Skip to content
Post Views: 1,603
உன்னாலே உனதாகிறேன்! – 1
“இடர்மிகு காலங்களில் எவருமில்லை கைகொடுக்க. ஒரு உறவுமில்லை. குறிப்பாக நீயுமில்லை, என்றான பின்புதான் ‘வாழவேண்டும் என்ற வைராக்கியம்’ ருசிக்கத் தொடங்கியது எனக்கு.“
Advertisement
படிக்கும் போது மிகமிக சாதாரணமாக படித்து கடந்து போன சீனு.ராமசாமியின் வரிகள் இன்று நொடிக்கொரு முறை காதுகளில் ஒலிக்கிறது. “இதுதான் இனி எனக்கான மந்திரம். என் வாழ்விற்கான மந்திரம்.” மனத்தோடு மென்மையாய் சொல்லிக் கொண்டாள்.
“நீங்க எங்களைப் பத்தி என்னவோ சொன்னிங்களாமே மாமா கடைசியா, அது என்னன்னு நாங் கேக்கப் போறதில்ல. கேட்டு மட்டும் எனக்கு என்னத்துக்கு ஆகப் போகுது. போகும்போது சொன்னியதானே, நீயே தனியா சமாளின்னு, நாந் தனியா சமாளிப்பேன் மாமா. பாருங்க.” மனதில் தோன்றியதை எல்லாம் வாய்விட்டு அரற்றினாள்.
Advertisement
Advertisement
‘தனியே சமாளித்தல்’ – இதுதானே வாழ்க்கைப்பாடம். ‘வாழ்க்கைக்கும் என் உறவு’ என நாம் நினைக்கும் ஒருவரின் இழப்பு, நம்மையும் மரணத்திற்குத் தள்ளினால் நாம் எப்படி மனிதர்களாக வாழ முடியும்? ஒருவரின் மரணத்தில் இருந்து விருப்பமே இல்லாவிட்டாலும், மீண்டும் நாம் மீண்டுதானே ஆக வேண்டியிருக்கிறது.
“உலகம் உருவான நாளுல இருந்து எல்லா உசுரையும் தொட்ட இந்த பாழாப் போன சாவு உங்களத் தொட்டப்ப நா நல்லா தூங்கிட்டு இருந்தேன். முழுச்சு கெடந்திருந்தாலும் என்னால என்ன செஞ்சுருக்க முடியும் மாமா?”
Advertisement
“உங்க சாவுக்கு சாட்சியா வேணா நின்னிருப்பேன். நா என்ன சாவித்ரியா? யமனோட போராடி உங்க உசுர மீட்டுக் கொண்டாரா? சாதாரண பொம்பளயாப் போயிட்டேனே.” கணவனின் நினைவுகள் நெஞ்சை முட்ட, நிற்காமல் கன்னம் தாண்டி கொதிக்கும் அமிலமாய் வழிகிறது அவனுக்கான கண்ணீர்.
எட்டி அருகிருந்த துவாலையை எடுத்து முகம் துடைத்தவளுக்கு அதில் இன்னமும் கணவனின் வாசம் சுற்றியிருக்க, பெருமூச்சொன்றை ஆழ உள்ளிழுத்துக் கொண்டாள்.
‘நீ விட்டுப்போன வெற்றிடத்தில் காற்று வெறுமனே சுற்றிவருகிறது, இன்று. உன் வாசத்தை மட்டும் எத்தனை நாள் கட்டி வைக்க முடியும் என்னுள். அதுவும் விரைவில் காற்றோடு கறைந்து காணாமல் போகும், உன்னைப் போலவே.
நீயே நிகழ் காலத்தில் காற்றாகி விட்டபின்பு, காதல் என்ற சொல்லே கசக்கிறது. இல்லை இல்லை கனக்கிறது. ஆம் கனக்கிறது, என் மனதும், கூடவே என் மார் முட்டும் நம் மகனும்.
நேற்று உன் காதல் கணத்தில் முழுதாய் நிறைந்தேன். நீ சிந்திய அன்பின் கணங்கள் தோறும், நான் சிணுங்கி, உன் கனம் உணர்ந்து, அதில் என் மடி நிறைந்து, நான் சுமந்த நம் மகனை இனிக் காலம் முழுதும் நான் தனியே சுமப்பேன்.
இன்று நீ இல்லாமல் போனதால் வாட்டும் தனிமையைத் தாண்டிவிடுவேன். நிச்சயமாக! எப்போதும் நான் சொல்வது போல ‘பொறுப்பேயில்ல ஒங்களுக்கு.’
என்னை எத்தனை முறை சொன்னாய், ‘திமிரு புடிச்சவடி நீ’ என்று. அந்தத் திமிர்தானே இன்று உன் மரணத்தைக் கடக்க முடியும் எனும் பெரும் நம்பிக்கையை எனக்குத் தருகிறது. இனியும் வாழ்வேன் என்று என்னைச் சொல்ல வைக்கிறது.
“உம் மேலயே பூ வாசம் வீசுதுடி, ஒம்பேரு போலயேன்னு சொன்னியலே மாமா. இனி ஏ வாநா (வாழ்நாள்) முழுக்க பூவே இல்லாம பண்ணிட்டியலே.” எண்ணங்களில் உழண்டாலும் வாய் தன் போலே பேசிக் கொண்டது.
நிலவும் நீலமும் தொலைத்த அமாவாசையின் இருண்ட வானம் போல இருக்கும் என் உலகில் இனி ஒளி தரும் சூரியனாய் என்றும் என் உடன் நீ வா. ஆம்! இதுவும் ஒருவகைப் பிடிவாதம்தான். திமிர்தான்.
‘இதயாவது ஒழுங்கா செய்ங்க’ன்னு சொல்லும் போது நீளும் உன் இதழ்கள் போல இனி நீளும் என் நாட்களும் நம் மகனோடு.
தனியே மனத்தோடு பேசிக்கொண்டவளின் மடியில் இருந்த மகன் மகிழன் சிணுங்க, மெல்ல அவனைத் தூக்கி மறுபக்க மார்புக்கு மாற்றும் போது மீண்டும் ஒருமுறை குனிந்து அவன் முகம் பார்த்து சொல்லிக்கொண்டாள், ‘நீயும் என்ன மாதிரியே.’ என்று.
“மகிழன் என்னை மாதிரிதான்டி. இந்த கர்ணாவோட கன்னுகுட்டி. நம்ம கோட்டையூரு குட்டி ஜமீன் அவன்” அன்று அடித்துச் சொன்னவன் இன்று உயிருடன் இல்லை.
கருணாகரன், பெயரைப் போலவே கருணை நிறைந்தவன். வலிந்து சென்று மச்சானுக்கு உதவப் போனவன் உயிரைப் பறித்தது கால(ன்)ம்.
அன்பு மனைவியும், அவள் அருகில் மூன்றரை மாத சிசுவாய் மகனும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க, அந்த இருள் நிறைந்த இரவில் எழுப்பி அவர்களுக்கு சொல்லப்பட்டது அவனின் மரணச் செய்தி. தூக்கத்தில் கோரக் கனவாக இருக்கும் என எத்தனையோ முறை தன்னையே தட்டிப் பார்த்துவிட்டாள். ஆனால் அது கனவில்லையே. என்ன செய்வாள் அவள்?
மனைவியும் மகனும் ஏங்கினாலும் வரமுடியாத தூரம் சென்றுவிட்டவனை நினைத்து அழுதாலும், இனி அதில் பயனென்ன? பதினைந்து நாள்கள் ஆன பின்பும் ஓயாது ஒலிக்கும் அழுகையும் ஒப்பாரியும் ஏனோ அவளுக்கு வெறுத்துப்போனது.
இன்னும் சற்று ‘நீண்ட’ அமைதியும் தனிமையும் வேண்டும், என் துன்பத்தை நானே விழுங்கி ‘தனித்து எழ‘ என நினைத்தாலும் மீண்டும் காதுகளில் வந்து விழுந்தது யாரோ கதறி அழும் ஒப்பாரி சத்தம்.
“பூவினி, தம்பிக்கு பால் குடுத்துட்டியாத்தா? வா, டெல்லில இருந்து சாலா(விசாலாட்சி) சித்தி வீடு கேதங்கேக்க (கேதம் – மரணம்) வந்துட்டாக. தம்பிய தொட்டில போட்டுட்டு செத்த வாத்தா.” ஒரகத்தி சுதா உள்ளே வந்து அழைத்துவிட்டுப் போனாள்.
‘யாரையும் காணும் மனநிலை இல்லை’ என்று யாருக்கு அவளால் சொல்ல முடியும். அவனோடு ஊனாய் உயிராய் உணர்வாய் கலந்து இங்கு வாழ்ந்தவளுக்கு இனிமேல் அவளின் குரல் இந்த வீட்டில் ஓங்கி ஒலிக்கக் கூட வாய்ப்பேயில்லை.
அவள் வாழ்க்கைக்கான அடுத்த கட்டத்தை இன்று யார் யாரெல்லாம் கூடிப்பேசி முடிவு எடுப்பார்களோ தெரியாது. ‘என்ன நடந்தாலும் சரி, அந்த நிமிடத்தையும் மருந்தாய் விழுங்கிக் கடந்துவிட வேண்டும்‘ எனும் உறுதியோடு, மகனை ஏப்பம் வர முதுகில் தட்டிக் கொடுத்து பின் மெல்ல மெத்தையில் கிடத்தினாள்.
தன் உடையை சரி செய்து மகனைத் தூக்கம் கலையாமல் தொட்டிலில் கிடத்தி எப்போதும் போல மெல்லிய வெள்ளைத் துண்டால் மேல போர்த்திவிட்டாள். தொட்டில் கட்டையைப் குறுக்காகப் பொருத்தி, மெதுவாக தொட்டியை ஆட்டிவிட்டவள், மறக்காமல் கைப்பேசியை தேடி எடுத்து மகனுக்கான பாடலை மெல்ல ஒலிக்கவிட்டாள்.
“ஆத்தா பூவினி, ஒம் மயே தூங்கிட்டான்னா வாத்தா.” இம்முறை மாமியாரே வந்துவிட்டார். “இந்தா வர்றேத்த” சொல்லியபடி அறைக்கதவை முக்கால் பாகம் மூடிவிட்டு வெளியில் வந்ததுதான் தாமதம். ஆரம்பமானது அங்கிருந்தவர்களின் அடுத்தகட்ட ஒப்பாரி கருணாகரனுக்காக.
“அடி என்னப் பெத்த ஆத்தா எங்கண்ணு காங்கையிலே இப்புடி ஒங்கள தவிக்க விட்டுட்டுப் போயிட்டானே இந்த பாவிப் பய” என ஒருவர் ஆரம்பிக்க அடுத்த பத்து நிமிடமும் யார் யார் அவளை இழுத்துத் தன்னோடு கட்டி அழுதார்கள், என்னவெல்லாம் சொல்லி அழுதார்கள் எதுவும் தெரியவில்லை, தெளிவுமில்லை பூவினிக்கு. அந்த இடமே அவளுக்கு மூச்சு முட்டியது.
ஆனாலும் அங்கிருந்து விலகி ஓட முடியாமல், மெல்ல தன்னை விடுவித்துக்கொண்டு தன் அறையின் கதவோரம் ஒடுங்கி அமர்ந்தாள். தன் இழப்பே இங்கு பெரியது என்று யாருக்குச் சொல்லமுடியும்? முப்பது வருடம் வளர்த்த மகனை இழந்து அவன் தாயும் அல்லவா இங்கு நிற்கிறார்.
error: Content is protected !!