Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 7

அத்தியாயம் – 7

 

அடுத்த இரண்டு நாட்கள் எந்தச் சலனமும் இல்லாமல் மௌனமாகவே கடந்தன, அந்த மர்ம மனிதன் மீண்டும் வரவில்லை. ஆனால், அவன் விட்டுச் சென்ற அந்த லேசர் கண்களின் பாதிப்பு மட்டும் அவளை விட்டு நீங்கவில்லை.

​இன்றுதான் அந்த விழா நடக்கும் நாள்…



Advertisement

​மிருதுளா ஒரு அழகான, கண்ணைக் கவரும் மென்மையான நிறத்திலான அனார்கலி சுடிதாரை அணிந்திருந்தாள், அவளது முகத்தில் எந்தவிதமான செயற்கை ஒப்பனைகளும் இல்லை, இயற்கையான அழகும், அதில் படிந்திருந்த அந்த ஒரு துளி சோகமும் கூட அவளை ஒரு தேவதையைப் போல தான் காட்டியது, தலைமுடியைப் ஃபிரீ ஹேர் விட்டு, காதுகளில் ஒரு சின்ன ஜிமிக்கியை மட்டும் அணிந்திருந்தாள்,..

அனைத்தும் முடித்துவிட்டு ​கண்ணாடி முன் நின்றவள், தன் பெற்றோரை நினைத்துக் கொண்டாள், அவர்களின் மறைவிற்குப் பிறகு முதல் முறையாக ஒரு பொது நிகழ்ச்சிக்குச் செல்கிறாள், ஒருவிதமான படபடப்பும், உள்ளுக்குள் ஏதோ ஒரு மாற்றம் நிகழப்போகிறது என்ற உள்ளுணர்வும் அவளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

​வீரமாணிக்கமும் தயாராகி வெளியே வந்தார், தன் பேத்தியின் அழகைப் பார்த்து வியந்தவர், “என் பேத்தி அப்படியே அவ அம்மாவைப் போலவே இருக்கா!” என்று நெகிழ்ந்து போனார்…

Advertisement

இருவரும் காரில் ஏறி விழா நடக்கும் இடத்தை நோக்கி பயணப்பட்டனர், மாலை வெயில் மெல்லத் தன் செந்நிறக் கரங்களை விலக்கிக் கொள்ளத் தொடங்கிய அந்திப் பொழுது அது, இயற்கையும் நவீனமும் கைகோர்த்துக் கொண்டது போல் இருந்தது, நகரின் இரைச்சலில் இருந்து சற்றுத் தள்ளி, ஒரு பிரம்மாண்டமான கார்டனில் தான் அந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது…

Advertisement

அந்தப் பெரிய கார்டன் முழுவதும் பச்சைப்பசேலெனப் போர்த்தப்பட்டிருந்த புல்வெளிகள், பனிக்காற்றின் மெல்லிய ஈரப்பதத்தைத் தாங்கி நின்றன. சுற்றிலும் இருந்த உயரமான மரங்களில் இருந்து தொங்கவிடப்பட்டிருந்த சிறிய எல்.இ.டி விளக்குகள், மின்மினிப் பூச்சிக் கூட்டம் போல மினுமினுத்துக் கொண்டிருந்தன.

அந்தத் தோட்டத்தின் நடுவே ஒரு செயற்கை நீரூற்று, மெல்லிய இசையோடு நீரைச் சிதறிக்கொண்டிருக்க, அதன் வெளிச்சம் தண்ணீரில் பட்டுப் பிரதிபலித்தது.

​விருந்தினர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கியிருந்தனர், அந்த இடமே ஒரு உயர்தரத் தொழில் அதிபர்களின் சங்கமம் போலக் காட்சியளித்தது, ஆண்கள் அனைவரும் கச்சிதமான பிசினஸ் கோட்சூட்களில் மிடுக்காக நடமாடிக் கொண்டிருக்க, பெண்கள் தங்களின் வண்ணமயமான உடைகளில் அந்த இடத்திற்கு மேலும் மெருகூட்டினர், மெல்லிய மேலைநாட்டு இசையும், அங்கிருந்த பூக்களின் நறுமணமும் சேர்ந்து அந்தப் பார்ட்டிக்கு ஒரு மேன்மையான அந்தஸ்தைத் தந்திருந்தது…

Advertisement

வீரமாணிக்கமும் மிருதுளாவும் காரிலிருந்து இறங்கியதும், அவர்களை நோக்கிப் புன்னகையுடன் விரைந்து வந்தார் மணிகண்டன், அவருக்கு ஏறக்குறைய மிருதுளாவின் தந்தை வயது இருக்கும், நேர்த்தியான உடையணிந்திருந்த அவர், வீரமாணிக்கத்தைக் கண்டதும் மிகுந்த மரியாதையுடன் கைகூப்பினார்…

​”வாங்க சார்! நீங்க வருவீங்களான்னு ஒரு சந்தேகம் இருந்துச்சு, என் பையனோட கல்யாண சந்தோஷத்தை உங்களோட பகிர்ந்துக்கிறதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி” என்று இன்முகமாக வரவேற்றார், அவரது மகன் திருமணத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த ரிசப்ஷன் பார்ட்டி மணிகண்டனின் சமூக அந்தஸ்தைப் பறைசாற்றுவது போல் இருந்தது…

மணிகண்டனின் பார்வை மிருதுளாவின் மீது விழுந்தபோது, அவர் ஒரு கணம் வியந்து நின்றார். “இது நம்ம மிருதுளாவா? பார்த்தே ரொம்ப வருஷம் ஆகுது சார், அப்படியே அவங்க அப்பாவைப் போலவே இருக்காங்க,” என்று அவர் சொன்னபோது, மிருதுளாவின் கண்கள் லேசாகக் கலங்கின…

​அவள் அணிந்திருந்த அந்த அனார்கலி சுடிதார், அங்கிருந்த நவீன ஆடைகளுக்கு நடுவே ஒரு தனித்துவமான கண்ணியத்தைத் தந்தது, முகத்தில் ஒப்பனையே இல்லை என்றாலும், அவளது அந்த இயற்கையான தேஜஸ் அங்கிருந்த பல இளம் பிசினஸ்மேன்களின் பார்வையை அவள் பக்கம் திருப்பியது…

​மணிகண்டன் அவர்களை விழாவின் மையப் பகுதிக்கு அழைத்துச் சென்றார், அங்கே பல முக்கியத் தொழில் அதிபர்கள் குழுக்களாக நின்று பேசிக் கொண்டிருந்தனர், ​மிருதுளா அந்தச் சூழலை ஒருவிதத் தயக்கத்துடனேயே கவனித்தாள்.

அந்தப் புல்வெளியின் மையப்பகுதியில் போடப்பட்டிருந்த மென்மையான இருக்கைகளில் வீரமாணிக்கம் அமர, அவருக்கு அருகிலேயே ஒரு குழந்தையைப் போல அமைதியாக அமர்ந்து கொண்டாள் மிருதுளா…

அந்தப் பெரிய கூட்டமும், விதவிதமான மனிதர்களின் பேச்சரவமும் அவளுக்குப் புதியதாக இருந்தாலும், தாத்தாவின் அருகாமை அவளுக்கு ஒரு பாதுகாப்பைத் தந்தது.

​”சார், நீங்க இங்கேயே இருங்க. இதோ ஒரு முக்கியமானவரை உங்களுக்கு அறிமுகப்படுத்தணும்னு ஆசைப்படுறேன், இப்போதைய பிசினஸ் உலகத்தோட ‘யங் ஐகான்’ அவர், ரொம்ப பிஸியான ஆளு, ஆனா என் மேல இருக்கிற மரியாதையில இன்னைக்கு வந்திருக்கார்,” என்று மணிகண்டன் உற்சாகமாகக் கூறிவிட்டு, சற்றுத் தள்ளி நின்றிருந்த ஒரு கூட்டத்தை நோக்கிச் சென்றார்…

​மிருதுளா சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தத் தோட்டத்தின் மின்விளக்குகள் மெல்ல எரியத் தொடங்க, மாலை நேரத்து இருள் சூழ ஆரம்பித்தது. அப்போது, மணிகண்டன் ஒரு உயரமான வாலிபனை அழைத்துக்கொண்டு இவர்களை நோக்கி வருவதைக் கண்டாள்…

​அவன் நடந்து வரும் வேகத்திலும், அவனது தோற்றத்திலும் ஒரு தனித்துவமான கம்பீரம் இருந்தது. அடர் நீல நிறத்திலான த்ரீ-பீஸ் சூட் அணிந்து, கையில் ஒரு விலையுயர்ந்த கடிகாரத்துடன் மின்னினான், அவன் நெருங்கி வர வர, அவனது முகம் மங்கலான வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது…

​”சார், இவர்தான் ரன்வீர் ரன்வீர் இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்டின் ஓனர், ரொம்பக் குறுகிய காலத்துலயே பெரிய உயரத்துக்குப் போனவர்,” என்று மணிகண்டன் அறிமுகப்படுத்த, வீரமாணிக்கத்திற்கு வணக்கம் சொன்ன ரன்வீர்,..  “ஹெலோ சார், உங்களைப் பத்தி மணிகண்டன் சார் நிறைய சொல்லியிருக்கார்,” என்றான், அவனது குரல்… அந்த ஆழமான, காந்தம் போன்ற குரலைக் கேட்டதும் மிருதுளாவின் இதயம் ஒரு கணம் அதிர,  மெதுவாகத் தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள், அந்த நொடி, அவளது உடலில் ஒரு மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது…

​சூட் அணிந்து, தலைமுடியைச் சீராக வாரியிருந்த இந்த மனிதன் ஒரு மிகப்பெரிய தொழில் அதிபர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால், அவனது முகத்தைப் பார்த்த மிருதுளாவிற்கு ஏனோ மூச்சு முட்டியது, குறிப்பாக அவனது கண்கள்… ​அந்த லேசர் விழிகள்! நேற்றிரவு அந்த இருட்டில், மாஸ்க்கிற்குப் பின்னால் இருந்து அவளை ஊடுருவிய அதே கூர்மையான பார்வை!

​அவனும் அவளைப் பார்த்தான். ஆனால், அவனது பார்வையில் எந்தவிதமான அதிர்ச்சியும் இல்லை. மாறாக, ஒரு அந்நியனைப் பார்ப்பது போன்ற ஒரு மெல்லிய விலகலும், அதே சமயம் அவளுக்கு மட்டும் புரியும்படியான ஒரு மர்மமான நிதானமும் இருந்தது…

​’இவன்… இவன் எப்படி? ஒரு திருடன் எப்படி இவ்வளவு பெரிய பிசினஸ் மேனாக இருக்க முடியும்? இல்ல, எனக்குப் பயத்துல தான் இப்படித் தோணுதா? அந்த லேசர் கண்கள்… என்னால அதை மறக்கவே முடியாதே!’ மிருதுளா குழப்பத்தின் உச்சத்திற்க்கே சென்றாள்…

​அவளது சந்தேகத்தை உறுதிப்படுத்துவது போல, ரன்வீர் அவளைப் பார்த்து லேசாகத் தலைசாய்த்தான், அந்த அசைவில் ஒரு சிறிய கிண்டல் ஒளிந்திருப்பதை அவளது உள்ளுணர்வு உணர்த்தியது…

மிருதுளாவின் உள்ளம் ஒரு போர்க்களமாக மாறியிருந்தது, அவள் கண்கள் ரன்வீரையே வட்டமிட்டன, மணிகண்டனிடம் மிக நிதானமாகவும், கண்ணியமாகவும் பேசிக் கொண்டிருந்த அந்த மனிதனிடம் ஒரு துளிகூடப் பதற்றம் என்பதே இல்லை. ஆனால், அவனது அந்த லேசர் விழிகள்… அவை அவளைப் பார்க்கும் போதெல்லாம், நேற்றிரவு இருட்டில் அவளை ஊடுருவிய அதே கூர்மையை அவளால் உணர முடிந்தது…

​’அவன் தான் இவனா? இல்ல எனக்குத் தான் அப்படித் தோணுதா? ஒரு பெரிய பிஸ்னஸ் மேக்னட் எதுக்காகத் திருடன் மாதிரி எங்க வீட்டுக்கு வரணும்? ஒருவேளை அவனோட சாயல்ல இருக்கிற வேற யாராவது இருப்பாங்களோ?’ ஆயிரம் கேள்விகள் அவளைத் துளைத்தன…

அவன் பேசிவிட்டு தள்ளி சென்றுவிட,  தவிப்புடன் அமர்ந்திருந்தவள், இதை இப்படியே விடக்கூடாது என்று முடிவெடுத்தாள், இதை உறுதிப்படுத்தியே ஆக வேண்டும் என்ற பிடிவாதம் அவளுக்குள் எழுந்தது…

​”தாத்தா… நான் இந்த இடத்தை அப்படியே சுத்திப் பார்த்துட்டு வரேன்,” என்று மெல்ல வீரமாணிக்கத்திடம் கூறிட,..
​”சரிம்மா… ஜாக்கிரதையா போயிட்டு வா,” என்று தாத்தா சொல்ல, மிருதுளா மெதுவாக எழுந்து ரன்வீர் சென்ற திசையை நோக்கி நடந்தாள்…

ரன்வீர் கூட்டத்திலிருந்து சற்றுத் தள்ளி, கார்டனின் ஒரு ஒதுக்குப்புறமான பகுதிக்குச் சென்று யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தான்,  மங்கலான விளக்கு வெளிச்சத்தில் அவனது அந்த உயரமான உருவம் ஒரு கம்பீரமான நிழலைப் போலத் தெரிந்தது…

​மூச்சைப் பிடித்துக்கொண்டு அவனை நெருங்கினாள் மிருதுளா, அவனது குரல்… ஆம், அதே ஆழமான வசீகரமான குரல்!

​”நாளைக்கு அந்த டீல் முடிஞ்சாகணும் நிதின், எந்தத் தவறும் நடக்கக்கூடாது,” என்று அவன் போனில் சொல்லிக் கொண்டிருந்தான்…

​மிருதுளா அவனுக்குப் பின்னால் சில அடி தூரத்தில் தான் நின்றாள், அவனது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவள், சட்டென்று ஏதோ சொல்லத் துணிய, ஆனால் அதற்குள் ரன்வீர் போனைத் துண்டித்துவிட்டுத் திரும்பினான்…

​அவன் விழிகள் அவளை பார்த்தது, அந்த லேசர் கண்கள் மீண்டும் அவளைச் சந்தித்தன. ஆனால், அதில் நேற்றிரவு இருந்த அந்தத் துடுக்குத்தனமோ அல்லது திருடன் என்ற அடையாளமோ துளிகூட இல்லை…

​”ஏதாவது உதவி வேணுமா ஏன் இப்படித் தனியா வந்து நிக்கிறீங்க?” என்று மிக அந்நியமாக, ஒரு கௌரவமான மனிதனைப் போலக் கேட்டான்…

​அவனது முகத்தில் எந்தவிதமான சலனமும் இல்லை, அவன் தான் நேற்றிரவு அவள் அறைக்குள் நுழைந்தவன் என்பதை காட்டும் சிறு தடுமாற்றம் கூட இல்லை, அவனது இந்த நிதானம் மிருதுளாவை இன்னும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

​”உங்களை… உங்களை என்னை முன்னாடியே தெரியுமா?” என்று அவள் நேரடியாகவே கேட்டுவிட, அவனது கண்களை உற்றுப் பார்த்தபடி இருந்த ​ரன்வீரோ மெல்லச் சிரித்தான்…

அந்தச் சிரிப்பில் ஒரு ரகசியம் ஒளிந்திருந்தாலும், வார்த்தைகளில் அது தெரியவில்லை. “முன்னாடியேவா? மணிகண்டன் சார் இப்போதானே அறிமுகப்படுத்தினாரு… ஒருவேளை பிஸ்னஸ் நியூஸ்ல என்னைப் பார்த்திருப்பீங்களோ?” என்று மிகச் சாதாரணமாகக் கேட்டுவிட்டு, அவளைக் கடந்து செல்ல முயன்றான்…

​மிருதுளாவிற்குத் அவன் பொய் சொல்கிறான் என்றே தோன்றியது, அவனது உடல்மொழியும், அந்தப் பார்வையும் எதையோ மறைக்கின்றன, ஆனால், அதை எப்படி நிரூபிப்பது என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை…

“நீங்க பொய் சொல்றீங்கன்னு தோணுது…” ​அவளது தீர்க்கமான அந்த வார்த்தைகளில், ரன்வீர் ஒரு கணம் தனது நடையை நிறுத்தி மெல்லத் திரும்பி அவளைப் பார்த்தான், அவனது இதழ்களில் ஒரு ஏளனச் சிரிப்பு அரும்பியது.

​”பொய்யா?” என்று அவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி வினவியபோது, அந்தத் தோட்டத்தின் மங்கலான வெளிச்சத்தில் அவனது முகம் ஒரு மர்மக் கவிதை போலத் தெரிந்தது.

​”ஆமா… உங்க கண்ணு! அதை என்னால மறக்கவே முடியாது, நேத்து நைட் என் ரூமுக்கு வந்தது நீங்கதானே?” என்று அவள் ஆணித்தரமாகக் கேட்க, ரன்வீரின் இதயத் துடிப்பு ஒரு கணம் சீரற்றுத் துடித்தது…

​உள்ளுக்குள், ‘வெரி ஷார்ப்…’ என்று அவளது கூர்மையான அவதானிப்பைப் பாராட்டியவன், வெளியே துளிகூடத் தனது ரகசியத்தை விட்டுக்கொடுக்கவில்லை.

அவனது முகம் ஒரு பளிங்குச் சிலையைப் போல உணர்ச்சியற்று இருந்தது. ​”நீங்க சொல்றது எனக்குப் புரியல மிஸ் மிருதுளா, உங்க ரூமுக்கு நான் வந்தேனா? அதுவும் நைட் டைம்ல?” என்று ஒரு தொழில் அதிபருக்கே உரிய அதிர்ச்சியோடு கேட்டவன்… “ஒருவேளை உங்களுக்குத் தூக்கத்துல கனவு ஏதும் வந்திருக்குமோ? இல்ல, நிழலைப் பார்த்து நிஜம்னு தப்பா நினைச்சுட்டீங்களோ?” என்றான்…

​”இல்ல! அந்தப் பார்வை… இதே மாதிரிதான் இருந்தது, இதே கூர்மை, இதே அதிகாரம்…” என்று அவள் விடாப்பிடியாக அவனது கண்களை ஊடுருவிப் பார்த்தாள்.
​ரன்வீர் அவளை நோக்கி ஓரடி முன்னே வந்தான், அவளது வாசனை அவனது நாசிகளைத் தீண்டியது. “கண்கள் ஒரே மாதிரி இருக்கலாம் மிருதுளா… ஆனா நான் இந்த நகரத்தோட மிகப்பெரிய பிசினஸ் மேக்னட், எனக்கு ஒருத்தர் வீட்டுக்குத் திருடன் மாதிரி வர வேண்டிய அவசியம் இல்லை, நான் எதை வேணும்னாலும் விலைக்கு வாங்குற இடத்துல இருக்கேன்,” என்றான் ஒருவிதமான கர்வத்தோடு…

​அவனது அந்த நிதானமும், அதிகாரமிக்க பேச்சும் மிருதுளாவை ஒரு நிமிடம் தடுமாறச் செய்தது, அவன் சொல்வதும் உண்மையாகத் தோன்றியது, இவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருப்பவன் ஏன் ஒரு திருடனாக வரவேண்டும்? ஆனால், அவளது உள்மனம் ‘இவன்தான் அவன்’ என்று கூச்சலிட்டது.

​அவள் மீண்டும் எதோ சொல்ல வாயெடுத்தபோது, ரன்வீர் அவளது காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி மிக மெல்லிய குரலில்.., “தப்பான ஆள் கிட்ட தப்பான கேள்வியைக் கேட்காதீங்க… அது உங்களுக்கு ஆபத்தா கூட முடியலாம்.”
​அவன் சொன்ன அந்த ஆபத்து என்ற வார்த்தையில் நேற்றிரவு இருந்த அதே எச்சரிக்கை தொனி இருந்ததை அவள் கவனித்தாள்…

அதன் பிறகு அவன் அவளைக் கடந்து நிதானமாக நடந்து சென்றிட, ​மிருதுளா அப்படியே திகைத்து நின்றாள், அவனது அந்த நிதானம் அவளைத் தோற்கடிப்பது போல இருந்தது, அவன் தன்னைக் காட்டித் தரமாட்டான் என்பதில் உறுதியாக இருக்கிறான், ஆனால், அவன் எதற்காக அவள் வீட்டிற்கு திருடன் போல் வந்தான்? யோசித்து யோசித்து அவளுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம்…

அன்றைய இரவு,

மிருதுளாவின் அறையில் நிசப்தம் நிலவினாலும் அவளது மனதிற்க்குள் ஒரு பெரும் புயலே வீசிக்கொண்டிருந்தது, மெத்தையில் புரண்டு படுத்திருந்தவளுக்கு ரன்வீரின் அந்த லேசர் விழிகள் தான் நினைவில் வந்து போயின, அந்த ரன்வீர் தான் இந்த முகமூடித் திருடன் என்று அவளது உள்ளுணர்வு கூச்சலிட்டாலும், அவன் அதை மறுத்த விதம் அவளைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது…

​அப்போதுதான், ஜன்னலிற்க்கு வெளியே பால்கனியில் ஏதோ ஒரு மெல்லிய சத்தம் கேட்டது, ஒரு கணம் அவளது இதயம் நின்றது போல இருந்தது, ஆனால், இந்த முறை அவளுக்குள் பயம் எழவில்லை ஒருவிதமான ஆவேசமும் உண்மையை அறியும் துடிப்புமே மேலோங்கி இருந்தது.

சட்டென்று எழுந்தவள் பால்கனி கதவைத் திறந்தாள், அங்கே நிலவொளியில் கருப்பு நிற உடையில், முகமூடி அணிந்தபடி அவன் தான் நின்று கொண்டிருந்தான்…

அவனை அளவிடும் பார்வை பார்த்தவள்,..​ “இன்னைக்கும் திருடத்தான் வந்தியா?” என்று நேருக்கு நேராக நின்று கேட்டாள். அவளது குரலில் நடுக்கமில்லை, மாறாக ஒரு அதிகாரம் இருந்தது.

​”எஸ்…” என்று மிகச் சுருக்கமாகப் பதிலளித்தவன், அவளது அனுமதியைக் கூட எதிர்பார்க்காமல் அவளை உரசியபடி லாவகமாக அறைக்குள் நுழைந்தான்…

​அவளுக்குக் கோபம் தலைக்கேறியது. “ஹலோ! இது என்னோட ரூம், என்ன தைரியம் இருந்தா இப்படி உள்ள வருவ? பார்ட்டியில அவ்வளவு டீசண்டா பேசிட்டு, இப்போ இப்படி வர்றதுக்கு உனக்கு அசிங்கமா இல்லையா?” என்று கத்தினாள்…

​அவன் ஒரு நிமிடம் நின்று திரும்பினான், முகமூடிக்கு பின்னால் இருந்த அந்த லேசர் கண்கள் அவளை விசித்திரமாகப் பார்த்தன, அவன் பேசவில்லை, ஆனால் அவனது மௌனமே அவன் ரன்வீர் தான் என்பதை அவளுக்கு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியது…

“முதல்ல இந்த மாஸ்க்கைக் கழட்டு. நீ யாருன்னு எனக்குத் தெரியும். ரன்வீர் தானே நீ?” அவள் கோபமாக வினவ… அவனோ தொண்டையை செருமிவிட்டு… “பெயருக்குப் பின்னால இருக்கிற உருவத்தை விட, செயலுக்குப் பின்னால இருக்கிற காரணம் தான் முக்கியம் மிருதுளா,” என்றான் அதே ஆழமான குரலில்…

அவளது இதயம் ஒரு நிமிடம் படபடவெனத் துடித்தது, ஆனாலும்  “என்ன உளறுற நீ? முதல்ல எதுக்கு என் வீட்டுக்குள்ள திருடன் மாதிரி நுழைஞ்சிருக்கேன்னு சொல்லு!” என்று ஆக்ரோஷமாக வினவினாள்…

​அவன் ஒரு நிமிடம் அவளது கண்களை ஊடுருவிப் பார்த்தான். உண்மையில் அவன் வந்திருப்பது அந்த ரகசிய ஃபைலைத் தேடித்தான் என்றாலும், இப்போது அவளைப் பார்க்க வேண்டும் என்ற அந்தத் தணியாத ஆர்வமும், அவளது அந்தத் தைரியமான எதிர்ப்பும் அவனை அவளிடம் உண்மையைச் சொல்லத் தூண்டிட,
​”உனக்காக தான்,” என்றான் அவன் மிக நிதானமாக.

​மிருதுளா அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள், அவளது கண்கள் விரிந்தன. “எ… எனக்காகவா?” என்று திக்கித் திணறித் திரும்பக் கேட்டாள்…

​”எஸ் மை டியர்… சரி, சாப்பிட என்ன வச்சிருக்க?” என்று மிக சாதாரணமாகக் கேட்டவன், அவளது மெத்தையில் அப்படியே ஒய்யாரமாக அமர்ந்தான், முகமூடிக்கு பின்னால் இருந்த அந்த கண்கள் இப்போது அவளைக் கிண்டலாகப் பார்த்தன…

​அதிர்ந்து நின்றவளுக்கோ, அவன் அனுமதி இல்லாமல் தன் மெத்தையில் அமர்ந்தது பெரும் கோபத்தைக் கிளப்பியது.
​”என்ன தைரியம் இருந்தா என் பெட்ல வந்து இப்படி உட்காருவ? முதல்ல எழுந்திரு!” என்று கத்தியவள்,.. “உன் பேச்சே சரி இல்ல, இதுல உனக்கு விருந்து வேற கேட்குதோ?” என்று எகிறினாள்…
​ரன்வீர் அசையவே இல்லை, அவனது அந்த மிடுக்கும், அலட்சியமும் அவளை இன்னும் எரிச்சலூட்டியது.

“பசிச்சா சாப்பாடு கேட்குறதுல என்ன தப்பு? டின்னர் கூட நான் சாப்பிடல, இப்போ உன் கையால ஏதாவது கிடைச்சா நல்லா இருக்கும்னு தோணுது,” என்றான்.

அவளுக்கோ ஏகத்துக்கும் கடுப்பானது,.. ​”சாப்பாடும் கிடையாது, ஒன்னும் கிடையாது! இப்போ நீயே வெளிய போறியா இல்ல நான் தாத்தாவைக் கூப்பிடவா?” என்று அவள் மிரட்டினாள்…

​ரன்வீர் மெல்ல எழுந்து அவளை நோக்கி ஒரு அடி முன்னே வந்தான். அவனது அந்த உயரமான உருவம் அவளை நெருங்கியபோது, அவளது கோபம் ஒரு நொடி தவிப்பாக மாறியது…

​”உன் தாத்தாவை ஏன் தொந்திரவு பண்ணுற, பாவம் வயசான காலத்துல அவருக்கு தேவை நல்ல தூக்கம் தான், உன்னை நான் ஏதாவது தொந்திரவு பண்ணேனா இல்லைல” என்றவன் மீண்டும் அவள் மெத்தையில் சாய்ந்து அமர்ந்தபடி, “சீக்கிரம்… ஏதாவது இருந்தா எடுத்துட்டு வா, இல்லன்னா நான் உன் கிச்சனுக்கே வந்துடுவேன்,” என்று செல்லமாக மிரட்டினான்…

​’நான்தானே அவனை மிரட்டணும், ஆனா இவன் என்னையே மிரட்டுறான்! இங்கே எல்லாமே தலைகீழா நடக்குது’ என்று எண்ணியவளுக்குக் கோபம் ஒருபுறம், தவிப்பு ஒருபுறம் என மனதுக்குள் மல்லுக்கட்டியது.

அவனது அந்த அதீத நிதானமும், ஒரு திருடனுக்கே உரிய பயம் இல்லாமல் ஒய்யாரமாக அமர்ந்திருந்த விதமும் அவளை எரிச்சலின் உச்சத்திற்கே கொண்டு சென்றது…

​பற்களைக் கடித்தபடி அவனைத் திரும்பிப் பார்த்தவள், “உனக்கு என்னதான் வேணும்?” என்று மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள்…

​அவனோ சற்றும் யோசிக்காமல், அந்த லேசர் கண்களால் அவளை ஊடுருவியபடி, “நீதான்…” என்று அதே பதிலை மீண்டும் தந்தான்.

​மிருதுளாவிற்குச் சுள்ளென்று கோபம் ஏறியது. ‘என்ன ஒரு திமிர் இவனுக்கு! இதுக்கு மேல அமைதியா இருந்தா இவன் இன்னும் எல்லை மீறுவான்’ என்று முடிவு செய்தவள், “செக்யூரிட்டி…” என்று ஆக்ரோஷமாகத் தன்பலமெல்லாம் திரட்டிக் கத்தினாள்…

​அவளது குரல் அந்த நிசப்தமான இரவில் முழுமையாக ஒலிப்பதற்குள், ரன்வீரின் வலிய கரம் மின்னல் வேகத்தில் அவளது இதழ்களை அழுத்தி மூடிட, அவளது அலறல் அவனது உள்ளங்கைக்குள்ளேயே அமுங்கிப் போனது…

அவள் விழிகளோ அதிர்ந்து விரிய, அவளை அப்படியே இழுத்துத் தன் பக்கம் திருப்பிக் கொண்டான், அவனது அந்தத் தீர்க்கமான பார்வை இப்போது அவளது கண்களுக்கு மிக அருகில் இருந்தது, அந்தப் பார்வையில் ஒரு எச்சரிக்கையும், ஒரு மெல்லிய அதிகாரமும் கலந்திருந்தது…

​”எதுக்கு சின்னக் குழந்தை மாதிரி பிஹேவ் பண்ணுற, நான் கோபப்படுற மாதிரி நடந்துகிட்டனா உனக்கு தான் சேதாரம்” என்று அவளது காதோரம் மிக மெல்லிய குரலில் எச்சரிக்க ​மிருதுளா அவனது பிடியில் இருந்து விடுபடப் போராடினாள்.

ஆனால், அவனது கரத்தின் வலிமை அவளை அசைய விடாமல் தடுத்தது, அவனது அந்தத் தீண்டலில் ஒரு அந்நியத் திருடனின் வக்கிரம் இல்லை மாறாக, ஒரு உரிமையுள்ள மனிதனின் வேகம் இருப்பதை அவள் உணரத் தொடங்கினாள்.

​அவன் மெல்ல அவளது காதருகே குனிந்து, “இப்போ நான் கையை எடுப்பேன்… ஆனா கத்தக்கூடாது, புரிஞ்சுதா?” என்று கேட்க, வேறு வழியின்றி அவள் மெல்ல தலையசைத்தாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!