Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உன்னைப் பார்த்த முதல் நாளே 1

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, பார்வைக்கு குளிர்ச்சியாக எங்கும் பசுமையை போர்த்தியது போல, வனம் முழுவதும், பச்சை நிறத்தில் பறந்து காணப்பட்டது.

அந்த காட்சி கண்களுடன் சேர்த்து மனதையும் குளுமையாக்கி, இதம் செய்தது.

அதிகாலைக்கே உரிய குளுமையும்,  வண்டுகளின் இடைவிடாத ரீங்காரமும், பறவைகளின் கானமும் காற்றோடு கலந்து, காதுக்கு இனிமையைக் கொடுத்தது.

இருட்டு விலகி, வெளிச்சம் பரவ ஆரம்பித்திருந்தது.  பகலவனின் வருகைக்கான அடையாளமாக, தங்க நிற கதிர்கள் மரங்களின் உச்சியில் படர்ந்து, மண்ணில் ஊடுருவ முயன்று கொண்டிருந்தது.



Advertisement

அருந்ததிக்கு குளிர் அதிகமாக இருந்தது போல.  அவளது கைகளை பரபரவென தேய்த்து கன்னங்களில் வைத்தபடி, அந்த வனத்தை சுற்றிலும் பார்வையை சுழல விட்டாள்.

“ம்ஹா…” என அந்த அப்பழுக்கில்லாத சுத்தமான காற்றை நன்றாக இழுத்து, சுவாசத்தை ஆழ்ந்து அனுபவித்தவள், மெல்ல மூச்சை வெளியில் விட்டாள்.  திரும்ப திரும்ப நான்கைந்து முறை மூச்சை  நன்றாக இழுத்துவிட்டு காற்றை சுவாசித்தவள், அவர்களது குடிலுக்கு எதிரில் தெரிந்த ஓடையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

இன்னும் முன்னமே எழுந்து வந்திருக்கலாம் போல.  பயந்துட்டு உள்ளயே படுத்துட்டோம்.  எவ்வளவு அழகாயிருக்கு இந்த இடம் பார்க்கறதுக்கே.  ப்பாஹ்…. என்னா அமைதி.  எப்ப பாரு ஏதாவது இரைச்சல்லே இருந்துட்டு, இதமாதிரி நடுகாட்டுக்கு நடுவுல சத்தமேயில்லாம நிக்கறது என்ன ஒரு கொடுப்பினை.  அதிசயம்தான்.  இயற்கை இறைவனின் கொடைன்னு சும்மாவா சொன்னாங்க.  சான்சே இல்லை என ஓடியது மனதில்.

Advertisement

அருந்ததி காலையிலேயே எழுந்து விட்டாள்.  புது இடம்.  என்பதால் அவ்வளவாக ஆழ்ந்த நித்திரை இல்லை.  இவளுடன் சேர்ந்து இவளது  தோழிகள் மூன்று பேர் என நால்வராக முதுமலைக்கு சுற்றுலா வந்திருந்தனர்.

Advertisement

இவர்கள் நான்கு பேரும் கோவையில் உள்ள புகழ்பெற்ற ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இவளும் காயத்திரியும் ஹாஸ்டலில் ஒன்றாக தங்கியிருக்கின்றனர்.  மற்ற இருவரும் கோவையை சேர்ந்தவர்கள்.

இது இரண்டாவது முறை.  தோழிகள் நால்வரும் தனியாக சுற்றுலா வருவது.  காயத்திரியின் சொந்த ஊர் ஊட்டி.  முன்பெல்லாம் ஏதேனும் சேர்ந்தாற் போல் இரண்டு மூன்று நாட்கள் விடுமுறை வந்தால், ஊட்டிக்குதான் செல்வார்கள் நால்வருமாக சேர்ந்து.

ஏற்கனவே பல முறை அங்கே சென்று அலுத்து விட்டதால், போன முறை பொள்ளாச்சியும், இந்த முறை முதுமலையும் திட்டமிட்டு வந்திருக்கின்றனர்.

Advertisement

நேற்று மதியத்திற்குமேல் கோவையிலிருந்து புறப்பட்டு முதுமலை வந்து சேர்வதற்கு இரவாகியிருந்தது.  வந்தவுடன் இங்கிருந்த ரெஸ்டாரென்டிலேயே சாப்பிட்டு முடித்தவர்கள், அசதியில் அப்படியே படுத்து விட்டனர்.

நேற்று காலையில் அரைநாள் கல்லூரி இருந்ததால், அதை முடித்துவிட்டு புறப்படுவதற்கு நேரமாகியிருந்தது.

அருந்ததியுடன் வந்திருந்த அவளது தோழிகள், வனஜா, காயத்திரி, வைஷ்ணவி அனைவரும் குளிருக்கு இதமாக இன்னும் இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்க, இவளுக்கு மட்டும் இருள் பிரியும் முன்னே விழிப்பு வந்திருந்தது.

யாராவது எழுவார்களா…?  வெளியே வாக்கிங் மாதிரி சென்று சுற்றிப் பார்க்கலாம் என எதிர்பார்த்து சற்று நேரம் படுத்திருந்தாள்.  யாரும் அசைகிற மாதிரி தெரியவில்லை என தெரிந்ததால், இவள் மட்டும் தன்னுடைய மொபைலை கையில் எடுத்துகொண்டு, அணிந்திருந்த த்ரீபோர்த்த் டீ ஷர்ட்டுடன், முடியை தூக்கி கிளிப்பில் சொருகிக் கொண்டு வெளியே வந்துவிட்டாள் இயற்கையை ரசிக்க.

அவர்கள் தங்கியிருந்த ரெசார்டே காடுகளின் நடுவேதான் இருந்தது.  அதற்கு நேரெதிர் சிறு ஓடையொன்று தெரிந்தது.  நேற்றிரவு நிசப்தத்தில்கூட சலசலவென ஓடையின் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.  அந்த ஆவலில்தான் அதைப் பார்ப்பதற்காக எழுந்து வெளியே வந்திருந்தாள் தனியாக.

ஓடையின் அருகில் வந்து நின்றவள், அதன் அழகை உள்வாங்கி ரசித்துக் கொண்டிருந்தாள்.  இயற்கைக்கு நிகரான அழகு வேறேதும் இல்லையே.  அதுவும் அருந்ததிக்கு இப்படி இயற்கை காட்சிகள் நிறைந்த பகுதிகளுக்கு வருவது என்றால் அலாதி இன்பம்.  அத்துணைப் பிடிக்கும் இயற்கை அழகை காண.

ஓடையின் உள்ளேயும் அதன் ஓரங்களிலும் தெரிந்த வெண்மையான கூழாங்கற்களையும், தண்ணீர் சுழித்து ஓடும் அழகையும் ரசித்து நின்று பார்த்தாள்.  சிறிது நேரம் அமைதியாக நின்று பார்த்து கொண்டிருந்தவள், அந்த அழாகான காட்சிகளை தனது போனில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்ய ஆரம்பித்தாள்.

சற்று தூரத்தில் ஓடையின் வலப்பகுதியில், அதைக் கடந்து வனத்திற்கு உள்ளே செல்வதற்கு ஏதுவாக குறுகிய பாலம் ஒன்று இருந்தது.  ஆங்காங்கே மரத்தில் குரங்குகள் தாவிக் கொண்டும், அணில்கள் வரிசையாக மரத்தில் ஏறுவதும் இறங்குவதுமாக விளையாடிக் கொண்டிருந்தன.

அடுத்த சிறிது நேரத்தில், சுத்தமாக இருள் விலகி, எங்கும் வெளிச்சம் பரவ ஆரம்பித்திருந்தது.  ஓடையை ஒட்டியிருந்த புல்வெளிகளில் படிந்திருந்த பனித்துளிகளில், காலை வைத்து அதன் சில்லிப்பை பாதத்தில் உணர்ந்துவாறே, கால் சிலிர்க்க சந்தோஷமாக நடந்தவள், பாலத்தைக் கடந்து வனத்திற்கு உள்ளே போக இருந்த மண்சாலைக்கு வந்திருந்தாள்.

இரண்டு பக்கமும் மரங்கள் உயர்ந்தும், அடர்ந்தும் காணப்பட்டன.  மரங்களுக்கிடையே நிறைய புதர்களும் செடி கொடிகளும் மண்டிக் கிடந்தன.  ஆதவனின் ஒளிக்கற்றைகள் காட்டின் உள்ளே ஊடுருவ முடியாதளவு மரங்கள் அடர்ந்து காணப்பட்டன.

சூரியனின் வெப்பம் ஓரளவு பூமியில் படரத் துவங்கியும், குளுமையின் அளவு குறைந்தபாடில்லை.  பசுமையின் வாசம் நாசியை நிரப்பிக் கொண்டிருந்தது.  சில்லென குளிர்ந்த காற்று மேனியை தழுவி சிலிர்க்க வைத்தது.

இவள் ஓடையில் நின்று பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஆண்கள் இருவர் இந்த வழியாக ஜாகிங் முடித்து விட்டு வந்திருந்தனர், ரெசார்டை நோக்கி.  ஆட்கள் நடமாட்டம் இருக்கிறது என இவளும் யோசியாமல் தனியாக வந்துவிட்டாள் அந்த பாதையில்.

இயற்கையை சுற்றிப் பார்த்து ரசித்து கொண்டே, போட்டோ எடுத்தவாறு வனத்தின் உள்ளே வெகு தூரம் வந்திருந்தாள்.  ஆர்வ மிகுதியில் வந்து விட்டவளுக்கு மனிதர்களின் நடமாட்டம் இல்லாதது குறித்து கருத்தில் பதிந்தாலும், பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் நடக்க ஆரம்பித்தாள்.

தனியாக வருவதை நினைத்து, நெஞ்சில் பயம் எழுந்தாலும், காடுன்னா அப்படிதான் இருக்கும்.  என்ன பயம்…?  எப்படியும் ரெசார்ட் ஆளுங்க இருக்காங்க இல்ல என தன்னையே தைரியப்படுத்தி கொண்டவள், இன்னும் உள் பகுதிக்கு நடந்து சென்றாள், வேடிக்கை பார்த்துகொண்டே.

கிட்டத்தட்ட அரைமணி நேரம் நடந்தும், மனிதர்களை பார்க்க முடியவில்லை.  படு நிசப்தமாக இருந்தது அந்த இடம்.  அதை நினைத்து கொஞ்சம் பயம் சூழ்ந்தது நெஞ்சில்.

இத்தனை நேரம் இருந்த தைரியமும், இலகுத்தன்மையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது அவளிடம்.  அச்சோ… ஒருத்தரும் இல்லையே.  தனியா வந்திருக்க கூடாதோ…? எதுக்கு ரிஸ்க் திரும்பிடுவோம்… என திரும்பி ரெசார்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

சட்டென மேகங்கள் கருத்து, வெளிச்சம் குறைந்து, லேசான காற்றுடன்,  சிலுசிலுவென மழைத் தூறலும் விழத் துவங்கியது.  போன் நனைந்து விடாமல் இருக்க, அதனை பேன்ட் பாக்கெட்டிற்குள் போட்டுக்கொண்டு, கையைத் தேய்த்து சூடாக்கி கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டே வேகமாக நடக்க முயன்றாள்.

நடந்து கொண்டிருந்தவளின் பக்கவாட்டில் இருந்த முட்புதரிலிருந்து சின்ன சலசலப்பு கேட்டது.  அதனோடு சேர்ந்து அங்கிருந்த செடி கொடிகளும் லேசாக அசைந்தாடியது.

திரும்பி இதனைப் பார்த்தவளின் நடை தன்போல் நின்றிருந்தது.  அச்சமாக இருந்தது  மனதில்.  என்னவாயிருக்கும்…? என யோசித்தவள், நன்றாக திரும்பி நின்று சத்தம் வந்த பகுதியை ஆராய்ந்து நின்றிருந்தாள்.  ம்கூம் இப்போது எந்த சலனமும் இல்லை.

ச்ச… ஏதாவது காத்துல ஆடியிருக்கும் என அவளே முணுமுணுத்துக் கொண்டு திரும்ப நடக்க ஆரம்பித்தாள்.  சில அடிகள் எடுத்து வைத்து நடந்தவளுக்கு திரும்ப அதே சலசலப்பு கேட்டது.  இப்போது அந்த புதருக்கு பக்கத்தில் இருந்த செடிகளிலிருந்தும் சலசலப்பு பலமாகவே கேட்டது.

செடிகளின் மேல் தாழ்ந்திருந்த மரக்கிளைகளும் செடிகளுடன் சேர்ந்து வேகமாக இங்கும் அங்கும் அசைந்தாடியது.  ஐயோ… என்னடா… இது வம்பா… போச்சு?  தெரியாம தனியா வந்து மாட்டிட்டேன் போல.  கடவுளே காப்பாத்து.  ஒழுங்கா பிரண்ட்ஸ எழுப்பி கூட்டுட்டு வந்திருக்கலாம்.  பெரிய ஜான்சி ராணி மாதிரி தனியா வந்தது தப்பா போச்சு… என உள்ளுக்குள் நடுங்க ஆரம்பித்து விட்டாள்.

அடுத்து தைரியமாக அடியெடுத்து வைக்கவும் பயமாக இருந்தது.  ஏதாவது காட்டு விலங்காக இருக்குமோ… என பயந்து போயிருந்தாள் மனதுக்குள்ளயே.  அந்த குளிரிலும் முகமெல்லாம் வேர்த்து, உதடு நடுங்க ஆரம்பித்தது.  முருகா…. முருகா…. என இடைவிடாது இஷ்ட தெய்வமான முருகனின் பெயரை உச்சரிக்க ஆரம்பித்து விட்டாள் ஜபம் போல.

சத்தம் நின்றபாடில்லை.  ம்கூம் இன்னைக்கு நான் அவ்வளவுதான்.  காலி.  என மூச்சுகூட வேகமாக விட பயந்து, பீதியுடன் முகம் வெளிறி நின்றிருந்தாள்.

கைகளை இறுக்க மூடி ஓடுவதா… நடப்பதா… என அவளுக்குள்ளே பட்டிமன்றம் வேறு நடந்துகொண்டிருந்தது.  ம்கூம்.  வேலைக்காகாது.  எடு ஜூட் என வேகமாக ஓட்டம் பிடிக்க தயாராகும் சமயம் புதருக்கு மறைவில் இருந்து வரிசையாக குரங்குகள் ஒன்றன் பின் ஒன்றாக துரத்திக் கொண்டு ஓடியது, சாலையின் இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கத்திற்கு.

அதில் கடைசியாக சென்ற இரண்டு மூன்று குரங்குகள், அங்கு இவளைப் பார்த்ததில் கோவமாகி நின்று பற்களைக் காட்டி ஹீ…. ர்ரு… என சீறிவிட்டு சென்றன.  அவ்வளவுதான் அருந்ததிக்கு பயத்தில் இதயமே நின்றுவிட்டது.   நெஞ்சில் கையை வைத்து, கண்களை மூடி அப்படியே நின்றுவிட்டாள், ஒன்றும் தோணாமல்.

ச்ச… குரங்குதானா… என சாதாரணமாக நினைத்து ஆசுவாசப்படுவதற்குள், இறுதியாக சென்ற குரங்குகள் இவளைப் பார்த்து பற்களைக் காட்டி சீறிவிட்டு சென்றதைப் பார்த்து, அடிவயிறு கலங்கிவிட்டது.  குரங்குகள் எங்கே மேலே ஏறி பிராண்டி விடுமோ என க்ஷண நேரத்தில், அவளை மிரட்டியிருந்தன.

“ரிலாக்ஸ்.  ஒன்னுமில்ல….”  என அவளுக்கு வெகு அருகில் பின்னேயிருந்து கேட்ட ஆண் குரலில் தூக்கி வாரிப் போட்டுத் துள்ளித் திரும்பி பார்த்தாள் இன்னும் பயத்துடன்.

“ஹ்ஹே…. ஈசி…., ரிலாக்ஸ்….” என்ற அஸ்வத் அவளுக்கு முன்னால் வந்து அவளைப் பார்த்து… “ஆர் யூ ஓகே…?” என்றான் முகத்தில் கனிவுடன் புன்னகை முகமாக.

“ப்பா….ஹ்…” என தன் நெஞ்சை நீவி தன்னை சமன்படுத்த முயன்றவள்,  “ஹ்ம்ம்…  ஓகே…” என்றாள்.

ஏற்கனவே குரங்கு காட்டிய பயத்தில் நடுநடுங்கி நின்றிருந்தவள், திடீரென பின்பக்கமாக இருந்து கேட்ட குரலில் பயந்து அலறாத குறைதான்.

இப்படியாடா… சொல்லாம கொள்ளாம வந்து பயம் காட்டுவ.

“பயந்துட்டீங்களா…?” என்றான் இன்னும் புன்னகை மாறாமல்.

“ம்ம்…”

“மூச்சை நல்லா இழுத்து விடுங்க சரியாயிடும்…” என்றவன்,  “இந்தப் பக்கம் பெருசா பயப்படற மாதிரி எந்த அனிமலும் இருக்காது…” என்றான் அவனாகவே.

அச்சோ…. நான் பயந்து நின்னிட்டிருந்தத பார்த்துட்டானா….?

கொஞ்சம் நேரம் முன்புதான் அவனும் எழுந்து வாக்கிங் வந்திருந்தான் இந்த பக்கமாக.  ரெசார்ட்டுக்கு திரும்பும் சமயத்தில்தான், இவள் இங்கே நின்றிருப்பதைப் பார்த்து ஏன் நிற்கிறாள்…? என யோசனையுடன் நின்று பார்த்து கொண்டிருந்தான் பின்னேயே.

அடுத்த சில நொடிகளிலேயே குரங்குகள் வரிசைக்கட்டி சாலையின் குறுக்காக ஓடுவதைப் பார்த்தவனுக்கு புரிந்திருந்தது.  அதில் சில குரங்குகள் இவளைப் பார்த்து சீறிவிட்டு சென்றதையும், இவள் பயந்துபோய் அப்படியே நின்றதையும் பார்த்தவனுக்கு நகைப்புதான்.   இருந்தாலும் சத்தமிடாமல் அவளையே பார்த்திருந்தான், பயம் தெளியட்டும் என்று

அருந்ததி தலையை ஆட்டிக்கொண்டே மூச்சு வேகமாக இழுத்து விடுவதைப் பின்னால் இருந்து பார்த்தவனுக்கு, இரக்கமாக இருந்தது.  பாவம் பயந்துட்டா போல என அவளுக்கு பின் பக்கமாக வந்து நின்று  குரல் கொடுத்தான்.

திடுமென குரலைக் கேட்ட அச்சத்தில் மிரண்டு, மிரட்சியுடன் தன்னைப் பார்த்தவளைக் கண்டவனுக்கு, அச்சோ ரொம்ப பயந்துட்டா போல எனதான் இருந்தது.

சில நொடிகள், அவள் ஆசுவாசமடையும் வரை இருந்தவன், வருகிறேன் என தலையசைத்து. ரெசார்ட் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.  அச்சோ விட்டுட்டு போறானே என அவளும் வேகமாக வந்து அவனுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.

“இப்ப ஓகேவா….?”

“ம்ம்….”

“தனியாவா வந்தீங்க…?  கூட யாரையாவது கூட்டிட்டு வந்திருக்கலாமில்ல?”

“பிரண்ட்ஸ் எல்லாம் தூங்கறாங்க.  அதான் நான் மட்டும் வந்தேன்”.

“ம்ம்… ” என தலையசைத்து கொண்டவன், “இதுமாதிரி இடங்களுக்கு வரும்போது யாரையாவது துணைக்கு அழைச்சுட்டு வரதுதான் பெட்டர்.  தனியா வராதீங்க” என்றான்.

“ம்ம்…” என தலையசைத்தாள். பாக்கெட்டிலிருந்த போன் ரிங்கானது.  பேன்ட் பாக்கெட்டிலிருந்த போனை எடுத்துப் பார்த்தாள்.  வனஜாதான் அழைத்திருந்தாள்.  போனை ஆன் செய்து காதில் வைத்தவள், “ஹலோ…” என்றாள்.

“ஏய் எங்கடி போன காலையிலே….?  ரொம்ப நேரமா வெயிட் பண்றோம்.  ஆளக் காணோம்”.

“இங்கதான்…  சும்மா வாக்கிங் வந்தேன்”.

“எழுப்பியிருக்கலாமில்ல.  நாங்களும் வந்திருப்போம்”.

“நல்லா தூங்கனீங்க.  சரி டிஸ்டர்ப் பண்ண வேணாமேன்னு வந்துட்டேன்”.

“சரி.   சீக்கிரம் வா.  எல்லாரும் வெயிட் பண்றோம் உனக்காகதான்”.

“வந்துட்டுதான் இருக்கேன்.  வழியில உன் பிரண்ட்ஸ் எல்லாம் பார்த்தேன்டி.  அதுங்க பண்ண கலாட்டால கொஞ்சம் லேட்டாயிடுச்சு”.

“என் பிரண்ட்ஸா… அங்க யாரு…?” என சில நொடிகள் முழித்த வனஜா, அருந்ததியின் கிண்டல் தொனியில் சுதாரித்து, “அடியே… காலையிலே குசும்பா….  வந்தேன்னு வை…” என்றாள் சத்தமாகவே.

“விடு.. விடு.. நமக்குள்ள இது என்ன புதுசா…? நேர்ல பேசலாம்…” என போனை கட் செய்து விட்டாள்.

அருந்ததி எத்தனை குரலை தாழ்த்தி பேசியும் அந்த ஆளரவமில்லா காட்டினுள், பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்தவனுக்கு இவர்களுக்கிடையே நடந்த கிண்டல் சம்பாஷணை நன்றாகவே கேட்டிருந்தது.  உதட்டில் தோன்றிய சிரிப்பை மறைத்தபடி, மெல்ல கைகளை பேன்ட் பாக்கெட்டினுள் விட்டு நடந்து வந்து கொண்டிருந்தான்.

ரெசார்ட் வந்தவுடன் அவனிடம் சொல்லிக் கொண்டு அருந்ததி அவர்கள் தங்கியிருந்த அறைக்கு புறப்பட்டு விட்டாள்.

அஸ்வத்தாமன் அவனது நண்பன் முகிலனோடு சேர்ந்து வந்திருந்தான்.  எப்போதாவது வேலைப்பளுவில் தங்களை ரிலாக்ஸ் பண்ண எண்ணி, அஸ்வத்தாமன்  தனிமையை நாடி இதுபோல் இடங்களுக்கு வருவதுண்டு.  இந்தமுறை நண்பனுடன் முதுமலைக்கு வந்திருந்தான்.

முகிலனும் இவனும் ஒன்றாக கல்லூரியில் படித்தவர்கள்.  இப்போது வேலை செய்வதுகூட ஒத்தார் போல்தான்.  ஆனால் வெவ்வேறு டிபார்ட்மென்ட்.  அஸ்வத்தாமன் காவல் துறையில் ஆய்வாளராக சென்னையில் பணியில் இருக்கிறான். அவனது நண்பன் முகிலன்    சிபிஜ-ல் பணிபுரிகிறான்.  நேரம் கிடைக்கும்போது இருவரும் சேர்ந்து தங்களை ரிலாக்ஸ் செய்ய இதுபோல வந்து தங்கி செல்வதுதான்.

இம்முறை இவர்களும் முதுமலை மனினக்குடிக்கு பிளான் செய்து வந்திருந்தனர் அருந்ததியைப் போலவே.  இவர்கள் முதுமலைக்கு வந்து இன்றோடு முமுதாக இரண்டு நாட்கள் முடிந்திருந்தது.  காலையில் பிரேக்பர்ஸ்ட் முடித்துகொண்டு மசினக்குடிக்கு புறப்பட இருந்தனர்.

தோழிகள் குளித்து ரெடியாகி கலாட்டாவும் கிண்டலுமாக பேசிக்கொண்டே  உட்கார்ந்திருந்தனர்.  வனஜாதான் “ஏய்… டைமாகுது.  கிளம்புங்க.  வேன் சபாரி ஆரம்பிச்சுடுவாங்க.  வாங்க கூட்டம் வரதுக்கு முன்னாடி போய்டுவோம்” என கிளப்பி எல்லோரையும் காலை பிரேக்பர்ஸ்ட் உண்பதற்காக அங்கிருந்த ரெஸ்டாரென்டிற்கு அழைத்து வந்திருந்தாள்.

அங்கேதான் அஸ்வத்தாமனும் முகிலனும் உட்கார்ந்திருந்தனர்.  அவர்களுக்கு பின்பக்கமாக இருந்த டேபிளில்தான் தோழிகள் பேசிக்கொண்டே வந்து உட்கார்ந்தனர்.    காயத்திரி சத்தமாக “ஏய் எனக்கு செம பசி.  இராத்திரிகூட நான் சரியா சாப்பிடல.  எனக்கு நல்லதா… ஸ்பெஷலா… எதுனா சொல்லுங்கடி” என்றாள்

மற்ற மூவரும் கோரசாக “ஓஹ்.. ஸ்பெஷலாவா…. அப்ப சரி சொல்லிட வேண்டியதுதான்…” என கண்சிமிட்டியபடியே தங்களுக்குள் ஹைபை அடித்துக் கொண்டார்கள்.

எதையோ ஏடாகூடமாக சொல்லப் போகிறார்கள் என பயந்த காயத்திரி உஷாராகி,  கையெடுத்து கும்பிட்டு “அம்மா தாயே ஆளைவிடுங்கட…” என்றதில் மற்ற மூவரும் கொல்லென சிரித்து விட்டனர்.

“அது அந்த பயம் இருக்கனும்” என சுற்றியிருந்த மூவரும் கேலி செய்து சிரித்து  பேசிக்கொண்டிருந்தனர்.

அதற்குள் சர்வர் வந்திருந்தார்.  என்ன இருக்கிறதென அவரிடத்தில் விசாரித்து, தங்களுக்கானதை ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பித்தனர்.

 

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!