Skip to content
Post Views: 1,928
அத்தியாயம் 7
வீட்டிற்கு வந்த அமிர்தா, பாதி நாள் விடுமுறை கேட்டிருந்த கேர்டேக்கரை அனுப்பி வைத்துவிட்டு குழந்தைகள் அருகே வந்தாள்.
ஆண் குழந்தை தகப்பனையும், பெண் குழந்தை தாயையும் உரித்து வைத்துப் பிறந்திருந்தனர். இந்த உருவ ஒற்றுமையைப் பார்த்த பின்னால் கூட, வாய் கூசாமல் இது எங்கள் வீட்டு குழந்தை தான் என்பதை நாங்கள் எப்படி நம்புவது என்று கேட்டானே அந்தக் கொடூரன். அதைக் கேட்டுக்கொண்டு அமைதியாக நின்றானே நான் முற்றும் முழுதாக நம்பியவன் என்பதாய் பழையதை நினைத்துப் பார்த்தவளின் கண்கள் வழக்கம் போல் கண்ணீரை வடியவிட, அவள் கன்னத்தில் அடித்து அவள் கவனத்தோடு சேர்த்து கண்ணீரையும் தடுத்தனர் அவளின் கையில் இருந்த குழந்தைகள்.
நாள் முழுவதும் பிரிந்து இருந்தாலும், அவள் வந்ததும் அப்படியே அவளிடம் ஒட்டிக்கொள்வார்கள் இருவரும். அவர்களை மார்போடு அணைத்து குண்டு கன்னம் சிவக்கும் அளவிற்கு அழுத்தமாய் அமிர்தா முத்தமிடும் நேரத்தில், மழலைக்குரலில் கிளுக்கிச் சிரிப்பார்கள். அந்த சிரிப்பில் தொலைந்திருந்த அந்த வீட்டின் ஜீவன் திரும்புவதாய் உணர்வாள் அமிர்தா. இப்போதும் அது தான் நடந்தது. கூடுதலாய் சில ஏக்கப் பெருமூச்சுகளும் வந்தது அவளிடத்தில் இருந்து.
Advertisement
எப்படி இருந்திருக்க வேண்டியது தங்கள் வாழ்க்கை. ஒரு நாள் கோரத்தில் மொத்தமாக அழிந்து போன தனுஷ்கோடியைப் போல், தங்கள் குடும்பமும் குரூரமாக அழிந்து போனதை நினைத்து கண்கள் கனத்து கண்ணீர் வந்தது அமிர்தாவுக்கு. குழந்தைகள் முன்னால் அழக்கூடாது என்கிற மனவைராக்கியம் நினைவு வர வலுக்கட்டாயமாக தன் மனதை உறுதிப்படுத்தியவள், அவர்களின் தேவைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
வயிற்றுக்கு உண்ட குழந்தைகள் உறங்கத் துவங்க அவர்களின் அருகே படுத்திருந்த அமிர்தாவுக்கு உறக்கம் வரவில்லை. அவளின் கால்கள் தன்னால் அவளை அந்த வீட்டின் ஒரு மூலையில் இருந்த அறையை நோக்கி அழைத்துச்சென்றது.
அந்த அறை அப்படி என்ன சாபம் வாங்கியதோ. ஆசை ஆசையாய் அந்த வீட்டை வாங்கிய அமிர்தாவின் தந்தை ஒரே வருடத்தில் பக்கவாதம் வந்து, அந்த அறையில் தான் முடங்கிக்கிடந்தார். உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்ட அவர் இறந்து போன பிறகு, உள்ளத்தினால் ஊனப்பட்டுப் போன உயிர் ஒன்று அந்த அறையை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை நினைக்க நினைக்க அழுத்தம் தாளவில்லை அமிர்தாவுக்கு.
Advertisement
மனதின் வலியில் தன் வழக்கத்தை மறந்த அமிர்தா குரல் கொடுக்காமல் கதவைத் திறந்துவிட, உள்ளிருந்து பறந்து வந்து அவள் தலையில் விழுந்தது சாப்பிடும் தட்டு ஒன்று. அது விழுந்த வேகத்தில் தடுமாறியவள் கதவில் இடித்துக்கொள்ள நெற்றியில் நல்ல காயம்.
Advertisement
“போ, இங்க இருந்து போ. எனக்கு யாரையும் பார்க்கப் பிடிக்கல.” சங்கிலி உராய்வோடு சேர்ந்த குரல் ஒன்று கேட்க, கதவைப் பட்டென்று அடித்து சாற்றிய அமிர்தா அந்த அறைக்கதவில் முதுகு சாய அப்படியே நிலத்தில் அமர்ந்தாள்.
கண்கள் அவள் அமர்ந்திருக்கும் இடத்தின் வலப்பக்கமாக திரும்ப, அங்கே புகைப்படமாக சிரித்துக்கொண்டிருந்தாள் அழகான பெண் ஒருத்தி. சாத்வீக அழகு நிரம்பி விழிந்த முகத்தில், அப்பாவித்தனத்தின் உச்சத்தை அப்படியே காட்டியது அந்த வட்டக் கண்கள். அவள் நீலாம்பரி. அமிர்தாவின் ஒரே தமக்கை.
இன்னொரு பக்கம், தன்னுடைய அறையில் தன் கபோர்டின் ரகசிய திறப்பில் இருந்து நீலாம்பரியின் கையடக்க புகைப்படத்தை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தான் மோகனன். அவள் சம்பந்தமான மற்ற பொருட்கள் அனைத்தையும் தேடித்தேடி அப்புறப்படுத்தி இருந்த தம்பி சாருகேசிக்கு தெரியாமல் மிக ரகசியமாக பொக்கிஷம் போல் அந்தப் புகைப்படத்தை மட்டும் இத்தனை மாதங்களாகப் பாதுகாத்து வருகிறான் மோகனன்.
Advertisement
நீலாம்பரியைப் பார்த்த அவன் கண்களில் காதல் உருகி வழிந்தது. அவளின் வட்ட விழிகள் இமைக்காமல் தன்னைப் பார்க்கும் பார்வை நினைவு வர, பழைய நினைவில் கண்களில் இருந்து கண்ணீர் வந்துகொண்டே இருந்தது மோகனனுக்கு. கண்ணீர் பட்டு அவள் புகைப்படம் கறைபட்டுவிடுமோ என்று பயந்தவன் வேகமாக தன் சட்டையைக் கொண்டு சுத்தம் செய்தான்.
அந்த நேரம் அறைக்குள் வந்தாள் கீரவாணி. அவளைப் பார்த்ததும் மோகனன் வேகமாக தன் கையில் இருந்ததை தலையணைக்கு அடியில் பதுக்கப் பார்த்தான். “நீலாவோட போட்டோ தானே. எனக்கு எப்பவோ தெரியும்.” சாதாரணமாக அவள் சொல்ல, மோகனன் கண்களில் மிரட்சி.
“பயப்பட வேண்டாம். நான் உங்க தம்பிகிட்ட சொல்ல மாட்டேன்.” என்று அவன் மனதிற்கு ஆறுதல் அளித்தவள், “ஆனா என்னைக் கல்யாணம் பண்ண பிறகும் நீங்க இப்படிப் பண்றது நல்லாவா இருக்கு?” காட்டமாகக் கேள்வி கேட்க, அந்தக் கேள்வியில் சூடானான் அவன்.
“என் மனசு முழுக்க என் பொண்டாட்டி நீலா தான் இருக்கான்னு தெரிஞ்சும், நான் என் நிலையில் இல்லாத நேரத்தில் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்குள்ள வந்த உனக்கு, இந்தக் கேள்வியைக் கேட்க அருகதை இருக்கா?” நெருப்பில் விழுந்த இரும்பின் சூட்டில் வார்த்தைகளை உதிர்த்தான்.
அவன் வார்த்தையில் இருந்த சூடு வாணியைக் கொஞ்சம் கூட சுடவில்லை. மாறாக, பாலைவனத்தில் விழுந்த முதல் பனித்துளி போல அவளுக்கு இதத்தை தான் தந்தது. அந்த இதத்தில் அவள் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, அந்த விடாத பார்வை தந்த எரிச்சலில் எழுந்து நின்றான் மோகனன்.
கணவன் தன் முன்னாள் மனைவியின் புகைப்படத்தை மிகவும் பத்திரமாக கபோர்டிற்குள் வைத்துப் பூட்டுவதை சின்ன வலியோடு பார்த்துக்கொண்டிருந்தாள் வாணி.
“நமக்குப் பிடிச்ச நபர் நமக்குப் பக்கத்திலேயே இருந்தும், நமக்கானவங்களா இல்லாம இருக்கும் வலி எப்படி இருக்கும் னு எனக்கும் தெரியும். ஆனா இது நீயா தேடிக்கிட்டது. உனக்கு ஆறுதல் சொல்லக் கூட எனக்குத் தோணல.” என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.
பெருமூச்சோடு மெத்தையில் விழுந்தாள் வாணி. மனம் அலைபாய்ந்தது. துளி கூட அன்பில்லாத கணவன், எதிர்காலமே தெரியாத இருளான வாழ்க்கை, கலைந்து போகும் கனவுகள் எனக் குரூரமாக தொடரும் இந்த வாழ்க்கையைத் தொடரத்தான் வேண்டுமா என்று அவ்வப்போது தோன்றும் கேள்வி இப்போதும் எழுந்தது தான். ஆனால் தன்னந்தனியாய் உள்ளுக்குள் போராடிக்கொண்டிருக்கும் கணவனைப் பார்க்கும் போது இன்னும் பல கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டாலும் பரவாயில்லை இந்த வாழ்க்கை வேண்டுமே வேண்டும் என பேராசை கொண்டது அவள் மனது.
மோகனன் மீது அவள் கொண்ட காதலுக்கு வயது அவள் வயதில் பாதி. அரும்பு மீசை முளைக்கும் போது அதை ஆசையாக வருடிப்பார்த்தவன் மீது அவள் கொண்ட ஆர்வம், அவள் வளர வளர தானும் வளர்ந்தது. அதுஅது அதற்குண்டான வயதில் தான் நடக்கவேண்டும் என்று அடிக்கடி சொல்லும் மோகனனை மனதில் வைத்து, சரியான வயது வரும் வரை காத்திருந்து ஆசை ஆசையாக காதலைச் சொல்ல வந்தவளுக்குக் கிடைத்தது மோகனன் மற்றும் நீலாம்பரியின் திருமணச்செய்தி.
இது தான் கடவுள் ஆசை என்றால் நடக்கட்டும் என தன் கவலைகள் அனைத்தையும் ஒதுக்கித்தள்ளி பெரிய மனதோடு விலகி நின்றவள், நீலாம்பரியோடு இனி வாழ முடியாது என்கிற நினைப்பில் பைத்தியம் பிடிக்காத குறையாக இருந்த மோகனனை விடாப்பிடியாக நின்று திருமணம் செய்தாள்.
வீட்டில் நடந்த பலகட்ட பிரச்சனைக்குப் பிறகு சாருகேசி அவன் அண்ணனுக்கு மறுமணம் செய்து வைக்க நினைக்கிறான் என்கிற தகவல் கேள்விப்பட்டதும் முதல் சில நாட்கள் தயங்கியவள் பின் எது வந்தாலும் தாங்கிக்கொள்ளலாம் என்கிற நினைப்பில் தானாக முன்வந்து தலையைக் கொடுத்தாள்.
சாருகேசி முதல் சில நாட்கள் தயங்கினான். வேண்டாம் என்று மறுத்து கூடப் பார்த்தான். ஆனால் வாணியின் காதல் மனதும், இத்தனை ஆண்டுகளாய் வேறொரு ஆணை மனதில் நினைக்க முடியாமல் மகள் பட்ட பாட்டை அருகில் இருந்து பார்த்த அவளின் தந்தையும் சேர்ந்து சாருகேசியின் மனதை வெற்றிகரமாக கரைத்திருந்தது. இப்படித்தான் தம்பி மூலமாக அண்ணனின் வாழ்க்கைக்குள் நுழைந்திருந்தாள் வாணி.
“என்ன வாழ்க்கை இது?” என்கிற சலிப்பு வரும் போதெல்லாம், “நீ அவனோட பொறுப்பில் இருக்க, உனக்கு ஒரு பதில் சொல்லணும் என்கிற நினைப்பு இருக்கப் போய் தான் என் பையன் நல்லபடியா இருக்கான். அவனுக்காக கொஞ்சம் பொறுத்துப்போ மா. கட்டாயம் ஒருநாள் மாறிடுவான்.” என்கிற மாமியாரின் வார்த்தைகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நம்பிக்கையை மீட்டெடுப்பாள் வாணி. இப்போதும் அதையே செய்து அங்கிருந்து நகர்ந்தாள்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு குற்றவாளியைப் பிடிக்கிறேன் என்று விழுந்து வாறி இருந்த சாருகேசி, புஜத்தில் பாதி தோலை இழந்திருந்த காயத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக மருத்துவமனை வந்திருந்தான். அதே மருத்துவமனையில் வயிற்றுப்புண் அதிகமாகி பிரச்சனையாகி சேர்ந்திருந்தாள் அமிர்தா.
சிகிச்சை முடித்து வெளியே வந்த கேசி கையில் இரண்டு குழந்தைகளோடு நின்றுகொண்டிருந்த ஒரு பெண்மணியைப் பார்த்ததும் புருவம் சுருக்கினான். அவர் அமிர்தாவின் வீட்டில் வேலை செய்பவர் என்பதை அவன் அறிவான். யாருக்கு என்னவாயிற்று என்கிற பயத்தில் அருகே சென்று தகவல் கேட்க, அவன் பயந்தது போலவே அமிர்தாவுக்கு தான் பிரச்சனை என்று தெரிந்ததில் மனம் வலித்தது.
“சரியா சாப்பிடுறாளா என்னன்னு கூடப் பார்க்க மாட்டீங்களா?” சற்றே அவன் கடிய, “சமைச்சு வைக்கிறதோட என்வேலை முடிஞ்சிடும் சார். சாப்பிடுறதும் சாப்பிடாம போறதும் அவங்க முடிவு. அவங்க என்ன சின்னக்குழந்தையா கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்க.
தன்னை மட்டுமே நம்பி மூணு உயிர் இருக்குன்னு அவங்களுக்காக முக்கால்வாசி நேரம் யோசிக்கிறவங்க, உழைக்கிறவங்க, கொஞ்சம் தன்னையும் கவனிக்கலாம். எங்க, சரியா சாப்பிடாம உடம்பை வருத்தி இன்னைக்கு இப்படிக் கிடக்கிறாங்க.
வயித்துப் புண்ணுன்னு சாதாரணமா சொன்னாலும், அது தீவிரமானா குடலில் ஓட்டை விழும் அளவுக்கு கொண்டு போயிடும்.” என்று சலித்துக்கொள்ள, நெஞ்சைக் கவ்விய பயத்தோடு அமிர்தா இருக்கும் அறையை எட்டிப்பார்த்தான் கேசி.
சாபம் பெற்ற தூங்கும் இளவரசியைப் போல் உலகம் மறந்து அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள் அவள். அன்பின் மிகுதியில் அண்டை நாட்டு இளவரசன் கொடுத்த முத்தத்தின் பலனாய் இளவரசி உறக்கத்தில் இருந்து எழுந்து கொள்வாள் என்று படித்தது நினைவு வர, தலையைக்கோதிக்கொண்டான். புஜத்தில் இருந்த காயம் வலித்தது. மனதில் முணுமுணுத்துக்கொண்டிருந்த வலிக்கு முன்னர் அது பெரிதாகத் தெரியவில்லை கேசிக்கு.
அப்போது தன் வீட்டில் இருந்து அழைப்பு வரவும், “எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு. அமிர்தாம்மா எழுந்திரிக்கும் வரை குழந்தைங்களைப் பார்த்தக்கோங்க.” என்றுவிட்டு கேசி சற்றும் எதிர்பாரா வண்ணம் அவன் கைகளில் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு நகரப்பார்த்தார் கேர்டேக்கர்.
“ஹலோ என்ன நீங்க பாட்டுக்கு குழந்தைகளை என்கிட்ட விட்டுட்டு போறீங்க.” தன்னைப் பார்த்து சிரித்த குழந்தைகளைக் கண்டு குற்றவுணர்வு பாதியும், அமிர்தா எழுந்துவிட்டால் என்ன நடக்குமோ என்கிற பயம் மீதியுமாய் கேட்டான் சாருகேசி.
“நீங்க அமிர்தாம்மாவோட புருஷன் தானே. அவங்க ரூம் க்ளீன் பண்ணும் போது உங்க போட்டோஸ் பார்த்து இருக்கேன். என்ன தான் பிரிஞ்சு இருந்தாலும் புருஷன், பொண்டாட்டி இல்லன்னு ஆகிடாது.
பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லாம இருக்கும் போது அவளையும், குழந்தைங்களையும் புருஷன்மார் தான் பார்த்துக்கணும். பார்த்துக்கோங்க. அப்படியே அவங்க மனசில் இடம்பிடிச்சு வாழ்க்கையை சரிபண்ணப் பாருங்க.” என்றுவிட்டு சென்றே விட்டார் அவர்.
காக்கி உடையில் இரண்டு கைக்கு இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நின்ற இடத்தில் இருந்தே சுற்றி சுற்றி பார்த்தான் கேசி. மருத்துவமனையில் இருந்த யாரும் இவனைக் கண்டுகொள்ளவில்லை. அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அந்த நேரம் அவன் வைத்திருந்த பெண் குழந்தை எதிர்பாராமல் கேசியின் கன்னத்தில் முத்தமிட, அந்த ஈரம் உள்மனம் வரை தித்தித்தது அவனுக்கு. அடுத்த நொடி ஏதேதோ உணர்வில் உள்ளிருந்து வெடித்த கேவலை அடக்குவதற்குள் படாதபட்டவனை மீண்டும் சோதிக்கும் வகையில் தன் கைகளால் அடித்திருந்தான் ஆண் குழந்தை.
“அடி டா, இன்னும் பலமா அடி. உங்களுக்கும் உங்க இரண்டு அம்மாகளுக்கும் நான் செஞ்ச பாவத்துக்கு என்னை இன்னும் நல்லா அடி.” என்றவன் குழந்தையை தன்னோடு சேர்த்து இறுக்கமாக அணைக்க, அதில் மிரண்ட குழந்தை உதடு பிதுக்கி அழத்துவங்கியது.
“டேய், டேய் அழாதடா. சித்தா உனக்கு சாக்லேட் வாங்கித் தரேன்.” என்று கொஞ்ச, குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. பரிதாபமாக நின்ற போலீஸ் அவனை இப்போது சிலர் சின்ன சிரிப்போடு கடந்து போக, நீண்ட நேரம் குழந்தைகளை தன்னால் சமாளிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டவனுக்கு முதலில் நினைவு வந்தது தன் தாய் தான். அமிர்தா எப்போது கண் விழிப்பாள் என்பதை மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொண்டவன் தாய்க்கு அழைக்க, அழைப்பை ஏற்றதும், குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்காக மருத்துவமனை வந்தவளும் கீரவாணியே.
அவளைப் பார்த்ததும் கேசிக்கு என்னவோ போல் இருந்தது. “கொழுந்தனாரே, கொண்டாங்க என் பிள்ளைங்களை. அவங்க சித்தி இவங்களை என்னைத் தூக்கவே விடல.” குறைபாடிக்கொண்டே ஆசையாய் ஆர்வமாய் பிள்ளைகளை வாங்கினாள் கீரவாணி.
பழக்கமில்லாத அவளோடு ஒட்ட மாட்டேன் என்று அவர்கள் அடம்பிடிக்க, “என்னடா உங்க அம்மா இடத்துக்கு போட்டியா வந்தவன்னு உங்களுக்கும் தெரியுதா? அதனால் தான் என்கிட்ட ஒட்ட மாட்டுறீங்களா? உங்க சித்தி கண்முழிக்கும் வரைக்கும் என்கிட்ட இருந்தா தான் என்ன?” என கிச்சுக்கிச்சு காட்ட, அதில் சிரித்த குழந்தைகள் சற்றே அமைதியாகியது.
நினைவு வந்தவளாக தான் கையோடு கொண்டு வந்திருந்த பிஸ்கட்டில் ஆளுக்கொன்றாக அவள் எடுத்துக்கொடுக்க அப்போது தான் முளைக்கத் தொடங்கி இருந்த அணில் பற்களால் அதைக் கொறிக்க ஆரம்பித்தனர் குழந்தைகள்.
ஆண் பிள்ளையின் முகத்தில் கணவனைக் கண்டாளோ என்னவோ அவனை இன்னும் இன்னும் தன்னோடு அணைத்தாள் வாணி. “என்ன அண்ணி இதெல்லாம்?” சங்கடத்தோடு கேட்டான் கேசி.
“வேற ஒரு பொண்ணு பெத்திருந்தாலும், என் புருஷனுக்குப் பிறந்த குழந்தைங்க எனக்கும் குழந்தைங்க தானே.” ஆசையாய் கேட்டாள் கீரவாணி.
“அப்படியா? உங்க அப்பா வேற ஏதோ சொன்னதா எனக்கு நினைவு.” என்றபடி வந்தாள் அமிர்தா.
error: Content is protected !!