Skip to content
Post Views: 4,270
நத்தை போல் சுருண்டு படுத்திருந்தாள் சுபி.
சுபி என்னம்மா பண்ணுது? ஆதுரமாய் தலை கோதினார் பாப்பாத்தி. எழுந்தா தலை சுத்துற மாதிரி இருக்கு. படுத்தே இருக்கணும் போல இருக்கு.
அப்படித்தான் சாமி இருக்கும். பத்து மாசம் கஷ்டப்பட்டு முத்து மாதிரி ஒரு பிள்ளயை பெத்து கையில் தூக்கிட்டா பட்ட கஷ்டமெல்லாம் மறந்து போகும்.
பயமா இருக்குத்த என்றவளுக்கு அப்படி ஒரு அழுகை.
Advertisement
அய்யய…. இதென்ன வம்பா போச்சு! உன் புருஷனை இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு தான் பெத்தெடுத்தேன். உங்கம்மாவும் இப்படி வம்பாடு பட்டு தான் உன்னை பெத்தெடுத்திருப்பாங்க. பத்து மாசம் சுமந்து பெத்தேன்னு மார்தட்டிக்கிறது சும்மாவா?
இதெல்லாம் சுகமா நினைக்கணும். நம்ம குழந்தை ஆணா?பொண்ணா? குழந்தை எப்படி இருக்கும்? யாரு ஜாடையில் இருக்கும்? இப்படி எல்லாம் யோசிக்க தொடங்கினா இதெல்லாம் கஷ்டமா இருக்காது தங்கம் என்றார் அவளை தோளோடு அணைத்தபடி.
தைரியமா இருக்கணும். ஆரோக்கியமா குழந்தையை பெத்தெடுக்கணும்னா நீ நல்லா சாப்பிடணும்!
Advertisement
கொஞ்சம் வாய்க்கு புளிப்பா ஆரஞ்சு ஜூஸ் போட்டு கொண்டு வரவா?
Advertisement
ம்ம்ம்ம்ம்ம் என்றாள்.
ஜூஸ் குடித்து அமர்ந்தவளின் மார்பை நீவி விட்டார்.
வா வந்து ஹாலில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் டிவி பாரு!
Advertisement
சற்று நேரத்திற்கெல்லாம் வாந்தி எடுத்து நைட்டி முழுதும் நனைந்து விட்டது.
அச்சோ…. என்னம்மா? இதுக்கா அழுவாங்க?இங்கே வா! கண்ணீருடன் அமர்ந்திருந்த மருமகளை கை தாங்களாய் அழைத்து சென்று குளியலறையில் அமர வைத்து குளிக்க வைத்து உடைமாற்றி படுக்க வைத்துவிட்டு ஹாலை சுத்தம் செய்து டெட்டால் போட்டு துடைத்தார்.
சுபிக்கு அழுகை பொங்கி பொங்கி வந்தது. இந்த மாமியாரை என்னவெல்லாம் பேசி இருக்கிறோம். அவரை நிமிர்ந்து பார்க்கவே குற்ற உணர்ச்சியாக இருந்தது.
எவ்வளவு தங்கமான பெண்மணி! வியந்து போனாள்.
“———————-“
என்னம்மா இப்படி ஜூஸ் குடிச்சா கூட வாமிட் பண்றா? பயமா இருக்கு எனக்கு….. பரிதவித்து போனான் மன்னர். தலைப்பிரசவம் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பயத்தையும், பதட்டத்தையும் கொடுக்கும் என்பது இயல்புதான்.
ஹாஸ்பிடல் கூப்பிட்டா வர மாட்டேங்குறா நான் என்னடா பண்ண…?
உன் அப்பாவை கடைக்கு அனுப்பி இருக்கேன் ஆல் பகோடா பழம் வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கேன்,அதை வாயில் வைத்து அதக்கினா கொஞ்சம் வாந்தி மட்டுப்படும்.
கோபம்,இயலாமை, படுத்தே கிடக்கும் எரிச்சல் எல்லாம் சேர்ந்து அவனை கடுகடுக்க வைத்தது. அழைத்து விட்டான் மனைவிக்கு.
சுப்பு ஏன் நிலைமை புரியாம படுத்தி எடுக்குற? சசியை வரச் சொல்றேன் அம்மா கூட ஹாஸ்பிடல் போய் கைனோ பார்த்துட்டு வா! இப்படி தொடர்ந்து வாமிட் பண்ணிட்டே இருந்தா டி ஹைட்ரேட் ஆயிடும். மயக்கம் வந்துடும். சொன்னா கேளும்மா.
உங்களுக்கு உடம்பு சரியான பிறகு போகலாம் என்றாள் அமர்த்தலாய்.
செருப்பு தான் வரும்…. என்னடி உனக்கு அவ்வளவு பிடிவாதம்? நான் எழுந்திருக்க ஒரு வாரம் பத்து நாள் ஆகும் அப்படின்னா நீயும் இப்படியே வாந்தி எடுத்துட்டே இருப்பியா? ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு மூலையில் படுத்து கிடந்தா அம்மா யாரை தான் பார்ப்பாங்க?
என்னை யாரும் பார்க்கத் தேவையில்லை நான் எங்க வீட்டுக்கு போறேன்…. தேம்பித் தேம்பி அழுதாள்.
கர்ப்பம் என்பது பெண்களின் வாழ்க்கையின் மிக மிக முக்கியமான அத்தியாயம் அல்லவா? கர்ப்பமான செய்தியை கணவனிடம் முதலில் சொல்லி அவன் ஆராதித்து ஆலிங்கனம் செய்து பூரிப்புடன் பொலிவாய் மருத்துவமனைக்கு சென்று மருத்துவ ஆலோசனை பெற்று வீட்டில் உள்ளவர்கள் தங்கமென தாங்கி ஒவ்வொரு நாளும் பார்த்து பார்த்து பொத்தி பொத்தி வளர்க்கும் பிரசவ காலம் எப்படி இருக்கும்!
தனக்கு மட்டும் ஏன் இப்படி என்ற கழிவிறக்கம் அவளுக்கு. ஏற்கனவே கணவனை திட்டி விட்டோம் என்ற குற்ற உணர்வு இருந்தது. உண்ணாமல் உறங்காமல் பலகீனப்பட்டுக் கிடந்த உடம்பும் எதையெதையோ யோசித்து குழம்பும் மனதும் அவளை என்னவோ செய்தது. பனிரெண்டு நாட்களுக்கு மேல் ஆகிறது அவள் கணவனை ஸ்பரிசித்து.
கணவன் வெளியூரிலோ வெளிநாட்டிலோ இருந்தால் பரவாயில்லை.
கண் பார்வையில் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் அவன் கை வளைவிற்குள் தஞ்சம் புக முடியவில்லையே என்ற பெண்மையின் ஏக்கம் அவளை வெகுவாய் தாக்கியது.
கர்ப்பகால ஹார்மோன் மூட் ஸ்விங் என்னும் மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டது.
சுப்பும்மா இந்த மாதிரி நேரத்தில் ஹார்மோன்ஸ் இம்பேலன்ஸ்டா இருக்கும் அதிகப்படியா எரிச்சலும் கோபமும் வருமாம். உடம்பை கவனமா பார்க்கலைன்னா பிபி அதிகமாயிடுமாம்.
என்னமோ ஆயிட்டு போகுது உங்களுக்கென்ன? அவள் மூக்கை உறிஞ்சினாள்.
எனக்கென்னவா? அடி பைத்தியக்காரி என் பொண்டாட்டியும் குழந்தையும் தான் என் உலகம்.
இந்த நல்ல செய்திக்காக நான் எவ்வளவு நாள் காத்திருந்தேன் தெரியுமா? என் சந்தோஷத்தை வார்த்தையால் சொல்ல முடியாது சுப்பு.
என் பொண்டாட்டி மசக்கையில் கஷ்டப்படும் போது அவள் பக்கத்தில் இருக்க முடியலையே என்ற ஏக்கம் என்னை எவ்வளவு வாட்டுது தெரியுமா?
எனக்கு அக்கறை இருக்க போய் தான் உன்னோட நாள் கணக்கை மாதம் தவறாமல் கவனித்துக் கொண்டு இருக்கேன்.
அவன் பேச பேச அழுகை மட்டு பட்டு லேசான விசும்பல் மட்டுமே அவளிடம் இருந்து வந்தது.
உங்களுக்கு இன்னும் ஃபீவர் அதிகமா இருக்கா?
இல்ல குறைஞ்சிருக்கு.
அப்போ என்னை பார்க்க வாங்க! கெஞ்சினாள்.
குழந்தை மாதிரி பண்ணாதே சுப்பு. உனக்கே ஒரு குழந்தை வரப்போகுது.
சரி இரு வீடியோ கால் பண்றேன்!
அவன் வீடியோ காலில் வர…. ஒளியிழந்த கண்களும் வற்றிய கன்னமுமாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனின் இளம் நீல வண்ண சட்டை கட்டிலின் மீது கிடந்தது.
அவனுக்கு புரிந்தது வெகுவாக தன்னை தேடுகிறாள் என்று. காக்கிச்சட்டையில் அவன் கம்பீரமாக நிற்கும் புகைப்படம் சுவற்றில் இருந்தது இப்போது கட்டிலின் மீது இருக்கிறது.
அட பைத்தியக்கார பெண்ணே இவ்வளவு அன்பும் ஏக்கமும் உள்ளவளா புரிதல் இல்லாமல் பிதற்றிக் கொண்டு திரிந்தாள்! அவனுக்கு ஏனோ கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.
உருகி உருகி காதலித்து,ஊர் உலகம் சுற்றி வந்து, ஊரார் கண்களுக்கு விருந்தாகி அதன்பிறகு திருமணம் செய்து கொண்டால் தான் காதல் திருமணம் என்பது அல்ல. இதுபோல் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திலும் உள்ளத்தால் ஒன்றி உணர்வுகளால் பிணைந்து நீ இன்றி நான் இல்லை என்று ஒரு நிலை வருகிறதே அதுதான் உண்மையான காதல்.
சுப்ரஜாவிற்கு எப்படியோ ஆனால் மன்னர் அவளை விரும்பி தானே மணந்தான்…..
இவ்வளவு தூரம் தன்னை தேடுகிறாள் என்று கர்வமாகவும் பெருமையாகவும் இருந்தது அதேசமயம் அவளை தேட வைத்து கலங்க வைக்கிறோமே என்று கவலையாகவும் இருந்தது.
சுப்பு நீ கொஞ்சமா சாப்பிட்டு தோட்டத்தில் வாக்கிங் பண்ணு! நான் உன்னோட பேசிட்டே இருக்கேன் சரியா.
ம்ம்ம்ம்ம் என்றாள். நீ நடக்காம ஏமாத்த கூடாது நான் ஜன்னல் வழியே உன்னை பார்த்துட்டே இருப்பேன்.
ம்ம்ம்ம்ம் என்றாள் பெருமையான சிரிப்புடன்.
“———————-“
பாப்பாத்தி ரசம் சாதமும் மாங்காய் ஊறுகாயும் கொண்டு வந்து கொடுக்க…. கொஞ்சமாய் சாப்பிட்டு இதமான வெந்நீரை குடித்து மெல்ல மெல்ல நடந்து தோட்டத்திற்கு வந்தாள்.
பின் வீட்டு ஜன்னல் அருகில் நின்று மனைவியை பார்த்து கையசைத்தான்.
அப்படி ஒரு பரவசம் அவளுக்கு.
சுபிமா ரொம்ப நேரம் நடக்க வேண்டாம் தலை சுத்துற மாதிரி இருந்தா இந்த பெஞ்சில் உட்காந்துக்கோ என்று மருமகளை தோட்டத்தில் விட்டு மகனுக்கு கண்காட்டி விட்டுப் போனார் பாப்பாத்தி.
அவன் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க அவள் மெல்ல மெல்ல நடந்து கொண்டே பதில் அளித்துக் கொண்டிருந்தாள்.
“————————“
ஹலோ அத்தை நல்லா இருக்கீங்களா? மாமா நல்லா இருக்காங்களா? அக்கறையாய் போன் பேசியது அஞ்சலிதான்.
நாங்க நல்லா இருக்கோம் நீ எப்படி இருக்க பேரன் எப்படி இருக்கான்?
நல்லா இருக்கோம்த்த… சுபி எப்படி இருக்கா?
எது சாப்பிட்டாலும் குடல் தங்கலை வாந்தியா எடுக்குறா!
மன்னரு வந்துட்டாரா?
அதை ஏன் கேட்கிற? புள்ளைக்கு ஜுரமான ஜுரம் லீவ் போட்டு வீட்டுல தான் இருக்கான்.
என்னத்த இப்படி சொல்றீங்க? குழந்தை உருவான நேரம் இப்படி படுத்தி எடுக்குதோ? எதுக்கும் ஒரு நல்ல ஜோசியர்கிட்ட…
சட்டென்று அம்மாவின் காதில் இருந்த மொபைலை பிடுங்கி ஆஃப் பண்ணினான்.
ஆம் போனை ஸ்பீக்கரில் போட்டு காதுக்கு கொடுத்துவிட்டு கிரைண்டரில் மாவை வழித்துக் கொண்டிருந்தார் பாப்பாத்தி.
குடிக்க சுடு தண்ணீர் வேண்டும் என்று கிச்சனுக்கு வந்த மன்னர் அப்படியே கேட்டு நின்று விட்டான்.
மன்னர் அது…அவ ஏதோ ஓட்ட வாய்,வாய்க்கு வந்ததை உளறி கிட்டு இருக்கா நீ பெருசு படுத்தாத சாமி…. எப்படி சமாளிக்க என்று திண்டாடி போனார்.
அம்மா இவங்களை இலவசமா ஆலோசனை கேட்டோமா? அவ ஏற்கனவே பயத்துல அழுது வடிஞ்சுகிட்டே இருக்கா அவகிட்ட போய் நேரம் சரியில்ல அது இதுன்னு உளறிட்டு இருந்தீங்கன்னா நான் மனுஷனா இருக்க மாட்டேன்.
என்ன மாதிரி மனுஷங்க இவங்க எல்லாம்….? இவங்க படிச்சவங்க தானே இடம் பொருள் ஏவல் என்னன்னு தெரியாதா?
அது என்னம்மா அடுத்தவங்க வீட்டு குடும்பத்துக்குள்ள அத்துமீறி மூக்கை நுழைக்கிறதுல அப்படி ஒரு குதூகலம்?
என் குழந்தை உருவான நேரம் நல்ல நேரம் தான். லீவ் இல்லாம ஓடி ஓடி களைத்து போய் இருந்த நான் பத்து நாள் மெடிக்கல் லீவ் போட்டுட்டு வீட்டுல ரிலாக்ஸா இருக்கேனே அதுவே எனக்கு நல்ல நேரம் தான்.
கர்ப்ப கால ஆலோசனை வழங்குகிறேன் என்கிற பெயரில் என் பொண்டாட்டிக்கு அவங்க யாரும் ஃபோன் பண்ண கூடாது சொல்லிட்டேன் கடுப்புடன் சொல்லிட்டேன் முனுமுனுத்துக் கொண்டே சென்று விட்டான்.
“—————————“
சுப்பு போனை அதிக நேரம் காதில் வைக்க கூடாது….. தூரமா வச்சுட்டு ஸ்பீக்கர் போட்டு பேசு! அவனும் சாப்பிட்டுக் கொண்டே வீடியோ காலில் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தான் அவளும் சாப்பிட்டுக் கொண்டே அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். இருவருக்குமான இடைவெளியை கொஞ்சம் இட்டு நிரப்பியது தொழில்நுட்பம் தான்.
என்னடி அப்படி பார்க்கிற? அவனுக்கு கூச்சத்தில் சிரிப்பு விரிந்தது…. லேசாய் தட்டுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டான்.
பார்க்கணும் போல தோணுச்சு! ஏன் இதுக்கு டிக்கெட் வாங்கி தான் பார்க்கணுமா? அவ்வளவு கேலி அவள் பேச்சில்.
பாரு பாரு உன் புருஷன் நீ பாக்குற…. அப்புறம் என் பொண்டாட்டியை நான் எப்படி பார்க்கிறேன் பாரு! அவன் மீசையை நீவியபடி கண்ணடித்து சிரிக்க….. அவள் வெல வெலத்து போய் உதடு கடித்துக் கொண்டாள்.
சுப்பு…. கரகரத்த குரலில் காதலுடன் அழைத்தான்.
ம்ம்ம்ம்ம் என்றாள்.
லவ் யூ சொல்லுடி! அவ்வளவு ஏக்கமும் எதிர்பார்ப்பும் கொட்டிக் கிடந்தது அவன் விழிகளில்.
மிஸ் யூ என்றாள் அவன் முகம் பார்த்து.
மனைவியின் பேச்சில் ச்சில் என்ற உணர்வு அவனுக்குள்.
இன்னும் ரெண்டு நாளில் ரெக்கவர் ஆகிடுவேன் சுப்பு….. கொஞ்சம் வாய் கசப்பா இருக்கு உள்ளுக்குள்ள ஃபீவர் இருக்குன்னு நினைக்கிறேன்.
ரெண்டு இட்லி போதும் ஸ்டாப் பண்ணிக்கோ….! கொஞ்ச நேரம் பொறுத்து ஜூஸ் சாப்பிடு.
ம்ம்ம்ம்ம் என்றாள் மறுப்பின்றி. அருகில் இல்லாமலேயே அருகாமையை உணர்த்திக் கொண்டிருந்தான் மன்னாதி மன்னன்.
சுப்பு இது கூட நல்லா இருக்கு இல்ல.
காதல் கோட்டை படத்துல பார்க்காமலே லவ் பண்ணுவாங்களே அதே மாதிரி ஒரே வீட்டுக்குள்ள இருந்து நீயும் நானும் போனில் லவ் பண்ணிட்டு இருக்கோம் பாரு எல்லாம் நம் குழந்தை வந்த நேரம்…. அவன் கிசுகிசுத்த குரலில் அவள் மேனியெங்கும் வெப்பம் பரவியது.
பத்து நாள் மெடிக்கல் லீவ் போட்டுட்டேன் இன்னும் அஞ்சு நாள் ஐயா ஃப்ரீ தான். நம்ம இப்படியே ரொமான்ஸ் பண்ணுவோம் சரியா?
அவன் பேச்சு அவளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. தன் கணவன் இப்படி எல்லாம் பேசுவானா? வியந்து விழி விரித்து வெட்கத்துடன் பார்த்தவளை அப்போதே அள்ளியணைத்து திக்கு முக்காடி போகும் அளவுக்கு முத்தமிட ஆசை அவனுக்கு.
தன் குழந்தை பள்ளி கொண்டிருக்கும் அவள் மணி வயிற்றை மெல்ல வருடி பார்க்கும் ஆசை…. அதையெல்லாம் அவன் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
ரொம்ப வாமிட்டிங் இருந்தா பெண் குழந்தையா இருக்குமாம் ஒரு புத்தகத்தில் படித்தேன்…. கண் சிமிட்டி சிரித்தான்.
போங்க எனக்கு ஆண் குழந்தை தான் வேணும்!
என்னடி இது அமேசானில் ஆடரா போடுறோம் வேண்டும் என்பதை வாங்க….
மன்னர் நினைத்தால் நினைத்தபடி நடக்கும்…. பாரு அய்யாவோட கணிப்பை.
பார்த்துட்டே இருங்க என் குட்டி பையன் வந்து உங்க மாரில் மிதிக்க போறான்.
எதுவாயிருந்தாலும் எனக்கு சந்தோஷம்தான் ஆனால் குட்டி தேவதையா இருந்தா ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன்.
கணவனின் ஆர்வமும் அக்கறையும் அவ்வளவு இதம் சேர்த்து வலு சேர்த்தது சோர்ந்திருந்த அவளுக்கு.
வீட்டில் எதுக்கு சுடிதார் போட்டிருக்க…. இறுக்கமா டிரஸ் போடாதே… நைட்டியே போடு! பயமா இருந்தா கந்த சஷ்டி கவசம் படி.!
ஒவ்வொன்றிலும் எப்படி அவன் கவனம் பதிகிறது என்ற ஆச்சரியம் இன்று வரை அவளுக்கு போகவில்லை. நூற்றில் ஒருவருக்கு தான் இப்படி கணவன் வைப்பானோ? ம்க்கூம் கோடியில் ஒருவருக்கு தான் இப்படி வாய்க்க கூடும் என்ற உண்மை அவளுக்கு இன்னும் புலப்படவில்லை
“————————“
error: Content is protected !!