Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உனக்குள் என் உயிரே

உனக்குள் என் உயிரே 19 2

அர்ஜுன் வருணை பார்த்ததும், வேகமாக அவனிடம் சென்று “ஹாய் வருண், வெல்கம்” என்றான். வாசலில் நின்ற எல்லோரும் மீராவை தான் பார்த்து கொண்டிருந்தனர்.

மீரா ஒய்லட் நிற டிஷ்யூ புடவையில் தங்க நிற பீட்ஸ் மற்றும் சிறிய வெள்ளை நிற கற்கள் பதித்த டிசைனர் புடவையில் வந்திருந்தாள். கழுத்தில் அர்ஜுன் கொடுத்த செயின்னோடு சிறு, சிறு பூக்கள் கோர்த்தது போல் வெள்ளை கற்கள் பதித்த வைர நெக்லஸ்ம் மற்றும் அதற்குப் பொருத்தமான வைர தொங்கட்டான் காதில் போட்டிருந்தாள். தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளித்துக் கூந்தலை விரித்து விடாமல், மொத்தமாகச் சேர்த்துக் கற்கள் பதித்த ஒரு பெரிய க்ளிப் மட்டும் போட்டிருந்தாள். முகத்தில் லேசான ஒப்பனையுடன் அழகு ஓவியமாக வந்தவளை, எல்லோரும் மனதிற்குள் மெச்சி கொண்டனர்.

மீரா உள்ளே வரும் போது… சரியாக மண்டபத்தின் வெளியே இருந்த அனைத்து விளக்குகளும் ஒளிர… மீரா பார்க்க வானத்து நட்சத்திரம் போல் ஜொலித்தாள்.

“எவ்வளவு அழகா இருக்கா… யாருக்கு குடுத்து வச்சிருக்கோ.” வித்யா சொல்ல… “ஏன்மா…. பேசமா உங்க ரெண்டாவது பையனுக்கே ஜோடி சேர்த்துட வேண்டியது தான…” என்று ஆரு சொல்லிவிட்டு, அவள் அம்மா இப்போது தனக்குச் செய்யப் போகும் அர்சனைக்காகக் காத்திருக்க…

வித்யா ஆருவை பார்த்து முறைத்து விட்டு அமைதியாக இருந்தார். அவர் முகத்தில் கோபம் இல்லை, லேசான புன்னகையே இருந்தது. ஆருவிற்கு நம்பவே முடியவில்லை… இது நம்ம அம்மா தான என்று தன் கையைக் கிள்ளி பார்த்தாள்.

அர்ஜுன் வருணோடு பேசும் ஆவலில் மீராவை சரியாகக் கவனிக்கவில்லை. மீரா உள்ளே சென்றதும்தான் அவளை நன்றாகப் பார்த்தான். அடிப்பாவி என்னை வேலையே பார்க்க விடக் கூடாதுன்னு முடிவே பண்ணிட்டா போல என்று நினைத்து பெருமூச்சு விட்டான்.

விருந்தினர் வர ஆரம்பிக்க…. எல்லோரும் அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தனர். மேடை அலங்காரம் கண்ணைப் பறித்தது. ஆதியும், ரஞ்சனாவும் மேடைக்கு வந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் பொருத்தமான ஜோடியாகப் பார்த்தவர்கள் கண்களைக் குளிர்வித்தனர். வழக்கம் போல் ஆருவும், சஞ்சனாவும் அவர்களோடு மேடையில் நின்றனர்.

மண்டபமே களைக்கட்டியது. ஆதியின் நண்பர்கள், அர்ஜுனின் நண்பர்கள், ஆருவின் தோழிகள் என்று திருமன மண்டபமே இளமை பட்டாளத்தின் சரவெடி பேச்சில் அதிர்ந்தது. சூர்யாவும் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டான். மீராவும் அவர்களோடு தான் இருந்தாள்.

இரவு எட்டு மணி ஆன போது… மீராவின் அப்பா ராம்நாத் தன் மனைவி மீனாட்சியுடன் வந்தார். வாசலில் நின்ற கணேசன் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து வந்து முன் வரிசையில் அமர வைத்தார். வருண் அவர்களைப் பார்த்ததும், அவர்களோடு சென்று அமர்ந்து கொண்டான்.

வித்யா வந்து ராம்நாத்தை வாங்க என்று கேட்டு விட்டு மீனாக்ஷியிடம் நலம் விசாரித்தார். ராம்நாத் முன் வரிசையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து அர்ஜுனும் வந்து அவரோடு பேசினான்.

சிறிது நேரம் சென்று கணேசன் ராம்நாத்தை மேடைக்கு அழைக்க… அவரோடு மீனாட்சியும் வருணும் சென்றனர். அர்ஜுன் மீராவை பார்த்து நீயும் வா என்றான். மீரா வேண்டாம் என்று தலை ஆட்டினாள், அர்ஜுன் அவளைப் பார்த்து முறைத்தான்.

மேடைக்கு வந்த ராம்நாத் மீனாக்ஷியை பார்க்க… அவள் ஒரு தங்க காயின் இருந்த டப்பாவை தன் பாகில் இருந்து எடுத்து கொடுத்தாள். ராம்நாத் அதை ஆதியிடம் கொடுக்கப் போகும் போது…. “ஒரு நிமிஷம் அங்கிள்.” என்ற அர்ஜுன், எல்லோரின் முன்பே “மீரா… நீயும் வா..” என்று சத்தமாகக் கூப்பிட… மீராவும் வேறு வழியில்லாமல் சென்றாள். அவளுக்கு மீனாட்சியின் முகம் பார்க்கவே பயமாக இருந்தது. அவள் தலை குனிந்தபடி சென்று தன் அப்பாவின் அருகே நின்றாள்.

ராம்நாத் “நீ எங்க இருந்த மீரா… நீயா வரவேண்டாமா பாரு எல்லோரும் வெயிட் பண்றாங்க பாரு… ” என்றவர் ஆதியிடம் அவர் வாங்கி வந்த பரிசை கொடுத்தார்.

ராம்நாத் மீரா அவர்கள் குடும்பத்துடன் நெருங்கி பழகுவதை அறிந்தே, அவர்களுக்கு நல்ல பரிசு கொடுக்கவேண்டும் என்று தங்க காயின் வாங்கி வந்திருந்தார். பரிசை கொடுத்ததும் இரண்டு குடும்பத்தினரும் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர்.

உணவு அருந்தி முடித்தவுடன் ராம்நாத் எல்லோரிடமும் விடைபெற்றுக் கிளம்பிவிட்டார். வருணும் அவர்களோடு சென்றுவிட்டான்.

மீரா சந்தோஷமாகத் தன் கல்லூரி நண்பர்களோடு அரட்டை அடிக்க… சூர்யா இந்த ஆரு நம்மளை கண்டுக்க மாட்டேங்கிறா , நாமும் அவளைக் கண்டுக்கக் கூடாது என்று நினைத்தான். அப்போது ஆருவே வந்து மீராவின் அருகே அமர்ந்தாள். சூர்யா ஆருவை ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டிருந்தான். ஆரு தாவணி மாடல் புடவை அணிந்து சூப்பராக இருந்தாள்.

சூர்யா ஆரு வந்ததைப் பார்க்காதது போலவே அமர்ந்து இருக்க… ஆரு என்ன ஆச்சு இவனுக்கு? ஏன் கண்டுக்கவே மாட்டேன்கிறான் என்று நினைத்தவள், அவளே அவன் பக்கம் திரும்பி, “ஹாய் சூர்யா, எப்படி இருக்கீங்க?” என்று கேட்க… சூர்யா சுற்றிலும் யாரையோ தேடுவதைப் போல் பார்த்தவன், “நீ என்கிட்டயா பேசுன?” என்று தெரியாதது போல் கேட்க… ஆரு இவனுக்கு என்ன ஆச்சு என்று நினைத்தவள், அவனைப் பார்த்து முறைத்தாள்.

“ஓகே… ஓகே…. நோ வயலன்ஸ், நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?”

“ம்ம்…நல்லா இருக்கேன். உங்களுக்கு யாரும் ஆளு இல்லையா சூர்யா…. இருந்தா உங்களுக்கும் ஜாலியா பொழுது போகுமே….”

அரு விளையாட்டாகக் கேட்டவுடன், சூர்யா சட்டென்று “உனக்கு ஓகேவா…” என்றான். “என்னது எனக்கு ஓகே வா?” என்று ஆரு புரியாமல் பார்க்க…

லவ் பண்ண தான் என்று சொல்ல ஒரு நிமிடம் ஆகாது, ஆனால் நண்பனின் தங்கையைக் காதலிப்பது தவறோ என்ற எண்ணம் சூர்யாவின் மனதில் இருந்ததால்… அவனால் ஆருவிடம் தன் மனதில் இருப்பதைச் சொல்லமுடியவில்லை. அதனால் ஆருவிடம், “எங்க அம்மாவும், அப்பாவும் வந்திருக்காங்க பார்க்க வரியா…” என்று பேச்சை மாற்றினான்.

இவன் இதுக்கு முன்னாடி என்ன சொல்ல வந்தான் என்று யோசித்துக் கொண்டே…. ஆரு அவனுடன் சென்றாள்.

சூர்யா ஆருவை தன் பெற்றோரிடம் அழைத்துச் சென்றான். அவர்களுக்கு ஏற்கனவே ஆருவை தெரியும் என்பதால்… அவர்கள் அவளோடு நன்றாகப் பேச… ஆரு மதுவை பற்றிக் கேட்டாள்.

“அவளுக்குக் குழந்தை பிறந்திடுச்சுமா…. பையன். இங்க தான் இருக்கா… நாலு மாசம் கழிச்சு தான் போவா. ப்ரீத்தி அவங்க தம்பி பையனை விட்டு வர மாட்டேன்னு சொல்லிட்டா, நீ வீட்டுக்கு வந்து பாரேன்.” என்று அவன் அம்மா ஆருவை வீட்டிற்கு அழைத்தார்.

அப்போது ஆருவின் பெரியம்மா வந்து ஆருவிடம் எதோ கேட்க… சூர்யாவின் அம்மா அவரிடம், “நீங்க காயத்ரி தான…” என்றார். பெரியம்மா “ஆமாம், நீங்க….” என்று இழுக்க… “என்னைத் தெரியலையா… நான் உங்க வீட்டுக்காரருக்கு தூரத்துச் சொந்தம், தங்கச்சி முறை. மதுரையில ஒரு கல்யாணத்துக்கு வந்த போது கூட, உங்க வீட்டுக்கு வந்திருந்தேனே நியாபகம் இல்லை.” அவர் கேட்க…

“ஆமாம்… இப்ப நியாபகம் வந்திடுச்சு. எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப வருஷம் ஆகிடுச்சு இல்ல, அது தான் தெரியலை. இது என் தங்கை பையன் கல்யாணம் தான். நீங்க அவங்களுக்கும் சொந்தமா?” காயத்ரி கேட்க….

“இல்லை எங்களுக்கு அவங்களைத் தெரியாது. நாங்க சூர்யாவோட அப்பா, அம்மா.” என்றதும், “சூர்யா உங்க பிள்ளையா?” என்ற காயத்ரி சூர்யாவிடம் “நான் உனக்கு அத்தை முறை ஆகணும்.” என்றதும், சூர்யாவிற்குத் தலையில் பூ கூடையே கவிழ்ந்தது போல் இருந்தது.

இவங்களும் ஆருவோட அம்மாவும் அக்கா, தங்கை. அப்ப எனக்கு ஆரு அத்தை பொண்ணு. கடவுளே ரொம்பத் தேங்க்ஸ். இந்த மக்க… லவ் எல்லாம் பண்ண முடியாது… நேரடியா கல்யாணம் தான் பண்ணனும் என்று மனதிற்குள் குத்தாட்டம் போட்டவன், அந்தச் சந்தோஷ செய்தியை பகிர்ந்து கொள்ள அர்ஜுனை தேடி சென்றான்.

அர்ஜுன் டைனிங் ஹாலில் இருந்தான். அவனிடம் வந்த சூர்யா “அர்ஜுன்… உனக்குத் தெரியுமா… நீயும், நானும் சொந்தகாரங்க. உங்க பெரியம்மா எனக்கு அத்தை முறை…” என்றவன், அப்போது தான் அர்ஜுனின் முகத்தைப் பார்க்க…. அவன் சூர்யாவை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்.

“நான் எவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்றேன், நீ ஏன்டா முறைக்கிற?”

“இப்ப நீ எனக்கு முறை பையனா இருந்து என்னடா ஆகப் போகுது? நாம என்ன கல்யாணமா பண்ணிக்கப் போறோம்?” சூர்யாவிடம் நக்கலாகக் கேட்டுவிட்டு அர்ஜுன் அவன் வேலையைப் பார்க்க செல்ல…

இவனைக் கட்டிகனுமா…. ரொம்பத் தான் ஆசை இவனுக்கு, இவன் தங்கைய கல்யாணம் பண்ணிக்க நினைச்சா… இவன் பேசுறத பாரு, இப்ப இந்தச் சந்தோஷமான விஷயத்தை யார்கிட்ட சொல்றது? என்று யோசித்தவன், மீராவை தேடி சென்றான்.

மீராவின் அருகே அமர்ந்த சூர்யா “மீரா உனக்குத் தெரியுமா… நானும், அர்ஜுனும் சொந்தகாரங்க. எனக்கே இப்ப தான் தெரியும்.” என்றான். மீரா வேண்டுமென்றே “அப்படியா… இத்தனை நாள் நீங்க ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸ், இனி அண்ணன் தம்பி. ஹய் ஜாலி” என்றாள்.

சூர்யா வேகமாக “அண்ணன், தம்பி இல்ல. அவங்க பெரியம்மா எனக்கு அத்தை முறை.” என்றான். அவன் சாதரணமாகச் சொல்ல நினைத்தாலும், அவன் குரலில் இருந்த துள்ளலை அவனால் கட்டுபடுத்த முடியவில்லை. அவன் முகம் புன்னகையில் பூரித்திருந்தது. மீரா உண்மையிலேயே அவனுக்காகச் சந்தோஷபட்டாள்.

சூர்யாவும், மீராவும் சிரித்துப் பேசுவதைப் பார்த்த சஞ்சனா, ரஞ்சனாவிடம் அவர்களைக் காட்டி “இவங்க ரெண்டு பேரும் லவ்வெர்ஸ் போல…” என்று சொல்ல…. அதைக் கேட்ட ஆதி, இவ அர்ஜுன்கிட்ட அடி வாங்காம ஊர் போய்ச் சேர மாட்டா போலிருக்கு, இதை மட்டும் அர்ஜுன் கேட்டான் ருத்ரதாண்டவம் ஆடிடுவான் என நினைத்தான்.

“ரஞ்சு, உன் தங்கைய தயவு செஞ்சு வாய மூட சொல்லு, இவ எதாவது பேசி இழுத்து விடப் போறா… யார் காதுளையாவது விழுந்தா அவ்வளவு தான்.”

ரஞ்சனா அவள் தங்கையிடம், “உனக்குத் தேவை இல்லாத விஷயத்துல தலையிடாத.” என்றாள். சஞ்சனா எதோ சொல்ல வர… ரஞ்சனா அவளைப் பார்த்து முறைக்க… சஞ்சனா வாயை மூடிக்கொண்டாள்.

இரு வீட்டு ஆட்களும் குடும்பப்படம் எடுத்து கொண்டனர். அர்ஜுனின் நண்பர்கள் அனைவரும் மேடைக்குச் சென்ற போது மீராவும் அவர்களோடு சென்றாள். எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டனர். நண்பர்கள் அனைவரும் கடைசிப் பந்தியில் அமர்ந்து ஒன்றாகச் சிரித்துப் பேசி உணவருந்தினர்.



Advertisement

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!