Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உன்னைப் பார்த்த முதல் நாளே 14

வசீகரன் அவளைத்தான் பார்த்திருந்தான்.  அவன் வந்ததிலிருந்து அவளது முகத்தில் வந்து போன உணர்வுகளையும், அதற்கு ஏற்றாற் போல மாறிய அவளது முகபாவங்களையும் ஒன்று விடாமல் படித்துக் கொண்டிருந்தான்.

காலையில் இருந்து எதுவும் உண்ணாததால் இங்கு வரும் போது நல்ல பசியில் வந்திருந்தான்.  வந்தவுடன் சாப்பாட்டை எடுத்து வைக்கச் சொல்லி, தன்னை சுத்தம் செய்து வர பின்பக்கம் சென்றவன், வந்து பார்க்கும் போதும்,  அவள் அசையாமல் நின்ற இடத்திலேயே, அவனை முறைத்து கொண்டு நின்றிருந்தாள்.

அவனுக்கு சாப்பாடு எதுவும் எடுத்து வைக்காததை கண்டு, அவனே அடுப்பங்கரை சென்று என்ன இருக்கிறது, என்று திறந்து பார்த்து, தட்டெடுத்து போட்டுக் கொண்டு வந்து சாப்பிட்டான்.

எப்பொழுது வந்தாலும் அவன் பசியறிந்து, அவனுக்கு பிடித்ததை சமைத்து, கூடவேயிருந்து பரிமாறி என அவளது கவனிப்பு, அன்பு, காதல் எல்லாம் தேன் போல தித்திக்கும் வசீகரனுக்கு.  அவனது தேவைகளை அக்கறையுடன் பார்த்து பார்த்து செய்வாள்.  இதுவரை அவனிடம் எதற்கும் கோவப்பட்டதில்லை.



Advertisement

இன்று எல்லாம் தலைகீழாக மாறியிருந்தது.  வசீகரனுக்கு தெரியும் நித்யா தன் மீது நிச்சயம் கோவமாக இருப்பாள் என.

அன்று அவன் சொல்லாமல் சென்றது.  அதன்பின் அவளை வந்து பாராதது என, அவனுக்கும் புரிந்தது.  அதிலும் அவன் அன்று சொல்லி சென்ற தகவல், எல்லாம் சேர்ந்து அவள் கோவமாக இருப்பாள் என அறிந்துதான் வந்திருந்தான்.

அவனுக்கு அவளை கொஞ்சி, கெஞ்சி சமாதானப்படுத்தவோ, அவள் கோவத்தை மலையிறக்கவோ தெரியவில்லை.  அது அவனுக்கு வரவும் வராது.  அது அவனுடைய இயல்பும் இல்லை.

Advertisement

நித்யாவிடம் மட்டும் தான் அவனது முரட்டு குணத்தை விட்டு, மென்மையாக நடந்து கொள்வது.  மற்றபடி அவன் எப்பவுமே இறுக்கத்துடன்தான் இருப்பான்.

Advertisement

இதுவரை இல்லாமல், இன்று அவள் புதிதாக முறுக்கிக் கொண்டு நின்றிருப்பதைப் பார்த்து அவனுக்கும் சிரிப்புதான் வந்தது.  ஏதோ மிட்டாய்க்கு அடம் பிடித்து, முரண்டு செய்யும் சின்னக் குழந்தை போல அவன் கண்ணுக்கு தெரிந்தாள்.

அவளையே ரசித்துக் கொண்டிருந்தான் இரண்டு கைகளையும் தலைக்கு கீழ் வைத்து, மல்லாந்து படுத்துக் கொண்டு, கால்களை ஆட்டியவாறே.

“இன்னும் எவ்வளவு நேரம்டி?  என்னை சைட் அடிச்சிட்டே நிப்ப.  இங்க வா…” என்றான் சிரிப்புடன்.

Advertisement

“ஓஹ்… இவருக்கு இப்படி வேற நினைப்பா….?  ஆசைய பாரு…” என கோவமாக அவன் படுத்திருந்த அறைக்குள் சென்றவள், அவனை விட்டு தள்ளி அமர்ந்து கொண்டாள்.

“சாப்பிட்டியா…. நித்தி…?”

அவனை திரும்பி முறைத்தவள், “ஏன் சாப்பிடலன்னா என்ன பண்ணப் போறீங்களாம்?  ஊட்டி விடப் போறீங்களா…?” என்றாள் எரிச்சலாக.

“அடிசக்கை. இது கூட நல்லாயிருக்கே.  மாமன் ஊட்டி விடனும்னு, ஆசையாடி செல்லம்…?” என்றான் சத்தமாக சிரித்துக் கொண்டே.

அவன் உல்லாசமாக சிரிப்பதைப் பார்த்து, அவளுக்கு பொங்கியது.  இங்க நான் ஒருத்தி எரிச்சல்ல உட்கார்ந்திருக்கேன்.  இவனுக்கு சிரிப்பு வருதா என ஆத்திரப்பட்டவள், “ஐயா ரொம்ப உல்லாசமா இருக்கீங்க போல?  என்ன பொண்ணெல்லாம் பார்த்து முடிச்சாச்சோ…? அதான் சந்தோஷமோ…? என்றாள் குதர்க்கமாக.

ஹா… ஹா…  “ஹ்ம்ம்…  பொண்ணுதான, பார்த்துட்டேன்…” என்றான் இன்னும் பலமாக சிரித்துகொண்டே.

அவளுக்கு இன்னும் கடுப்பானது.  அவள் முகத்தில் அனல் கக்குவதைப் பார்த்தவனுக்கு அடக்க முடியாத சிரிப்புதான்.

இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர்.

“ஓஹ்…. பொண்ணு ரொம்ப அழகோ…” என்றாள் உள்ளுக்குள் மூண்ட பொறாமையில்.

அவளை விழுங்கி விடுவது போல மையலாக பார்த்து கொண்டே “ம்ம்… பொண்ணு ரொம்ப அழகுதான்டி.  தங்கசிலை மாதிரி தகதகன்னு இருப்பா…  சும்மா பார்த்ததுமே மனசுல பச்சக்குனு ஒட்டிகிட்டா…” என்றான்.

அவன் நிதானமாக ஒரொரு வார்த்தையும் ரசித்து ரசனையாக பேசிய விதத்தில், அவளுக்கு சட்டென ஒரு துளி கண்ணீர் திரண்டு இமையின் ஓரத்தில் வந்து நின்றுவிட்டது.

நான் இங்க இவனை நினைச்சி துடிச்சிட்டு இருக்கேன். இவன் போய் பொண்ணு பார்த்துட்டு வந்திருக்கானா… என்ற தீ உள்ளுக்குள் காந்தியது.

அவளை பார்த்துட்டு வந்ததும் இல்லாம, என் கிட்டயே தங்க சிலை மாதிரி ஜொளிக்கிறான்னு வர்ணிக்க வேற செய்வானா என உள்ளுக்குள்  தீ புசு புசுவென  பொங்கியது.

“ஓஹ்… அப்ப ஐயாவுக்கு கல்யாணம் முடிவு பண்ணி,  டேட்லாம் பிக்ஸ் பண்ணிட்டாங்கன்னு சொல்லுங்க…” என்றாள் நக்கலாக.

“ஹ்ம்ம்… பொண்ணு ஒத்துக்கிட்டா கல்யாணம்தான்” என்றான் உல்லாசமாக.

“பொண்ணு ஒத்துக்கணுமா…?  ஒத்துக்காமயா…, உங்கம்மா எல்லாம் பேசி முடிவு பண்ணியிருப்பாங்க…?”

“என்ன இருந்தாலும், கட்டிக்கப்போறவ கிட்ட நான் நேர்ல பேசற மாதிரி வருமா…?  அதான் நானே நேர்ல பேசிட்டு…” என அவன் முடிப்பதற்குள்

“என்ன திமிறு உங்களுக்கு…? என்கிட்டயே இதை சொல்வீங்களா…?” என ஆத்திரமாக எழுந்தவள், அங்கிருந்த தலையணையை எடுத்து அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

அவனும் சிரித்துக் கொண்டே அவளுக்கு வாகாக முதுகை திருப்பிக் காட்டிக் கொண்டிருந்தான்.  “எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா, என்கிட்டேயே…, ம்ம்…., என்னை வெறுப்பேத்தறீங்களா…?” என ஆத்திரம் தீர அடித்துக் கொண்டிருந்தாள்

“ஏய் விடுடி… வலிக்குது”.

“நல்லா வலிக்கட்டும்.  அப்படிதான எனக்கும் வலிக்கும்.  இங்க நான் ஒருத்தி என்ன பாடு பட்டுட்டிருக்கேன்.  நீங்க சந்தோஷமா சிரிச்சிட்டு இருக்கீங்களோ…?” என அழ ஆரம்பித்து விட்டாள்.

அவளை இழுத்து தன் மேலே சாய்த்து கொண்டவன், அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டு, “அழக்கூடாது.  பேசிட்டு இருக்கும்போதே…, ம்ப்ச்… அழுகைய நிறுத்துடி…” என அதட்டினான்.

ம்கூம்.  அவன் வார்த்தை அவள் காதில் ஏறவில்லை.  இன்னும் அழுகை அதிமானது.  தேம்பியபடி அவன் மார்பிலேயே படுத்துகொண்டு, அழுது கொண்டிருந்தாள்.

அவளது முதுகை ஆதுரமாக தடவிக் கொடுத்தவன், “நித்தி இப்ப எதுக்கு இவ்வளவு அழுகை.  ம்ம்… இங்க பாரு.  என்னைப் பாரேன்… என அவளது தாடையைப் பிடித்து நிமிர்த்த முயன்றான்.

“ஏய் லூசு.  இப்ப எதுக்குடி அழற…?”

“ஓஹ்… என்னைப் பார்த்தா இப்ப லூசா தெரியுதோ.  தெரியும்… தெரியும்”.

நித்யா சொன்னதைக் கேட்டு  மறுபடியும் அவனுக்கு சிரிப்புதான்.

அவளை தன்னிலிருந்து பிரித்து, மேலிருந்து கீழாக பார்த்து “எனக்கு அப்படி தெரியலையே” என்றான் கண்களால் அவளை அளந்து கொண்டே.

“ச்சீ… புத்திய பாரு.  விடுங்க என்னை தொடாதீங்க” என்று அவன் கையை தட்டிவிட்டாள்.

புன்னகையுடன் அவள் கோவத்தை ரசித்தவன், கலைந்திருந்த அவள் தலைமுடியை காதுக்கு பின்னால் ஒதுக்கிவிட்டு, “நீ இன்னும் சாப்பிடலதான.  போய் சாப்பிடு.  போடி…” என்றான் அக்கறையாக.

“ம்ம்… என் மேல ரொம்ப அக்கறை தான்.  எனக்கொன்னும் வேணாம்” என முறுக்கிக் கொண்டாள்.

“நான் அக்கறைப் படாம, வேற யார்டி உன் மேல அக்கறைப் படுவாங்க?” என்றான் கனிவாக.

“ஆமாம்.  பேசாதீங்க.  உங்க அக்கறையைத் தான் பார்த்தனே.  இருக்கனா இல்லையான்னு கூட திரும்பிப் பார்க்க ஆளை காணோம்.  இவருக்கு அக்கறையாம்” என நொடித்தாள்.

“என்கிட்ட சண்டை போடனும்.  அதானடி.  சரி போடலாம்.  மாமன் இங்கதான் இருப்பேன்.  சாப்பிட்டு வந்து தெம்பா சண்டை போடு. இப்ப போய் சாப்பிட்டு வா.  போ.  ஏற்கனவே நேரமாகிடுச்சி…”.

அவளுக்கும் நல்ல பசி.  இவனுக்காக நான் ஏன் சாப்பிடாம இருக்கனும் என எழுந்து சென்று உண்டு வந்தவள் பேசாமல் படுத்தாள்.  அதுவரை வசீகரன் முழித்து தான் படுத்திருந்தான்.

எதுவும் பேசாது அவனையே தான் பார்த்திருந்தாள்.

தள்ளிப் படுத்திருந்தவளை இழுத்து தன்னுடன் இறுக்கி அணைத்து கொண்டவன், “ஏன்டீ?  மாமன இப்படி பார்த்து பார்த்துதான கவுத்த.  இன்னும் என்னடி பார்வை…?”

“மாமன் அந்த அளவுக்கு அழகாயிருக்கனா செல்லம்.  பயங்கர ஹேன்ட்சம்மா… இருக்கனோ…? நீ கண்ணெடுக்காம இப்படி சைட் அடிக்கிற அளவுக்கு.  ம்ம்…” என்றான் புருவத்தை உயர்த்தி கேள்வியாக புன்னகைத்து கொண்டே.

அவனது கேலி எதையும் காதில் வாங்காமல், ம்ஹ்… என பெருமூச்சுவிட்டவள், “இன்னும் எவ்வளவு நாள் பார்க்க போறேன்” என வேதனையுடன் கூறியவள்,  “ஆமாம்.  நீங்க ஏன் இங்க வந்தீங்க?” என்றாள்.

“ஏன்டி? நான் இங்க வர கூடாதா…?”

“எதுக்கு வரனும்?  உங்களுக்கு எனக்குமான உறவுதான் அறுந்து போச்சே.  இனி என்ன இருக்கு, உங்களுக்கும் எனக்கும் நடுவுல?  அந்த பொண்ணாவது நிம்மதியா…, சந்தோஷமா… இருக்கட்டும்.  அவள் வாழ்க்கைய நான் ஏன் கெடுக்கனும்”.

“புது மாப்பிள்ளையாயிட்டீங்க.  கல்யாணம் ஆகப் போகுது.  அட்லீஸ்ட் அந்த பொண்ணுக்காவது உண்மையா இருங்க…” என்றாள் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே.

“உனக்கென்னடி நான் உண்மையா இல்ல…” என முறைத்தான் அவளை.

“பொண்ணு பார்த்திருக்கீங்க இல்ல கல்யாணத்துக்கு, அப்புறம் என்ன?” என்றாள்.

நானே மறந்தாலும் இவள் மறக்க விடமாட்டாள் போல என சலித்தவன் “சரி அத விடு.  நாம கல்யாணம் பண்ணிக்கலாமா…?” என்றான்

தான் சரியாகதான் காதில் வாங்கினோமா… என அவனை நம்பாமல் பார்த்தாள்.

“என்னடி அப்படி பார்க்கற.  நிஜமாதான் கேட்கறேன்.  நாம கல்யாணம் பண்ணிக்கலாமா..?” என்றான் அவள் தலையோடு தலையை முட்டி.

நித்யா சந்தோஷத்தில் அவனை ஆங்… என ஆச்சர்யமாக கண்களை விரித்து பார்த்தாள் இன்னும் நம்ப முடியாமல்.  நிஜமாவா…. சொல்றான் என இருந்தது அவளுக்கு.

இருந்தாலும் பழையபடி வேதாளம் முருங்கை மரம் ஏறியது.  “எப்படி நம்பறது உங்களை.  இப்படி சொல்றவர் எப்படி பொண்ணு பார்க்க போனீங்களாம்…? என்றாள் நினைவு வந்தவளாக”

அவனுக்கு உள்ளுக்குள் உஷ்ணம் ஏற ஆரம்பித்தது.  இவ்வளவு சொல்றேன் நம்ப மாட்டாளா…? என.

கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னதும் அவள் அப்படியே இவனை பாய்ந்து வந்து கட்டித் தழுவிக்கொள்வாள் என நினைத்தான் போல.

“ஆமாம்.  போனேன்தான்.  இப்ப என்னடி அதுக்கு.  அங்க போனதுக்கு அப்புறம்தான தெரிஞ்சுது.  உன்னைத் தவிர என்னால யாரையும் நினைக்ககூட முடியாதுன்னு” என உண்மையை அப்படியே ஒத்துக் கொண்டிருந்தான் அவளிடம்.

“ஓஹ்… அப்படியில்லன்னா…?  அந்த பொண்ணை கட்டியிருப்பீங்களோ…?” என்றாள் அதற்கும் கோவமாக.

ஐயோ… அதை விடவே மாட்டாளா… என சலித்தவன், “இல்லடி…  புரிஞ்சுக்கோடி.  அதையே புடிச்சு தொங்கிட்டிருக்க.  நிச்சயமா கட்டியிருக்கமாட்டேன் போதுமா…”

“அன்னைக்கு உன்கிட்ட சொல்லாம போனதுகூட, நீ கஷ்டப்படறத பார்க்க முடியாமதான்டி.  வீட்ல நம்மள பத்தி உடனே சொல்லிடனும்.  பேசிடனும்னுதான்…, அவ்வளவு வேகமா போனதே…”

“அப்போ சொல்லிட்டீங்களா…, உங்க வீட்ல நம்மள பத்தி…?” என்றாள் ஆர்வமாக எழுந்து உட்கார்ந்து அவனைப் பார்த்து.

“ம்ப்ச்… இல்ல…”

“அதான பார்த்தேன்.  என்னவோ இப்பதான் வீர வசனமெல்லாம் பேசனீங்க.  நீ கண்ணீர் சிந்தின.  கதறுன.  என்னால பார்க்க முடியலன்னு.  அப்புறம் ஏன் சொல்லல…”

அம்மாடியோவ்  இந்த பொண்ணுங்களுக்கு மட்டும் எங்க இருந்துதான் இந்த வாய் வருமோ…?

இத்தனை நாள் ஊமச்சி மாதிரி இருந்துட்டு என்ன பேச்சு பேசறா இவள் என இருந்தது அவனுக்கு.

“என்ன யோசிக்கிறீங்களா…?  என்ன சொல்லலாம்.  எப்படி இவள சமாதானப்படுத்தலாம்னு”.

“ஏய் சும்மா இருடி.  கடுப்பேத்தாம.  நான் போய் நம்மள பத்தி சொன்ன உடனே அப்படியே, எங்கம்மா உன்னை ஆரத்தி எடுத்து வரவேற்பாங்களா…?” என முறைத்தான் அவளை

அவனது கோவத்தில் அப்படியே உட்கார்ந்திருந்தாள் ஏதும் பேசாமல்.  அவளுக்கும் தெரியும்தானே.  எப்படி  ஒத்துக் கொள்வார்கள்?

“சொன்னா கண்டிப்பா அம்மா நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்க. சரி அந்த பொண்ணுகிட்ட பேச சான்ஸ கிடைச்சா, அவள்கிட்ட என்னைப் பத்தின உண்மையை சொல்லிடலாம்னு தான் அங்க போனதே.  ஆனால் அங்க அது முடியல”.

“இன்னும் உனக்கு என் மேல நம்பிக்கை வரலயா?  என்னடி நம்பாத மாதிரியே பார்க்கற…”

“எப்படி நம்பறதாம்…?  எங்க வீட்ல, எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க போறாங்கன்னு சொல்லாம கொள்ளாம போனவர்தான நீங்க”.

இவ்வளவு நாள் கழிச்சு, திடுதிடுப்புன்னு வந்து நின்னு, கல்யாணம் பண்ணிக்கலாமானா…? எப்படி நம்ப முடியும்? என பார்த்திருந்தாள்.

வசீகரனும் எழுந்து அவளுக்கு நேர் எதிரில் உட்கார்ந்து அவளது கையைப் பிடித்து தனது கைக்குள் வைத்த்கொண்டவன், சொல்லு.  “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா…” என்றான் சீரியசுடன் அழுத்தமாக அவளைப் பார்த்து.

“முதல்ல நம்ம பத்தி உங்க வீட்ல பேசுங்க…”

“ஒத்துக்கமாட்டாங்கன்னு தெரிஞ்சு, என்னத்த பேச சொல்ற…” என்றான் விரக்தியாக.

“அதுக்காக பேசாம இருக்க முடியுமா?  என்னைக்கா இருந்தாலும் அவங்களுக்கு தெரிஞ்சுதான ஆகனும்” என்றாள்.

“அவங்களுக்கு தெரிஞ்சா நம்மளை சேரவே விட மாட்டாங்க.  இதுல கல்யாணம் எங்க பண்றது…?”

“அப்புறம் எதை வச்சு கேட்கறீங்க…?  நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு…?”

“எப்படியும் வீட்ல அம்மா ஒத்துக்க மாட்டாங்க.  உன்னையும் என்னால விட முடியாது.  அவங்ககிட்ட சொல்லி, அவங்க சம்மதத்தோடதான் கல்யாணம் நடக்கனும்னா… இந்த ஜென்மத்துல நமக்கு கல்யாணம் ஆகாது.  பரவாயில்லையா…?”

“என்ன பார்க்கற…?  அவங்க கிட்ட சொல்லாம தான் கல்யாணம் பண்ண முடியும்.  இதை விட்டா வேற வழி எனக்கு தெரியலை.  நானும் யோசிச்சு பார்த்துட்டேன்”.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு யோசனையாக அப்படியே அமர்ந்திருந்தனர்.

@@@@@@@@@@@@@@@@@@

சரசு அப்படியே நெஞ்சைப் பிடித்து கொண்டு உட்கார்ந்து விட்டார்.  கண்கள் நிலைக் குத்தி இருந்தது வசீகரனிடமே.

ராணியும் சரசின் பக்கத்தில் நின்று அவர்களைத் தான் பார்த்திருந்தாள்.  அவளுக்கும் அதிர்ச்சிதான்.  அண்ணனா இப்படி… என நம்பாமல் பார்த்திருந்தாள்.

ஆம், வசீகரனும் நித்யாவும் திருமண கோலத்தில் மாலையும் கழுத்துமாக நின்றிருந்தனர்.  வசீகரனும் நித்யாவும் வாசலில் நிற்பதைப் பார்த்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர் இவர்களை.

பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பாட்டி வந்து சரசை அதட்டினார்.  “ஏய் என்ன பார்த்திட்டிருக்கவ, இன்னும் எவ்வளவு நேரம் வெளியவே நிக்க வச்சு வேடிக்கை பார்க்க வைப்ப.  முதல்ல உள்ள கூப்பிடு, எதுவாயிருந்தாலும் உள்ள வச்சு பேசுங்க…”.

அவர் குரலில் அதட்டல் இருந்தாலும், அதில் அக்கறையும் இருந்தது.  சரசு கணவனை இழந்து சின்ன பிள்ளைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்ட நேரத்தில், அவருக்கு தாய் போல சப்போர்ட்டாக இருந்தவர் எனகூட சொல்லாம்.  அவரிடம் மட்டும்தான் சரசு கொஞ்சம் அடங்கி பேசுவார்.

“ஏய் ராணி அவள் தான் இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கான்னா…, நீயேன் அப்படியே நிக்கறவ…?  போ.  போய் ஆலம் கரைச்சு எடுத்துட்டு வா…”

ராணி சரசைத் திரும்பி பார்த்தாள், அவர் அப்படியே இறுகி போய் அமர்ந்திருந்தார்.  திரும்பி அண்ணனைப் பார்த்தாள்.  அவளுக்கும் அதிர்ச்சிதான்.  அண்ணன் ஏன் இப்படி சொல்லாம கொள்ளாம பண்ணிடுச்சி என கோவம் கூட வந்தது.

இருந்தாலும் தெருவில் உள்ளவர்கள் கேலி பேசுவதற்கு இளக்காரமாக வெளியே நிற்க வைப்பதில் அவளுக்கும் விருப்பமில்லை.

ஆதலால் உள்ளே விரைந்து சென்றவள், கையோடு ஆலம் கரைத்து எடுத்து வந்து சுற்றி, அவர்களை உள்ளே அழைத்து சென்றாள்.

வசீகரன் நித்யாவின் கை பிடித்து உள்ளே வந்தவன் சரசின் எதிரில் வந்து நின்று, “அம்மா…” என அவர் கால்களில் விழ வருவதற்குள், அவர் விருட்டென்று எழுந்து அவருடைய அறைக்கு சென்று விட்டார், அவனை ஏறெடுத்தும் பார்க்காமல்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!