Skip to content
Post Views: 4,635
உன் காதல் ஒரு வரமாய்…..23
தன் கரத்தை இறுக்கமாக படித்திருந்தவளின் பிடி மெல்ல விலகியது.கரத்தின் உள் இருந்த திருமாங்கல்யத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அமிர்தா.இன்று காலை தான் திருமணம் முடிந்திருந்தது.மெல்ல தலையை உயர்த்தி சற்று முன் கணவனானவனை தேடினாள் பந்தியில் எஞ்சியிருந்தோருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தான்.பட்டு வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு இங்கு அங்கும் ஓடிக் கொண்டிருந்தான்.அவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.தான் நினைத்ததை சாதித்த மகிழ்ச்சியாக கூட இருக்காலம்.
தன்னையும் குனிந்து பார்த்துக் கொண்டாள் சிவப்பு வண்ண பட்டு சேலையில் அத்தனை பாந்தமாக இருந்தாள்.இருவருக்கும் நல்ல ஜோடி பொருத்தம் தான் ஆனால் மனப்பொருத்தம் தான் சற்று குறைந்தது போல் இருந்தது அமிர்தாவிற்கு.அதுவும் அவளுக்கு மட்டும் தான் அப்படி இருந்தது போல அவனுக்கோ மற்றவர்கள் அதாவது பாரதி,கீதாவிற்கோ அப்படி இல்லை போல.அவர்கள் அனைவரின் முகத்திலும் அத்தனை சந்தோஷம் மின்னிக் கொண்டிருந்தது.
“ஏய் பாப்பா….என்ன கனவு கண்டு கிட்டு இருக்க….”என்று கேட்ட படி அவளின் அருகே தன் ஐந்து மாத வயிற்றை பிடித்தபடி அமர்ந்தாள் பாரதி.
Advertisement
“ம்ஹம்….ஒண்ணுமில்லக்கா….எங்க கீதாக்காவ காணும்….”என்று கேட்க,
“அங்க பாரு….”என்று பந்தியில் ஒரு இடத்தை காட்ட,அங்கு அவளிற்கு சாப்பாட்டை ஊட்டிக் கொண்டிருந்தான் அவளின் கணவன்.
“பார்த்தியா….எப்படி கவனிக்காருனு….எனக்கும் தான் இருக்கே….”என்று பொய்யாக குறைப்படும் போதே அவளிற்கு பழச்சாரை எடுத்துக் கொண்டு வந்தான் சரவணன்.
Advertisement
“க்கா நீ ரொம்ப ஓவரா போற நல்லாயில்லை….”என்று அவளை தோள்களில் தட்டினாள் அமிர்தா.கணவன் கொடுத்த பழச்சாரை வாங்கிக் கொண்டு,
Advertisement
“அட போடி….எல்லாத்திலேயும் என்னை முந்திக்கிட்டா அவ….”என்று குறைபட,அமிர்தாவிற்கு பாரதி எதைக் கூறுகிறாள் என்று புரியாமல் விழிக்க,
“உன்னை யாருடீ பெத்துக்க வேண்டாம்னு சொன்னது….”என்று கேட்டபடி தன் ஏழுமாத வயிற்றை தள்ளிக் கொண்டு வந்தாள் கீதா.
“என்னமோ பிடிக்கலை பிடிக்கலைனு சொல்லிட்டு….இப்ப என்னடானா ஓவர் கொஞ்சலா இருக்கு பார்த்துக்க….”என்று பாரதி கூற,
Advertisement
“கண்ணு போடதடீ……”என்று அவளின் கன்னத்தில் குத்தியவளுக்கு அத்தனை பெருமை தன் கணவனை எண்ணி,
“அச்சோ இப்ப நீங்க இரண்டு பேரும் என்ன பேசிக்கிறீங்க…எனக்கு புரியலை…..”என்று அமிர்தா இடையில் கூற,
“அதை ஏன் எங்க கிட்ட கேட்குற போய் உன் புருஷன் கிட்ட கேளு கொடுப்பாரு…”என்று கீதா கூற,பாரதிக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது அமிர்தாவின் புரியாத பாவனையில்,
“நீ பாப்பாவே தான்டீ….”என்று கன்னத்தை தட்டி கூற,
“க்கா….”என்று பல்லைக் கடித்த அமிர்தா முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“நீங்க இங்க தான் இருக்கீங்களா….”என்று கேட்டபடி வந்த திவ்யா,
“இந்தா என் பிள்ளையை பிடி…எனக்கு பசிக்குது…நான் சாப்பிட்டு வரேன்….”
“அதுக்குள்ளேயா…..”என்று அமிர்தா குழந்தையை வாகாக வாங்கிக் கொண்டே கேட்க,
“எனக்கு நிமிஷத்துக்கு நிமிஷத்துக்கு பசிக்கும் நான் சாப்பிடுவேன்….உனக்கு என்ன….”என்றுவிட்டு அவள் செல்ல,
“பார்த்து வயிறு வெடிச்சிட போது….”என்று கூற,
“போடீ….சாப்பிட்டு வந்து உன்கிட்ட சண்டை போடுறேன்….”என்றுவிட்டு சென்றுவிட்டாள் திவ்யா.
“நல்ல பொண்ணு இல்ல….”என்று பாரதி கூற,
“ம்ம் கொஞ்சம் வாய் தான் இருந்தாலும் தங்கமான குணம்….நல்லா பார்த்துக்கடீ….”என்று கீதா கூற அமிர்தா குழந்தை கொஞ்சிக் கொண்டே தலையை ஆட்டினாள்.
“எங்க அந்த பொண்ணுகிட்ட ஏட்டிக்கு போட்டி தான் நிக்குறா இவ….எப்ப பாரு சண்டை….அந்த பையன் என்ன நினைக்கும் நம்பளை….”என்று பாரதி அமிர்தாவின் கன்னத்தில் ஒரு குத்து குத்த,
“இனி அது தான் உன் குடும்பம் பார்த்து நடந்துக்க….எப்போதும் பொம்பளைங்க பேச்சு பொம்பளைங்களோட இருந்தா தான் நல்லது…..அதனால பார்த்து சூதனமா நடந்துக்க….அப்புறம் இன்னொன்னு சொல்லனும்…..”என்ற கீதா அமிர்தாவின் அருகில் தன் நாற்காலியை நகர்த்தி அமர்ந்து,
“இங்க பாரு…..நீ பழைசையே யோசிக்கிட்டு இருக்காத….அது மாத்த முடியாதது….அதனால மீதி இருக்குற வாழ்க்கையும் தான் போகும்….புரியுதா….”என்று கீதா கூற அமிர்தா மௌனமாக இருந்தாள்.கீதா பாரதிக்கு கண்ணை காட்ட,
“இந்தாடீ…..எல்லாருக்கும் பிரச்சனை வர தான் செய்யுது அதுக்காக அதையே நினைச்சிக்கிட்டு இருந்தா நல்லா இருக்காது….இப்ப கீதா வீட்டுல அவளை மன்னிச்சு ஏத்துகலையா…அது மாதிரி நீயும் கொஞ்சம்….”என்றுவிட்டு அவளின் கைகளை பிடித்து இறுக்கம் கொடுத்தாள்.அமிர்தாவிற்கு புரிகிறது தான் ஆனால் உடனே எல்லாம் அனைத்தையும் மறக்க முடியவில்லை அது மனதின் ஓரத்தில் அரித்துக் கொண்டு தான் இருந்தது.
“என்ன சொல்லிக் கொடுக்குறீங்க என் பொண்டாட்டிக்கு…..”என்று சிவா கேட்டுக் கொண்டே அமிர்தாவின் பக்கத்தில் இயல்பாக அமர்ந்தவன் அவள் நகர்ந்துவிடாதபடி அவளின் கைகளை பிடித்தும் கொண்டான்.
“ம்ம்….உங்க பொண்டாட்டிக்கு ஒண்ணும் தெரியாது பச்சை மண்ணு பாருங்க…..நாங்க சொல்லி கொடுத்து தெரிஞ்சிக்க….”என்று கீதா இடக்காக கேட்க,
“ஆமா என் பொண்டாட்டி பச்சை மண்ணு தான்….நீங்க அவளை கெடுத்திடாதீங்க…..”என்று அவனும் இடக்காகவே பதில் கொடுக்க,
“சும்மா தான் பேசிக்கிட்டு இருந்தோம் தம்பி வேற எதுவும் இல்லை….”என்ற பாரதி,
“கீதா வா நாம அப்படி உட்காருவோம்….”என்று அவளையும் இழுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.பின்னே இருவரும் ஒருவருடன் பேசிக் கொள்ளும் விதம் அப்படி இருக்கும் எங்கே இதனால் அமிர்தாவின் வாழ்வில் பிரச்சனை வந்துவிடுமோ என்ற பயம் பாரதிக்கு.
“என்ன ஒரு அக்காவை இன்னொரு அக்கா காப்பாத்துராங்க….ம்ம்….”என்று அவளை வம்பிழுக்க,அமிர்தா எதுவும் பேசவில்லை முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“இன்னும் என் மேல உள்ள கோபம் குறையலையா….ஒண்ணும் பிரச்சனையில்லை நைட் பேசி தீர்த்துக்கலாம்….”என்று அவர்களின் கோர்த்த கரத்தை தூக்கி அவளின் கரத்தில் அழுத்தமாக இதழொற்றி எடுக்க அமிர்தா மொத்தமாக நடுங்கி தான் போனாள் அவனின் செயலில்.உடலெங்கும் நடுக்கம் பரவியது அதை அடக்க முடியாமல் படபடக்கும் இதயத்துடன் அவனை ஏறிட,அழகாக கண்களை சிமிட்டியவன்,
“இதுக்கே இப்படி பயந்தா…மத்தது….”என்றவனின் இதழ்களை தன் கரம் கொண்டு மூடியவள்,
“என்ன பேசிறீங்க நீங்க யாராவது பார்த்தா…..”என்று விழிகளை சுழலவிட்டவரே கேட்க,
“யாரும் நம்மளை பார்க்க மாட்டாங்க அதனால நீ என்னை மட்டும் பாரு….”என்று அவளின் கன்னத்தை பிடித்து தன் பக்கம் திருப்ப,
“ஏன் இப்படி பண்றீங்க….ப்ளீஸ்….”என்று தான் தள்ளி அமர முயல,
“நகர்ந்த அப்புறம் என் மடியில தான் உட்கார்ந்திருப்ப….பரவாயில்லைனா நகர்ந்து உட்காரு…..”என்றவனின் முகம் விளையாட்டு பாவம் காட்டினாலும் குரலில் விளையாட்டில்லை.
“நகரலை கையை விடுங்க….”என்று நெளிந்து கொண்டே கூற,
“இன்னைக்கு தான் பிடிச்சிருக்கேன் அதுக்குள்ள விட சொல்லுற….ம்ஹம் நான் விடமாட்டேன்…..ஒரு தடவை தவர விட்டதுக்கு தான் அனுபவிக்குறேன்….அது ஒண்ணே போதும்…..”என்று கூற,அதன் பின் அமிர்தா பேசவில்லை அழுத்தமாக அமர்ந்துவிட்டாள்.சிவாவிற்கு தான் மனதில் அழுத்தம் கூடி போனது இவளை எப்படி சரிகட்டுவது என்று.
திருமண நாள் குறித்ததிலிருந்தே அமிர்தாவின் கோபம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் வெடிக்க தொடங்கியிருந்தது.
“எல்லாம் உங்க இஷ்டம் தான்….நான் எனக்குனு ஒரு மனசு இதெல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை இல்ல….”என்று சண்டைக்கு நிற்க,
“நீ உன் மனசு எல்லாம் புரிஞ்சதால தான் இந்த ஏற்பாடு…அதனால தேவையில்லாத்தை நினைச்சு உன்னை வருத்திக்காத அம்மு….”
“அம்மு சொல்லாதீங்க எரிச்சலா இருக்கு….”என்று பல்லை கடிக்க,
“எனக்கு எப்போதும் நீ அம்மு தான்….போய் கல்யாணத்துக்கு தயாராகு….”
“விருப்பமில்லாதவங்களை கட்டாயப்படுத்துறது தான் சரியா……”என்று அமிர்தா கோபமாக கேட்க,
“அமிர்தா….என்னை கோபப்படுத்தி நீ நினைச்சதை சாதிக்கலாம்னு நினைக்காத….என்னோட கோபம் உனக்கு நல்லதுக்கு இல்லை…..”என்று விரல் நீட்டி எச்சரிக்கை செய்ய அமிர்தாவின் முகத்தில் பயம் அவனின் கோப முகத்தில் அத்தனை மூர்க்கனாக மாறி இருந்தான்.
“என்னை மனுஷனா வச்சிருக்குறதும் மூர்க்கனா மாத்துறதும் உன் கையில தான் இருக்கு….”என்றவன் அவளின் கன்னம் தட்டிவிட்டு,
“இப்ப நான் மூர்கனா இருக்கேன் எனக்கு என் அம்மு வேணும் அதுக்கு நான் என்னவேனா செய்வேன்….அதுக்கு அவளை கட்டயாப்படுத்தவும் தயங்க மாட்டேன்…அதனால கல்யாணத்துக்கு தயாரகு….”என்றுவிட்டு சென்றுவிட்டான்.அதிலிருந்தே கோபம் தான் அமிர்தாவிற்கு தன் இயலாமை எண்ணி அழ அதற்கும் விட்டானில்லை அவளின் மணவாளன்.ஆக அவள் முழுவதுமாக அவனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாள் என்று தான் கூற வேண்டும்.
மாலை அனைவரும் அமிர்தாவின் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க திவ்யா மட்டும் ஏதோ பதட்டத்துடன் இருப்பது போல தோன்றியது அமிர்தாவிற்கு.
“ஏய் பாப்பா….கொஞ்சம் அசையாம உட்காரு இந்த பின்னலை அவிழ்க்க முடியலை….”என்று பாரதி அவள் தலையை பிடித்து திருப்ப,
“ம்ம்….க்கா வலிக்குது பார்த்து செய்ங்க…”என்று கூற,அவள் மண்டையில் தட்டி,
“ஒழுங்கா உட்காருடீ….”என்றவள் அவளின் பின்னலை அவிழ்த்து ஒற்றை பின்னலாக போட்டுவிட்டவள்.
“ம்ம் முடிஞ்சிடுச்சு…..போய் முகம் கழுவிட்டு வா….”என்று கூற அவளும் முகம் கழுவிட்டு வரும் போது திவ்யா கௌதமிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்க அதற்கு அவன் மறுப்பாக தலையசைப்பதும் பார்த்தவள் அவர்களை நெருங்கி,
“என்னாச்சு…..ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க…..”என்று திவ்யா பார்த்து கேட்க,எப்போதும் படபடவென பொரியும் திவ்யா இன்று அமைதியாக தலையை குனிந்து கொள்ள அமிர்தா கௌதமை பார்த்தாள்.
“ஒண்ணுமில்லமா….நீ போ….இது எப்போதும் நடக்குற சண்டை தான்…..”என்று சமாதானபடுத்த,
“இல்ல ஏதோ பிரச்சனை என்னனு சொல்லுங்க….கொஞ்ச நேரமாவே இவங்க முகம் சரியில்லை நான் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன்….”என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே அந்த இடத்திற்கு வந்த சிவா,
“என்ன நடக்குது இங்க…..”
“இவங்களுக்கு ஏதோ பிரச்சனை….என்னனு சொல்லமாட்டேங்குறாங்க….”என்று அமிர்தா போட்டுடைக்க,அப்போது தான் சிவா திவ்யாவின் முகத்தை பார்த்தான் அழுதிருப்பாள் போலும் முகம் சிவந்திருந்தது அவன் கௌதமின் முகத்தை பார்க்க,
“அப்பாக்கு உடம்புக்கு முடியலைனு போன் வந்தது….என்னை கூப்பிட்டார்….இவ என்னை போக சொல்லுறா….நான் போகமாட்டேன்னு சொன்னேன் அதான்….”என்று கூற,
“போயிட்டு வாங்க…..”என்று கூற,
“டேய் நான் எப்படி இவளை விட்டுட்டு போவேன்….”
“எதுக்கு திவியை விட்டுட்டு போகனும் அவளையும் குழந்தையும் அழைச்சிக்கிட்டு போங்க….”என்று கூற,கௌதம் முகம் மாறியது.
“எத்தனை நாளைக்கு தான் நீங்க இப்படி இருக்க போறீங்க சீனியர்….அவங்க ஏதாவது பேசினா திவ்யா பார்த்துக்குவா கிளம்புங்க….இதுக்கு அவளை அழ வச்சிக்கிட்டு….அம்மு போ குழந்தை பார்த்து கிளப்பு….”என்று கூற அமிர்தா நகர்ந்துவிட்டாள்.
“திவி நீயும் கிளம்பு….நீ தான் இப்ப அவங்க கூட நிக்கனும்….அவங்க என்ன சொன்னாலும் காதுல வாங்கிக்காத புரியுதா….கிளம்பு…”என்று கூற,
“இதை தான் முன்னாடி இருந்தே சொல்லிக்கிட்டு இருக்கேன் கேட்டாதான….”என்றவள் கௌதமை முறைத்துவிட்டு நகர,
“டேய் வேண்டாம்டா….அவங்க பேச்செல்லாம் என்னால கேட்க முடியலை….ரொம்ப பேசிட்டாங்க என் திவியை கஷ்டமா இருக்கு திரும்பவும் வேணாம்…..என்னால முடியாது அவ கலங்கமாட்டா ஆனா நான் தான் உடைஞ்சிடுவேன்….”என்றவன் குரலே கரகரத்து வர,சிவா அவனின் தோள் அணைத்து,
“சீனியர்….நீங்க சொல்லுறது எனக்கு புரியிது….ஆனா இப்ப அவங்களுக்கு உங்களை விட்டா வேறு யாரு இருக்கா…நீங்க தான் பார்க்கனும்….அதனால கிளம்புங்க திவ்யா பார்த்துப்பா….”
“நான் கிளம்பிட்டேன்….”என்று கூறியபடி திவ்யா ஓடி வந்து நிற்க,
“உன் மாமனார் வீட்டுக்குனு சொன்னவுடனே உடனே கிளம்பிட்ட….”என்று சிவா கிண்டல் பண்ண,
“பின்ன மாமனார் வீடுனா சும்மாவா…..”என்றவள் கௌதமிற்கு கண் காட்ட மூச்சொன்றை இழுத்துவிட்டு அவளின் பின்னே சென்றான்.அவனிற்கு பெற்றோரின் மீது கோபம் தான் இருந்தாலும் இந்த மாதிரி நேரத்தில் பக்கத்தில் இருக்க வேண்டும் அது அவனின் கடமையும் கூட அதனாலே கிளம்பிவிட்டான்.திவ்யா கிளம்பி சில நிமிடங்களிலேயே பாரதியும்,கீதாவும் கிளம்பிவிட்டனர்.இப்போது வீட்டில் அமிர்தாவும்,சிவாவும் மட்டுமே புதிய தொடக்கத்தை நோக்கி அவர்களின் வாழ்வு.தொடக்கம் இனிதாக அமைய இரு இணைகளின் மனங்களும் ஒன்று போல சிந்திக்க வேண்டும்.
error: Content is protected !!