Skip to content
Post Views: 2,497
உனதன்பில் சரணாகிறேன் 20.1
“இந்த ஹக் கிடைக்கவே கிடைக்காதோன்னு ரொம்பவே ஏங்கிட்டேன் ம்ருது” என்றவள், அவனின் மார்புச் சட்டை கைக்குள் அடக்கி, “லவ் யூ ம்ருது… பெயின்லி” என்று அவனது இடை வழி முதுகைச் சுற்றி கரமிட்டவள்…
“இன்னும் அழுத்தமா ஹக் கிடைக்குமா?” எனக் கேட்டாள்.
பல வருடங்கள் அழுத்தி வைத்த பாரமெல்லாம், அவனிடம் கொண்ட பகிர்தலில் வலி துறந்திருந்தன.
Advertisement
“மொத்தமாவே கிடைக்கும்” என்று முற்றிலும் அவளின் மனநிலையை மாற்றியிருந்தான் ம்ருதவ்.
“அச்சோவ் ம்ருது” என்று நாணம் கொண்டவளின் இதழ் நீண்டு மலர்ந்திருந்தது.
அடுத்த கணம் பின்னால் கேட்ட ஒலியில் மித்யுகாவின் நகை சுருங்கியது.
Advertisement
“மேரேஜ் பண்ணிட்டியா?” கேட்டது யாருமில்லை, ரச்சனா தான். அவளுடன் அவளின் இரண்டாவது கணவன் மற்றும் ஆனந்தன்.
Advertisement
“நான் விவாகரத்து வாங்கப்போறேன். இந்த குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என யாருக்காக மும்பை வந்து அப்படியொரு சூழலில் மாட்டிக்கொண்டாளோ அவளே மித்யுகாவை எண்ணி சிறு வருத்தமும் கொள்ளாது அங்கேயே தனித்துவிட்டுச் சென்றிருந்தாள்.
அன்றுதான் ரச்சனாவை மித்யுகா இறுதியாகப் பார்த்தது.
வாழ்வே இருண்ட நிலையில் உளுந்தூர்பேட்டை வந்து சேர்ந்த போது, விவாகரத்து சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெறுவதால், ரச்சனா அங்கு தனியாக தங்கியிருப்பதாகக் கூறி ஆனந்தன் சென்று வந்ததால் மித்யுகா அறிந்தது.
Advertisement
அதன் பின்னர் மணமாகாது வயிற்றுப் பிள்ளையோடு வந்து நிற்கும் இளைய மகளின் நிலையை ஊர் கேட்கும் கேள்விகளுக்கு தந்தையே இழிவுப்படுத்தியிருக்க, மித்யுகா வீட்டைவிட்டு வெளியேற, உடன் செண்பகமும் வந்திருந்தார்.
எங்கு போவதென்று தெரியாது, செண்பகம் தனது தோழி ஒருவரின் உதவியை நாடி மகளை திட்டக்குடி அழைத்து வந்திருந்தார்.
அவரின் கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்திருக்க, தனிமையில் வாடிக்கிடந்தவர் தன்னைத் தேடி வந்த இருவரையும் தனது உறவாய் ஏற்றுக்கொண்டார்.
கணவர் இறந்த துக்கத்தில் சில மாதங்களில் அவரும் இறந்துப்போக, இரண்டு மாதங்களுக்குப் பின்னர்தான் தெரிந்தது, அவர்கள் இருந்த வீட்டையும், அதைச்சுற்றியிருந்த காலி இடத்தையும் மித்யுகாவை தனது மகளாக ஏற்று, அவளின் பெயரில் எழுதி வைத்திருந்தார். தன்னுடைய இறப்பை முன்பே கண்டுகொண்டிருந்தார் போலும்.
அந்த உன்னத ஆன்மாவின் விருப்பத்திற்காக மட்டுமே அந்த வீட்டிலேயே வாழ்ந்திருந்தனர்.
குழந்தைகள் பிறந்த பின்னர் மித்யுகா வேலைக்கு செல்லத் துவங்கியிருந்தாள்.
அவர்கள் தங்களது உறவினர்களென இருந்த அனைவரையும் மறந்திருந்த தருணத்தில் தான், பிள்ளைகளுக்கு இரண்டரை வயதாகிய நேரம் ஆனந்தன் இவர்களைத்தேடி வந்தார்.
மித்யுகாவிற்கு முன்னதாக செண்பகமே அவரின் முகம் காண பிடிக்காது அனுப்பி வைத்துவிட்டார்.
மகள் பிள்ளை வயிற்றோடு, காதல் வலியோடு பட்ட பாட்டை மூன்று வருடங்களாக உடனிருந்துப் பார்த்தவரால் இதற்கு காரணமான யாரையும் மன்னிக்க முடியவில்லையை. தன்னுடைய கணவராகவே ஆயினும்.
அது முதல் ஆனந்தன் அவ்வப்போது அவர்களை வந்து பார்ப்பதும், இவர்கள் அவரை கண்டுகொள்ளாது முகம் திருப்புவதும், அவர் வருந்திச் செல்வதும் வாடிக்கையானதாகியது.
இன்று ஆனந்தனுடன், ரச்சனாவை மித்யுகா எதிர்பார்க்கவில்லை.
“நாம போலாம் ம்ருது” என்று மித்யுகா ம்ருதவ்வின் கரம் பிடிக்க…
“இவர் தான் நீ அப்போ சொன்ன லவ்வா?” என்ற ரச்சனா, மித்யுகாவுக்கு தன்னால் நடந்த நிகழ்வுகள் எதுவுமே நினைவில்லாதவள் போன்று சாதாரணமாகப் பேசினாள்.
“நாங்க ஃபாரின்ல செட்லாகப்போறோம். அதுதான் இங்க சின்ன வேண்டுதல்னு வந்தோம். உன்னை பார்ப்பேன் நினைக்கல” என்ற ரச்சனா மறந்து குழந்தைகளைப் பற்றிக் கேட்கவில்லை.
“எப்படியோ உன் லவ் உனக்கு கிடைச்சிருச்சு” என்ற ரச்சனா, “ஏமாளியா இருப்பார் போல… உன்னைப்பற்றி எல்லாம் தெரியுமா?” எனக் கேட்டாள்.
ம்ருதவ் பதில் கொடுக்க வாய் திறந்திட, பிடித்திருந்த அவனது கையில் அழுத்தம் கொடுத்து வேண்டாமென தலையசைத்து தடுத்திருந்தாள் மித்யுகா.
“என்னவோ நல்லாயிருந்தா சரி” என்ற ரச்சனா, “எனக்கு செய்த பாவத்துக்கு அந்த ஹேமந்த் குடும்பத்தோட மூணு மாசத்துக்கு முன்ன தான் ஆக்சிடென்டில் செத்துப்போனான்” என அத்தனை எளிதாகக் கூறினாள்.
அன்று அவன்மீதான காதலென்று தங்கையின் வாழ்வையே பணயம் வைத்தவள், இன்று அவனின் மரணத்தையே சாதாரண செய்தியாகக் கூறினாள்.
‘சிலரின் மனமும் குணமும் அவ்வளவுதான்.’
மித்யுகாவிடம் வறண்ட முறுவல். ஆயிரம் பொருளை உள்ளடக்கியதாய்!
“உன்கிட்ட பேசிட்டு நிற்க எனக்கு நேரமில்லை” என்ற ரச்சனா, “வாங்க” என அவளுடன் வந்த இரு ஆண்களையும் அழைத்தவளாக படிகள் இறங்கினாள்.
தேங்கிய ஆனந்தன்,
“நான் உன்கிட்ட பேசுறது உனக்கு பிடிக்காது தெரியும்” என்றவர், “சில நேரங்களில் நாம் ஒருத்தருக்கு செய்யும் பிழைக்கு தண்டனையை நம்ம மனசாட்சியே கொடுத்திடும் குற்றவுணர்வாய். வயதில் தனிமை அதை உணர்த்திடும். நானும் உணர்ந்துட்டேன். ஆனாலும் நான் செய்ததை சரின்னு நியாயப்படுத்துல. முடிஞ்சா என்னை மன்னிச்சிடும்மா” என்றவர் கண்கள் கொட்டும் நீரை துடைத்தவராக வேகமாகச் சென்றிருந்தார்.
“காலம் இவரை மாத்தியிருக்கு” என்று ம்ருதவ் சொல்ல, “யார் மாறினா எனக்கென்ன ம்ருது” என்றிருந்தாள் மித்யுகா.
“அதுவும் சரிதான்!”
“நமக்குத் தேவையில்லாதவங்கப் பற்றி பேசுறதும் வீண்” என்ற மித்யுகாவிடம், “உனக்கு ஏன் செக்கெண்ட் மேரேஜ்?” எனக் கேட்டிருந்தான்.
ஓரளவிற்கு அவளின் பதிலை அவன் யூகித்தே இருந்தான்.
“குழந்தைகளுக்காக. அவங்க பிறப்பு பின்னாடி யாருக்கும் பரிதாபமா தெரிஞ்சிடக் கூடாதே! எப்படியிருந்தாலும் அம்மா நான்தான ம்ருது. அதான் அம்மா கல்யாணம் பண்ணிக்க சொல்லி தொல்லை பண்ணவும், இவங்க எனக்கு முதல் கல்யாணத்தில் பிறந்த குழந்தைங்க சொல்லி, இது ரெண்டாவது கல்யாணம் அப்படின்னு சொல்ல சொன்னேன். அவங்க பிறப்பை நியாயப்படுத்த நினைச்சேன். இன்னொரு காரணம் வேற யாரும் கல்யாணம் பண்ணிக்க முன்வர மாட்டாங்க நினைச்சேன்” என்றாள்.
“நான் எதிர்ப்பார்த்த பதில் தான்” என்ற ம்ருதவ், “உன் மனசு என்னன்னு தெரிஞ்சும் இந்த கேள்வி கேட்கக்கூடாதுன்னு தான் நினைச்சேன்… ஆனா முடியல…” என்று சில நொடிகள் அமைதி காத்தவன்,
“அப்போ ஓகே! உன் அம்மாவோட தனியா வந்தியே… அப்போக்கூட உனக்கு என்கிட்ட வரணும் தோணலயா?” எனக் கேட்டான்.
“ம்ருது” என்று அவனின் நெஞ்சில் சாய்ந்து கண்ணீர் உகுத்தவள், “நிறையத் தோணும். என் ம்ருது நெஞ்சுல இப்படி சாஞ்சுக்க நிறையத் தோணும். ஆனா வர முடியல. இன்னொரு வாழ்க்கைக்குள்ள அவ்ளோ சீக்கிரம் போயிருக்கமாட்டீங்க தெரியும். ஆனால் ரதி அக்கா, கமல் அண்ணா உங்களை அப்படியே விடமாட்டாங்களே! அவங்க உங்க நல்லதுக்குன்னு என்னை மறக்க வச்சிருந்தா?” என்றவள் ம்ருது தலையில் வலிக்காது கொட்டிய கொட்டில், முகம் சுருக்கியவளாக விலகி நின்று, கொட்டிய இடத்தை தேய்த்தவாறு,
“மறக்க மாட்டீங்க… மனசுல தள்ளி வச்சி, அடுத்த கட்டம் மூவ் பண்ணியிருந்தா. வயிற்று பிள்ளையோட உங்க முன்ன வந்து நின்னு நல்லாயிருக்க உங்களையும் கஷ்டப்படுத்தனுமா? அதோட என் குற்றவுணர்வு” என்று முடித்துக்கொண்டாள்.
அவளின் மனம் அவன் அறிவானே! இருப்பினும் அவளின் விளக்கம் அவனின் மனம் அமைதியடைய வேண்டுமாய் இருக்க, கேட்டிருந்தான். அவள் வாயிலாக அமைதியும் கொண்டான்.
“போலாமா?” எனக் கேட்டாள்.
“ஓ எஸ்… ஈவன் இப் இட்ஸ் ஆன் தட் ஆஃப் தி எர்த்” என கண்ணடித்தான்.
(Even if it’s on that side of the earth…)
“பூமிக்கு அந்தப்பக்கமிருந்தாலும் நீங்க வருவீங்க தெரியும். ஆனா எனக்கு இந்த பூமியில் உங்களோட வாழணும்… திகட்டவே திகட்டாதா ஒரு வாழ்க்கை. ம்ருதுவோட யுகாவா” என்று அவனின் தோள் சாய்ந்தாள். அவனது கரம் அரவணைப்பாய் அவளில் படிந்தது.
வானம் முளைத்த சூரியன், அவர்களின் வாழ்வில் ஒளி சேர்க்கும் விதமாய் பின்னணியை தனது பொற்கரங்களால் நிறைத்திருந்தது.
உயிரோவியத்தின் அழகியலில் சிவ ம்ருதவ் ❤️ மித்யுகா.
*************
இருவரும் இல்லம் வர அனைவரும் இவர்களுக்காக வாயிலிலே காத்திருந்தனர்.
“என்னடா எல்லாம் பேசி முடிச்சாச்சா?” எனக் கேட்டவாறு இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து ஆலம் சுற்றிய ரதி, “எல்லாத்தையும் இங்கயே விட்டுட்டு… உள்ள போங்க” என்றாள்.
ம்ருதவ் சிரித்திட…
“இந்த சிரிப்பை பத்திரமா பார்த்துக்கோ மித்யு” என்று அவளின் கன்னம் தட்டினாள் ரதி.
“ரொம்பவே பத்திரமா பார்த்துக்கிறேன் ரதி அக்கா” என்று மித்யுகாவும் மலர்ந்து கூறிட, அனைவரும் நிறைவு கொண்ட தருணம் அது.
“இனி நாம இந்த வீட்டில் தான் இருக்கப்போறாமா சிவா” என்று பிள்ளைகள் இருவரும் அவன் முன் வந்து கேட்க…
“ஆமா… வீடு பிடிச்சிருக்கா உங்களுக்கு?” என்று இருவரின் உயரத்திற்கு மண்டியிட்டு அவர்களின் கரம் பிடித்தான்.
“ஆமாவாம்மா?” தன்னிடம் கேட்ட சிவேஷை மித்யுகா தூக்கி, ஆமாமென்று அவனின் முன்னுச்சி முடியை கலைத்துவிட்டாள்.
“அம்மா நானு” என சிவன்யா கை நீட்டிட, ம்ருதவ் அவளை தூக்கி கன்னத்தில் முத்தம் வைத்திருந்தான்.
“பார்க்க அழகா இருக்கு ரதி… சிவாவோட குடும்பம்” என்று அக்காட்சியை காணொளி எடுத்துக்கொண்டிருந்த கமல் கண்கள் கலங்க…
“இனியெல்லாமே சுபம் டா” என்று அவனின் தோள் சாய்ந்தாள் ரதி.
“ரதி அக்கா என்ன ரொமான்ஸா?” என்ற மித்யுகா, “எங்களுக்குத்தான் இன்னைக்கு மேரேஜ் ஆகியிருக்கு” என்றாள்.
“அதுக்கு… கல்யாணம் ஆன அன்னைக்கு மட்டும்தான் புருஷன் தோள் சாயனுமா என்ன?” என்ற ரதி, “உன் முன்னாடி கொஞ்சுவே செய்வேன் பாரு” என்று கமலேஷின் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
பிள்ளைகளின் முகத்தை தங்களில் தோளில் பதித்துக்கொண்ட இருவரின் சிரிப்போடு,
“அடியே” என்று பதறிய கமலேஷின் துள்ளலில் செண்பகத்திடமும் சிரிப்பு உண்டானது.
“இந்த சிரிப்போடவே எல்லாரும் உள்ள வாங்க” என்று செண்பகம் உள்ளே சென்றிட,
ம்ருதவ் தனது குடும்பமாய் உள் நுழைந்திருந்தான்.
அவன் ஏங்கி தவித்த தருணம்.
நேராக சித்தப்பாவின் புகைப்படம் முன்பு தான் சென்று நின்றான்.
“ப்பா…” என்று கரகரத்த குரலில் விளித்தவன், “உங்க மருமக, பேரப் பசங்க” என்று குழந்தைகளையும் சேர்த்து அறிமுகப்படுத்தினான்.
மகளுக்காக பிள்ளைகளை ஏற்றுக்கொண்டான் என்று செண்பகம் நினைத்திருக்க, அவளுக்காகத்தான் என்றாலும், அவர்களை தனது பிள்ளைகளாகவே பார்க்கின்றேன் என்பதை சிறு வார்த்தையில் உணர்த்தியிருக்க, பனித்த கண்களை துடைத்தவராக நகர்ந்திருந்தார்.
“தாத்தாக்கு குட் மார்னிங் சொல்லி… பூ வைங்க” என்று ம்ருதவ் குழந்தைகளிடம் சொல்ல, அவர்களும் அதனை செய்ய, நால்வரும் ஒன்றாய் வணங்கி எழுந்தனர்.
சட்டத்தில் அடைபட்டிருக்கும் நிழலுருவம் இன்றுதான் புன்னகைப்பதாய் மனம் நிறைந்தான் ம்ருதவ்.
காலை உணவிற்காக பிள்ளைகள் செண்பகம் அழைத்தாரென்று ஓடிவிட, ரதி கமலேஷை இழுத்துக்கொண்டு நகர்ந்தாள்.
“ஹேய் ரதி… நானே வர்றேன். எதுக்கு இப்படி இழுக்குற?” என கமலேஷ் தடுமாற,
“அவங்களுக்கு ஸ்பேஸ் கொடுக்காம அங்கவே நின்னு என்ன பார்த்திட்டிருக்க?” என்றாள் ரதி.
“பார்க்கக்கூடாத அளவுக்கு அவன் ஒண்ணுமே பண்ணலயே!”
“நாம கூடவே இருந்தா எப்படி பண்ணுவான்” என்று ரதி சொல்ல, “இன்னும் ஒரு மாசத்துக்கு அவன் இருக்க திசைக்கே பெரிய கும்பிடு போதுமா?” என்றிருந்தான் கமலேஷ்.
சித்தப்பாவின் படத்தையே பார்த்தபடி ம்ருதவ் நின்றிருக்க…
“உங்க பையனை நான் நல்லா பார்த்துப்பேன் மாமா. நீங்க அங்க உங்க மகனைப்பற்றி கவலையில்லாம இருங்க” என்றாள் மித்யுகா.
அவள் முதல்முறை இந்த வீட்டிற்கு வந்தபோது அவரிடம் சொல்லிய அதே வார்த்தைகள்.
அவளின் கையை எடுத்து தனது நெஞ்சில் வைத்தவன்,
“உங்க மருமகளை நான் இதே சிரிப்போட ரொம்ப பத்திரமா பார்த்துப்பேன் ப்பா” என்றிருந்தான்.
“ரெண்டு பேரும் இப்படி சத்தியப்பிரமாணம் மட்டும் செய்திட்டு இருந்தா, நடக்க வேண்டியதெல்லாம் எப்போ நடக்கிறது?” எனக்கேட்டு, இருவரையும் நாணம் கொள்ளச் செய்திருந்தாள் ரதி.
“இங்கவே நின்னுட்டு இருக்காம, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்கடா! பாதி ராத்திரிக்கு எழுந்தது, பிள்ளைகளும் ஆண்ட்டியோட தூங்கப்போயாச்சு. நானும் கமலும் வீட்டுக்குப் போயிட்டு, ஈவ்வினிங் வர்றோம்” என்று கமலுடன் சென்றிருந்தாள்.
வீடே நொடியில் அமைதியாகியிருக்க, ம்ருதவ் மித்யுகாவை தனது அறைக்கு அழைத்துச்செல்ல, அவள் உள் கால் வைத்திடும் முன்பு…
“மித்யு” என்று சிறு தயக்கத்தோடு அழைத்திருந்தார் செண்பகம்.
“சொல்லுங்க அத்தை” என்று ம்ருதவ் முன்வர, அவருக்கு அய்யோடா என்றானது.
அவரின் நிலை புரிய,
“ரெண்டு சிவாவும் தூங்கியாச்சா?” எனக் கேட்டான்.
“ஹ்ம்ம் மாப்ள” என்ற செண்பகம், “கொஞ்ச நேரம் மித்யு என்னோட இருக்கட்டும்” என்றார்.
ம்ருதவ் சத்தமிட்டு சிரித்திருந்தான். அவரின் இந்த அழைப்பு எதற்கான காரணமென்று அறிந்தவனுக்கு, அக்கணம் தான் அடுத்த நிகழ்வே தங்களுக்குள் என்னவென்று நினைவு வந்தது.
அவனின் சிரிப்பில் செண்பகம் சங்கடமாக நெளிய,
“அச்சோ ம்ருது” என்று அவனை அடக்கிய மித்யுகா, “நீங்க போங்க உள்ள” என்று அவனை அறைக்குள் அனுப்பிவிட்டு, “என்னம்மா நீ” என்று செண்பகத்துடன் பிள்ளைகள் உறங்கும் அறைக்கு வந்திருந்தாள்.
error: Content is protected !!