Skip to content
Post Views: 1,850
அத்தியாயம் 21
செந்தில் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு நின்றிருந்தான். அருகே வைஷ்ணவியின் பெரியம்மா மலர்க்கொடி அழுது அரற்றிக் கொண்டு இருந்தார்.
“வெளியே உட்கார்ந்திருக்கிறது தான் நீ அமெரிக்காவில லவ் பண்ணி கல்யாணம் பண்ண கொரியன் பாய் பிரண்ட் இல்லையாடா புழுகினி மூட்டை”
வைஷ்ணவி அவளது அண்ணனை புழுகினி மூட்டை என்று எப்போதும் அழைப்பாள் என்பதால் அங்கிருந்த யாவரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை செந்தில் உட்பட.
Advertisement
செந்தில் ஆம் என்பதாக தலையசைத்தான்.
“நீ அந்த ஆளோட Gay ரிலேசன்ஷிப்ல இருக்க இல்லையா?”
வைஷ்ணவி மீண்டும் கேட்க செந்தில் மீண்டும் ஆம் என்பதாக தலையசைத்தான்.
Advertisement
“ஓஒ! அப்படின்னா நான் உன் ஃகே பிரண்டு கிட்ட பேசணுமே!”
Advertisement
வைஷ்ணவி சொல்ல செந்தில் அப்பாவியாகப் பேசினான்.
“அவன் கொரியன்டி பூசணி. அவனுக்கு தமிழ் இங்கிலீஷ் எதுவும் தெரியாது”
அதைத் கேட்டதும் வைஷ்ணவி உதட்டை அலட்சியமாகப் பிதுக்கி வெளியே வந்தவள் நேராக அசோக்கை நோக்கி வந்தாள். அசோக் அவள் வந்ததும் எழுந்து நிற்க செந்தில் அவன் அருகே வந்து காதில் கிசுகிசுத்தான்.
Advertisement
“டேய் நான் சொன்ன பெரிய எமகண்டம் இது தான்டா?! என் தங்கச்சி யமகாதகி எப்படி கிடுக்கிப்பிடிப் போட்டுக் கேட்டாலும் உண்மையைச் சொல்லிராதேடா! உன் நண்பன் உசிரு உன் கைல தான் இருக்கு!”
அசோக் அவன் சொன்ன எதையுமே காதில் வாங்காதவனாக வைஷ்ணவியையேப் பார்த்து இருக்க வைஷ்ணவி பேசினாள்.
“மிஸ்டர் அசோக் கொஞ்சம் உள்ளே வர்றீங்களா?”
அவள் சொன்னதும் அரசியின் ஆணையைக் கேட்ட சேவகன் போல் அசோக் செல்ல, செந்தில் ‘டேய் உனக்கு தமிழ் தெரியாதுடா என நினைத்தவன் ஆமா இவன் பேர் எப்படி இவளுக்குத் தெரியும் எனத் திகைத்து நோக்கினான்.
சிறிது நேரத்தில் அசோக் முகம் முழுக்க மகிழ்ச்சி அப்பி நிற்க வெளிவர செந்தில் மரண பயத்தில் அமர்ந்து இருந்தான். வைஷ்ணவி வெளிவந்தவள் பேசினாள்.
“பெரியம்மா சும்மா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாதே! அந்த நாய் gay எல்லாம் இல்லை! உனக்கு ஒரு பேரனே இருக்கான் மூணு வயசாகுது. உன் மருமக நெதர்லாந்து நாட்டுக்காரி”
வைஷ்ணவி சொல்ல செந்தில் அத்தனையும் சொல்லிட்டியாடா என்பது போல் அசோக்கைத் திரும்பிப் பார்க்க அசோக் வைஷ்ணவியையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
‘உன்னை என்ன சொல்லக் கூட்டிட்டு வந்தா என்ன சொல்லி வைச்சிருக்க’ செந்தில் கொலைவெறியில் அசோக்கைப் பார்க்க அசோக் பார்வை வைஷ்ணவியிடமே இருந்தது.
செந்திலுக்கு அவன் நினைத்த அளவுக்கு பிரச்சினை பெரிதாகா விட்டாலும் அவனது தந்தை பெரியசாமி அன்றே அவனை வீட்டை விட்டு வெளியேறும்படி சொல்லி இருந்தார். வைஷ்ணவி தான் அவரைச் சமாதானப்படுத்தி செந்தில் அசோக் இருவரையும் லீ மெரிடியன் ஹோட்டலுக்கு அனுப்பி வைத்தாள். அசோக் மெரிடியன் ஹோட்டலில் கொரியன் நூடுல்ஸ் ஆர்டர் செய்து அமர்ந்திருக்க அவன் எதிரே செந்தில் கொலை வெறியில் அமர்ந்திருந்தான்.
“என்ற ஆத்தா கையில இன்னைக்கு நைட்டு பருப்பு சாதமும் உருளைக்கிழங்கு பொரியல் திங்கலாம்னு இருந்தேன். கொலைகாரன் இப்படி என்னை உட்கார வச்சுட்டான். நல்லவேளை எங்க அப்பன் பெரியசாமி நல்ல மூட்ல இருந்தான் இல்ல நான் இந்நேரம் எந்த ஆஸ்பத்திரியில எப்படி கிடப்பனோ?”
செந்தில் வாய் விட்டு புலம்ப அசோக் தனது பெயர் கேட்கவும் சிந்தனை கலந்தவனாக செந்திலை நோக்கிக் கேட்டான்.
“ஏன்டா கூப்பிட்டியா?” அசோக் கேட்க செந்தில் அவனை முறைத்துக் கொண்டே வேறு கேள்வி கேட்டான்.
“ஏன்டா எங்க வீட்டு பெரும் பிசாசசை நீ எங்கடா பார்த்த?” செந்தில் கேட்டு விட்டு சிறிது நேரம் யோசித்தவன்
“அப்ப நீ நாலு மாசமா குவாரன்டைன் இருந்ததற்கு காரணம் இவ தானா? இவ தான் வேர்ல்ட் டூர் வந்தவளா?”
செந்தில் கேட்க அசோக் ஆம் என்பதாக தலையசைத்து, நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான்.
“சரி மச்சான் மச்சான் கூப்பிட்டு கடைசில நெசமாலுமே நீ எனக்கு மச்சான் ஆயிட்ட. ஆனா அந்த அழுத்தம் புடிச்சவ யாரையும் மன்னிக்க மாட்டாளேடா!”
செந்தில் சொல்ல அசோக் பதறிப் போய் அவனது கரங்களை பற்றிப் பேசினான்.
“அப்படி எல்லாம் சொல்லாதடா மச்சான் என் வாழ்க்கையே உன் கைல தான் இருக்கு”
அசோக் சொல்ல மூன்று நாட்களுக்கு முன் இதே வார்த்தைகளை இடம் மாறி பிரயோகித்தது நினைவு வர இருவரும் சிரித்தனர்.
“எங்க சித்தப்பன் பெண் குழந்தை பிறந்துச்சுனு அவளைப் பார்க்க வரலைனு எங்க ஆத்தா ஒரே வார்த்தை தான் சொல்லுச்சு அதிலிருந்து எங்க சித்தப்பன் கிட்ட அதிகமா பேசுறதில்லைடா அவ. சரியான ராக்காசி” செந்தில் இருக்கையில் சாய்ந்து கைகளை பின் கட்டி சொல்ல அசோக் பதைத்து போய் பேசினான்.
“டேய் அப்ப எனக்கு சான்சே இல்லையாடா?”
“அப்படி எல்லாம் சொல்ல முடியாது அவ ஒரு லூசுடா கொஞ்சம் ரோஷத்தை கிளப்பி விட்டோம்னு வை நம்ம நினைச்சதையே கரெக்டா செய்வா”
செந்தில் சொன்னப்படி தான் மறுநாள் நடந்தது. மறுநாள் காலை செந்தில் அசோக்கை அழைத்துக் கொண்டு தனது சித்தப்பா வீட்டிற்கு சென்றான். அவரது சித்தப்பா மணியரசன் அவனைக் கண்டதும் வரவேற்று நடந்து முடிந்த அவனது கல்யாண களேபரத்தைக் கேட்டறிந்தார். பின்பு அவனைக் கடிந்து கொண்டார்.
“கல்யாணம் ஆயிடுச்சுன்னா முன்னாடியே சொல்லி இருக்க கூடாதா? உங்க அப்பன் அதை நம்பி ஊரைக் கூட்டி. ஏன்டா?”
அவர் கேட்க செந்தில் படபடவென பொரிந்துத் தள்ளினான்.
“நான் சொன்னா உங்க அண்ணன் என்னை உயிரோடு விட்ருவாரா? போங்க சித்தப்பு! ஏதோ இந்த பெரும் பூசணி பேசிப்பேசி என்னை உயிரோட வெளியே போகச் சொன்னார்”
அவன் சொல்லிவிட்டு தனது சித்தியிடம் காலை உணவை கேட்க லட்சுமி அவனுக்கு உணவை கொண்டு வந்து கொடுத்தவர் அசோக்கை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே இருந்தார்.
“என்ன சித்தி அவன ஓர கண்ணுல பாத்துட்டே இருக்கீங்க இவன்தான் உங்க மருமக புள்ள!”
அவன சொல்ல மணியரசன் சட்டென்று திகைத்துப் போய் அவனைப் பார்க்க லட்சுமி பேச்சற்று மலங்க மலங்க விழித்தார்.
“என்னடா சொல்ற?” லட்சுமி திணறிப் போய் கேட்க செந்தில் தொடர்ந்தான்.
“அதான் என் கூட போட்டி போட்டே ஒருத்தி எல்லாம் செய்வா இல்ல! என் கூட போட்டி போடுறதே தன் வாழ்நாள் லட்சியம் இருப்பால்ல! நான் டாக்டர் னா அவ இன்ஜினியர் நான் அமெரிக்கா போனா அம்மா ஸ்விட்சர்லாந்து அதே மாதிரி நான் ஒரு நெதர்லாந்து வெளிநாட்டுக்காரிய கட்டுனதுனால அவ ஒரு கொரியாகாரனை கட்ட போறா!”
செந்தில் சொல்ல அசோக் அவனை முறைத்தான். திகைத்து நின்றிருந்த லட்சுமியிடம் அசோக் பையில் இருந்த புகைப்படங்களை எடுத்து நீட்டினான் செந்தில். அதில் அசோக்கும் வைஷ்ணவியும் பயணத்தின் போது எடுத்துக்கொண்ட அத்தனை புகைப்படங்களும் இருந்தது. ஒவ்வொன்றையும் லட்சுமி பார்த்துக் கொண்டே வர மணியரசன் அங்கிருந்து வந்தவர் லட்சுமி அருகில் அமர்ந்தார்.
“அது இதுன்னு ஏதாவது பண்ணிங்க உங்க காலம் முழுக்க அவ கல்யாணம் ஆகாம தான் இருப்பா. உங்களுக்கு தான் அவளை பத்தி தெரியும்ல. நான் சொல்றப்படி கேளுங்க”
செந்தில் வேண்டுமென்றே எடுத்துக் கொடுக்க மணியரசன் என்ன பேசுவது என்று அறியாது இருந்தார். லட்சுமி வாய் திறந்து கேட்டார்.
“இதுக்கு தான் கல்யாணம் ஆகாது ஆகாதுன்னு சொல்றாளா?” என லட்சுமி கேட்க செந்தில் பதிலளித்தான்.
“சரி விடுங்க சித்தி என்ன மாதிரி கல்யாணமானதே மறைக்கல இல்ல அவ! அந்த அளவுக்கு பரவாயில்லைனு நினைச்சுக்குங்க” என்று சொல்லிச் சிரிக்க வைஷ்ணவி வெளியே சென்று வந்தவள் அப்பொழுதுதான் உள்ளே வந்தாள். உள்ளே அசோக்கையும் செந்திலையும் மாறி மாறி பார்க்க அசோக் தனது தட்டில் இருந்த உணவை அமைதியாக உண்டுக் கொண்டிருந்தான். வைஷ்ணவி கோபத்தில் முகம் சிவக்க செந்திலை முறைத்தாள்.
“என்ன ஊருக்குள்ள உயிரோட நடமாட்ற எங்க பெரியப்பா அரிவாள் செய்ய போயிருக்காரா?”
வைஷ்ணவி கேட்க, அசோக் அவளை நிமிர்ந்து பார்க்க செந்தில் அவளை முறைத்துப் பேசினான்.
“ஏ பெரும் பூசணி எதுக்கு இத்தனை துள்ளு துள்ளற”
செந்தில் சொன்னதும் அசோக் அவனது காதைக் கடித்தான்.
“பெரும் பூசணினா என்னடா?”
அவன் அமைதியாக கேட்டதை செந்தில் சிரித்துக்கொண்டே சத்தமாக பதில் சொன்னான் செந்தில்.
“பெரும் பூசணினா இவ சின்ன வயசுல நாலு பூசணிக்காய் சேர்த்து வைத்த மாதிரி குண்டா இருப்பாடா. அதனால இவளுக்கு பேர் பெரும் பூசணி”
செந்தில் சொல்ல வைஷ்ணவி எகிறினாள்.
“ஏ கொத்தவரங்காய்! வாயை மூடுடா”
வைஷ்ணவி அவனை அடிக்க செந்திலும் திருப்பி அடிக்க முயல லட்சுமி இருவரையும் தடுத்தார்.
“இரண்டு பேரும் எப்பத் தான் இந்த போட்டா போட்டியை நிறுத்துவீங்களோ?”
வைஷ்ணவி கோபத்தில் மாடியிலிருந்த தனது அறைக்குச் செல்ல செந்தில் அசோக்கை ஒரு அறையில் தங்க வைத்து விட்டு தனது சித்தி சித்தப்பாவிடம் பேச ஒரு அறைக்குச் சென்றான். செந்தில் மணியரசன் லக்ஷ்மி மூவரும் ஒரு அறையில் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர். மணியரசனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான் செந்தில்.
“சித்தப்பா பையன் அருமையான பையன். அமெரிக்கால தனி வீடு வேலைன்னு செட்டில் ஆகி இருக்கான். அவனோட அப்பா நான் வேலை செய்யற ஹாஸ்பிடல் சீஃப் டாக்டர். கொரியாக்காரர். அம்மா நம்ம ஊர் தமிழ் பொண்ணு. ரெண்டு தலைமுறைக்கு முன்னே அமெரிக்கா செட்டில்டு. வைஷ்ணவியை நல்லா வச்சுப்பான் பெரியப்பா”
செந்தில் சொல்ல அன்னலட்சுமி சற்று நேரம் அமைதியாக இருந்தவர் பின் பேசினார்.
“இவ ஒண்ணுமே சொல்லலையே செந்திலு”
“அவ சொல்லுவா சித்தி. சொல்ல வைக்கிறேன்”
செந்தில் சொல்லி விட்டு அன்று மதியம் ஹோட்டலைக் காலி செய்து விட்டு தனது தந்தை வழிப் பாட்டி வீட்டில் அசோக்குடன் வந்து தங்கினான். செந்திலின் தாய் மலர்க்கொடி அங்கு வந்திருந்தார். தன் மகனைக் கொன்றுவிடும் அளவுக்கு கோவம் இருப்பினும் பற்களை கடித்துக் கொண்டு அமைதியாக அவனை நோக்கினார்
“எடுவட்ட நாயே பேரனையாவது கண்ணுல காமி. இந்த ஆளு வானத்துக்கும் பூமியும் குதிச்சிட்டு கிடக்கு ”
மலர்க்கொடி மூக்கைச் சிந்த செந்தில் தனது அலைபேசியில் இருந்த புகைப்படத்தை தாய்க்கு காண்பித்தான்.
“உன்னை மாதிரியே இருப்பான் மா” செந்தில் சொல்ல பேரனின் புகைப்படத்தை கண்களில் நீரோடு பார்த்துக் கொண்டிருந்தார் மலர்க்கொடி. வைஷ்ணவி அவள் வீட்டு மாடத்தில் இருந்து தன் அப்பச்சி வீட்டு முற்றத்தில் நடப்பதைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவள் பார்வை அசோக்கைத் தேடியது. மானங்கெட்ட மனம் அன்புக்குரியவர்களிடம் மண்டியிட மட்டும் தயங்குவதே இல்லை. ச்சை!
அவள் எண்ண அதே சமயம் அசோக் நடக்கும் காரியங்கள் எல்லாம் எங்கேயோ எப்படியோ ஏதோ ஒரு இடத்தில் அவனையும் வைஷ்ணவியையும் இணைத்து விட்டால் போதுமென்று இருந்தான்.
வைஷ்ணவி தாய் லக்ஷ்மி திருமணத்தைப் பற்றி பேச்சு எடுக்க தனக்கு திருமணத்தில் துளி கூட விருப்பம் இல்லை என முகத்தில் அடித்தாற் போல் சொல்லி தனது அறைக்குள் சென்று விட்டாள் வைஷ்ணவி. லட்சுமி அந்த புகைப்படங்களை காண்பித்தப் போது வைஷ்ணவிக்கு உயிர் முழுக்க பரவிய வலி சினமாக வெளிப்பட்டது. அவள் இன்றுவரை ஏங்கித் தவிக்கும் நிமிடங்களை அழகாக செதுக்கியிருந்தது அந்த புகைப்படங்கள். அதைக் கண்டதும் மேலும் கோபத்துடன் தன் தாயிடம் சீறினாள்.
“அந்த போட்டோல டூர் போன இடத்தில் போட்டோ எடுத்தேன். எங்கேயாவது நானும் அவனும் சேர்ந்து இருக்கோமா? அந்த செந்தில் எருமை தான் ஏதாவது உளறிட்டுத் திரியறானா நீ அதை கேட்டுட்டு வருவியா? எனக்கு அசோக் என் கூட வந்த ஒரு ட்ராவலர் தான் புரியுதா? முதல்ல அவனையும் அவன் பிரண்டையும் அப்பச்சி வீட்ல இருந்து கிளம்பச் சொல்லு”
மறுநாள் அசோக் செந்தில் இருவரும் வைஷ்ணவியின் வீட்டிற்கு இரவு உணவு உண்ண அழைத்து இருந்தார் மணியரசன்.
“நான் வரலைடா! அவ கோவப்படுவா!” அசோக் சொல்ல,
“வாடா! எங்க ஆத்தா வீட்டுக்குத் தான் போக முடியாது. எங்க அப்பன் விடமாட்டான். அட்லீஸ்ட் எங்க சித்தி வீட்டுக்கு போயாவது கறி சோறு தின்னுட்டு வரலாம் வாடா”
என்று சொல்லி அசோக்கை வம்படியாக மீண்டும் அழைத்துச் சென்றான் செந்தில். மதிய உணவு பரிமாறுகையில் லட்சுமி அசோக்கை அதிகப்படியாக கவனிக்க செந்தில் சிரித்துக்கொண்டு அவனது காதில் கிசுகிசுத்தான்.
“மாமியார் வீட்டு சாப்பாடுடா. சாப்பிடு சாப்பிடு” செந்தில் சொல்ல அசோக் சாப்பிட வைஷ்ணவி திபுதிபுவென வந்து நின்றாள்.
“வந்துட்டாடா ராட்சசி ஏன்டா இவளை எப்படிடா லவ் பண்ணே?”
செந்தில் தன் அருகில் உணவு உண்டுக் கொண்டிருந்த அசோக்கை கேட்க அசோக் எதுவும் பேசாதே வழக்கம் போல் தலையை குனிந்து உண்டுக் கொண்டிருந்தான். பின் உணவு முடிந்திட லட்சுமியிடம் பேசுவது போல் தகவலைச் சொன்னான் செந்தில்.
“சித்தி நாளை காலை நானும் அசோக்கும் அமெரிக்கா கிளம்பறோம். அதுக்குள்ள எங்க அப்பா மனசும் சிலரோட மனசும் இறங்குச்சுன்னா சொல்லுங்க! அவங்க கோவம் தீர்ந்தா பேரனைப் பார்கக, நான் வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லிடுங்க. ஆமா சித்தப்பா எங்கே?” செந்தில் கேட்க,
“அவரு உங்க அப்பாவ பாக்கத் தான் போயிருக்குறாரு” லட்சுமி சொல்லிவிட்டு வைஷ்ணவியை கண்டு முகத்தை திருப்பி நடந்தார். வைஷ்ணவி கோபமாக தனது தாயைப் பார்த்துப் பேசினாள்.
“பார்த்து பார்த்து அப்படியே ஒரு பக்கம் திரும்பிக்கப் போகுது” வைஷ்ணவி சொல்ல லட்சுமி பதில் பேசினார்.
“திரும்பினாத் திரும்பிக்குது போடி”
அவர் சொல்லிவிட்டுச் செல்ல வைஷ்ணவி இறுக்கத்துடன் அமர்ந்திருந்தாள். செந்திலின் திருமணம் என்று சொல்லி தான் விடுப்பு எடுத்து வரச் சொல்லி இருந்தார்கள். இங்கே வந்தால் செந்தில் திருமணம் நின்று போக அசோக்கை காண்பாள் என்று அவள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. இரவு அவள் தனது அறையில் நடந்துக் கொண்டிருக்க லட்சுமி ஒரு தூக்குப்போசியைக் கொண்டு வந்தார்.
“இந்தா! மலர்க்கொடி பெரியம்மா பனியாரம் கொடுத்து விட்ருக்கு! அப்பத்தா வீட்ல கொடுத்துட்டு வந்துரு! செந்திலுக்கு ரொம்ப பிடிக்கும்” என்று லட்சுமி சொல்ல
“ஏன் நீயேன் கொண்டு போய் குடேன்” வைஷ்ணவி கேட்க
“சரி அப்ப அப்பாவுக்கு தோசை ஊத்தி பாத்திரத்தைக் கழுவி வைச்சிடு”
லட்சுமி அப்பாவியாக சொல்ல வைஷ்ணவி கோப முகத்துடன்
“கொடு கொண்டு போய் கொடுத்துத் தொலையறேன்! அந்த மலையாண்டிக்கு வயித்தாலைப் போகட்டும்” என்றாள்.
“அடியேய்!” லட்சுமி கத்த வைஷ்ணவி தூக்குப்போசியை எடுத்துக் கொண்டு சென்றாள். வைஷ்ணவி தன் வீட்டுக்கு முன்பிருந்த அப்பச்சி வீட்டிற்கு வர அவளது கண்கள் தானாகவே அசோக்கைத் தேடியது.
“யாரை அசோக்கைத் தேடறீயா?”
செந்தில் வைஷ்ணவியைக் கேட்க வைஷ்ணவி இல்லை என்று தலையாட்டி
“அப்பத்தா எங்கே?” என வைஷ்ணவி அப்பத்தாவைத் தேடியதாகக் காட்டிக் கொள்ள
“அப்பச்சி அப்பத்தா சித்தப்பா எல்லாம் இன்னைக்கு உங்க பெரியப்பா வீட்ல பஞ்சாயத்து. என் பஞ்சாயத்து தான் ஓடுது”
“இந்தா சாப்பிடு”
என்று சொல்லி வைஷ்ணவி வெளியே செல்ல செந்திலின் குரல் நிறுத்தியது.
“அவன் எங்கிருக்கான்னு எதுவுமே உனக்கு தெரிய வேண்டாமா? அதை விடு அவனோட முதல் காதல் என்னன்னாவது உனக்கு தெரிய வேண்டாமா?”
செந்தில் கேட்க வைஷ்ணவி அவ்விடமே நின்றாள். செந்தில் தொடர்ந்தான்.
“நான் அவன் செஞ்சது எல்லாமே சரின்னு சொல்லல ஆனா உன் முதல் காதலன் மாதிரி இல்ல உன் அப்பா மாதிரி காரணமே இல்லாமல் அவங்க வலிகளுக்கு உன்னை பலிக்கடா ஆக்கல அவன். உன்ன காயப்படுத்திருவானோனு பயம் அவனுக்கு. உன் பிரிவைத் தாங்க முடியுமானு பயம். ஆறு வருஷத்துக்கு முன்னாடி அவன் அப்பாவுக்கு அம்மாவுக்கும் மிகப்பெரிய பிரச்சனை டிவோர்ஸ் வரைக்கும் போக இரண்டு பேரும் பிரிஞ்சு இருக்கிற மாதிரி ஒரு நிலைமை வந்தது. ரொம்ப டிப்ரசனா இருந்தான். அப்ப அவனுக்கு அறிமுகமானவ தான் ஸ்மிதா. அவனோட ஒரு மியூசிக் கன்சர்ட்ல அவனுடைய பாட்டுக்கு அழுதுகிட்டே நின்னுட்டு இருந்தா அசோக்குக்கு அவளைப் பார்த்து உண்டான பரிதாபம் மறுநாளும் அவ கன்சர்ட்டுக்கு வந்து நின்னு அவனை நேரடியா பார்க்கணும் சொல்ல அவனும் மீட் பண்ணான். லவ் ஃபெயிலியர் ஆயி அசோக்கோட சாங்ஸ்னால தான் வலி மறக்க முடியுது வெளியே பேட்டிக் கொடுத்தா. கொஞ்ச நாள் அசோக் கூட அவுட்டிங் டேட்டிங்னு போச்சு அசோக் அவளை தன் குடும்பத்துக்கு அறிமுகப்படுத்தலாம்ன்கிற லெவலுக்கு வந்துட்டான். திடீர்னு அவ காணாமப் போனா அதுக்கப்புறம் என் அட்ரஸ்கு அசோக்கிற்கு ஒரு லெட்டர் எழுதி இருந்தா”
என்று சொல்லி நிறுத்தியவன் தனது அலைபேசியில் இருந்த கடிதத்தை அவளிடம் நீட்டினான்.
“அசோக் நான் உன் கூட இருக்கிற சமயம் நீ என் வலிகளை மறக்க வைச்ச. என்னை சந்தோஷமா இருக்க வெச்சே. உன் அருகில் உலகம் வேறு மாதிரி சந்தோஷமா இருந்தது. ஆனால் என்னால அவனை மறக்க முடியல. ஐ லவ் வசந்த் இதை உன் முகத்துக்கு நேரா சொல்ல எனக்கு தைரியம் இல்லை. அதான் செந்தில் கிட்ட கொடுத்து இருக்கேன். நீ என் மேல காட்டின அன்புக்கும் அக்கறைக்கும் ரொம்ப நன்றி”
அதை வாசித்ததும் வைஷ்ணவி சற்று நேரம் அமைதியாக இருந்தாள். செந்தில் தன் நண்பனுக்காக பேசினான்.
“இதே ஸ்மிதா மாதிரி தான் நீயும் அவனுக்கு அறிமுகமானே. இதே மாதிரி தான் நீயும் அவன் கிட்ட எல்லாத்தையும் அவன்கிட்ட பகிர்ந்திருக்க. அவன் பிரியற அன்னைக்கு முந்தின நாள் அவன் தோளில் சாய்ந்து வருண் ஏன் என்னை விட்டுட்டு போனேனு உன் பர்ஸ்ட் லவ்வர் பேர் சொல்லி அழுதிருக்க. சொல்லு அவன் என்ன பண்ணிருக்கணும். உன் வாய்ல இருந்து பர்ஸ்ட் லவ்வரை மறக்க முடியலைனு சொல்ற வரைக்கும் வெய்ட் பண்ணிருக்கணுமா இல்லை நாகரீகமா வலியோட விலகிப் போயிருக்கணுமா? அவன் இடத்தில் நீ இருந்தா என்ன பண்ணிருப்ப?”
செந்தில் கேட்க வைஷ்ணவி சற்று நேரம் மௌனமாக நின்றாள் பின் பேசினாள்.
“உனக்கு தெரியுமாடா நான் என்ன கேட்க வந்தேன்னு உனக்கு தெரியுமாடா? நான் வருண்ணு பேர் சொன்னதும் அவன் என்னை தனியா விட்டுட்டு போயிட்டான். நான் கேட்டது, கேட்க நினைச்சது நீ வருண் மாதிரி இல்ல நீ உண்மையா என்னை நேசிப்பத் தானேனு கேட்க வந்தேன். பென்னி எனக்கு கொடுத்த டிரக்ல தலை சுத்துச்சு அதுக்கப்புறம் எதுவும் நினைவில்லை”
செந்தில் அழுது நிற்கும் தனது தங்கையின் அருகில் வந்தான்.
“சரி வைஷூ அவன் இப்ப காதலோடு உனக்காக வெயிட் பண்றான் பயமில்லாம தன் காதல் மேல் நம்பிக்கையோட. நீ அவனை மன்னிக்கவே மாட்டியா?”
செந்தில் கேட்க வைஷ்ணவி எதுவும் பேசாது நின்றாள். செந்தில் வாயிலை நோக்கி நடந்தவன் வைஷ்ணவியின் குரலில் திரும்பினான்.
“நீ பேசாதே! அவனை என்கிட்ட வந்து பேச சொல்லு!”
வைஷ்ணவி சொல்லிவிட்டு செல்ல செந்தில் அசோக்கிற்கு போன் செய்த அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வந்திருந்தான் அசோக். வைஷ்ணவி, செந்தில் தனது தாயிடம் காண்பித்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்தாள். அசோக் வந்தது அவள் பின்னிருந்த வெளிச்சத்தில் நிழலாடியது திரும்பினாள். அசோக் தான் நின்று இருந்தான். அவன் கண்கள் முழுக்க காதல், என்னை மறுத்து விடாதே என்ற கெஞ்சல், நான் தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சிடு என்ற குற்றம் உணர்வு. வைஷ்ணவி அவனை நோக்கி அழும் குரலில் கேட்டாள்.
“ஏன் என்கிட்ட ஒன்னுமே சொல்லாம என்னை விட்டுட்டு போனே அசோக்?”
அவள் கேட்க அசோக் ஓடிவந்து அவளை அணைத்துக் கொண்டான்.
“வைஷூ எனக்கு பயமா இருந்துச்சு. நீ என்னை விட்டுட்டு போறதுக்கு முன்னாடி நான் ஓடிப் போய் ஒளிஞ்சுக்கணும்னு நெனச்சேன் வைஷூ. அதுக்கப்புறம் ரொம்ப உடைஞ்சு போயிட்டேன். உன்கிட்ட கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியலனு ரொம்ப உடைஞ்சு போயிட்டேன்”
அவன் சொல்ல வைஷ்ணவி வாய்விட்டு அழுதாள்.
“அந்த நார்தர்ன் லைட்ஸ்ல தனியா உட்கார்ந்து பார்க்கும் போது எவ்வளவு வலிச்சது தெரியுமா? நீ இல்லாம நான் போன ஒவ்வொரு பயணமும் எவ்வளவு வலிச்சது தெரியுமா? ஏன் எனக்கு அறிமுகம் ஆகி என்னை எனக்கே அறிமுகம் பண்ணி என்னை சந்தோஷமா வைச்சிருந்தே? இந்த உலகம் அழகானது எனக்கு காமிச்சு ஏன் ஒரு நொடியில அதை உடைச்சிட்டு போனேனு நான் எத்தனை நாள் அழுதிருக்கேன் தெரியுமா? என் அப்பா வருண் ஏன் எல்லார்கிட்டயும் கோபமா நின்ன என் மனசு, திமிர் நீ போனப்ப மட்டும் அழுகையா வெடிச்சது! நீ வருண் மாதிரி இல்லைனு நான் நூறு சதவீதம் நம்பின போது நான் ஸ்மிதா மாதிரி இருப்பேன் நீ எப்படி நினைச்ச அசோக்? ஒரே ஒரு வார்த்தை போதுமா உன் நம்பிக்கையை உடைக்க?”
வைஷ்ணவி கேட்க அசோக் அவளை இறுக அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் முகம் முழுக்க முத்தமிட்டுப் பதிலளித்தான்.
“எனக்கு வலிச்சதுடி! நீ வருண்ணு சொல்லும்போது நான் ஒரு நொடி கூட உன் மனசுல இல்லையான்னு எனக்கு வலிச்சதுடி! நான் யார்ட்ட சொல்லுவேன் சொல்லு! நானும் அழுதேன்! உயிர் போற வலி அனுபவிச்சேன்! கடந்துப் போனதை பேச வேண்டாமே வைஷூ இனி எப்பொழுதுமே பேச வேண்டாம்.”
அசோக் சொல்ல வைஷ்ணவி சிறிது நேரம் மௌனமாக நிற்க அசோக்கின் அணைப்பு கதகதப்பாக இருந்தது. பின் மெல்ல அவனிடமிருந்து விலகியவள் அசோக்கிடம் கேட்டாள்.
“என்னை அடுத்த வேர்ல்டு எப்ப கூட்டிட்டு போறே?”
வைஷ்ணவி கேட்க அசோக் அவளை மீண்டும் அணைத்து தூக்கி சத்தமிட்டான்.
“நீ மட்டும் ம் சொன்னா நாளைக்கே நம்ம ஹனிமூன் வேர்ல்ட் டூர் தான்”
அதைக் கேட்டதும் வைஷ்ணவி சிரித்து அவன் தோளைக் கட்டிக் கொண்டாள்.
பயணங்கள் தொடரும்
கவிதை
அவனுடன் ஒரு பயணம்
ஜன்னல் வழிக் காதல்
உயிர்க் கூட்டில் மூச்சிருக்கும் வரை
அவனும் நானும் காதலாகித் தொடரும்
உயிரில் ஒரு சஞ்சாரம்!
கதை நிறைவுற்றது மக்களே
உங்கள் விமர்சனங்களும் வரவேற்பும் கருத்துகளும் மனதிற்கு நிறைவாக இருந்தது. மீண்டும் ஒரு கதையில் உங்களை விரைவில் சந்திக்கிறேன் ❤️❤️❤️
error: Content is protected !!