Skip to content
Post Views: 793
அத்தியாயம் 8
“என்னமோ உனக்கு தான் எல்லாம் தெரியும்னு பேசாத எழிலு”
Advertisement
“இப்ப நான் என்ன சொன்னேன்னு இப்படி பேசறீங்க அத்தாச்சி. பாப்பாக்கு அத்தை பேர் எதுக்கு வைக்கணும்? அனுராதா கொஞ்சம் பழைய பேரா இருக்கு. பாப்பாக்கு மாடெர்னா வைக்கலாம்னு தானே சொன்னேன்”
“எங்க அம்மாவே எனக்கு பொண்ணா வந்து பிறந்திருக்காங்கன்னு நான் நினைக்கிறேன். அதான் அம்மா பேர் வைக்கலாம்னு சொல்றேன்”
Advertisement
Advertisement
“இல்ல, அத்தை இருக்கப்பவே உங்க வயித்துல பாப்பா வந்துட்டா, அத்தை எனக்கு தான் குழந்தையா பிறப்பேன்னு சொல்லி இருக்காங்க..”
“நான் தானே அவங்க பொண்ணு”
Advertisement
“இருக்கட்டுமே.. அதனால என்ன? அத்தைக்கு நான் தான் செல்லம்”
“ஆமா ஆமா.. உங்க அத்தைக்கு நான், எங்க அப்பா ரெண்டுபேரும் எப்பவுமே இரண்டாம் பட்சம் தான். அண்ணனும் அண்ணன் பொண்ணும் தான் உசத்தி”
“அத்தையை பத்தி இப்படி சொல்றவங்க ஏன் அவங்க பேரை உங்க பாப்பாக்கு வைக்கணும்”
“அது என் இஷ்டம்”
குழந்தையை நடுவில் படுக்க வைத்து கொண்டு எழிலரசியும் கவியரசியும் கட்சிகட்டிக்கொண்டு சண்டையில் இறங்கி விட்டனர்.
“அய்யோ அக்கா, சத்தியமா இந்த இரண்டு அரசிகளையும் சமாளிக்கவே முடியல, ரேவதிக்கு போன் போட்டு சீக்கிரம் வர சொல்லுங்க” என்றார் மீனா அலுப்பாக சாந்தியிடம்.
கவிக்கு குழந்தை பிறந்து இன்றோடு ஒரு வாரம் ஆகிறது. குழந்தையையும் கவியையும் சண்முகம் வீட்டில் தான் வைத்து பார்த்து கொண்டிருக்கிறார்கள். விஜயனும் இங்கே தான் இருக்கிறார்.
ஒரு வாரமாக குழந்தையை பார்க்கும் ஆசையில் அனைவருமே இங்கே வந்துவிட்டனர்.
வந்ததில் இருந்து கவிக்கும் எழிலுக்கும் முட்டிக்கொள்கிறது.
கவி குழந்தைக்கு சிவப்பு சட்டை போட வேண்டும் என்று சொன்னால் எழில் மஞ்சள் சட்டை போட சொல்லி அடம்பிடிப்பாள். பாப்பாக்கு அம்மா மாதிரி கண்ணு என்று கவி சொன்னால், இல்ல இல்ல பாப்பா கண்ணு உங்க மாமியார் கண்ணு மாதிரி தான் இருக்கு என்பாள் எழில்..
“எழிலு, நீ தான் கொஞ்சம் நேரம் சும்மா இரேன். உனக்கு படிக்க ஒன்னும் இல்லையா?” என்றார் சாந்தி அதட்டலாக.
“அதானே, ஸ்டடி லீவ் தானே எழிலு உனக்கு. ரேவதி சொல்லிட்டு தானே போச்சு, கவி கூட மல்லுக்கு நிக்காதேன்னு” என்றார் மீனா.
“எல்லாரும் என்னையவே அமைதியா இருக்க சொல்லுங்க. இதுவே அத்தை இருந்திருந்தா எனக்கு தான் சப்போர்ட் பண்ணிருக்கும்” என்றாள் கண்கள் கலங்க.
கவிக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது. அன்னையின் இழப்பில் தன்னை விட எழில் தான் அதிகம் தவித்துக்கொண்டிருக்கிறாள் என்று அவளுக்கும் புரிகிறது. இருந்தும், ‘என்னோட அம்மா தானே, எப்பவும் இருக்கும் போதும் சரி, இறந்த பிறகும் சரி, அம்மா என்னமோ இவளுக்கு தான் முதலில் முக்கியம் மாதிரி உரிமை எடுத்துக்கிறா’ என்று சிறு பிள்ளை தனமான கோவம்.
சின்ன வயதில் இருந்தே அப்பாவை நினைத்து வாடும் கவிக்கு தான் அனைவருமே பரிந்து பேசுவார்கள். அதுவுமில்லாமல் கவி தானே அவர்கள் வீட்டில் முதல் குழந்தை, அந்த சலுகையும் இருந்தது. எப்பொழுது எழிலுக்கும் கவிக்கும் சண்டை வந்தாலும் அனைவரும் எழிலையே விட்டுக்கொடுக்க சொல்வார்கள்.
அனுராதா மட்டும் எழிலின் பக்கம் பேசுவார்.
“சின்ன பொண்ணு கிட்ட மல்லுக்கு நிக்காதே” என்று அவர் மட்டுமே மகளை கண்டிப்பார்.
“சரி சரி விடுடா.. நீ சொல்ற மாதிரி அனு இருந்திருந்தா உனக்கு தான் சப்போர்ட் பண்ணி பேசிருப்பா” என்றார் சாந்தி மகளின் வாடிய முகத்தை பார்த்து. அனைவருக்குமே அனுராதாவின் இழப்பு துயரமானது தானே.
“அத்தை சொன்னதை தான் எல்லாருமே மறந்துட்டீங்களே.. இங்க பாருங்க பெரியம்மா, கவி அத்தாச்சிக்கு பாப்பாவும் பிறந்தாச்சு. இனி அடுத்து மாமா கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ங்க” என்றாள் மூக்கை உறிஞ்சிக் கொண்டே.
சொல்லிவிட்டு நிற்காமல் அவர்கள் வீட்டிற்கு விரைந்து விட்டாள்.
‘மறுபடியுமா?’ என்று விஜயன் பாவமாக பார்த்தார்.
“விடுங்க அண்ணே, சின்ன பொண்ணு, பக்குவம் இல்லாம பேசறா, நான் ரேவதி கிட்ட சொல்லி அவகிட்ட எடுத்து சொல்றேன்” என்றார் சாந்தி விஜயனிடம்.
“எனக்கு எழிலும் கவியும் ஒண்ணுதான் ம்மா.. அவளுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு தான் தெரியலை. நாப்பத்து எட்டு வயசுல யாராவது கல்யாணம் பண்ணிப்பாங்களா.. அவ ராதா சொன்னதை அப்படியே உள் வாங்கிட்டு பேசுறா.. எப்பவுமே ராதாவோட நினைவுல தான் பதினொரு மாசம் வாழ்வேன். ஒரு மாசம் தானே கூட சேர்ந்து இருப்போம், இப்ப பன்னிரெண்டு மாசம் அவ நினைவோடு வாழணும், அவ்வளவுதான் வித்யாசம். நீங்க எல்லாரும் இருக்கீங்க.. இப்ப இந்த குட்டி ராஜாத்தி வேற இருக்கா.. எழிலுகிட்ட பக்குவமா பேசுங்க” என்றார் விஜயன் பேத்தியை கையில் அள்ளிக்கொண்டு.
“கவி, உன் பாப்பாக்கு என்ன பெயர் வைக்கவும் உனக்கு முழு உரிமை இருக்கு. நீயும் மாப்பிள்ளையும் சேர்ந்து முடிவு செய்ங்க. அதே நேரம் எழிலும் பாப்பா மேலே உள்ள பாசத்துல தானே சொல்லுது.. எடுத்து சொன்னா புரிஞ்சுக்கும். அவகிட்ட கோவப்படாத மா” என்றார் மீனா கவியிடம்.
கவியும் சரி என்று தலையை ஆட்டினாள்.
அன்று இரவு தான் கவியரசி கணவனிடம் “நீங்க என்ன பெயர் வைக்கலாம்னு யோசிச்சு இருக்கீறீங்களா” என்று கணவனிடமே கேட்டாள்.
“உனக்கு அத்தை பெயர் வைக்கணும்னு ஆசைன்னா எனக்கு பரவயில்லை” என்றான் கவின்.
“நான் உங்களை முன்னவே கேட்டிருக்கணும், சரி சொல்லுங்க உங்களுக்கு என்ன பெயர் வைக்க ஆசை”
“நீ கவியரசி நான் கவின், அதனால நம்ம பாப்பா கவிநிலா.. நல்லா இருக்கா?”
“கவிநிலா சூப்பருங்க.. நல்லா இருக்கு..” என்றாள் உற்சாகமாக.
தங்கள் இருவர் பெயரும் சேர்ந்து வருவது போல கணவர் யோசித்திருக்கிறான் என்று அவளுக்கு ஒரே பெருமை.
“சீக்ரெட்டா வச்சுப்போம். பெயர் சூட்டு விழா அப்ப மத்தவங்களுக்கு சொல்லலாம் கவின்”
“சரி “
பதினொறாம் நாள் பெயர் சூட்டு விழா. அனுராதாவின் மறைவிற்கு பிறகு வீட்டில் எந்த விசேஷமும் நடக்காததால் கொஞ்சம் பெரிய அளவில் அனைவரையும் அழைத்து விழாவை செய்யலாம் என்று முடிவு செய்தார்கள்.
குழந்தையின் வரவு வீட்டில் மகிழ்ச்சியை மீட்டு கொடுத்தது என்றே கூறலாம்.
அன்று மாலை அனைவரும் ஹாலில் குழந்தையை நடுவில் படுக்க வைத்து சுற்றி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
“நாங்க ரெண்டு பேரும் பாப்பாக்கு மாமா தானே சித்தி?” என்று ரேவதியிடம் கேட்டான் குகன்.
“போங்கடா.. ஆளு தான் இவ்வளவு வளர்ந்து இருக்கீங்க.. நீங்க எப்படி மாமா ஆவீங்க ?”
“ஏன் சித்தி, ஒரு கேள்வி கேட்டா அதுக்கு நேரா பதில் சொல்லவே தெரியாதா உங்களுக்கு? பாவம் எங்க சித்தப்பா” என்றான் பதிலுக்கு குகன்.
“அத சொல்லு அண்ணா” என்று இடைப்புகுந்தாள் தமிழு.
“கவி உங்களுக்கு எல்லாம் அத்தாச்சி தானே, அதனால் பாப்பாக்கு நீங்க ரெண்டு பேரும் சித்தப்பா.. அன்பு, எழிலு, தமிழு எல்லாம் அத்தை முறை வேணும்”
“அத்தையா.. நான் பாப்பாக்கு அத்தையாம்மா?” என்றாள் எழிலு உடனடியாக.
“இது தெரியாம தான் இவ பொறந்ததுல இருந்து அவங்க அம்மாகூட மல்லுக்கு நிக்குறீயா?” என்றார் மகளிடம் நக்கலாக.
“அதை விடுமா.. நான் அத்தைன்னு முன்னவே ஏன் சொல்லலை?”
“இந்த பாப்பாக்கு மட்டும் இல்ல, பாலு, குகன் குழந்தைங்களுக்கு எல்லாம் கூட நீ அத்தை தான்”
ஆசையாக குழந்தையின் பாதங்களை வருடி கொடுத்தாள் எழில். அப்பொழுது கவி குழந்தைக்கு பசியாற்ற என உள்ளே தூக்கி சென்றாள்.
“பாலுண்ணா சீக்கிரம் கல்யாணம் பண்ணி எனக்கு ஒரு பாப்பாவை பெத்து கொடுங்க.. அத்தாச்சி பாப்பாவை என்கிட்ட பிரீயா கொடுக்க மாட்டேங்குறாக.. உங்க பாப்பாக்கு நான் பெஸ்ட் அத்தையா இருப்பேன் சரியா.. அத்தைக்கூட நான் எப்படி க்ளோசோ, அதே மாதிரி உங்க பாப்பாகூட நான் க்ளோசா இருப்பேன் சரியா.. நீங்க தருவீங்களா?” என்றாள் பாலமுருகனிடம் மிகவும் உணர்ச்சிவசமாக.
“ஒன்னு என்ன இரண்டு பாப்பாவா பெத்துகொடுத்திடறேன்” என்றான் அவனும் சூழலை இலகுவாக்க.
“நீ என்ன அண்ணா கஞ்சூசா இருக்க? எழிலு நான் நாலு அஞ்சு பெத்து தரேன்.. நீ கவலையே படாதே சரியா? எல்லாம் அத்தை அத்தைன்னு உன் பின்னாடியே சுத்துவாங்க பாரேன்” என்றான் குகன் அவளை உற்சாக படுத்த.
“நாம இத்தனை பேர் இருந்தாலும் அத்தைக்கு நான் மட்டும் தானே க்ளோஸ்.. அப்படி நான் ஒரு பாப்பாவை வச்சுப்பேன்..”
“அதுக்கு முதல்ல நீங்க ரெண்டு பேரும் படிச்சு முடிச்சு…
வேலைக்கு போய்..
செட்டில் ஆகி..
நல்ல பொண்ணா பார்த்து…
கல்யாணம் செஞ்சு..” என்று தமிழ் அடுக்கிக்கொண்டே போகவும்,
“அய்யகோ கேட்கவே கண்ணை கட்டுதே” என்றான் குகன் வடிவேலு பாணியில்.
அப்படியே பேச்சை மாற்றி சிறிது நேரம் விளையாட்டாக பேசிக்கொண்டிருந்தார்கள்.
அதன் பிறகு தனிமையில் “சித்தி எனக்கு என்னமோ நாம எழிலை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகணும்ன்னு தோணுது” என்றான் பாலு ரேவதியிடம்.
அவருக்கும் அந்த எண்ணம் சிறிது நாட்களாக இருந்தது.
“பார்ப்போம் டா.. இந்த பங்க்ஷன் முடியட்டும்” என்றார் ரேவதி.
எப்பொழுதையும் போல விழாவிற்கு எல்லா வேலைகளையும் அண்ணன் தம்பி முவரும் இழுத்து போட்டு செய்தார்கள்,
விஜயனை ஒன்றுமே செய்ய விடவில்லை.
“இப்படி தாய் மாமன்கள் கிடைக்க புண்ணியம் பண்ணிருக்கணும்” என்று கவியின் மாமியார் கூறிக்கொண்டே இருந்தார் மருமகளிடம்.
கவிக்கு பெருமையாகத்தான் இருந்தது.
அன்பரசியும் கணவனுடன் ஒரு நாள் முன்னதாகவே வந்து விட்டாள்.
பேச்சும் சிரிப்புமாய் அனைவரும் எல்லா வேலைகளையும் சேர்ந்தே செய்தனர்.
விழாவிற்கு ரேவதி நாகரத்னாவையும் அழைத்தார்.
“நான் இன்னொரு நாள் வந்து குழந்தையை பார்த்திட்டு வரேன் ரேவதி, விழாவுக்கு வரலை, தப்பா எடுத்துக்காதீங்க” என்று தயங்கிக்கொண்டே கூறினார்.
“ஏன் ரத்னா, அன்னிக்கு வேற விசேஷம் ஏதாவது இருக்கா?”
“அப்படி இல்லை, கண்ணத்தான் போனதுக்கு அப்புறம் நான் பெருசா எந்த விசேஷத்துக்கும் போறது இல்ல.”
“இவ்வளவு நாள் போகல சரி, இன்னும் எத்தனை நாள் போகாம இருக்க முடியும் சொல்லு. வாழ்த்து சொல்ல நல்ல மனசு தான் வேணும். கண்டிப்பா நீயும் பிள்ளைகளும் வரணும்” என்றார் கட்டளையாக. அதோடு விடாமல் சாந்தியையும் மீனாவையும் பேச வைத்தார்.
காமாட்சி அம்மா தம்பதியினரையும் அழைத்திருந்தார்கள்.
அதனால் விழாவிற்கு அன்னையும் மகன்களும் காமாட்சி அம்மா தம்பதியினருடன் வந்தார்கள். விழாவினை அவர்கள் வீட்டின் அருகிலேயே ஒரு சிறிய மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இவர்கள் வந்தததுமே ரேவதி இவர்களை இன்முகத்தோடு வரவேற்றார். பின் எழிலையும் தமிழையும் அவர்களுடன் இருக்குமாறு பணித்துவிட்டு ரேவதி வேலைகளை பார்க்க சென்றுவிட்டார்.
“வாங்க ஆன்ட்டி, வாங்க எல்லாரும்” என்று பெண்கள் இவர்களை அழைத்து சென்று அமர வைத்தனர்.
நன்றாகவே கவனித்து கொண்டனர்.
கார்த்தியையும் விக்கியையும் அழைத்து கொண்டு போய் கவின் பாலுவுடன் சேர்த்துவிட்டாள் தமிழரசி.
காமாட்சி அம்மா சொந்தங்களுடன் கலந்து விட்டார். அவரது கணவர் சுந்தரேசனும் கிடைத்த ஒன்னு ரெண்டு உறவினர்களுடன் ஐக்கியமாகி விட்டார்.
எழில் மட்டும் ரத்னாவுடன் அமர்ந்துகொண்டாள்.
“ஏம்மா உன் முகம் வாட்டமா இருக்கு?” என்றார் ரத்னா எழிலிடம்.
“எங்க அத்தை நியாபகமா இருக்கு. யார்கிட்ட சொன்னாலும், என்னை டைவேர்ட் பண்றேன்னு வேற பேசுறாங்க..” என்றாள் வருத்தமாக.
“உனக்கு உங்க அத்தையை ரொம்ப பிடிக்குமா?” என்று பேச்சு கொடுத்தார் மெல்ல.
“எனக்கு எங்க அம்மாவை விட அத்தையை தான் ரொம்ப பிடிக்கும்”
“ஓ.. உங்க அத்தை எப்படி இருப்பாங்க?”
“எங்க அத்தை ரொம்ப அழகு.. க்யூட்.. கொஞ்சம் குண்டு.. ஆனா சப்பியா அமுல் பேபி மாறி இருப்பாங்க. எனக்கு அவங்க கன்னத்தை கிள்ள ரொம்ப பிடிக்கும்”
“அவங்களை மிஸ் செய்றியா?”
“நான்னா அத்தைக்கு உயிர். அத்தைன்னா எனக்கும் அப்படித்தான். அவங்களை மிஸ் பண்றேன். அதனால யாரும் என்கிட்டே அத்தை பத்தி பேசுறது இல்ல.. நான் அப்செட் ஆயிடுவேன்னு”
“என்கிட்டே சொல்லு, நான் கேட்கிறேன்.. எனக்கும் உங்க அத்தையை பத்தி தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு”
அதன் பிறகு மடை திறந்த வெள்ளமென அவளை பற்றியும் அனுராதாவையும் பற்றியும் கூறிக்கொண்டே இருந்தாள். சிறு வயதில் இவளுக்கு அடிபட்டால் அனுராதா அழுததையும், அனுராதாவிற்கு ஒன்று என்றால் இவள் சண்டைக்கு சென்றது என்று சுவாரசியமாக பலதும் கூறினாள். கடைசியாக அவர் இறந்தது, அதற்கு முன் அவர் கோவிலில் பேசியது என்று அனைத்தையும்.
நகரத்னாவும் எழிலும் பேசிக்கொண்டிருப்பதை அனைவரும் கவனித்துக்கொண்டு தான் இருந்தார்கள். பல நாட்களுக்கு பிறகு மகளின் முகம் மலர்ந்து விகசித்திருந்ததாக பட்டது ரேவதிக்கு.
“எனக்கு பெண் பிள்ளைகள் இல்ல. அண்ணன் பிள்ளைகள் எல்லாம் என்னை அத்தைன்னு கூப்பிட்டது கூட இல்லை.. நீ பேசுறது கேட்கறப்ப எனக்கு அத்தை ஆகணும்னு ஆசையா இருக்கு” என்றார் நாகரத்னா கண்கள் கலங்க.
அழகிய நட்பு மலர்ந்த்து இருவருக்கிடையில்.
அதன் பிறகு இவர்களும் மற்றவர்களோடு விழாவுடன் இணைந்துவிட்டார்கள்.
‘கவிநிலா’ என்ற பெயர் மிகவும் நன்றாக இருப்பதாக எல்லாரும் பாராட்டினார்கள்.
கார்த்தியும் விக்கியும் பாலு குகனுடன் நட்பாக பழகினார்கள்.
விழா முடிந்ததும் நாகரத்னாவின் குடும்பம் மகிழ்ச்சியாக விடைபெற்றனர்.
————
எல்லாரும் எடுத்து கூறினாலும் எழிலரசி மட்டும் அத்தையோட கடைசி ஆசை, மாமா கல்யாணம். அதை நிறைவேற்றினா தான் அத்தை ஆத்மா சாந்தி அடையும் என்று பிடிவாதமாக நின்றாள்.
அவளது பிடிவாதத்தை பார்த்து விஜயனை தவிர மற்ற அனைவருமே எழில் சொல்வதை ஓரளவிற்கு சரி என்பது போன்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.
விஜயன் திருமணத்திற்கு ஒத்து கொள்ளவேண்டும் என இருபத்தி ஒரு நாள் தினமும் காலையில் முருகன் கோவிலுக்கு வந்து அடிபிரதக்ஷணம் செய்து, விளக்கு ஏற்றுவதாக வேண்டிக்கொண்டாள் எழிலரசி.
அதன் படி நாளை முதல், ‘முருகா அத்தையோட ஆசையை மாமாக்கு நீ தான் முருகா புரிய வைக்கணும்’ என்று தன் வேண்டுதலை தொடங்க இருக்கிறாள்.
விஜயனும், ‘முருகா எனக்காக இந்த பிள்ளை படுற பாட்டை பார்க்க முடியலை. நீ தான் அப்பனே என் மனசை அவளுக்கு புரிய வைக்கணும். அப்படி எழிலரசி மனசு மாறினா என் தலைமுடியை உனக்கு காணிக்கையா தர்றேன்’ என்று வேண்டிக்கொண்டார்.
அந்த வேலன் யார் பக்கம் நிற்க போகிறாரோ?
error: Content is protected !!