Skip to content
Post Views: 1,175
வந்தவர்களும் வீட்டினரும் அழுது முடிய விசாலாட்சி கருணாகரனின் அம்மா வசந்தியிடம் கர்ணாவின் மரணத்தை விசாரிக்கத் தொடங்கினார். விசாலாட்சி கர்ணா அப்பாவின் சித்தப்பா மகள், டெல்லியிலிருந்து இன்றுதான் வந்திருக்கிறார். “ஏ அத்தாச்சி என்ன ஆச்சு, அந்நேரம் ராத்திரியில என்னத்துக்கு காரக்குடிக்கு போச்சு கர்ணா?”
“என்னத்தத்தா நாஞ்சொல்ல, பூவினி தம்பி ரஞ்சித்து இருக்கான்ல்ல அவே பெங்களூருல இருந்து வந்துருந்தான்த்தா. அன்னைக்கி கெளம்புறமுன்னு சொல்லிக்கிட போனடிச்சான். இவனாத்தே நா வாரேன்னு சொல்லி, ஆட்டோவுல போறேன்னவன வம்படியா இவனோட வண்டீல கூட்டிகிட்டு போனான்.”
Advertisement
“நம்ம கெட்ட நேரம், வழியக்க போயி கூப்புட்டுச்சாக்கும் கர்ணா?”
“ம்ம், ஆமத்தா, இந்தாருக்க வசந்த மாளிகக்கிட்ட (வசந்த மாளிகை பேருந்து நிறுத்தம்) போகையில தெரு நாயி ஒன்னு குறுக்க பாஞ்சுருக்கும் போல. அதுவே நல்ல திருப்பம் வேற. பட்டுக்கெடப்பாங்க, இந்த வேகத்தடையவும் போன மாசம் மினிஸ்டர் வாராருன்னு வெட்டிபுட்டானுக.”
Advertisement
Advertisement
“இதேதானே பொழப்பா செய்யிறானுக. எவென் வீட்டுல எழவு விழுந்தா அவங்களுக்கு என்ன? நம்ம குடும்பமுள்ள இந்தா தெருவுக்கு வந்துருச்சு. பாவிப் பயலுக. எம்புட்டு பேரு செத்தாலும் இவனுங்களுக்கு வெளங்காது.”
“அவே அவே தேவைக்கு அவனுக வெட்டுறாங்க. எம் புள்ள நாய்க்கு பயந்து வண்டிய ஒடிச்சு திருப்பக்குள்ள எதுத்தாப்புல வந்த பஸ்சுல மோதி… போயிடானேத்தா, போயிடானே. அங்குனையே எம் புள்ள துடிச்சு போயி சேந்துட்டானேத்தா சாலா, நா என்ன செய்யிவே…“ அதற்கு மேல பேச முடியாமல் மறுபடி கதறித் துடித்து அழுதார் வசந்தி.
Advertisement
”அழுகாதிய அத்தாச்சி, அந்தப் புள்ளயப் பாருங்க.“ என பூவினியின் பக்கம் திரும்பிய சாலா ”நீங்களே இப்பிடி அழுதா, அந்தப் புள்ள பச்ச ஒடம்புக்காரி என்ன செய்யிவா?“
”தெரியலயேத்தா சாலா. எம் புள்ளக்கி இன்னைக்கி கருமாதி செஞ்சுட்டு வந்துட்டோமே. அடுத்து இதுக ரெண்டையும் என்னன்னு நாங் கரை சேக்கணுமோ தெரியலையே.”
“நீங்களே இப்படி பேசலாமா அத்தாச்சி. நீங்க தைரியமா இருந்தாத்தானே இனி அந்தப் பயல வளக்கலாம்.”
“அங்குன புள்ள பெத்தவள, மூனே மாசத்துல வம்படியா வரச் சொன்னானே த்தா. நாங்களும் பேரேன் நம்மோட இருக்கட்டும்முன்னு பொறட்டாசி பொறக்கவும் போயி கூட்டியாந்தாச்சு. இப்ப எம் பேரே இருக்கா, ஆனா எம்மயன தொலைச்சுட்டனே.”
சொல்லும் போதே வசந்தியின் குரல் உடைந்து நடுங்கியது.
“போதும் த்தாச்சி. இந்தாங்க இந்த தண்ணிய ஒரு மடக்கு குடிங்க. தொண்ட வறண்டு போச்சு பாருங்க.” பேசியபடியே ஒரு குவளை நீரை அவரிடம் எடுத்துக் கொடுத்தார் விசாலாட்சி.
குவளையைக் கைகளில் வாங்கியபடியே, “எங்கள இப்பிடித் தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டானே நாம் பெத்த மயேன்.“ நெஞ்சில் அடித்து வசந்தி கதற அவரின் கையை அறுதலாகப் பற்றிக் கொண்டார் விசாலாட்சி. சற்றே அவரின் அழுகை குறைய, நீரைப் பருகவும் தான் வசந்தியின் கைகளை விடுவித்தார்.
”இப்புடி அழுது கரையாதிய அத்தாச்சி. கர்ணாவுக்கு ஆயுசு அம்புட்டுத்தா போட்டுருக்கு. வேற என்னத்த சொல்ல? ஆமா, பூவினி தம்பி இப்ப நல்லா இருக்கானா? ஆஸ்பத்திரிலதே இன்னமு இருக்கானோ? உங்க தம்பி அப்பிடித்தே சொன்னாக.“
”ஆமாத்தா, அதேன் பூவு அம்மாவு அப்பாவு இப்ப செத்த முன்னத்தே அழகாபுரியிலயிருந்து வந்தாக. பின்கட்டுல பந்திய பாத்துட்டு அப்பிடியே பழைய வீட்டுல அத்தய பாக்க அந்த வீட்டுக்குப் போயிருப்பாக. அவன நேத்துத்தே ஐ.சி.யுவுல இருந்து வெளியவே கூட்டியாந்தாகளா. இன்னமு ரெண்டு வாரம் ஆகுமுன்னாக வீட்டுக்கு வர.“
”அவனையும் நல்லா பாக்கணு அத்தாச்சி. செத்துப் பொழச்சு வந்துருக்கான். நம்ம பிள்ளைக்குதா அந்தக் குடுப்பினயில்ல. அவனாச்சும் நல்லா இருக்கட்டும்“ என்று தொடர்ந்த அவர்களின் பேச்சைக் கலைத்தது அவனின் வருகை. ஆளுமையான அவன் தோற்றத்தை இன்னும் மிடுக்காக தூக்கிக் காட்டியது அந்த வெள்ளை வேஷ்டியும் சட்டையும்.
வெளிப்பத்தியிலிருந்து இவர்கள் அமர்ந்திருந்த உள்கட்டு நோக்கி வந்தவன் பார்வை வசந்தியில் தொடங்கி அனைவரையும் தொட்டு மீண்டும் அவரிலேயே வந்து முடிந்தது. வசந்தியின் அருகில் வந்து அவன் குனிய “என்னப்பா, எல்லாரு சாப்டாகளா?” விசாரித்தார் வசந்தி.
“ஆச்சு பெரியம்மா, அவுக வீட்டுல,…” என பூவினியின் பக்கம் கண்களைக் காட்டி, “ஏதோ, பெரியவுக எல்லா, ‘அடுத்து என்னன்னு’ பேசணுமாம். அப்பா உங்கள ஆள்வீட்டுல(hall) பெரிய சமுக்காளத்த எடுத்து விரிக்கச் சொன்னாக.” என்றவன் திரும்பிச் செல்ல எத்தணிக்க, “எப்பா நீ செந்திலண்ணே மகந்தானே? என்னத் தெரியல உனக்கு?” என விசாரித்தார் சாலா.
“அத்த தெரியுமுத்த. ஆளுகளுக்கு பரிமாறுனத விட்டுட்டு வரவுந்தான் ஒங்கள நின்னு சாரிக்க(விசாரிக்க) முடியல. கோவிச்சுக்காதிய.” என்றவன் அவரின் கைகளைத் தட்டிக் கொடுத்துவிட்டு திரும்பிச் சென்றான்.
“அப்புடியே நம்ம அஸ்வதி மாதிரியே மொக சாயலா இருக்கானே அத்தாச்சி. அண்ணனுக்கும் அவளுக்கும் இவன இருந்து நல்லா வளக்கக் குடுத்து வைக்கல. என்னமோ போங்க. எல்லா நம்ம நேரம். இப்பவும் சின்னத்தாளோட பழைய வீட்டுலயா இருக்கான்?”
“ஆமாத்தா. இங்க வருவான் போவானே தவிர அங்க அத்தையோடதே இருக்கான்.” என்றார் வசந்தி. இருவரும் மேலும் பேசியபடி அவன் சொன்னது போல கூடத்தை ஆட்கள் அமர தயார் செய்தனர்.
அடுத்த ஒருமணி நேரத்தில் பூவினியின் குடும்பமும் கர்ணாவின் குடும்பமும் சொந்த பந்தங்கள் மொத்தமும் கூடத்தில் ஒன்று கூடினர். கர்ணாவின் கருமாதி முடிந்த கையோடு இனி பூவினியும் அவளின் குழந்தைக்குமான எதிர்காலம் பற்றி விவாதிக்கத் தொடங்கினர்.
“எப்பா வேலு, முடிவா நீ என்ன சொல்ற? அவுக முப்பது செல்லவும் பொண்ணையும் புள்ளையும் அவுகளோட கூட்டிக்கிறமுங்குறாக. அந்த புள்ளைக்கும் சின்ன வயசு. அவுக அடுத்து எதுவுஞ் செய்யணுமுள்ள. ஒம்மனசுல இருக்கத சபையில ஒடச்சு பேசீருப்பா.“ என்றார் கூடியிருந்தவர்களில் இவர்கள் பக்கப் பெரியவர் ஒருவர்.
”மாமா, எம் மகன் இனி எனக்கு இல்லன்னு ஆயிருச்சு. அவுக மக வாழ்க்கயும் எனக்கு முக்கியந்தே. ஆனா ஏ மகன் நெனப்பா இருக்க ஒத்தப் பேரன் அவந்தே. அதேன் நா அவன கூட்டிகிட்டுப் போக ஒடனே சரின்னு சொல்ல முடியல.“ குரல் கமறப் பேசிய கர்ணாவின் அப்பா கதிர்வேலின் கண்கள் அதிகம் கலங்கியது.
”நீங்க சொல்லுறது சரிதே தம்பி. ஆனா எங்களுக்கும் எங்க பிள்ளயும் பேரனையும் பிரிக்க மனசில்ல. அதுக்காக எங்க பிள்ள எதிர்காலத்தையும் பெரியவுக நாங்க பாக்கணுமுள்ள. வயசும் வாழ்க்கையும் இன்னு நீண்டு கெடக்கே எங்க புள்ளைக்கு.“ பூவினியின் குடும்பத்திலிருந்து அவள் பெரியப்பா சுப்பிரமணியன் பேசினார்.
”மச்சா, எனக்கு அதெல்லா நல்லாப் புரியுது. அதான் நா யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தே. எம் மனசுல இருக்கத சொல்றே. கேட்டுட்டு பெரியவுக நீங்க, ஒங்க முடிவுகள சொல்லுங்க. ஏ அப்பாவுக்கும், என் தம்பி மகனுக்கும் சம்மதமுன்னா எங்க வீட்டுக்கு வந்த மருமகள நாங்க திருப்பி அனுப்பல. பூவினிய ஏந்தம்பி மகனுக்கு கட்டிக்கொடுங்க.“ அதற்கு மேலும் பேச்சை இழுக்காமல் மனதில் நினைத்ததைப் பட்டெனக் கேட்டுவிட்டார் கதிர்வேலன்.
கருமாதி வீட்டில் கல்யாணம் பேசி முடிவெடுப்பது இங்கு சகஜம்தான். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் இதற்கு சம்மதிப்பார்களா?
“உன்னால் மலரும் என் வாழ்க்கை மகிழ்வாக, என் மனம் உனதாகும் போது.”
error: Content is protected !!