ஊஞ்சலாடும் முகிலே 26
அத்தியாயம் 26
இன்னுமே மகன் சொல்லி தான் கேட்ட செய்தியை நம்ப முடியாத அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் வாயடைத்து அமர்ந்திருந்தார் லதா.
Advertisement
அவரைப் பார்க்க பார்க்க சிரிப்பு தான் வந்தது கீர்த்திஸ்வரனுக்கும்.
“ம்மா!” என மீண்டும் கொஞ்சமாய் சிவந்த முகத்தோடு சிணுங்கலாய் ஈஸ்வர் அழைக்கவும் தான் உணர்வே வந்தது லதாவிற்கு.
Advertisement
Advertisement
“இப்போ நீ என்ன சொன்ன? என்னவோ சொன்னியே! அதுவும் ஒரு பேர் சொன்னியே! என்ன பேரு?” தான் கேட்ட செய்தி நிஜம் தானா என தெரிந்து கொள்ள, உறுதி செய்து கொள்ள கேட்டார் லதா.
“மறுபடியும் எல்லாம் சொல்ல முடியாது. நீங்க கேட்டது சரி தான்!” என அவன் வேண்டுமென்றே முறுக்கிக் கொள்ள, மகனின் இந்த வித கேலிப் பேச்சில் இன்னும் மூச்சைடைத்து தான் வந்தது நம்ப முடியாத அளவிற்கு.
Advertisement
“ஈஸ்வர்!” என்றவருக்கு வாய் பேசவே முடியவில்லை. வார்த்தைகளும் தேடிக் கிடைக்கவில்லை.
“ம்ம் சொல்லுங்க! பல்லவி வேண்டாமா உங்களுக்கு மருமகளா?” என இப்பொழுது நேராய் புன்னகை முகமாய் அவன் கேட்க, பளிச்சென்று ஒரு மின்னல் லதா முகத்தில்.
மதிய நேரம் ஓய்வாய் தன் அறையில் அமர்ந்திருந்தார் லதா. மகன் கீர்த்திஸ்வரன் வரவை அந்நேரம் அவர் எதிர்பார்க்கவே இல்லை.
“வா ஈஸ்வர். கால் பண்ணவே இல்லை வர்றேன்னு. சாப்பிட வைக்கவா?“ என எழுந்து கொள்ள இருந்தவரை,
“உங்ககிட்ட பேசலாம்னு தான் வந்தேன் ம்மா!” என அமர வைத்தான் ஈஸ்வர்.
“சொல்லு ஈஸ்வர்!” என்றவர் என்னவோ என்று பார்க்க, சில நிமிடங்கள் அமைதியாய் அமர்ந்திருந்தவனை வித்தியாசமாய் தான் பார்த்தார் லதா.
காலை தான் பல்லவி வீட்டிற்கு வந்துவிட்டு சென்றிருந்தாள். அஞ்சலி பள்ளியில் டூர் செல்வதாக சொல்லி அஞ்சலி என்னென்ன கொண்டு செல்ல வேண்டும் என பல்லவியும் அஞ்சலியும் சேர்ந்து தான் தயார் செய்தனர். இரண்டு மணி நேரம் இருந்துவிட்டு தான் கிளம்பி சென்றிருந்தாள் பல்லவி.
அன்று சனிக்கிழமை வேறு. அவர்கள் இருக்கும் வரை ஈஸ்வரும் அங்கே தான் அவர்களை பார்வையிட்டபடி அமர்ந்திருந்தவன் பல்லவி சென்றபின் தான் தானுமே கிளம்பி வெளியில் சென்றிருந்தான்.
இதில் அன்னையின் லதா மீதான பாசமும் பிடிப்பும் அவரின் பார்வை மாற்றமும் என என்னவோ இன்றே அன்னையிடம் பேசிவிட சொல்ல, மதியம் வரை வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு அன்னையிடம் வந்திருந்தான்.
“சொல்லு ஈஸ்வர்! எதாவது முக்கியமான விஷயமா?“ என லதா கேட்கவும் பெரு மூச்சைக் கொடுத்து நிமிர்ந்து அமர்ந்தவன்,
“நான் பல்லவியை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்குறேன் ம்மா!” என்று சொல்லி இருந்தான்.
அப்போது அதிர்ச்சியில் அமர்ந்தவர் தான் மீண்டு வரவே அத்தனை நேரமெடுத்தது.
இதோ இப்போதும் “பல்லவி வேண்டாமா உங்களுக்கு மருமகளா?” என மீண்டும் அவன் கேட்கவும்,
“ஈஸ்வர்!” என அவன் கைகளைப் பற்றிக் கொள்ள, புன்னகையோடே பார்த்திருந்தான் அவரை. அன்னையை தெரியாமலா அவனும் பேச வந்தது?.
“ம்ம் என்னம்மா?” என்றவன்,
“ரொம்ப நாளா உங்ககிட்ட இதை பேசணும் நினைச்சேன். இப்ப தான் முடியுது!” என்றும் சொல்ல,
“நிஜமாவா சொல்ற? என்னால நம்பவே முடியல ஈஸ்வர்” என்றவரின் சந்தோஷம் அவர் மட்டுமே அறிந்தது.
அதுவும் இப்படி திடீரென மகன் வந்து சொல்லவும் இன்னும் திகைப்பு மாறாமல் தான் அவனிடம் உளறிக் கொண்டிருந்தார்.
“நிஜமா தான் ம்மா சொல்றேன். நான் பொய் சொல்வேனா?” என்றான் அன்னை முகம் பார்த்து.
“அப்படி சொல்லல டா.. நான் எதிர்பார்க்கவே இல்ல. பல்லவி…. அவளை நீ….” என்றவர் கைகளால் வாயை மூடி பின்,
“எனக்கும் பல்லவின்னா உயிர் டா.. நான் கூட நினைச்சிருக்கேன். ஆனா… நான் எத்தனை நாள் மனசுக்குள்ள நினைச்சு தவிச்சேன் தெரியுமா?” என்றார் உணர்ச்சி மிகுதியில் வார்த்தைகள் கோர்வையாய் வராமல்.
“தெரியும்! கெஸ் பண்ணேன்” என்றவனிடம் இப்போதும் அதே புன்னகை தான். ஆனால் கிருஷ்ணவேணிக்கு தான் இன்னமும் ஆச்சர்யம் அடங்கவே இல்லை.
அவனை அவன் உணர்த்திய அதிர்ச்சி கூடவே தன்னை அவன் கண்டு கொண்டானா என அதிர்ச்சி அத்தோடு பல்லவியை அவன் மனதில் வைத்திருக்கிறான் எனும் செய்தி என மகன் அத்தனை மகிழ்ச்சியை கொடுத்துக் கொண்டிருந்தான்.
“நான் இப்ப என்ன டா பண்ணனும்?” என்றவர் மகிழ்ச்சியின் அளவை வெளிப்படுத்த தெரியவில்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கூட தெரியாமல் தலைகால் புரியாத நிலையில் தான் இருந்தார்.
“ம்மா!” என அதில் கீர்த்திஸ்வரன் வாய்விட்டு சிரிக்க,
“அம்மாக்கு தெரியல ஈஸ்வர். ஒரு மாதிரி சந்தோஷத்துல நெஞ்சடைக்குது. என்னை மாதிரியே நீயும் நினைச்சியானு இன்னும் நம்ப முடியல. ஆனா எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” என்றவர்,
“இரு இரு! இப்பவே எதாவது ஸ்வீட்டா செய்யுறேன்!” என்று எழப் பார்க்க,
“முதல்ல நான் பேசிக்குறேன் ம்மா!” என்று அவரை நிதானப்படுத்தினான்.
“சொல்லு டா!” என்றார் அவன் கன்னம் தாங்கி. அதில் இன்னுமே சிரிப்பு தான் வந்தது மகனுக்கு.
“வேற எதுவும் நீங்க கேட்கலையே?” என்றதும் லதா புரியாமல் அவனைப் பார்க்க,
“பல்லவிகிட்ட பேசினேனானு?” என்றான் அவனே.
அதை இவ்வளவு நேரம் கேட்கவெல்லாம் தோன்றவில்லை லதாவிற்கு.
இப்பொழுது அவன் கேட்டுமே, “நீ அவகிட்ட பேசலை தானே?” என்று கேட்க, ஈஸ்வர் அமோதிப்பதாய் தலையாட்டி மெச்சுதலாய் பாத்தும் வைக்க,
“பல்லவிகிட்ட பேசியிருந்தா என்கிட்ட சொல்லிருப்பாளே!” என்றதும்,
‘இதையுமா?’ என நினைத்துக் கொண்டது ஈஸ்வரின் மனது.
பல்லவியை திருமணம் செய்து கொள்ள என்று மகன் கேட்டதே பல்லவியிடம் அவன் பேசியிருக்க வாய்ப்பில்லை என்று தான் நினைத்தார்.
“நீ என்கிட்ட சொன்னதுல எனக்கு முழு சம்மதம் ஈஸ்வர். வேற என்ன சொல்லணும் எனக்கு தெரியல!” என்ற லதா,
“அடுத்து கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கணும் இல்ல? இல்லை நீ பல்லவிகிட்ட பேசிட்டு ஆரமிப்போமா?” என்று கேட்க,
“பார்த்திங்களா! சந்தோஷத்துல அப்பாவை மறந்துட்டீங்க!” என்றான் பேச்சோடு ஒற்றை புருவம் உயர்த்தி.
“ப்ச்!” என முகம் தொங்கிப் போனது லதாவிற்கு.
அவரும் மறக்கவெல்லாம் இல்லை.. நிச்சயம் கணவர் ஏற்று கொள்ள மாட்டார் என தெரியும். ஆனாலும் இதில் தான் தலையிட்டு திருமணத்தை நடத்தி வைத்தே ஆக வேண்டும் என்ற அளவில் அவர் யோசிக்க ஆரம்பித்தது ஈஸ்வர் அறியாதது.
“என்னம்மா?” கீர்த்திஸ்வரன் அழைக்க,
“உனக்கு என்ன தோணுது?” என்றார் மகனிடம் லதா.
“உங்களுக்கு என்ன தோணுதோ அதே தான்!” என அவனும் சொல்ல, சில நொடிகள் தான் அமைதி எல்லாம்.
“அதெல்லாம் அம்மா பாத்துக்குறேன். நீயே வாய் திறந்து ஒண்ணு கேட்டிருக்க. அதுவும் அம்மாக்கும் ரொம்ப பிடிச்ச மாதிரி… அதை எப்படி மறுக்க? நல்லபடியா நடக்கும் பாரு” என்றார் லதாவே.
“ஹ்ம்! நடக்கும். நடக்கனும்!” என்றவனும்,
“ஆனா அவ படிச்சு முடிக்கட்டும் ம்மா!” என்று சொல்ல,
“அதை தான் நானும் யோசிச்சேன். சும்மாவே நீ பார்ட் டைம் வேலை வாங்கி தரலைனு அப்பப்ப சொல்லிக் காட்டுறா. இப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டா காலம் பூரா உன்னால தான் அவ சின்ன அம்பானி ஆகலனு சொல்லிக் காட்டுவா!” என்று அவர் சொல்லியதில் அத்தனை சிரிப்பு கீர்த்திஸ்வரனிடம்.
அதை ஆசையாய் பார்த்தவரும், “இப்பவே அவளை பார்க்கணும்னு இருக்கே!” என்று வேறு சொல்ல,
“ம்மா! எதுவும் காட்டிக்காதீங்க. உங்ககிட்ட சொல்லணும் தோணுச்சு. சொல்லிட்டேன். அவ்வளவு தான். அப்பாகிட்ட கூட நான் பேசிக்குறேன். ஆனா இப்போ இல்லை. அவ காலேஜ் முடிக்கட்டும்!” என மேலும் அழுத்தி அவன் சொல்ல,
“ம்ம் ஒரு வருஷம் கூட இல்லையே! இப்பவே ஒரு மாசம் ஓடிருச்சு. இடைல லீவ் வரும். அப்புறம் ஒரு ப்ராஜெக்ட் தான்னு கூட சொன்னா” என கணக்கிட ஆரம்பித்துவிட்டார் லதா.
அன்னையிடம் சொல்லிவிட்டாலும் அடுத்தடுத்த நாட்களை ஒருவித எதிர்பார்ப்புடன் தான் கடந்து வந்தான் ஈஸ்வரும்.
அதுவும் அன்று காலை தான் பல்லவி வந்து சென்றிருக்க, அடுத்து இனி அவள் வர ஒரு வார காலமாவது ஆகுமே என லதாவும் அவள் வரவை எதிர்பார்த்திருந்தனர்.
இடையில் அழைத்தால் வேறு, “நான் ரொம்ப பிஸி. நீங்க கூப்பிட்டதும் ஓடிவர நான் என்ன சும்மாவா இருக்கேன்!” என அத்தனை பேசுவாளே என காத்திருந்து ஒரு வாரம் தாண்டியும் ஓடிவிட, பல்லவி வந்த பாடு தான் இல்லை.
ஈஸ்வரும் கவனித்தான் தான் என்றாலும் தேர்வு, படிப்பு, லேப் என கதை சொல்வாள் தானே என நினைத்து விட்டிருக்க, லதா வாய்விட்டே புலம்பிவிட்டார்.
“இவளுக்கு இவ்வளவு ஏத்தம் பாரு. தேடுவேன்னு தெரிஞ்சே தேட வைக்குறா!” என மகனிடம் பொருமிக் கொள்ள, அடுத்த ஒரு வாரமும் கடந்திருந்தது. அப்போதும் பல்லவி வந்திடவில்லை.
கூடவே அந்த ஞாயிறு, “ம்மா! பல்லவி அண்ணி கால் பண்ணவே இல்லை. நான் கால் பண்ணினாலும் ரிச் ஆகல. எப்ப வந்தாங்க வீட்டுக்கு?” என அஞ்சலி கேட்க,
“என்னவோ தெரியல அஞ்சலி. ரெண்டு வாரமாச்சு. வரவே இல்லை. போன் கூட பண்ணல. என்ன பன்றாளோ. நேர்ல பார்த்தா மட்டும் லதாம்மான்னு கொஞ்சி ஏமாத்திருவா. ஒரு போன் பண்ணிருக்காளா!” என புலம்ப ஆரம்பித்துவிட்டார் லதா.
இதுவரை நேரடியாய் பல்லவியைப் பற்றி அன்னை அஞ்சலி என யாரிடமும் கீர்த்திஸ்வரன் கேட்டதில்லை. அவர்களாய் தான் எதுவோ ஒன்றை அவனிடம் சொல்லிக் கொண்டிருப்பர்.
இப்பொழுது எந்த ஒரு தகவலும் அவளைப் பற்றி கிடைக்கவில்லை என்றதும் அன்னையிடம் அவனுமே கேட்டுவிட்டான்.
“போன் போகல டா ஈஸ்வர். அவளும் பண்ணல. வரவும் இல்ல. இத்தனை நாள் எல்லாம் இப்படி வராம இருக்கவே மாட்டா!” என்று அவனிடமும் புலம்ப, ஈஸ்வரும் என்னவாய் இருக்கும் என்று யோசித்தபடி தான் இருந்தான்.
மேலும் இரண்டு நாட்கள் செல்ல, “பல்லவி அம்மா நம்பர் இருந்தா கால் பண்ணி பாருங்க ம்மா!” என்றுவிட்டான் அவனே.
இப்படி எல்லாம் கவனக்குறைவாய் அலைபேசியை கூட கவனிக்காமல் இருக்க மாட்டாளே என தான் அவனுக்கு சந்தேகமே! அதுவும் உடல்நிலை எதுவும் சரியில்லையோ என்ற அளவில் தான் யோசித்தான் அவனும்.
பல்லவி அன்னைக்கு முழு அழைப்பும் சென்றுமே அவர் ஏற்கவில்லை என்றதும் லதாவுமே இருவரில் யாருக்கு என்ன பிரச்சனையோ உடல்நிலை சரியில்லையோ என பயந்து அடுத்த நாள் பல்லவி வீட்டிற்கே கிளம்பிவிட்டார் ஈஸ்வருடன்.
