Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

47. Ashoka - உன்னாலே உனதாகிறேன்

உன்னாலே உனதாகிறேன் ! டீஸர் 1

உன்னாலே உனதாகிறேன் !

“தனியாக இருப்பதில் எனக்கொன்றும் பெரிய சங்கடங்கள் இல்லை. தாள முடியாதிருக்கிறது யாருடனாவது இருக்கும்போது உணர்ந்துகொள்ளும் தனிமை” தனக்காகவே எழுதியது போல அந்த வரிகளை பலமுறை அசை போட்டுவிட்டாள் அவள்

அம்மாவின் வீடு வந்து சேர்ந்து இந்த ஒரு மாதத்தில் அவள் வீடே அவளுக்கு வெறுத்துவிட்டது. அம்மா அப்பா தம்பி அனைவரும் சேர்ந்து இருக்கும் அவள் வீடு இது. ஆனாலும் தனிமை உணர்வு அவளை வதைத்தது. இந்த இரவும் அதே போன்றதொரு தனிமை உணர்வோடுதான் போராடிக் கொண்டிருந்தாள் இந்தப் பூம்பாவை. 



Advertisement

இரவுக்கு என்று எப்போதும் ஒரு குணம் உண்டு.  அது எப்போதும் தன்னோடு தனிமையையும், துயரையும், அதன் கூடவே சில அழியா நினைவுகளையும் அழைத்தே வருகிறது. அப்படியான ஒரு நினைவுச் சுழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள். 

மொட்டை மாடியில் தனியே நடந்து கொண்டிருந்தவளுக்கு அந்த இரவும் இருளும் அவளின் வாழ்க்கை போலவே சூனியமாகத் தெரிந்தது. அழகாபுரியில் இதே வீட்டில்தான் அவள் பிறந்து வளர்ந்தது எல்லாம். சிறு வயதில் இங்கு நின்று பார்க்கும் போதெல்லாம் இந்த வானம் நட்சத்திரங்களால் நிறைந்து புன்னகைத்துக் கொண்டிருக்கும். இப்போதெல்லாம் அவைகள் எங்கு தொலைந்ததோ? வானமும் அவள் போலெ தனியே நின்றுகொண்டிருந்தது. 

நட்சத்திரங்கள்தான் எல்லாம் காணாமல் போனது என்றால், பக்கத்துத் தோட்டத்தில் கூட்டமாய் நின்றிருந்த நெட்டுலிங்க மரங்களுக்கும் என்ன வந்தது? அவைகளும் எண்ணிக்கையில் வெகுவாய் குறைந்து ஒன்றே ஒன்று மட்டும் தனியே இலைகள் எல்லாம் உதிர்ந்து, பார்க்கவே பரிதாபமாய் நின்றது. ‘அந்த பட்டுப்போன பரிதாபமான நெட்டுலிங்க மரம் போலவே நானும் தனியே நிற்கிறேன்’ என நினைத்தவள் கவனம் சில கணங்கள் காதுகள் கேட்ட ஒலியால் சிதறியது. 

Advertisement

வானம் பார்த்து தன் உலகில் நின்றவளை யாரோ வரும் சத்தம் கலைக்க மாடிப் படியின் பக்கம் திரும்பினாள். அவளின் அம்மா மல்லிகா கையில் ஒரு பெரிய குவளையுடன் மூச்சிரைக்க மேலேறி வந்து கொண்டிருந்தார். 

Advertisement

“என்ன பூவினி செய்யிற? பனியில நிக்காதன்னு ஒனக்கு தெனமும் சொல்லனுமா? ஒனக்கு சளி சீக்கிரம் பிடிக்கும். இந்தா, மொதல்ல இந்த பாலக் குடி. குடிச்சுட்டு முதல்ல கீழ இறங்கு. சத்தவடம்ன்னா?(கொஞ்சநேரம்) மணிக்கணக்காவா குளுருள நிக்கிறது?” 

“சும்மாதாம்மா வந்தேன். செத்த காலாற நடக்கலான்னு. வீட்டுக்குள்ளேயே சும்மா  இருக்கது என்னமோ செய்யிது.”

“என்னத்த செய்ய, வெளிய தெருவ போம்மான்னு சொல்லுற நெலமயிலயா நம்ம இருக்கோம். மாசம் ரெண்டாகல அதுக்குள்ளே இந்தா மினிக்கிகிட்டு சுத்துறான்னு எவளும் என்னமும் சொல்லுவா.”

Advertisement

“ம்மா, போதும்மா. இதுக்குத்தே நா வாயே தொறக்குறதில்ல. அவங்க யாரும் சொல்றாங்களோ இல்லையோ, யாரும் என்னவும் சொல்லுவாங்கன்னு பயந்தே நீங்க ரொம்ப சொல்றீங்க. அதான் எனக்கு இன்னமும் கடுப்பாகுது” சொன்னவள் சத்தம் கொஞ்சம் உயரவும், “ஒசக்க இருந்துக்கிட்டு என்னத்துக்கு இப்ப இம்புட்டு இரையிற. பைய்ய பேசு, இல்ல கீழ போ.” என்றார் மல்லிகா

“ம்மா..” என்றவளுக்கு சொல்வதற்கு ஓராயிரம் வார்த்தைகள் இருந்தாலும் ஒன்றுகூட குரல்வலையைத் தாண்டி வார்த்தைகளாக வடிவம் பெறவில்லை. “பாலக் குடுங்க.” என வாங்கி மெல்ல பருகத் தொடங்கினாள். அம்மா தந்த பசும்பாலில் இதமான சூடு இவளின் உள்ளச்சூட்டை சற்றே தனித்தது. 

“ம்மா, இங்க நெட்டுலிங்க மரம் நெறய இருந்துச்சுல்ல, வெட்டீட்டாங்களா? இருக்க ஒன்னும் பட்டுப் போனப்புல்ல இருக்கு.”

“அதுவா, அய்யா போகவும் ஆச்சி மட்டும் இப்ப தனியாத்தே இருக்காகல்ல. அவுகளுக்கும் முன்ன மாதிரி வேல பாக்க முடியுதில்ல. வேலைக்கு வருவாளே வேணி, அவளும் மகன் வீட்டுக்குப் போயிட்டா. அதேன் ஆச்சி மரமெல்லாம் வெட்டி சீரு பண்ணிட்டாக. அவுக மக அமெரிக்கால இருக்கால்ல அந்த புள்ளதே என்னத்துக்கு பூரா மரத்தையும் வெட்டுறியன்னு  சத்தம் போட்டாலாம். அவளுக்காக ஒத்த மரத்த மட்டும் விட்டுட்டமுன்னு சொன்னாக ஆச்சி.”

“அதுக்கு, பட்டமரத்த மட்டும் விட்டு?”

“எது பட்டமரம்? இருட்டுல ஒனக்கு அப்புடித் தெரியுது. அப்பியல்ல (ஐப்பசி) எல உதுரவும் பட்டுப் போனப்புல இருக்கு. தை பொறக்கவும் பாரு எப்புடி தளுத்து வளருமுன்னு. எல்லாம் பாக்குற நம்ம கண்ணுலதே இருக்கு. கால நேரம் கூடி வந்தா பட்டமரங்கூட தலச்சு நல்லா வளந்து வரும்.” 

அம்மா சொன்னது மரத்தை மட்டுமல்ல தனக்கும் சேர்த்துத்தான் என்று தெரியாத அளவுக்கு அவள் ஒன்றும் முட்டாள் இல்லை. ஆனாலும் அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. மனது மீண்டும் வள்ளியம்மாள் அன்று பேசியதையே நினைத்துப் பார்த்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!