Skip to content
Post Views: 14,906
உன் சுவாசம் என் மூச்சில் 26.2
( இரண்டாம் நிறைவு பகுதி )
Advertisement
காலங்கள் செல்ல கண்ணாயிரம் பன்னிரண்டு வயதிலும் துளசி ஒன்பது வயதிலும் இருந்தனர். கதிரவனின் கோவம் குடும்பத்திற்குள் குறைந்தாலும் வெளியில் இன்னும் அதே கதிரவனாகத்தான் இருக்கிறான். எழில்விழியிடம் கோவத்தை குறைத்துள்ளானா அல்லது கோவப்படும்படி எழில்விழி நடந்துகொள்வது இல்லையோ தெரியவில்லை,
இப்பொழுது எல்லாம் பாதிக்கு பாதி பயம் இல்லாமல் சற்றே தைரியமாக பேச வருகிறது எழில்விழிக்கு. அது கணவன் பற்றிய புரிதலா அல்லது காலங்கள் கொடுத்த முதிர்ச்சியோ!!!….
ஆனால் குழந்தைகள் முன் இருவரும் சண்டை இடக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருக்க, கதிரவனோ எங்கே குழந்தைகள் முன் மனைவியை திட்டி அதனால் குழந்தைகள் எழில்விழியை மதிக்கவில்லை என்றால் என்ற கேள்வி மனதில் வர அதனால் கோவத்தை வீட்டில் குறைத்துக்கொண்டான் கதிரவன்.
Advertisement
ஆஹ குழந்தையின் முன் கூட தன் மனைவியை விட்டுத்தராதவன் இன்னும் காதலை மட்டும் உணரவில்லை. அதனால் அந்த காதலின் முன் தன் கர்வத்தையும் விடவில்லை.
Advertisement
கண்ணாயிரத்திற்கு தொண்டையில் கட்டி வளருவதால் அதனை அறுவை சிகிச்சை செய்து அதனை எடுக்க வேண்டும் என மருத்துவர் கூறிவிட, கண்ணாவுக்கு தொண்டை பகுதி வீக்கம் கொண்டு கழுத்தே சற்று வீக்கத்துடன் இறக்கத்துடன் இருக்க அதனை கண்டு எழில்விழி கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள்.
“ விழி இப்போ என்னத்துக்கு அழுற??…” என கதிரவன் கத்த,
வழக்கத்துக்கு மாறாக கதிரவன் கத்தவும் குழந்தைகள் சற்றே மிரட்சியுடன் அப்பாவை காண அதனை கண்டு மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டவன் பல்லை கடித்துக்கொண்டு எழில்விழியின் அருகில் சென்று,
Advertisement
“ விழி உன்னையதான் இப்போ என்ன ஆச்சுன்னு கண்ணீரை விட்டுகிட்டு இருக்க. கண்ணாவுக்கு ஆப்ரேஷன் செஞ்சா எல்லாம் சரி ஆகிடும்ன்னு டாக்டர் சொன்னாங்கல்ல. அப்புறம் என்ன??… ஆப்ரேஷன் செஞ்சுறலாம்” என அதையும் தன்மையாக சொல்லாது சற்றே அவனின் பாணியில் கதிரவன் கூற
அப்பொழுதும் கண்ணீர் சிந்தியவளை கண்டு கதிரவன் மேற்கொண்டு ஏதோ கூற வர அதற்குள் கண்ணா எழில்விழியின் அருகில் சென்று அமர்ந்து,
“ அம்மா அப்பா இருக்குறப்போ ஏன்மா கவலைபடுற. எந்த பிரச்சனை இருந்தாலும் அப்பா பார்த்துக்குவாங்க சும்மா அழுவாதமா ” என பேச சிரமப்பட்டுக்கொண்டே பேச எழில்விழியின் மறுபுறம் அமர்ந்த துளசி ,
“ அம்மா அப்பா ஒரு ஹீரோம்மா. அப்பா நினைச்சா எதுவும் செய்ய முடியும். அப்பாவுக்கு நீ அழுதா கோவம் வருது பாரு. அழுவாத ஆப்ரேஷன் தானே அது எல்லாம் ஒன்னும் இல்ல. அண்ணாவும் அப்பா மாதிரி ஸ்ட்ராங் பாய் அதனால அழுவாம போய் சாப்பாடு எடுத்துட்டு வாம்மா பசிக்குது ” என துளசி கூற
“ ஹ்ம்ம் ஆமா எனக்கு பசிக்குதும்மா ” என அதையும் சிரமபட்டு கண்ணாவும் சொல்ல
“ டேய்!!… நீ ஏண்டா பேசுற கஷ்டமா இருக்குல்ல. பேசாத அம்மா சாப்பாட்டை எடுத்துட்டு வரேன் ” என கூறி எழில்விழி அடுக்கலைக்குள் சென்றுவிட அவளை தொடர்ந்து துளசியும் அம்மா பின்னால் சென்றுவிட்டாள்.
கண்ணா யோசனையுடன் அமர்ந்திருந்த கதிரவன் அருகில் சென்றவன்,
“ அப்பா….” என மெதுவாக கூப்பிட
“ என்னப்பா??….” என கேட்டுக்கொண்டு மகனை மடியில் வைத்துக்கொண்டவன் தலையை வாஞ்சையாக தடவ
“ அப்பா ஆப்ரேஷன் பண்ணுனா வலிக்குமா??…” என பயத்துடன் கேட்க மகனின் கேள்வியில் கதிரவன் மனதில் ஒருவித இறுக்கத்துடன் வலி வர
“ ஆமா வலிக்கும் கண்ணா. அதுவும் ஆப்ரேஷன் முடிஞ்சவுடன் வலிக்கும். தொண்டை புண்ணாகிடும் அதனால வலிக்கும்” என கதிரவன் கூறிக்கொண்டிருக்கையில்
அடுக்களையில் இருந்து சாப்பாட்டுடன் வந்த எழில்விழி கதிரவன் கூறியதை கேட்டு,
‘ ஹம்ம்ஹும் பச்ச பிள்ளை பயத்துல கேட்குது இவரு வலிக்கும்ன்னு சொல்லி பயமுறுத்துறாரே’ என எண்ணிக்கொண்டு ஏதோ சொல்ல வர அதற்குள் கண்ணாவோ,
“ அப்பா ரொம்ப வலிக்குமோ??…” என மீண்டும் கண்களில் பயத்துடன் கேட்க
“ ஆமா கண்ணா. ஆனா அது தாங்ககூடிய வலியாதான் இருக்கும். உன்னால முடியும் எவ்வளவு பெரிய காயமும் கஷ்டமும் இருந்தாலும் சரி அதோட அளவு அதோட தாக்கம் எல்லாமே நம்ம மனசை பொறுத்ததுதான். ஒரு விஷயத்தை பெருசா நினைச்சா பெருசு சிறுசா நினைச்சா சிறுசு.
உனக்கு வர வலி உன்னால தாங்கமுடியும்ன்னு முதல்ல நினை அப்போதான் உன்னால வர வலிகளையும் காயத்தையும் தாங்க முடியும்” என கதிரவன் பொறுமையாக கூற கண்ணாவிற்கோ அதன் அர்த்தம் புரிந்ததோ இல்லையோ ஆனால் வலிக்கும் என்பது மட்டும் மனசில் பதிய,
“ அப்போ ரொம்ப வலிக்குமோ??….” என மீண்டும் கேட்க சிறு சிரிப்புடன் மகனின் கன்னத்தை கொஞ்சியவன்,
“ கண்ணா உனக்கு தெரியுமா அப்பா பாப்பா பிறந்தப்போ கமாண்டோ ட்ரைனிங்க்ல இருந்தேன். அப்போ கயிறு ஏறுறதுல கை ஸ்லிப் ஆனதுல கீழ விழுந்துட்டேன். கால் கிட்டத்தட்ட உடைஞ்ச மாதிரி ” என கதிரவன் கூறிக்கொண்டிருக்கையில் அங்கு வந்த துளசி,
“ அச்சச்சோ!!!…. அப்போ உங்களுக்கு ரொம்ப வலிச்சுருக்கும்லப்பா ” என கேட்க
“ ஹ்ம்ம் ஆமாடா ரொம்ப வலி. ஆனா அதை தாங்கிட்டு என்னால முடியும்ன்னு முயற்சி பண்ணுனதால என்னால திரும்ப நடக்க முடிஞ்சது வேலைக்கும் சேர முடிஞ்சது. அதனால வலி காயம் எல்லாம் நம்ம மனசுல தான் இருக்கும்.
சும்மா சும்மா உன்னால முடியுமா முடியாதான்னு யோசிக்காத. இந்த கதிரவன் மகனால எல்லாமே முடியும். இந்த ஜூஜூபி காயத்தையும் வலியையும் தாங்க முடியும். தூண் மாதிரி அப்பா கூடவே இருக்குறப்போ எதுக்கு என் மகனுக்கு பயம் வரணும் ” என மகனின் நெற்றியில் முத்தம் வைக்க,
சிறுவனுக்கோ அப்பா சொன்ன வார்த்தைகளின் தைரியத்தில் ஒற்றை முத்தம் குடுத்த தெளிவில் சிரிப்புடன் சாப்பிட செல்ல அமைதியாக பிள்ளைகளுக்கு சாப்பாட்டை குடுத்த எழில்விழி கதிரவனை சாப்பிட அழைக்க,
“ இல்ல விழி எனக்கு பசிக்கல. சாப்பாடு வேணாம் ” என கூறி பால்கனியில் அமர்ந்துகொள்ள எழில்விழியும் கதிரவனை வற்புறுத்தாது பிள்ளைகளை உறங்க வைத்தாள்.
பின் பால்கனியில் கால்களை நீட்டி அமர்ந்திருந்தவன் அருகில் அமர்ந்த எழில்விழி,
“ என்னங்க கண்ணா கேட்டப்போ எதுக்கு நீங்க அவனை பயமுறுத்துற மாதிரி வலிக்கும்ன்னு சொல்லிட்டு அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. அதுக்கு பிள்ளைக்கு வலிக்காதுன்னு சொல்லிருக்கலாம்ல ” என மெதுவாக கேட்க அவளை திரும்பி பார்த்தவன்,
“ நான் வலிக்காதுன்னு சொன்னா வலிக்காம இருக்க போதா விழி. நிச்சயம் தொண்டைல ஆப்ரேஷன் முடிஞ்சவுடன் அவனுக்கு புண்ணாகி வலி இருக்கும்ன்னு டாக்டரே சொல்லிட்டாரு. எதுக்கு நம்ம பையனுக்கு பொய்யான நம்பிக்கையை குடுக்கணும்.
அதுக்கு வலிகளையும் காயத்தையும் தாங்குற மன உறுதியை குடுக்கணும். அதான் நல்ல விஷயம் அத விட்டுட்டு சும்மா பொய்யான விஷயங்களை சொல்லி பொய்யான நம்பிக்கையை குடுத்து நம்ம மேல இருக்க நம்பிக்கையை குறைச்சுக்க கூடாது ” என கதிரவன் பேசிக்கொண்டிருக்கையில்,
எழில்விழி வழக்கம் போல,
‘ சத்தியமா உங்களுக்கு சப்ஸ்டுயூட் இல்லைங்க ’ என மனதில் எண்ணிக்கொண்டிருக்கையில்,
“ விழி!!….” என கதிரவன் சத்தமாக அழைக்க
“ ஹான்!!.. என்னங்க??…” என எழில்விழி கேட்க
“ எத்தனை தடவை கூப்பிடுறது. தூக்கம் வந்தா தூங்க போ….” என கதிரவன் கூற
“ இல்லங்க தூக்கம் வரல. நான் சும்மா யோசிச்சுகிட்டு இருந்தேன் ”
“ சும்மா யோசிக்குறதுக்கு எதையாவாது உபயோகமா யோசிக்கலாம்ல ” என கதிரவன் கேட்க,
அதற்கு என்ன பதில் கூறுவது என தெரியாது அமைதியாக தலையை ஆட்டிய மனைவியை கண்டவன்,
“ விழி உன்கிட்ட ஒன்னு கேட்கவா??…” என மெதுவாக தயக்கத்துடன் கேட்ட கணவனை கண்டு
“ என்னங்க??… என்கிட்ட என்ன தயக்கம் ” என கேட்ட எழில்விழியை கண்டவன்
“ இல்ல ஆப்ரேஷன் பண்ண காசு வேணும். பர்சனல் லோன் போடமுடியாது. அம்மா அப்பா விவசாயத்துக்கு கேட்டாங்கன்னு பர்சனல் லோன் போட்டு குடுத்தேன். அப்புறம் GPF லோன் ஆறு மாசம் ஒருக்க தான் போட முடியும். இப்போ GPF லோன் போட்டு நாலு மாசம் தான் ஆகுது. அதான் உன் நகையை தந்தா இன்னும் ரெண்டு மாசத்துல லோன் போட்டு திருப்பி கொடுத்துடுவேன் ” என கதிரவன் கூற
“ என்னங்க எதுக்கு இதுக்கு இவ்வளவு தயங்குறீங்க. நகையை தாடின்னு கேட்டா தர போறேன். அதோட எங்க அப்பாவோட இதய அறுவை சிகிச்சைக்குத்தான் அந்த GPF லோன் போட்டு குடுத்திங்க. அப்போ மட்டும் போடாம இருந்துருந்தா…..” என எழில்விழி பேசிக்கொண்டிருக்கையில்
“ என்ன சொல்லவற. அப்போ லோன் போடாம இருந்திருந்தா உன் நகையை கேட்டிருக்க மாட்டேன்னு சொல்றியா…”
“ ஐயோ!!.. இல்லைங்க..” என எழில்விழி பதற
“ அப்போ எதுக்கு உங்க அப்பாவுக்கு கொடுத்ததை பத்தி பேசுற….” என கேட்டவனிடம்
“ இல்லங்க அப்படி எங்க அப்பாவுக்கு உதவாம இருந்திருந்தா இன்னைக்கு பணத்தை பத்தி ரொம்ப கவலை பட்டிருக்க மாட்டீங்கல்ல ” என எழில்விழி கூற
“ ம்ப்ச்… நீ என்ன லூசா விழி??… உங்க அப்பாவுக்கு நாம செய்ய கடமை பட்டுருக்கோம். உனக்கு கிடைச்ச வேலைக்கு உன்னைய நான் அனுப்பிருந்தா நிச்சயம் உங்க அப்பாவுக்கு நீயே பணத்தை குடுத்துறப்ப.
நான் சொன்னேன்னு தான் வேலைக்கு போகாம வீட்டை பார்த்துக்குற. அப்போ உன்னோட கடமையையும் சேர்த்து நான் தானே பார்த்துக்கணும் ” என கதிரவன் கேட்க
கணவனின் பதிலில் எழில்விழி காதல் மனது மீண்டும் கதிரவனின் மீது பித்து கொண்டது.
எழில்விழி கண்வனிடம்,
“ என்னங்க அடுத்த மாசம் ட்ரான்ஸ்பெர் வரும்ன்னு சொன்னிங்க. அப்போ ஸ்கூல் வேற மாத்தணுமேங்க” என மெதுவாக எழில்விழி கூற
“ ஹ்ம்ம் ஆமா விழி முதல்ல தம்பிக்கு ஆப்ரேஷன் முடியட்டும். மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம் விழி” என கதிரவன் கூறினான்.
பின் நகையை வைத்து பணத்தை பெற்றவன் கண்ணாயிரத்திற்கு ஆப்ரேஷனும் வெற்றிகரமாக முடிந்தது. ஆனால் அன்றுதான் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வர பார்க்க அதனையும் உள்ளிழுத்துக்கொண்டான் கர்வம் கொண்ட கதிரவன்.
அதனை கண்ட எழில்விழியோ அவன் மகன் மீது வைத்திருக்கும் பாசத்தில் இன்னும் இன்னும் அவனை காதலிக்க ஆரம்பித்தாள்.
ஆப்ரேஷன் முடிந்து கண்ணாயிரமும் தெளிவாகி வந்த பிறகு கையில் இருக்கும் மீதி பணத்தில் புதுப்பட்டி என்ற ஊருக்கு ட்ரான்ஸ்ப்ர் வந்ததால் அங்கு குடிபெயர்ந்தனர். அது காவலர் குடியிருப்பு என்பதால் வாடகையும் குறைவுதான். அதில் கதிரவனுக்கு சற்றே நிம்மதி.
அன்று இரவு எழில்விழி கதிரவனிடம்,
“ என்னங்க இன்னும் ஒரு வாரத்துல ஸ்கூல் இருக்கு. எங்க சேர்க்கணும்ன்னு முடிவு பண்ணிட்டிங்களா??…” என கேட்க
“ ஹ்ம்ம் இல்ல விழி. எந்த இங்கிலிஷ் மீடியம்ல சேர்த்தாலும் கொள்ள காசு கேட்குறாங்க. இப்போதைக்கு ரெண்டு பிள்ளைகளுக்கும் நம்மால பீஸ் கட்ட முடியாதே. என்ன செய்யலாம்ன்னு யோசிக்குறேன் ” என யோசனையுடன் கதிரவன் கூற எழில்விழியோ
“ என்னங்க நாம எங்கையாவது கடன்….” என பேசிக்கொண்டிருக்கயிலையே
“ கடனா!!… ஏய்!!… விழி கடன் தீ பகை இது மூணுமே ஒரு மனுஷனை குடும்பத்தை மொத்தமா அழிச்சுடும். கடன் வாங்கி என் பிள்ளைங்க படிக்குறதுக்கு ஒரு வருஷம் விட்டு அடுத்த வருஷம் கூட படிக்கட்டும் ” என பேசிக்கொண்டிருக்கையில் கண்ணாயிரம்,
“ அப்பா ” என அழைக்க
“ என்ன கண்ணா??…” என கதிரவன் கேட்க
“ இல்ல நான் தமிழ் மீடியம் சேர்ந்துக்குறேன்ப்பா. என்னால பிக்கப் பண்ண முடியும்பா ” என கூற ஒரு ரெண்டு நிமிடம் யோசித்த கதிரவனும் கண்ணாயிரத்தின் அறிவிலும் இன்றைய பொருளாதார நிலையிலும் இதுவே சரியான முடிவு என முடிவு செய்து,
“ சரி கண்ணா உன்னைய தமிழ் மீடியத்துல அந்த ஸ்கூல்ல சேர்க்குறேன் ” என கதிரவன் கூற அதனை கண்டு,
“ என்னங்க நீங்க…..” என எதோ பேசவருகையில் விழி
“ இங்க பாரு நம்மால என்ன முடியுமோ அதை பிள்ளைகளுக்கு குடுக்கலாம். அதுல பிள்ளைங்க முடிஞ்சா தேறிவரட்டும். அது அவுங்க திறமை பொறுத்தது. அறிவாளிக்கு சொத்து தேவை இல்ல. முட்டாளுக்கு சொத்தை தேடி வச்சு பிரயோஜனம் இல்ல” என பேசிக்கொண்டிருக்கையில்
அங்கு வந்த அவர்களின் மகள் துளசி,
“ அப்பா நானும் அண்ணே படிக்குற ஸ்கூல்ல படிக்குறேன்ப்பா ” என கூற
“ இல்லத்தா அண்ணே ஒரு ஏழுவரைக்கும் இங்லிஷ் மீடியம்ல படிச்சான். நீயும் ஒரு ரெண்டு வருஷம் படி அப்புறம் அண்ணா ஸ்கூல்ல சேர்த்துவிடுறேன் ” என கதிரவன் கூற
“ அப்பா அண்ணா ஸ்கூல்ல சேர்த்துவிடுறிங்களான்னு கேட்கல சேருறேன்னு சொல்றேன். இல்லைனா நான் பள்ளிக்கூடத்துக்கு போல ” என கூறிவிட்டு துளசி நகர,
அவளின் பேச்சை கேட்ட எழில்விழி நமட்டு சிரிப்புடன் கதிரவனை காண,
‘ என்னைய மாதிரி ஒரு பிள்ளையை பெத்து வச்சு பழிவாங்குற ’ என கண்களால் செல்லமாக கதிரவன் முறைத்தான்.
பின் குழந்தைகள் இருவரையும் ஒரே பள்ளியில் சேர்த்து ஆறு மாதம் கடந்த நிலையில் ஒரு நாள் வீட்டிற்குள் பரபரப்பாக வந்த கதிரவன்,
“ விழி!!… விழி!!…” என அழைத்துக்கொண்டு வர எழில்விழியும்,
“ என்னங்க??…” என கேட்க
“ விழி இந்தா இந்த பையை பாரு ” என கூறி ஒரு பையை நீட்ட அதனை வாங்கி பார்த்தவள் அதில் அடமானம் வைத்த நகைகள் இருந்தது. அதனை கண்டு,
“ என்னங்க நகையை மீட்டுட்டீங்களா??…” என எழில்விழி கேட்க
“ ஹ்ம்ம் GPF லோன் போட்டுட்டேன் ” என கூறி தனது பாக்கெட்டில் இருந்து ஒரு சிறு நகை பெட்டியை குடுக்க அதனை வாங்கி திறந்து பார்க்க அதில் அழகிய புது மாடல் நெக்லெஸ் இருக்க அதனை கண்டு,
“ ஏதுங்க புதுசா இருக்கு பாப்பாவுக்கு வாங்குனீங்களா??…” என கேட்டவளிடம்
“ ஏன் உனக்கு எல்லாம் வாங்க மாட்டேனா??… உன் மகளுக்கு மட்டும் தான் வாங்குவேனா??… உனக்கு எல்லாம் வாங்க மாட்டேன்னு நினைச்சுட்டியா??…” என கதிரவன் எகுற அதில் ஒரு நிமிடம் விழித்தவள்,
“ இல்லங்க கல்யாணம் ஆகி இந்த பதிமூணு வருசத்துல ஒரு நாளும் நகை வாங்கி குடுத்தது இல்ல. இப்போ புதுசா வாங்கி கொடுத்தவுடன் அதிர்ச்சியாகிடுச்சு ” என எழில்விழி தனது மெல்லிய குரலில் பரபரப்புடன் கூற,
அவளை கூர்ந்து பார்த்தவன் மெதுவாக அவளை நெருங்கி,
“ இதுவரைக்கும் நீ பேரழகியா என் கண்ணுக்கு தெரிஞ்ச. அதனால உனக்கு நகை வாங்கிக் குடுக்கணும்ன்னு எனக்கு தோணவே இல்ல. நீயும் கேட்கவே இல்ல ” என கதிரவன் பேசிக்கொண்டிருக்கையில் அவனை மேற்கொண்டு பேசவிடாது,
“ அப்போ இப்போ அழகா இல்லையா??…” என சிறு பிள்ளையாக முகத்தை வைத்து கொண்ட மனையாளை மேலும் நெருங்கி ஒற்றை கையால் அணைத்தவன்,
“ ஹ்ம்ம் நீ எப்பொழுதும் எனக்கு அழகுதான் அவசரகுடுக்கை. ஆனா நகை எல்லாம் அடமானம் வச்சவுடனே உன்கிட்ட ஒரு வித்தியாசம் தெரிஞ்சுச்சு. அப்பையும் அழகிதான் நீ. இருந்தாலும் இத்தனை வருஷம் நகையோட பார்த்துட்டு திடீர்ன்னு வித்தியாசம் தெரியவும் எனக்கு ஒரு மாதிரி குற்றவுணர்ச்சியா கையலாதனமா உன்கிட்ட நகையை வாங்கிட்டோமேன்னு என் மேல எனக்கு ஒரு கோவம்.
அதான் இப்போ நகை வாங்கி குடுத்துருக்கேன்ல இனி அவசரமான தேவைன்னா உன்கிட்ட நகையை தைரியமா வாங்கிக்குவேன். அதுவும் நான் வாங்கிகொடுத்ததை ” என கூறி அவளை பார்க்க,
சத்தியமாக கதிரவனின் பேச்சு எழில்விழிக்கு புரியவில்லை. கணவன் அவளுக்காக வாங்கிக் குடுத்திருக்கானா அல்லது அவனின் தன்மானத்திற்காக வாங்கிக்குடுத்திருக்கானா என புரியாது,
“ என்னங்க நான் ஒன்னு கேட்கவா எனக்கு குழப்பமா இருக்கு ” என கேட்டவளை கண்டு வந்த சிரிப்பை மறைத்துக்கொண்டு
“ ஹ்ம்ம் கேளு விழி ” என கதிரவன் கூற
“ இல்ல இந்த நகை எனக்காகவா இல்ல நீங்க அவசரத்துக்கு எங்க அப்பா அம்மா போட்ட நகையை அடமானம் வைக்க சங்கடப்பட்டுறதுக்கு பதிலா நீங்க வாங்குனதுன்னா தைரியமா வைக்கலாமேன்னு வாங்கி குடுத்திருக்கிங்களா??..” என கேட்டவளின் நெற்றில் முத்தம் வைத்தவன்
“ ஹ்ம்ம் ரெண்டும்தான் ” என கூறி கதிரவன் நகர்ந்துவிட கதிரவனின் பதில் எழில்விழி மனதில் ஏமாற்றத்தையும் வலியையும் குடுத்தது.
“ ம்ப்ச் சும்மாவாது உனக்காகன்னு சொல்லிருக்கலாம்ல பெருசா உண்மை விளம்பி வேற இவரு. ஹ்ம்ம் என்ன செய்ய நீ வாங்குன வரம் அப்படி ” என வாய்விட்டு புலம்பியவளை பின்னிருந்து அணைத்தவன்.
“ அடியே பொண்டாட்டி. நான் எதுக்கு உன்கிட்ட பொய் சொல்லணும். இது என்ன சினிமாவா இல்ல நீ வேற யாரோவா உன்னைய சந்தோஷப்படுத்த பொய் சொல்றதுக்கு ” என கதிரவன் கேட்க
“ இல்ல அப்பிடி சொன்னா என் மனசு கொஞ்சம் சந்தோசப்பட்டுருக்கும்ல.”
“ எதுக்கு அந்த போலியான சந்தோசம் நான் உன்கிட்ட நானா இருந்தாதான் நம்மளோட புரிதல் வாழ்க்கைக்கும் தொடரும். விழி நீ என்ன இன்னும் கல்யாண ஆன புதுசுல இருக்குற மாதிரியே இருக்குற.
நானே என்னோட கோவத்தை கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கிட்டு வரேன். இதுல நீ இன்னும் என் மனசு வலிக்குது கஷ்டமா இருக்கும்ன்னு அதே மாதிரி இருக்க எப்போதான் வளருவியோ போ” என அவளின் தலையை ஆட்டிவிட்டு சென்றுவிட
“ ஏதே!!… நான் வளரணுமா??… நிஜமா நான் தான் அதிகம் எதிர்பார்க்குறேனா இல்ல இவரு இப்படி இருக்காரா. ஐயோ!!…. ஐயோ!!.. சொக்கா இத நான் யாருகிட்ட கேட்க முடியும்” என புலம்பலுடன் தனது வேலையை காண சென்றுவிட்டாள்.
ஆனால் முன்ன மாதிரி எழில்விழி அதிகம் மனதில் எதையும் ஏற்றிக்கொள்வதும் இல்லை மன கவலையும் படுவதில்லை. கதிரவன் கூறியது போல கொஞ்சம் கொஞ்சமாக அவனை பற்றி அவள் அறியாமல் அவளின் மனதில் பதியவைத்துவிட்டதால் இப்பொழுது எல்லாம் அதிகம் ஏமாற்றமும் இல்லை வலியும் கொள்வதில்லை எழில்விழி.
சுருங்க சொன்னால் அதுவே பழகிடுச்சு எழில்விழிக்கு.
உலகத்தில் வேகமானது காலம். அது யாருக்காகவும் நிற்காது வேகமாக செல்ல சில வருடங்கள் ஓடியது
துளசிக்கு இருபத்தி இரண்டு வயது. அவளிற்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டிருக்கின்றனர் கதிரவன் எழில்விழி. கண்ணாவும் துளசியும் என்ஜினீயரிங் முடித்திருக்க கண்ணா தனியார் கம்பெனியில் வேலையில் இருக்க துளசியோ அரசாங்க வேலைக்கு படித்துக்கொண்டிருக்கிறாள்.
ஒரு நாள் எழில்விழி துளசியை அருகில் அழைத்து அருகில் அமர வைக்க,
“ என்னம்மா??…” என கேட்டுக்கொண்டு துளசியும் எழில்விழி அருகில் அமர
“ துளசிமா என்ன மாதிரி மாப்பிள்ளை உனக்கு பார்க்கட்டும்?… உனக்கு ஏதும் எதிர்பார்ப்பு இருக்காடா??…” என எழில்விழி மகளிடம் கேட்க
“ ஹ்ம்ம் அப்பிடி எல்லா ஒன்னும் இல்லமா. உனக்கும் அப்பாவுக்கும் தெரியாததா. ஆனா அப்பா மாதிரி பார்த்துடாதீங்க ” என துளசி கூற
அதில் முகம் சுருங்க,
“ ஏண்டி??…” என எழில்விழி கேட்க
“ அம்மா ஏன் இப்போ அப்பா பத்தி சொன்னவுடனே மூஞ்சிய பொரில மாட்டுன மூன்ஞ்சில் மாதிரி வச்சுக்குற ” என துளசி கேட்க
“ பின்ன என்னடி உங்க அப்பாவுக்கு என்ன குறைச்சல் ” என எழில்விழி கேட்க
“ நான் எப்போ அப்பாவை குறைச்சு சொன்னே. என்னோட அப்பா பெஸ்ட் அப்பா. என்னோட ஹீரோ. என்னோட அப்பாவுக்காக நான் என்னவேனா செய்வேன். நாளைக்கு கல்யாணம் ஆனாலும் என் அப்பாதான் எனக்கு ஹீரோ ஆனா ஹஸ்பண்ட் ரோல்க்கு எல்லாம் இவ்வளவு ஆணாதிக்கத்தோட இருந்தா வாழ்க்கைக்கு செட்டாகாதும்மா.
உன்னைய மாதிரி பொறுமை எல்லாம் எனக்கு இல்ல. நீ எப்படியோ சமாளிச்சுருக்க போ. பெரிய ஆளுதான் ” என துளசி கூற
“ ஏண்டி அப்போ அப்போ சும்மா ஏதோ பேச்சுவாக்குல உங்க அப்பா பத்தி சொன்னதை வச்சு நீ எப்பிடி அவரு நல்ல கணவன் இல்லைன்னு சொல்லுற ”
“ வேற என்ன சொல்லம்மா. நீ இப்போ அப்பா செஞ்சது எல்லா நியாயம்ன்னு சொல்லுறியா??… சும்மா பேரு சொல்ல கூடாது ஷேர்ல உட்காரகூடாது பிறந்தவீட்டுக்கு போககூடாது பைய தூக்கமாட்டாரு.
அப்புறம் என்ன உடம்பு முடியலைன்னா நடிப்பு சாப்பாட்டுல காரம் கூட போனா கொல்ல பார்க்குறேன்னு சொல்லுறது. உன்னைய பேசவே விடறது இல்ல. இதுல கிடைச்ச வேலைக்கு அனுப்பல. நானா இருந்தா…..” என துளசி பேசிக்கொண்டிருக்கையில்
“ ஹ்ம்ம் நீயா இருந்தா பெண் சுதந்திரம்ன்னு பெண்ணாதிக்கமா பேசி குடும்ப வாழ்க்கைக்கு செட்டாகாம வாழ முடியாம வந்துருப்ப ”
“ பின்ன இல்லையா??… அப்படி என்ன நான் சகிச்சுக்கணும். எனக்கு என்ன தலை எழுத்தா?…. என்னோட சுயத்தை தொலைக்கணும்ன்னு ” என துளசி கேட்க
“ உன்னைய மாதிரி நானும் சும்மா ஒன்னும் இல்லாததுக்கு பெண் சுதந்திரம்ன்னு பேசி இருந்தா நிச்சயம் அந்த சுதந்திரமே எனக்கு பாதுகாப்பு குடுத்துருக்காது ” என எழில்விழி கூற
அவளின் பேச்சு புரியாது துளசி தன் தாயை குழப்பத்துடன் பார்க்க எழில்விழியோ,
“ துளசி என்னோட குடும்பம் ஒன்னும் ரொம்ப பெருசா வசதியோ சொந்தமோ அதிகம் இல்ல. ஏன் என் அப்பா அம்மா கூட வயசு அதிகமானவங்க. அப்படி இருக்குறப்போ வெறும் பள்ளி படிப்பை மட்டும் முடிச்ச நான் எதை வச்சு நீ சொல்றமாதிரி வீறுகொண்டு எழ முடியும். எப்போதும் வேகத்தைவிட விவேகம் ரொம்ப தேவை. (fmtest.com) என்னால முடிஞ்ச ஒரே விஷயம் அன்பு செலுத்துறதுதான்.
அத மட்டும் தான் உன்னோட அப்பாகிட்ட பண்ணுனேன். படிப்பு பணம் தாங்கி பிடிக்க சொந்தம்ன்னு எதுவுமே இல்லாத எனக்கு அன்பும் பொறுமையும் தான் ஆயுதம். அதை நான் என் கைல எடுத்து என் வாழ்க்கையை தொடங்குனேன்.
இதுல உண்மையா சொல்லணும்ன்னா உங்க அப்பா சொன்ன விஷயங்கள் வேணும்ன்னா ரொம்ப கரடு முரடா இருக்கும். இதயத்துல சுருக்குன்னு வலிக்கும். ஆனா எதுவுமே தப்பான விஷயங்கள் கிடையாதே.
ஆமா பேரு சொல்லகூடாதுன்னு சொன்னாரு அது அவரு வளர்ந்த விதம். வேலைக்கு போக கூடாதுன்னு சொன்னாலும் எனக்கு ஒன்னும் வேலைக்கு போணும்ன்னு கட்டாயமில்லையே. நம்ம குடும்பத்துக்காகவும் என்னோட குழந்தைகளுக்காகவும் வேலைக்கு போக சொல்லல.
அதோட என் அப்பா இறந்து பத்து வருசமாச்சு இன்னும் எங்க அம்மாவுக்கு ஒரு மகனா மாசம் மாசம் பணம் அனுப்புறாங்களே. இதுக்கு பேரு என்ன உங்க அப்பாவுக்கு என் மேல அன்பு இல்லமலையா செய்வாரு. ஏன் கல்யாணம் ஆனதுல இருந்து இன்னவரைக்கும் வரவு செலவு நான்தானே பார்க்குறேன் செலவுக்கு கூட உங்க அப்பா என்கிட்டே வாங்கிட்டு போறாங்களே தவிர்த்து என்கிட்டே ஈகோ பார்கலையே துளசி.
அன்னைக்கு நான் விட்டுகுடுத்து போனதால இன்னைக்கு எனக்கு முடியலைன்னா துடிச்சு போறாங்க. ஏண்டி கீழ உட்கருற இடுப்பு வலிக்கும்ல ஷேர்ல உட்காருன்னு சொல்றாரு. அப்போ உங்க அப்பாவுக்கு என் மேல அன்பு இல்லையா இல்ல ஈகோ இருக்குன்னு நினைக்குறியா??…
சரி அதைவிடு இந்த இடம் என் பேருல வாங்கிருக்காங்க இந்த வீடு என் பேருல தான் கட்டிருக்காங்க. அப்போ அன்பு இல்லாமலா இவ்வளவையும் செஞ்சுருப்பாங்க ” என எழில்விழி கூற
“ சரி மா அன்பு எல்லாம் இருக்கு. ஆனா அந்த ஆண் என்ற அஹங்காரம் இருக்குல்ல அது உங்கள கஷ்டப்படுதல ”
“ ஹ்ம்ம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. அதான் சொன்னேன்ல அவரோட வார்த்தைகள் எனக்கு வலிச்சுச்சு. ஆனா அதனால உங்க அப்பா மேல வச்சிருக்க அன்பு குறையணுமா என்ன??… நீ என்ன திட்டிட்டா நான் இன்னைக்கு அன்பை குறைச்சுக்குறேன் நீ என்னைய பாராட்டிட அதனால உன் மேல எனக்கு அன்பு கூடிருச்சு ன்னு சொல்றதுக்கு அது என்ன பொருளா எடை போட்டு பார்க்க.
உன் அப்பா மேல எவ்வளவு அன்பு வச்சுருக்கேனா அதே அளவு அன்பை என் மேல அவரும் வச்சுருக்காங்க. என்ன அதை நான் புரிஞ்சுக்க கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டேன் அவ்வளவுதான். இதுல உங்க அப்பா தப்பு எங்க இருக்கு. நான் அப்போவே புரிஞ்சிருந்தா எனக்கு என்னோட கண்ணீராவுது மிச்சம் ஆகிருக்கும். இன்னொன்னு சொல்றேன் கேட்டுக்கோ ”
“ என்னம்மா?…”
“ நாம ராணியா இருக்குறதும் அடிமைக்கு மனைவியா இருக்குறதும் நம்ம கைல தான் இருக்கு. புருஷனை ராஜாவா நடத்துனா ராணி அடிமையா நடத்துனா அடிமையோட பொண்டாட்டி. அதோட உங்க அப்பா இதுவரைக்கும் உங்க அப்பத்தாகிட்ட கூட விட்டுகுடுத்தது இல்ல இதுக்கு மேல என்ன வேணும் ” என எழில்விழி
“ நீ அப்பாவை விட்டே கொடுக்காத” என துளசி சலித்துக்கொள்ள
“ எங்கையும் என்னை என் சுயமரியாதையை விட்டுகுடுக்காத என் புருஷனை நான் எதுக்குடி விட்டுகுடுக்கணும் ” என எழில்விழி
பேசிக்கொண்டிருக்கையில் அங்கு வந்த கதிரவன்,
“ விழி எனக்கு இன்னைக்கு நைட் ரவுண்டு சாப்பாடு ரெடி பண்ணு ” என கூற
எழில்விழியும் சரி என வேகமாக அடுக்கலைக்குள் நுழைய துளசி அருகில் வந்த கதிரவனோ சிறு சிரிப்புடன்,
“ ஆத்தா நல்லா போய்கிட்டு இருக்குற என் குடும்பத்துக்குள்ள என் பொண்டாட்டிய கிளப்பிவிட்டுறாத ” என கதிரவன் கூற
“ ஆமா அந்த கடவுளே வந்து சொன்னாலும் கணவனே கண் கண்ட தெய்வம் நீ எப்புடி சொல்லப்போச்சு போயான்னு சொல்லுவாங்க போங்கப்பா ” என துளசியும் அன்னை தந்தை அன்பிலே சிறு சிரிப்புடன் நகர்ந்துவிட,
அடுக்கலைக்குள் வந்த கதிரவன்,
“ ஏன் விழி துளசி சொல்றமாதிரி உன்னைய கஷ்டப்படுத்திருக்கேனா ” என கேட்க
“ அட அவளுக்கு வேற வேலை இல்லங்க வார்த்தைகளையும் வலிகளையும் தாங்ககூடிய வயதுல தாங்கிட்டு இந்த மாதிரி தோள் சாஞ்சுக்குற வயசுல காதலிக்குறது தனி சுகம்தாங்க. நீங்க என்னைய புரிஞ்சுக்க நான் உங்களை புரிஞ்சுக்க அத தாண்டி நம்மள பழக்க படுத்திக்க நேரம் எடுக்கும்ல ” என கூறி கதிரவன் தோளில் சாய்ந்துக்கொள்ள
“ ஹ்ம்ம் புருஞ்சுகிட்டோம்னு நினைக்குற??…”
“ அது தெரியல ஆனா காதல் மட்டும் கூடிருக்குன்னு தெரியும் ” என எழில்விழி கூற
“ பாரேன் விழி வர வர பேச ஆரம்பிச்சிட்ட ”
“ நீங்களே எவ்வளவு மாறிட்டீங்க அப்போ நானும் மாறுவேன்ல ” என கூறிவிட்டு சிறுது நேரம் அமைதியாக இருந்தவள்
“ என்னங்க பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணி பேர பிள்ளைகளை பார்த்துட்டா நிம்மதியா என் மூச்சை விட்டுடுவேன் ” என எழில்விழி கூற வேகமாக அவளின் தலையை நகர்த்திவிட்டு சற்று நகர்ந்து நின்றவன்,
“ ஏய்!!… இங்க பாருடி உன்னோட சுவாசமே என் மூச்சில் தான் இருக்கு. அதுகூட நான் சொன்னாதான் உன் சுவாசம் நிக்கும். இந்த ஜென்மத்துல என்னைய மீறி உன்னைய ஒன்னும் செய்யவிடமாட்டேன். சும்மா லூசு மாதிரி உளறாம போ போய் வேலையை பாரு. வந்துட்டா சாகுறதை பத்தி பேச. இங்க இருந்து இன்னும் அவ ஊருக்கு கூட தனியா போக தெரியாது இதுல என்னைய விட்டு சாக போறாளாம் போடி கிறுக்கச்சி. எனக்கு சாப்பாடும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் ” என கடிந்துவிட்டு கதிரவன் சென்றுவிட
அவனின் வார்த்தைகள் விட அவனின் தவிப்பை புரிந்த எழில்விழி சந்தோசமாக புன்னைகைத்து கொண்டிருந்தாள் விழி நீருடன்.
இந்த ஆணவக்காரனையும் அவனின் காதலையும் அவள் மிக அதிகம் காதலிக்கிறாள். இவளின் காதலுக்கு என்றும் இவன் அமைதியாக பேச போவதும் இல்லை கோவப்படுவதை நிறுத்த போவதும் இல்லை.
காதலை வாயால் சொல்லி தினம் கொஞ்சுவது ஒரு வித காதல் என்றால் என்றும் காதலை வார்த்தையால் கூறாமல் தனது கோவமான செயல்களால் கோவமான சொற்களால் தனது கோவ உணர்வால் சொல்லும் இவனின் காதலை இவனை முழுமையாக காதலிக்கும் இவளால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
காதல் இங்கு கதிரவனின் குணத்தை மாற்றவில்லை அதே நேரம் மனைவியின் காதலால் அவனின் குணமும் மாறவில்லை. ஆனால் என்றும் மாறாதா உண்மையான காதல் உண்டு இங்கு. அதுவும் மனைவியிடம் மீது தீராத காதலும் வெறித்தனமான அன்பும் உண்டு.
ஆனால் என்றும் அவனை அவனாகவே ஏற்று கொள்ளும் அவனின் மனைவியின் காதலும் உண்டு. அவனின் மீது பைத்தியக்காரத்தனமான பிடித்தமும் உண்டு. காதலுக்கு விளக்கமும் இல்லை வரையறை இல்ல இவர்களின் காதல் வாழ்க.
error: Content is protected !!