Skip to content
Post Views: 10,644
கள்ளி காட்டு காதலியே!
அத்தியாயம் 4
திரும்ப வரும் போது வண்டி ஓட்டி வந்தது மதன் தான். கள்ளி காடு தாண்டி வரும் ஒரு வேப்ப மரம் அடியில் வண்டியை போட்டவன், மற்ற இருவரும் இறங்கிய பின், அந்த வேப்ப மர அடியிலே தலையை பிடித்து அமர்ந்து விட்டான்.
“மச்சான் என்னாச்சு…” தோலை தொட்டு விக்ரம் கேட்க.
Advertisement
“என்னை தொட்டேனா வெட்டு குத்து ஆகி போகும் ஆமா, சொல்லிபுட்டேன்…” வெடித்தான் மதன்.
அவனால் சிறிது கூட விக்ரம் செயலை ஏற்று கொள்ள முடியவில்லை. என்ன ஏமாற்று வேலை இது, அதுவும் பெத்தவர்கள் கண் முன்னே…
“டேய் விக்ரம், நீ காதலிக்கிறேன்னு சொன்னப்ப கூட வயசு கோளாறு, இள இரத்தம் நாள் போக சரியா போகும். வீட்டை பார்த்து, ஊரை பார்த்து மனசு மாறிடுவன்னு தான் நினைச்சேன். ஏண்டா வில்லன் மாதிரி நடந்துகிட்ட, அந்த மாப்பிள்ளையை ஏண்டா தள்ளி விட்ட…” ஆதங்கமாக மதன் கேட்க.
Advertisement
“டேய் அருண். நீ பார்த்தேலடா அந்த மாப்… அந்த மண்ணாங்கட்டிய. அவன் எல்லாம் பிரபாக்கு ஜோடியாடா. பிரபா கலர் என்ன!, முடி என்ன! முகம் என்ன!… புளிமூட்டை மாதிரி ஒருத்தன். என் பிரபா பக்கத்துல கூட நிக்க முடியாது. மச்சான், என் ஆளு புருவம் கூட ஒரு அமைப்பா இருக்கும்டா!… இவன் எப்படின்னா, எப்படி சொல்றது…” என்று யோசித்தவன்,
Advertisement
“மச்சான் பிரியாணிக்கு ரசம் ஊத்தி சாப்பிட்டா, பீருக்கு கீரையை தொட்டு குடிச்சா எப்படி இருக்குமோ, அப்படி கன்றாவியா இருக்கும்டா… என்னால நினைக்க கூட முடியாதுடா…” என்று விக்ரம் சொல்ல, அருணுக்கு சிரிப்பு வந்து விட்டது.
இருவரையும் பார்த்த மதன், “ ஆமா, இவன் அப்படியே இலந்த பழ நிறம். தொட்டு கண் மை வைக்கலாம். இவன் பேசுற பேச்சை பாரு…”
“மச்சான் நானும் கருப்பு தான், இல்லைன்னு நான் சொல்லல. ஆனா, நான் கருப்பா இருந்தாலும் ஒரு களையா இருக்கேன்டா. எங்க அம்மா திலகவதி என்ன சொல்லும், கருப்பு கூட விக்ரம்க்கு எடுப்பா இருக்குன்னு சொல்லும். பொதுவா, கருப்பா இருக்குற யாரும் கருப்பு சட்டை போடமாட்டாங்க. அந்த கருப்பு சட்டை கூட எனக்கு அழகா இருக்கும்டா…” என்று அசராமல் விக்ரம் சொல்ல,
Advertisement
“இந்த வாய் இல்லாட்டி இவனை எல்லாம் நாய் தூக்கிட்டு போயிடும்டா…” என்றவன்
“சரி, பிரபாவ பார்க்க வந்த பையனை ஏன் தள்ளி விட்ட…” நிதானமாக மதன் கேட்க.
“அப்புறம், எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாட்டு பாடனுமா. நான் என்னடா பண்ணேன். நாம்பாட்டுக்கு வீடு, காடு, பஸ், கூட்டாளின்னு சுத்தி திருஞ்சேன். சும்மா இருந்த என்னை ஓரண்டை இழுத்து ஆசை வளத்து விட்டது பிரபா தான். எனக்கும் பிடிச்சு இருந்துச்சு, சரி எம்புட்டு நாளைக்கு நாமளும் ஒத்தயிலே திரியன்னு நானும் காதலிச்சேன். இதுக்கு போய் ஆளாளுக்கு மல்லுக்கு வாரீங்க. அதுலையும் அந்த மேடம் பெரிய பிளான் எல்லாம் போட்டு என்னை வெட்டி விட பார்த்தாங்க. விடுவானா நானு, விக்ரம்ன்னா எப்படி தெரியுதாம்…”
“அதுக்கு அவனை தள்ளி விடுவியாடா?…” என்று மதன் கேட்க.
“பின்னே, காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தட்டி போவனா… மரம் ஏறி பணை வெட்டுறது நானு, நொங்கு பொறுக்குறது அந்த பரதேசியா…” என்று ஆவேசமாக பேசினான்.
“துரை அப்படி எத்தனை வருசமா காத்து இருந்தீங்க. வெறும் மூணு மாசம்…” நக்கலாக மதன் பேச,
“மூணு மாசமோ, முப்பது வருசமோ… அவ தான் எதிர்காலம்ன்னு கல்ல காடு, கம்மா கரை, கயித்து கட்டில்ன்னு நான் கனவு கண்டு கிடக்கேன். அப்படி எல்லாம் விட்டு கொடுக்க முடியாது…” என்றவன்,
“லேசா இடிச்சேன். அவன் பொசுக்குன்னு விழுந்துட்டான். சின்ன கீரல் கூட இல்லை. அதுக்கு ஓவர் ஆக்ட் மச்சான் அவன்…” சர்வ சாதரணமாக பேசினான்.
“சரி, அதோட விட வேண்டிய தான. எதுக்கு அந்த புள்ளை வீட்டுக்கு வந்து என்னென்னவோ பேசி, பூவை கொடுத்து… இதெல்லாம் எதுக்குடா…”
“அப்படி எல்லாம் உன்னை விட முடியாது. நீ என்னைக்கா இருந்தாலும் பிரபாவதி ஜெய விக்ரமன் தான்னு புரிய வைக்க…” என்றான் விக்ரம் எகத்தாளமாக.
“ரோட்டுல தான் ரோமியோ மாதிரி அந்த பிள்ளையை விடாம பாக்குறன்னா. இன்னைக்கு அவங்க அப்பா, அம்மா முன்னாடி உத்து உத்து பாக்குற, என்னாலம் பேசுற. பாவம் அந்த புள்ளை முகம், அம்புட்டு பயம்…” வருத்தமாக சொன்னான் மதன்.
“டேய் அருணு, என்னடா பேசுறான் இவன். பார்த்தா என்ன தப்பு. நான் மட்டும் இல்லை, வேற எவன் பொண்ணு பார்க்க வந்தாலும் உத்து பார்க்க தான் செய்வான். ரோட்டுல பாக்குற நான் பொறுக்கியாம். அதே பெத்தவங்க பெர்மிஷனோட, அவங்க வீட்டிலேயே உட்கார்ந்து, அவங்க கண் முன்னாடியே, சைட் அடிச்சு, அவங்க கொடுக்குறதையும் முழுங்கிபுட்டு குறை சொல்ற அவங்க உத்தமனாம். என்னடா உங்க நியாயம்…”
“இவ்வளவு பேசுறவன் நேர போய் பொண்ணு கேட்க வேண்டிய தானடா வெங்காயம்…” வெறுப்பாக சொன்னான் மதன்.
“அந்த தில்லு எனக்கு இருக்கு மச்சான். நான் போய் கேட்ட உடனே சரின்னு பொண்ணு குடுப்பாரா அந்த மிலிட்ரி. நெத்தி பொட்டுல துப்பாக்கி எடுத்து வைப்பாரு…” என்றவன்,
“மச்சான், பாருடா கொடுமையை, அந்த புளி மூட்டைக்கு அம்பது பவுன் நகை வேண்டுமாம். இதுல கல்யாண செலவு, பண்ட பாத்திரம் எல்லாம் பொண்ணு வீடு தான் பார்க்கணுமாம்டா… அவனுக்கு மாப்பிள்ளைன்னு மரியாதை வேற…
“ ஆனா நான். இந்த ஜெய விக்ரமன் அதெல்லாம் கேட்கல. பொட்டு தங்கம் கூட வேணாம் போட்டு இருக்குற நைட்டியோட வந்த போதும் நான் தாலிய கட்டுறேங்குறேன். எனக்கு எங்கடா கட்டி தாரேன்னு சொல்றீங்க…” என்றவன்,
வண்டியில் ஏறி ஒரு பக்கமாக அமர்ந்து கொண்டு, “நன்றி கெட்ட உலகமடா இது; மூடர் வாழும் கூடமாட இதுன்னு சும்மாவா சொன்னாங்க…”
“எப்படி எல்லாம் பேசுறான் பாருடா அருண். எங்க இருந்து தாண்ட யோசிக்கிறான்…” என்ற மதன்,
“மாப்பிள்ளை உன் காதலுக்கு நான் எதிரி இல்லைடா. நிறைய, நிறைய பிரச்சனை வரும். கல்யாணத்துக்கு முன்னாடி மட்டுமல்ல, போராடி கல்யாணம் பண்ணாலும் அதுக்கப்புறமும் நிறைய வரும்டா… நிச்சயம் அந்த பிள்ளை உன் கூட நிம்மதியா வாழ முடியாது…” புரிய வைக்க முயன்றான் மதன்.
கடுப்பான விக்ரம், “அதை ஏண்டா நீ சொல்ற. அந்த புள்ளை சொல்லட்டும். நான் கேக்குறேன்…” என்றான்.
“ஓ… அப்ப அந்த பிள்ளையே சொன்ன நீ கேட்டுகுவ தான… நேராவே சொல்லும் பாரு…” சவால் விட்டான் மதன்.
“ஆங், அதெப்படி நான் என்ன கேனையா… அத வாழ்ந்து பார்த்து சொல்லட்டும், கேட்டுகிறேன்…” என்று போட்டான் ஒரு போடு.
“எதே!…” அரண்டு போய் நெஞ்சில் கை வைத்தான் மதன்.
“ஆமா, என்கூட நிம்மதியா வாழதுன்னு சொன்ன. அதான், வாழ்ந்து பார்த்து சொல்லட்டும்…” அசராமல் பதில் கொடுத்தான் விக்ரம்.
இதுவரை, இவர்கள் இருவரும் வார்த்தையாடுவதை வேடிக்கை பார்த்து வந்த அருண். கடைசியில் விக்ரம் சொன்னதை கேட்டு, உருண்டு உருண்டு சிரிக்க ஆரம்பிக்க,
பார்த்த மதன், “போடா பொசகெட்டவனே! உன் வாய் தெரிஞ்சும் உன் கிட்ட வாய கொடுத்தேன் பாரு, என்னை செருப்பால அடிக்கணும்…” என்று நகர்ந்து விட்டான் மதன்.
விக்ரம் கொண்டு வந்து கொடுத்த பூவை இரவில் தலையில் இருந்து எடுத்தாள் பிரபா. கலர் மாறி வாடி போனது…
“அடியே பிரபா. சாமி பூ, தாழ்வாரம் மேல போடு. தூக்கி எறியாத…” கலை செல்வி குரல் கொடுக்க,
அதை வீட்டின் தாழ்வாரம் மேல் போட்டு வைத்தாள். என்னவோ மனசு ஒரு மாதிரி இருந்தது. தூக்கமில்லை, என்ன யோசனை என்று கூட தெரியவில்லை. எதையும் சிந்திக்கவும் இல்லை. ஆனாலும் மனசு ஒரு மாதிரி இருந்தது.
தன் கட்டிலில் இருந்து எழுந்தவள், அங்கிருக்கும் ஜன்னலை திறந்து விட்டாள். வெளியே நிலா வெளிச்சம் பிரகாசமாக பொட்டல் காட்டில் விழுந்தது. அமைதியாக அதையே பார்த்த வண்ணம் இருந்தாள். எந்த முடிவும் எடுக்க வில்லை. தன்னால் கண் சொக்கும் வரை நிலா வெளிச்சத்தையே பார்த்து கிடந்தாள்.
மறுநாள் காலை பிரபா எழும் போதே ஒன்பது மணிக்கு மேல் ஆனது. வெளியே நல்ல மழை, ராத்திரி கூட அப்படி எதுவுமில்லையே என்று வெளியவே நின்று வேடிக்கை பார்க்க,
“விடிய காலை நாலு மணிக்கு மேல தான் லேசா தூறல் விழுந்துச்சு. அப்புறம் பார்த்தா நல்லா அடிச்சு ஊத்துது…” என்று புலம்பிய படி வேலை செய்து கொண்டு இருந்தார் கலை.
தாழ்வாரத்தில் அமர்ந்து குளிர் காற்றோடு, சூடாக டீ குடித்து கொண்டு இருந்தாள் பிரபா. முகம் பளிச்சென்று இருந்தது. நேற்று கையில் வைத்த மருதாணியும், சிவந்த முகமும் அவளை அழகாக காட்டியது. குளிக்க கூட இல்லை. ரெண்டு முறை கண்ணாடி பார்த்து விட்டாள். முகம் என்னவோ அழகாக இருப்பதாக தோன்றியது.
மழையும் குறையாமல் அடித்து கொண்டு இருக்க, தாழ்வாரத்தில் இறங்கும் தண்ணியில் கையை காட்டி நின்றாள். நேற்று அவள் தூக்கி போட்ட காய்ந்த பூ வழுக்கி பிரபா கையில் வந்து விழ, அதிர்ந்து போய் பார்த்தாள்.
நூலில் பாதி பூ தான் இருந்தது. மீதி உதிர்ந்து, மழை நீரில் அடித்து சென்று விட்டது போல… அந்த பூவையே பார்த்து நின்றவள், தூக்கி போட வில்லை. அதற்கு மனசும் வரவில்லை. தன் நைட்டியில் ஒட்டி எடுத்து வந்தவள், மீதி இருக்கும் காய்ந்த பூ உதிராமல் துவட்டி, ஒரு கவரில் முடிந்து வைத்தாள்.
இன்று மதியம் பிரபா ஊருக்கு கிளம்பி விடுவாள். அன்று அவள் வீட்டில் வைத்து பார்த்தது தான். அதனால் ஊருக்கு போகும் போதாவது பிடிக்க எண்ணி காத்திருந்தான். அவன் திட்டம் அறிந்து தான் பிரபா மதியம் கிளம்ப வில்லை. மாலை நான்கு மணி தான் கிளம்பினாள். சரியாக ஆறரை, ஏழு மணிக்கு விடுத்திக்கு சென்று விடுவாள்.
அந்த கணக்கில் வண்டி ஏற, தன் ஊர் டவுன் தாண்டும் வரை ஒன்றும் தெரிய வில்லை. அதை கடந்து விருதுநகர் பஸ் ஏற பயங்கர மழை பிடித்து கொண்டது. மாலை நாலரை மணியே எட்டு மணி போல இருட்டு கட்ட ஆரம்பித்தது.
ரொம்பவும் பயந்து போனாள். மழையும் வழுக்க, வண்டி நகரவில்லை.
“ஐயோ! இப்ப வண்டி எடுத்தா தான் சரியா இருக்கும். லேட்டா எடுத்தா எனக்கு அங்குட்டு மாறி போக ரொம்ப லேட் ஆகும்…” மனதோடு புலம்பினாள் பிரபா.
உண்மை தான். விருதுநகரில் இறங்கி, அங்கிருந்து லோக்கல் பஸ் அல்லது ஷேர் ஆட்டோ பிடித்து தான் கல்லூரிக்கு போக வேண்டும். பை பாஸ் மேலே தான் என்றாலும் வேற பஸ் அந்த இடத்தில் நிக்காது. அதுவும் எட்டு மணிக்கு மேல் ஷேர் ஆட்டோ கிடைப்பது கஷ்டம்.
மதியம் முதல் அவளுக்காக காத்திருந்து சோர்ந்து போன விக்ரம். “இன்னைக்கு காலேஜ் போகல போல…” என்று நடையை கட்ட,
கண்ணீர் நிறைந்த கண்களோடு ஜன்னல் ஓரம் அமர்ந்து இருந்தாள் பிரபா. சைடு பார்வையில் கடந்தவன், என்ன? அது பிரபாவா? திரும்பி நன்றாக பார்க்க,
“அட, நம்மாளு…” என்று அவளையே ஒரு கடையில் நின்று பார்த்து நிக்க,
“ மாப்பிள்ளை போலாம்…” என்று வந்தான் மதன்.
“பஸ் கிளம்பட்டும் போகலாம்டா…”
“ நாம என்ன பஸ்லயா வந்தோம். வண்டி தான…”
“அட, விருதுநகர் பஸ்டா…” என்றவன் பிரபாவை பார்த்து நிக்க,
“என்னடா சொல்ற” என்றவன் திரும்பி பார்க்க, கண்டு கொண்டான்.
“ இனி ஊருக்கு போன மாதிரி தான்…”
பஸ் எடுக்க காத்திருந்து நேரம் தான் போனது. மெல்ல மழை குறையவும் தான் பஸ் நகர்ந்தது. அதுவே ஆறு மணியை தொட்டு விட்டது. பழகிய ரோடு தான் என்றாலும் இதுவரை இரவில் சென்றதில்லை. பிரபா பயந்த பெண், பேசாமல் இறங்கி வீட்டுக்கு சென்று விடுவோமா என்று கூட யோசித்தாள்.
ஆனாலும் ஒரு குருட்டு தைரியம், நாலு வருசம் போய் வரும் ஊருக்கு என்ன பயம் என்று ஒரு பக்கம் மனம் நினைத்தது. இவர்கள் கல்லூரியில் போன் உபயோகிக்க கூடாது. அது இருந்தாலாவது வீட்டுக்கு தகவல் சொல்லலாம், உடனே அப்பா வந்து விடுவார்.
பிரபா முகத்தையே பார்த்து நின்ற விக்ரம், நேரத்தையும் பார்த்து கொண்டான். அவள் முகத்தில் என்ன கண்டானோ,
“மச்சான், இந்தா வண்டி சாவி. நீ வீட்டுக்கு போ. பிரபா தனியா காலேஜ் போற, நான் அவ கூட போறேன்…”
“ எதே, பேசாம வாடா வீட்டுக்கு. அதெல்லாம் அந்த பிள்ளை போய்க்கும்…”
“அவ முகம் பயந்த மாதிரி இருக்கு. தனியா வேற இருக்கா. நான் துணைக்கு போறேன். ஆல மரத்து ஐயனார் தான் என்னை சரியான நேரத்துக்கு அனுப்பி வச்சு இருக்கார் மச்சான்…” என்று குதூகலமாக விக்ரம் சொல்ல,
“ஏண்டா, ஆலமரத்து ஐயனார்க்கு வேற வேலை பொழப்பே இல்லையாடா…” என்று நக்கல் பண்ணியவன், அவனை விட்டு விட்டு கிளம்பி விட்டான்.
பஸ் கிளம்ப, விக்ரம் பின் புறம் ஏறி அமர்ந்து கொண்டான். அடுத்தடுத்த ஊர் வரும் போது கூட்டமும் குறைந்தது, மழை திரும்பவும் அதிகரிக்க தொடங்கியது. பிரபா அமர்ந்து இருந்த ஜன்னல் ஓரம் சாரல் விழ, இந்த பக்கம் நகர்ந்து அமர்ந்து கொண்டாள். பஸ் பை பாஸ் ஏறும் போது இரவு நேர கூட்டம் குறைந்து, கொஞ்ச பேர் தான் இருந்தார்கள். அதில் முக்காவாசி ஆண்கள் தான்.
பிரபா உயிரை கையில் பிடித்து தான் அமர்ந்து இருந்தாள். வாந்தி வரும் போல ஒரு மாதிரி குடலை பிரட்டியது. மாலையில் என்ன சாப்பிட்டேன் என்று யோசித்தாள்.
கண் மூடி கொஞ்ச நேரம் படுத்தால் நன்றாக இருக்கும், ஆனால் படுக்கவும் பயமாக இருந்தது. ஒரு மாதிரி லேசாக கண்ணை மூடியவளுக்கு யோசனை, தான் இன்னும் டிக்கெட் எடுக்கவில்லையே… பயந்து போய் நடத்துநர் எங்கே என்று திரும்பி பார்க்க, அவளையே பார்த்த மாதிரி இருந்த விக்ரம், மெல்ல எழுந்து வந்தான்.
அவனை பார்த்து அதிர்ந்தாலும், கண்களில் ஒரு மலர்ச்சி. பயம் ஓடி போனது. அவளை நெருங்கி எல்லாம் வரவில்லை. அவளுக்கு பின் பக்கம் இருக்கும் சீட்டில் அமர்ந்து கொண்டவன்,அவளுக்கும் சேர்த்து எடுத்த டிக்கெட்டை காட்டி விட்டு, சீட்டுக்கு வெளியே கால் நீட்டி அமர்ந்தான். அவனின் கால் அவள் உட்கார்ந்து இருக்கும் சீட் வரை நீண்டு இருந்தது.
முதலில் அதிர்ச்சியில் பயந்து போய் இருந்தவள். அடுத்து என்னவோ ஒரு பாதுகாப்பு உணர்வு தோன்ற, கண் மூடி சாய்ந்து கொண்டாள். லேசாக உறக்கமும் கூட, இல்லையென்றால் வாந்தி தான் வரும்.
நேரம் கடந்தது…
“பிரபா…” என்று சத்தம் கொடுத்தான் விக்ரம்.
மெல்ல முழித்து பார்த்தவள், நிமிர்ந்து அமர்ந்து சுடிதாரை இழுத்து விட்டு, என்ன என்று பார்த்தாள்.
“ ரெஸ்ட் ரூம் போறதா இருந்தா போ…”
பஸ் நிறுத்தி இருந்தார்கள். அவள் இல்லையென்று லேசாக தலையாட்ட, சரியென்று விக்ரம் இறங்கி சென்றான்.
மணியை பார்க்க எட்டு தொட்டது. ரொம்ப லேட் ஆகி போச்சு. வெளியே எட்டி பார்க்க, பஸ், லாரி என்று பலதும் வேகமாக கடந்து போனது. விக்ரமை தேட, அவனை காணம். சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
“பிரபா…”
நிமிர்ந்து பார்க்க, விக்ரம் தான் டீ வாங்கி வந்து இருந்தான்.
தேவையாக இருக்க, வாங்கி கொண்டாள். விக்ரம் அமர்ந்தான். இன்னும் பஸ் எடுக்கல. டீ குடித்து முடிக்க, பாத்ரூம் போகணும் போல இருந்தது.
“ ஐயோ! நான் பாட்டுக்கு இருந்தேன். ஒரு டீய கொடுத்து, இப்ப பாரு, ரெஸ்ட் ரூம் போகணும். பேசாம கண்ணை மூடி படுப்போமா…” என்று நினைத்தவள் முடியாமல் எழுந்து விட்டாள்.
பிரபா இறங்கி வர, விக்ரமும் சேர்ந்து இறங்கி விட்டான். அவள் சுற்றி முற்றி பார்க்க, அவன் தான் கை காட்டினான்.
அவளுக்கு சங்கடமாக இருந்தது. பேசாமல் போய் வந்து, முகம் கழுவி வெளியே வர, குளிர் காற்று கொஞ்சம் நன்றாக இருந்தது. மஞ்சள் நிற சுடிதார் அணிந்து இருந்தாள். முகமும் கழுவி இருக்க, பளிச் என்று இருந்தது.
பிரபா பஸ்சை நோக்கி நடக்க, டீ குடிக்க, போன் பேச என்று எல்லா ஆண்களும் வெளியில் தான் நின்று இருந்தார்கள். அவர்களின் பார்வை பிரபா மேல் ஆர்வமாக விழ, தயங்கி நின்றவள் வேகமாக விக்ரம் அருகே போய் நின்று கொண்டாள். மற்றவர்கள் பார்வை மாறியது.
மதனோடு போன் பேசி கொண்டு இருந்தவன் முகத்தில் சிரிப்பு விரிந்தது. அவனை ஒரு பாதுகாப்பு என்று கூட கருதி இருக்கலாம். அதற்கு கூட அவன் அருகே தானே வந்து நின்றாள். விக்ரமுக்கு தான் இறக்கை விரிந்தது.
தாமதமாக தான் விருதுநகர் வந்து இறங்க, அடுத்து பஸ், ஆட்டோ எதுவும் கிடைக்காது. தனியே ஆட்டோ பிடிக்க பயம் வேறு. தயங்கி தான் பிரபா, விக்ரமை பார்த்தது. அப்படியே விட்டு செல்ல மாட்டான் தான். ஆனாலும்?
அவள் பையை பார்த்தாள். ஒரு கட்டை பை நனைந்து இருந்தது. நாளை காலை தான் மெஸ் திறக்கும், இரவு உணவை அவர்கள் தான் கொண்டு வர வேண்டும். தக்காளி சாதம், முட்டை தொக்கு வைத்து வாழ இலையில் கட்டி தந்து இருந்தார் கலை. எல்லாம் நனைந்து போனது. நட்புகளோடு பகிர்ந்து கொள்வோம் என்று தூக்கி போட்டு விட்டாள்.
அவன் ரெஸ்ட் ரூமை கண் காட்ட, வேகமாக உள்ளே சென்றாள். பிரபா நகர, அவள் கொண்டு வந்த பையை ஆராய்ந்தான். அருகே இருக்கும் பேக்கரிக்கு சென்றவன், சில உணவு பண்டங்களை வாங்கி உள்ளே போட்டான்.
அங்கிருக்கும் ஹோட்டலுக்கு சென்றான். அவசரத்திற்கு சப்பாத்தி தான் இருந்தது. அத்தோடு கொஞ்சம் சிக்கன் கிரேவி வாங்கி கொண்டான். சற்று தள்ளி இருக்கும் கடையில் மல்லிகை பூ வாங்கி கொண்டான்.
பிரபா, ஒரு கடையில் நின்று விடுதி வார்டனுக்கு போன் போட்டாள். தாமதமாகும் என்றால் நிச்சயம் முன்பே சொல்லி இருக்க வேண்டும். வீட்டுக்கு சொல்ல வில்லை. தனியாக இருக்கிறேன் என்று பயந்து விடுவார்கள். தன் வேலையை முடித்து வந்தவள், அங்கிருக்கும் மேடையில் அமர்ந்து கொண்டாள்.
விக்ரம் எங்கே என்று தேடியெல்லாம் செல்ல வில்லை. அதனால் தான் அவன் சாவகாசமாக பொருள் வாங்கி கொண்டு வந்தான்.
பிரபா எழுந்து கொள்ள, விக்ரம் முன்னே நடந்தான். திரும்பவும் தூறல் விழுந்தது. விக்ரம் பேசி ஒரு ஆட்டோவை பிடித்தான். ஒன்றும் சொல்லாமல் பிரபா ஏறி கொள்ள, சற்று இடம் விட்டு தான் விக்ரம் அமர்ந்தான். அவன் கையில் இருந்த பையை அவளிடம் கொடுக்கவே இல்லை. ஆட்டோவையே அடைத்து இருந்தான். முகம் தண்ணியாக இருக்க, கர்சீப் வைத்து துடைத்தான்.
விடுதி வர இறங்கி கொண்டார்கள். இவளை போல மழைக்கு பலர் தாமதமாக வர, கொஞ்சம் நிம்மதி. வாசல் வரை வந்து விட்டவன்.
சின்ன சிரிப்பில் தலையாட்டி விடை பெற்று, வந்த ஆட்டோவில் கிளம்பி விட்டான்.
“என்ன ஒன்னுமே சொல்லாம போறான்…” என்று பிரபாவே நினைத்து விட்டாள்.
விக்ரம் தான் எதுவும் பேச வில்லை. அவளை பிடிக்கும். தன் வாழ்க்கை துணையாக்கி கொள்ளும் அளவுக்கு பிடிக்கும். ஆனாலும், பேச நினைக்க வில்லை. மழை, இரவு, தனிமை என்று பயந்து போய் இருக்கிறாள். துணையாக தான் உடன் வந்தான். அவளின் பயத்தை தனக்கு சாதகமாக உபயோகிக்க கூடாது என்று நினைத்தான். அவளுக்கு ஒரு பாதுகாப்பாக வந்தவன், அவளை விட்டதும் சென்றும் விட்டான்.
ஒரு பெருமூச்சோடு உள்ளே வந்தாள் பிரபா. அவள் நட்பு வட்டம் ஏற்கனவே வந்து இருக்க, உடை மாற்றி கட்டிலில் விழுந்தாள்.
“ பிரபா, வா சாப்பிட. அம்மா என்ன குடுத்து விட்டாங்க…” என்ற ஜெனி, பிரபா பையை ஆராய்ந்தாள்.
“எங்க ஊர்ல இருந்து வரும் போதே நல்ல மழை. எதுவும் கொண்டு வரல, நீங்க தான் எனக்கு கொடுக்கணும்…” என்றாள் சோர்வாக.
“அப்போ இது என்ன? ஹோட்டல் போனையா? வெளி சாப்பாடு இருக்கு…” சித்ரா கேட்க.
படுத்து கிடந்தவள், வேகமாக எழுந்து தன் பையை ஆராய்ந்தாள். அதில் நிறைய உணவு பண்டங்களோடு, உணவும் இருந்தது.
“யார் வாங்கி கொடுத்தா? அப்பா வந்தாங்களா?…” மோனா கேட்க.
“ஆமா…”
“அப்பாவா பூ வாங்கி கொடுத்தாங்க…”
அப்போது தான் பூ கவரை கவனித்தாள். அவனே பையை பிடித்து கொண்ட காரணம் தெரிந்தது. பூவை கையில் எடுத்து பார்த்தாள்.
அவர்கள் அறையில் ஐந்து பேர். சப்பாத்தியோடு இடியாப்பமும் இருக்க, சாப்பிட்டு, பேசாமல் படுத்து விட்டாள்.
“என்னடி படுத்துட்ட?…” அரட்டையில் இருந்த நட்புகள் கேட்க.
“ டையர்டா இருக்கு…” என்றவள் கண் மூடி கொள்ள, நினைவு எல்லாம் விக்ரம் தான்.
error: Content is protected !!