உயிரில் ஒரு சஞ்சாரம் – அத்தியாயம் 15
அத்தியாயம் 15
அன்று இரவு விண்மீன்கள் ஆயிரம் மடங்கு அதிகம் ஜொலிப்பதாகத் தோன்றியது இருவருக்கும். இருளில் மின்னும் விண்மீன்கள் இதயத்தில் வெளிச்சம் பாயச்சிடக் கூடாதென அசோக் உறக்கம் வருவதாக சொல்லி எழுந்தான். அன்றிரவு அசோக் வெகுநேரம் தன் மனதில் தோன்றிய எண்ணங்களுக்குக் காரணம் தேடியே உறக்கம் இழந்து ஒருவாறு அதற்கு அவள் மீதான பச்சாதாபம் எனப் பெயரிட்டு அதிகாலையில் கண்ணயர்ந்தான்.
மறுநாள் காலை அவன் தூக்கம் கலைந்து எழ வைஷ்ணவி அருகில் இருந்து மூங்கில் தடுப்பின் பின்னே இல்லாததுக் கண்டு அவசர அவசரமாக வெளியே வர ஒரு இசட் வடிவ படிகள் தாண்டி அமைக்கப்பட்ட மேடையில் வைஷ்ணவியைத் தாங்கி நின்றிருந்தான் ஸ்டான். அசோக் மனதில் அடிப்பட்ட வலித் தோன்ற அவன் பார்வையை வேறுப் பக்கம் திருப்பி நிற்க வைஷ்ணவியின் சிரிப்பொலிக் கேட்டது. சிறிது நேரத்தில் வைஷ்ணவி படிகள் மேலேறி வர அசோக் நின்றிருந்தான். அசோக் அவளிடம் எந்த உரிமையில் என்ன கேள்விகள் கேட்பது என்றக் குழப்பத்திலேயே அமைதியாக, வைஷ்ணவி கேட்டாள்.
“எழுந்திட்டீயா? சீக்கிரம் கிளம்பணுமாம்! ஸ்டான் பென்னிக்கு ரெய்ச்சல் மெசேஜ் பண்ணிருக்காங்க. கிளம்பு அசோக்”
Advertisement
வைஷ்ணவி சொல்லி விட்டு அசோக்கை நோக்க அவன் முகம் களை இழந்திருந்தது. நேற்றிரவு அவன் உறக்கம் இல்லாததால் சோர்வாக இருப்பான் என எண்ணியிருந்தாள் வைஷ்ணவி.
அவர்கள் சீனாவிலிருந்து கிளம்பி அபுதாபி சென்றடைந்தனர். அந்த சோல்புல் பயணம் ஒவ்வொரு வகையான நில அமைப்புகளில் இயற்கையைக் கண்டுகளிக்க ஏற்பாடாகி இருந்தது. தீவு, மலை, பள்ளத்தாக்கு அடுத்ததாக பாலைவனம். அபுதாபி வந்திறங்கிய அன்று ஒரு நாள் பயணிகள் ஒய்வெடுத்துக் கொண்டனர். புர்ஜ் காலிபா கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் ஒரு உயரிய கட்டிடத்தில் தங்கும் அறைகள் ஏற்பாடாகி இருந்தது.
வைஷ்ணவி அசோக் இருவரும் பயண அலுப்புத் தீர குளித்து அன்றிரவு தனித்தனி அறையில் உறங்கச் சென்றனர். மறுநாள் காலை அசோக் சீக்கிரமே எழுந்து நவீனத்தின் அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்த அறையைச் சுற்றிப் பார்த்தவன் காபி மேக்கரில் இருவருக்கும் காபி போட்டு திரும்பிப் பார்த்தான். இன்னும் வைஷ்ணவியின் அறை திறக்கப்படவில்லை.
Advertisement
அசோக் பால்கனியில் நின்று காபியை அருந்த அவனுக்கு கீழே மேகங்கள் சூழ்ந்து நகரத்தை மறைத்து இருந்தது.
Advertisement
தனது காலுக்கு கீழ் உலகம் இவ்வளவு எழிலாகத் தோன்றுமானால் மனிதன் மமதைக் கொள்வதில் ஆச்சரியமில்லை.
பஞ்சு மூட்டையாக மேகம் தன் பார்வையின் கீழ்க் கொட்டிக் கிடக்க மேலிருந்து ஆவி பறக்கும் காபியை ரசித்துக் குடிப்பதெல்லாம் ரசனைகளின் உச்சப்பட்ச சுகிர்ப்பு.
அவன் ரசித்துக் கொண்டு இருக்க வைஷ்ணவி தனது அறையில் இருந்து வெளிவந்தவள் அசோக் அருகில் வந்து நிற்க அசோக் வெளியில் செலுத்தி இருந்த தனது பார்வையை மாற்றாமலே தனக்கு அருகில் இருந்த காபிக் குவளையை அவளிடம் நீட்டினான். வைஷ்ணவி அதை வாங்கி குடித்து கீழேத் தெரிந்த மேகத் திரளை காபியுடன் சேர்த்து ருசித்தாள். பாலைவனத்தில் இப்படி ஒரு அதிநவீன நகரத்தை உருவாக்கியிருந்த அரபு நாட்டினரின் செல்வம் ஒவ்வொரு இடத்திலும் பொன்னைப் போல மின்னியது. மேகத்திற்கு மேலே அவர்கள் இருக்க அதிகாலையில் சூரிய வெளிச்சத்தில் கட்டிடங்கள் தங்க நிறத்தில் ஜொலிக்க இந்த பயணத்தில் இயற்கையின் ஒவ்வொரு பரிணாமத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கின்றாள் வைஷ்ணவி.
Advertisement
‘இப்போது தன் காலுக்கு கீழ் மேகம் இருக்க, பறப்பது ஒன்று தான் பாக்கி இல்லை அதையும் இந்த பயணத்தில் இவன் செய்ய வைத்து விடுவான்’ வைஷ்ணவி மனதிற்குள் நினைத்துக் கொண்டே அசோக்கைப் பார்த்தாள். அவன் மனதில் மெலிதான ஒரு வலி இருந்துக் கொண்டே இருந்தது. நேற்று காலை வைஷ்ணவியுடன் ஸ்டான் நிற்பதை தன்னால் ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை? முக்கியமாக அவள் தன்னிடம் வலி மிகுந்துப் பேசுகையில் அவளைத் தன் மார்போடு அணைத்துக்கொள்ள தான் ஏன் நினைத்தோம் ? இது முற்றிலும் தவறு அவன் தன் மனதிற்கு கடிவாளம் இடத் தொடங்கினான்.
‘இல்லை இவள் பால் நான் ஈர்க்கப்படுவது சரியில்லை’ என்று அவனது மூளை அவனுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க இதயம் அதை கேட்கவே மாட்டேன் என்று அவள் கலைந்த கூந்தலின் அழகை ரசிக்கத் தூண்ட அவன் பார்வையைத் திருப்பினான். அவள் மெல்ல அந்த கூந்தலை கொண்டையிட்டு அவனிடம் திரும்பினாள்.
“இன்னைக்கு என்ன ஃப்ளான் பண்ணிருக்காங்க அசோக்?” வைஷ்ணவி கேட்க அசோக் இன்னும் சிந்தனையிலேயே நின்றிருந்தான்.
“உன்னை தானே கேட்டேன் அசோக்” வைஷ்ணவி மீண்டும் சத்தமாகக் கேட்க அவளது அதிகார குரலில் தன்னுடைய நினைவுகளுக்கு வந்தவனாக பேசினான்.
“இன்னைக்கு துபாய் போறோம். நைட் தான் டெசர்ட் சவாரி ஈவ்னிங் வரை ஷாப்பிங் தான்”
அவளிடம் தனது உரிமையின் எல்லை எதுவெனத் தீர்மானிக்க முடியாது அவன் திணற அவ்ளோ அவனிடம் எல்லைக்கோடில்லாத உரிமை எடுத்துக் கொண்டு இருந்தாள்.
“ஓ அப்படியா! சரி நாம எங்கே போறோம்? தயவுசெய்து துஃவையல் ல துபாய் ஹாஸ்பிடல் ல அட்மிட் ஆக வைக்காத மாதிரி எங்கேயாவது கூட்டிட்டு போ அசோக்”
வைஷ்ணவி சொல்ல அசோக் முகத்தில் புன்னகைப் பரவியது. காலை உணவு முடிந்து அசோக் அதே ஹோட்டலின் ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல கண்ணாடி ஸ்லைடில் சறுக்குவதற்கு கட்டணம் செலுத்தி கூட்டி வந்திருந்தான்.
பல அடுக்கு கட்டிடத்தின் பக்கவாட்டில் முழுக்க முழுக்க கண்ணாடியினால் ஒரு சறுக்குத் தளம் அமைத்து ஐநூறு அடிக் கீழே நிலத்தை பார்த்து சறுக்குவது சில நொடிகள் தான் என்றாலும் அவள் மழலை போல் இரு முறை ரசித்துப் பயணிக்க அசோக் புன்னகையுடன் நின்றிருந்தான். அவன் மனது லேசாகி இருந்தது.
அதன் பின் அவளை அபுதாபி நகர அல் மேரியா உட்பட பல ஷாப்பிங் மால் அழைத்துச் சென்றான். இறுதியாக அவர்கள் சென்றது வாஃபி மால். எகிப்திய கலாச்சாரத்தை ஒட்டிய கட்டிட அமைப்பில் இருந்தது அந்த ஷாப்பிங் மால். முன்னே பாக்கு மரங்கள் வரவேற்க அதன் பின் இருபது அடி உயரத் தூண்கள் தாங்கிய நுழைவு வாயில் தாண்டி உள் நுழைந்தனர். வைஷ்ணவி அபுதாபி பயணம் நெடுகிலும் பெரிதாக எதையுமே வாங்கவில்லை ஆனால் நன்றாக சுற்றிப் பார்த்தாள்.
ரெய்ச்சல் லிடியா கை நிறைய பொருட்களோடு வந்து கொண்டிருந்தனர் அசோக் திரும்பி வைஷ்ணவியைப் பார்க்க அவள் பக்களாவைச் சுவைத்து ஒரு பாக்ஸ் இனிப்பு வாங்கிக் கொண்டு இருந்தாள். அசோக் ரெய்ச்சல் லிடியாவைக் கடக்க துஃவையல் அவர்களிடம் எச்சரித்துக் கொண்டே இருந்தான்.
“பொருட்களை அளவா வாங்குங்க ஏர்போர்ட்ல ஏதாவது கஸ்டம்ஸ் பிரச்சனை வரும்”
அவன் சொல்லிக் கொண்டிருக்க ரெய்ச்சல் அதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ட்யூட்டி ஃப்ரீ ஷாப்பில் இன்னும் வாங்கிக் குவித்து இருந்தனர். ஷாப்பிங்க்கென்று டூரில் தனி நேரம் அனுமதித்தது எவ்வளவு தவறு என துஃவையல் புலம்பிக் கொண்டு இருக்க அசோக் வைஷ்ணவியைப் பார்த்தான். கைப்பை தாண்டி ஒரு சிறிய பை அத்தனையிலும் உணவுப் பண்டங்கள். கேப்ரியல் அடலின் தம்பதியர் கூட இருவரும் ஒரே மாதிரியான ஒரு தங்க டாலரை வாங்கினர். வைஷ்ணவி கடைகளுக்கு போகாது அமர்ந்திருக்க அசோக் அவளைச் சீண்டினான்.
“ஏ சீனிப் பட்டாசு நீ எதுவுமே வாங்க மாட்டியா? சரியான கஞ்சியா நீ?”
அசோக் கேட்க வைஷ்ணவி படபட பட்டாசாக வெடித்தாள். அசோக் எதிர்ப்பார்த்ததும் அது தானே அவளது முகப்பாவத்தை ரசித்துக் கொண்டே அவளருகே அமர்ந்தான்.
“கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற காசை தண்ணீ மாதிரி தூக்கி செலவு பண்றது எல்லாம் எனக்கு பிடிக்காது”
“அப்ப அம்மா வேற எதுக்கு தான் செலவு பண்ணுவீங்க?”
அசோக் கேட்க,
“எதுக்குமே செலவு பண்ண மாட்டேன் தேவையில்லாம செலவு பண்றது எனக்கு பிடிக்காது.” வைஷ்ணவி எரிச்சலுடன் பதிலளித்தாள்.
“சரி கோவிச்சுக்காதே! அங்கே தங்க நிற ஒட்டகம் தெரியுதா?”
அசோக் கேட்க வைஷ்ணவி அங்கே ஆளுயறத்தில் நின்றிருந்த ஒட்டகச் சிலையைப் பார்த்து ஆமாம் என்பதாகத் தலையசைத்தாள்.
“அதுக்கு பக்கத்தில எகிப்து நாட்டு மியூசியம் இருக்கு அங்கே போய் நின்னுக்க”
அசோக் சொல்ல வைஷ்ணவி புரியாது கேள்வி கேட்டாள்.
“எதுக்கு? ஏன் அங்கே போய் நிக்கணும்?”
“என் வாழ்நாள்லயே ஷாப்பிங் பிடிக்காதுன்னு சொன்ன ஒரு பொண்ணை இப்பத் தான் பார்க்கிறேன். நீயெல்லாம் மியூசியத்தில இருக்க வேண்டிய அரிதான படைப்பு அதான் அங்க எகிப்து நாட்டு மியூசியம் இருக்கு அதில் ஒண்ணா நீயும் போய் நின்னுக்கனு சொன்னேன்”
அசோக் சொல்லி விட்டு அகலகலவென சிரிக்க வைஷ்ணவி அவனை முறைத்தாள்.
“நீ பொண்ணா இருக்க வாய்ப்பில்லை னு எனக்கு வந்த நாள்ல இருந்தே சந்தேகம் ஆப்ரேஷன் ஏதாவது பண்ணிட்டியா?” அசோக் விடாது சீண்ட
“டேய் வேண்டாம் என்னை சீண்டாதே!” வைஷ்ணவி பற்களைக் கடித்து வார்த்தைகளைத் துப்பினாள்.
“சரி விடு நானாவது வாங்கித் தரேன் வா?”
அசோக் அழைக்க வைஷ்ணவி வெடுக்கென்று எழுந்தாள்.
“ஒண்ணும் தேவை இல்லை நான் உனக்கு வாங்கித் தரேன்”
என சொல்லி விட்டு வைஷ்ணவி செல்ல அசோக் சிரித்துக் கொண்டே பேசினான்.
“பார்த்து பக்ளாவா இன்னொரு பாக்கெட் வாங்கு” அசோககின் வார்த்தைகளில் கோபமுற்று பேசினாள் வைஷ்ணவி.
“நான் உனக்கு வாங்கிக் கொடுக்கற கிஃப்ட் ல வாயடைச்சு போய் நீ நிக்கல”
தலையை சிலுப்பிக் கொண்டு வைஷ்ணவி சொல்லிச் செல்ல அசோக்கும் அவளுக்கு ஒரு பரிசை வாங்கக் கிளம்பினான்.
இருவரும் இரு வேறு வழிகளில் கடைகளை அலசினர். இரண்டு மணி நேரத்திற்குப் பின் இருவரும் அதே இடத்தில் சந்தித்தனர். அசோக் தனது கையில் இருந்து ஒரு பரிசை நீட்டினான். வைஷ்ணவி அதை வாங்கிக் கொண்டு அவளது கைகளில் இருந்து ஒரு பரிசை நீட்டினாள். அது சிறிதாக அவனது பாண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு இருந்தது. அசோக் அதன் அளவுக் கண்டு புன்னகையை மறைக்கப் போராட வைஷ்ணவி முறைத்தாள்.
இருவரும் அதைப் பிரிக்க முனைய துஃவையல் அழைத்தான். அன்றிரவு டெசர்ட் சவாரி செல்ல நேரம் ஆகி இருந்தது.
எட்டுப் பேர் அடங்கிய குழு ஒரு டொயோட்டா லாண்ட் குரூசரில் பயணித்தனர். வைஷ்ணவி நடுவில் அமர்ந்திருக்க ஸ்டான் ஒரு புறமும் அசோக் ஒரு புறமும் அமர்ந்து இருந்தனர். மணலில் வண்டித் தூக்கி தூக்கிப் போட வைஷ்ணவி அச்சம் மேலிட்டுத் தடுமாற ஸ்டான் அவளது கரங்களைப் பற்றி நிறுத்தினான். இருவரும் புன்னகைத்துக் கொள்ள அசோக் துஃவையலிடம் பேசிக் கொண்டு இருந்தான்.
மாலை வேளையில் பாலைவன மணலில் பெரிய திடல் அமைக்கப்பட்டு இருந்தது. ஒரு புறம் ஒட்டகப் பயணம் மேற்கொள்ள அனைவரும் தயாராகினர். சூரிய வெளிச்சம் மணல் முகட்டில் தெரிய சிகப்பு வண்ணத் துணிகள் ஒட்டகத்தின் முதுகில் பளபளத்தது. அதன் மேல் கைப்பிடி இருக்க வைஷ்ணவி அதைக் கண்டதும் இமைகள் படபடத்து அதன் மேல் ஏறத் தயங்கி நின்றாள். அசோக் வைஷ்ணவியை அழைத்தான்.
“ஏ சீனிப் பட்டாசு! வா போலாம்”
“ம்ஹூம் இல்லை நான் வரலை” வைஷ்ணவி சொல்ல அந்த ஒட்டகம் மேய்ப்பவர் ஒட்டகத்தை தட்ட அது எழுந்துக் கொண்டது. அடுத்து அடலின் கேப்ரியல் தம்பதியர் ஒரு ஒட்டகத்தில் சென்றனர். ரெய்ச்சல் லிடியா ஒரு ஒட்டகத்தில் ஏற வைஷ்ணவியின் மனதில் மெலிதான ஆசை எட்டிப் பார்த்தது. ரெய்ச்சல் அடலின் லிடியா தைரியமாக ஏறியது அவளது பயத்தை போக்கி இருந்தது.
‘நாமும் ஏறினால் என்ன?’ அவள் நினைத்ததை செய்வதற்குள் அங்கிருந்த கடைசி ஒட்டகத்தில் ஸ்டான் ஏறியிருந்தான். பென்னிக்கு விருப்பமில்லை போலும் அந்த குடில் அமைப்பில் நின்றிருந்தான். ஸ்டான் வைஷ்ணவி தயங்கி நிற்பதைக் கண்டதும் அவளை வருமாறு அழைக்க வைஷ்ணவி அந்த ஒட்டகத்தில் ஏறி இருந்தாள். அந்த ஒட்டகம் நடைப் பயில பாலைவன மணல் முகடுகள் தோன்றி மறைய பகலவன் தன் கதிர்களை மறைத்தும் தருவித்தும் மாயாஜாலம் புரிந்தான். இன்னுமொரு இயற்கையின் எழில் முகம் மனதில் கல் ஓவியமாக செதுக்கி வைத்தது வைஷ்ணவியின் மனது. முக்கியமாக கறுப்பு வண்ணத் தலைப்பாகையில் அரசனைப் போல் எதிரே அசோக் வரும் காட்சி அழகுற அவளது இதயத்தில் ஓவியமாக செதுக்கியது அந்நொடி.
அதன் பின் இரவு துணிகளால் ஆன கூரையின் கீழ் மேடை அமைக்கப்பட்டு அரேபிய உணவுகள் பரிமாறப்பட்டுக் கொண்டு இருந்தது. திறந்த மணல்வெளியில் துணிகள் கீழே விரிக்கப்பட்டிருக்க மேல் தெரிந்த வானம் விண்மீன் கூட்டங்களைக் கண்ணுக்கு விருந்தாக்கியது. பயணிகள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நேரக் கெடுவில் உள்ளே சென்று உணவு உண்ணலாம். சிறப்புக் கட்டணம் செலுத்தியோர் எந்த நேரத்திலும் உள்ளே சென்று உணவு உண்ணலாம். அசோக் சிறப்புக் கட்டணம் செலுத்தி இருந்தான்.
நடனப் பெண்கள் மேடையில் நடனமாடிக் கொண்டு இருக்க அசோக் வைஷ்ணவி இருவரும் துருக்கிய உணவு சாயலில் சமைக்கப்பட்ட உணவை உண்டு விட்டு தங்களது இடத்திற்கு வந்தனர். வைஷ்ணவி தனது போர்வையில் படுத்து வானத்தை வெறித்தாள். சற்று தள்ளி சிலர் அமர்ந்து இருந்தனர். சிலர் படுத்தப்படி வானத்தை ரசித்தனர். குளிர் ஏறத் தொடங்கி இருந்தது. மணல் சூடு தணியத் தொடங்கியது. அசோக் இருநாள் முன்பு இதே விண்மீன்களை அவளுடன் ரசித்த நினைவு வர அந்தக் காட்சியின் தாக்கத்தில் படுத்திருந்தான்.
வைஷ்ணவி பேசினாள்.
“ஆமா எனக்கு என்ன கிஃப்ட் வாங்கின?”
அதற்கு, “நீ என்ன கிஃப்ட் வாங்கின?” என மறு கேள்வி கேட்டான் அசோக்.
“உன்னைப் பார்த்ததும் பழகினதுக்கும் அப்புறம் எனக்கு என்ன தோணுச்சோ அதான் கிஃப்ட் ஆ வாங்கினேன்”
வைஷ்ணவி சொல்ல அசோக் அதே வார்த்தைகளை வேறு முறையில் பயன்படுத்தினான். இரண்டிற்கும் தான் எத்தனை வேறுபாடு!
“உன்னைப் பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு என்னை எப்படி தோணுச்சோ அதான் கிஃப்ட் ஆ வாங்கிருக்கேன்”
அந்த பதிலில் வைஷ்ணவி அவசர அவசரமாக எழுந்து தனது கைப்பையைத் திறக்க அசோக் தடுத்தான்.
“இந்த டூர் முடிஞ்சதும் திறந்து பாரு!”
அவன் சொல்ல வைஷ்ணவி அமைதியாக அமர்ந்தவள் அசோக்கிடம் கேள்வி கேட்டாள்.
“நீ எப்ப எப்ப எல்லாம் டூர் போவ? எத்தனை நாள் சுத்தியிருக்க அசோக்?”
“ஒவ்வொரு வருசம் ஓரிடம். அதிகபட்சமா ஆறு மாசம் ஒரே வருசத்தில சுத்திருக்கேன்”
அசோக் சொல்ல வைஷ்ணவி கேட்டாள்.
“ஆறு மாசமா? நிரந்தரமான வேலை இல்லையா உனக்கு. இல்லை ரொமான்டிக் நாவல் ல வர்ற மாதிரி பெரிய பணக்காரனா நீ?”
அசோக் அந்த கேள்வியில் புன்னகைத்தான். வைஷ்ணவி இன்னும் நட்சத்திரங்களைத் தான் எண்ணிக் கொண்டு இருந்தாள்.
“என் வேலை டைமிங் நான் முடிவு பண்ற அளவுக்கான ஒரு வேலையில இருக்கேன். அப்புறம் நான் ரொம்ப பணக்காரணும் இல்லை ரொம்ப ஏழையும் இல்லை. ஆறு மாசம் கஷ்டப்பட்டு சம்பாதிப்பேன் அதை அடுத்த ஆறு மாசம் சந்தோஷமா செலவு பண்ணுவேன்”
அசோக் சொல்ல வைஷ்ணவி ஆச்சர்யக் குரலில் பேசினாள்.
“ஓ ! வெஸ்டர்ன் நோமாடிக(western nomadic). இதனால தான் உனக்கு பிரேக் அப் ஆச்சா?”
அசோக் அமர்ந்தவாறு கைகளை இரு முட்டியைக் கட்டி அவளை நோக்கினான்.
“நோமாடிக் ஆ இருக்கிறதும் மனசுக்கு பிடிச்சதைச் செய்யறதும் தப்பா வைஷூ?”
அந்த கேள்வியில் இரு நாட்களுக்கு முன்பு தான் இருந்த நிலையை உணர்ந்தாள் வைஷ்ணவி. அவள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மௌனமாக அசோக் பேசினான்.
“நாம முதல் தடவை சந்திச்சப்ப நீ என்னை என்னக் கேள்வி கேட்டனு நியாபகம் இருக்கா?”
அசோக் கேட்க வைஷ்ணவிக்கு நினைவிருந்தது.
“நீ என்ன கொரியனா?”
அசோக் அந்த காட்சி நினைவில் படர புன்னகைத்தான்.
“ஐ வாஷ் பார்ன் டூ கொரியன் ஃபாதர் அண்ட் இந்தியன் மதர். பாண்டிச்சேரி ஆரோவில் அப்பா வளர்ந்த இடம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மலையளவு வித்தியாசம் எண்ணங்கள்ல ஆனால் காதல் எல்லாத்தையும் சரி பண்ணிடும் நினைச்சாங்க. தே வேர் ராங். காலம் எதையுமே மாத்தல. என் அம்மா என்னையும் என் அப்பாவையும் விட்டுட்டு கரியரை தேர்ந்தெடுத்தாங்க. ரொம்ப சக்ஸஸ்புல் பிஸினஸ் உமன். நீ உன் அப்பாவுக்கு பெஸ்ட் னு காட்ட முயற்சி பண்ண மாதிரி நான் பண்ணல நான் எனக்காக வாழணும் னு அப்பாகிட்ட கத்துக்கிட்டேன். இப்ப வரைக்கும் வாழறேன்”
அசோக் சொல்ல வைஷ்ணவி மெல்லியக் குரலில் கேட்டாள்.
“அப்ப உன் லவ் பெஃலியர் பொய்யா?”
“பாதி உண்மை. பாதி பொய். அவ என்னைக் கழட்டி விடச் சொன்னக் காரணம் நான் நானாக இருக்கிறது பிடிக்கலை னா. நல்லா சம்பாதிச்சு, சேர்த்து வைச்சு வாழ்ந்து”
சொல்லி விட்டு அவன் அமைதியாக, அவனது கண்களில் வலி இருந்தது. வைஷ்ணவி அவனது கரங்களைப் பற்றினாள். அசோக் அன்று அவளைத் தீண்டி ஆறுதல்படுத்தத் தயங்கியதை அவள் நொடிக் கூட யோசிக்காது செய்திருந்தாள்.
“விடு அசோக்! அவளுக்கு என்னை மாதிரி உன் கூட ஊர் சுத்தக் கொடுத்து வைக்கல”
அவள் சொல்லி விட்டு அவனது கரத்தைக் கோர்த்து நட்புடன் புன்னகைக்க அன்று அவள் சொல்லிய வார்த்தைகள் இருவேறு பொருள் தரும் என்பதை வேறொரு நாளில் உணர்ந்து கண்களில் நீர் வர நின்று இருந்தாள் வைஷ்ணவி.
கவிதை
எல்லை மீறும்
அன்புக்கு எல்லாம்
என்ன வேலி அமைப்பது? – நீ
இதயம் களவாடிச் செல்ல
அனுமதித்தப் பின்
இதோ உன் அடிமை
என்று எழுதிய சாசனம் தான் எஞ்சியிருக்கிறது என் உயிர்க்கூட்டில்!


