்டு வாங்கு. அதை விட்டு வீட்ல காரியத்தனம் பண்ற வேலை எல்லாம் வேணாம். பொம்பளை மாதிரி இரு” என்றான் அதட்டலாக..
Advertisement
திகைத்து போய் கணவனை பார்த்தவள், “நான் என்னங்க காரியத்தனம் பண்றேன்? இதுவரைக்கும் வரவு செலவு கூட கேட்டதில்லைங்க. நீங்களா பார்த்து வீட்டுக்கும், எங்களுக்கும் செய்யறது மட்டும்தான். குடிக்காதீங்ன்னு மட்டும் தானே சொல்றேன். அது கூட ஒரு பொண்டாட்டி சொல்லக்கூடாதுன்னா எப்படிங்க?”
Advertisement
“ஆமா, சொல்லக்கூடாது. நீதான் வேலைக்கு போய் இந்த குடும்பத்தை பார்த்துக்கிறியா? வெளியில வேலைக்கு போற ஆம்பளைக்கு ஆயிரம் தொந்தரவு இருக்கும். நாலு சுவத்துக்குள்ள உட்கார்ந்து இருக்கிற உனக்கு நான் கணக்கு சொல்லனுமா?” என்றான் கோபமாக,
“ஆமா நீங்க தான் வேலைக்கு போறீங்க. வீட்டை நீங்க தான் பாக்குறீங்க. யார் வீட்டை பாக்குறீங்க? உங்க பொண்டாட்டி, உங்க பிள்ளைகளை நீங்க பாக்குறீங்க.. வீட்டுக்கு காசு வந்தா போதும் புருஷன் எப்படி போனாலும் கவலை இல்லைன்னு எப்படி ஒரு பொண்டாட்டியா நினைக்க முடியும்”
“வியாக்கியானம் பேசாத மீனா, வீட்டுக்கு வரவே எரிச்சலா இருக்கு. சொந்த தொழில் வச்சிருக்கவன் வெளியில எத்தனை கஷ்டத்தை பார்க்கிறேன் தெரியுமா? கட்டின பொண்டாட்டி கூட என்னை புரிஞ்சுக்கல” வெறுப்பாக சொல்ல,
Advertisement
அவன் முன் வந்து நின்றாள். நேர் கொண்டு மனைவியை பார்க்க விரும்பாமல் தலையை திருப்ப..
“உங்க வருமானத்தை என் கையில் கொண்டு வந்து குடுங்கன்னு நான் கேட்கிறேனா? உங்க வருமானத்துக்கு மீறி செலவு பண்றேனா? அப்படியும் இல்லாம என் வீட்டு ஆளுக என் சொந்த பந்தத்தெல்லாம் இங்க கூட்டிட்டு வந்து உங்களுக்கு செலவை இழுத்து வைக்கிறேன்னா? நீங்க என்ன வாங்கி போடறீங்களோ அதை வச்சு சத்தமில்லாமல் குடும்பம் நடத்துறேன். வீட்டை விட்டு வெளியே போற ஆம்பளைக்கு தான் கஷ்டம் கவலை எல்லாம்.. வீட்டுக்குள்ளே இருக்கிறனால பொம்பளைக்கு எந்த வலியும் இல்லைன்னா நினைக்கிறிங்க?” என்று ஆவேசமாக கேட்க.
பதில் பேசவில்லை ஜெகன்… தன் வயிற்றை தடவி காட்டி, “எட்டு மாசம் ஆச்சு. குனிஞ்சு தரைய பாக்க முடியல. பத்து நிமிஷம் சேர்ந்தாப்ல கிச்சன்ல நிக்க முடியாது. இடுப்பு குடையுது. வாரத்தில் மூன்று நாள் வெளி வாசல் கூட்டனும். நீங்க பாக்கறீங்களா அதை? ரேஷன் வாங்கணும், காய் வாங்கணும், கடைக்கு போகணும், பிள்ளைய விளையாட கீழ கூட்டிட்டு போகணும். குறைந்தது ஆறு தடவையாவது இந்த வீட்டு படி ஏறி இறங்கறேன். என் கை கால் எப்படி வலிக்கும். உங்க பேண்ட்ட எல்லாம் தண்ணில ஊற வச்சா, திரும்ப தூக்க முடியாது எனக்கு.. அவ்வளவு வெயிட்.”
“இப்பதான் நடக்கிற பிள்ளை தமிழ். கண்டதை எடுத்து வாயில போடுது, குழந்தை பின்னாடியே நான் இருக்கணும். வீட்ல லேசா தூசி இருந்தா கூட என்ன சத்தம் போடுறீங்க? ஓடி ஆடுற பிள்ளை வீட்டில் இருந்தால் எல்லா நேரமும் தொடைக்கணும். என் உடம்பு கை, கால் எல்லாம் அப்படி குடையும். ராத்திரி ஒரு மணிக்கு உங்க மக பால் கேட்டு அழும்.. பிள்ளை அழுகுற சத்தம் உங்க காதுல கேக்காம வா இருந்துச்சு. என்னைக்காவது நீங்க தூக்கி சமாதானப்படுத்தி இருக்கீங்களா? இதெல்லாம் சாதாரண வீட்டு வேலையாக இருக்கும் போதே கஷ்டம். எனக்கு இப்போ நிறை மாசம். சாதாரணமா பத்து நிமிஷத்துல செய்ற வேலையை நான் செய்ய அரை மணி நேரம் ஆகுது. அவ்வளவு சோர்வா இருக்கு என் உடம்பு” மனைவியையே வாயடைக்க பார்த்துக் கொண்டிருந்தான் ஜெகன்.
“என் மனசுலயும் அவ்வளவு அழுத்தம் இருக்கு. உங்ககிட்ட கத்தி சண்டை போட்டு இருக்கேனா? வீட்ல இருக்க நமக்கே இவ்வளவு இருக்கே.. வெளில போய் வேலை பார்க்கிற ஆம்பளைகளுக்கு எவ்வளவு கஷ்டம் இருக்கும். அப்படி நினைச்சு தான் உங்களை எந்த விதத்திலும் நான் தொந்தரவு பண்ணல.. நான் இப்பவும் என்ன கேட்கிறேன். ஏன் குடிக்கிறீங்க? நீங்க அளவு தாண்டி குடிக்கவும் தானே நான் கேட்கிறேன். உங்களையே மறந்து நிதானம் இழக்கிற அளவுக்கு அப்படி என்ன குடி வேண்டி கிடக்கு..”
ஜெகனிடம் பதில் இல்லை. மனைவி கேட்பதெல்லாம் நியாயம்தான். ஆனால் தற்போதைய அவனின் சூழ்நிலை கத்தி பேசி அவளை வாயடைக்க வைப்பது மட்டும் தான். தன்னுடைய கஷ்டங்கள் நஷ்டங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ள கூடாது என்று கிடையாது. மனைவியின் நகையை வாங்கி தொழில் தொடங்க போட்டுவிட்டு அதில் நஷ்டமாகிறது என்று அவளிடம் சொல்ல முடியவில்லை.
முதலில் அவன் செய்த தவறு பார்ட்னர்ஷிப் போட்டது. கடை வாடகை, வீடு வாடகை, கடைக்கு ஆகும் செலவு, வீட்டுக்காகவும் செலவு, இரண்டு பக்கமும் கரண்ட் பில், தண்ணி பில் என்று எக்கச்சக்கமாக பணம் செலவாகியது. இதில் பார்ட்னர்ஷிப்பாக தன் நண்பனுக்கும் வருமானத்தில் பங்கு கொடுக்க வேண்டி இருந்தது. ஆக ஜெகன் கொஞ்சம் கொஞ்சமாக கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறான்.
முன்பு வேலை பார்த்தான் வேண்டாம் என்றதும் தூக்கி போட்டு விட்டான். எந்த நஷ்டமும் கிடையாது. வேலையில்லை என்பது மட்டும்தான் கஷ்டம். ஆனால், இது அப்படி கிடையாது. சொந்த தொழில், அதுவும் மனைவி நகைகளை வைத்து தொடங்கியது. நிச்சயம் வருமானம் பார்த்தே ஆக வேண்டும். வரும் செலவுகளோடு மீனாவின் நகையையும் மீட்க வேண்டும். எவ்வளவுதான் ஓடி ஓடி சம்பாதித்தாலும் கைக்கும் வாய்க்கும் பத்தவில்லை. இதையெல்லாம் எவ்வாறு மீனாவிடம் பகிர்ந்து கொள்ள…
அவனுக்கு இதற்கு மேல் எவ்வாறு தொழிலை கொண்டு போவது என்றும் தெரியவில்லை. வழிகாட்டவும் ஆளில்லை. ஒரு மாதிரி தடுமாற தொடங்கினான். செலவு மீறும்பொழுது வெளியில் கடன் வாங்கினான். அதைப்பற்றி மனைவியிடம் மூச்சு கூட விடவில்லை. தான் தன்னைச் சுற்றி பெரிய சுழலை போட்டுக் கொண்டிருக்கும் என்று தெரியாமல், அதில் தன் குடும்பத்தையும் சேர்த்து மாட்ட வைத்தான். சொந்த ஸ்டூடியோ வைத்திருக்கிறான் என்று தான் ஜெகன் கேட்கும் இடமெல்லாம் பணம் கிடைத்தது.
அன்றைய சண்டைக்குப் பிறகு கணவன் மனைவி இருவ்ரும் தொடர்ந்து பேசவில்லை. அமைதியாக அவரவர் வேலையை பார்த்துக் கொண்டார்கள்.
“தமிழ், அப்பாவுக்கு சாப்பாடு கொண்டு வா” என்பான் மனைவியை பார்த்து கொண்டே..
ஒன்றை வயது பிள்ளையா சாப்பாடு போடும்.. மகளை தானே கேட்டான் என்று கண்டு கொள்ளாமல் இருக்க தான் பார்ப்பாள். உணவு உண்ண கை கழுவி அமரும் கணவனை பார்த்த பின் மனம் கேட்காமல் எடுத்து வைத்து விடுவாள். ஜெகனிடம் முன்பிருந்தே பழக்கம்.. மனைவியோடு எவ்வளவு சண்டை போட்டாலும் சாப்பாடு மட்டும் அவள் தான் எடுத்து வைக்க வேண்டும். மீனா என்னதான் முறுக்கி கொண்டாலும் அவளாக தராமல் அவனாக எடுத்து போட்டு உண்ண மாட்டான். சாப்பிடாமல் கூட எழுந்து சென்று விடுவான். என்னதான் கோபமாக இருந்தாலும் கணவனை பட்டினியாக போட எந்த மனைவி நினைப்பாள். முகத்தை தூக்கி கொண்டே கூட கணவனை நன்றாக கவனித்து கொள்வாள் மீனா.
நாட்கள் அப்படியே செல்ல, அவனின் பார்ட்னர்ஷிப் நண்பன் தனது பங்கை கொடுத்து விடுமாறு கேட்கத் தொடங்கினான். பெரிதாக வருமானம் இல்லாத பொழுது தொடர்ந்து தொழில் பண்ண அவன் நண்பனுக்கு விருப்பமில்லை. அதனால் யாராவது ஒருவர் கடையை எடுத்துக்கொண்டு மீதி பணத்தை கொடுக்கலாம். ஜெகனின் நண்பன் அவனை வைத்துக்கொள்ள சொல்லி தனக்கு பணம் கொடுக்குமாறு கேட்டான். அவனைப் போல பாதியில் செல்லும் அளவுக்கு ஜெகனுக்கு துணிவில்லை.
மீனாவின் அம்மாவே போதும் அவனை தீர்த்து கட்ட. எப்படியாவது அவன் நண்பனுக்கு பணத்தை கொடுத்து விட்டால் கடை இவனுடையதாகிவிடும். அப்புறம் முழு வருமானமும் இவர்களுக்கே உரியது என்றால் சீக்கிரம் முன்னேறி விடலாம். ஆனால் திரும்பவும் பணத்தேவை இடித்தது. என்ன செய்ய என்று யோசனை போக… மூன்று நாட்கள் வெளியூர் விழா என்று மனைவியை பார்க்காமல் சத்தமாக சொன்னவன் வேறொரு நண்பனை தேடி கோயம்புத்தூர் சென்றான்.
ஜெகனின் யோசனை எல்லாம் பணம் புரட்டுவதில் இருக்க, நிறைமாத கர்ப்பிணியை மறந்தான். மீனாவுக்கு நிறைய உடல் உபாதைகள். வைராக்கியமாக தள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றாள். ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு மாதிரி உடல் வலி இருக்குமோ என்னவோ?…
முதல் குழந்தைக்கு எல்லாம் இந்த அளவு உடல் தளரவில்லை. வயிறு சுத்தமாக கீழே இறங்கி நடக்க முடியாத அளவுக்கு தொடையை தொட்டது. அவளுக்கே ஒரு பயம். ஒன்பதாம் மாதம் தொடங்க, தாய்க்கு அழைத்து சொல்லி விடுவோமா என்று கூட நினைத்தாள். ஊருக்கு போன கணவன் ஒரு போன் கூட பண்ணவில்லை. மூன்று நாள் என்றால் ஒரு வாரம் கடந்து விட்டது. பக்கத்து வீட்டு அண்ணாவின் அக்கவுண்டில் பணம் போட்டு மனைவியிடம் கொடுக்குமாறு செய்திருந்தான் ஜெகன். அந்த வகையில் கொஞ்சம் பரவாயில்லை. கைப் பிள்ளையை வைத்துக்கொண்டு நிறைய செலவு இருக்கும். சத்தம் கொடுத்தாலும் கேட்கும் அளவுக்கு பக்கத்திலே வீடு என்பதால் கொஞ்சம் தனிமை பயமில்லை.
நாள் நெருங்கும்போது மீனா தன்னைத் தடப்படுத்திக் கொண்டாள். இரண்டாவது குழந்தை என்பதால் நடைமுறை எல்லாம் அவள் அறிந்ததே… ஒருவேளை பிரசவ காலத்தில் ஜெகன் தன் தாயை அனுமதிப்பானோ என்னவோ? அதனால் எல்லாவற்றையும் வீட்டிலேயே தயார் செய்து கொண்டாள். முதல் நாள் இரவில் இருந்து அரை மணி நேரத்துக்கு ஒருமுறை பாத்ரூம் சென்று வந்தாள். இரவு முழுக்க சரியாக உறக்கமே இல்லை. தொடர்ந்து நீர் இறங்கி கொண்டே இருந்தது.
காலை பதினோரு மணிக்கு அவளையும் மீறி நீர் வெளியேற, புரிந்து போனது என்னவென்று… நெஞ்சில் கை வைத்து அழுத்திக் கொண்டாள். மனதை நன்றாக திடப்படுத்தினாள். மகள் உறக்கத்தில் இருக்க வேகமாக குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்தினாள். வயிறு நன்றாகவே இறங்கி விட, மீனா தாமதிக்கவில்லை.
“அக்கா பாப்பா தூங்குறா. நான் ஹாஸ்பிடல் வரை போயிட்டு வரேன். அம்மா வந்துருவாங்க. அதுவரைக்கும் கொஞ்சம் பார்த்துக்கோங்க. எழுந்தா அழுகை சத்தம் கேட்கும்” என்றவளிடம்,
“சரி மீனா நான் பாத்துக்குறேன். நீ பார்த்து ஜாக்கிரதையா படியிலே இறங்கு” என்றவரிடம் தலையசைத்து இறங்கினாள் மீனா. அவரிடம் கூட பிரசவத்திற்கு தான் செல்கிறேன் என்று சொல்லவில்லை.
முதல் பிள்ளைக்கெல்லாம் மூன்று நாள் தொடர்ந்து வலி இருந்தது. இந்தக் குழந்தைக்கு சத்தமில்லாமல் பனி குடம் உடைந்து விட்டதே.. ஒருவேளை உடல் வலியில் பிள்ளை வலியை தான் கவனிக்கவில்லையோ என்று நினைத்துக் கொண்டாள்.
ஆட்டோவில் செல்லும்போதே தாய்க்கு அழைத்து சொல்லிவிட்டவள், அங்கிருக்கும் அரசு மருத்துவமனை நோக்கி செல்ல.. அவள் உடல் நிலையை கண்டதும் நேராக பிரசவ வார்டில் கொண்டு போய் விட்டார்கள். நிறைய தைரியத்தையும், வைராக்கியத்தையும் நெஞ்சில் வைத்து தன் அடுத்த பிள்ளையை உலகிற்கு கொண்டு வர தயாரானாள் மீனா.
error: Content is protected !!