Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் காதல் ஒரு வரமாய்....

உன் காதல் ஒரு வரமாய்…..14

உன் காதல் ஒரு வரமாய்….14

அடுத்தநாள் காலை எழுந்த பாரதி பதட்டத்துடன் கீதாவின் அறையை தட்டிக் கொண்டிந்தாள்.அப்பொழுதான் எழுந்த கீதா கதவை திறக்கவும்,

“கீதா…அமிர்தாவைக் காணும்….எங்க போனானு தெரியலை…..பயமா இருக்கு….”என்று கூற,கீதாவிற்குமே பதட்டம் தொற்றிக் கொண்டது.

“அவ போனுக்கு கால் பண்ண வேண்டியது தான….”என்று பதட்டத்துடன் கேட்டவாரே கீதா அமிர்தா தங்கியிருக்கும் அறைக்குள் வர,



Advertisement

“நான் கால் பண்ணிட்டேன்……அவ செல்லு இங்க தான் கிடக்கு….”என்று அமிர்தாவின் பேசியை காட்ட,கீதாவுமே பயந்துவிட்டாள்.இருவரும் பயந்தபடி நின்று கொண்டிருக்க அமிர்தா சில மருந்து கவர்களுடன் அறையின் உள்ளே நுழைந்தாள்.முகம் மிகவும் சோர்ந்து சிவந்திருந்தது.

“என்னக்கா….வேலைக்கு கிளம்பல….”என்று இருவரையும் பார்த்து கேட்டுக் கொண்டே தன் படுக்கையில் அமர,

“நீ எங்க போன….”என்று இருவரும் சேர்ந்து கேட்டனர்.

Advertisement

“உடம்பு சரியில்லைக்கா….அதான் டாக்டர்கிட்ட போனேன்….”என்றவள் சோர்வாக தன் படுக்கையை சரி செய்து கொண்டே பேசினாள்.

Advertisement

“நீங்க பயப்பட தேவையில்லைக்கா….நான் நல்லா தான் இருக்கேன் இருப்பேன்…..கொஞ்சம் தவறிட்டேன்….சரி செய்ய முயற்சி செய்யுறேன்….ச…க்கும் என தன் தடுமாறும் மனதையும்,தொண்டயையும் சரி செய்து கொண்டு சரி ஆகிடுவேன்….”என்று கூறிவிட்டு தன் படுக்கையில் விழுந்துவிட்டாள்.மனதில் அத்தனை சோர்வு சிவா என்ற ஒருவன் இனி தன் வாழ்வில் இல்லை அதை மனது ஏற்க நாள் தேவைப்பட்டது அவளிற்கு.பாரதியும்,கீதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.அமிர்தாவிற்கு அவர்கள் தன்னை தான் பார்க்கிறார்கள் என்று புரிந்தது இருந்தும் இமை திறக்கவில்லை அவள்.

சற்று நேரத்திற்கு பிறகு யாரோ அவளை பலமாக உலுக்கினர் சோர்வாக எழ,பாரதி தான் அவளிற்கு உணவு எடுத்துவந்திருந்தாள்,

“எந்திரிச்சு சாப்பிடு….மாத்திரை போடனும்ல….”என்று கூறிக் கொண்டே தன் வேலையில் கவனமானாள்.அமிர்தா எதுவும் பேசவில்லை சாப்பாட்டை மெல்ல விழுங்கினாள் தொண்டை அடைத்திருந்தது அதனால் சாப்பாடு உள்ளே செல்லவில்லை.

Advertisement

“வேலைக்கு லீவு சொல்லிட்டியா…..”என்று பாரதி கிளம்பி கொண்டே கேட்க,

“ம்ம்….சொல்லியிருக்கேன்….”என்றவள் பாதி சாப்பாட்டில் எழ,

“ஒழுங்கா சாப்பிட்டு மாத்திரையை போடு…..தேவையில்லாததை நினைச்சி உன் உடம்பை நீயே கெடுத்துக்காத….”என்று பாரதி காட்டமாகவே திட்டினாள்.அவளிற்கு அமிர்தா நேற்று பேசியதிலிருந்து அத்தனை கோபம் தான் இவளிற்காக யோசித்தாள் எப்படி பேசிவிட்டாள்.இனி இவளிடம் தள்ளி தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவள் காலையில் அவளின் சோர்ந்த முகத்தைக் கண்டவுடன் பேசிவிட்டாள் ஆனால் உள்ளே சிறிய முள் போல அவளின் வார்த்தை தைத்துக் கொண்டிருந்தது.

“இல்லக்கா முடியலை…தொண்டை வலிக்குது அதான்….”என்று சோர்வாக அமிர்தா கூற,பாரதியின் முகம் அவளையும் மீறி வேதனை காட்டிவிட்டது.

“சரி எல்லாம் சரியாகிடும் தூங்கு….நான் கிளம்புறேன்…ஏதாவது தேவைனா கூப்பிடு….”என்று கூறிவிட்டு அவள் கிளம்பிவிட,அமிர்தா மாத்திரையை விழுங்கிவிட்டு  தன் படுக்கையில் விழுந்தாள்.மனதெல்லாம் பாரம் அழுத்தியது ஏன் என்றே தெரியாமல் அழுகை வந்தது.ஒரு கட்டத்தில் இந்த பாரம் தாங்காமல் தன் அன்னையின் புகைப்படத்தை எடுத்து தன் கைகளில் வைத்துக் கொண்டவள்,

“ம்மா நான் என்னம்மா செய்வேன் எனக்கு அவரை பிடிச்சது…நான் பண்ணது தப்பு தான் ஆனா என்னால முடியலைம்மா என் மனசு என்னையும் மீறி அவர் பக்கம் போயிடுச்சி….இப்ப என்னால தாங்கிக்கவே முடியலை….மனசு வலிக்குது….நான் என்ன பண்ணட்டும்….”என்று அவரிடம் மன்றாடிக் கொண்டிருக்கும் வேளையில் தான் அவளின் பேசியின் அழைப்பு வர முதலில் அலட்சியமாக விட்டவள் பின் தொடர்ந்து அழைப்பு வரவும் ஒருவேளை கடையில் இருந்தோ என்று எடுத்து பார்க்க சிவா தான் அழைத்திருந்தான்.

அந்த அழைப்பையே பார்த்திருந்தாள் அமிர்தா எடுக்கவா வேண்டாமா என்ற எண்ணம் அப்படியே அமர்ந்திருக்க அழைப்பை ஓய்ந்து போனது.சரி இனி அழைக்கமாட்டான் என்று மூச்சை இழுத்துவிட,மீண்டும் அழைப்பு அவனிடம் இருந்து இனி எடுக்காமல் இருக்க முடியாது என்று புரிந்து போக அலைக்கழியும் மனதை அடக்கிக் கொண்டு அழைப்பை ஏற்றாள்.எப்போதும் இவள் ஹலோ என்று கூறிய பிறகு தான் அவன் பேசவே தொடங்குவான் இன்று,

“ஏய்…என்ன வேலையா…..ஈவினிங்….”என்று அவன் தொடங்கும் போதே,

“இல்ல என்னால முடியாது எனக்கு வேலையிருக்கு….”என்று கத்தரித்தது போல பேச எதிரில் பலத்த மௌனம்.

“ஹலோ ஹலோ இருக்கீங்களா….என்னால எங்கேயும் வரமுடியாது….வேலை இருக்கு…நான் அப்புறம் பேசுறேன்….”என்று ஒருவாரு கூறிவிட்டு வைத்துவிட்டாள்.எங்கே அதன் பிறகு அவன் அழைத்துவிடுவானோ என்று பேசியை பார்த்துக் கொண்டிருந்தவள் அதன் பின் அவன் அழைக்கவில்லை எனவும் தான் இறுக்கம் தளர்ந்தாள்.

எதுவும் ஓடவில்லை தன் படுக்கையில் விழுந்தவள் எவ்வளவு நேரம் அழுதாள் என்று தெரியாமல் அந்த அழுகையுடனே உறங்கியும் போனாள்.மாலை பாரதி வந்து எழுப்பும் வரை அமிர்தாவின் உறக்கம் கலையவில்லை.

பாரதி எழுப்பவும் எழுந்தவள்,

“என்னக்கா சீக்கிரம் வந்துட்டீங்க….”என்று கண்களை கசக்கிக் கொண்டே கேட்க,

“ம்ம் சீக்கிரம் தான் மணியை பாருடீ ஏழு ஆகுது……நீ தான் இவ்வளவு நேரம் தூங்கியிருக்க….”என்றுவிட்டு தன்னை சுத்தப்படுத்த சென்றாள்.அமிர்தாவிற்குமே அப்போது தான் வெகுநேரம் உறங்கிவிட்டோம் என்று புரிந்தது,

“அச்சோ….ரொம்ப நேரம் தூங்கிட்டேன்….”என்று தானும் எழுந்து முகம் கழுவி வந்தாள்.பாரதி எதுவும் பேசவில்லை அமைதியாக வாங்கி வந்த தேனீரை பருகியபடி இருந்தாள்.அமிர்தா முகம் கழுவி வந்து அமரவும் அவளிடமும் ஒன்றை கொடுக்க அவளும் வாங்கி பருகிக் கொண்டிருக்கும் போது தான் கீதா அவர்களின் அறைக்கு வந்தாள்.

“என்ன இரண்டு பேரும் டீ குடிக்கிறீங்க எனக்கு இல்லையா….”

“இருக்கு கீதா வா இந்தா எடுத்துக்க…”என்று பாரதி தன்னில் பாதியை பிரித்துக் கொடுக்க,அதை வாங்கிக் கொண்டு அமர்ந்தவள்,

“என்னம்மா அமிர்தா உடம்பு எப்படி இருக்கு….”என்று கேட்க,

“இப்ப பரவாயில்லைக்கா….”

“ம்ம்…சரி அப்புறம் என்ன பண்ணுறதா இருக்க….உன்னோட மெம்பர்ஷிப் ரினிவல் இருக்கு….பண்ணப்போறியா….இல்லையா….”என்று கேட்க,

“பண்ணணும் க்கா….அதுக்கு முன்னாடி எனக்கு ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க….”என்று கேட்க,கீதா பாரதியை பார்த்தாள்,

“முன்னாடியே சொன்னா….நானும் ஒரு இடத்துல சொல்லி வச்சிருக்கேன்….ஆனா அவங்க எந்த பதிலும் தரல….”என்று கூற,

“இப்படி திடீர்னு கேட்டா என்ன பண்ணுறது…பார்க்குறேன்…”என்று கீதா கூற,

“பாருங்கக்கா….பார்த்து சொல்லுங்க….”என்ற அமிர்தாவையே தான் கீதா பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஏன் அப்படி பார்க்குறீங்க…”என்று அவளின் பார்வை உணர்ந்து அமிர்தா கேட்க,

“இல்ல நேத்து அந்த அழுகை அழுத இப்ப அமைதியா இருக்க….”என்று சந்தேகமாக கேட்க,

“அதுக்குள்ள மனசு மாறிடுச்சானு கேட்கிரீங்கலா….என் மனசு மாறவெல்லாம் இல்ல….அது அழுத்திக்கிட்டு தான் இருக்கு….அந்த அழுத்தத்தை ஏத்துக்க பழகுறேன்…..உடனே எல்லாம் சரியாகாது ஆனா ஒரு நாள் ஆகும்னு நம்புறேன்….”என்று கூற அதுவே மற்ற இருவருக்கும் பெருத்த நிம்மதியை கொடுத்தது எங்கே தாங்கள் ஒன்று கூற சிறு பெண் அதை வேறு மாதிரி எடுத்துக் கொண்டு எதும் தவறாக செய்து கொண்டால் இருவராலும் தங்களை மன்னிக்க முடியாதே அதனாலே கேட்டு தெரிந்து கொள்ள நினைத்தனர்.

“நீங்க பயப்படாதீங்கக்கா….நான் எதுவும் செஞ்சிக்க மாட்டேன்….”என்று அமிர்தா அவளாகவே கூற,

“ஓஓ….மேடம் அது வேற யோசிச்சீங்களா….”என்று எகத்தாளமாக பாரதி கேட்க,அமிர்தா அமைதியாகிவிட்டாள்.

“ச்சு…பாரதி அமைதியா இரு….இங்க பாரு அமிர்தா….எனக்கு உன்னோட மனசு புரியுது…எல்லாருக்கும் வர பருவ கோளாறு தான் இந்த காதல் எல்லாம் காலம் கடந்து வந்தா இதுவும் கடந்து போகும் என்றவள் கண்களில் கண்ணீர்.

“க்கா ஏன் அழறீங்க….”என்று அமிர்தா பதட்டமாக கேட்க,பாரதிக்கும் ஒன்றும் புரியவில்லை அவளும்,

“என்ன கீதா….”

“ஒண்ணுமில்ல பாரதி….பழசை நினைச்சேன்…நானும் இவள மாதிரி தான் படிக்கிற காலத்துல காதல்ல விழுந்து பெத்தவங்களை ஏமாத்திட்டு அவனை நம்பி இங்க வந்தேன்….இங்க வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது அவன் சரியான பொறுக்கினு….எங்க அப்பா அம்மா பண்ண புண்ணியம் என்னை அவன்கிட்டேந்து ஒருந்தவங்க காப்பாத்திவிட்டாங்க…..அதுக்கு அப்புறம் தான் நான் வாழ்க்கைனா என்னானே பார்த்தேன்….”

“க்கா….என்னக்கா சொல்லுற….”என்று அமிர்தா அதிர்ந்து கேட்க,

“ம்ம்…இந்த காதல் எல்லாம் வெறும் ஒரு ஈர்ப்பு தான் புள்ள….என்னை காப்பத்தினது ஏதோ என்ஜிவோம் அவங்களே என்னை எங்க ஊருக்கு அனுப்பி வச்சாங்க…நான் அங்க போனப்ப எங்க அப்பா உயிரோட இல்லை இறந்துட்டார்….எங்க அம்மா என்னை பார்க்கக்கூடமாட்டேன்னு சொல்லிட்டாங்க…..எங்க அண்ணன் இரண்டு பேரும் என் முகத்துல முழிக்காதனு சொல்லி வெளிய தள்ளிட்டாங்க….எல்லாம் போச்சு….நான் பண்ணது எவ்வளவு பெரிய தப்புனு காலம் கடந்து தான் நான் உணர்ந்தேன்….என்னால ஒரு உயிரு போச்சு….அதுலே நான் பாதி செத்துட்டேன்…..என் வீட்டை விட்டு வெளிய தள்ளவும் என் கூட வந்த அந்த அமைப்புல இருந்த ஒரு மேடம் தான் என்னை இங்க கூட்டி வந்து வேலைக்கு சேர்த்துவிட்டாங்க…..சில சமயம் செத்துடலாம்னு தோணும் ஆனா உயிரோட இருக்குறது தான் எனக்கு நானே கொடுத்துக்குற தண்டனை….”என்று கூறிவிட்டு விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருக்க,

“க்கா…அதுக்கு அப்புறம் நீங்க ஊருக்கே போகலையா….உங்க அம்மாவை பார்க்கலையா….”என்று அமிர்தா கேட்க,

“ஏன் போகலை இரண்டு மாசத்துக்கு ஒரு தடவை போயிட்டு தான் வருவேன்….என் வீட்டுல என்னை இன்னமும் மன்னிக்கல தான்….ஆனா நான் மன்னிப்பை யாசிச்சிக்கிட்டு இருக்கேன்….இப்பக் கூட இன்னும் மூணு மாசத்துல என் சின்ன அண்ணனுக்கு கல்யாணம்….என்னை வரதானு எங்க அம்மா பெரிய அண்ணன் எல்லாரும் சொல்லிட்டாங்க….ஆனா நான் போவேன் எங்கேயாவது உட்கார்ந்து என் அண்ணன் கல்யாணத்தை பார்த்துட்டு வருவேன்….ஒருத்தரை என்னோட சுயநலத்தால இழந்துட்டேன் இருக்குறவங்களையும் இழக்க விரும்பல….என்னை எவ்வளவு திட்டினாலும் வெறுத்தாலும் போவேன்…என் கடைசி மூச்சி இருக்குற வரைக்கும் போவேன்…..தப்பு பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிடுங்கனு கேட்டுட்டு தான் இருப்பேன்….என்னைக்காவது அவங்க மனசு மாறும்ல….”என்று கண்ணீருடன் கூற,

“க்கா அழதீங்க…என்னால பார்க்க முடியல….எனக்கும் அழுகையா வருது….”என்று சிறு பிள்ளை போல அழுது கொண்டே அமிர்தா கீதாவின் தோள்களில் சாய்ந்துவிட,பாரதிக்குமே கீதாவை பார்க்க பாவமாக தான் இருந்தது இருந்தும் அவள் செய்ததை ஏற்றுகொள்ள முடியாமல்,

“ஏன் கீதா இப்படி செஞ்ச….நீ அந்த தப்பை செய்யும் போது உன் குடும்பம் உன் கண்ணு முன்னாடி தெரியலையா…அப்படி என்னடி காதல் உங்களுக்கு….பெத்தவங்களை விட எவனோ ஒருத்தன் முக்கியமா போயிடுறான்….உன்னை பார்க்ககும் போது பாவமா இருந்தாலும் எனக்கு உன் மேல கோபம் தான்….நீ செஞ்சது தப்பு….அதுக்கு தான் இப்ப அனுபவிக்கிற….”என்று ஆற்றமாட்டமல் கூற கீதா வெடித்து அழுதுவிட்டாள்.

“க்கா….அழதீங்க….க்கா….”என்று அமிர்தா பயந்து போய் கீதாவின் தோள்களை தொட,

“அழட்டும் விடு…அழுத்தமாவது குறையும்….”என்று பாரதி கூறிவிட அமிர்தா அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.இதெல்லாம் அவளிற்கு புதிது தன் மனதில் ஏற்பட்ட சின்ன சஞ்சலம் அதிலிருந்தே இன்னும் தன்னால் வெளிவர முடியவில்லை கீதாவின் நிலையை நினைக்கையிலேயே பயமாக இருந்தது.கீதாவின் அழுகை ஓய்ந்து தேம்பலாக மாறியிருந்தது.அமிர்தாவின் மடியில் தலை வைத்து படுத்திருந்தாள் கீதா, பாரதி இருவருக்கும் சாப்பாடு எடுக்க சென்றிருந்தாள்.

“அழுதது போதும் கீதா எந்திரி…சாப்பிடலாம்…”என்று கூறியபடியே தட்டுடன் உள்ளே வந்தாள் பாரதி,

“அமிர்தா நீயும் தான் எந்திரி….”என்று கூற இருவரும் எழுந்து கை அலம்பி வந்து அமர்ந்தனர்.மூவரும் பேசிக்கொள்ளவில்லை மூவரும் அவரவர் நினைவில் மூழ்கியிருந்தனர்.சாப்பிட்டு முடித்தவுடன் கீதா,

“சரி நான் போய் படுக்குறேன்….நீயும் தூங்கு நாளைக்கு வேலைக்கு போகனும்…”என்றுவிட்டு எதுவும் நடவாதது போல கீதா செல்ல அமிர்தா தான் பாவமாக பார்த்தாள் அவளை எப்படி முடிகிறது இவளாள் என்று.

“என்ன அப்படி பார்க்குற….என்னடா அழுதவ இப்ப எப்போதும் போல பேசுறாளேனு பார்க்குறியா….தப்பு செய்யும் போது இல்லாதது இப்போ இருந்து என்ன பண்ண….தப்பை சரி செய்ய தான் பார்க்கனுமே தவிர அதையே நினைச்சிக்கிட்டு இருந்தா காலம் ஓடாது….எத்தனையோ நாள் நான் கையில கத்தி வச்சிக்கிட்டு கையை கீறிக்க பார்த்துருக்கேன்…..ஆனா கத்தியை கைக்கிட்ட கொண்டு போகும் போது எல்லாம் என் அப்பா முகம் தான் முன்ன வரும் நீ செஞ்ச தப்புக்கு இது தண்டனை கிடையாதுனு சொல்லுவாரு….அவரை பார்த்தவுடன் கத்தியை கீழ போட்டுவேன்….எனக்கு தண்டனை மன்னிப்பை யாசிக்கிறது தான்…”என்றவள் அமிர்தாவிடம்,

“நீ செஞ்சது என் அளவுக்கு பெரிய தப்பெல்லாம் கிடையாது அதே போல அந்த பையனும் தப்பானவனா இல்லை….அவன் உனக்கு இல்லை அவ்வளவு தான் அதை ஏத்துக்க…அது தான் உனக்கு நல்லது…முதல்ல உன் அம்மா கனவை நிறைவேத்து அதுக்கு அப்புறம் சாவகாசமா காதலிக்கலாம்….புரியுதா….நீ என்னையும் உன்னையும் இணைச்சு பார்த்துக்காத….ஏதோ மனசு அழுத்துச்சு எல்லாத்தையும் கொட்டிட்டேன்….இப்ப கொஞ்சம் பரவாயில்லை….சரி நான் வரேன்….”என்றுவிட்டு கீதா கிளம்பவிட்டாள்.தன் படுக்கையில் விழுந்த அமிர்தாவின் நினைப்பெல்லாம் தன் வாழ்வு தான் இப்படி தோல்வியில் இருக்கிறது என்று நினைத்திருந்தால் இங்கு ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏதாவது ஒன்றில் தோற்று தான் போகின்றனர் போலும் என்று புரிந்து கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!