Skip to content
Post Views: 712
அத்தியாயம் 6.1
அன்று அனுராதவிக்கு முப்பதாம் நாள் சாமி கும்பிட்டார்கள். அனைவரும் விஜயன் வீட்டில் தான் இருந்தார்கள். கவியரசிக்கு ஐந்தாம் மாதம் முடிந்து ஆறாம் மாதம் தொடங்கி இருந்தது.
Advertisement
எத்தனை பிரியமானவர்கள் இறந்தாலும், துக்கம் அப்படியே தங்கிவிடுவதில்லை. அனைவருக்கும் வருத்தம் தான் என்றாலும், அனுராதாவின் மறைவை ஓரளவிற்கு ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
சாந்தி, மீனா, ரேவதி மூவரும் எந்த குறையும் இல்லாமல், அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
Advertisement
Advertisement
பூஜை முடிந்து, அனைவரும் உணவையும் முடித்துக்கொண்டு அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள்.
“இப்ப கூட அனு நம்மளை விட்டு போனதை நம்பவே முடியல” என்றார் சண்முகம் தங்கையின் புகைப்படத்தை பார்த்துக்கொண்டே.
Advertisement
“அண்ணே அண்ணேன்னு அனு கூப்பிட்ற மாதிரியே இருக்கு அண்ணா” என்றார் சரவணன்.
“அம்மாவும் அப்பாவும் சேர்ந்து என் பிள்ளையை வளர்க்கிறேன்னு சொன்னாங்களே மாமா.. என் பாப்பாவை பார்க்காமலே அம்மா போயிட்டாங்களே” என்றாள் கவி கலங்கிய குரலில்.
“உங்க கூட அம்மா கூட எல்லாம் என்னை எங்கள அப்பா கூட சேர்ந்து இருக்க விடலைன்னு வீண் பழி சுமத்தினேன். அதான் கடவுள் இப்படி என்னை தண்டிச்சிட்டாரோ?” என்றாள் மாமாக்களிடம்.
“மாசமா இருக்கப்ப மனசை போட்டு குழப்பிக்க கூடாது கவி.. அம்மா நம்ம கூடவே தான் இருப்பா. நீரடிச்சு நீர் விலகாது.. நீ எங்களை சொல்றது எல்லாம் எங்களை ஒன்னும் செய்யாது.. அனு தெய்வமா உன் பிள்ளையை பார்த்துப்பா..” என்றார் சாந்தி ஆதுரமாக.
விஜயன் அமைதியாகவே இவர்கள் உரையாடலை கேட்டு கொண்டிருந்தார்.
அவருக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. இங்கே இதுவரை அவர் எதையுமே பார்த்துக்கொண்டது இல்லை. எப்பவுமே விருந்தாளியாகவே வந்து போய்விடுவார்.
“ஏன் அண்ணா, முப்பது நாள் முடிஞ்சது, இங்க நீங்க தனியா இந்த வீட்ல இருக்க வேண்டாம், எங்க வீட்டுக்கு வந்துடுங்க” என்றார் சாந்தி விஜயனிடம்.
“ராதாக்கு நானும் அவளும் இந்த வீட்ல இருக்கணும்னு ரொம்ப ஆசை. நான் இங்கவே இருக்கேன். பக்கத்துல தானே இருக்கோம். நான் வேணும்னா அங்க வந்துட்டு போறேன்னே “ என்று நாசுக்காக மறுத்துவிட்டார்.
“உங்களை தனியா எப்படி மச்சான் விடுவோம். அனு, கடைசி வர உங்களை தனியா விட்டுட்டு போறோம்னு தான் கலங்குச்சு” என்றார் இரண்டாம் அண்ணான் சிங்காரம்.
அதுவரை அமைதியாக இருந்த எழிலரசி, “என்ன பெரியப்பா இப்படி சொல்றீங்க, அத்தை மாமாவை தனியா விடவேண்டாம்னு சொன்னது மாமாக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி தானே?” என்றாள்.
அனைவரும் அமைதியாகி விட்டார்கள்.
அனுராதா இடத்தில இன்னொரு பெண்ணை வைத்து எப்படி பார்ப்பது..
ரேவதி, ‘அதிகப்ரசங்கி’ என்று முனகிக்கொண்டே மகளை முறைத்தார்.
“எனக்கு அப்படி எண்ணமெல்லாம் இல்லை எழிலு. இனி இந்த பேச்சு வேண்டாம்டா” என்றார் தன்மையாகவே விஜயன்.
“என்ன இப்படி சொல்றீங்க? எல்லாருகிட்டயும் அத்தை இதை தானே வேண்டி கேட்டுக்கிட்டாங்க.. அப்ப எல்லாரும் மண்டையை மண்டைய ஆட்டுனீங்க..”
“இந்த வயசுல அப்பாக்கு கல்யாணம்னு வெளிய சொல்லமுடியுமா எழிலு?” என்றாள் கவி.
“அத்தையோட கடைசி ஆசை இதுதானே.. இதுல வெளிய சொல்ல என்ன இருக்கு, அத்தாச்சி?”
“உனக்கு புரியாது. நீ என் இடத்துல இருந்து யோசிச்சு பாரு அப்ப புரியும்” என்றாள் கவியும் காரமாக.
“இப்ப இந்த பேச்சு எதுக்கு விடுங்க ரெண்டு பேரும்” என்றார் சண்முகம் கண்டிப்பான குரலில்.
அதில் அமைதியாகினாலும் , இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு தான் இருந்தார்கள்.
கவியின் கணவன் கவின்னும் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.
தமிழரசி, குகன், பாலமுருகன் மூவரும் ஒருபக்கமாக அமர்ந்திருந்தனர்.
“நம்ம எழிலு கேரக்ட்டரை புரிஞ்சுக்கவே முடியலையே?” என்றான் குகன்.
“ஆமாடா தம்பி, அத்தை இந்த விஷயத்தை சொன்னப்ப ஏன் இப்படி சொல்றீங்கன்னு அத்தைக்கூட மல்லுக்கு நின்னுச்சு.. இப்ப அத்தை சொன்னதை செய்யுங்கன்னு எல்லார் கூடவும் மல்லுக்கு நிக்குது..” என்றான் பாலமுருகன்.
அதன்பிறகு, யார் எவ்வளவு எடுத்து சொன்னாலும் எழிலரசி தன் பிடியிலேயே நின்றாள்.
“உங்க மாமா தனியா நின்று விட கூடாதுன்னு தானே உன் அத்தை அவருக்கு கல்யாணம் பண்ண சொல்லுச்சு.. நாங்க எங்க மச்சானை தனியா விட்டுடுவோமா? நாங்க உயிரோட இருக்கிற வரை மச்சானை தனியா விடவே மாட்டோம்” என்றார் சண்முகம் மகளிடம் நிதானமாக.
“அதானே, மச்சான் ஏன் தனியா இருக்கணும். நாம இவ்வளவு பேர் கூட இருக்கும்போது? அனு தான் கடைசி நேரத்துல புரியாம சொல்லுச்சுன்னு நீ ஏன் அதை பிடிச்சிக்கிட்டு தொங்குற எழிலு? பெரியவங்க நாங்க பார்த்துப்போம், நீ உன் வேலைய பாரு” என்றார் சரவணன்.
எழிலரசி அனைவரையம் பார்த்து முறைத்து நின்றாள்.
“நீயே யோசி எழிலு, பேரன் பிறக்க போற நேரத்துல எங்க அப்பா புது மாப்பிள்ளையா நின்னா எங்க மாமியார் வீட்ல என்ன நினைப்பாங்க? நான் அங்க எப்படி வாழமுடியும்? எல்லார் முகத்தையும் எப்படி பார்க்க முடியும்?” என்றாள் கவியரசி.
“இங்க பாரு கவி, இதுல எங்க வீட்ல நினைக்க என்ன இருக்கு? அத்தை என்கிட்டே கடைசியா என்ன சொன்னாங்க தெரியுமா? ‘மாப்பிள்ளை, நீங்க யாரும் தப்பா நினைக்க கூடாது. என் வீட்டுக்காரர் அவருக்கு நியாயமா கிடைக்க வேண்டிய எந்த சுகத்தையும் அனுபவிக்கவே இல்லை. சின்ன வயசுல படிப்பு, வாலிப வயசுல காதல், கல்யாணத்துக்கு பிறகு அன்யோன்யம், இப்படி எந்த சுகமும் அவருக்கு நிறைக்கலை. அவர் அனுபவிச்சது நிறைய தனிமை தான்.. அதனால தான் எனக்கு பிறகு அவருக்கு ஒரு துணை வேணும்ன்னு நான் நினைக்கிறேன். இதுக்கு அவரே ஒத்துக்கலைனாலும், ஒரு மகனா நீங்க அவரை சம்மதிக்க வைக்கணும்’”
அனைவருக்கும் அனுராதாவின் தீவிரம் இப்பொழுது தான் புரிய தொடங்கியது.
“என்கிட்டே மட்டும் இல்ல, எங்க அப்பா அம்மாகிட்ட கூட அத்தை பேசினாங்க. இன்பேஃக்ட் அவங்க ஏற்கனவே எங்க சொந்தத்துல மாமாக்கு பொருத்தமா பொண்ணு இருக்கான்னு பேசிகிட்டு தான் இருக்காங்க.
உங்களுக்கு எல்லாம் விருப்பமா இல்லையான்னு யோசிங்க. நானோ இல்ல எங்க வீட்லயோ இதை தப்பா நினைக்கலை” என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசிவிட்டு எழுந்து சென்றுவிட்டான் கவின்.
கவியரசி சிலையென அமர்ந்துவிட்டாள்.
“கவி, எதுவா இருந்தாலும் உன் பிரசவத்துக்கு பிறகு பார்த்துக்கலாம். நீ அதையும் இதையும் நினைச்சு குழப்பிக்காத, எந்திருச்சு முகம் கழுவிட்டு கொஞ்ச நேரம் அமைதியா படு” என்றார் மீனா.
மச்சான்கள் மூவரும் விஜயனை பார்க்கவும், “என்னை தப்பா நினைக்காதீங்க மச்சான். நிஜமாலுமே எனக்கு இன்னொரு கல்யாணத்தை பத்தி எந்த எண்ணமும் இல்லை. எல்லாம் உங்க தங்கச்சி பண்ணி வச்சிருக்க வேலை தான்” என்று கூறி அவரும் எழுந்து வெளியே சென்றுவிட்டார். அவருக்கு தன்னை பற்றி இப்படி அனைவரும் பேசுவது மிகவும் சங்கடமாக இருந்தது.
“இங்க பாரு எழிலு, நீ சொல்றது சரியா தப்பான்னு எல்லாம் இப்ப பேச்சே இல்ல, முதல்ல கவிக்கு நல்லபடியா குழந்தை பிறக்கணும். ஏற்கனவே வீக்கா இருக்கா, அவகூட மல்லுக்கு நிக்காத. எதுவா இருந்தாலும் குழந்தை பிறந்ததுக்கு பிறகு பார்ப்போம் புரியுதா?” என்றார் ரேவதி கண்டிப்பான குரலில் மகளிடம்.
“எனக்கும் அத்தாச்சி மேல பாசம் இருக்கும்மா.. என்னமோ அத்தை நியாபகம் வந்துச்சு.. அவங்க ஆசையை நிறைவேத்தணும்னு தான் சொன்னேன்”, என்று அழுது கொண்டே “நான் வீட்டுக்கு போறேன்” என்று கிளம்பிவிட்டாள்.
கவிக்கு அம்மா தன் கணவனிடம் கூறியதை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது. அதையும் விட அவனும் மாமனார் மாமியார் அனைவருமே அதற்கு சாதகமாக பேசுவது இன்னும் வியப்பாக இருந்தது.
“நாம தான் எப்பவுமே எல்லாரையும் எல்லாத்தையும் தப்பாவே பார்க்கிறோமோ?” என்று நினைத்து கொண்டே கண்ணயர்ந்தாள்.
error: Content is protected !!