Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

77. பிரியதர்ஷினி S - உனதன்பில் சரணாகிறேன்

உனதன்பில் சரணாகிறேன் 19.1

உனதன்பில் சரணாகிறேன் 19.1

மித்யுகாவிடத்தில்…

காதலின் கனவுகள் யாவும் அந்த ஒற்றை இரவுப்பயணத்தில் பூர்த்தியான பேரின்பம்!

“என்ன வாசலிலே நின்னுட்டு உள்ள வா!”



Advertisement

பின்னோடு வந்த ம்ருதவ் அவளது வீட்டிற்கு எதிரில் நின்றிட, வாயில் படி ஏறியவள் அவனைப் பார்த்தவாறு நின்றிட, அவளின் தந்தை ஆனந்தன் உள் அழைத்திருந்தார்.

அகம் மகிழும் நிறைவை அவனுக்கு பறக்கும் முத்தத்தின் வழி அனுப்பி வைத்தவள், சிறு தலையசைப்போடு வீட்டிற்குள் சென்றிருந்தாள்.

“என்னப்பா விஷயம்… இப்போவே வரணும்னு” என்று கேட்டவாறு உள்ளே வந்த மித்யுகா, அந்நேரத்தில் தனது அக்கா வீட்டு உறுப்பினர்களை அங்கு எதிர்பார்க்கவில்லை.

Advertisement

வரவேற்கும் விதமாக மென் தலையசைப்பு அவளிடம். அக்காவின் மாமனார், மாமியாரைப் பார்த்து.

Advertisement

மித்யுகாவின் அக்கா ரச்சனா! அவளைவிட ஏழு வயது மூத்தவள். இருவருக்கும் அப்படியொரு பிணைப்பு. மித்யுகாவுக்கு ரச்சனா அன்னைக்கு நிகரானவள்.

நிகரானவள் என்பதாலோ என்னவோ ரச்சனாவால் முழுமையான அன்னையாக தங்கையின் வாழ்வில் நடந்துக்கொள்ள முடியவில்லை.

தந்தை தான் கேட்டதற்கு பதில் சொல்லாது ரச்சனாவின் மாமனார் சந்தானம் அருகில் சென்றமர, மித்யுகா தலை தாழ்ந்து நின்றிருந்த ரச்சனாவின் அருகில் செல்ல முயன்றாள்.

Advertisement

ஆனால் அவளை ரச்சனாவின் அருகில் விடாது,

“போய் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வா மித்யு” என்று செண்பகம் அங்கிருந்து தன்னுடைய இளைய மகளை அப்புறப்படுத்தவே நினைத்தார்.

“அக்காகிட்ட பேசிட்டு போறேம்மா” என்ற மித்யுகா, “என்ன மொத்த குடும்பமும் வந்திருக்கு. திரும்ப குழந்தை இல்லைன்னா உன் சம்மந்திக்காரம்மா சண்டையை கூட்டியிருக்காங்களா?” என அன்னையின் காதில் மெல்ல கிசுகிசுத்தாள்.

“அப்புறம் சொல்றேன். நீ முதல்ல உள்ள போ மித்யு” என்று செண்பகம் சத்தமின்றி பற்களைக் கடிக்க…

“வை டென்ஷன் மம்மி…” என்ற மித்யுகா, “நான் போறேன். நீ கூலாகு” என்று அறைக்குள் சென்றாள்.

ரச்சனாவின் மாமியார் செல்வராணி தனது தொண்டையை செருமி ரச்சனாவின் கவனத்தை தன்பக்கம் திருப்பி கண்கள் காட்டினார்.

மாமியாரின் பார்வை மொழி புரிந்தவளாக ரச்சனா மித்யுகாவின் பின்னால் செல்ல அடி வைத்திட,

“அவள் கை கால் கழுவிட்டு வரட்டுமே ரச்சனா” என்று இழுத்து நிறுத்தியிருந்தார்.

“என்ன ஆனந்தன்… நீங்க உங்க பெரிய மகள் வாழ்க்கை அது இதுன்னு புலம்பவும் தான், நான் இங்க வந்து உட்கார்ந்திருக்கேன். ஆனால் உங்க பொண்டாட்டிக்கு இதுல உடன்பாடில்லைன்னு ஆரம்பத்திலிருந்து நல்லாவே தெரியுது. சண்டைப்போட்டு நடத்திக்கிறதுல விருப்பமில்லை. குறையுள்ள உங்கப்பொண்ணுக்காக நாங்க இவ்வளவு இறங்கி வந்திருக்கிறதே பெரிய விஷயம். நாங்க உங்களுக்காக பெருந்தன்மையா நடந்துக்கும் போது, உங்களுக்கு அனுசரிச்சு நடந்துக்கத் தெரியலையே” என்றார் செல்வராணி.

“அவள் என்னைமீறி என்ன செய்திட முடியும் சம்மந்தி” என்ற ஆனந்தன், “இப்போ என் பெரிய பொண்ணு வாழ்க்கையை காப்பாத்த வேண்டிய சூழ்நிலையில் நானிருக்கேன்” என்றார்.

“ஹ்ம்ம்… என்னவோ! உங்கப்பொண்ணு இல்லைன்னா, எங்களுக்கு ஒன்னும் ஆகப்போறதில்லை. இப்பவும் என் மகனை… அதான் உங்க மருமகனைக் கட்டிக்க பொண்ணு கொடுக்க ஆளுங்க வரிசையில் இருக்காங்க. என் மகன் உங்கப்பொண்ணை விரும்புராங்கிறதாலதான் இவ்வளவுக்கு பொறுமையா இறங்கி வந்திருக்கேன்” என்றார்.

ஆனந்தன் செண்பகத்தை முறைத்தவராக, “நீ வாய் மூடிக்கிட்டு நிக்கணும். எப்படி பேசணுமோ பேசி நான் சம்மதிக்க வச்சிக்கிறேன். அவள் உனக்கு மட்டும் பொண்ணுங்கிற மாதிரியும், உனக்கு தான் அவள் மேல பாசம் அக்கறையெல்லாம் இருக்குங்கிற மாதிரி நாடகம் போடாத” என்று பேசினார்.

செல்வராணி மிதப்பாக ஏறிட, அவரின் கணவர் சந்தானம் மீசையை முறுக்கினார்.

அவர்கள் முன்னால் கணவர் மட்டம் தட்டுவது செண்பகத்திற்கு புதிதல்ல. ஆனால் இன்று கூனிக்குறுகி நின்றார்.

ஒரு மகளுக்காக இன்னொரு மகளின் வாழ்வை சூன்யமாக்குவதா எனும் தார்மீக கோபம் அவருக்கு இருந்த போதும் கணவரை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை.

மித்யுகாவை இங்கு வர வேண்டாமென்று சொல்ல பல வகையில் முயன்றும் அவரால் முடியாது போனது. அவரின் முயற்சியை எல்லாம் முறியடித்து, அலைபேசியையும் பிடுங்கி வைத்துக்கொண்டார் ஆனந்தன்.

“பொறுமையா யோசிங்க… இதுக்கு வேற தீர்வு கிடைக்கும். அவள் குழந்தைங்க, பார்க்க வேண்டியது நிறைய இருக்கு. ரச்சனாவுக்காக அவள் வாழ்க்கையை பாழக்கிடாதீங்க” என்று செண்பகம் எவ்வளவோ மன்றாடியும் ஆனந்தன் மனமிறங்கவில்லை.

“நாம பொறுமையா யோசிச்சு முடிவெடுக்கிறதுக்குள்ள, உன் பெரியப்பொண்ணு வாழ்க்கை வழுக்கி விழுந்திருக்கும். அவள் வாழாவெட்டியா வந்து உட்கார்ந்திருந்தா மட்டும் சின்னவளுக்கு கல்யாணமாகிடுமா” என்ற ஆனந்தன், “அவளுக்கு கல்யாணம் பண்ற நேரம் இதெல்லாம் மறந்திருக்கும்” என்றார்.

“இதெல்லாம் அநியாயம்!”

“ரச்சனாவை வெட்டிவிட்டுட்டு உன் மருமகனுக்கு ரெண்டாவது கல்யாணம் செய்ய ஏற்பாடு நடக்குது. அதைவிடவா அநியாயம்?” என்ற ஆனந்தன், “குறையும் நம்ம பொண்ணு பக்கம் தான! சரி இவன் வேணாம் விவாகரத்து பண்ணிட்டு வந்து இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கவும் வாய்ப்பில்லை. அவள் வாழ்க்கையும் காப்பாத்தி, சின்னவள் வாழ்க்கையையும் நேர் செய்யுறேன்” என்றார்.

“என்ன சொன்னாலும் என்னால சமாதானம் ஆக முடியலங்க.” செண்பகம் அழுகையோடு மறுக்க,

“உன் பெரிய மகளை நினைச்சுப்பாரு” என்ற ஆனந்தன், “உன்கிட்ட பேச்சில்லை. உன் சின்ன மகளையே ஒத்துக்க வைக்கிறேன்” என மித்யுகாவை வரவழைத்து இருந்தார்.

அவள் வரும் நேரம் ரச்சனாவின் வீட்டினரும் இப்படி வந்து உட்காருவார்கள் என்று செண்பகம் எதிர்பார்க்கவில்லை.

ரச்சனாவின் கணவன் ஹேமந்த் அங்கு நடப்பதற்கும் தனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லையெனும் நிலையில் யாருக்கு வந்த விருந்தோ என்று அமர்ந்திருந்தான்.

அடிக்கடி அவனின் பார்வை மட்டும் செல்வராணியுடன் பரிமாற்றல் கொண்டது.

“எங்க போனவள இன்னும் காணோம்” என்று செல்வராணி கேட்க, “எனக்கு இதுல உடன்பாடில்லை. என் பொண்ணையும் சம்மதிக்க வைக்க, அவளையும் சம்மதம் சொல்ல விடமாட்டேன்” என்றார் செண்பகம்.

“செண்பகம்!” முறைத்துக்கொண்டு, அமர்ந்திருந்த இடத்திலிருந்து ஆனந்தன் எழுந்து கத்திய கத்தலில் செண்பகம் அரண்ட போதும் திடமாக நின்றிருக்க, அறைக்குள்ளிருந்து மித்யுகா ஈர முகத்தோடு ஓடி வந்திருந்தாள்.

“வேலை முடிஞ்சுது. உங்க பொண்ணை நீங்களே வச்சுக்கோங்க. நாங்க கிளம்புறோம்” என்று எழுந்துவிட்ட செல்வராணி, “இன்னும் இங்கென்ன… வாங்க போலாம்” என்று மகனையும், கணவரையும் அழைத்திட, ஆனந்தன் அவர்களை தடுத்தார்.

“என்னப்பா என்னாச்சும்மா? அப்பா எதுக்கு இப்படி கத்தனீங்க” என்று அவள் கேட்க,

“அம்மாடி” என்று மகள் புறம் திரும்பிய செண்பகம், தன்னுடைய கால்களில் சுருண்டு விழுந்த ரச்சனாவின் கண்ணீர் பாதம் நனைக்கவே, மனதை இரும்பென இறுக்கி அமைதியாக நின்றுவிட்டார்.

எந்த மகளின் பக்கம் நிற்க வேண்டுமென்ற தள்ளாட்டம்.

“உன் பொண்ணு வாழ்க்கைக்கு நீயே குறுக்க வந்து தடையா நிக்காதம்மா. அவங்க பொய் சொல்லல. ஏற்கனவே பொண்ணு பார்த்து ரெண்டாவது கல்யாணத்துக்கு தேதியெல்லாம் குறிச்சிட்டாங்கம்மா” என்றவள்,

“அய்யோ அக்கா என பன்ற? நீ முதல்ல எழுந்திரு. எதுவாயிருந்தாலும் நாம சரி பண்ணுவோம்” என்று ரச்சனாவை தூக்க முயன்றாள் மித்யுகா.

“மாமாக்கு ரெண்டாவது கல்யாணம் அவ்ளோ ஈசியா செய்ய முடியாது. நீ எழுந்திரு.”

இரண்டாவது கல்யாணம் என்றதுமே, அக்காவுக்கு குழந்தை உண்டாகாததுதான் பிரச்சினைக்கு காரணமென மித்யுகா நொடியில் விளங்கிக் கொண்டிருந்தாள்.

செண்பகத்தின் காலில் கைகளை வைத்து தரையில் கிடந்த ரச்சனா, அப்படியே தனது கைகளை மித்யுகாவின் பாதத்திற்கு மாற்றியிருந்தாள்.

“அய்யோ அக்கா என்ன பண்ற நீ” என்று தரையில் மடங்கி அமர்ந்த மித்யுகா, அவளின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.

“நீ எழுந்திருக்கா…” என ரச்சனாவிடம் கூறிய மித்யுகா, செல்வராணி புறம் திரும்பி, “குழந்தை இப்போ இல்லைன்னா என்ன? எப்பவுமே பிறக்காதுன்னா சொல்லிட்டாங்களா? ஏன் இப்படி குழந்தை குழந்தைன்னு அவள் வாழ்க்கையை நரகமாக்குறீங்க? குழந்தை வரும்போது வரும்” என்றாள்.

“இனி எப்பவுமே குழந்தை பிறக்காதாம் மித்யு…” என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு ரச்சனா கதறிய கதறலில் மித்யுகாவின் கண்களிலும் நீர் திரண்டது.

“அக்கா…” என்ற மித்யுகா, “அப்படியெல்லாம் இருக்காது. யார் அப்படி சொன்னது. நீ திருச்சி வா! அங்க பெரிய ஹாஸ்பிடலில் செக் பண்ணிப் பார்ப்போம்” என்றாள்.

“மும்பையிலே முடியாது சொல்லிட்டாங்க மித்யு!”

“அக்கா…”

“பெரிய அக்கா… ஒரு குழந்தை பெத்துக்க முடியாத அக்கா” என்ற செல்வராணி, “நாங்க குழந்தை கேட்டு உன் அக்கா வாழ்க்கையை நரகமாக்குரோமா? அஞ்சு வருஷம் பிள்ளையில்லைன்னாலும் உன் அக்காவை நல்லாதான் வச்சிருந்தோம். இவளால என் வம்சத்தை தழைக்க வைக்க முடியாதப்போ, இவ என்னத்துக்கு பாராம என் வீட்டுக்கு” என்றார்.

“என்ன மாமா உங்க அம்மா இவளோ பேசுறாங்க… நானும் வந்த நேரமா பாக்குறேன். அமைதியாவே இருக்கீங்க” என்று மித்யுகா, ஹேமந்திடம் கேட்க,

“நான் என்ன பண்றது மித்யு” என்றான் அவன்.

“நீங்க என்ன பண்றதா?” என்ற மித்யுகா, “நீங்க ஸ்டேட்டஸ்ல எங்களுக்கு சமமா இல்லைன்னாலும், உங்க பொண்ணை நான் விரும்புறேன். கடைசிவரை நல்லா பார்த்துப்பேன்னு சொல்லிதான கல்யாணம் பண்ணிட்டீங்க. இப்போ அவளுக்கு குழந்தை பிறக்காது தெரிஞ்சதும் உங்க காதல் காணாமப்போச்சா?” என ஆத்திரமாகக் கேட்டாள்.

“காதலா… வெறும் அந்த காதலை மட்டும் வச்சிக்கிட்டு ஊருக்கு பதில் சொல்ல முடியுமா?” என்ற செல்வராணி, “இதுக்கு மேலயும் அமைதியா இருந்தா என் பிள்ளைக்கும் பேர் கெடுமே” என்றார்.

“அதுக்கு?”, மித்யுகா.

“அவன் ஆம்பள சிங்கம்ன்னு இன்னொரு பொண்ணை கட்டி என் சொந்தத்துக்கு நான் நிரூபிக்கணும்” என்றார்.

“அப்போ என் அக்கா வாழ்க்கை?”

செல்வராணி கைகளை விரித்திட…

“உன் கையில தான் இருக்கு மித்யு” என்று மீண்டும் மித்யுகாவின் காலை இறுகப் பற்றிக்கொண்ட ரச்சனா அழுகையில் கரைந்தாள்.

“இதுல நான் பண்ண என்னயிருக்குக்கா?” என்று மித்யுகா புரியாது வினவ,

“AI” என்றார் ஆனந்தன்.

“புரியலப்பா!”

“ஆர்டிஃபிஷியல் என்சைமனேஷன்.”

“குட்… நல்ல ஐடியாப்பா” என்று அவர்களின் எண்ணம் என்னவென்று முழுதாக தெரியாமல் முகத்தை துடைத்துக்கொண்டு மித்யுகா எழுந்து நின்றாள்.

“ஹான் இப்படி செய்யலாமே! இது இப்போ நடைமுறையில் இருக்கே! உங்களுக்கு இதுக்கு சம்மதம் அப்படின்னா நாம இந்த முறையை பயன்படுத்தலாமே” என்றாள். செல்வராணியிடம்.

“மித்யு கொஞ்சம் அமைதியா இருடி” என்று அவளின் கைகளைப் பற்றிய செண்பகம், “உண்மை தெரியாம பேசாத” என்று அவளின் வாய் மீது கை வைத்தார்.

அன்னையின் கையை விலக்கியவள்,

“இது நல்ல முறை தாம்மா… இதுக்கு நாம சரகேட்க்கு மட்டும் ஆள் ரெடி பண்ணா போதும். அக்கா வாழ்க்கைம்மா. அவளால மாமா இல்லாம வாழ முடியாது” என்றாள்.

“எங்களுக்கு யாரோ எவரோ, என்ன குலமோ ஜாதியோ, ஊர் பேர் தெரியாத ஒருத்தி வயித்துல எங்க வம்சம் வளர உடன்பாடில்லை” என்று உடனே முன் வந்தார் செல்வராணி.

“AI மூலமான்னா சரகேட் தான் அரேஞ்ச் பண்ணனும்” என்ற மித்யுகா,

“உன் அக்கா சொன்னாளே உனக்கு புரியலையா? அவ வாழ்க்கை உன் கையில” என்று செல்வராணி மறைமுகமாக சொல்லியதில், தன் செவி நுழைந்த வார்த்தைகளையும், மூளை கிரகித்த பொருளையும் நம்ப முடியாது மூச்சடைக்க…

“அக்கா அவங்க என்ன சொல்றாங்க?” என்று ரச்சனாவிடம் வினவினாள்.

“என் வாழ்க்கை மித்யு” என்ற ரச்சனா தன்னிரு கரத்தையும் மித்யுகாவின் முன் ஏந்திட…

“வெளியிருந்து ஒரு பொண்ணுக்கு அவங்க ஒத்துக்கமாட்டேங்கிறாங்க. அதனால எங்களோட தேர்வு நீதான்” என்று ஆனந்தன் சொல்லிட…

“அப்பா நீங்களுமா?” என்ற மித்யுகா சுவாசிக்க முடியாது மனம் தாங்கிய அதிர்வில் மயங்கியிருந்தாள்.

செண்பகம் தான் பதறி மித்யுகாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பியிருந்தார்.

மித்யுகாவின் முகம் ரத்த ஓட்டமின்றி வெளித்திருந்தது. அவளின் உணர்வுகளும் மொத்தமாக மடிந்திருந்தன.

எப்படி இவர்களால், அதிலும் தன் தந்தையாலே இதனை ஒப்புக்கொள்ள முடிந்தது என மனதோடு வருத்தம் கொண்டாள்.

“உனக்கு ஓகே அப்படின்னா இப்போ உன் அக்காவை எங்களோட கூட்டிட்டுப்போறோம்… இல்லைன்னா அவள் இங்கவே இருக்கட்டும். நாங்க கிளம்புறோம். உங்களுக்கும் எங்களுக்கும் உறவு முடிஞ்சுது” என்றார் செல்வராணி.

மித்யுகா ரச்சனாவை பார்க்க… அவளை பார்வையாலே கெஞ்சினாள்.

“இதுக்குன்னே ஹாஸ்பிடலில் ஆட்கள் வச்சிருப்பாங்களே!” மித்யுகா கேட்க,

“நான் அதுக்கு முன்னவே பதில் சொல்லிட்டேன்” என்றார் செல்வராணி.

“அப்போ அப்பா அம்மா இல்லாத எத்தனையோ குழந்தைங்க இருக்காங்க… அவங்களில் யாரையாவது” என்று மித்யுகா சொல்லி முடிக்கும் முன்பு கை காட்டி தடுத்த செல்வராணி,

“என் பையன் உயிராவே இருந்தாலும் ஊர் பேர் தெரியாத பொண்ணு வயித்துல வளரக்கூடாது நினைக்கிற எனக்கு அனாதையை கூட்டிட்டு வந்து என் வாரிசின்னு வளர்க்க முடியுமா?” எனக் கேட்டார்.

“எனக்கு மேரேஜ் ஆகல… டாக்டரே ஒத்துக்கமாட்டாங்க. மேரேஜ் ஆகாத பொண்ணு சரகேட் இருக்க லீகலா முடியாது” என்று எதிலோ படித்த நினைவில் மித்யுகா சரியானதை முன் வைத்தாள்.

“டாக்டர் எங்களுக்குத் தெரிஞ்சவர் தான். அந்த லீகலெல்லாம் என்ன பண்ணனும் எங்களுக்குத் தெரியும். உனக்கு சம்மதமா? உன் அக்கா வாழ்க்கையை காப்பாத்தி தர முடியுமா உன்னால?” என்று திட்டவட்டமாக வினவினார் செல்வராணி.

“உன்னையே ரெண்டாவது கல்யாணம் பண்றதுனாலும் எங்களுக்கு ஓகே தான். ஆனால் உன் அக்கா தான் அதுக்கு ஒத்துக்கல” என்ற செல்வராணி, “அப்படி செய்யாததும் நல்லதுதான் குழந்தையை பெத்து கொடுத்திட்டு ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ நீ வேற கல்யாணம் செய்துக்கிட்டு உன் வாழ்க்கையை வாழலாம்” என அத்தனை எளிதாகக் கூறினார்.

யாரோ ஒருவனின் குழந்தையை சுமந்து பெற்றுக் கொடுத்துவிட்டு, இன்னொருவருடன் வாழ அவளின் மனம் ஏற்குமா? அதிலும் தாம்பத்தியமின்றி, அதன் சுவட்டைக் கூட அறியாது, தாய்மை பெறுவது மனதை அமைதியாகவும் நிம்மதியாகவும் வைத்திடுமா? அதிலும் நடந்த ஒன்றை மறைத்து திருமணம் செய்து குற்றவுணர்வு சிறிதுமின்றி வாழ்வின் அடுத்தக்கட்டத்தில் அடி வைத்திட முடியுமா? இதையெல்லாம் காட்டிலும், முதலில் இதற்கான ஆரம்ப செயலை, ஒப்புதலை அவளின் மனம் எப்படி ஏற்கும்.

இயற்கையாக அனுபவித்திடாத ஒன்றை செயற்கை முறையில் ஏற்க உடலும் உணர்வும் ஒப்புக்கொள்ளுமா?

எவ்வளவுக்கு யோசித்தும் மித்யுகாவால் இதனை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதிலும் ம்ருதவ் மீது கொள்ளை நேசம் வைத்திருப்பவளுக்கு, இப்படி யோசிப்பதே உயிர்வதையை கொடுத்தது. அவனுக்கு ஏதோ துரோகம் இழைப்பதைப்போன்று மனதோடு புழுங்கினாள்.

அவனுடனான காதலிலே பேரின்பம் கொண்டிருப்பவளுக்கு அவனுடனா வாழ்வு எத்தகைய தித்திப்பாய் இருந்திடுமென்று பல கனவுகள். அதையெல்லாம் அவளால் ஒதுக்க முடியவில்லை.

அதிலும் மனதிற்கு விரும்பத்தகாத நிகழ்வை உடலோடு பொருத்திப் பார்க்கவே அவளுக்கு அருவருப்பாய் இருந்திட…

“என்னால முடியாது” என்றிருந்தாள் மித்யுகா.

“என்னவோ உனக்காக உன் தங்கச்சி உயிரையும் கொடுப்பான்னு சொன்ன?” என்று ஹேமந்த் ஏளனமாக ரச்சனாவிடம் கேட்க,

“உன் தங்கச்சி ஒத்துப்பான்னு நீயும், உன் அப்பாவும் சொன்னதை வச்சு, பேசி முடிச்சிருக்க சம்மந்தத்தை வேணாம்னு சொல்லியிருந்தா என்னவாகியிருக்கும்?” என்றார் செல்வராணி.

“இப்பவும் சொல்றேன்… என் அக்காவுக்காக உயிரையும் கொடுக்கிறேன். ஆனா இது முடியாது” என்ற மித்யுகாவின் முன் வந்த ஆனந்தன்…

“நீ ஊர் என்ன சொல்லுமோன்னு நினைக்காத மித்யு. நீ கன்சீவ் ஆகிறதுல இருந்து குழந்தை பிறக்கிற வரை இங்க யாருக்கும் தெரியாது. சம்மந்தி அம்மா உன்னையும் உன் அக்காவையும் மும்பை கூட்டிட்டுப் போயிடுவாங்க. மாப்பிள்ளைக்கும் அங்கதான் வேலைங்கிறதால யாருக்கும் சந்தேகம் வராது. உன்னையும் மேல்படிப்புக்கு அங்க அனுப்பினதா சொல்லிக்கலாம். இந்த முறையில் நீ உண்டாகிட்டா, ரச்சனா உண்டாகியிருக்கிறதாதான் இங்க சொந்தங்ககிட்ட சொல்வோம். குழந்தை பிறந்ததும் உன் வாழ்க்கை நார்மலாகிடும்” என செல்வராணியுடன் பேசி முடிவெடுத்ததை அப்படியே கூறினார்.

“வாழ்க்கை நார்மலாகிடுமா? அப்போ என் மனசு… அதுக்குள்ள இருக்க உணர்வுக்கு என்ன மதிப்புப்பா” என்றவள், “என்னால முடியவே முடியாது” என்றாள்.

“மித்யு…” என்று ரச்சனா அழு குரலில் இரைய…

“நான் ஒருத்தரை விரும்புறேன் அக்கா. அவருக்கு எப்படி என்னால துரோகம் பண்ண முடியும்?” என்றாள் மித்யுகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!