Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உனக்குள் என் உயிரே

உனக்குள் என் உயிரே 4 2

அதை ஏன்டா அர்ஜுன் இவ்வளவு வருத்தமா சொல்ற… கொஞ்சம் சந்தோஷமா தான் சொலேன். மீரா என்ன அவ்வளவு மோசமாவா இருக்கா, இல்லையே அழகா தான இருக்கா…” சூர்யா யோசிப்பது போல் பாவனைச் செய்ய…

அதைக் கேட்டு வாய்விட்டு சிரித்த அர்ஜுன்அவளுக்கு என்ன அவ அழகு தான். நான் அதை நினைக்கலை. அம்மா பீல் பண்ணுவாங்க. அப்புறம் மீரா ரொம்பப் பெரிய இடம். அது தான் யோசிக்கிறேன். ரெண்டு குடும்பத்துக்கும் ஒத்து வருமா…”

ஏன் நீங்க மட்டும் என்ன சாதாரணக் குடும்பமா, அவங்க அளவு வசதி இல்லைனாலும், நீங்களும் பெரிய இடம் தான். அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை… அப்புறம் எந்தப் பெற்றோர் தான் லவ் பன்றோம்னு சொன்னதும், சரின்னு சொல்வாங்க. அவங்ககிட்ட எடுத்துச் சொன்னா புரிஞ்சிக்கப் போறாங்க. இதுக்குப் போய் ரொம்பப் பீல் பண்ணிட்டு. சரி சொல்லு உங்க அம்மாவுக்குப் பிடிக்கலைனா… நீ மீராவை விட்டுடுவியா?”

இல்லை… எனக்கு எங்க அம்மா, மீரா ரெண்டு பேருமே முக்கியம். நான் ரெண்டு போரையும் விட்டு தர மாட்டேன்.”

அப்புறம் எதுக்குக் குழப்பிக்கிற? சரி நீ இவ்வளவு உறுதியா இருக்க, ஆனா… மீரா உன்னை லவ் பண்றாளான்னு தெரியலையே..”

எனக்குத் தெரியும் அவளும் என்னை லவ் பண்றா… என்னோட யூகம் சரினா மீராவுக்கு என்னை முன்னாடியே தெரியும்.”

அப்படியா சொல்ற….” என்ற சூர்யா, அர்ஜுன் அந்தக் கடைசி டேபில்ல பாரு என்றதும், அர்ஜுன் திரும்பி பார்க்க… அங்கே மீரா உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

இவளை புரிஞ்சிக்கவே முடியலைடா…. நேத்து ஒரு பெரிய நாட்டிய நிகழ்ச்சி இருந்தது. அதுல அவ்வளவு அற்புதமா ஆடினா, ஆனா… அவங்க வீட்ல இருந்து யாருமே பார்க்க வரலை. ப்ரோக்ராம் முடியும் போது ஒன்பது மணி இருக்கும், கார்ல தனியா ட்ரைவரோட போறா. இப்ப பாரு காலையில டிபன் காண்டீன்ல உட்கார்ந்து சாப்பிடுறா… இவளை இப்படியே விடக் கூடாது வா.” என்ற அர்ஜுன் எழுந்து மீராவை நோக்கி செல்ல… அவனுடன் சூர்யாவும் சென்றான்.

ஹாய் மீரா…” என்ற அர்ஜுன் மீராவின் எதிரில் இருந்த இருக்கையில் அமர, அவனுக்கு அடுத்த இருக்கையில் சூர்யா அமர்ந்தான்.

அர்ஜுனை அப்போது எதிர்பார்க்காத மீரா, “ஹாய்…” என்றாள் தயக்கத்துடன்.

என்ன மீரா… அர்ஜுனுக்கு மட்டும் தான் ஹாய்யா…” என்ற சூர்யா, “நான் சூர்யா… அர்ஜுனோட ப்ரண்ட்.” என்று கையை நீட்ட… மீராவும் அவன் கையைப் பற்றிக் குலுக்கினாள்.

அதைப் பார்த்த அர்ஜுனின் காதில் இருந்து புகை வர, ஒரு நிமிடம் என்ன செய்வது என்று யோசித்தவன், “நானும் முறையா அறிமுகம் பண்ணிக்கிறேன்.” என்றவன், மீராவிடம்ஹாய்… நான் அர்ஜுன் பைனல் இயர்.” என்று சொல்லி கையை நீட்ட… அவன் செய்கையில் மீராவுக்குச் சிரிப்பு வர, அதை அடக்கி கொண்டு அர்ஜுன் கை நீட்டியதை கவனிக்காதது போல், தண்ணீரை எடுத்து குடித்தாள். ஆனால் அர்ஜுன் கையை எடுக்காமல் நீட்டி கொண்டே இருக்க… வேறு வழியில்லாமல் அவன் கையைப் பற்றி மீரா குலுக்க… பற்றிய கையை விடாமல்நேத்து நீ ரொம்பச் சூப்பரா டான்ஸ் ஆடின…” என்று இயல்பாக அர்ஜுன் ஒருமைக்குத் தாவ… அவனை ஆச்சரியமாகப் பார்த்த மீராஉங்களுக்கு எப்படித் தெரியும், நீங்களும் வந்து இருந்தீங்களா என்ன?” என்றாள் ஆச்சர்யமாக.

ஆமாம்… என் தங்கையும் நேத்து டான்ஸ் ஆடினா.” என்றான்.

மீரா இவன் தங்கையா யாரு என்று யோசிக்க…”நேத்து உன் பக்கத்தில உட்கார்ந்து இருந்தாலே ஆராதனா… அவ தான் என் தங்கை.” என்றதும், மீராவுக்கு நேற்று பார்த்த குடும்பம் பளிச்சென்று நினைவுக்கு வர, “ஆமாம்… ஆராதனாவை நேத்துப் பார்த்தேன். ஆனா… அங்க நீங்க இல்லையே…”

நான் அங்க தான் இருந்தேன். நான் பைக்ல வந்திருந்தேன். அதுதான் நீ என்னைப் பார்க்கலை.”

அர்ஜுன் கொடுத்து வச்சவன், இந்த மாதிரி நல்ல குடும்பம் அவனுக்குக் கிடைக்க என்று நினைத்தவள், அப்போது தான் அர்ஜுன் இன்னும் அவள் கையைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள்.அர்ஜுன் கொஞ்சம் கைய விடுறீங்களா.” என்றதும்,

அர்ஜுன்ஓ… சாரி மறந்திட்டேன்.” என்றவன், அவள் கையைவிட… அப்போது வகுப்பு தொடங்கும் நேரம் என்பதால் மணி அடிக்க… அர்ஜுன் வேறு வழி இல்லாமல் மீராவிடம் விடைபெற்று தன் வகுப்பிற்குக் கிளம்பினான்.

இருவரும் எதிர் எதிர் திசையில் செல்ல, அந்த நடைபாதையின் திருப்பத்தில் நின்று அர்ஜுனும், மீராவும் திரும்பி ஒருவரை ஒருவர் பார்க்க… இருவர் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. இருவரும் மலர்ந்த முகத்துடன் தங்கள் வகுப்புக்கு சென்றனர்.

வகுப்பிற்குள் வந்த மீராவை பார்த்து கீர்த்தனா, “என்னடி உன்னோட முகம் ஜொலிக்குது, இன்னைக்கு அர்ஜுனை பார்த்தியா என்ன?” என்றாள் ஆர்வமாக….

ஆமாம் என்று தலை ஆட்டிய மீரா, “அவங்களே இன்னைக்கு என்கிட்டே வந்து பேசினாங்க.” என்றாள் வெட்கத்துடன்.

என்னது அவங்களா ரொம்ப மரியாதை எல்லாம் தர்ற…நீ அர்ஜுனை லவ் பண்ற தான…”

ஆமாம், நான் அவங்களை லவ் பண்றேன். எனக்கு முதல் தடவை அர்ஜுனை பார்க்கும் போதே, புதுசா பார்க்கிற மாதிரி இல்லை. ரொம்ப க்ளோஸா தான் நினைக்கத் தோனுச்சு. அர்ஜுன் என்னைப் பார்பாங்களா… அவங்களுக்கு என்னைப் பிடிக்குமான்னு பயந்திட்டே இருந்தேன். அதுவும் இல்லாம அவங்க வேற கொஞ்ச நாளா என் மேல கோபமா இருந்தாங்களா… நான் ரொம்பப் பயந்திட்டேன். அர்ஜுனுக்கு என்னைப் பிடிக்கலைன்னு, இப்ப தான் நிம்மதியா இருக்கு.” என்றாள் மீரா மகிழ்ச்சியுடன்.

இனி எங்களை எல்லாம் மறந்திடுவ, அர்ஜுனோட இனிமே கனவில தினமும் டூயட்டா?”

கீத்து… அவங்க இன்னும் என்னை லவ் பண்றேன்னு சொல்லலை.”

ஆமாம் மீரா, எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்ரதையாவே இரு… இந்த ஆம்பளைங்களா நம்ப முடியாது. அர்ஜுன் நான் ப்ரண்டா தான் பழகினேன்னு சொல்லிட்டங்கன்னு வை, வீனா உனக்குத் தான் மன கஷ்டம், பார்த்து நடந்துக்கோ.”

கீர்த்தனா சொன்னதைக் கேட்ட மீராவுக்கு மனதில் கலக்கம் ஏற்பட்டது. அவள் கண் முன்னே அர்ஜுனின் குடும்பம் வந்தது. அவங்க குடும்பத்தில நானும் சேர முடியுமா… அர்ஜுன் என்னை விரும்புவாங்களா என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அங்கே அர்ஜுனிடம் சூர்யா, “அப்புறம் எப்ப உன் லவ்வை மீராட்ட சொல்ல போற?” என்று கேட்க….

இப்ப உடனே சொல்ல போறது இல்லை. முதல்ல அவகிட்ட ப்ரண்டா தான் இருக்கப் போறேன். அப்புறம் மெதுவா சொல்லணும்.” என்றான். 


அன்று மாலை மீரா கல்லூரி முடிந்து அவள் தோழிகளுடன் வந்தவள், க்ரௌண்டில் அர்ஜுன் கிரிகெட் விளையாடி கொண்டிருப்பதைப் பார்த்து மெதுவாக நடந்தாள்.
அர்ஜுன் அவளைப் பார்கிறனா என்று ஓரக்கண்ணால் பார்க்க… அவன் தீவிரமாக விளையாடி கொண்டிருந்ததான். மீரா ஏமாற்றமாக உணர்ந்தாள். நாம தான் ரொம்ப எதிர்பார்த்திட்டமோ… அர்ஜுன் சாதாரணமா தான் காலையில வந்து பேசி இருப்பாங்களோ… அப்புறம் ஏன் கைய விடாம பிடிச்சிருந்தாங்க என்று குழம்பி கொண்டே சென்றாள்.

இங்கே அர்ஜுன் என்ன இவ நம்மைக் கண்டுக்காம போறா… இது சரி இல்லையே என்று நினைத்தான்.

அடுத்து வந்த சில நாட்கள் அர்ஜுனும், மீராவும் பார்த்துக் கொள்ள முடியவில்லை. இருவருக்கும் கல்லூரியில் இன்டர்னல்ஸ் நடந்து கொண்டிருந்தது. மீராவால் அந்த வாரம் ஷட்டில் விளையாடவும் போக முடியவில்லை. அவளுக்குப் பெண்களுக்கு வரும் மாதாந்திர பிரச்சனை அதனால் செல்லவில்லை.

அர்ஜுன் இவ ஏன் வரலை போனவாரம் வேற கோபமா போனா… அப்புறம் காலேஜ்ல நல்லா தானே இருந்தா, ஒருவேளை நான் வருவேன்னு வரலையா…. ஏன் வரலை என்று மனதிற்குள் புலம்பியவன், எரிச்சலை ஜீவாவிடம் காமிக்க…. 


டேய்… உன் ஆளு வரலைன்னு கோபத்த என் மேல காமிக்காத. மீராவுக்கு உடம்பு சரி இல்லையோ என்னவோ….” ஜீவா சொல்ல… அர்ஜுன் அதற்கும் தவிக்க ஆரம்பித்தான். ஒரு வேலை உடம்பு சரி இல்லையோ… ச்ச… போன் நம்பர் கூட இல்லை. முதல்ல அவ நம்பர் வாங்கணும். என்று நினைத்துக் கொண்டான்.

வீட்டிற்கு வந்த அர்ஜுன் ஆரு டான்ஸ் கிளாஸ்க்கு கிளம்புவதைப் பார்த்து. இவளுக்கும் சாயங்காலம் வகுப்பா இருந்தா… இவளை விடுற சாக்குல மீராவை பார்க்கலாம் என்று நினைத்தவன், “நீ காலையிலையே போய்த் தைய தக்கன்னு குதிக்கணுமா… ஏன் சாயங்காலம் போனா ஆகாதா?” அவன் கடுப்புடன் கேட்க…

யாரு நான் தைய தக்கன்னு குதிகிறேன்னா?” ஆரு கோபமாகக் கேட்க….

ஆமா நீ ஆடினது அப்படித் தான் இருந்தது… நீ காலையில பாட்ச் போய்… மதியம் அம்மா என்ன சாப்பாடு செஞ்சிருப்பாங்கன்னு நினைச்சிக்கிட்டே ஒழுங்கா கத்துக்க மாட்றியோ என்னவோ… நீ சாயங்காலம் பாட்ச் போனா… நல்லா பொறுமையா கத்துக்கலாம். அன்னைக்கு ஒரு பொண்ணு நல்லா அடுச்சே, அது கூடச் சாயங்காலம் பாட்ச் தான்.” அர்ஜுன் சொல்ல….

அந்தப் பொண்ணு பேரு என்னடா?…” ஆதி கேட்க…

பேரெல்லாம் நியாபகம் இல்லை. ஆனா அந்தப் பொண்ணு தான் நல்லா ஆடுச்சு.” என்றான் அர்ஜுன்.

ஆதி, ஆரு இருவருக்குமே அர்ஜுன் மீராவை தான் சொல்கிறான் என்று புரிந்தது. ஆனால் அவள் பேரை மறந்தது போல் ஏன் நடிக்கிறான்? என்று தான் புரியவில்லை. சரி விட்டு பிடிப்போம் என்று நினைத்தார்கள்.

காலை உணவு முடிந்ததும் ஆரு, “அர்ஜுன் என்னை டான்ஸ் கிளாஸ்ல விட முடியுமா?” என்று கேட்க…

அர்ஜுன்இல்லை என்னால முடியாது, நீ ஆதியோட போ.” என்றான்.

ஆமா… ஆரு அவனால முடியாது. நீ சாயங்காலம் கிளாஸ்க்கு போனா விடுவான்னா இருக்கும் இல்லை அர்ஜுன்.” என்று ஆதி ஒரு மாதிரி குரலில் கேட்க… உஷாரான அர்ஜுன் ஆரு பாட்ச் மாற மாட்டாள் என்ற நம்பிக்கையில், “அப்பவும் முடியாது.” என்றான் கெத்தாக, அவனுக்குத் தெரியவில்லை அடுத்த வாரமே தான் ஆருவிடம் சென்று கெஞ்சப் போகிறோம் என்று.



Advertisement

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!