Skip to content
Post Views: 614
அத்தியாயம்: 4
“நேத்து அவரு கொண்டு வந்த ஜாதகத்துல உனக்கு ஏத்த பொருத்தம் வந்துச்சோ! இல்லயோ! உந்தம்பிக்கு ஏத்தா மாதிரி நாலஞ்சி வந்திருக்கு. நீ வேணா பாரு உனக்கு முன்னாடியே அவனுக்கு முடிஞ்சிடும். தம்பி பொண்டாட்டின்னு ஒருத்தி வீடு வந்து சேருற யோகத்துலயாது உனக்குக் கல்யாணங் காட்சி நடக்குதான்னு பாக்குறேன்.” என்று விட்டு இடிஇடியென சிரிக்க, அவளுக்கு இருக்கும் பொறுமை ஏற்றம் கண்டது.
Advertisement
‘எது! காலேஜ் படிக்கிற பால்வாடி பையனுக்கு பொண்ணு பாத்திட்டு திரியுதா எங்கம்மா!’ என்று சுருதி பொறும,
“விளக்குத் தூண் பக்கத்துல, நாலடுக்கு மாடி வச்சத் துணிக் கடை உங்களோடது தான மைனி?” என்ற கேள்வி பின்னால் இருந்து வந்தது. இருவரும் எட்டிப் பார்க்க, எதிர்வீட்டு பெண் அதான் சுருதியின் அக்காவும், முன்னாள் தோழியுமான ரிதன்யா நின்று கொண்டிருந்தாள்.
Advertisement
Advertisement
அவளைக் கண்டதும் ஒரு நொடி மதினியின் முகம் சுருங்கியது. இருக்காத பின்ன, ரிதன்யாவிற்காக விக்ரமைத் தேடிப் பிடித்துக் கூட்டி வந்தது இந்த மதினி தான்.
விவாகரத்துச் செய்யப் போகிறேன் என்றதும், ‘அதெல்லாம் தப்பு. நம்ம கலாச்சாரத்த கெடுக்குற விசயம். நல்ல குடும்பப் பொண்ணு அழகு, புருஷன் அனுசரிச்சி வாழ்றது தான்.’ என்ற அறிவுரைகளைத் தூக்கிக் கொண்டு வந்தவரை, ரிதன்யா அடிக்காத குறையாக வார்த்தைகளால் விளாசி அனுப்பி வைத்தாள். அதனால் பயம் உண்டு அவருக்கு.
Advertisement
“நாலு மாடிலயும் துணி தான் வச்சி விக்கிறீங்களா! இல்ல திருமண தகவல்கள் மையத்துக்குன்னு ஒரு மாடிய ஒதுக்கிருக்கீங்களா? உங்க வீட்டுக்காரருக்கு வருமானம் பத்தலயா! துணிக்கட நட்டத்துல போகுது போல. அதான் விக்கிறதுக்கு வேற ஒன்ன ஏற்பாடு பண்ணிட்டு இருக்கீங்க.” என நக்கலாகப் பேசியவள்,
“ஒரு ஜாதகத்துக்கு எவ்ளோ வாங்குறீங்க மைனி. ₹500? ₹1000?. இனி அது தான் உங்க வீட்டு அடுப்பெரிக்க உதவப் போகுதா!.” என்றவளுக்குள் ஏகத்திற்கும் கடுப்பு.
மழையில் முளைக்கும் காளான்களைப் போல் வீதிக்கு வீதி முளைத்திருக்கும் திருமணத் தகவல் மையத்தையும், ஜாதக கட்டுகளுடன் வளம் வரும் தரகர்களையும் அறவே வெறுத்தாள் ரிதன்யா. வெறுப்பது அவர்களை மட்டுமல்ல கல்யாணம் என்ற ஒன்றையும் தான். சந்தையின் ஆடு மாடை விற்பது போல் பேரம் பேசி நடத்தப்படும் திருமணத்தை, கலாச்சாரம் என்ற போர்வைக்குள் கட்டாயப்படுத்தி அடைப்பது ரிதன்யாவிற்கு பிடித்தமில்லை.
“உங்க வாய்த்திறமையக் காட்டி கல்யாணமாகாத பொண்ணுங்களோட கல்யாணக் கனவ நிறைவேத்தி வைக்கிற சேவை செய்றதுல ரொம்ப சந்தோஷம். ஆனா நீங்க வெற்றிகரமான கல்யாணத் தரகரா மாறுறதுக்காக என்னை மாதிரியான பொண்ணுங்களோட வாழ்க்கைய பலி குடுக்கக் கூடாது. கல்யாண வரன்கள கூவி கூவி விக்காதீங்க. தேவைவந்தா கூப்பிடுவோம். அதுவர…” என்றவள், ‘திருவாயை மூடிக் கொண்டு இரும்.’ என்பதுபோல் சைகை செய்ய, மதினி விரைந்து அவ்விடத்தைக் காலி செய்தார்.
காரணம், அவளிடம் வாங்கிக் கட்டிய அனுபவம் இருக்கிறதே அவருக்கு.
அதனால் இப்போதும் அவர் குடுகுடுவென, தப்பித்தோம் பிழைத்தோம் என்று பாடிக் கொண்டே நடக்க, சுருதி சத்தமாகச் சிரித்தாள்.
“ஒரு சக்ரா கோல்டு.” என்று ஐந்து ரூபாய் நாணயத்தை மேஜையில் வைத்து சுருதியின் புறம் தள்ள,
“இவளா! என் கடைக்கு வந்திருக்கிறாள்!!” என்ற ஆச்சர்ய பாவனை பார்த்தவளிடம், புருவம் உயர்த்தி, கண்களால் காசைக் காட்டினாள் ரிதன்யா.
“ரொம்ப நன்றி ரிது. என்னைக் காப்பாத்திட்ட. இனி அடுத்த வர்ஷம் தான் இதோட கண்ணுல சிக்குவேன்.” என்றவளைச் சற்று கோபமாகவே முறைத்தாள்.
‘ஏன் உனக்கு வாயில்லயா? பேசுறவங்களுக்குப் பதில் சொல்லத் தெரியாத உனக்கு. வயசு ஏறுனதும் வாயைக் கழட்டி வச்சிட்டியோ!’ என்பது தான் ரிதன்யாவின் பார்வை.
ஆனால் அதைச் சொல்லவில்லை. சுருதியுடன் பேசுவதை நிறுத்தி பதினோரு ஆண்டுகள் முடிந்து விட்டன. ஒரே பள்ளியில் தான் இருவரும் படித்தனர். சைக்கிளில் ஒன்றாவே சென்று ஒன்றாகவே ஊரை வளம் வருவர்.
அதென்ன ஒரு காலம்.
குழாயடியில் கூந்தலைப் பிடித்து சண்டையிடுவது போல், பள்ளியில் வைத்து இருவரும் முட்டி மோதி, அதிகாரப்பூர்வமாக விரோதிகள் ஆனவர்கள். கூடவே அது குடும்பச் சண்டையாகிப் போக, இவளின் வீட்டில் அவளுடனும், அவளின் வீட்டில் இவளுடனும் இனி உறவாடக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டனர் அவள்களின் வீட்டாள்கள்.
அதன் பிறகு இருவரும் பார்த்துக் கொள்வதே அபூர்வம் என்றாகிப் போனது. அத்தோடு ரிதன்யாவிற்கு சுருதி செய்த பாதகச் செயல் தெரியவர, சுருதியை மொத்தமாக ஒதுக்கி விட்டாள்.
“வயசாகிட்டா மெச்சூரிட்டி வந்திடுது. அது யாருக்கிட்டயும் வெட்டியா விளக்கம் கொடுக்கன்னு வாய திறக்க விட மாட்டேங்கிது.” என முணுமுணுத்தவள்,
“டீத் தூள் மட்டும் போதுமா?” என்றபடி வேகவேகமாக பாக்கெட்டை எடுத்து நீட்டி விட்டு கேட்க,
“போதும்…” என்றவள் திரும்பும் முன்,
“ஒட்டுக் கேக்கணும்னு நினைக்கல. நேத்து உங்க வீட்டுல இருந்து சத்தம் வந்தது. பெரிய சத்தம். என்ன பிரச்சனைனு ஓரளவுக்குப் புரிஞ்சது. இப்ப நீ எனக்கு உதவுன மாதிரி நானும் உனக்கு உதவி செய்ய முடியும்.” என்க,
“என்ன உதவ முடியும்?” என்றாள் புருவ உயர்வுடன்.
“எதுனாலும் செய்ய ரெடியா இருக்கேன் ரிது. உனக்காக…” என்று வேகமாகச் சொல்ல,
“நீ ஏற்கனவே எனக்குச் செஞ்ச உதவிக்கான பலன காலவறை இல்லாம இப்ப வரை அனுபவிச்சிட்டு இருக்கேன். இதுல இன்னொன்னா!!” என்று கத்தியாய்ப் புருவங்களை மாற்றி மிரட்டி, சுருதியைக் கோபமாக ஏற இறங்க பார்த்து விட்டு நடக்க,
“அப்ப நீ பண்ணு. எனக்கு உதவி வேண்டியதிருக்கு. ப்ளீஸ்… நீயும் நானும் ஒரு காலத்துல தோழிகள். அந்த உரிமைல கேக்குறேன்.” என்றவளைப் புருவ முடிச்சுடன் பார்த்தாள்.
“எங்கம்மாக்கு எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணுங்கிற ஐடியவே இல்லை. நானும் வாய்விட்டு கேட்டுப் பாத்திட்டேன். ஆனா அவங்க, அவங்களுக்கு வர்ற வருமானம் காணாமப் போய்டும்னு பயம். ஜாதகத்தையும் ஜோசியத்தையும் காரணமாக் காட்டி கூடவே வச்சுக்கணும்னு நினைக்கிறாங்க. அதனால தான் இந்த ஆல் இண்டியா ரேடியோ மாதிரியான ஊர் வம்பு பேசுற பொம்பளைங்க வாய்க்கு அவலாக மாறி அரைபட்டுட்டு இருக்கேன்.”
“ம்ச்… எனக்கு வேலை இருக்கு. என்ன உதவி வேணும்னு சுருக்கமா சொல்ல முடியும்னா சொல்லு. இல்லன்னா ஆள விடு.” என்றதும், சுருதியின் கண்கள் மின்னின.
‘அவள் உனக்கு உதவி செய்கிறேன் என்று வாக்குக் கொடுக்கவில்லை. அதற்குள் சந்தோஷமா!’ என்று கேட்ட மனத்திடம், ‘நான் அவளின் வாழ்க்கையில் செய்து வைத்த குட்டி கலாட்டாவிற்கு, அவள் உதவி என்னவென்று கேட்க முன்வந்ததே பெரியது. அதனால் முளைத்த ஆனந்தக் கண்ணீர்.’ என்று ரிதன்யாவின் மேன்மையைப் பற்றி நினைவு படுத்தினாள்.
“ரிதும்மா, என்னோட மேக்ஸ் புக்க காணும்…” என்ற சரிகாவின் குரல் வரவும்,
“அங்க தான் கட்டில இருக்கும். இதோ வர்றேன்.” என்று கத்திய ரிதன்யா, ‘சொல்லப் போகிறாயா இல்லையா?’ என்பது போல் சுருதியைப் பார்க்க,
“எனக்குக் கல்யாணம் பண்ணிக்கணும். மேட்ரிமேனில என்னோட பேர ரிஜிஸ்டர் பண்ணி நானே எனக்குப் பிடிச்ச மாதிரி பையனத் தேடிக்கலாம்னு இருக்கேன். நீயும் கூட வந்தா…” என இழுக்க,
“ஏன்! இங்க இருந்து சென்னை வரைக்கும் தனியா போய்ட்டு தனியா வரத் தெரிஞ்ச தைரியசாலிக்கு, ஒரு திருமண மையத்துக்கு போக பயம்மா இருக்கா! யாரு நம்புவா இத?” என்க,
“நான் பயம்னு சொன்னேனா!” என்று ரோசமாகத் தொடங்கிய சுருதி,
“நீ கூட வந்தா நல்லா இருக்கும்னு தான் சொல்றேன். உனக்கு அனுபவம் இருக்கு. பசங்கள கண்ணால பாத்ததுமே ஸ்கேன் பண்ணி விக்ரம் மாதிரியான ஆளாக இல்லையான்னு அவனுங்களோட கேரக்டர சொல்லிடுவ. அத்தோட கல்யாணம் பண்ணிக்கணும்னா என்னென்ன விசயங்கள் கவனிக்கணும்னு அனுபவசாலியான உனக்கு நல்லாவே தெரியும். அதுனால உங்கையால ஃபார்ம்ம பில் பண்ணிக் கொடுத்தா… ராசியா இருக்கும்….” என்று சொல்லி முடிக்கும் முன் காளியாக முகம் சிவந்தது ரிதன்யாவிற்கு.
“என்ன விளையாடுறியா? என் ராசியப் பத்தி தான் ஊருக்கே தெரியும். இப்ப நீயும் அதைச் சொல்லி என்னைக் கடுப்பேத்தப் பாக்குறியா? உன்ன விட அந்த சசி மைனியே தேவலை டி…” என்று பொரிந்து தள்ளிவிட்டு வீட்டிற்குள் விரைந்தாள்.
ரிதன்யா குளித்து சீருடைச் சேலை அணிந்து, மகளை ஏற்றிக் கொண்டு, ஸ்கூட்டில் கடந்து செல்லும் வரை சுருதி அவளையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.
நேரம் பத்தைத் தாண்டி சென்று விட்டது. வீட்டிற்குள் கொதித்துக் கொண்டிருந்த குழம்பின் வாசம் விருந்து தயார் என்றது. ஆனால் சாப்பிட அழைப்பு தான் வரவில்லை. பசி வேறு வயிற்றைக் கிள்ள, வேகமாக வீட்டிற்குள் சென்றாள்.
“ஏண்டி கடைய விட்டுட்டு வந்த?” என்றபடி மருமகனுக்குப் பரிமாறிய தாயை முறைக்க மட்டும் தான் முடிந்தது.
‘எங்காசுல எல்லாரும் உக்காந்து திங்கும் போது. நான் உங்காம கிடக்கணுமா!’ என்று நினைத்தபடி, சமையலறைக்குள் சென்றவள், தட்டில் வேண்டியதை எடுத்துக் கொண்டு மீண்டும் கடை நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
உச்சுப் பொழுது வரை ஃபோனை நோண்டிய படி கடையில் அவள் இருக்க, நிழலாடியது அவளுக்கு முன். யார் என்று நிமிர்ந்து பார்த்தாள்.
ரிதன்யா தான் நின்று கொண்டிருந்தாள்.
“நீயா… வேலை நேரத்துல வந்திருக்க! ஏன்? நார்மல் சேலைல இருக்க? காலைல யுனிபாம்லேல போன!” என்று வரிசையாகக் கேட்க,
“முனிச்சாலைல ஒரு சென்டர் இருக்கு. இப்ப போகலாம். வர்றியா?” என்க,
“என்ன?”
“மேட்ரிமோனி செண்டருக்கு வர்றீயா?ன்னு கேட்டேன்.”
“இப்பவா?”
“ம்… இப்பத்தான்.”
“ஆனா நான் குளிக்கலயே!” என்று பாலாய்ப் போயிருந்த தன் உடையைச் சுட்டிக்காட்ட,
“அஞ்சி நிமிஷம் போதாதா உனக்கு!” என்று கேட்டபடி சுருதியின் வீட்டு வாசலில் அமர்ந்து கொள்ள, வேகமாக சென்று தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தாள்.
“எங்கே?” என்ற மனோகரியைக் கண்டு கொள்ளாது தன் ஜாதகக் குறிப்புகளை எடுத்துக் கொண்டு அகன்றார்.
சைக்கிளில் ரிதன்யாவின் பின்னால் அமர்ந்து பயணம் செய்திருக்கிறாள் தான். ஆனால், ஸ்கூட்டியில் இது தான் முதல் முறை. அத்தோட எவ்வித பொறுப்புக்களையும் தூக்கிச் சுமக்காது, சுகமாய், ஒருவர் பின்னால் நிதானமாக, எவ்வித கவலையும் இன்றி பயணம் செல்வது பிடித்திருந்தது. வெகுவாக ரசித்தாள் சுருதி.
துப்பட்டாவைக் காற்றில் பறக்க விட்டு, கைகள் இரண்டையும் நீட்டிக் கொண்டு வர அவளுக்கும் ஆசைதான். ஆனால் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் அவ்வாறு செய்தால் பொதுமக்களைத் தொந்தரவு செய்கிறாள் என்று தூக்கி உள்ளே வைத்து விடுவர். ஆதலால் அடக்கி வாசித்தாள்.
ஐந்தாறு சிக்னல்களைத் தாண்டி, இருவரும் சில நிமிடங்களில் அந்தத் திருமணத் தரகு மையத்தைச் சென்றடைந்தனர்.
சிவப்பு புடவை கட்டிய பெண் மெழுகு சிலை ஒன்று, “உங்களின் தேவை என்ன? ” என்று கனிவுடன் ஆங்கிலத்தில் உருக,
“மணமகன் தேவை. பையன் நல்லா கலரா இருக்கணும். சுண்டுனா ரத்தம் வர்ற மாதிரின்னு சொல்வாங்கள்ல. அந்த மாதிரி. கை நிறைய சம்பாதிக்கணும். எத்தன பவுன் கேட்டாலும் குடுக்க ரெடியாத்தான் இருக்கோம். அதுனால 80 பவுன் போட்டுக்கங்க. ம்ச்… வேண்டாம் 100 போடுங்க. அப்பத்தான் பெரிய இடமா அமையும். பையன் வயசு 33 ல இருந்து 37 க்குள்ள பாருங்க. ரொம்ப வயசு வித்தியாசம்ன்னாலும் வேண்டாம். கம்மினாலும் வேண்டாம். அந்த மாதிரி ஆளுங்களுக்கு வாழ்க்கையப் புரிய வைக்கிறது ரொம்பக் கஷ்டம்.
அம்மா, அப்பா, உடன் பிறப்புங்க நச்சரிப்பு மாதிரி எந்தத் தொல்லையும் இருக்கக் கூடாது. இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்பறம் அவங்கள விட்டுட்டு தனிக் குடித்தனம் வந்திடணும். இந்தமாதிரி நல்லதா நாலஞ்ச எடுத்துக் காட்டுங்க.” என்ற மாடுலேஷனில் கேட்டாள் ரிதன்யா.
‘காட்டவா! நாம என்ன துணிக்கடைக்கா வந்திருக்கோம். இந்த கலர்ல இந்த மாடல்ல எடுத்துப் போடுங்கன்னு சொல்றா.’ என்று நினைத்த சுருதி அமைதியாகத் தான் இருந்தாள்.
ஏனெனில், “அங்க நான் மட்டும் தான் பேசுவேன். நீ பேசவேக் கூடாது.” என்று மிரட்டித் தான் கூட்டி வந்திருந்தாள். அதுவே சொல்லியது, ‘இன்னைக்கி சம்பவம் இருக்கு.’ என்று. ஏதோ திட்டத்துடன் தான் தன்னை அழைத்துக் கொண்டு வந்துள்ளாள் என்பது புரிய, வேடிக்கை மட்டுமே பார்த்தாள்.
“என் தாய் ப்ளாக் அண்டு வெய்ட் மனோகரியோட யூத் வர்ஷன... கலர் ஜெராக்ஸ் போட்டு கூடவே கூட்டீட்டு வந்திருக்கேன். இனி மாப்ள கிடைச்சா மாதிரித்தான்.” என்று எண்ணிய சுருதி, இருவரின் வாயையும் மாறி மாறி பார்த்தாள்.
“இதெல்லாம் பையன் எப்படி இருக்கணுங்கிறதுக்கான கண்டிசன். கல்யாணம் பண்ணணுமா வேண்டாமாங்கிற நேர்ல பார்த்து தான் முடிவு பண்ண முடியும். அதுனால பையங்கூட டேட்டிங் மாதிரி ஒரு நாள் கூடவே இருந்து பழகி பாக்கணும். அப்பத்தான் அவனோட பிகேவியர், கேரக்டர் எல்லாத்தையும் முடிவு பண்ண முடியும்.” என்க, வரவேற்பார் இருவரையும் விசித்திரமாக பார்த்தார்.
பின், “ஓகே மேம்… நான் நோட் பண்ணிக்கிட்டேன். நீங்க கல்யாணப் பொண்ணோட டீடெயில்ஸ் சொல்லுங்க.” என்றபடி கணினியில் பதியத் தொடங்கினார்.
அவளும் கூறினாள்…
“பொண்ணு பேரு ரிதன்யா. வயசு 31. ஏற்கனவே கல்யாணமாகி விவாகரத்தும் ஆயிடுச்சி. பத்து வயசுல பொண்ணு இருக்கா.” என்ற போது சுருதி அதிர்ந்து முழித்தாள். அவளைப் பார்த்து இமை மூடித் திறந்தவள்,
“நான் ஒரு வர்ஷத்துக்கான ப்ளாட்டினம் ப்ரிமியம் ப்ளான் எடுத்துக்கிறேன். ஏன்னா அதுல தான் ப்ரஃபைல்ல எல்லாருக்கும் ஹைலைட் பண்ணிக் காட்டுவீங்க. நிறைய பேரோட பார்வைக்கு ப்ரஃபைல் போய்ச்சேரும். நான் சொன்ன எல்லா குவாளிபிகேஷனையும் பூர்த்தி பண்ற மாதிரியான பையன் இருந்தா இந்த நம்பருக்கு கால் பண்ணச் சொல்லுங்க. டேட்டிங், மிட்டிங் எங்க? எப்பன்னு விரிவாச் சொல்வாங்க.” என்றவள் எந்த இடத்திலும் தன் கைபேசி எண்ணைத் தராது தனபாலனின் எண்ணைத் தந்து விட்டு திரும்ப, சுருதி முகத்தில் ஒரு மந்தகாசமான புன்னகை.
‘சரியான ப்ளான். கூடப்பிறந்த தங்கச்சின்னு பாக்காம என்னென்ன பேசுனான். இனி ஒவ்வொருத்தனும் இவன ஃபோன் போட்டு கொல்லணும். அவன்களுக்குப் பதில் சொல்லிச் சொல்லியே பைத்தியம் பிடிச்சி திரியட்டும்.’ என்று சுருதி மனத்திற்குள் நினைத்துக் கொண்டாள்.
வந்த காரியத்தை இனிதே முடித்து விட்ட திருப்தியில் வெளியே வந்த ரிதன்யா, “எனக்கு நீ உதவி பண்றதா சொன்னேல! ஒன்னில்ல மூணு உதவி வேணும். நான் வச்சிருக்குற குண்டு வெடிக்க ரொம்ப நாள் ஆகாது. சீக்கிரமே நான் வீட்ட விட்டு வெளியேறுற மாதிரியான சூழ்நிலை வரலாம். அதுக்குள்ள…”
“உனக்கு ஒரு வேலை, சரிகாக்கு ஸ்கூல், ரெண்டு பேருக்கும் தங்க வீடு. கரெக்ட்டா?” என்றாள் சுருதி குசியாக.
ஆம் எனத் தலையை அசைத்தவள்,
“உன்னை ஏமாத்தணும்னு இங்க கூட்டீட்டு வரல சுருதி. இது… இந்த மாதிரி இடத்துல உனக்கான கணவன தேடாதா. ப்ளீஸ்… இது ஒரு ஸ்கேம். ஏமாத்து வேலை. உலகத்துல இருக்குமா ஒட்டு மொத்த பொய்யும் இங்க தான் இருக்கு. கல்யாணத்த லாபம் பாக்குற வியாபாரமா மாத்தி வச்சிட்டாணுங்க. வியாபாரத்துல கூட நட்டம் வந்தா இழக்குறது காசா மட்டும் தான் இருக்கும். ஆனா இங்க… தனி மனிதனோட வாழ்க்கையே போய்டும். அது குடும்பத்த மட்டுமில்ல நம்ம சமூக கட்டமைப்பையும் சீரழிச்சிட்டு வருது.
காச வாங்கிட்டு அவனுங்க காட்டுறவன் தான் உனக்கு இணையான ஜோடின்னு நம்ப வைக்க என்ன வேண்னாலும் சொல்வானுங்க. பல கோடி ரூபா செலவு செஞ்சி போலியான ஒருத்தங்கூட கல்யாணம் நடக்கும். உனக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல, இந்தக் கல்யாணம் தான் உன்னோட கௌரவம்னு சொல்லி கடைசி வரை அந்தச் சுழல்குள்ளயே இருக்கச் சொல்லி உன்னை கட்டாயப்படுத்தும். முதல்ல பெத்தவங்களுக்காக, அப்றம் குழந்தைக்காகன்னு சொல்லிச் சொல்லியே உன்னை வெளிய விடாம கட்டிப்போட்டு கழுத்த நெறிக்க ஆரம்பிச்சிடும். வேண்டாம் இது.
கல்யாணம் அவசியம் தான். ஆனா வியாபாரம் நடக்குற இந்த இடத்துல உன்னோட வாழ்க்கைத் துணைய தேடதா. உன்னப் புரிஞ்சிட்ட ஒருத்தன், உன் மனசுக்கு பிடிச்ச ஒருத்தன் கண்டிப்பா சீக்கிரமாவே வந்து சேருவான். நம்ம மீனாட்சி துணை இருக்கா.” என்று சுருதியின் கரம் பற்றிச் சொல்ல,
‘எங்கே? கிடைத்த ஒருவனைத்தான் பல ஆண்டுகளுக்கு முன்னாள் தொலைத்து விட்டேனே! அவன் திரும்ப கிடைப்பான் என்ற நம்பிக்கை தளர்ந்ததால் தானே, யாருமற்ற வெறுமையோடு சுற்றிக் கொண்டிருக்கிறேன்.’ என்று சுருங்கியது சுருதியின் மனம்.
கானம் இசைக்கும்…
error: Content is protected !!