Skip to content
Post Views: 1,999

உனதன்பில் சரணாகிறேன் 14
இன்றைய தினம் ஏன் வந்ததோ எனும் மனநிலை தான் மித்யுகாவுக்கு.
Advertisement
ஒருமணி நேரத்திற்கு முன்பே,
“அவங்க கிளம்பியிருப்பாங்க மித்யு. நீ தயாராகு” என்று புடவையும், சில நகைகளையும் மெத்தை மீது வைத்துச் சென்றிருந்தார் செண்பகம்.
அவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தவளுக்கு தயாராக வேண்டுமென்ற எண்ணம் மட்டும் எழவில்லை.
Advertisement
புடவையுடன் இருந்த தங்க நகைகளில் அவளின் கண்களுக்குள் பளிச்சென நுழைந்தது குடை ஜிமிக்கி.
Advertisement
“ஓய் ஜிமிக்கி…”
எப்போதும் புலனம் பேச்சு வார்த்தையில் அவனது துவக்கமாக இருப்பது இவ்வழைப்பு தான்.
எழுத்துக்களாய் அவ்வார்த்தையை படித்திடும்போதே காதுக்குள் அவனது குரலாய் அத்தனை சிலிர்ப்பாய் நுழையும்.
Advertisement
மெல்ல விரல்களால் ஜிமிக்கியை வருடியவளின் ஒற்றை விழியில் எட்டிப்பார்த்த நீர், துளியாய் சொட்டியது.
“ம்ருது…” உச்சரித்தவளின் இதயத்தில் அவனது காதலின் அலை மோதல்கள்.
இரவு ஏழு மணியளவில் மித்யுகாவிடமிருந்து ம்ருதவ்வுக்கு அழைப்பு வந்தது.
சற்று முன்னர் தான் அலுவலகத்திலிருந்து வீடு வந்திருந்தான். இரவு உணவுக்கான ஏற்பாட்டில் இருந்தான்.
அவளது அழைப்பு என்றதும், செய்து கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு, அழைப்பை ஏற்றிருந்தான்.
“ம்ருது…”
“என்னவாம் ஜிமிக்கிப் பொண்ணுக்கு.”
“குக் பண்ணிட்டு இருக்கீங்களா?”
“இப்போ தான் ஸ்டார்ட் பண்ணேன்” என்ற ம்ருதவ், “இன்னைக்கு உனக்கு ஒன்னு வாங்கினேன்” என்றான்.
“ஜிமிக்கிதான?”
“பேச்சுக்காவது கெஸ் பண்றேன்னு கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்” என்று ம்ருதவ் சிரிக்க…
“எனக்கு எதாவது வாங்கிக் கொடுக்குறீங்கன்னா உங்களோட முதல் சாய்ஸ் ஜிமிக்கி தான… அதான் டக்குன்னு சொல்லிட்டேன். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் உனக்கு மட்டும் எப்படி இவ்ளோ யூனிக் கலெக்ஷன் கிடைக்குதுன்னு கேட்கிறாங்க” என்றவள், செவி நுழைந்த அவனது ஆர்ப்பாட்டமான சிலிர்ப்பில் சிலிர்த்து சிவந்தாள்.
“சிரிச்சு மெல்ட் பண்ணாதீங்க ம்ருது… உடனே உங்க முகம் பார்க்கணும் தோணும்” என்றாள், சிணுங்கலாய்.
“உனக்கு தோணுச்சுன்னா உடனே பார்க்கலாமே!” என்றவன், “வீடியோ கால் வர்றேன்” என்றான்.
“வேணாம் வேணாம்… அப்புறம் உங்களை நேர்ல பார்க்கத் தோணும்” என்று வேகமாக மொழிந்தவள்,
“ம்ப்ச் உங்களுக்கு கால் பண்ண காரணத்தையே மறந்துட்டேன் பாருங்க” என்றாள்.
“பாருடா… மேடமுக்கு கால் பண்ண புதுசா காரணமெல்லாம் வந்திருக்கு” என்று ம்ருதவ் கூற…
“அச்சோ ம்ருது… நமக்குள்ள பேச காரணமெல்லாம் எப்போ இருந்திருக்கு. இதுவேற, அப்பா கால் பண்ணாங்க. உடனே கிளம்பி வரச்சொல்றாங்க” என்றாள்.
“இப்போவா? இந்த நேரத்தில்…”
“எனக்கும் தெரியல. நான் வார்டன் கிட்ட பேசிட்டேன், இப்போவே கிளம்பு. நீ வர நேரம் பஸ் ஸ்டாப்பில் இருக்கேன் சொன்னாங்க.”
“அதுக்கு இந்தநேரத்தில் தனியா வர சொல்வாங்களா?” என்ற ம்ருதவ், “மார்னிங் கிளம்பு யுகா” என்றான்.
“சொன்னேன். அப்பா கேட்கல. வந்தே ஆகணும் சொல்லிட்டார் ம்ருது. அம்மாக்கு கால் பண்ணேன் எடுக்கவே இல்லை” என்றவள், “போகட்டுமா?” எனக் கேட்டாள். அவன் இப்போது கிளம்ப வேண்டாமென்று சொல்லியதை கேட்கமுடியவில்லையே எனும் வருத்தம் அவளிடம்.
தயங்கிய குரலில் அவள் கேட்டதே என்னவோ போலிருக்க…
“கிளம்பி இருடா! நான் ஹாஸ்டல் கேட் வந்து கால் பண்றேன்” என்றான் ம்ருதவ்.
“நானுமே உங்களை பஸ் ஸ்டாப்பில் ட்ராப் பண்ண சொல்லலாம் இருந்தேன்” என்றவள், “நீங்க சொல்லி நான் கேட்கலன்னு உங்களுக்கு கோவமில்லையே” என்றாள்.
“உன்னோட விஷயத்தில் முடிவெடுக்கும் உரிமை எப்பவும் உனக்குதான்” என்றவன், “நீ அங்க போகும்போது லேட் நைட் ஆகிடும். அதுக்காகதான் சொன்னேன்” என்றான்.
“ஹ்ம்ம்… புரியுது” என்றவள், “சின்ன விஷயமா இருந்தாலும் எனக்குத்தான் நீங்க சொல்லி எதுவும் செய்ய முடியலன்னா, என்னவோ மாதிரி ஆகுது” என்றாள்.
“அதெல்லாம் ஒன்னுமில்லை… நீ கிளம்பி இரு, வர்றேன்” என அழைப்பைத் துண்டித்தவன், ஆடைமாற்றி வண்டி சாவியை கையிலெடுத்தான். எப்போதும் போல் சாவியோடு அவனோடு உறவாடும் ஜிமிக்கியில் அவளில் அவனது மென்வருடல் ஸ்பரிசித்து மீண்டது. உதட்டில் மலர்வாய் ஓர் முறுவல்.
வீட்டை பூட்ட முயன்றவன் மீண்டும் வீட்டிற்குள் சென்று அவளுக்காக வாங்கியதை கையோடு எடுத்துக்கொண்டு புறப்பட்டிருந்தான்.
அரைமணியில் மித்யுகாவின் கல்லூரி விடுதி வாயிலில் நின்றிருந்தான்.
ம்ருதவ் அழைப்பு விடுக்க இரண்டு நிமிடங்களில் வந்து சேர்ந்தாள்.
“கீழ நின்னுட்டு இருந்தியா? உடனே வந்துட்ட… உன்னை ரூம்லே இருன்னுதான சொன்னேன்” என்றவன் அவளின் கையில் வைத்திருந்த சிறிய பையினை வாங்கி தனக்கு முன்பு பெட்ரோல் டேங்க் மீது வைத்தான்.
“ரொம்ப பேம்பர் பண்ணாதீங்க ம்ருது… அல்ரெடி உங்களுக்குள்ள மொத்தமா சரணடைந்த ஃபீல். நீங்கயில்லாம எதுவும் செய்ய முடியாதுங்கிற ஸ்டேஜ் வந்துடுவேன் போல. அப்புறம் என் தொல்லை அதிகமாகிடும். என் லவ் உங்களுக்கு டாக்சிக்கா தெரிய ஆரம்பிக்கும். சோ கொஞ்சம் உங்க அன்பு, அக்கறையெல்லாம் கம்மியாவே காட்டுங்க” என்றவளாக அவனுக்கு பின்னால் அமர்ந்தாள்.
ம்ருதவ் சீரான வேகத்தில் வண்டியை செலுத்தினான்.
“கம்மியா காட்ட சொல்ற நீ மட்டும் குறைச்சலா காட்டுறியா என்ன? நீதான் போட்டிப்போட வைக்கிற. நீ எவ்ளோ லவ் கொடுக்குறியோ அதை நான் எடுத்துக்கிறதை விட, உனக்கு டபுளா திருப்பிக் கொடுக்கிறதில்தான் என் லவ்வோட சந்தோஷம் அடங்கியிருக்கு” என்றான்.
“எஸ் சொல்ல ஒரு நாள் யோசிச்ச ஆளா நீங்கன்னு இருக்கு.”
“அதான் மொத்தமா மாத்திட்டியே… நீ சொன்னியே நான் இல்லாம எதுவும் செய்ய முடியாத நிலைக்கு வந்திடுவியோன்னு… நான் ஆல்ரெடி வந்தாச்சு. யுகா இல்லாம ம்ருது வாழ்க்கையில ஒரு அடி முன்ன வைக்க முடியாது” என்றவன், “உசுருக்குள்ள கலந்திருக்க” என தன்னுடைய தலைக்கு மேல் கையை பின்னால் கொண்டு சென்று அவளின் உச்சியில் கை வைத்து அழுத்தம் கொடுத்தான்.
“ம்ருது…”
“ஹெவன்லி ஹேட் யூ… எப்போ உன்னை என்னோடவே வச்சிப்பன்னு இருக்கு” என்றவன், அவளின் தலையில் வைத்திருந்த கையை தன்னை நோக்கி மேலும் அழுத்தம் கூட்டி, அவளின் தாடை தனது தோளில் பதிய வைத்தான்.
அவனாக எடுக்க வைக்கும் இந்த நெருக்கும் அவளுள் பூ பூக்க வைத்தது. அவன் அனுமதித்திடாத நெருக்கங்களில் இதுவும் ஒன்று. எத்தனைமுறை அவனுடன் அந்த வண்டியில் அவனுக்கு பின்னால் அமர்ந்து பயணம் செய்திருந்தாலும், இதுவரை அவனது தோளில் கரம் பதிப்பதைத் தவிர்த்து உடல் உரசும் நெருக்கத்தை அவன் அனுமதித்ததே இல்லை.
அவன் தன்னைக் குறித்து காட்டும் அவனது மரியாதையான காதலில்தான் அவள் இன்னும் இன்னும் அவனிடத்தில் காதல் கொண்டாள்.
“ம்ருது…”
அவளின் கிசுகிசுப்பானக் குரல் காற்றுக்கு நடுவில் காற்றாய் அவனது செவி நுழைந்தது.
தன்னை மறந்த காதல் உணர்வில், தன்னைப்போல் அவளை தன்னை நோக்கி இழுத்துவிட்டான். ஆனாலும், அவளை உணர்ந்ததும் விலகவிடாது இம்முறை அவனது மனம் அவனின் காதலுக்கு வழிவிட்டு ரசித்தது.
இனி எப்போதும் இந்த நெருக்கம் கூட கிடைத்திடாதென அவனுக்கு முன்பு அவனது காதல் கண்டு கொண்டதுவோ? எப்போதும் காதலிலும் மூளையின் வழிநடத்தலில் செயல்படுபவன் இக்கணம் தன் மனதிற்கு ஆட்பட்டான்.
“ஹக் கிடைக்குமா?” என்றவள், கண்ணாடி வழி அவன் பார்த்த உறைய வைக்கும் பார்வையில்,
“உங்களை நான் பிடிச்சிக்கவா?” எனக் கேட்டிருந்தாள்.
சரியென விழி மொழி வீசாது, தானே அவளின் கரங்களை ஒவ்வொன்றாய் பிடித்து தன்னைச்சுற்றி தனது வயிற்றில் பதியவைத்து, அவளின் கோர்த்த இரு கைகளையும் தனது ஒற்றைக் கையில் அடக்கிக்கொண்டான்.
“அச்சோவ் ம்ருது” என்று அவனின் முதுகில் நெற்றி முட்டி வெட்கம் கொண்டவள், “குறுகுறுன்னு இருக்கு. நெஞ்சுல படபடன்னு ஹார்ட்பீட் ரைஸ் ஆகறது கேட்குது” என்றாள்.
அவனுள்ளும் இத்தனை நாளும் கட்டுப்படுத்தி வைத்த வயதுக்கேற்ற காதல் உணர்வுகள் மேலெழுந்தனவோ, மனம் தானாக செய்யத் தூண்டும் செயல்களை காதலாய் செய்திருந்தான்.
தன்னுடைய வயிற்றில் படிந்திருந்த அவளின் கரங்களில் ஒற்றை கரத்தை பிரித்து உயர்த்தியவன், அவளின் உள்ளங்கையில் மென்மையாய், அதே சமயம் ஆழமாய் இதழொற்றினான். ஒற்றலை முடிவுக்கு கொண்டு வந்து கரத்தை கீழிறக்கியவன் தனது இதயத்தில் அடர்த்தியாய் பதித்துக்கொண்டான்.
முழுதாய் காதல் உணர்வுகளை இருவரும் இதயத்தால் உள்வாங்கிய நொடிகள் அவை.
“சில்லாகுது ம்ருது” என்று தோள்கள் சுருக்கி, அவனது முத்தத்தையும், இதயத் துடிப்பையும் உணர்ந்து கூச்செறிந்து அவனது முதுகிலிருந்து விலக… அப்போதுதான் சாலையை கவனித்தாள்.
“அச்சோ ம்ருது… பஸ்ஸ்டாப் தாண்டி வந்துட்டோம்” என்று பதறினாள்.
“தெரியும்.”
“தெரியும்னா?”
“நைட் நேரம், சில்லுன்னு காத்து, நெரிசல் இல்லாத ரோடு, உன்னோட பைக் ரைட்…”
“ஆமாவா” என்று குதிகளித்தவள், “ஷாக்கிங் சர்ப்ரைஸ் ம்ருது” என்று அவனின் வயிற்றிலிருந்த தனது கைகளின் பிடியை கூட்டினாள்.
தேகத்தில் தீயாய் அவளின் வெம்மை. தனக்குள் சுவீகரிக்கவே செய்தான்.
“ரெண்டு மணி நேரம் ட்ரைவ்… திரும்ப ரெண்டு மணிநேரம் போகணும். உங்களுக்கு ஓகேவா?”
“கூட நீயிருக்க யுகா… பூமிக்கு அந்தப்பக்கம் பாதையிருந்தாலும், இப்படியே போலாம்” என்று காதலின் பித்துநிலையில் அவன் பிதற்ற,
“ஆஹான்…” என்றவள், “இப்போ இந்த பயணம் உளுந்தூர்ப்பேட்டை வரை நின்னா போதும்” என்று சிரித்தாள்.
அவள் விளையாட்டாய் சொல்லியது, நிஜமென்றாகியிருந்தது. உண்மைக்கும் இருவரின் புதிதான நெருக்கமும், காதலும், அவர்கள் விரும்பி ரசித்து நகர்த்திய ஒவ்வொரு நொடியும் இந்த பயணத்தில் முடிவுக்கு வந்திருந்தது.
இதுவரை தான் காட்டிய காதலையெல்லாம் இந்த இரண்டு மணிநேரத்தில் வார்த்தையாகக் கோர்த்து அவளுள் கடத்தியிருந்தான்.
ஊர் நெருங்கவே, அவளின் அணைப்புக் கூடியது.
“யுகா” என புறவழிச் சாலையிலிருந்து ஊர் கிளை சாலை திரும்புமிடத்தில் வண்டியை நிறுத்தினான் ம்ருதவ்.
“இங்கவே ஸ்டாப் பண்ணிட்டீங்க. அப்பா பஸ் ஸ்டாப்பில் இருப்பாங்க. இன்னும் கொஞ்ச தூரம் போகணும்” என்று மித்யுகா சொல்ல…
“அப்போ உன் அப்பா முன்னாடி வந்தே இறக்கி விடவா?” எனக்கேட்டு சிரித்தான்.
“அவ்ளோதான்… நீ படிக்கவே வேணாம்னு இப்படியே வீட்டோட இருக்க வச்சிடுவாங்க” என்றவள், “அவ்ளோ தூரமெல்லாம் நடந்துபோக முடியாது” என்றாள்.
“உன்னை யாரு நடக்க சொன்னா?” என்ற ம்ருதவ், “அவசரப்படாதடி” என தன்னுடைய பேண்ட் பாக்கெட்டிலிருந்து சிறு பெட்டி ஒன்றை எடுத்தான்.
“இறங்கி முன்னாடி வா யுகா” என தனக்கு முன் அழைத்தான்.
“எதுக்காம்?” என்று முன் வந்து நின்றவளிடம் பெட்டியை நீட்டினான்.
இதுவரை அவளுக்கு அவன் அதிகம் கொடுத்த பரிசுப்பொருள் ஜிமிக்கிதான். அவன் இதுதான் கொடுப்பானென்று அவளும் நன்கு அறிவாள். இருப்பினும் ஒவ்வொருமுறையும் முதல் முறைப்போன்று அவள் காட்டும் விழிவிரிப்பில் தொலைந்து தத்தளிப்பவன் கரைசேர விருப்பமின்றி மீண்டும் மீண்டும் அமிழ்ந்தெழுவான்.
இப்போதும் அவளது கண்கள் காட்டிய மலர்ச்சியை கொஞ்சமும் மிச்சமின்றி அகம் நிரப்பியவன்,
“பிடிச்சிருக்கா யுகா?” எனக் கேட்டான்.
“கோல்டா ம்ருது. டிசைன் அழகா இருக்கு. ஜிமிக்கியும் குட்டியா க்யூட்” என்றாள்.
“டெய்லி வியர்… மைனூட் ஆர்ட் வொர்க் ஸ்டோன்ஸ்.”
“ரொம்பவே காஸ்ட்லி” என்றாள்.
“உன்னைவிடவா? உன் காதலைவிடவா?”
“ம்ப்ச்… நான் அப்படி மீன் பண்ணல ம்ருது. இதை நான் போட்டிருந்தா அம்மா ஏது கேட்பாங்க? என்ன காரணம் சொல்றது?” என்றாள்.
“ஹாஸ்டல் வந்ததும் போட்டுக்கோ…”
“கரெக்ட் தான்… ஆனா இப்போ எப்படி வீட்டுக்கு கொண்டுப்போறது! மாட்டிப்பேன்.”
“ஹ்ம்ம்…” ம்ருதவ்வின் முகம் சுருங்கிடவே, “இப்போ நீங்களே வச்சுக்கோங்க. நான் அங்க வந்ததும் வாங்கிக்கிறேன்” என்றாள்.
அவளின் சூழலும் புரியவே, சரியென தானே வாங்கிக்கொண்டான்.
“இப்போ உன்னை சேரனும்ன்னு இதுக்கு விதி இல்லைப்போல” என்றவன், “இந்த தூரம் இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம்” என்றான்.
“அப்போ ரிட்டர்ன் எப்போன்னு கால் பண்றேன்… இங்க வந்து கூட்டிப்போங்க.”
“செய்யலாமே” என்றவன், “என்னவோ தெரியல. நீ திரும்பி வந்திடுவன்னு தெரியும். ஆனா உன்னை அங்க போக வேணாம், இப்படியே திரும்ப என்னோட வந்திடுன்னு சொல்லத் தோணுது” என்றதோடு, “யுகா இஃப் யூ டோண்ட் மைண்ட்” என அவளின் கன்னங்களை தன்னிரு உள்ளங்கையால் தாங்கி, அவளின் நெற்றியோடு நெற்றி முட்டி, மூக்கோடு மூக்கு நுனி தீண்டி உரசி…
“சீக்கிரம் வந்திடு” என்றான்.
அவனின் இச்செயலை எதிர்ப்பாராதவள், அவன் இப்படியெல்லாம் நெருக்கம் காட்டுவானென கனவிலும் நினைத்திருக்காதாவள் பனியாய் அவனிடத்தில் கரைய,
அவளின் நெற்றியில் வெம்மை முத்தம் வைத்து, உறைய வைத்திருந்தான்.
இமை இழைகள் புருவம் தொட்டு அசையாது நின்றிருந்தவளின் கன்னம் தட்டி, “போலாமா?” என்றான்.
அவனிடம் கட்டுண்டவள், மென் தலையசைப்போடு, இந்நிமிடங்களை பொக்கிஷமாக மனப்பெட்டகத்தில் சேமித்தவளாக அவனின் பின்னால் அமர்ந்தாள்.
அடுத்த சிறிது தூரப்பயணம் இருவரிடமும் ஆழ்ந்த அமைதியில் கழிந்தது.
பேருந்து நிலையம் நெருங்கவே…
“இங்கவே நிறுத்துங்க. அங்க அப்பா இருப்பாங்க” என்று அவன் வண்டியை நிறுத்தியதும் இறங்கி பையை எடுத்து மாட்டியவள்,
“போகவா?” என்றாள்.
“வேணாம் சொல்லத் தோணுது.”
“ம்ருதவ்.”
“சீக்கிரம் வந்திடு யுகா” என்று அவளின் கையை பிடித்தவன், “எத்தனை நாளாகும்?” எனக் கேட்டான்.
“தெரியலையே!” விரிந்த அவளின் இதழை தீண்ட கையை உயர்த்தி சட்டென்று கீழிறக்கியிருந்தான்.
மித்யுகாவின் அலைபேசி ஒலிக்க…
“அப்பா வந்தாச்சு” என வேகமாக அவனிடமிருந்து கையை உருவி ஓடியவள், “வீட்டுக்குப் போயிட்டு மெசேஜ் பண்ணுங்க. பின்னாடி நானில்லன்னு வேகமா டிரைவ் பண்ணாதீங்க” என அவனைத் திரும்பிப்பார்த்து சொல்லிக்கொண்டே சென்றிருந்தாள்.
மித்யுகா அவளின் அப்பாவோடு செல்வதை தூரத்திலிருந்து பார்த்திருந்த ம்ருதவ் என்ன நினைத்தானோ வண்டியை முடுக்கி அவளின் பின்னால் விரைந்தான்.
தந்தையறியாது அவனது தொடர்தலை சிறு படபடப்போடு ரசித்தவள், “போங்க…” என கையசைத்தாள்.
ம்ருதவ் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை… இன்றுதான் தனது காதலுக்கு சந்தோஷ நாள் முடிவடைகிறதென நினைத்தானோ அவளை பிரிய முடியாது, வீடுவரை வந்து விட்டுச்சென்றான்.
திருச்சி திரும்பி வந்த வழி முழுக்க, அவளிருக்கும் தூரம் குறைவாகவே அத்தனை மெதுவாக வண்டியை ஓட்டியிருந்தான்.
வீடு வந்து சேர்ந்தவன் அவளுக்கு அனுப்பிய தகவல் பார்க்கப்படாமலிருக்க அவனது தவிப்புகள் கூடியன. அவற்றின் கூடுதல் இன்றும் கரை சேர்ந்திருக்கவில்லை.
தந்தையுடன் வீட்டிற்கு வந்த மித்யுகா, அந்த நேரத்திலேயே தன்னுடைய அக்கா, அவளின் புகுந்த வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் அங்கிருப்பதோடு, உறங்காது விழித்திருப்பதை யோசனையாக ஏறிட்டு நின்றவள்,
சிறிது நேரத்திற்கு முன்பு, தன்னவனின் காதல் கரங்களுக்குள் அடங்கியிருந்த தன்னுடைய கைகளில் படிந்த அக்காவின் கண்ணீர் துளிகளிலும், அவள் கூறிய…
“என் வாழ்க்கையே உன் கையில் தான் இருக்கு மித்யு” என்ற வார்த்தையிலும் புரியாது குழம்பி, அவளின் மாமியார் விளக்கிக் கூறியதில் அதிர்ந்து மயக்கமடைந்திருந்தாள்.
இன்றும் அந்நிகழ்வு மயக்கத்தை வரவழைக்கும் போலிருக்க தலையை உலுக்கி, நிமிர்ந்து அமர்ந்தாள் மித்யுகா.
“இன்னமுமா கிளம்பமா இருக்க நீ” என்று வந்த செண்பகம், மகளின் கலங்கியிருந்த கண்களை கண்டும் காணாதவராக, “புடவையை மட்டுமாவது மாத்திக்க மித்யு” என்றார்.
“ம்மா…” குரல் தழுதழுக்க, அவள் அழைத்திட…
“நிச்சயம் இந்த ஏற்பாட்டை நான் நிறுத்தமாட்டேன் மித்யு. நீ இதை ஏத்துக்க தயாராகிக்கோன்னு முன்னவே சொல்லிட்டேன்” என்று அவர் பேசிக்கொண்டிருக்க, வீட்டு வாயிலில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் கத்திக்கொண்டு உள் வந்தனர்.
“அம்மா…
“பாட்டி…
“நம்ம வீட்டுக்கு கார் வந்திருக்கு” என்று சிவன்யாவும், சிவேஷும் துள்ளிக்கொண்டு ஓடிவந்தனர்.
“வந்தாச்சு. இனியும் பிடிவாதம் பிடிக்காம நான் சொல்றதை கேளு. ஒழுங்கா புடவை மாத்தி, பூ மட்டுமாவது வை. கொஞ்ச நேரத்தில் கூப்பிட வர்றேன்” என்று செண்பகம் அறையை விட்டு வெளியேறி வாயிலுக்குச் செல்ல,
“நீ சொன்னா கேட்கவே மாட்டியாம்மா? வீட்டுக்குள்ள வரவச்சு அனுப்பனுமேன்னு தயக்கமா இருந்துச்சு. இப்போ வாசலோடவே அனுப்புறேன். அப்படியே தள்ளி விடுறேன் இரு” என செண்பகத்தின் பின்னாலே வந்த மித்யுகா,
செண்பகம், “வாங்க, வாங்க” என அழைக்க காரிலிருந்து இறங்கி வாயிற்படியில் நின்றிருந்த மூவரையும் பார்த்து அடி வைத்த இடத்தில் ஸ்தம்பித்து நின்றாள்.
கண்களுக்குள் முழு உருவமாய் நிற்பவனை மெய் சிலிர்க்கும் உணர்வோடு மனதில் வரித்தவள், பிரப்பஞ்சத்தின் இயக்கம் தடைப்பட்டதுபோல் யாவும் மறந்து வெறும் கூடாகியிருந்தாள்.
“விட்டா கழுத்தைப் பிடிச்சுத் தள்ளிடுவாப்போல. அவள் அதிர்ச்சியில் இருக்கும்போதே நாம திரும்பிப்போயிடலாம்” என்று மித்யுகா செண்பகத்திடம் சொல்லிக்கொண்டே வந்ததை மூவரும் காதில் வாங்கியிருக்க, கமலேஷ் ரதியிடம் முணுமுணுத்தான்.
“இவங்கதான் மித்யு…” மகள் சொல்லியதையும், தற்போதைய அவளின் நிலையையும் கருத்தில் கொள்ளாதவராக செண்பகம் மூவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.
“உள்ள வரலாமா?” ம்ருதவ் கேட்க, தன்னைப்போல் தலையசைத்து வழிவிட்டு ஒதுங்கி நின்றாள்.
அவளின் கருவிழிகள் அவனது கண்களோடு முட்டி மோதியது.
‘அவனின் பார்வை…
தினம் தினம் ரசித்தாலும்,
தொட்டிடாத தூரத்திலும்,
திகட்டாத ஒன்று.’
error: Content is protected !!