Skip to content
Post Views: 198
அத்தியாயம் 05
சகுந்தலா முருகானந்தத்தின் ஒரே தங்கை தான். ஆனால் பெரிதாக இருவருக்கும் இடையில் ஒட்டுதல் இருந்ததில்லை.
Advertisement
தன் வசதி, கௌரவம் எதற்கும் குறைவில்லாத அளவிற்கு பக்கத்து ஊரில் பெரிய குடும்பத்திற்கு திருமணம் செய்து கொடுத்தார். சகுந்தலாவின் கணவன் சிவதாசன், அவரின் தங்கை காந்திமதி, அவரின் கணவர் சங்கர் மற்றும் பையன் அகிலன் என்று அனைவரும் ஒன்றாகத்தான் இருந்தனர்.
எதிர்பாராத விதமாக திருமணமான மூன்றாவது வருடம் மின்னல் தாக்கி சிவதாசன் இறந்துவிட, பிறந்த வீட்டில் அண்ணனுக்கு கை கொடுக்கும் எண்ணம் இல்லை என்று புரிய, புகுந்த வீட்டில் நாத்தனார் குடும்பம் தாங்கோ தாங்கு என்று தாங்க, அங்கே இருந்து விட்டார்.
Advertisement
Advertisement
அதற்கு காரணம் கணவன் பெயரிலிருந்த சொத்துக்கள் அத்தனையும் தன் பெயருக்கு வந்ததால் என்று அவருக்கு புரியவில்லை.
பிள்ளை செல்வம் இல்லாமல் கணவனை இழந்து தவித்தவருக்கு நாத்தனார் காந்திமதியின் மகன் அகிலன் தன்னை அத்தம்மா அத்தம்மா என்று அன்பு செலுத்துவது மனதிற்கு இதமாக இருக்க, தன் தத்துப் பிள்ளையாகவே அவனை ஏற்றுக் கொண்டார்.
Advertisement
அகிலனோ அதே ஊரில் வசிக்கும் அஞ்சனாவை பார்த்து பிடித்துப்போயி, திருமணம் செய்து தருமாறு கேட்க,
சிதம்பரம் பரிமளா குடும்பம் வசதியில் குறைந்தவர்கள் என்று வீட்டில் மறுத்து விட, தன் வளர்ப்பு மகனின் ஆசையை நிறைவேற்ற எல்லோரையும் பேசி சம்மதிக்க வைத்து, தன் சொத்தில் நான்கில் ஒரு பங்கை அகிலனின் பெயரில் எழுதி வைத்து, ரியல் எஸ்டேட் தொழில் செய்ய உதவியது சகுந்தலா தான்.
அகிலன் ஒரு விஷச் செடி, அவன் ஆசை வார்த்தையில் மயங்காத அஞ்சனாவை எப்படியாவது அடைய வேண்டும் என்று தான் திருமணம் என்ற யுக்தியை பாவித்தான். இல்லையென்றால் கிளைக்கு கிளை பழம் தேடி தாவும் பட்சியைப் போல் அஞ்சனாவை அனுபவித்து விட்டு வேறு பெண்ணை தேடி இருப்பான்.
அஞ்சனாவிற்கு அவனின் இன்னொரு முகம் தெரிய வந்தால் என்ன ஆகுமோ. இது எதுவும் தெரியாத அஞ்சனா தனக்கு பின் பார்வை குறைபாடோடு இருக்கும் தங்கை, தாய் தந்தை கௌரவம் என்று அனைத்தையும் யோசித்து பிரபாகரனை உதறிவிட்டு அகிலனை மணந்து கொண்டாள்.
சகுந்தலா வந்துவிட்டால் என்பதை தெரிந்தும் துர்காவினுடைய தேகம் பதற்றத்தில் நடுங்கியது.
காரணம் சகுந்தலா இல்லை, அவருடன் ரியல் எஸ்டேட் பிசினஸ்க்காக அங்கேயே தங்கி இருந்து நிலம் தேடுகின்றேன் என்று சொல்லும் அகிலனை நினைத்துதான்.
துர்க்கா அவனுக்கு தங்கை முறை வரவேண்டும். ஆனால் அந்த தரங்கெட்டவன் கண்கள் அவளை வரைமுறை இன்றி மேயும், சில நேரம் தவறுதலான தொடுகையும், கொச்சையான பேச்சுக்களும் என்று அவனால் பாலியல் தொந்தரவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றாள்.
என்ன துர்க்கா சிவபுராணம் ஆயிரம் முறை எழுத சொன்னேனே முடிஞ்சுதா இல்லையா?…” என்று கேட்டவாறு அவளின் அறையினுள் சகுந்தலா வரவும்.
அவரின் பின்னோடு துகில் உரிக்கும் வக்ர பார்வையுடன் வந்தான் அகிலன். அவன் பார்வையில் எலும்புகள் உருகி சதைப்பிண்டம் தொய்ந்து நிலத்தில் விழாத என்று இருந்தது துர்க்காவிற்கு.
அலங்காரம் எதுவும் இன்றி வெறும் காவிப் புடவையில் இருந்தவள் அந்த புடவை முந்தானையை இழுத்து போர்த்திக்கொண்டு “இல்ல அத்தை இன்னும் எழுதனும்…” என்று சிறிய குரலில் சொல்ல
“மனச ஒருநிலைப்படுத்தி அந்த சிவனுக்கு உன்ன ஒப்புக்கொடுத்து இருந்தா இந்நேரம் எழுதி முடிச்சிருப்ப.. உன் மனசு தான் கண்டதையும் தேடுமே…” என்று சுடு சொல்லை கொட்ட, வேதனையில் கண்களை மூடி திறந்தாள் துர்க்கா.
இவ்வளவு கூறும் அவர் ஒன்றும் முற்றும் துறந்த துறவி கிடையாது. காலை மாலை பூஜை தவிர்த்து சீரியல் பார்ப்பது, அடுத்தவர் கதை பேசுவது, தன் பெயரில் உள்ள சொத்துக்களை மேற்பார்வை செய்வது என்று சுதந்திரமாகத்தான் இருந்தார்.
ஆனால் துர்காவை தான் கடுமையான விரதம், பூஜை, இல்லை இப்படியான செயல்கள் என்று எப்போதும் (நீ செய்த தவறுக்கான பிரயாசித்தம்) என்று படுத்தி எடுக்கின்றார். இதற்கு அவள் தாய் பிரேமாவதியும் உடந்தை.
“இல்ல அத்தை நாளைக்கு கோயிலுக்கு போக முன்னாடி முடிச்சிடுவேன்…” என்று தாழ்ந்த குரலில் சொல்ல,
அவள் அறையை சுற்றி பார்த்தார் சகுந்தலா. குளிரூட்டி, மென்படுக்கை என்று அனைத்து வசதிகளும் நிறைந்த அறை, ஆனால் எந்த சுக போகஙகளையும் அனுபவிக்க துர்க்காவிற்கு அனுமதி கிடையாது.
அலங்கார பொருட்கள் இல்லை, சுவற்றில் மாட்டப்படும் வண்ண படங்களை எதுவும் இல்லை, அதற்கு பதிலாக வாழ்க்கை தத்துவ வரிகளும், அந்த ஆதி சிவனின் படங்களும் மட்டுமே இருந்தது.
சகுந்தலாவின் கவனம் வேறு பக்கம் திரும்பவும், துர்க்காவை உரசி விடுவதைப் போல் நெருங்கினான் அகிலன், அவள் பதறி விலக,”ம்ம்னு ஒரு தடவ சொல்லு உனக்கு சொர்க்கத்தையே காட்டுறேன்…” என்று அவன் கிசுகிசுப்பாக சொல்ல,
அவள் அவனை அருவருப்பாக முறைத்து பார்க்க, அதற்கிடையில் சகுந்தலா விகர்ணன் விளையாடிவிட்டு அங்கேயே விட்டுச் சென்ற பொம்மையை எடுத்தவர், “என்ன துர்க்கா இது…?” என்று காட்டமாக கேட்க
கொஞ்சம் தடுமாறித்தான் போனாள் துர்க்கா. குழந்தையை அவள் நெருங்க கூடாது, தூக்கக்கூடாது என்று உத்தரவாக கூறியுள்ளார்.
ஏன் என்ற காரணங்கள் தான் அவளை நெருப்பில் உயிருடன் தள்ளிவிட்டது போல் வலித்தது. அவள் சபிக்கப்பட்டவளாம் அதனால் தான் அவள் வயிற்றில் உதித்த உயிர் பூமிக்கு வராமலேயே அழிந்து விட்டதாம்.
அந்த தோஷம் மற்ற குழந்தைகளை அவள் தூக்கினால் அந்த குழந்தைகளுக்கும் வந்துவிடுமாம். அது மட்டும் இன்றி குழந்தையை தூக்கி கொஞ்சினால் அவளுக்கும் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வருமாம், அந்த ஆசைக்காக திரும்பவும் ஆண்துணையை தேடுவாளாம் என்று கூறினார்.
இதை எல்லாம் பிரேமாவதியும் ஆமோதித்தது தான் கொடுமையிலும் கொடுமை. பேரப்பிள்ளைகளை துர்க்காவிடம் விடுவதில்லை. அதனால் தான் பிரபாகரன் மூன்று பெண்கள் வீட்டில் இருக்கின்றீர்கள் தானே என்று கேட்டதற்கு இதில் துர்க்காவை சேர்க்காதே என்று கூறினார்.
ஆனால் நித்தியா யார் பேச்சையும் பொருட்படுத்தாமல் தன் குழந்தையை துர்க்காவிடம் கொடுத்துவிட்டு தன் வேலைகளை செய்வாள்.
தண்டமாக இருக்கும் நாத்தனார் இந்த உதவியாவது செய்யட்டுமே என்றா, இல்லை குழந்தையை பார்த்து சரி அவளது மனது சலனப்பட்டு, வேறு வாழ்க்கை தேடி வீட்டை விட்டு செல்லட்டும் என்றா அவளுக்கே வெளிச்சம்.
“அத்தை சின்ன அண்ணா பையனோடது.. நித்தியா அண்ணியோட தான் வந்தான் விட்டுட்டு போயிட்டான் போல.. ரொம்ப நேரம் இருக்கல ரெண்டு நிமிஷத்திலேயே போயிட்டான்…” என்று பதில் சொல்ல
“உன் வாழ்க்கை முடிஞ்சு போச்சு.. இனி ஒரு வாழ்க்கை உனக்கு கிடையாது.. மனச சலனபடுத்துற எந்த விஷயத்தையும் உன்ன நெருங்க விடாத புரிஞ்சுதா…?” என்று கேட்க
“புரிஞ்சுது…” என்றாள் அமைதியாக,
“சரி நான் என் அறைக்கு போறேன்.. நாளைக்கு கோயிலுக்கு போக எல்லாத்தையும் தயார் படுத்திவை…” என்று விட்டு சகுந்தலா முன் செல்ல,
அகிலன் “ராத்திரி வரட்டுமா?…” என்றான் அவளை நெருங்கி, துர்கா அவனை முறைக்க,
அவள் மேல் கை சந்தை பற்றியவன் “என்னடி! எத்தன நாளைக்கு பத்தினி வேஷம் போடப் போற.. ஏற்கனவே அரிப்பு எடுத்து தானே 14 வயசிலேயே ஒருத்தனோட போன.. சுகம் கண்ட உடம்பு சும்மாவா இருக்கும்.. யாருக்கும் தெரியாம எவனோ ஒருத்தன் கிட்ட தீர்த்துக்க தானே செய்வ..அது ஒரு தடவ நானா இருந்தா என்ன…?” என்ற அவன் கை அவள் கையில் இருந்து இடைக்கு இடமாறும் சமயம் சகுந்தலா “அகி!…” என்று அவனை அழைக்க,
“இனியும் உன்ன விட்டு வைக்கிறதா இல்லடி.. நாளைக்கு உன்ன என் வசமாக்கல நான் அகிலன் இல்லடி…” என்றவன் அறையை விட்டு வேகமாக வெளியேற,
கதவை வேகமாக மூடி தாழ் போட்டவள் அதன் மீது சாய்ந்து நின்று கண்ணீர் உகுந்தாள்.
அப்படி என்ன தவறு செய்து விட்டாள். காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியும் முன், ஒருவனை நம்பி வீட்டை விட்டுச் சென்றாள். மைனர் பெண்ணை ஆசை காட்டி அழைத்து சென்று நாசம் செய்தவன் எங்கோ நன்றாக இருக்கின்றான்.
எது சரி, எது தப்பு என்று சிந்திக்கத் தெரியாத வயதில் அவள் எடுத்த ஒரு தவறான முடிவு, அவள் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது.
செய்த தவறுக்கு தண்டனை என்பதை தாண்டி, வாழ்வதற்கு தகுதியில்லாதவளாக மூச்சு விடவே சிரமப்பட்டு நிற்கின்றாள்.
ஒழுக்க நெறி என்றால் என்னவென்று தெரியும் முன்னமே அவள் தவறி போனதால், அவள் ஒழுக்கம் கெட்டவள் என்று முத்திரை குத்தி விட்டனர்.
ஒற்றை தடுமாற்றம் அவள் ஒழுக்கத்தை சீர்தூக்கி பார்க்கின்றது. இந்த அவல நிலை என்று மாறுமோ!, அவள் உதட்டில் பூத்த விரக்தி சிரிப்பு அவள் இறக்கும் வரை மாறாது என்று எடுத்துரைத்தது.
குளியல் அறை சென்று நன்கு குளித்தாள். அகிலனின் விரசமான பார்வையில் மூழ்கிய தான் உடலை தீவைத்துக் கொளுத்த தான் ஆசை. ஆனால் அதுவும் அவளால் முடியாமல் போக நீர் கொண்டு கழுவிக் கொண்டாள்.
****
அதே நேரம் நித்தியாவோ குளியலறையில் சவரரை திறந்து விட்டு, குளிக்கும் சத்தம் வெளியே கேட்பது போல் செய்தவள், தன் ஃபோனிலிருந்து சி.பி (க்ரைம் பார்ட்னர்) என்ற ஆங்கில எழுத்தில் பதிவு செய்து வைத்த நம்பருக்கு அழைப்பை எடுத்தாள்.
அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும் “இதுக்கு மேல இந்த அமுக்கினிய என்ன சொல்லி உசுப்பேத்துறதுனு எனக்கு தெரியலடி.. அவள இந்த வீட்ட விட்டு துரத்த முடியும்னு எனக்கு தோணல…” என்று எடுத்ததும் எண்ணெயில் போட்ட கடுகாக பொறிய,
அந்த பக்கம் “எதுக்கு டென்ஷன் ஆகுற? எனக்கும் நம்ம பொறுமையா டீல் பண்ணுனது போதும்னு தோணுது.. கண்டிப்பா அவளா எதுவும் பண்ண மாட்டா.. அதனால நம்ம அடுத்த திட்டத்த நாளைக்கு செயல்படுத்துவோம்.. நாளைக்கு அவள் கோவிலுக்கு வருவாளா?…” என்று வீட்டின் பின்புறம் இருட்டில் நின்று கொண்டு கேட்டாள் அஞ்சனா.
“வருவா.. வருவா.. அதான் அந்த சூனியக்கார கிழவி வந்து இருக்கே.. காலைல தான் அத்தன பிட்டு போட்டு அவ மனச கலைச்சு விட்டேன்.. இந்த சூனியக்காரி வந்து திரும்பவும் தூபம் போட்டுவிட்டு இருக்கும்.. எல்லாம் வேஸ்டா போச்சு…” என்று நித்யா அழுத்து கொள்ள,
“சரி விடு இனி அடிமேல் அடி எல்லாம் அடிக்க வேணாம்.. அப்படியே மொத்தமா நகர்த்த கடப்பாரைய சொருகுவோம்…” என்ற அஞ்சனா
“நாளைக்கு துர்க்கா கோயிலுக்கு வரும்போது நீயும் கூடவா…” என்று தன் திட்டத்தை சொல்ல,
அதை சிரத்தையாக கேட்டுக் கொண்டிருந்த நித்தியா “எல்லாம் சரிதான்டி.. ஆனா என் நாத்திய நம்ப முடியாது.. நம்ம திட்டத்துல மண்ணள்ளிப்போட்டுடு திரும்பவும் இந்த வீட்டுலயே வந்து குத்த வச்சு உட்கார்ந்துக்கும்…” என்று சொல்ல
“அப்படி நடந்தா நானே களத்துல இறங்கிடுவேன் நித்தி.. முதல்ல இந்த திட்டத்த நாளைக்கு பிசிறு தட்டாம செஞ்சு முடிப்போம்.. முக்கியமான படியே உன் கையில தான் இருக்கு.. கச்சிதமா முடிச்சுடு…” என்று அஞ்சனா சொல்ல
“கவலைய விடுடி நாளையோட என் நாத்திக்கு ஒரு முடிவ கட்டிட்டு நான் யாருன்னு காட்டுறேன்…” என்ற நித்தியா “சரிடி நாளைக்கு பாக்கலாம்.. பாய், குட் நைட்…” என்று அழைப்பை துண்டித்து விட்டு, பெயருக்கு காக்கா குளியல் போட்டு விட்டு வந்து மகன் அருகில் படுத்துக்கொள்ள,
சற்று நேரம் கழித்து அறையிக்கு வந்த கிருபாகரன் மனைவி மகனை ஒரு நொடி உள்ளம் நெகிழ பார்த்துவிட்டு,
அறையின் விளக்கை அணைத்தவன், மனைவியின் அருகில் வந்த படுத்துக் கொண்டு, அவளை வயிற்றோடு கையை போட்டு பின் இருந்து அணைத்து கொண்டு, கழுத்தில் முகம் புதைத்தவன் முக்கால் உரசி அவள் வாசத்தை ஆழ்ந்து சுவாசிக்க அவன் ஆண்மை முறுக்கிக் கொண்டது.
மந்தகாஷ வாசம் வீசும் மனைவியின் கழுத்தில் குட்டி குட்டி முத்தங்கள் வைக்க, கூச்சத்தில் உடலை நெளித்தவள், அவள் வயிற்றில் இருந்த கணவனின் கணத்த கையை எடுத்துவிட்டு “பேசாம தூங்குங்க…” என்று சொல்ல
“ஏன்டி!…” என்றான் கிறக்கமாக அவள் காது மடலில் முத்தம் வைத்து,
“இன்னைக்கு முடியாது…” என்று நித்தியா வெடுக்கென்று சொல்ல
“ஏன் என்னாச்சு?…” என்றான் பரிவாக,
“ஆஹ், பூனை குறுக்கால போச்சு…” என்று அவள் நக்கலாக சொல்ல
“ஏய் என்னடி?…” என்றான் கிருபாகரன் கேட்டது கிடைக்கவில்லை என்ற எரிச்சல் குரலில் தெரிந்தது.
அவளும் வெடுக்கென்று அவன் புறம் திரும்பியவள், ஒற்றை கையில் கட்டைவிரலை விட்டு நான்கு விரல்களை மடித்து “என்ன? என்ன?…” என்றாள் சண்டைக்காரி போல்.
மனைவி எகிறவும் புருவம் சுருக்கியவன் “என்னாச்சு உனக்கு?.. என்ன கோவம்? பத்து நாளா தள்ளியே இருக்க…” என்று கேட்க
“ஓஹோ படுக்கையில தள்ளி வச்சா தான் பொண்டாட்டி கோவமா இருக்கான்னு தெரியுதோ!.. எனக்கு என்ன கோபம்.. எனக்கு வருத்தம் தான் என் நாத்தனார் தவ வாழ்க்கை வாழும் போது நான் எப்படி சந்தோஷமா இருக்க முடியும்…” என்று நித்தியா சொல்ல
கிருபாகரனுக்கு புரிந்து விட்டது அவளின் பிரச்சனை என்னவென்று. திருமணமான இந்த நான்கு வருடங்களில் இதுதானே நடக்கின்றது.
அவள் எத்தனையோ நாட்கள் அவனுக்கு புரிய வைக்க முயன்று தோற்றுவிட்டாள். துர்க்காவின் வாழ்க்கை வேறு, நம் வாழ்க்கை வேறு என்று, இவனின் மண்டைக்கு தான் புரியவில்லை.
“இங்க பாரு நித்தி திரும்பத் திரும்ப என்ன டார்ச்சர் பண்ணாத.. உனக்கு எந்த வகையில நான் குறை வச்சேன்.. இந்த ரூமுக்குள்ள உனக்கு தேவையானது எல்லாம் கிடைக்குது தானே.. வெளிய கொஞ்சம் பாத்து நடந்துக்கனு சொல்றேன் இதுல என்ன இருக்கு…” என்று அவன் சாதாரணமாக தோளை குலுக்க
“ஏது எந்த குறையும் இல்லையா! அறைய விட்டே வெளியே வராத உங்க தங்கச்சிக்கா அறைக்கு வெளிய நீங்க காட்டுற அந்நிய தன்மை என்ன எவ்வளவு கஷ்டப்படுத்தும்னு உங்களுக்கு புரியலல.. சரி புரிய வேணாம்.. இந்த அறைக்குள்ளையும் நீங்க மெயின்டன் பண்ற இடைவெளிய கடைபிடிங்க.. தள்ளி படுங்க…” என்று நித்தியா சொல்ல
“எனக்கும் உன் மேல ஆசை இல்லாமலா!.. அத எல்லாம் இப்படித்தான் காட்ட முடியுது.. அத புரிஞ்சுக்காம இப்ப என்ன புதுசா தள்ளி படுக்க சொல்ற.. நானே எல்லாத்தையும் மறந்து நிம்மதியா இருக்குற கொஞ்ச நேரம் இது தான்…” என்று கிருபாகரன் முகத்தை தூக்க
“ரூமுக்குள் மட்டும் ஆசைய காட்டுற புருஷன் எனக்கு வேணாம்.. கட்டின பொண்டாட்டி கிட்ட போயிட்டு வாரேன்னு சொல்லிட்டு போக கசக்குது.. இப்ப மட்டும் இனிக்குதோ.. இங்க பாருங்க நீங்க மாறுற வரைக்கும் நான் இறங்கி வரப்போறதில்ல…” என்றவள் மகனை நடுவில் படுக்க போட்டுவிட்டு, மற்றைய பக்கம் படுத்து விட்டாள்.
இத்தனை நாட்கள் அறிவுரை கூறிய மனைவி இப்போது முரண்டு பிடிக்க, என்ன செய்வது என்று யோசனையிலேயே தூங்கினான் கிருபாகரன்.
error: Content is protected !!
அப்போ நித்தியா துர்காவுக்கு நல்லதுதான் பண்ண நினைக்குறளா 🤔….
அந்த கேடுகெட்டவணைய அஞ்சனா கல்யாணம் பண்ணிருக்க 🤦♀️. நாதாரி தங்கச்சி முறை தானே எப்படி அசிங்கமா பேசுறான் பாரு 😡😡.
சகுந்தலா உன் குனத்துக்குத்தான். உனக்கு குழந்தையே கொடுக்கல போல…
துர்க்கா வா எப்படி எல்லாம் பேசுற.