Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை அச்சம் நாணம்

ஆசை அச்சம் நாணம் 3.1

அத்தியாயம் 3

“அப்படியே விடாம என்னம்மா பண்ண சொல்ற?” என்றான் கடுப்பாக.

பிரபாவதி கெஞ்சலாய் கணவனைப் பார்க்க, “போன்ல கூட காண்டாக்ட் பண்ணிடக் கூடாதேனுதான் ரொம்ப தெளிவா யோசிச்சு போனை வச்சிட்டுப்போயிருக்கா. இவளை எப்படி தேட? எதுக்கு தேடனும்?” என்றான்.

“அப்போ என்னதாண்டா பண்றது?” என்ற அன்னையை தீயாய் முறைத்தவன், “சரி கிளம்பு… வீடு வீடா போய் என் பிள்ளை யாரோட ஓடிப்போனானு உங்களுக்கு தெரியுமானு கேளு” என்றான் அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு.



Advertisement

கோபத்தில் சிவந்திருந்த மகனின் முகம் கண்டு, “பிரபா” என அதட்டினார் கோபாலன்.

பிரபாவதி வேதனையோடு கணவனைப் பார்க்க, “நம்ம பொண்ணு அவளுக்கு பிடிச்சவனோட போய்ட்டா. முதல்ல இந்த உண்மையை மனசுல ஏத்து பிரபா” என்றார் கட்டளையாக.

“அது புரியுதுங்க… ஆனாலும்” என்று வேதனையோடு கண்ணீர் விட, “ஆனா என்ன?” என அதட்டி, “பிடிச்சவன் போதும்னு போனதோட, நாம இனி அவளுக்கு தேவையில்லனும் முடிவு பண்ணி போயிருக்கா. அதனால இனி நமக்கும் அவ தேவையில்லை. வேதனைதான்னாலும் இனி இப்படித்தான்” என்றார் தானும் வேதனையோடு.

Advertisement

இங்கிருந்தால் காவ்யாவின் நினைவே வாட்டும் என, “அப்பா வீடு மாத்திக்கலாம், இன்னைக்கே எப்படியாவது வேற வீடு பார்த்துடறேன்” என்றான் விஷ்ணு.

Advertisement

“வேணாம்ப்பா, புது இடத்துக்கு போனா எத்தனை பிள்ளைங்கனு கேட்பாங்க, ஒரு மகன்தானு சொல்ல எனக்கு மனசு வராது. உண்மையை சொன்னா பொண்ணு எங்கனு கேட்பாங்க. உண்மை தெரிஞ்சா எங்கன்னாலும் கேவலமாத்தான் பார்ப்பாங்க. இங்கையே இருந்துக்கலாம்” என்றார் பிரபாவதி.

“சரி அப்போ கொஞ்ச நாள் இங்க இருந்திட்டு, நம்ம இடத்துலயே வீடு கட்டிட்டு போய்க்கலாம்” என்றான்.

“வீடு கட்ட ஏதுடா பணம்?” என பிரபாவதி கேட்க, “காவ்யாக்கு வாங்கி வச்ச நகையெல்லாம் வித்துடலாம். அவ கல்யாணத்துக்குனு பேங்க்ல போட்டுருந்த பணத்தையும் எடுத்துக்கலாம். பத்தாததுக்கு லோன் போட்டுக்கலாம். பெரிய பங்களா கட்டனும்னு அவசியமில்ல. நம்ம தகுதிக்கு ஏத்தமாதிரி வீடு கட்டிக்கலாம்”

Advertisement

“இப்போ வீடு கட்டுறதை யோசிக்கிற மனநிலையில நான் இல்ல விஷ்ணு, கொஞ்ச நாள் கழிச்சு பார்க்கலாம்” என்றார் கோபாலன்.

“இல்லப்பா… உடனே ஆரம்பிக்கனும். எங்க இருந்தாலும் நம்மளை வாட்ச் பண்ணிட்டுத்தான் இருப்பா. அவ இல்லைனு நாம உடைஞ்சி போனதா அவளுக்கு தெரியக்கூடாது. அவளை கண்டுக்காம இருக்கிறதுதான் நாம அவளுக்கு கொடுக்குற பெரிய பனிஷ்மண்ட்” என்றான் இறுகிய முகத்தோடு.

“இந்த ஒரு விசயத்துக்காக அவளை எதிரியா பாவிக்காத விஷ்ணு” என வேதனையோடு மன்றாடினார் பிரபாவதி.

“எதிரியை கூட மன்னிச்சுடலாம்மா. அவ எதிரி இல்ல. துரோகி” என்றவன் பார்வை சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தங்கை புகைப்படத்தில் பதிந்தது. அதனருகே பெல்ட்டும் மாற்றப்பட்டிருக்க, எங்கே மீண்டும் தன்னை அடித்துக்கொள்வானோ எனப்பதறி மகனருகே வந்து “கோபப்படாத விஷ்ணு, இப்படி வந்து உக்காரு” என்று கையைப் பிடித்து சோபாவில் அமர வைத்தார் பிரபாவதி.

“ம்மா நானென்ன சின்ன பையனா?” என முறைத்து, “சாப்பிட என்ன செய்த?” என்றான்.

“சாப்பிட” என்றவருக்கு பிறகுதான் சமைக்கவில்லை எனப்புரிய, “இதோ பத்து நிமிஷத்துல சமைச்சிடறேன்” என்று சமையலறை புகுந்தார்.

மணி பதினொன்று ஆகியிருக்க, “டிபன் வேணாம், சாப்பாடு செய்ம்மா” என்றான்.

“லேட் ஆகிடும்டா”

“பரவால்ல சாப்பாடே செய்” என்றான்.

காவ்யா வீட்டை விட்டு சென்ற வேதனையை விட, அவ்வேதனையிலிருந்து தாய் தந்தையை எப்படியாவது வெளிவர வைக்க வேண்டும் என்பதே விஷ்ணுவின் தற்போதைய எண்ணமாக இருந்தது.

மகளை சிறு வேலை கூட செய்ய விடாத அன்னையின் பாசமும், பி.ஹெச்.டி முடிக்க வைத்து சிறந்த பேராசிரியையாக வேண்டும் என்ற தந்தையின் கனவிற்கும் அர்த்தமில்லாமல் செய்ததோடு, அசிங்கப்படுத்தி சென்றிருக்கிறாள்.

உடன் பிறந்தவனாக தனது வலியை விட, சிறு வயதிலிருந்து பார்த்து பார்த்து கனவுகளோடு வளர்த்த பெற்றோரின் வலி மிகப்பெரியது என்றுணர்ந்திருந்தான்.

காவ்யா இல்லாமல் பெற்றோர் வாழப் பழக வேண்டும். எங்கிருந்தாலும் தங்களின் எதிர்வினையை நோட்டமிடுவாள் என்ற நம்பிக்கை இருக்கவே, அவளின் துரோகத்திற்கு பதிலளிக்க வேண்டும். அந்த பதில் அவளை வலிக்க செய்ய வேண்டும், என்று பல யோசனையில் அமர்ந்திருந்தான் விஷ்ணுவர்தன்.

அரைமணி நேரத்தில் சமைத்து முடித்த பிரபாவதி, அனைத்தும் எடுத்து டைனிங்டேபிள் மேல் வைத்து, “விஷ்ணு சாப்பிட வா” என்று மகனை அழைத்து, “ஏங்க டைம் ஆகுது வாங்க. மயக்கம் வந்திடப்போகுது” என்று கணவன் முன் நின்றார்.

கோபாலன் அமைதியாக அமர்ந்திருக்க, தந்தையருகே வந்தவன் “ப்பா வந்து சாப்பிடுங்க” என்றான் கனிவாக.

மகளின் செயலை மறக்க முடியாமல் தவித்த கோபாலனின் குரல் “விஷ்ணு” என்று காற்றோடு கரைய, தந்தையை உணர்ந்தவனாய் “ப்பா” என கை கொடுத்து எழுப்பி அணைத்துக்கொண்டான் ஆதரவாக.

மகனின் அணைப்பில் கோபாலனின் கண்கள் கலங்கவே, “அழாதிங்கப்பா, நானிருக்கேன்” என்றான் ஆதரவான குரலில்.

கோபாலனிடமிருந்து சத்தமில்லாமல் போக, “அப்பா” என்று விலக்கி முகம் பார்க்க, “எனக்கு இங்க என்னவோ பண்ணுது விஷ்ணு” என மார்பை தடவினார் கமறிய குரலில்.

“அப்பா என்னப்பா பண்ணுது?” எனப்பதறியவன், “ஒன்னுமில்ல, ஒன்னுமில்ல” என்று கார் சாவியை எடுக்கப்போக, கோபாலன் தளர்வாய் அமர்ந்துவிட்டார் நின்ற இடத்திலேயே.

“அப்பா” எனப்பதறியபடி தூக்கியவன் காருக்குள் கொண்டுபோனான். எங்கே மனைவி மகனை விட்டு சென்றிடுவோமா என்று கோபாலனுக்கும் பயம் வந்திருக்க, மகனுக்கு ஒப்புகொடுத்து காரில் அமர்ந்தார்.

“மேகல… வீட்டை பார்த்துக்கோ” என குரல் கொடுத்து கதவை கூட மூடாமல் கணவனோடு காரில் அமர்ந்தார் பிரபாவதி.

“பதறாத பிரபா, பெருசா ஒன்னுமிருக்காது, என் உயிர் உடம்பை விட்டு அவ்வளோ சீக்கிரம் போகாது. என் மகன் அதிகாரி ஆகுறதை பார்க்காம போக மாட்டேன்” என்றவருக்கு வலியிலும் வார்த்தை திடமாய் ஒலித்தது.

“அப்பா ரிலாக்ஸா இருங்க” என தேற்றிக்கொண்டே காரின் வேகத்தை கூட்டியவன், பத்து நிமிடத்தில் அருகிலிருந்த மருத்துவமணையில் நுழைந்தான்.

வலி தாள முடியவில்லைதான்… ஆனால் முடிந்தவரை காட்டிக்கொள்ளாமல் மார்பை தடவிக்கொண்டு, மகனின் கையைப் பிடித்தவாறு நடந்து வந்தார் கோபாலன். பிறகு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு முதலுதவிக்குப் பின்னே, இ.சி.ஜி, இரத்த மாதிரி, ஸ்கேன், ஆஞ்சியோகிராம் பரிசோதனை, என அனைத்து பரிசோதனைகளும் நடந்தது.

விழித்துக்கொண்டுதான் இருந்தார் கோபாலன். ஆனால் பேச திராணியில்லாமல் படுத்திருந்தார். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னே வலி சற்று மட்டுப்பட்டிருந்தது.

நேற்று வரை குடும்பத்தின் இளவரசியாக இருந்தவள் இன்று அனைத்தையும் துறந்து சென்றதை நினைத்து வேதனை கொள்வதா? அல்லது ஓடிப்போன தங்கை மீதான வேதனையை மறைத்து தனக்காக பார்க்கும் மகனை நினைத்து வேதனை கொள்வதா? மகளின் துரோகம் புரியாமல் எப்படியாவது மகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற தவிப்பிலிருக்கும் மனைவியை எப்படி தேற்றுவது என்ற வேதனையில் படுத்திருந்தார்.

மருத்துவர்கள் எதையும் யோசிக்காதீர்கள் என்கிறார்கள். மகனும் அதையேத்தான் சொல்கிறான். ஆனால் இருக்கத்தான் முடியவில்லை. இரண்டு மணி நேரம் வரை கோபாலன் அமைதியாகவே படுத்திருந்தார்.

ஆஞ்சியோ பிளாஸ்டி, பைப்பாஸ் அறுவைசிகிச்சை போன்ற அபாயம் இல்லை. ஆனால் இருதய வால்வில் சிறு அடைப்பு உள்ளது, மாத்திரை மூலமாக சரி செய்திடலாம் என்றிருந்தனர் மருத்துவர்கள்.

மருத்துவர் சொன்னதை கேட்டதிலிருந்து காவ்யாவின் துரோகம் கூட பின்னுக்கு போனது. தந்தை நினைவு மட்டுமே விஷ்ணுவிற்கு. என்ன செய்தால் தந்தை மனவலி குறையும் என யோசித்தான்.

காவ்யா மீதான கோபத்தையும் வெறுப்பையும் தள்ளி வைத்து, “அப்பா… காவ்யாவை தேடட்டுமா? அவளை பார்க்கனுமா உங்களுக்கு? பார்க்கனும்னா சொல்லுங்கப்பா, எங்கயிருந்தாலும் தேடி கூட்டிட்டு வரேன்” என்றான் தவிப்பாக.

“இ… இல்ல, இல்லப்பா… வேணாம். எனக்கு நீ போதும்” என்றார் தாமதியாமல்.

“எனக்காக யோசிக்காதிங்கப்பா, எனக்கு அவளை விட நீங்க முக்கியம். உங்களுக்காக எதையும் சகிப்பேன்” என்றான் மனதை திடப்படுத்தி.

கோபாலன் கண்கள் கலங்க, மகளின் செயலை ஏற்கவும் முடியாமல், தள்ளி வைக்கவும் முடியாமல் தவிக்கும் தந்தையைப் புரிந்தவனாய், “அப்பா இன்னும் இரண்டு நாள்ல காவ்யா உங்க முன்ன இருப்பா, அதுக்கு நான் பொறுப்பு. தைரியமா இருங்க” என்றான் தீர்க்கமாக.

“இல்லப்பா வேணாம், நாம வேணாம்னுதான போய்ட்டா?” என்றார் இவரும் திடமாக.

தங்கை மீதான வேதனையிலிருந்து தந்தையை சிறிதேனும் மாற்ற வேண்டும் என “அம்மா உங்களை பார்க்க தவிச்சிட்டிருக்காங்க. நீங்க நார்மலா பேசினாத்தான் உள்ள அழைச்சிட்டு வருவேன்” என்ற உண்மையை உரைத்தான் தன்மையாகவே.

“போய் அம்மாவை கூட்டிட்டு வா” என்றார்.

பிறகு அன்னையை அழைத்து வர, “நான் நல்லா இருக்கேன் பிரபா” என்றார் வரவழைத்த புன்னகையோடு.

மருத்துவமணைக்குள் வந்து இரண்டு மணிநேரம் ஆகிறது. இ.சி.ஜி பார்த்தபோதே பெரிதாய் பயந்திருந்தார் பிரபாவதி. அதன்பின்னே ஆஞ்சியோ பரிசோதனை முடிந்து, விஷ்ணுவிடம் மருத்துவர் கோபாலன் நிலையை சொன்னார்.

சற்று நேரம் கழித்து அன்னையை அழைத்து செல்லலாம் என, ‘ஒருத்தர் மட்டும்தான் பக்கத்துல இருக்கனும்னு டாக்டர் சொல்லியிருக்காங்கம்மா’ என்று சொல்லி, தான் மட்டும் தந்தையோடிருந்தான்.

ஒருமணிநேரம் கழித்து கணவனை காணவும் கலங்கிய கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டியது பிரபாவதிக்கு. “ப்ச் ம்மா” என விஷ்ணு அன்னையை அதட்ட, கண்களை துடைத்தாலும், “உங்க மக மட்டும்தானா உங்களுக்கு? நாங்க இல்லையா?” என்றார் ஆதங்கமாக.

“இனி நீயும் விஷ்ணுவும் மட்டும்தான் பிரபா” என்றார் மகள் மீதான வேதனை மறைத்து.

“ம்மா அப்பாக்கு சரியாகிடும். உன் அழுகையை நிறுத்து” என கட்டளையாக சொல்ல நினைத்து வேண்டுதலாகத்தான் முடித்தான் விஷ்ணு.

“எப்போ வீட்டுக்கு போலாம்?” என்றார் மகனிடம்.

“ஈவ்னிங் போலாம்ப்பா” என்றதும் அறைக்கதவு தட்டப்பட, விஷ்ணு கதவை திறந்தான்.

மேகலையும் விஷாலினியும் வந்திருந்தனர். மேகலையின் முகத்தில் வேதனை குடிகொண்டிருக்க, விஷாலினி கண்கள் கலங்கியிருந்தது.

“மாமா” என குரல் கமறினாள் கோபாலனின் காலில் உள்ள பிளாஸ்த்திரியை பார்த்தவாறு.

தந்தைக்கு இவளை பிடிக்குமே என்று ஏதும் சொல்லாமல் அமைதிகாத்தான் விஷ்ணு. “ஒன்னுமில்லடா, நல்லாயிருக்கேன். நீ எதுக்கு வந்த? சாயங்காலம் நானே வந்திருப்பேன்” என்றார் கனிவாக.

“டாக்டர் என்ன அத்த சொன்னாங்க?” என்றாள் பிரபாவதியிடம். பிரபாவதி விளக்கவே, கலங்கியிருந்த கண்கள் கண்ணீரை வெளியனுப்பியது. “ச்சு… அழக்கூடாது” என விஷ்ணு அதட்ட, புறங்கையால் தனது கண்ணீரை துடைத்தவள் உதடு பிதுங்கியது அழுகை தாளமுடியாமல்.

காலையில் உடுத்தியிருந்த சுடிதாரோடு, கொண்டையிட்டிருந்த நீண்ட கேசத்தை அவிழ்த்து வாராமல் அப்படியே பின்னலிட்டு வந்திருந்தாள் விஷாலினி.

பள்ளி இறுதியாண்டை முடித்திருந்த போதும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிபோல் உதடு பிதுக்கி அழுகையை அடக்க முயன்று கொண்டிருந்தவளை பார்த்தவனது மனம் கரையத்தான் செய்தது.

இத்தனை பாசமா தந்தை மீது? என வியந்தவனுக்கு தந்தை மீது இவளிற்கு இருக்கும் பாசம் கூட காவ்யாவிற்கு எப்படி இல்லாமல் போனது என்று விஷாலினையையே பார்த்திருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!