Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் காதல் ஒரு வரமாய்....

உன் காதல் ஒரு வரமாய்….8

உன் காதல் ஒரு வரமாய்…..8

அறைக்குள் நுழைந்த அமிர்தாவைக் கண்டு பாரதி அதிர்ந்துவிட்டாள்.அமிர்தாவின் கையில் இருந்த பெரிய புத்தகத்தை கண்டு,

“என்னடி இது இவ்வளவு பெரிய புக்கா இருக்கு….”என்று ஆச்சிரியமாக கேட்க,

“ஆமாக்கா….பெரிசா இருக்கு….ஒரு புக்கு தான் எடுத்துட்டு போகலாமாம்…..அதான் ஒன்னு மட்டும் எடுத்துட்டு வந்தேன்…..”என்றவள் புக்கை படுக்கையின் மீது வைத்துவிட்டு முகம் கழுவி வந்தாள்.



Advertisement

“என்னடி இது ஒரே கணக்கா இருக்கு…..”என்று பாரதி அந்த புத்தகத்தை பார்த்துக் கொண்டே கூற,

“என்ன….கணக்கா…..”என்று கூறிக் கொண்டே அவள் அதை வாங்கி பார்க்க,புத்தகம் பாதி கணக்கு பின் ஆங்கிலம் என்று வகை வகையாக இருக்க அமிர்தாவிற்கு தலை சுத்தியது.படித்த பெண் தான் ஆனால் படிப்பை விட்டு சில காலங்கள் ஆயிற்று அதனால் எல்லாம் மறந்து போனது போல் இருந்தது அவளிற்கு.

“என்னடி இப்படி முழிக்கிற…..”

Advertisement

“க்கா எனக்கு ஒண்ணுமே புரியலை…..”என்று கூறவும் புத்தகத்தை வாங்கி மூடி வைத்த பாரதி,

Advertisement

“முதல்ல சாப்பிடு புள்ள….அப்புறம் இதெல்லாம் பார்த்துக்கலாம்…..”என்று கூற,அமிர்தாவும் முதலில் உணவை உண்டுவிட்டு பின் அந்த புத்தகத்தை விரித்து ஒவ்வொன்றாக பார்வையிட,ஏதோ புரியாத மொழியில் பாடம் படிப்பது போல் இருந்தது.படிக்க முயற்சி செய்ய முடியாமல் போகவே சற்று நேரத்திலேயே புத்தகத்தை மூடி வைத்துவிட்டாள்.

“என்னடி அதுக்குள்ள மூடி வச்சிட்ட….”

“ம்ஹம் எனக்கு ஒண்ணும் புரியலக்கா…..ஏதோ புரியாத பாஷையை படிக்கிற மாதிரி இருக்கு….தலைவலி வந்திடும் போல இருக்கு….”என்று கூற,

Advertisement

“அய்யோ என்னடி இப்படி சொல்லுற….இப்ப என்ன செய்ய போற….”

“ம்ம்….ஏதாவது செஞ்சி தான் ஆகனும்….”என்று விட்டத்தை பார்த்துக் கொண்டே கூற,

“என்ன சொல்லுற…”

“ஒண்ணுமில்லக்கா நீ தூங்கு….”என்றுவிட்டு போர்வை முகம் போர்த்தி தூங்க முயன்றாள்.ஆனால் தூக்கம் தான் வரவில்லை மனதில் ஒருவித பயம் தான் படித்த அனைத்துமா தனக்கு மறந்துவிட்டது எப்படி எப்படி என்று மண்டையை பிடித்துகொள்ள அந்த இரவு தூங்கா இரவாகி போனது அவளிற்கு அதன் விளைவு காலை எழும் போதே தலைவலி அதோடு எழுந்து கிளம்ப நேரமாகிவிட கடையிலும் அமிர்தாவிற்கு நல்ல திட்டு விழுந்தது.ஆக அன்றைய நாள் முழுவதும் அவளிற்கு நல்ல முறையில் செல்லவில்லை.அன்று வேலையும் சற்று இழுத்துவிட வழக்கத்திற்கு மாறான நேரத்தில் தான் விடுதிக்கு கிளம்பினாள்.அவள் பேருந்து நிறுத்தத்தை அடையும் போதே நேரம் பத்தை தான்டி இருந்தது.சோர்வுடன் அமிர்தா பேருந்து நிறுத்ததில் நின்றிருக்கும் நேரம் அவளின் அருகே யாரோ வந்து நிற்கும் அரவம் தெரியவும் பயத்துடன் திரும்ப சிவா நின்றிருந்தான்.

“நீங்களா….நான் பயந்துட்டேன்…..”என்று கண்கள் படபடக்க அமிர்தா கூற,

“ஏன் பஸ் ஸ்டன்டுனா ஆள் வரதான் செய்வாங்க….அதுக்கெல்லாமா பயப்படுவாங்க….”என்று தன் செல்லை பார்த்துக் கொண்டே பேச,அமிர்தாவிற்கு எரிச்சலாக வந்தது.அவனைக் கண்டவுடன் அவள் மனது பூவாக மலர்ந்தது ஆனால் அவனோ அவளை கண்டு கொண்டது போலவே தெரியவில்லை.

“சரியான கடுவான்…..”என்று அவள் வாயிற்குள் முணகுவதாக நினைத்துக் கொண்டு சத்தமாக பேசிவிட,

“என்ன….என்ன சொன்ன….”என்று சிவா செல்லில் இருந்து முகத்தை நிமிர்த்திக் கேட்க,

“அச்சோ மனசுக்குள்ள பேசுறேன்னு நினைச்சு சத்தமா பேசிட்டேனே….”என்று நாக்கை கடித்த அமிர்தா,

“இல்ல ஒண்ணுமில்ல….”என்றவள் அவனிடம்,

“நானே உங்களுக்கு போன் பண்ணணும் இருந்தேன்…..”என்று கூற,நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவன் முகத்தில் சற்று கோபம் எட்டி பார்த்தது.

“எதுக்கு….”என்று அவன் கேட்ட விதத்தில் எச்சிலை கூட்டி விழுங்கினாள் அமிர்தா.

“அது….”என்று அவள் கூறும் முன் அவளை தடுத்தவன்,

“இங்க பாரு சும்மா எனக்கு போன் பண்ணாத எனக்கு பிடிக்காது….”என்றுவிட்டு தனது செல்லில் மூழ்கி விட,அமிர்தாவின் முகம் இருண்டுவிட்டது இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்,

“இல்ல படிப்பு விஷயமா தான் பேசனும் இருந்தேன்….”என்று உள்ளே சென்றுவிட்ட குரலில் அவள் கூற,மூச்சை இழுத்துவிட்ட சிவா,

“என்ன பேசனும்….”

“அது நான் லைபெரிலேந்து புக் எடுத்துட்டு வந்துட்டேன்…”

“சரி அதுக்கு….”

“இல்ல எனக்கு எதுவுமே புரியல….எல்லாம் மறந்து போன மாதிரி இருக்கு….நீங்க எனக்கு சொல்லி தரீங்களா….”என்று குனிந்து கொண்டே தான் கேட்டாள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தால் கண்டிப்பாக திட்டு விழும் அதோடு அவனின் முகம் பார்த்தாள் தான் கூற வந்ததும் மறந்துவிடுவோம் என்று நினைத்தவள் அவன் முகம் பாராமல் கூறிவிட அடுத்த பக்கம் பதில் இல்லை.

“என்னடா நாம சொன்னதுக்கு கடுவான் திட்டும்னு பார்த்தா அமைதியா நிக்குது….”என்று நினைத்துக் கொண்டே நிமிர்ந்து அவனின் முகம் பார்க்க,அவனோ அவளை தீயாக முறைத்துக் கொண்டு நின்றான்.

“அச்சோ முறைக்கிறாரே….இப்ப என்ன பண்ணுறது…..அம்மு விடாத இதை விட்டா உனக்கு சந்தர்ப்பம் கிடைக்காது…..இவரை விட்டா உனக்கு ஆளும் இல்லை….”என்று தனக்குள் கூறிக் கொண்டே நிமிர,அவனோ இவளை கண்களை சுருக்கி விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தவன்,

“உனக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா….”என்று கேட்க அமிர்தா கேட்டது புரியாமல் பேந்த பேந்த முழித்தாள்.அவள் முழிப்பதைக் கண்டு தன் ஒற்றை விரலை தலை பக்கத்தில் சுற்றி காட்ட,

“என்னை பைத்தியம்னு சொல்லுரீங்களா….”என்று மூக்கு விடைக்க அவள் கேட்க,

“இல்லை நீ பைத்தியமே தான்….”என்று அவன் கூறிவிட,அமிர்தாவிற்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.கோபமாக முகத்தை திருப்பிக் கொள்ள,

“உண்மையை சொன்னா உனக்கு கோபம் வருதா…..அப்புறம் என்ன கேட்ட உனக்கு சொல்லி கொடுக்குறதா….என்னை என்ன வேலை வெட்டி இல்லாதவன்னு நினைச்சியா…..”என்று எரிந்து விழ,அமிர்தா உடல் வெளிப்படையாக குலுங்கிவிட்டது அழுகையில்.

“ஏய் எதுக்கு இப்ப அழற….”என்று அதற்கும் காய,

“இல்ல எதுவுமில்ல….உங்கிட்ட உதவி கேட்டது தப்பு தான் மன்னிச்சிடுங்க….இனி எதுக்காவும் உங்களை தொந்திரவு பண்ண மாட்டேன்….”என்றுவிட்டு அவனை பார்க்காமல் கூறிவிட்டு அவனை விட்டு தள்ளி நின்று கொண்டாள்.

“எதுக்கெடுத்தாலும் அழுதுட வேண்டியது…..”என்று சிவா முணுமுணுப்பது அவளின் காதுகளில் நன்றாக விழ இன்னுமே அழுகையில் உதடு துடித்தது.அந்த நேரம் அவர்களின் பேருந்தும் வர இருவரும் ஏறிக் கொண்டனர்.அமிர்தா பிடிவாதமாக அவனை பார்ப்பதை தவிர்த்தாள் அவனோ எதையும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை எப்போதும் போல் தான் இருந்தான்.ஆனால் முகம் ஏதோ யோசனையில் இருந்தது.அவனது நிறுத்தம் வந்ததும் அவன் இறங்கிவிட அமிர்தா பார்க்காததை போல் பார்த்தவள் உள்ளம் மேலும் குமுறியது,

“கொஞ்சமாச்சும் மனசு இறங்குறானா பாரு கல் நெஞ்சக்காரன்….கடுவான் கடுவான் சரியான கடுவான்….சரிதான் போடா…..”என்று தன் வாயிற்கு வந்தபடி திட்டிக் கொண்டிருக்க,

“என்னை திட்டி முடிச்சிட்டியா……”என்று அவளின் பின்னால் கரடுமுரடான குரல் கேட்கவும் அதிர்ந்து அவள் திரும்ப,

“நீங்க….”என்று அவள் தடுமாற,

“திரும்பவும் ஏறினேன்….அதை நீ பார்க்கல….”என்று முடித்து வைக்க,

“அப்போ நான் பார்த்தை இவர் பார்த்தாரா…..”என்று நினைத்தவள் அமைதியாக அமர்ந்திருக்க அவளின் பின்புற இருக்கையில் அமர்ந்தவன்.

“வர ஞாயிறு….பத்து மணிக்கு கோவில் பக்கத்துல இருக்குற பார்குக்கு புக்கோட வா….”என்று கூற,அமிர்தாவின் முகம் பூவாய் மலர்ந்து மீண்டும் கூம்பியது அதைக் கண்டவன்,

“என்ன….”என்று கேட்க,

“இல்ல வேணாம் உங்களுக்கு எதுக்கு சிரமம்…..நான்….”என்று ஏதோ பேச வந்தவளை தடுத்து நிறுத்தியவன்,

“என்னால முடியலனா முடியாதுனு தான் நான் சொல்ல முடியும்….உனக்கு பால்ஸ் கோப் கொடுக்க முடியாது….”என்று கூற அமிர்தா முழிப்பதைக் கண்டு,

“ஊப்ஸ்…..நீ ஞாயித்துகிழமை வா….இப்ப உன் ஸ்டாப் வந்திருச்சு இறங்கு….”என்று கூறிவிட்டு அவனும் எழ,அமிர்தாவும் அவனின் பின்னே வேகமாக எழுந்தவள்,

“நிஜமா தான் சொல்லுரீங்களா…..”என்று கேட்டுக் கொண்டே இறங்க,

“ஏன் பொய் சொல்லனும்….சரி கிளம்புறேன்….பார்த்து போ…..”என்றுவிட்டு அவன் தன் வழி நோக்கி திரும்ப,

“உங்களுக்கு நான் இங்க தான் இருக்கேன்னு எப்படி தெரியும்….”என்று அமிர்தா கேட்க,திரும்பி அவளை பார்த்து அழகாக புன்னகைத்தவன் எதுவும் கூறாமல் சென்றுவிட.அமிர்தா தான் அவன் புன்னகையில் கட்டுண்டு நின்றிருந்தாள்.

“அட கடுவானுக்கு சிரிக்கக் கூட தெரியுமா….”என்று நினைத்தவள் அவனுக்கு எப்படி தான் இருக்கும் இடம் தெரியும் என்பதை யோசிக்க,

“மாமி சொல்லியிருப்பாங்க…..நான் தான் கேட்டு பல்பு வாங்கிட்டேன் போல….அதான் கடுவான் சிரிச்சிக்கிட்டே போகுது….”என்று நினைத்தபடியே தனது விடுதி வந்து சேர்ந்தாள்.அந்த வார ஞாயிறு அவன் கூறியது போல் பார்க்கிற்கு வந்தவள் அவனை தேட,

“அமிர்தா….”என்ற அழுத்தமான அழைப்பில் திரும்ப,அன்று கண்ட மரத்தின் கீழ் இருந்த கல் மேடையில் அமர்ந்திருந்தான்.

“நீங்க முன்னாடியே வந்துட்டீங்களா….”என்று கேட்டுக் கொண்டே அவனிடம் வர,

“ம்ம்….உன்னோட புக்குல அஞ்சாவது பக்கத்தை எடு….”என்று கூறிக் கொண்டே அவன் ஏதோ எழுதிக் கொண்டிருக்க,அமிர்தா அவன் கூறிய பக்கத்தை எடுத்துவிட்டு அமைதியாக இருந்தாள். 

“எடுத்திட்டியா….”

“ம்ம் எடுத்துட்டேன்….”

“அதுல இருக்குற கணக்கு எல்லாத்தையும் பாரு….”

“நான் நேத்தே பார்த்துட்டேன் ஆனா எனக்கு சுத்தமா புரியலை….”என்று அமிர்தா வேகமாக கூற,தன் புத்தகத்தில் இருந்து முகத்தை நிமிர்த்தியவன்,

“அமிர்தா….புக்கை கீழ வச்சிட்டு இரண்டு நிமிஷம் கண்ணை மூடு….”என்று கூற,அமிர்தா என்ன கூறுகிறான் இவன் என்று முழித்துக் கொண்டிருக்க,

“உன்னை முழிக்க சொல்லல கண்ணை மூட சொன்னேன்….”

“எதுக்கு….”

“முதல்ல சொன்னதை செய்…அப்புறம் சொல்லுறேன்….”என்று அவன் அழுத்தமாக கூற,அமிர்தாவும் அதற்கு மேல் வாதம் புரியாமல் அவன் சொன்னபடி செய்தாள்.

“இப்ப உன் மனசுல எதையும் யோசிக்காம மனசை அமைதி படுத்த முயற்சி பண்ணு…”என்று கூற அவளும் அவன் கூறுவது போல செய்ய முயன்று ஒருவாரு வெற்றியும் கண்டாள்.

“என்ன அமைதி படுத்திட்டியா….இப்ப கொஞ்சம் கொஞ்சமா நீ படிச்சது எல்லாம் நியாபகபடுத்தி பாரு….அவசரம் வேண்டாம் நிதானமா யோசி…..”என்று கூற அமிர்தாவின் நினைவுகள் அவளின் பள்ளி காலத்திற்கு சென்றது.சிவா கூறியது போல கொஞ்சம் கொஞ்சமாக அவள் படித்தவை சில நியாபகத்திற்கு வர,

“இப்ப கண்ணை திற….”என்று கூறியவுடன் அமிர்தா கண்களை திறந்தாள்.

“உன் புக்கை திறந்து நான் சொன்ன பக்கத்தை எடுத்து பாரு….”என்று கூற அமிர்தா தன் புத்தகத்தை திறந்து பார்க்க நேற்று தெரியாமல் இருந்தவை இப்போது கொஞ்சம் தெரிய தொடங்கியது.அதில் தெரியாத சிலவற்றை அவள் அவனிடம் கேட்க அவனும் பொறுமையாக அவளிற்கு சொல்லிக் கொடுத்தான்.

“இப்ப புரிஞ்சிதா….”

“ம்ம்…..நீங்க சொல்லிக் கொடுத்தால தான்….இல்லனா எனக்கு எதுவும் தெரிஞ்சிருக்காது…”

“இங்க பாரு…..நீ முதல்ல டென்ஷன் ஆகாம இரு….அப்ப தான் படிக்கிறது புரியும்…அதோட இந்த மாதிரி எக்‌ஸாமுக்கு படிக்கிறதுக்கு எல்லாம் நிறைய பொறுமை தேவை….பொறுமை இல்லனா இதுல சக்ஸஸ் ஆக முடியாது….அதனால ஒழுங்கா படி….ஒரு விஷயம் நமக்கு தெரியலனா உடனே நாம பயந்து உட்கார்ந்துட கூடாது…அந்த விஷயத்தை நாம தெரிஞ்சிக்குற வரைக்கும் முயற்சி செஞ்சிக்கிட்டே இருக்கனும்…அப்ப தான் ஜெயிக்க முடியும்….”என்றவன் மேலும் சில கணக்குகளை சொல்லிக்கொடுத்தான்.

“இன்னைக்கு அவ்வளவு தான் நீ கிளம்பு….”என்று கூறிவிட்டு அவன் அவனின் புத்தகத்தை பார்க்க தொடங்க,அமிர்தா போகாமல் அவனையே பார்த்தபடி நின்றாள்.அவள் நிற்பதைக் கண்டவன்,

“என்ன….”

“அது எனக்கு கொஞ்ச நாள் வரைக்கும் இந்த மாதிரி சொல்லித்தரீங்களா…..ப்ளீஸ் முடியாது மட்டும் சொல்லிடாதீங்க….எனக்கு உங்களைவிட்டா யாரும் இல்லை….”என்று கூற,

“என்ன சென்டிமெண்டா…..”என்று படு நக்கலாக கேட்க,அமிர்தாவிற்கு கோபம் எல்லை கடந்துவிட்டது.

“என்ன நீங்க எப்பாரு கிண்டல் பன்னிக்கிட்டே இருக்கீங்க….என்னை பார்த்தா எப்படி தெரியுது….உதவ யாரும் இல்லைனு தான் உங்க கிட்ட கேட்டேன்….இனி கேட்க மாட்டேன்….”

“இதை தான அன்னைக்கும் சொன்ன….”என்று கண்களை ஏத்தி இறக்கி கேட்க,அமிர்தாவிற்கு கோபம்,இயலாமையுடன் கூடிய அழுகை.தன் நிலையை இப்படி ஏளனம் செய்கிறானே என்று மற்றவர்களாக இருந்தால் எளிதாக கடந்து போயிருப்பாள் ஆனால் சொன்னது அவனாகிற்றே கடக்க முடியவில்லை தடுமாறி நின்றாள்.

“கிளம்பு….சும்மா கண்னை கசக்காத….”

“அப்ப நீங்க சொல்லி கொடுக்கமாட்டீங்க….”என்று மூக்கு விடைக்க அவள் கேட்க,

“ஏய் என்ன நீ மிரட்டுற….”எவ்வளவு முயன்றும் அவனின் முகத்தில் சிரிப்பு வந்துவிட்டது.

“அப்பா சிரிச்சிட்டீங்க……சரி அடுத்த வாரம் பார்க்கலாம்….”என்று விட்டு அவள் நகர,

“நான் சொல்லிக் கொடுக்குறேன்னு சொல்லவேயில்லை….”என்று போகும் அவளை பார்த்து அவன் கத்த,

“சரி சரி அடுத்தவாரம் நாம சண்டையை கண்டினியூ பண்ணுவோம்…..வரேன் பை….”என்று நடந்தபடியே கூறிக்கொண்டு அவள் சென்றுவிட சிவாவின் முகத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னாக அகமகிழ்ந்த ஒரு புன்னகை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!