Skip to content
Post Views: 1,617
அவள் சொல்லியதில் ஆனந்தன் அவளை அடிக்க வர, செண்பகம் அவரை பிடித்துக்கொண்டார்.
“அதான் அவள் முடியாது சொல்றாளே அப்புறமும் எதுக்கு அவளுக்கு அழுத்தம் கொடுக்குறீங்க?” என்ற செண்பகத்தை ஆனந்தன் உதறித் தள்ளினார். கீழே விழுந்த செண்பகம், அவரை அசையவிடாது கால்களை பிடித்துக்கொண்டார்.
“வீணா பிடிவாதம் பிடித்து உன் பொண்ணு வாழ்க்கையை நீயே அழிச்சிடாத செண்பகம்” என்று ஆனந்தன் உறுமினார்.
“என்னைவிட இப்போ வந்த உன் காதல் பெருசா மித்யு?” ரச்சனா கண்ணீர் விழிகளோடு கேட்க,
Advertisement
“நீயும் உன் காதலை விட முடியாமதான அக்கா, தங்கச்சின்னு கூட யோசிக்காம இப்படியொரு விஷயத்துக்கு என்னை சம்மதிக்க வைக்கப் போராடுற?” என எதிர்க்கேள்வி கேட்டிருந்தாள்.
ரச்சனாவால் பதில் சொல்ல முடியவில்லை.
“இங்க நடக்குற டிராமாவை பார்த்தா இவங்க சொன்னது நடக்காது ஹேமந்த். நாமா வா போயி உன் கல்யாண வேலையைப் பார்ப்போம்” என்று செல்வராணி கணவர், மகனுடன் வெளியேற, வேகமாக எழுந்து சமையலறை புகுந்து கதவடைத்துக் கொண்டாள் ரச்சனா.
Advertisement
“அய்யோ என் பொண்ணு” என்று ஆனந்தன் கத்திட, வெளியே சென்றவர்கள் உள்ளே வந்திருந்தனர்.
Advertisement
“என் பொண்ணை சாவடிக்கத்தான இவ்வளவுக்கு இறுமாப்பு புடிச்சு அழுத்தமா இருந்தீங்க ரெண்டு பேரும்… என் பொண்ணுக்கு எதுவுமாச்சுன்னா உங்களை வெட்டிப்போட்டிடுவேன்” என மித்யுகா மற்றும் செண்பகத்தைப் பார்த்து வெறியோடு கூறிய ஆனந்தன், கதவினை உடைக்க முயன்றார்.
ஹேமந்தும் அவனின் தந்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.
உள்ளிருந்து கதவு வழி பெட்ரோல் வர…
Advertisement
அதுவரை ரச்சனா பயங்கொள்ளச் செய்யவே இப்படி நடந்துக்கொள்கிறாள்… அவள் நிச்சயம் தற்கொலை செய்யுமளவிற்கு செல்லமாட்டாளென திடமாக இருந்த செண்பகம், மித்யுகாவும் பதறி கதவினை தட்டினர்.
“அய்யோ பெட்ரோல் தட்டுப்பாடு வரும்ன்னு வீட்ல வாங்கிட்டு வந்து வச்சது தப்பாப்போச்சே” என்று புலம்பிய ஆனந்தன், “கொண்டு வந்து கொடுத்தா, அதை வைக்க உனக்கு வேற இடமே கிடைக்கலையா?” எனக்கேட்டு செண்பகத்தின் தோளிலே பல அடிகளை போட்டார்.
“அம்மாடி ரச்சனா எந்த தப்பான முடிவுக்கும் வந்துடாதடி… உனக்கு அம்மா நானிருக்கேன். எல்லாம் சரி செய்திடலாம்” என்று செண்பகம் கதவினை தட்டிக்கொண்டே பேசிட…
“அவரே இல்லைன்னு ஆனதுக்கு அப்புறம் நான் உயிரோட உனக்கெதுக்கு பாரமா இருக்கணும். என்னால என்ன பிரயோஜனம். குழந்தைக்கூட பெத்துக்க முடியாத பாவி நான்” என்று உள்ளிருந்து அழுது கரைந்தாள் ரச்சனா.
“இப்பவாவது சரின்னு சொல்லு மித்யு. அப்போதான் அவளை காப்பாற்ற முடியும்” என ஆனந்தன் மித்யுகாவின் கைகளைப் பிடிக்க,
“தீப்பெட்டி கூட வச்சிருக்கமாட்டியாம்மா? கிடைச்சிருச்சு” என்று உள்ளிருந்து கேட்ட ரச்சனாவின் குரலில்…
“அய்யோ மித்யு உன் அக்காவை காப்பாத்து” என்று மித்யுகாவிடம் கைக்கூப்பியிருந்தார் செண்பகம்.
மித்யுகாவிற்கு அந்நேரம் ரச்சனாவின் உயிரே பெரிதாகிப்போனது.
************
மூன்று நாட்கள் உணவின்றி உறக்கமின்றி அறையிலே முடங்கிக்கிடந்த மித்யுகா வெளியில் வந்திருந்தாள்.
செண்பகம் இடிந்துப்போனவராக சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தார். கண்ணீர் உகுத்தபடி.
ஆனந்தன் தான் நடக்கவிருக்கும் செயல் ஏற்புடையதென்றும் இதனால் மகளின் வாழ்வு காக்கப்படுமென்றும் மூன்று நாட்களாகப் பாடும் அதே பல்லவியை வலியுறுத்திக் கொண்டிருந்தார்.
ஒரு மகளை வாழ வைத்திட இன்னொரு மகளை பலியாக்குவதா என்ற செண்பகத்தின் குமுறல் உள்ளக்கிடங்கோடு அமிழ்ந்துப்போனது. வெளியில் சொல்லியும் பலனில்லையே!
மித்யுகா சம்மதித்ததில் ரச்சனா அடுத்த நொடியே கதவினை திறந்துக்கொண்டு வந்திருந்தாலும் அவளின் மேல் துளி ஈரமில்லை. வெறும் தரையில் மட்டுமே பெட்ரோலை ஊற்றி நாடகமாடியிருக்கிறாள். இருப்பினும் அந்நேரம் அதனைக் கேட்கும் தெம்பு மித்யுகாவுக்கோ செண்பகத்திற்கோ கிடையாது.
கேட்டால்?
“அப்போ நான்/அவள் சாகணும் எதிர்ப்பாக்கிறீங்களா? உண்மையாவே சாகட்டுமா?” என்று கேட்கும் ஆட்கள் தான் எதிரில் இருப்பவர்கள்.
மித்யுகா முகம் மூடி துடித்து அழுதிட…
“ரொம்ப தேங்க்ஸ் மித்யு” என்ற ரச்சனா, “நான் சொன்னேன்ல அத்தை… என் தங்கச்சி எனக்காக அவளோட உயிரைக் கூட கொடுப்பாள்” என்று பெருமையாக செய்வராணியிடம் கூறினாள்.
அவரோ உதடு சுளித்தவராக,
“நீ இன்னும் சாகலயேன்னு உன் தங்கச்சி பேச்சை மாத்திடப்போறா… எதுக்கும் உன்மேல உன் அப்பா மேல சத்தியம் வாங்கிக்கோ” என்றார்.
மித்யுகா அருகில் அமர்ந்த ரச்சனா,
“நீ திரும்ப முடியாது சொல்லிடுவியா மித்யு” என்று பாவம் போல கண்ணீர் விட்டவள், “நீ யாரையோ விரும்புறன்னு சொன்னியே அவங்க மேல சத்தியம் பண்ணு. உன் காதல் மேல சத்தியம் பண்ணு, எனக்கு கொடுத்த வாக்கிலிருந்து பின்வாங்கமாட்டன்னு” என்று அவள் முன் கையை நீட்டியிருந்தாள்.
மித்யுகாவுக்கு மனமே விண்டுப்போனது. ஏற்கனவே காதலை பின்னுக்குத்தள்ளிய, ம்ருதவ்வுக்கு துரோகம் இழைத்தாக எண்ணி அவள் உயிரோடு மரித்துக் கொண்டிருக்க, அவளின் மனம் ஒரு பொருட்டே இல்லையென்று ரச்சனா நடந்துகொள்வது அவள் மீதான அன்பை வெறுத்த உணர்விற்கு இட்டுச்சென்றது.
“இப்போ மட்டும் நீ சத்தியம் பண்ணல… நான் முன்ன பண்ணாம விட்டதை இப்போ பண்ணுவேன். இது என் ஹேமந்த் மேல சத்தியம்” என்ற ரச்சனா… “உனக்கேத் தெரியும்… நான் இப்போ உன்கிட்ட இப்படி நடந்துக்க காரணமே அவரோட நான் வாழனும்னு தான். அவர் மேலயே சத்தியம் வச்சிருக்கேன் அப்படின்னா, கண்டிப்பா செய்யாம விட்டதை செய்வேன்” என்றாள்.
அவள் அப்பட்டமாக மிரட்டுகிறாள் என்பது தெரிகிறது. ஆனாலு எதிர்க்க முடியவில்லை.
அவளைப் போல் சகோதரியை பணயம் வைத்திட மித்யுகா அவள் அல்லவே!
ஒரு உயிரோடு விளையாடி காதலை தக்க வைக்கும் சிறிய மனம் அவளிடமில்லை.
கை விரல்கள் நடுங்க உயர்த்திட,
“சாரி ம்ருதவ். இனி நான் உங்க யுகா இல்லை. இருக்கவும் முடியாது” என்று மனதோடு எண்ணியவளாக கண்களை மூடினாள். கன்னம் திரண்டு உருண்டது கண்ணீர்.
உயர்த்திய கரத்தின் மீது தானாக தனது உள்ளங்கையை சேர்த்திருந்தாள் ரச்சனா.
நினைக்க நினைக்க வலி கொடுக்க முடங்கிக்கிடந்தவள் தற்போது தான் வெளியில் வந்தாள்.
“நான் காலேஜ் போகணும். ஃபைனல் எக்ஸாம். கண்டிப்பா நான் எழுதனும்” என்றாள் மித்யுகா.
“படிக்கப்போறன்னு எவனோடவோ சுத்திட்டு இருந்த மாதிரி, இப்போ பரீட்சைன்னு போற நீ அவனோட ஓடிப்போயிட்டா… என் பொண்ணு வாழ்க்கை வீணாகிடுமே” என்றார் ஆனந்தன்.
“நானும் உங்க பொண்ணு தான்” என்றவள், “அந்த நினைப்பு உங்களுக்கு இல்லாமப் போயிடுச்சுன்னு தெரியுது” என்றதோடு, “நான் என் காதல் மேல சத்தியம் பண்ணியிருக்கேன்” என அழுத்தமாகக்கூறி திருச்சிக்குப் புறப்பட்டிருந்தாள்.
வரும் வழியெங்கும் ம்ருதவ்வை தன் வாழ்விலிருந்து விலக்கி வைக்க வேண்டுமென்ற சிந்தனை மட்டுமே!
தான் எப்படியொரு நிலையிலிருந்தாலும் தன்னை ம்ருதவ் ஏற்றுக் கொள்வான் என்பதில் திண்ணம் அவள்.
ஆனால் அவளின் காதல் மனம் ஏனோ அதற்கு இடம் கொடுக்கவில்லை.
செயற்கை முறையாகவே இருந்தாலும், இன்னொருவனின் குழந்தையை சுமக்க இருப்பவள், தெரிந்தே கலங்கத்திற்குள் கால் வைப்பவள்,
தங்களின் காதலின் மரியாதைக்காக , பார்வையிலும் கண்ணியம் காத்து காதலித்தவனுக்கு தான் ஏற்புடையவளன்று என்றே நினைத்தாள்.
அதற்காகவே ம்ருதவ்வை தெரிந்தே வலிக்கச் செய்து பிரிந்திருந்தாள்.
அன்று அவளின் மறுப்பை ஏற்க முடியாது ஏற்று வந்தவன் ரதி மற்றும் கமலேஷிடம் துடி துடித்து கதறிய ஓலம் சொல்லிலும் நிறைத்துவிட முடியாது. வெறும் கூடாய் அலைந்தவனின் மனதை மித்யுகாவிடமிருந்து, அவளின் நினைவிலிருந்து மீட்க எவ்வளவோ இருவரும் போராடியும் முடியாது போனது.
எப்போதும் ஜிமிக்கி தொங்கும் சாவியுடன், தோட்டத்து இருக்கையில் அமர்ந்து விடுபவனின் கற்சிலை தோற்றத்தில் உண்ண வைப்பதும் உறங்க வைப்பதுமே பெரும் பாடாகியிருந்தது.
ரதியும், கமலேஷும் மாபெரும் போராட்டத்திற்கு பின்னர் தான் ம்ருதவ்வை நிகழ் உலகிற்கு மீட்டு வந்தனர் என்று சொல்லலாம்.
இருவரும் தங்களின் வாழ்வைகூட மறந்து தன்னுடனே, தன் பின்னாலே விழுந்து கிடப்பதை உணர்ந்தே கடினப்பட்டு நடமாடத் துவங்கியிருந்தான் ம்ருதவ். அவளின் நிஜமில்லா நிழலான நினைவுகளோடு.
மித்யுகாவை கல்லூரிக்கு அனுப்பி வைத்திட்டாலும், விஷயம் தெரிந்ததும் ரச்சனா ஹேமந்துடன் பின்னாலே வந்து அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தாள்.
“எக்ஸாம் அப்போ மட்டும் போய்க்கலாம். நானே கூட்டிட்டுப்போய் கூட்டிட்டு வர்றேன். ஒவ்வொரு எக்ஸாமுக்கும் நடுவில் லீவ் இருக்குமே! அதனால் அலைச்சல் தெரிஞ்சிக்காது” என்று ரச்சனா சொல்லியதோடு, சொன்னதை செய்திருந்தாள்.
மித்யுகாவுக்கு தேர்வு முடிந்ததும் மும்பைக்குக் கூட்டிச்சென்று செயற்கை முறையில் கருத்தரித்தலுக்கு உண்டான அனைத்து விதமான பரிசோதனைகளையும் மித்யுகாவிற்கு செய்து முடித்து தான் ஓய்ந்தாள்.
ம்ருதவ்வுக்கு நிகரான வலி மித்யுகாவுக்குமே! சொல்லப்போனால் அவனை வேண்டாமென்று சொல்லிய வலியும் சேர்ந்து அவளுக்கு இரட்டிப்பாக.
மனதோடு மட்டுமே அழுது கரைய முடிந்தது.
ரச்சனாவின் இழுப்பிற்கு, மருத்துவர்களின் கையில் தன்னை முழுதாய் ஒப்படைத்து பொம்மைபோல் நடமாடினாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ம்ருதவ்வின் நெஞ்சம் சாய்ந்து சொல்லிக் கொண்டிருந்த மித்யுகாவிடம் கொஞ்சமும் நடந்த நிகழ்வுகள் குறித்தான தாக்கமோ, சுமந்த வலியின் மிச்சமோ முகத்தில் பிரதிபலிக்கவில்லை.
மாறாக தனது பாரத்தையெல்லாம் தன்னவனிடம் இறக்கி வைக்கும் ஆசுவாசம் மட்டுமே!
“அவ்ளோதானா?”
இத்தோடு முடியவில்லையென தெரிந்துகொண்டே வினவினான்.
அவள் பட்ட வலியெல்லாம் செண்பகத்தின் வாயிலாக தெரிந்து வைத்திருக்கும் போதும், இக்கணம் அவளாக சொல்லிக் கேட்டிட அவனுக்கு ஓவென்று கத்தி அழ வேண்டும் போல் வருகிறது.
தனக்காக, தான் சொல்லியதற்காக அவள் மனதை திடப்படுத்திக் கொண்டு சொல்லும்போது, அவளுக்காக தான் அழுதிடக் கூடாதென்பதில் உறுதியாக இருந்தான்.
“மெயின் ட்விஸ்டே இனிதான் பாஸ்” என்றவளிடம் ரணம் நிறைந்த சிரிப்பு.
அச்சிரிப்பில் ம்ருதவ்வின் இதயம் அனலில் விழுந்ததைப்போன்று வெந்து சுருண்டது.
“போதும் யுகா! இனி என்னால முடியாது” என்றவன் அவள் பார்த்தப் பார்வையில்…
“சொல்லு… நீ கொடுக்கிற வலி எனக்கு புதுசில்லையே” என்றான்.
“சொல்லிக் காட்றீங்களா?”
“அப்படியும் வச்சுக்கோ! இதையும் உன்கிட்ட தான நான் சொல்ல முடியும்” என்றவன், அவளின் நெற்றி முட்டி… “உனக்குள்ள இன்சர்ட் பண்ணது ஹேமந்த் குழந்தையே இல்லை. அது யாரோடதோ!” என்றான்.
அதனை அவள் சொல்லி கேட்கும் திடம் அவனுக்கு இல்லை. ஆதலால் அவளின் அவனாக அவனே சொல்லியிருந்தான்.
உதட்டில் முறுவல் படர்ந்திருக்க, மித்யுகாவின் இடது கண் கண்ணீரை வழிய விட்டிருந்தது.
கன்னம் தீண்டிய கண்ணீரை தனது விரல் கொண்டு தீண்டியிருந்தான் ம்ருதவ்.
“எப்படி ஏமாந்திருக்கேன்” என்ற மித்யுகா, “என் அக்காவை நினைக்கும் போது இந்த அன்பு பாசமெல்லாம் பொய்ன்னு நினைக்கத் தோணுது. ஆனா இன்னமும் இந்த அன்பு மேலலாம் நம்பிக்கை இருக்க ஒரே காரணம் நீங்க… நீங்க என் மேல வச்சிருக்க காதல்” என்றாள்.
“யுகா!”
“உண்மை தெரிஞ்சப்போ” என்று நிறுத்தியவள்,
“உண்மையிலே குழந்தை பிறக்க முடியாத குறை ஹேமந்துக்குத்தான். அதை குடும்பமே மறைச்சு, ரச்சனாவுக்கு குறைன்னு நம்ப வச்சு, அவங்க குடும்பத்துக்கு வாரிசு வேணும்னு திட்டம் போட்டு என்னை…” என்றவள் மூச்சினை ஆழ்ந்து உள்ளிழுத்து, “நான் எதுக்கு அழனும் ம்ருது” என்று அவனின் தோளில் முகம் புதைத்தாள். கண்ணீரை தனக்குள் விழுங்கியவளாக.
ம்ருதவ் அரவணைத்து அவளின் முதுகில் தட்டிக் கொடுக்க…
“உண்மை தெரிஞ்சு என்னைப்பற்றி கொஞ்சமும் யோசிக்காமா ரச்சனா டிவோர்ஸ் கேட்டு நிக்கிறாள்… அது அவளோட குழந்தை இல்லையாம். அவளுக்குத்தான் குறைன்னு நம்ப வைக்க, என்னோட” என அவனின் மார்புச் சட்டையை இறுக்கிப் பிடித்து கண்ணீரை அடக்கியவள், “என்னோட எக்கில் உருவானதாம். அதனால அவளுக்கு கொஞ்சமும் குழந்தைங்கக்கிட்ட சம்மந்தமில்லையாம். அவனோட குறை எல்லாருக்கும் தெரிஞ்சு அவனோட ஈகோ ஹர்ட் ஆகிடுச்சாம். அதுவும் குழந்தை அவனால் உருவானது இல்லையாம். அதனால அந்த குழந்தையே வேணாம்னு அவனும் டிவோர்ஸ் கொடுத்திட்டான். ரெண்டு பேரும் அவங்களால, அவங்க வாழ்க்கைக்காக உருவான குழந்தைகள் வேணாம்னு சொல்லியாச்சு. பிரிஞ்சாச்சு. நான் அன் மேரிட்… சோ ஹேமந்த் அவனோட ஃப்ரெண்ட் ஹாஸ்பிடலில் இல்லீகளா தான் இந்தமுறை நடந்தது. அதனால அடுத்தக்கட்ட நடவடிக்கையா என்ன பண்ணனும் கூட எனக்குத் தெரியல. இங்க வந்தா, இவங்களுக்கு மேல மிஸ்டர் ஆனந்தன் செய்தது தான் சிறப்பான சம்பவம்” என்றாள்.
கசந்த சிரிப்பில் தனது கசப்பான கசடுகளை விரட்ட முயன்றாள்.
“நான்… நான் யாரோ ஒருத்தனோட கெட்டுப்போய் வந்திருக்கேன்னு என் முன்னாடியே ஊரில் கேட்கிறவங்களுக்கு பதில் சொல்றார். அவரோட என்னால எப்படி இருக்க முடியும். யாரும் வேணாம்… தனியா என்னை பார்த்துக்க முடியும்னு அப்போ ஒரு தைரியம். வீட்டை விட்டு கிளம்பினேன். அம்மாவும் வந்துட்டாங்க. எல்லாத்துக்கும் அப்போ இருந்த ஒரே ஆறுதல் அம்மா தான். ஆனா அவங்களும் கடைசியில அவங்க மூத்த பொண்ணு உயிருக்காக என்னை பணயம் வைக்கத்தானே செய்தாங்க… அவங்களோடவும் பேசறதில்லை அப்போ. குழந்தைங்க பிறந்து, வருஷம் போக போக கண்ணு முன்ன வந்து பேசுறவங்ககிட்ட கோபத்தைக் காட்ட முடியல” என்றாள்.
“யுகா” என்று அவளை தனது மார்புச் சூட்டில் இதம் சேர்பித்து அழுத்திக் கொண்டான். தானே அவளுக்கு மருந்தென்று அவன் அறிவானே!
இருக்கும் இடம் சூழல் எதையும் கருத்தில் ஏற்காது, அதுவரைக்குமான மொத்த அணைப்பையும் அவளுக்கு வழங்கியிருந்தான்.
உயிரற்று மரணித்திருந்த இரு இதயங்கள் அவ்வணைப்பில் மெல்ல ஜீவன் பெற்று உயிர்த்தது.
‘மீண்டும் ஒருமுறை…
அவனருகில் வாழ்ந்திட,
வாய்ப்புக் கிடைத்தால்…
உயிர் முழுவதையும்,
அவனின் அன்பில்…
சரணாகித்து விடுவேன்!
error: Content is protected !!