Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உனக்குள் என் உயிரே

உனக்குள் என் உயிரே 40 1

இறுதி அத்தியாயம்

இரண்டு வாரங்கள் கழித்து…..

அன்று அர்ஜுன் மீரா திருமண நிச்சயதார்தம். மீராவின் வீடு அழகாக அலங்கரிக்கபட்டிருந்தது. ஹாலின் நடுவில் அர்ஜுன் வீட்டினர் கொண்டு வந்திருந்த இருப்பத்தியொரு தாம்பாள தட்டுக்கள் நிறையச் சீர்வரிசை பொருட்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றி அர்ஜுனின் வீட்டினரும், முக்கியமான சொந்தங்களும் அமர்ந்து இருந்தனர். அதே போல் ராம்நாத்தின் முக்கியமான உறவினர்களும், நண்பர்களும் வந்திருந்தனர்.



Advertisement

பெரியவர்கள் அனைவரும் திருமணத் தேதி பற்றிப் பேச… “ஆறு மாசம் கழிச்சு வைங்க, நான் திரும்ப ஆஸ்திரேலியா போகணும்.” அர்ஜுன் ஒரு குண்டை தூக்கி போட… அதைக் கேட்டு எல்லோரும் அதிர்ந்தனர். கீழே இருந்த அறையில் இருந்த மீராவின் முகம் வாடிவிட்டது.

“என்ன அர்ஜுன் இப்படிச் சொல்ற, நீ திரும்ப ஆஸ்திரேலியா போகனுமா?” வித்யா சந்தேகமாகக் கேட்க…

“ஆமாம் மா… திடிர்னு தான கிளம்பி வந்தேன். அங்க இன்னும் வேலை முடிச்சு குடுக்கலை…. ஆஸ்திரேலியா போயிட்டு வந்ததும், கல்யாணத்தை வச்சுக்கலாம்.” அர்ஜுன் சொல்ல…எல்லோரும் அவனை ஒரு மாதிரி பார்த்தனர். “சரி கல்யாண தேதி அப்புறம் முடிவு பண்ணிப்போம். இப்ப நிச்சயம் பண்ணிடலாம்.” என்றார் ராம்நாத்.

Advertisement

அர்ஜுனின் அருகில் அமர்ந்திருந்த சூர்யா மெதுவாக “எதுக்கு டா இப்ப இப்படி ஒரு ரீல் சுத்துற? நீ வேலைய விட்டுட்ட தான, அப்புறம் ஏன் அப்படிச் சொன்ன?” எனப் புரியாமல் கேட்க…

Advertisement

“நான் வேலைய விட்டது இன்னும் யாருக்கும் தெரியாது. என்னை மாமியாரும், மருமகளும் சேர்ந்து என்ன பாடு படித்தினாங்க. கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் டென்ஷன் ஆகட்டும்.” அர்ஜுன் புன்னகையுடன் சொல்ல… சூர்யாவும் சிரித்துக் கொண்டே “அப்படியா? சரி.” என்றான்.

ஆதி சூர்யாவை பார்த்து, என்ன இப்படிச் சொல்றான் என்று ஜாடையாகக் கேட்க… சூர்யா பொய் சொல்றான் என்று பதிலுக்கு ஜாடை காட்டினான். ஆதி அப்படியா விஷயம் என்று நினைத்தவன், வித்யாவின் காதில் சென்று எதோ சொல்ல… அவர் சரி நான் பார்த்துகிறேன் என்றார்.

வித்யா மீராவை அழைத்து, அவர்கள் வாங்கி வந்த புடவையைக் கொடுத்து உடுத்தி கொண்டு வர சொன்னார். மீரா அர்ஜுனை பார்த்து முறைத்துக் கொண்டே… புடவையை வாங்கிக் கொண்டு சென்றாள். அர்ஜுனுக்கு அவள் எதற்குக் கோபமாக இருக்கிறாள் என்று தெரியுமென்பதால், புன்னகையுடன் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான். வருண் வந்து அர்ஜுனுக்கு அவர்கள் வாங்கி இருந்த உடையைக் கொடுக்க…அர்ஜுனும் உடை மாற்ற சென்றான்.

Advertisement

நிச்சய பத்திரிகை வாசிக்கப்பட்டு, இரு வீட்டினரும் வெற்றிலை பாக்கு மாற்றிக் கொண்டதும். முதலில் அர்ஜுனை ஒரு சேரில் அமர வைத்து, ராம்நாத் அர்ஜுனுக்கு மாலை போட… வருண் அர்ஜுனுக்குச் செயின்னும், ப்ரேஸ்லெட்டும் போட்டுச் சந்தனம், குங்குமம் இட்டுவிட்டான்.

சற்று நேரம் கழித்து மீரா அழகான ரோஜா வண்ண நிறத்தில், உடலெல்லாம் தங்க ஜரிகைகளால் நெய்யப்பட்ட புடவை அணிந்து, கழுத்தில் அடர் ரோஜா மாலை அசைந்தாட எழிலாக நடந்து வந்தாள். அர்ஜுன் தன்னை மறந்து, சுற்றி இருந்தவர்களை மறந்து மீரவையே பார்த்துக் கொண்டிருந்தான். மீரா சென்று அவளுக்குப் போடபட்டிருந்த மனையில் அமர்ந்தாள்.

வித்யா மீராவிற்கு அவர்கள் வாங்கி இருந்த ஆரத்தை போட்டுவிட்டு நலங்கு வைக்க… அவருக்கு அடுத்து மீராவின் பாட்டி, அவள் மாமி, மீனாக்ஷி, பெரியம்மா, ரஞ்சனா, ஆரு என்று வரிசையாகப் பெண்கள் வந்து மீராவிற்கு நலங்கு வைத்தனர். ஏற்கனவே அழகான மீரா… இன்று இன்னும் அழகாக இருந்தாள். அவள் இதழில் எப்போதும் புன்னகை இருந்தது. அர்ஜுன் அவளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நலங்கு வைத்து முடித்ததும், அர்ஜுனையும், மீராவையும் சேர்ந்து நிற்க வைக்க… அர்ஜுன் மீரா இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். அர்ஜுனுக்கு நிச்சயமே எதோ கல்யாணம் போல் தான் இருந்தது. தாலி ஒன்னு தான் பாக்கி, அதையும் இன்னைக்கே கட்டி இருக்கலாமோ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

பெங்களூரில் இருந்து வந்த பிறகு இரு வீட்டாரும் பேசி நிச்சயத்துக்கு ஏற்பாடு செய்தனர். “நாங்க ஆதிக்கும், ஆருவுக்கும் எங்க முறைப்படி கல்யாணம் பண்ணி பார்த்திட்டோம். அதனால அர்ஜுன், மீரா கல்யாணம் உங்க முறைப்படியே நடக்கட்டும். அதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை.” என்று வித்யா முழு மனதாகச் சொல்லிவிட்டார். அதனால் மீராவின் குடும்ப வழக்கப்படி நிச்சயம் நடந்தது.

முதலில் மண்டபத்தில் தான் நிச்சயம் வைப்பதாக இருந்தது. ஆனால் அவர்கள் வீடு கட்டிய பிறகு வரும் முதல் விசேஷம், அதுவும் வீடே மண்டபம் போல் தான் இருக்கும் என்பதால்… ராம்நாத் தங்கள் வீட்டிலேயே நிச்சயத்தை வைத்தார். வெளியே தோட்டத்தில் ஷாமியானா போட்டு அங்கே மதிய விருந்து பரிமாறினர்.

மீராவின் அம்மா வரவில்லை. ஆனால் அவளின் தாத்தா, பாட்டி மற்றும் தாய் மாமன் குடும்பத்துடன் வந்திருந்தனர். மீனாட்சியின் பக்க உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர்.
அதே போல் அர்ஜுனின் வீட்டில் அவர்கள் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களும். ரஞ்சனாவின் பெற்றோரும், அவர்களோடு சஞ்சனா, தினேஷு மற்றும் அவர்களின் குட்டி பையன் வினித்தும் வந்திருந்தனர். சஞ்சனா எல்லோரோடும் கலகலப்பாகப் பழகினாள். நிச்சயம் முடிந்ததும் உறவினர்கள் அனைவரும் சாப்பிட சென்றனர்.

மீரா அர்ஜுன் வீட்டினரை அழைத்துக் கொண்டு அவளது அறைக்குச் சென்றாள். அர்ஜுன் மீரவையே பார்த்துக் கொண்டிருந்தான். அதைக் கவனித்த வித்யா, “ம்ம்… என்ன பண்றது? நான் இன்னும் மூன்னு மாசத்துல கல்யாணத்தை முடிச்சிடலாம்னு நினைச்சேன். ஆனா… அர்ஜுன் ஆஸ்திரேலியா போகனுமாமே, ஆரு வேற கர்ப்பமா இருக்கா.. இவன் ஆஸ்திரேலியால இருந்து வரும் போது….அவளுக்கு எழு மாசம் நடக்கும், நான் அவளைப் பார்ப்பேனா… இவன் கல்யாண வேலை பார்ப்பேனா… அதனால பேசமா கல்யாணத்தை ஒரு வருஷம் கழிச்சு வைக்க வேண்டியது தான்.” என்று வேண்டுமென்றே சொல்ல…

அர்ஜுனின் பெரியம்மா காயத்திரியும், “ஆமாம்… ஆரு பிரசவம் முடிஞ்சே கல்யாணத்தை வை.” என்றார். அவர்கள் பேசுவதைக் கேட்ட அர்ஜுன், மீரா இருவரின் முகமும் மாறியது. அதுவும் அர்ஜுன் முகம் போன போக்கை பார்த்து, வந்த சிரிப்பை சூர்யாவும் ஆதியும் அடக்கி கொண்டு இருந்தனர்.

“ஏன் மா உங்களுக்கு இந்தக் கொலைவெறி?” அர்ஜுன் வித்யாவை பார்த்து கேட்க…

“நீ தான டா ஆஸ்திரேலியா போகப் போறேன்னு சொன்ன… நீ ஆறு மாசம் இல்ல… ஒரு வருஷம் கழிச்சு பொறுமையா வா…” வித்யா அக்கறை இல்லாதவர் போல் சொல்ல…அதை கேட்ட அர்ஜுன் டென்ஷன் ஆகிவிட்டான்.

“அம்மா நான் ஆஸ்திரேலியா எல்லாம் போகலை…இங்க இருந்தே வேலை பார்க்கிறேன். நீங்க சீக்கிரம் கல்யாணத்தை வைங்க.”

“அதெல்லாம் வேண்டாம், நீ ஆஸ்திரேலியா போயிட்டே வா… ஆருவுக்குக் குழந்தை பிறந்த பிறகே, உங்க கல்யாணத்தை வச்சுப்போம். அப்ப தான் எனக்கு வேலை பார்க்க ஈஸியா இருக்கும்.” வித்யா பிடி கொடுக்காமல் பேச….

அர்ஜுன் எழுந்து வித்யாவின் காலில் ஷாஷ்ட்டாங்கமாக விழுந்தவன், “அம்மா தெய்வமே…. தெரியாம உங்ககிட்ட வாய்ய விட்டுட்டேன். நான் ஆஸ்திரேலியாவெல்லாம் போக முடியாது. ஏன்னா நான் வேலைய விட்டுட்டேன். சும்மா உங்ககிட்ட பந்தாக்காக அப்படிச் சொன்னேன். நான் உங்ககிட்ட என்னோட கெத்த காட்ட நினைச்சது தப்பு தான், மன்னிச்சிடுங்க. என்னை இப்படிப் பழி வாங்கதீங்க மா ப்ளீஸ்.” என்றான்.

வித்யா வந்த சிரிப்பை அடக்கியவர், “அப்படி வா வழிக்கு, வெட்டி பந்தா காட்ற வேலையெல்லாம் இன்னையோட விட்டுட்டு…இப்ப எழுந்துக்கோ..” என்றவர், “மீராவோட அப்பா சொன்ன தேதியிலேயே கல்யாணத்தை வச்சுடுவோம். அன்னைக்கு மண்டபமும் இருக்காம்.” என்று ஒரு பெரிய மண்டபத்தின் பெயரை சொன்னார். அர்ஜுன் அவ்வளவு பெரிய மண்டபமா…என்று யோசிக்க… கணேசன் நாமும் பாதிப் பணம் குடுத்திடுவோம் என்றார்.

எல்லோரும் சாப்பிட செல்ல… அர்ஜுன் மீரா இருவரிடமும் “நீங்க ரெண்டு பேரும் தனியா பேசிட்டு, பத்து நிமிஷத்துல சாப்பிட வாங்க.” என வித்யா சொல்ல… “வெறும் பத்து நிமிஷமா…” அர்ஜுன் இழுக்க… வித்யா அவனைப் பார்த்து முறைத்தவர், “நீ ஒன்னும் பேச வேண்டாம். எங்களோட சாப்பிட வா…” என்றார். அர்ஜுன் வேகமாக “இல்லையில்லை… பத்து நிமிஷம் தாராளமா போதும்.” என்றவன், அவர்கள் சென்றதும் அறைக்கதவை சாற்றிவிட்டு மீராவிடம் சென்றான்.

மீரா ஜன்னல் அருகில் நின்று கொண்டிருந்தாள். அர்ஜுன் அவளருகில் சென்று, அவள் கண்களோடு கண்கள் கலந்து, “இந்த அலங்காரத்தில ரொம்ப அழகா இருக்க மீரா” என்றவன், அவளைத் தன்னிடம் இழுக்க…“வேண்டாம் அர்ஜுன், என் நெத்தியில கன்னத்தில இருக்கிற சந்தனம், குங்குமம் எல்லாம் உங்க மேல ஓட்டும்.” மீரா சொல்ல.. “அப்ப ஒன்னும் பண்ண முடியாதா…” அர்ஜுன் ஏக்கமாகக் கேட்க… மீரா சிரித்துக் கொண்டே ஆமாம் என்றாள்.

அர்ஜுன் மீராவை அழைத்துக் கொண்டு சென்று அங்கிருந்த சோபாவில், அவளோடு நெருங்கி அமர்ந்தவன் “இன்னைக்கு நான் ரொம்ப…ரொம்பச் சந்தோஷமா இருக்கேன் மீரா…” என்று சொல்ல… மீரா “நானும் தான்.” என்றவள் தொடர்ந்து “என்னால இன்னும் நம்ப முடியலை. நிஜமாவே நமக்கு நிச்சயம் ஆகிடுச்சா…” என்று கேட்க… அர்ஜுன் அவள் இடையில் நறுக்கென்று கிள்ள…மீரா வலியில் துள்ளினாள்.

அர்ஜுன் “சாரி மீரா, லேசா கிள்ளனும்னு தான் நினைச்சேன், தெரியாம நறுக்குன்னு கிள்ளிட்டேன்.” என்றவன், இது தான் சாக்கு என்ற அவள் இடையை வருடி விட…. மீரா அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே “போதும் கையை எடுக்கிறீங்களா…” என்று கேட்க… அர்ஜுன் மீராவை எழுப்பித் தன் முன்னே நிற்க வைத்தவன், அவள் எதற்கு என்று யோசிக்கும் முன்பே… அவள் சேலையை லேசாக விலக்கி, அவள் வயிற்றில் அழுத்தமாக முத்தமிட்டிருந்தான்.

மீராவிற்குத் தலை முதல் கால் வரை எதோ ஜிவ்வென்று இருக்க… அவள் சமாளித்துக் கொண்டு அர்ஜுனை பார்த்து முறைக்க… அவன் அழகாகச் சிரித்தான். மீராவிற்கு அவனிடம் கோபத்தைக் காட்ட முடியவில்லை. அவள் தன் முகத்தில் தோன்றும் புன்னகையைக் கஷ்ட்டப்பட்டு அடக்கி, “என்னதிது?” என்று மிரட்டலாகக் கேட்க…

அர்ஜுன் “இன்னைக்கு ஸ்பெஷல் டே தான… அது தான் ஸ்பெஷல் முத்தம்.” என்று சொல்ல… மீரா முத்தம் குடுக்கிற இடத்தைப் பாரு என்று முணங்கி கொண்டே…. அவள் புடவையை இழுத்து விட்டவள், அர்ஜுனை பார்க்க….அவன் அவளைப் பார்த்துக் கண் சிமிட்டி “இன்னொன்னு வேணுமா…” என்று கேட்க… மீரா “அடங்க மாட்டீங்களா நீங்க… தனியா இருந்தா… இப்படித் தான் எதாவது செய்வீங்க, வாங்க கீழ போகலாம்.” என்று அவன் கை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்.

அர்ஜுன் “இன்னும் எத்தனை நாள் மேடம் தப்பிப்பீங்க, என்னோட நீங்க தனியா இருந்து தான ஆகணும்.” என்று சொல்லியபடி அவளுடன் செல்ல…மீரா முகம் சிவந்தாள்.

மூன்று மாதங்கள் தான் திருமணத்திற்கு இருந்தது. அதனால் எல்லோரும் கல்யாண வேளையில் பிஸியாக இருந்தனர். மீராவிற்குத் தேவையான நகைகள், புடவைகள் எல்லாம் மீனாக்ஷியும், மீராவும் சேர்ந்து தேர்வு செய்தனர். ராம்நாத்திர்க்குப் பணப் பலமும், ஆள் பலமும் இருந்ததால்…. அவர் இருந்த இடத்தில் இருந்து காரியம் சாதித்தார்.

மீரா “எனக்கு வைர நகைகள் வேண்டாம்.” என்று சொல்ல… மீனாக்ஷி அவளை ஆச்சர்யமாகப் பார்த்தவர், “மீரா… நம்ம கல்யாணத்துல வைர நகைகள் போட தான் வேணும். நீ ஏன் வேண்டாம்னு சொல்ற”..” என்று கேட்க…மீரா வித்யா சொன்னதைச் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்.

மீனாக்ஷி அவள் எதோ காரணமாகத் தான் சொல்கிறாள் என்பதை உணர்ந்தவர், “சரி… உனக்கு இப்ப போட்டுக்க இஷ்ட்டம் இல்லைனா… உன்னோட லாக்கர்ல பத்திரமா வை, உனக்கு எப்ப தேவையோ அப்ப எடுத்துக்கோ… உனக்கு முறைப்படி நாங்க செய்யறத, நீ வேண்டாம்னு சொல்லாத…” என்று சொல்ல…மீராவும் சரி என்றாள்.

ராம்நாத் ஒருநாள் காலை மீராவின் அறைக்கு வந்து அவளிடம் சில பத்திரங்களைக் கொடுக்க… அதை மீரா வாங்கிப் படித்துப் பார்க்க… அது அவளுக்கான சொத்துப் பத்திரங்கள். மீராவிற்கு அவர் தனது தொழில், வீடு இன்னும் பல சொத்துக்களில் பங்கை கொடுத்திருந்தார். மீரா “எதுக்குப் பா இதெல்லாம்?” என்று கேட்க… “நீ இந்த வீட்டுக்கு எப்பவும் உரிமையோட வந்து போகணும் மீரா… நான் உன்னோட சித்திக்கும் தனியா பங்கு கொடுத்திருக்கேன். அதனால அவள் என்ன சொல்வாளோன்னு கவலைபடாதே….” என்றார்.

“அர்ஜுன் வீட்ல இதையெல்லாம் எதிர்பார்க்க மாட்டங்க.” என்று மீரா சொல்ல… “தெரியும் டா… இருந்தாலும், நான் உனக்குச் செய்யறத செய்யணும் இல்ல….உனக்கு வேறேதுவும் வேணும்னா கேளு…” என்று ராம்நாத் சொல்ல… மீரா முகம் மாறினாள். அவள் முகத்தில் தெரிந்த வேதனையைப் பார்த்த ராம்நாத் “உங்க அம்மா நிச்சயத்துக்கு வரலைன்னு பீல் பண்றியா மீரா…” என்று கேட்க… மீரா மெளனமாக இருந்தாள். அவள் கண்கள் கலங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!