Skip to content
Post Views: 3,010
அத்தியாயம் – 2
வருடங்கள் போனாலும் வழமையை மறக்காமல் தனது வேலையைச் சரியாகச் செய்தது நாட்காட்டி 19 -02 -1990. இந்த நாட்காட்டியை போல் தான் வள்ளியப்பனும், அவரும், அவரது வீடும் இன்றும் மாறாமல் தனது பழமையைப் பெருமையாகக் காட்டி நின்றது.
Advertisement
“ஆத்தா!” கொஞ்சம் குரலை உயர்த்தி தனது அன்னையை அழைத்துக் கொண்டே வந்தாள் சாலா.
“சொல்லு சாலா?”
Advertisement
Advertisement
“எதுக்கு இத்தினி உடுப்பு?”
“எத்தினி? இரண்டு நாள் கணக்கு வச்சு ஐயாக்கு இரண்டு, எனக்கு இரண்டு, உனக்கு இரண்டு மொத்தம் ஆறு உருப்புடி தான்”
Advertisement
“அதை தான் கேக்குறேன் எதுக்கு இரண்டு உடுப்பு போயி அயித்தயப் பார்த்த கையோட கிளம்ப வேண்டியது தானே” என்றவளை நிதானமாகப் பார்த்த கண்ணாத்தாள்.
“போன கையோட வந்தா நல்லவா இருக்கும், தொலைவு போனாலும் உங்க ஐயாக்கு வேண்டி நம்ப வூட்டு நல்லது, பொல்லதுக்கு இருந்து பார்த்து செஞ்சவ. நம்ப சரிஞ்சு போனாலும் அதே அன்பும், மரியாதையும் கொடுத்து இதோ இப்போ இருக்குற ஜீவனம் வரை அவ கொடுத்த ஊக்கம் தான் சாலா.
அவ நல்ல இருந்தா கூட நம்பக் கூட இருக்க வேண்டிய அவசியமே இல்லை பார்த்த கையோட வந்துடலாம்,ஆனா இப்போ மேலுக்கு முடியாம கிடக்கா அவளை அப்படியே விட்டுட்டு வர முடியாது அது தப்பு”
“அப்போ அவங்களுக்கு உறவில்லை இப்போ அப்படியில்லை ஆத்தா, அவுக வூட்டு ஆக்கள் இருக்காக, மகேன் இருக்காக நம்ப போயி செய்ய எதுவுமில்லை” தெளிவாகப் பேசியது அரிவை பருவமும், பக்குவமும் சொல்லி கொடுக்க அதனை அழகாக உள் வாங்கி நின்றாள் சாலா ஆச்சி.
“என்ன பேச்சு இது சாலா? அவளை பத்தி தெரியாதா? யாரு இருந்தாலும் அவளுக்கு நம்ப ஆறுதல் பேச்சு அவசியம், அவளும் அதை எதிர்பார்ப்பா ” மீனாளை சரியாக கணித்த கண்ணாத்தாள், மகளின் மனநிலையைக் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை போலும்,ஆனால் ஒரே மகளை நன்கு படித்து வைத்திருந்தார் வள்ளியப்பன்.
மீண்டும் கண்ணாத்தாள் எதுவோ பேச வர அதற்குள் வள்ளியப்பன் முந்தி கொண்டு மகளை அழைத்தார்,”சாலா!”
“ஐயா!”
“இந்நேரம் நம்ப அங்கன இருக்கனும் நம்ப இருப்பு தேவையில்லன்னு தோணுச்சுனா மீனாவை பார்த்த நொடி கிளம்பிடலாம் என்ன? கிளம்புக ” என்றவர் பேச்சு சாலாவை புன்னகை செய்ய வைத்தது.
“சரிங்க ஐயா!” அதன்பின் மூவரும் கிளம்பி காரைக்குடி மீனாள் இல்லம் நோக்கி பயணப்பட்டனர். சில மணி நேரத்தில் உள்ள பயணம் என்றாலும் அதிலும் பழைய நினைவுகள் கொண்டு சுகம் கண்டார் வள்ளியப்பன்.அவரின் கணிப்பு படி விடலை பருவம் கண்டு அவர் முன் நின்ற லட்சுமணனை ஆழந்து பார்த்தார் வள்ளியப்பன்.
அன்று அரியக்குடி விட்டு சென்ற மீனாள் சொன்னதைப் போலே வலு கொண்டு ஊனி நின்றாள்.
அப்பா என்ன வேகம்? என்ன உழைப்பு? தனித்து விடப்பட்ட ஒரு பெண்ணுக்குள் இத்தனை சக்தியா? இதை யார் கொடுத்தது? குணம் கொண்டு, ஒழுக்கம் பேணி,மனிதர்கள் கொண்டு மனம் படித்து, இதோ மகனை நன்றாகப் படிக்க வைத்து கொண்டிருக்கிறாள்.
அவன் படித்து வரும் போது அவளது உணவகமும், உணவு பொருள் விற்பனை கூடமும் ஒரு குறிப்பிட்ட உயரத்தை தொட்டு நிற்கும் என்பதில் ஐய்யமில்லை.
அன்று அவளது தெளிவும் பேச்சும்,உறுதியும் கண்டு மனதார அகம் மகிழ்ந்து நின்றார் வள்ளியப்பன்.உழைப்பின் அருமையை வெகுவாக ரசிப்பவர் அவர் என்பதால் மீனா ஒவ்வொரு உயரத்தை எட்டும் போது பார்த்து, ரசித்து, மகிழ்ந்து இன்னும் என்று ஊக்கி வழி காட்டி விட்டு ஒதுங்கி நின்று கொண்டார்.
இன்று அதனை எண்ணி பார்த்து புன்னகைத்து கொண்ட வள்ளியப்பனின் பார்வை தனக்கு எதிரில் அமர்ந்திருக்கும் மகளின் மீது பதிந்து ஒரு பெருமூச்சை வெளியிட்டது.பல எண்ணங்கள் அவரை இழுக்க முயன்று அதனை தடுத்து நின்றார் வள்ளியப்பன்.
அவர்கள் வந்த பேருந்து காரைக்குடி பேருந்து நிறுத்தத்தில் நிற்க.அவர்களைக் கூட்டி செல்ல லட்சுமணன் வந்திருந்தான்.சரியாகப் பேருந்து நின்று மூவரும் இறங்க அவர்களுக்கு எதிரில் வந்து.
“வாக மாமா! வாக அயித்த” என்றவன் சாலாவை பார்த்து தலை மட்டும் அசைக்க.அவள் ஒரு நொடி அதிர்ந்து பின்பு தெளிந்து முழித்து அவளும் தலையை ஆட்டி நின்றாள்.அன்று தொடங்கி இன்று வரை சில விலகல் கொண்ட பேச்சுக்கள் தான் இருவருக்கும்.அதுவும் சாலாவுக்கு விவரம் தெரிய தொடங்க லட்சுமணனுடன் பேசுவதை நிறுத்தியே விட்டாள்.
இன்று முழு மகனாக அவள் முன் நிற்க. இன்றும் அவளுக்கு இவனது நிறம் பெரும் பிரமிப்பை கொடுத்தது.உடைக்கு ஏற்ற நிறம்,நிறத்திற்கு ஏற்ற திடம்,திடம் கொண்ட உடல் என்று அத்தனை கம்பீரமாக இருந்தான் லட்சுமணன்.அவனைக் கண்டதே அதிர்ச்சி என்றால் தங்களை அவன் அழைக்க வந்தது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.
அவள் மட்டுமில்லை இதனை வள்ளியப்பன், கண்ணாத்தாளும் எதிர்பார்க்கவில்லை.எந்த வித தகவல் பரிமாற்றங்களும் இல்லாமல் எப்படி வந்தான்? சாலா எண்ணி கொண்டிருக்கும் போதே. லட்சுமணன் வள்ளியப்பன் கால் பணிய,
“தம்புடு என்ன இது?” என்று கொஞ்சமாகப் பதறி அவனை தூக்கி தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்டார் வள்ளியப்பன்.
“லட்சு! கண்ணாத்தாள் மகிழ்ச்சி பொங்க அவன் கன்னம் வருட கையை ஓங்கியவர் பின் தெளிந்து கையை இறக்கி கொள்ள.சிறு புன்னகையுடன் அவளை ஆழ்ந்து பார்த்தான் லட்சுமணன்.
“வாக வூட்டுக்கு போயி பேசலாம் ” சொல்லிவிட்டு அனைவரையும் பொதுவாக அழைத்து விட்டு முன்னே செல்ல. அவனைப் பின் தொடர்ந்து சென்றனர் மூவரும்.
வீட்டுக்குள் வந்தவர்களைக் கண்டு எழுந்து அமர தவித்துக் கொண்டிருந்தாள் மீனாள்.அவளது முயற்சியைக் கண்டு அவளிடம் விரைந்த கண்ணாத்தாள், “மீனா எதுக்கு இத்தினி வேகம் படு”
“மதனி!” இந்த ஒற்றை வார்த்தை கூடக் குளறலாக வந்தது.அவளது நிலை கண்டு கண்கள் கலங்கி நின்றாள் கண்ணாத்தாள்.
வள்ளியப்பன்,”மருத்துவம் என்ன தம்புடு சொல்லுது?”
“எலும்பு தேய்மானம் அது பக்கவாதம் வரை வந்திருச்சு முன்கூட்டியே பார்க்க போயி தப்பிச்சு வந்திருக்காக”
“என்ன மீனா இது? அதான் லட்சு பொறுப்பெடுத்துட்டான் தானே பிறகு ஓய்வெடுக்க வேண்டியது தானே? என்ன உனக்கு?”
“மதனி இன்னும் கொஞ்ச நாள் ஓட தோணுச்சு கல்யாணம் பண்ணிவச்சுட்டா அப்புறம் அவுக பாடு”
“அது சரி அதுக்கு அப்புறந்தேன் இன்னும் உழைப்பு வேணும் மீனா. பேர பிள்ளைங்க பொறுப்பு இருக்கே. இத்தினி சத்தையும் இங்கனையே போட்டு வைக்காத” வள்ளியப்பன் கொஞ்சம் எச்சரிக்கை போல் தான் சொன்னார்.
அவருக்கு மீனாவின் உழைப்பில் மதிப்பிருந்தாலும்.இன்னும் அவளது ஓட்டம் அத்தனை நல்லதாக படவில்லை. மீனாவின் ஆரோக்கியம் கொண்டு தானே உழைப்பு.சுவர் இருந்தால் தானே சித்திரம் பழக முடியும்.
“நல்ல சொல்லுக மாமா சின்னப்பன் தாத்தா திட்டித்தேன் வச்சாக” என்றவன் அங்கு வேலை செய்யும் பெண்ணை அழைத்து.
உலகு ஆச்சி சுக்கு தட்டி காபி எடுத்துவாக” என்று பணிந்தவன் அவர்களோடு அமர்ந்து கொண்டான். அத்தனை இயல்பாக இருந்தான், என்ன கடிவாள மிட்டும் வள்ளியப்பன் கண்கள் லட்சுமணனை தான் தீண்டி கொண்டே இருந்தது.
அன்று பேச கூடத் தடுமாறி நின்ற லட்சுமணன் இன்று ஒரு பொதுநல மருத்துவன். என்ன மருத்துவானா? ஆம் மருத்துவன் தான் மீனாவின் உழைப்பு வீண் போகவில்லை அன்று சரியாக விதைத்து நின்றாள்.இரு வேறு தொழில்களைக் கையில் எடுத்துத் திறம் பட வேலை செய்யும் வித்தகன் இன்று அவளுக்கு பெரும் கனியாக.இன்னும் மருத்துவத் துறையில் படித்துக் கொண்டிருக்கிறான் என்று சின்னப்பன் வழி அறிந்து கொண்டார் வள்ளியப்பன்.
அவனது பார்வை உணர்ந்தாலும் அதனை வெளி காட்டி கொள்ளாமல்,”மெத்தைக்குப் போவமா மாமா செத்த சாஞ்சு கொடுக”
“இல்ல லட்சு சின்னப்பன் அண்ணனை கண்டுக்கிட்டு வரேன்” என்றவர் கண்ணாத்தாளிடம் திரும்பி.
“வாரீகளா ஒரு எட்டு பார்த்துப்புட்டு வருவோம்”
“சரிக” என்றவள் நீயும் வருகிறாயா என்பது போல் மகளை பார்க்க.
தாயின் பார்வை உணர்ந்து “நான் இங்கனையே அயித்த கிட்ட இருக்கேன், நீகளும் ஐயாவும் போயிட்டு வாக” என்றதும் மீனாவிடம் சொல்லி கொண்டு இருவரும் சின்னப்பன் வீட்டை நோக்கி சென்றனர்.
அந்த மரக்கட்டிலில் மீனாவின் கை பிடித்துக் கதை பேச தொடங்கி விட்டாள் சாலா.லட்சுமணன் மீதம் உள்ள வேலைகளைப் பார்க்க உள்ளே சென்று விட்டான்.காலையும், மாலையும் வீட்டின் முன் மருத்துவம் பார்ப்பவன்.இடைப்பட்ட நேரத்தில் மசாலா தொழில்களைப் பார்த்து கொள்வான். தொழில் தாய் இவை தான் அவனது வட்டம்.
அதன் பின் மதிய வேலை நெருங்க அடுக்கலைக்குள் நுழைந்தவன் அங்கே வேலை செய்து கொண்டிருந்த விசலாட்சியிடம், “ஆச்சி சாப்பாடு ஆச்சா?”
“ஆச்சுங்க தம்பி வெளில போனவுக வந்துட்டாகளா?”
“வந்துடுவாக”
“செட்டியாரும், ஆச்சியும் அங்கனையே சாப்பிட்டுட்டு வர போராகத் தம்பி அதுக்குள்ள நீக போயி கூட்டிகிட்டு வந்துடுக.”
“இல்ல ஆச்சி அவுக பொண்ணு இல்லாம சாப்பிட மாட்டாக”
“அது சரி ஒரே பொண்ணுல சிவகாமி அண்ணன்மண்டி சொன்னாக நல்ல வாழ்ந்த குடும்பம்ன்னு பேசிகிட்டு இருந்தாக” என்றவர் செய்த உணவுகளைக் கூடத்தில் அடுக்கி வைத்து விட்டு.அவர்கள் உண்ண எதுவாக இடத்தைச் சரி வைத்து விட்டு சென்றார்.
அதற்குள் கண்ணாத்தாளும் ,வள்ளியப்பனும் வந்து விடச் சாலாவையும் அருகில் அமர்த்தி அவனே உணவு பரிமாறினான்.அவன் கேட்டு, கேட்டு பரிமாறிய பாங்கு .நான் மருத்துவன் என்ற கர்வம் எதுவுமில்லாமல்.இது என் வீடு! என் மக்கள்! என் வேலை! என்று நின்ற தோரணை வள்ளியப்பனை அள்ளி கொண்டு தான் போனது.
யாரும் அறியாத ரகிசயம் என்னவென்றால் நம் வள்ளி லட்சுவின் பரம ரசிகன் என்பது தான்.யார் கருத்தையும் கவராமல் அவன் மீது கவனம் வைப்பவர் இன்று வெறிக்க, வெறிக்க அவனைக் கண்டே பசி ஆறி நின்றார்.
அதன் பின் உண்டு முடித்து ஆண்கள் வெளியில் சென்று விட.மீனாளுடன் மீண்டும் பேச தொடங்கி விட்டனர் பெண்கள் இருவரும்.
“மதனி!”
“சொல்லு மீனா?”
“இப்போ எல்லாம் மனசு ரொம்ப பயம் கொடுக்குது.அப்பன் எப்போ வான்னு கூப்புடுறாரோ தெரியல மதனி.உடம்பும், மனசும் ரொம்ப வலியெடுத்து போச்சு வலுவே இல்லை” என்றதும் “அயித்த” சாலா பதற கண்ணாத்தாள் சிறு அதட்டலாக.
“என்ன மீனா?
“நாள் நலுங்கி போச்சுன்னா எப்போ வேணா கிளம்ப வேண்டியதுதேன் மதனி. அதுக்குள்ள லட்சு கல்யாணம் பாக்கணும் மதனி. அண்ணன் கிட்ட சொல்லி அவன்கிட்ட பேச சொல்லுக “
“சரி நான் சொல்றேன், இப்படி இனி பேசாத என்ன? உனக்கு எதுவும் எண்ணமிருக்கா?”
“அதெல்லாம் இல்ல மதனி, ஆனா லட்சுவை மாப்பிளை கேட்டு அவுக ஐயா வூட்டுச் சொந்தம் வருது. சின்ன வயசுல வச்ச முடிப்பு அண்ணனை வச்சுதேன் லட்சு கிட்ட பேசனும்”
“ஓ! எப்போ வாறாக”
“நாளைக்கு அதேன் உங்களை வர சொன்னேன் அவுக ஐயாவோட தங்கச்சி பிள்ளை நாகம்மை படிப்பு முடிச்சிட்டு போல அதேன் கல்யாணம் பேச வாறாக”
“நான் அவரை விட்டு பேச சொல்றேன் மீனா நாளை வரட்டும் லட்சுக்கு சரினா மேற்படி பேசலாம்”
“மதனி அவுக வராது அவனுக்குத் தெரியாது, அதுனால இப்பவே பேசிடுக” என்றதும் புருவ சுளிப்புடன்
“இது என்ன வேலை? ஏன் தம்புடு கிட்ட சொல்லல மீனா?”
அண்ணனை வச்சுத்தேன் சொல்லனும் மதனி. சிறுசுல இருந்து அவனுக்கு தெரியும் அந்தப் பிள்ளை கூடப் பேசிகிட்டுதேன் இருக்கான். அவுக ஐயாவை கொண்டு வேணான்னு சொல்லிடுவானோனு பயம் அதேன்”
மீனா சொல்வதும் சரி தான். இன்றும் தந்தை வழி உறவுகளோடு அவன் பேசி கொண்டு தான் இருக்கிறான். மீனா கால் உன்னி நின்று நிமிர உறவுகளின் கசுப்புக்கள் மெல்ல, மெல்ல மறைய தொடங்கியது.இதுவும் உலக வழமை தானே. கணவன் உறவுடன் மீனா பேசா விட்டாலும் மகனை கொண்டு உறவு பேணி வந்தாள் போலும்
அதுவும் போக அவளுக்கு அங்கு திருமணம் முடிப்பதில் நாட்டமில்லை என்றாலும் லட்சுமணனுக்கு விருப்பம் இருந்தால்? என்ற எண்ணம் வர. தான் பேசினால் மறைத்து விடுவான் என்று வள்ளியப்பனை முன் நிறுத்தினாள்.
நேரம் கடத்தாமல் கண்ணாத்தாள் வள்ளியப்பனை பார்க்க போக.அதற்குள் அவரிடம் விடைபெற்று மருத்துவப் பணிக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான் லட்சுமணன்.
திண்ணையில் தனித்து அமர்ந்து கொண்டு தூரத்தில் இருக்கும் வேப்ப மரத்தை பார்த்துக் கொண்டிருந்த வள்ளியப்பனை நெருங்கி, “சாலாப்பா தம்புடு இல்லை? “
“வைத்தியம் பார்க்க கிளப்பிட்டான் கண்ணு, ஏன்? என்ன ஆச்சு?” என்றதும் மீனாள் சொன்னதை சொல்ல எந்தவித முகப் பாவனையும் இல்லாமல் கேட்டு கொண்டவர்.
“ராவு வரட்டும் கண்ணு பேசலாம்”
“சரிக” என்றவள் உள்ளே செல்ல பார்க்க.
“கண்ணு!”
“சொல்லுக சாலாப்பா!”
“அப்போ நம்ப பிள்ளைக்கும் பார்க்க வேண்டியது தான்” வள்ளியப்பன் சொன்ன தோரணையும் ‘அப்போ’ என்ற தொனியும் கண்ணாத்தாள் கவனம் கொள்ளவில்லை.
“ப்ச்! சாலாப்பா வருஷம் தான் போகுது” என்றவள் மகளை எண்ணி கவலை கொண்டாள்.போகும் தனது மனைவியை பார்த்தவாறு இரு கால்களையும் வேகமாக ஆட்டி தனது பதட்டத்தை குறைக்க முயன்றார் வள்ளியப்பன்.
error: Content is protected !!