Skip to content
Post Views: 5,459
“எனக்காக யாரும் போக வேண்டாம்.” என்றான் அர்ஜுன். ஆனால் மீரா “இல்ல… எனக்குத் தலை வலிக்குது, நான் கிளம்பறேன்.” என்றவள், எல்லோரையும் பார்த்து ஒரு பொதுவான தலையசைப்புடன் கிளம்பி சென்றாள். வாசலுக்குச் சென்ற மீரா திரும்பி அர்ஜுனை பார்க்க… அப்போது அர்ஜுனும் மீராவை தான் பார்த்துக் கொண்டிருந்தான். இதை எதிர்பார்க்காத இருவரும் ஐயோ இப்படி மாட்டிகிட்டோமே என்று நினைத்தனர்.
மீரா சென்றதும் அர்ஜுனும் மற்றவர்களும் சேர்ந்து ஒரு மணி நேரம் விளையாடியவர்கள். மற்ற இரு நண்பர்களையும் வழி அனுப்பிவிட்டு வந்த ஜீவா “அர்ஜுன்… உன்னைப் பார்த்து எத்தனை நாள் ஆச்சு, எப்படி இருக்க? நீயும் இங்க மெம்பெரா? நான் இதுவரை உன்னை இங்க பார்த்தது இல்லையே? ” என்று கேள்விகளாகக் கேட்க…
“டேய்… ஒரு ஒரு கேள்வியா கேளுடா… நான் நல்லா இருக்கேன். ஆமா… இங்க நானும் மெம்பெர்… சாயங்காலம் வந்து விளையாடுவேன். இப்ப சீசன் டைம், அதனால கடையில ரொம்பக் கூட்டம். அப்பா என்னைச் சாயங்காலம் கடைக்கு வர சொல்லி இருக்காரு… அதனால தான் காலையில் வந்தேன்.” என்ற அர்ஜுன் ஜீவாவை பற்றி விசாரிக்க, தன்னைப் பற்றிச் சொன்னவன் “மீராவும் உன் காலேஜ் தான். உனக்குத் தெரியுமா? நீ அவளைப் பார்த்திருக்கியா?” என்றான்.
“பார்த்திருக்கேன்….”
“அவளுக்கு உன்னைத் தெரியுமா?”
“தெரியும்.”
“அப்புறம் ஏன்டா ரெண்டு பேரும் தெரியாதவங்க மாதிரி இருந்தீங்க?” ஜீவா ஆச்சர்யப்பட…
“தெரியும் அவ்வளவுதான். சரி அதைவிடு. உனக்கு மீராவை ரொம்ப வருஷமா தெரியுமா?” அர்ஜுன் பேச்சை மாற்ற….
“எனக்கு அவளை ஒரு வருஷமாதான் தெரியும். நாங்க கொஞ்ச பேர் இங்க விளையாட வந்து ப்ரண்ட்ஸ் ஆகிட்டோம். நாங்க யாரும் ரெகுலரா வர மாட்டோம். ஆனா… மீரா எல்லா வாரமும் வருவா. அதுக்காக நாங்க ரொம்ப க்ளோஸ்ன்னு நினைக்காத, எனக்கு அவ பெயரையும், காலேஜ்யையும் தவிர ஒன்னும் தெரியாது. மீரா அவ வீட்டை பத்தி ஒன்னும் சொன்னது இல்லை. நாங்களும் கேட்டது இல்லை. வருவோம், விளையாடுவோம், பொதுவா சில விஷயம் பேசுவோம்… கிளம்பிடுவோம் அவ்வளவுதான்.”
“சரி ஜீவா கிளம்பலாம்.”அர்ஜுன் தன் வண்டியை நோக்கி செல்ல… “நாளைக்கு வருவியா…” ஜீவா அர்ஜுனை கேட்க “வருவேன்…” என்றவன், தன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
மறுநாள் காலை ஆறு மணிக்கு எழுந்த அர்ஜுன் ஒரே பரப்பரப்பாக இருந்தான். இன்று ஷட்டில் விளையாட போகலாமா வேண்டாமா என்று மூலையைப் போட்டு குழப்பியவனுக்கு, மீராவை பார்க்க வேண்டும் என்ற ஆசை மற்ற அனைத்தையும் பின்னுக்குத் தள்ள, வேகமாகக் கிளம்பி சென்றான்.
அங்கே அவன் சென்ற போது, நேற்று மாதிரி கூட்டம் இல்லாமல் இருந்தது. ஏன் என்று யோசித்துக் கொண்டே உள்ளே சென்றவன், அங்கே கோர்ட்டில் மீரா மட்டும் தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்ததும், அவன் கால்கள் அவன் கட்டுபாட்டையும் மீறி அவளிடம் சென்று நின்றது.
தன் அருகில் யாரோ வந்து நிற்பதை பார்த்து நிமிர்ந்த மீரா, அங்கே நின்ற அர்ஜுனை பார்த்ததும், இவன் இனி இந்தப் பக்கமே வர மாட்டான்னு நினைச்சா… வந்திருக்கானே என்று ஆச்சர்யபட்டாள்.
அவளின் முகத்தில் இருந்தே அவள் தன்னை எதிர்பார்க்கவில்லை என்பதை உணர்ந்த அர்ஜுன், இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க… மீரா எழுந்து கோர்ட்டின் மறுபுறம் சென்று விளையாட தயாராக நின்றாள்.
அவள் விளையாட நிற்பதை பார்த்த அர்ஜுனும் விளையாட தயாராக… இருவரும் சேர்ந்து விளையாடினார்கள். சிறிது நேரம் தனியாக விளையாடியவர்கள், வேறு இருவர் வந்து சேர்ந்து கொள்ளட்டுமா என்று கேட்டதும் சரி என்றனர். அர்ஜுன் சென்று மீராவின் பக்கம் நின்றான். சிறிது நேரம் பயிற்சி செய்துவிட்டுக் கேம் விளையாட தொடங்கினர்.
மீரா படப்படப்பாக உணர்ந்தாள். அவளுக்கு அர்ஜுனோடு சேர்ந்து ஒரே அணியில் விளையாடுவது ஒரு மாதிரி இருந்தது. எங்கே அவனை இடித்து விடுவோமோ என்ற பயத்திலேய ஆடினாள். அதே தான் அர்ஜுனின் நிலையும்… இருவருமே மோதிவிடக்கூடாது என்று நினைத்து விளையாடியதால், சில ஷாட்டை அவள் எடுக்கட்டும் என்று அர்ஜுனும்… சிலதை அர்ஜுன் அடிக்கட்டும் என்று மீராவும் தவறவிட்டனர்.
இப்படியே சென்றால் தோற்றுவிடுவோம் என்று உணர்ந்த இருவரும் ஆட்டத்தில் கவனம் செலுத்த, இரண்டு முறை ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டனர். முதல் முறை லேசாக மோதி கொண்டவர்கள், இரண்டாவது முறை பலமாக மோதிக்கொள்ள… கீழே விழப் பார்த்த மீராவை விழுந்துவிடாமல் பிடித்த அர்ஜுன் “வலிக்குதா…” என்று கேட்க… மீரா இல்லை என்று தலை ஆட்டினாள்.
ஹா..ஹா என்று கேட்ட சிரிப்புச் சத்தத்தில் இருவரும் நிமிர்ந்து பார்க்க… அங்கே ஜீவா நின்று கொண்டிருந்தான். “ரெண்டு பேரும் இன்னைக்குத் தான் புதுசா விளையாடுறீங்களா… எதோ விளையாட தெரியாதவங்க விளையாடுற மாதிரி இருக்கு.” ஜீவா போலியாக வியக்க … அர்ஜுனும், மீராவும் முழித்தார்கள்.
“நாங்க ரெண்டு பேரும் இதுவரை சேர்ந்து விளையாடியதில்லை இல்ல அதனால தான்.” அர்ஜுன் இருவருக்கும் சேர்த்துப் பதில் சொல்ல… “டேய்… இந்தக் கதை வேண்டாம், நேத்து நீயும், நானும் விளையாடும் போது, நீ என் மேல இப்படி மோதலையே…” ஜீவா விடாமல் வம்பு இழுக்க…
“டேய்… நீ சொல்றத பார்த்தா, நான் எதோ வேணும்னே மோதினேன்னு அவங்க நினைச்சுக்கப் போறாங்க.” என்ற அர்ஜுன் மீராவை பார்க்க… “நான் ஒன்னும் மத்தவங்களை மாதிரி அவசரபட்டு யாரையும் தப்பா நினைக்க மாட்டேன்.” பட்டென்று சொன்ன மீரா, “நான் கிளம்புறேன்.” என்று அங்கிருந்து செல்ல… அர்ஜுனுக்குக் கோபம் சுள்ளென்று தலைக்கு ஏறியது.
அர்ஜுன் கோபமாக மீரா போவதையே பார்க்க, “சரி வா விளையாடலாம்.” என்று ஜீவா அவனை இழுத்துக்கொண்டு சென்றான். விளையாடி முடித்ததும், ஜீவா “என்னடா நடக்குது… உங்க ரெண்டு பேருக்குள்ள…” என்றான் ஆர்வமாக.
“ஒன்னும் இல்லை. காலேஜ்ல நடந்த ஒரு பிரச்சனையில, நான் மீராவை தப்பா நினைச்சிட்டேன். அதைத் தான் மேடம் இப்ப சொல்லி காமிச்சிட்டு போறாங்க. அதைவிடு நீ ஏன் இன்னைக்கு லேட்?” அர்ஜுன் பேச்சை மாற்ற…
“சாரி அர்ஜுன், சனிக்கிழமை நைட் பார்டிக்கு போய்டுவேன். அதனால மோஸ்ட்லி சண்டே வர மாட்டேன். இன்னைக்கு உனக்காகத் தான் வந்தேன். அடுத்த வாரம் சீக்கிரம் வரேன் ஓகே….” ஜீவா சொல்ல…
“அப்படியெல்லாம் நீ ஒன்னும் கஷ்டப்பட்டுச் சீக்கிரம் வர வேண்டாம். நீ லேட்டாவே வா.” என்றான் அர்ஜுன்.
“கரடி மாதிரி உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வராதேன்னு சொல்ற…ஓகே..ஓகே…என்ஜாய்.” என்ற ஜீவா வீட்டுக்கு கிளம்ப, அர்ஜுனும் கிளம்பினான்.
அர்ஜுன் குழப்பத்துடனே வண்டி ஒட்டி கொண்டு சென்றான். இன்னைக்கு நல்லா தானே இருந்தா, அதுக்குள்ள என்ன ஆச்சு? என்று நினைத்துக் கொண்டே வீட்டிற்குச் சென்றான். மீராவிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று நினைத்தாளும் அவன் மனது அவன் பேச்சை கேட்காமல் அவளையே நாடியது.
இவன் வீட்டிற்குச் சென்று குளித்து விட்டு வரும் போது…. உணவு மேஜையில் எல்லோரும் எதையோ பற்றித் தீவிரமாகப் பேசிக்கொண்டு இருந்தனர். அர்ஜுன் சென்று அமர்ந்தவன் “இங்க என்ன கலாட்டா?” என்றதும்,
“நம்ம ஆருவோட பரதநாட்டிய அரங்கேற்றம் இன்னைக்கு இருக்கு. அதுக்குத் தான் நாம எல்லோரும் போகணும்.” என்றார் வித்யா.
“நீ அரங்கேற்றம் பண்ற அளவுக்குக் கத்துக்கிட்டியா பரவயில்லையே…” ஆதி தன் தங்கையைப் பாராட்ட… அர்ஜுன் “நான் கடைய பார்த்திகிறேன், நீங்க எல்லோரும் போயிட்டு வாங்க” என்றான்.
“அதெல்லாம் இல்லை. நீயும் கண்டிப்பா வரணும்.” என்றாள் ஆராதனா பிடிவாதமாக.
“ஆமா… இந்த அம்மா பெரிய நாட்டிய பேரொளி பத்மினி, கத்துக்குட்டிங்க ஆடறது எல்லாம் என்னால உட்கார்ந்து பொறுமையா பார்க்க முடியாது.” அர்ஜுன் அலட்டி கொள்ள….
“நாங்க அரங்கேற்றம் பண்றவங்க எல்லாம் குரூப்பா தான் ஆடுவோம். அதைத் தவிர இன்னும் நிறையப் பேர் ரொம்ப வருஷமா கத்துகிட்டவங்க ஆடுவாங்க. நாட்டிய நாடகம் எல்லாம் இருக்கு, ரொம்ப நல்லா இருக்கும். வா அர்ஜுன் ப்ளீஸ்…” ஆராதனா கெஞ்ச…
“டேய் அவளை ஏன்டா கெஞ்ச வைக்கிற” என்ற கணேசன், “அதெல்லாம் அவன் வருவான். நீ கவலைபடாத செல்லம்.” என்றதும், தன் அப்பாவை எழுந்து சென்று கட்டிகொண்டாள் ஆராதனா.
Advertisement
error: Content is protected !!