Skip to content
Post Views: 2,744
அத்தியாயம் 4
சற்று நேரத்திற்கு முன்பு வாரி இறைத்த தானியங்களை உண்ணுவதற்கு தரையிறங்கியிருந்த பல்வேறு வகையான பறவைகளின் பலதரப்பட்ட சத்தங்கள், கையில் ஜிமிக்கையை வைத்து பார்த்திருந்த ம்ருதவ்வின் செவிகளில் பழைய நினைவுகளை மெல்லத் தட்டி எழுப்பின.
அந்த ஜிமிக்கி தான் அவனுக்கு எல்லாமுமாக ஓர் உறவை அறிமுகம் செய்து வைத்தது.
யாரென்று தெரியாத ஒருத்தி தனக்கு அனைத்துமாகிப் போவாளென அவனும், தான் ஒருவனுக்கு மொத்த உலகமாகிப் போவோமென அவளும் நினைத்திருக்க மாட்டார்கள்…
Advertisement
‘அவள் தொலைத்த ஜிமிக்கி அவனிடம் சேரும் வரை.’
இளங்கலை பொறியியல் நான்காம் ஆண்டில் ம்ருதவ்.
பெற்றோர் அற்ற அவனை அதுவரை வளர்த்து ஆளாக்கி பாசம் காட்டிய ஓர் உயிர் காற்றாகி, இந்த பரந்த உலகில் அவனை தனித்து விட்டுச்சென்று சில நாட்களாகியிருந்தன.
Advertisement
வீட்டின் கூடத்தில் தன்னைப் பிரிந்து திரும்பிவர முடியாத தூரத்திற்கு சென்றுவிட்ட சித்தப்பாவின் புகைப்படம் முன்பு சுருண்டு கிடந்தவனை தட்டி எழுப்பினாள் ரதி.
Advertisement
அவளின் செய்கைக்கு எதிர்வினை புரிபவனாக எழுந்து சுவற்றில் சாய்ந்து அமர்ந்தான் ம்ருதவ்.
“என்னடா, எப்பவும் போட்டோக்கு முன்னவே படுத்து கிடக்கிற? இப்படியே இருந்தா, நீ இதிலிருந்து வெளியவரது எப்போ?” என்றாள் ரதி.
“நல்லா கேளு. நானும் என்னென்னவோ ஆறுதல் சொல்லிப் பார்த்துட்டேன். அவர் படத்தைப் பார்த்துக்கிட்டு வெறிச்சி உட்கார்ந்துக்கிறான் இல்லைன்னா இப்படி தரையில சுருண்டுக்கிறான்” என்று தட்டில் உணவு வைத்து எடுத்து வந்தான் கமலேஷ்.
Advertisement
“முதல்ல அவனை சாப்பிட வை” என்று தட்டினை ரதியின் கையில் கொடுத்திட்ட கமலேஷ், தண்ணீர் கொண்டு வருவதற்காக சமயலறை சென்றான்.
“சாப்பிடு சிவா” என எவ்வளவோ வற்புறுத்தியும் ம்ருதவ் அசையாதிருக்க, தானே உணவினை எடுத்து அவனது வாய் அருகே நீட்டியிருந்தாள்.
இம்முறை எதுவும் சொல்லாது அமைதியாக உணவினை வாங்கி மென்றான். உணவுடன் சேர்த்து தொண்டைக்குள் சிக்கி அடைக்கும் துக்கத்தையும் விழுங்க முயற்சித்தான்.
எதுவும் பேசாது அமைதியாக உணவை ஊட்டி முடித்த ரதி, தண்ணீர் கொண்டு வந்த கமலேஷ் அவர்களின் அருகில் அமர்ந்துவிட்டிருக்க, அவனிடமிருந்து நீர் குவளையை வாங்கி ம்ருதவிடம் கொடுத்தாள்.
வாங்கி பருகியவனின் முகத்தில் ஜீவனே இல்லை. உணவு உட்சென்றதும் முகத்தில் தென்படும் தெளிவு கூட தோன்றவில்லை.
அப்படியே சுவற்றில் சாய்ந்து தலையை உயர்த்தியவனின் மூடிய விழிகளிலிருந்து கண்ணீர் இறங்கி அவனது காது மடலை நனைத்தது.
கமலேஷ் ரதிக்கு கண்காட்டிட,
“இந்த போட்டோவை எடுத்து சித்தப்பா ரூமிலே மாட்டிடு கமல்” என்றாள்.
ம்ருதவ் எதுவும் சொல்லாது அமைதியாக இருக்க, கமலேஷ் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு சித்தப்பாவின் அறை பக்கம் நகர,
“அங்க பூஜையறையில் வைச்சிடு கமல்” என கண்கள் திறக்காது கூறியிருந்தான் ம்ருதவ்.
கமலேஷ் ரதியை ஏறிட, அவளோ செய் என்பதைப்போல தலையசைத்தாள்.
“உனக்கு நடக்கிறது ரியலைஸ் ஆகுதுல சிவா” என்று அவனது கையின் மீது கை வைத்த ரதி, “இருபது நாளுக்கு மேலாகுதுடா. இப்படியே இருந்தா எப்படி? அடுத்து என்னன்னு பார்க்க வேணாமா? அடுத்த மன்த் எக்ஸாம்ஸ் வருதுடா” என்றாள்.
“புரியாம இல்ல ரதி” என்று கண்களை திறந்த ம்ருதவ், “அப்பா, அம்மாவோட வாழ கொடுத்து வைக்கல. ஈவன் அவங்க முகம் நேர்ல பார்த்த நினைவில்லை. போட்டோவில் பார்த்தது தான். சித்தப்பா எனக்காகவே வாழ்ந்தார். இப்படி பாதியில விட்டுப்போவார் நினைக்கல. இப்போ யாருமில்லாம இருக்கேன். இந்த வீட்ல எங்கப் பார்த்தாலும் அவர்தான் தெரியுறாரு. இப்போக்கூட கிச்சன் வாசல்ல கரண்டியோட நின்னுட்டு ரெண்டு தோசை போதுமா சிவான்னு கேட்கிறார்” என்றான்.
அப்போதுதான் சாப்பிட்ட தட்டை எடுத்துகொண்டு சமையலறை சென்று சிங்கில் கழுவ போட்டுவிட்டு வெளியில் வந்த கமலேஷ், “எதே இங்க நிக்கிறாரா?” என அதிர்ந்தவனாக தனக்குப் பின்னால் திரும்பிப் பார்த்து வேகமாக ரதியின் அருகில் வந்து அவளை இடித்துக்கொண்டு அமர்ந்தான்.
“அவனுக்கு இல்லியூஷன் டா. நீ ஏன் பயந்து சாவுற” என்று கமலேஷின் தொடையிலே நன்கு வலிக்கக் கிள்ளி வைத்தாள் ரதி.
“இருந்தாலும் டக்குன்னு ஜெர்க் ஆகுதுடி” என்றவன், “நீ நார்மல் ஆகுற வரை எங்க வீட்ல வந்து தங்கு” என்றான்.
“எனக்கு சித்தப்பா வேணும்டா! இங்க தான் என்னோட…” என்று கண்கள் கலங்க வார்த்தைகளை நிறுத்தி, “அவர் இல்லைங்கிறது புரியுது. பட், காண்ட் அக்செப்ட் இட்” என்றான் ம்ருதவ்.
ரதி, கமலேஷ் என்ன சொல்வதென்று தெரியாது அமைதியாக இருக்க…
“யாருமே இல்லாத வலியை ஃபீல் பண்றேன். ஹர்ட்ஸ் சோ மச்” என்ற ம்ருதவ், “அனாதை ஆகிட்டேன்ல” என்றான்.
“அப்படியே அறைஞ்சேன்னு வை” என்ற கமலேஷ், “எனக்கும் இவளுக்கும் உன்னை விட்டா யாருமில்ல தெரியும்ல. வீடு, குடும்பமெல்லாம் இருந்தாலும் உன்னோடவே தான இருக்கோம். இன்னொருவாட்டி இப்படி சொல்லு, இனி சொல்றதெல்லாம் இல்லை, சப்புன்னு அறைஞ்சிடுவேன்” என்றான்.
“உறவுன்னு எத்தனை பேர் வந்தாலும், அந்த குடும்பங்கிற பந்தத்துக்கு ஈடாகாதுலடா! உனக்குன்னு ஒரு குடும்பம் இல்லன்னா அங்க நீ அனாதை தான்.”
ம்ருதவ் மனதால் வெகுவாகவே துவண்டு போயிருக்கிறான் என்பது இருவருக்கும் புரிந்தது. அதைவிட இதற்குமேல் அவனை தனியாகவிட்டால் அவனது நிலை மோசமாகிவிடுமென நினைத்தார்கள்.
“நீ முதல்ல நாளையிலிருந்து காலேஜ் வா. மத்தது எல்லாம் தானா சரியாகும்” என்ற ரதி, தான் சொல்லியதற்கு முந்தைய நாட்கள் போல், “இப்போ வர முடியாது” என்று அவன் மறுத்து எதுவும் சொல்லாதிருக்கவே, சிறு ஆசுவாசம் அடைந்தாள்.
“ஆமா வாடா! நீயில்லாம எங்களுக்கும் காலேஜ் போகப் பிடிக்கல” என்றான் கமலேஷ்.
சிறிது நேரம் மூவருக்குமிடையே மௌனம் நீடிக்க…
“ஹ்ம்ம்… வர்றேன்!” என்றிருந்தான் ம்ருதவ்.
ஒரு உறவை இழந்தவனுக்கு அனைத்து உறவுகளையும் ஒருத்தியின் பேரன்பின் மூலமாக கடவுள் தனக்கு கொடுக்கவிருக்கிறார் என்பதை அறியாது மறுநாள் கல்லூரிக்குச் சென்றான்.
அன்றைய தினம் கல்லூரியில் கல்லூரி தினம் (காலேஜ் டே) கொண்டாட்டம்.
வந்தவனுக்கு இன்று ஏன் வந்தோமென்ற மனநிலை தான்.
அதனை தனது நண்பர்களிடம் வெளிப்படுத்தவும் செய்தான்.
“சொல்லியிருக்கலாமே! நாளைக்கு வந்திருப்பேன். எல்லாரும் ஜாலியா செலபிரேட் பண்ணிட்டு இருக்கும்போது, இங்க நான் மட்டும் தனியா தெரிவேன். நான் இருக்கும் மனநிலைக்கு யாரோடவும் மிங்கில் ஆகவும் முடியல” என்ற ம்ருதவ்வுக்கு அந்த சூழலே மூச்சுமுட்டும் உணர்வை அளித்தது.
எங்கும் வண்ண தோரணங்கள், பல வண்ண மலர்கள், பலூன்கள், ஆங்காங்கே ஒவ்வொரு துறைக்கு முன்பு வானவில்லை கொட்டி வைத்த மாக்கோலங்கள், ஜிகினா காகிதங்கள், மகிழ்வோடு வலம் வரும் மாணவர்கள் கூட்டம். அவர்களின் துள்ளல், உற்சாகம், கொண்டாட்டம், ஆர்ப்பரிப்பு என யாவற்றையும் ரசிக்கும் மனநிலையில் சுத்தமாக அவனில்லை.
பொருந்தாத இடத்திற்கு தான் வந்த உணர்வில் தவியாய் தவித்தான்.
தங்களின் கொண்டாட்டத்தில் அவனது மற்றைய நண்பர்கள் அவனை பங்குகொள்ள அழைத்திட அவர்களுடன் ஒன்ற முடியாது திண்டினான்.
“இன்னைக்கு வந்தா இந்த செலபிரேஷன் உன் மூட் சேன்ச் பண்ணும் நினைச்சோம் சிவா” என்று நண்பனின் வருத்தம் புரிந்து ரதி பேசிட…
“எனக்கு இங்க சஃபகேட்டிங்கா இருக்கு ரதி. நான் வீட்டுக்குப் போறேன்” என்று ரதி மற்றும் கமலேஷ் கூப்பிட்டுக்கொண்டே பின்னால் வருவதை பொருட்படுத்தாது வேகமாக தரை பார்த்தவனாக சென்றுகொண்டிருந்தவன், சட்டென்று தன்மீது யாரோ மோதியதை உணரும் முன்பு மோதிய நபரோடு சேர்ந்து கீழே விழுந்திருந்தான்.
அவனது நெஞ்சத்தில் அந்நபர் முகம் பக்கவாட்டாக கன்னம் அழுந்த பதிந்திருக்க, கீழ் கண்களால் யாரெனப் பார்த்தவன், தன்மீது விழுந்தது பெண்ணென்றதும் சடுதியில் அவளை பிரித்து தள்ளி எழுந்து நின்றிருந்தான்.
அவன் பிரித்து விலக்கிய வேகத்திற்கு,
“ஆ… அம்மா” என்ற மென் கத்தல் அவளிடம்.
“பார்த்து வரமாட்டீங்களா?”
அந்த சூழலே அவனை பெரும் அழுத்தத்திற்குள் அமிழ்த்தியிருக்க, தனது மொத்த எரிச்சலையும் அவளிடம் காண்பித்தான். அக்கணம் தான் அவளை நன்றாகப் பார்த்தான்.
வலதுபக்க காதில் கை வைத்து, முகம் சுருக்கி, நின்றிருந்தாள்.
அவளின் சுருங்கிய வதனம் ம்ருதவ்வை அமைதியாக்கியது.
கீழே விழுந்ததில் வலிக்கிறதென அவனே நினைத்துக்கொண்டான்.
ம்ருதவ் கத்தியதில் காதை தேய்த்தவாறு, “சாரிங்க. மேல கலர் பூச ஃபிரெண்ட்ஸ் துரத்தினாங்கன்னு பின்னாடி பார்த்துட்டே ஓடி வந்துட்டேன்” என்று அவள் சொல்லிட…
“இட்ஸ் ஓகே! நானும் கத்தினதுக்கு சாரி” என்று அங்கு நிற்காது சென்றுவிட்டான். முன் சென்றவன் ஏதோ உந்துதலில் திரும்பி அவளின் முகம் பார்த்தான்.
தூரம் சென்று அவளின் உருவம் அழகியல் (Aesthetic) தோற்றத்தில் கலங்களாகும் வரை நான்கைந்து முறை திரும்பிப் பார்த்திருப்பான்.
விழுந்தது, எழுந்தது, அவன் தள்ளி நிறுத்தியது, கத்தியது, அவள் பதில் சொல்லியது, இருவரும் மன்னிப்பு கோரியது, அவன் சென்றதென யாவும் நிமிடத்தில் நடந்திருக்க, அவளருகில் வந்தனர் ரதி, கமலேஷ்.
அவள் காதில் கை வைத்திருக்க, கன்னத்தில் வைத்திருப்பதாக இவர்களுக்குத் தோன்றிட, தாங்கள் சில அடிகள் பின் தங்கியிருக்க, ம்ருதவ் அவளிடம் கோபமாக பேசியது போன்றிருக்க, தங்கள் நண்பன் அப்படி செய்பவன் இல்லையென்றாலும், அடித்துவிட்டானோ என்று நினைத்தனர்.
இருவரும் ஒருவரையொருவர் அர்த்தமாகப் பார்த்துக்கொண்டே…
“அடிச்சிட்டானா?” எனக் கேட்டனர்.
அவளோ காது இன்னும் வலி கொடுக்கவே, அழுத்தமாக தேய்த்துக் கொடுக்கும் போதுதான், அந்த காதில் அணிந்திருந்த ஜிமிக்கையை காணவில்லை என்பதை உணர்ந்தாள்.
“அச்சோ… போச்சு போச்சு” என இரு கைகளையும் உதறியவள், அவ்விடத்தை பார்வையால் அலசினாள். ரதி, கமலேஷின் கேள்வியை கவனியாதவளாக.
“என்னங்க தேடுறீங்க…?” ரதி கேட்க,
நிமிர்ந்துப் பார்த்தவள்,
“நீங்க எந்த இயர்?” எனக் கேட்டாள்.
“ஃபைனல் இயர்.” இருவரும் ஒருசேர மொழிந்தனர்.
“ஹோ…” என்றவள், “நீங்க தப்பா எடுத்துக்கலன்னா எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?” எனக் கேட்டவள், அவர்கள் பதில் சொல்லும் முன்னவே, “இப்போ ஒருத்தர் மேல இடிச்சு கீழ விழுந்துட்டேன். அதுல என் ஜிமிக்கி மிஸ் ஆகிடுச்சு. என்னோட தேடிப் பாக்குறீங்களா?” என்றாள்.
தங்களின் நண்பனால் தான் அவளின் ஜிமிக்கி தொலைந்து விட்டதென அவளுடன் சேர்ந்து அவர்களும் தேடினர்.
வெகு நேரம் தேடியும் கிடைக்கவில்லை.
“உண்மையாவே இங்கதான் தொலைஞ்சுதா?” என கமலேஷ் கேட்க, “இங்கதான் விழுந்திருக்கணும்” என்றவள், “நான் அவங்க மேல விழுந்ததும் என் ஜிமிக்கி ஹூக் சர்ட் பட்டன்ல மாட்டிக்கிச்சு நினைக்கிறேன். என்னை டக்குன்னு பிடிச்சு இழுத்தாங்க. காது பயங்கர வலி” என நெற்றி முடிச்சிட யோசிக்கும் பாவனை சிந்தி, “கண்டிப்பா இங்கதான் விழுந்திருக்கணும்” என்றாள்.
அவள் என்ன நடந்ததென கதை சொல்லிய பின்னர் தான், அவளின் மற்றொரு காதை கவனித்த ரதி,
“அப்போ இங்கதாம்மா இருக்கும். கண்டுபிடிச்சிடலாம்” என்று அவளிடம் சொல்லிக்கொண்டிருந்த கமலேஷின் கையை சுரண்டி, அவளது மற்றொரு காதினை சுட்டி கண் காண்பித்தாள்.
“அடிப்பாவி… நான் கூட கோல்ட் நினைச்சேன். தங்கம் விக்கிற விலைக்கு தேடி கொடுப்போம் பார்த்தாக்கா இந்த பிள்ளை நம்மள வச்சு காமெடி பண்ணியிருக்கு. அதுவும் அரை மணி நேரமா குனிஞ்சா மாதிரியே இருந்திருக்கோம். நம்ம டிபார்ட்மெண்ட் பய எவனெவன் நோட் பண்ணான்னு தெரியல. என்ன மச்சான் புதையல் கிடைச்சுதா , பூமியில தண்ணி கிடைச்சுதான்னு கேட்டு ஓட்டபோரானுங்க” என்று கிசுகிசுப்பாய் புலம்பித் தள்ளினான் கமலேஷ்.
“ஹெல்ப் பண்றேன் சொல்லிட்டு உங்களுக்குள்ள பேசிட்டு நிக்கிறீங்க?” என்றவள், “தேடுங்க” என அதட்டலாக சொல்லிட…
“ஆமா நீ எந்த இயர்?” எனக் கேட்டாள் ரதி.
“ஏன்? எல்லாம் நல்ல இயர் தான்” என்றவள், தான் ஜூனியர் அதுவும் இரண்டாம் வருட மாணவியெனத் தெரிந்தால் அவர்களை இவ்வளவு நேரம் தேட வைத்ததற்கும், தற்போது அதட்டியதற்கும் எதுவும் செய்துவிடுவார்களோ என பயந்து மெல்ல பின்னால் அடி வைத்தவளாக,
“செக்கென்ட் இயர் சீனியர்ஸ்… அண்ட் சாரி” என ஓடிவிட்டாள்.
“வாலுப்பொண்ணா இருக்கும்போல” என்று ரதி சிரிக்க, “ஒரு ஜூனியர் பொண்ணு நம்மளை வேலை வாங்கியிருக்கு நீ சிரிக்கிற” என்றான் கடுப்பாக.
“வேறென்ன பண்ணனும்?” ரதி மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவளாக மிதப்பாகக் கேட்டிட…
“ஒன்னும் பண்ண வேணாம். போவோம்” என திரும்பி அடி வைத்தவன் தோள் தட்டி, “இந்தப்பக்கம்” என ம்ருதவ் சென்ற திசையில் கை காண்பித்தாள்.
“அவன் இந்நேரத்துக்கு வீட்டுக்கே போயிருப்பான்.”
“அப்போ நாமளும் கிளம்புவோம். அவன் இல்லாம என்ன செலபிரேஷன். இன்னைக்கு அட்டெண்ட்டன்ஸ் இல்லை தான” என்ற ரதி, “நான் போய் பேக் எடுத்துட்டு வர்றேன். நீ பார்க்கிங் போயிட்டு பைக் எடுத்திட்டு மெயின் கேட் வந்திடு” என்று சென்றாள்.
வகுப்புக்கு சென்ற ரதி இருவரின் பைகளையும் எடுத்துக்கொண்டு திரும்பிவர, அவ்விடத்தில் அவள் மீண்டும் தன்னுடைய ஜிமிக்கியை தேடிக் கொண்டிருந்தாள்.
“திரும்பவும் தேடுறியா?” என்று ரதி நின்று கேட்க,
“அது வேணும் சீனியர்” என்றாள்.
“மெட்டல் சில்வர் தான! அதையா இவ்வளவுக்கு மெனக்கெட்டு தேடுற?”
கேட்ட ரதியை உணர்வற்றுப் பார்த்தவள், “அது கொஞ்சம் ஸ்பெஷல். ரொம்ப ஆசைப்பட்டு வாங்கினது. சின்ன பொருளா இருந்தாலும் நமக்கு பிடிச்சதுனா அதுக்கு தனி மதிப்பு தான” என்றாள்.
“அதுசரி” என்ற ரதி, “உன் பெயர் என்ன?” என வினவினாள்.
“மித்யுகா.”
“நான் ரதி. நீ ஒருத்தன் மேல விழுந்தியே அவன் என் ஃப்ரெண்ட் தான். மே பீ, அவன்கிட்ட இருக்கலாம்” என்றாள்.
ரதி சொல்லியதும் மித்யுகாவும் நடந்த நொடி நேர நிகழ்வை ஓட்டிப்பார்க்க…
“ஆமா அக்கா… அவங்க பட்டன்ல மாட்டினது” என நிறுத்தி, “என்னை தள்ளி விட்டாங்களே! அப்போ கீழதான விழுந்திருக்கணும்?” என்றாள். கேள்வியாக.
“பட் கீழ விழுந்திருந்தா இங்கதான இருக்கணும். இல்லையே! இருந்திருந்தா இவ்வளவு நேரம் தேடினதுக்கு கிடைச்சிருக்கணும்” என்ற ரதி, “நான் எதுக்கும் அவன்கிட்ட கேட்டுப் பாக்குறேன்” என்றாள்.
“தேங்க்ஸ்க்கா” என்று மித்யுகா சொல்லிட, ரதி சிறு புன்னகையோடு சென்றிருந்தாள்.
ரதி, கமலேஷ் இருவரும் ம்ருதவ்வின் இல்லம் வந்தபோது அவன் வீட்டிலில்லை. பூட்டியிருந்தது.
“வீட்டுக்கு வராம எங்கப்போனான்?” என கமலேஷ் ம்ருதவ்வின் அலைபேசி எண்ணுக்கு அழைக்க…
முதல் ஒலியிலே எடுத்திருந்தான்.
“எங்கடா இருக்க?” கமலேஷ் பதற்றமாகக் கேட்டிட,
“இங்கதான் இருக்கேன்” என்றான் ம்ருதவ்.
“இங்கதான்னா எங்க? இடத்தை சொல்லு நாங்க வர்றோம்” என்றான்.
“எனக்கு தனியா இருக்கணும் டா!” என்ற ம்ருதவ் பட்டென்று வைத்திருந்தான்.
தற்போது அவன் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்துப் பார்த்தால் நகரமே சிறு மினியேச்சர் வடிவில் தெரிந்திடும்.
திருச்சி மலைக்கோட்டை. (உச்சிப்பிள்ளையார் கோவில்.)
கல்லூரியிலிருந்து அங்குதான் வந்திருந்தான். அவனுக்கும் அவனது சித்தாப்பாவிற்கும் எதுவொன்றென்றாலும் இங்கு வருவது வாடிக்கை.
துவண்டிருந்தவனுக்கும் மனம் தன்னைப்போல் இங்கு அழைத்து வந்திருந்தது.
உச்சி வெயில் மெதுவாக நகரத்தின் மீது சாய்ந்து கொண்டிருந்தது. அந்த உயரத்தில் இருந்து பார்த்திடும்போது, திருச்சி ஒரு சிறு உலகம் போன்று அமைதியாகக் காட்சியளித்தது. ஏனோ அந்த அமைதி அவனின் மனத்திற்குள் இல்லை.
உச்சிப்பாறைத் திண்டின் மீது ஒருபக்கம் சாய்ந்து அமர்ந்திருந்தான் ம்ருதவ்.
வீசும் காற்று அவனைத் தொட்டு ஆறுதல்படுத்த முயற்சித்தது.
அவன் மனதிற்குள் அடைக்கப்பட்டிருக்கு சுமைகளை மெதுவாக உரசிக் கொண்டே கலைந்திடச் செய்யும் இதமான இயற்கையின் தொடுதல்.
யாருமில்லாதவர்களுக்கு இயற்கையே பெரும் ஆறுதல்.
எதுக்கு இவ்வளவு கஷ்டம்?” என்று தன்னிடமே மெல்லக்கேட்க,
பதில் சொல்ல யாரும் இல்லை.
ஆனால் அவனைச் சுற்றியிருந்த சூழலில் ஒரு பதில் இருந்தது.
தூரத்தில் காவிரி நதி சூரியனின் தகிப்பால் கீற்றுக் கண்ணாடியாக ஒளிர்ந்தது. சலசலப்பாய் ஓடிக்கொண்டிருந்தது. நின்று விடாது.
அதை பார்த்தவனுக்கு சிறிய உணர்வு, இங்கு நின்றுபோகாது ஓடிக்கொண்டிருந்தாலே ஜீவிக்க முடியும்.
மெதுவாக இமைகள் மூடியவன், வலது கரத்தின் உள்ளங்கையை தனது மார்புப்பகுதியில் வைத்து அழுத்தம் கொடுத்து தேய்த்திட, அவனது விரல்களுக்கு தட்டுப்பட்டது, சட்டையின் பட்டன் நுழையும் துளையில் மாட்டிக்கொண்டு அவனது நெஞ்சத்தில் ஒய்யாரமாக ஆடிக்கொண்டிருந்த ஜிமிக்கி.
‘தவித்த இதயத்தின் துடிப்பில்,
உள்ளம் உடைந்த வேளையில்,
உறவாய் வந்து சேர்ந்தது…
தொலைத்தது அவளோ!
கிடைத்தது அவன் உலகமோ!’
error: Content is protected !!