Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கானலானாயோ காதலே-29

    நீரதி தேசிகன் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது.

    அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் தனது ஜாகையை மாற்ற ஆழியன் அனைத்து உதவிகளையும் செய்தான்.



Advertisement

    “நீ கூட தனியா தான் இருக்கணுமா செல்வம் அம்மாக்கு முன்ன மாதிரி முடியலைடா. நீராவாது கூடமாட வேலை பார்த்து இருக்கலாம் ல “என்று வளர்மதி உருக

Advertisement

    “அதான் சமைக்க ஆள் போட்டு இருக்கேனேம்மா மேல் வேலைக்கும் ஆள் இருக்கு உங்களுக்கு ஏதாவது முடியலைனா பார்க்க நாங்க இருக்கோம்.”என்ற ஆழியன் “ரதிக்கு எங்க கடையை பார்க்கணும் அவ வீட்டிலேயே இருக்க முடியாது ம்மா”என்று முடித்துக் கொண்டான்.

Advertisement

    “ஏன் புதுசா கடையை பார்க்க”என்று இழுத்து பழையபடி முதலில் இருந்து ஆரம்பித்தார் வளர்மதி.

Advertisement

    “வெளிப்படையாவே பேசுறேன் ம்மா. உங்க கூட மறுபடியும் ஒண்ணா இருந்தா சமையல் ஒண்ணாகும். அதோடு உங்க அண்ணன் வீட்டுல இருந்து வருவாங்க. உங்க மக வருவாங்க. அவ்வளவு தூரம் பேசின பிறகு அவங்களுக்கு ஏன் என் பொண்டாட்டி செய்யணும். அவ செஞ்சாலும் நான் செய்ய விட மாட்டேன்.”என்றான் தீர்க்கமாக.

    “இன்னும் நடந்ததையே நினைச்சுட்டு இருக்கியாடா நிலா கூட வருத்தப்பட்டு அழுதா”என்று சமாதானம் செய்ய முற்பட

    “ப்ப்ச் யார் அழுதா எனக்கு என்ன வந்துச்சு மா. அதை எல்லாம் கவனிக்க நேரம் இல்லை எனக்கு. அப்பா கேட்டதால இங்கே வந்தேன்”என்றான் பட்டுக் கத்தரித்தாற் போல

    “என்ன இருந்தாலும்”

    “ம்மா சும்மா பழைய மாதிரி பேசாதீங்க. மறுபடியும் ஒண்ணா இருக்க தான் வரச் சொன்னீங்கன்னா நாங்க வெளியே இருந்துக்கிறோம்”என்றான் அழுத்தமாக.

    நீரதி ஒரு வார்த்தை பேசவில்லை.

    என்னவோ செய்யுங்கள் என்று எண்ணியபடி பால் காய்ச்சி தன் போர்ஷனில் இருந்து கொண்டாள்.

    காலையில் எழுந்ததும் சமையலை முடிப்பவள் ஆழியனையும் பிள்ளையையும் அனுப்பி விட்டு தானும் கடைக்கு கிளம்பி விடுவாள்.

    அனைத்து உணவுகளும் பேக் செய்யப்பட்டு வீட்டையும் பூட்டி விட்டு தான் கிளம்புவாள்.

    “அவ்வளவு நம்பிக்கை இல்லாமையா போச்சு. வீட்டை பூதம் காக்குற மாதிரி இல்ல பூட்டுற”என்று நீட்டி முழக்குபவரை கண்டு கொள்ளாமல் கிளம்பி விடுவாள். அதற்கே வளர்மதிக்கு பொங்கி வரும் ஆத்திரம். எப்படியும் ஸ்வாதியை தன்னிடம் விட்டு விட்டு தான் வேலைக்குக் கிளம்புவாள் அவர் எதிர்பார்க்க அவளோ ஸ்வாதியை கையோடு தூக்கிச் சென்று விடுகிறாள். சொந்த கடையில் யார் மறுப்பு சொல்லப் போகிறார்கள்

    “இதுக்கா அவனை இங்க வரவச்சீங்க. நம்மளை பாத்துக்க வருவாங்கனு பார்த்தா அவ அவ வேலையை பாத்துட்டு இருக்கா”என்று தேசிகனிடம் முறைக்க

    “என் மகனுக எங்கூடவே இருக்கணும் னு தான் நினைச்சேன். மத்தபடி பிரிவு பிரிவு தான்”என்று முடித்துக் கொண்டார் தேசிகன்.

    வளர்மதியால் எதுவும் பேச இயலவில்லை.

    எல்லாம் சரி தான் என் மகளை யாருமே நினைக்கவில்லையே என்ற ஆதங்கம். ஏன் அவரின் ஆசை மருமகள் கூட இதைப் பற்றி பேசவில்லையே என்ற எண்ணம் முகிழ்க்க அதை தரங்கினியிடமே கேட்டு விட்டார் வளர்மதி.

    “எதுக்குத்த உங்க மவ வாய்க்கு பத்தாம ஏதாச்சும் பேசி வைக்கவா…”

    “அதுக்காக அவளை அப்படியே விட்டுடுவிங்களாடி”என்று ஆதங்கமாய் கேட்க

    “உங்க மகளை வந்து நீரா கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லுங்கத்தை. வேணும்னா மாமா கிட்ட அதுக்கு அப்புறம் சொல்றேன்”என்றாள்

    “தரு நீயா இப்படி பேசற”என்றதும் “எனக்கும் பொண்ணு இருக்கேத்த அவளையும் ஏதாவது பேசினா கேட்டுட்டு சும்மா இருக்க முடியுமா… மன்னிப்பு கேட்க சொல்லுங்க அப்ப தான் அடுத்த விஷயம் எல்லாம்”என்று முடிவாய் பேச பவ்யா நான் அவ்விடத்திலேயே இல்லை என்பது போல நகர்ந்து கொண்டாள்.

    மகள் சொத்தில் பங்கு கேட்டது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தானும் போய்விட்டால் அவளுக்கு பிறந்த வீட்டு ஆதரவே இல்லாமல் போய்விடுமே என்று பயந்தார். பொன்னியின் மரணம் வேறு அவரை வெகுவாக பாதித்திருக்க எப்படியாவது கணவனை கரைத்து மகளுக்கான ஆதாரத்தை கொடுத்திட வேண்டும் என்று எண்ணினார்.

    “நிலாவை வந்து மன்னிப்பு கேட்க சொல்லு. சொத்து கேட்டதைக் கூட பெத்தவனா மன்னிச்சி ஏத்துக்கிறேன்”என்று தேசிகன் கூற வளர்மதிக்கு இன்னுமே அச்சம் கூடியது.

    ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் நிலா கண்ணீரும் கம்பலையுமாக வீட்டிற்கு வந்தாள்.

    “அம்மாடி நிலா”என்று அவளின் கோலம் கண்டு முதலில் அலறியது என்னவோ வளர்மதி தான்.

    “நான் இனிமே அங்கே போகவே மாட்டேன்”என்று வாசலில் செருப்பை கழற்றும் போதே ஆரம்பித்து தான் உள்ளே வந்தாள் நிலா.

    “என்னம்மா ஆச்சு… மாப்ள எதுவும் சண்டை போட்டாரா அய்யோ இதென்னடி கன்னம் இப்படி வீங்கி இருக்கு…இதை கேட்பாரு இல்லையா “என்று வைத்த ஒப்பாரியில் தரங்கினி தன் போர்ஷனில் இருந்து வெளியே வந்து பார்த்தாள்.

    “என்னாச்சு நிலா”என்று சற்று பதற்றமாக அவள் வர நிலா தன் அம்மாவைத் தவிர வேறு எங்கும் பார்க்கவில்லை.

    “என்னன்னு சொல்லேன்டி அண்ணி கேட்கிறா தானே”என்று வளர்மதி அதட்ட

    “அவர் என்னை அடிச்சுட்டாரு ம்மா”என்று மீண்டும் ஒரு அழுகை.

    ‘என்னத்த பேசி வச்சியோ’என்று நினைத்த தரங்கினி”எதுக்கு அடிச்சாரு நீ என்ன பண்ண”என்று வினவினாள்.

    “நான் என்ன பண்ணேனா நான் எல்லாம் எதுவும் செய்யலைண்ணி. அவர் அக்காக்காரி வந்தா. என்னத்த பேசினாங்களோ நைட் ஷிப்ட் வேலைக்கு போயிட்டு வந்த மனுசன் அவங்க கூட பேசிட்டு தான் வந்தார்.வந்ததும் பளார்னு அறைஞ்சுட்டாரு”என்றாள் அழுதுகொண்டே.

    “எவ்வளவு திமிரு இருக்கணும் அந்த சிறுக்கிக்கு. இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு கேட்காம விடறதுல்ல உங்கண்ணனுக வரட்டும் வச்சுக்கிறேன் பஞ்சாயத்து”என்று வளர்மதி ஆவேசமாய் கொண்டையாக முடியை அள்ளி முடிந்தார்.

    பவ்யா அப்போது தான் அவர்கள் பேச்சைக் கேட்டபடி வந்தவள்”நிலா பேசிட்டு வந்ததுக்கு எல்லாமா அடிப்பாங்க புதுசா இருக்கே.”என்றாள்.

    “நீ என்ன பேசுற பவி. இவ நாத்தனா வந்தா எப்பவும் அப்படி தான் வம்பிழுக்காம போறதே கிடையாது. இத்தனை நாளும் இவ அண்ணனுகளுக்கு பயந்து அடக்கி வாசிச்சதுக இப்ப இவனுக போக வர இல்லைன்னதும் ஆட்டம் காட்டுறானுக. இருக்கட்டும் பேசிக்கிறேன்”என்று எகிறிய வளர்மதியை இதழோரம் அடக்கிய ஏளனச் சிரிப்புடன் நகர்ந்தாள் பவ்யா.

    தரங்கினியோ”உங்க அண்ணன் வரட்டும் நிலா. நீ போய் ரெஸ்ட் எடு”என்று அவளும் நகர்ந்து விட தாயும் மகளும் இணைந்து அவளின் புகுந்த வீட்டை வெறும் வாயில் அவலாய் மென்றனர்.

    பிரச்சினையை விரிவாக பேச நிலா தயாராகவே இல்லை. அவளிடம் இருந்து திரும்பத் திரும்ப கேட்ட ஒரே விஷயம் என் புருஷன் என்னை அடிச்சுட்டாரு என்பது தான்.

    பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தேசிகன் ஹரிஹரனுக்கே அழைத்து விட்டார்.

    அவனோ நிலாவிற்கு புத்திமதி சொல்லி அனுப்புங்கள் என்று சொல்லி இணைப்பைத் துண்டிக்க தேசிகனுக்கு மறுபடியும் நெஞ்சுவலி வருவது போல் இருந்தது.

    “அங்கே நீ என்ன பேசினன்னு தெரியாமல் நான் எதுவும் செய்ய முடியாது நிலா”என்று சொல்லி விட்டார் தேசிகன்.

    “ஏன் ண்ணே நீங்க கூட கேட்க மாட்டீங்களா”என்று ஆழியன் பக்கம் திரும்ப அவனோ அங்கிருந்து விறுவிறுவென தன் அறைக்கு சென்று விட்டான்.

    அமுதனாவது அங்கே நின்றான். தீபனை பவி பார்த்த பார்வையில் அவனுமே அங்கிருந்து நகர முற்பட்டான்.

    “ஏன்டா எல்லாம் பொண்டாட்டி பின்னாடி போனா என் பொண்ணு பிரச்சினைக்கு என்ன தான் தீர்வு. அவ்வளவுக்கா என் பொண்ணு உங்களுக்கு ஆகாம போயிட்டா. கொஞ்சம் கூட நெஞ்சுல ஈரம் இல்லாம இருக்கீங்களே உங்களை எல்லாம் நான் தான் பெத்தேனா”என்று வளர்மதி துவங்கியதில் இம்முறை கொதித்தது என்னவோ தரங்கினி.

    “என்னத்தை சும்மா பொண்டாட்டி பின்னாடி போனாங்கனு பேசிட்டு இருக்கீங்க.உங்க மக வந்ததில் இருந்து அடிச்சாங்கனு தான் சொல்றாளே தவிர எதுக்கு அடிச்சாங்கனு பேசறாளா சும்மா எங்களை போட்டு நொச்சுக்கிட்டு”என்று எரிச்சலாக பேசி விட்டாள் .

    “நான் எதுவும் பேசலை. அவங்க அக்கா வந்ததை நான் கவனிக்கலை. நான் வாங்கன்னு கூப்பிடலைன்னு பத்த வச்சு என் புருஷன் என்னை அடிச்சுட்டாரு”என்று புகார் வாசித்தாள் நிலா.

    “அதுக்கா அடிச்சான் கட்டையில் போறவன்”என்று வளர்மதி கொந்தளிக்க

    “மரியாதையா பேசுங்க ம்மா. அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை”என்று எச்சரித்த அமுதன் “இதோப் பாரு வாங்கனு கூப்பிடாததுக்கு எல்லாம் அவர் அடிச்சு இருக்க வாய்ப்பு இல்லை. உண்மை என்னன்னு சொன்னா நாங்க விசாரிச்சு பேசறோம் இல்லையா நீயாச்சு அவங்களாச்சு”என்று சொல்லி விட்டான்.

    அனைவரும் அங்கிருந்து சென்று விட வளர்மதியோடு நிலா படுக்கச் செல்ல தேசிகன் பொன்னி முன்பு உறங்கும் இடத்தில் அமைதியாக படுத்து விட்டார் .

    ஆழியன் உணவருந்திக் கொண்டே”ரதி இதைக் கேட்க கூடாது தான் ஆனாலும் மனசு கேட்கலை”என்று இழுத்தவன்”நான் ஹரி கிட்ட பேசிப் பார்க்கவா”என்று மனம் கேளாமல்.

    “பேசுங்களேன்”என்று இலகுவாய் அவள் சொல்லி விட்டதில் ஆழியன குழப்பமாக

    “நான் உங்களை உங்க தங்கச்சிக்காக பேச வேண்டாம் னு சொல்லலை. அது நீங்களாச்சு அவங்களாச்சு. ஆனா என்னை பேச சொல்லாதீங்க. என்னால பேசவும் முடியாது.”என்று சொல்லி விட்டு “ஒரு விஷயம் சொன்னா தப்பா எடுத்துக்க வேண்டாம்”என்று நிறுத்தினாள்.

    “என்ன ரதி”

    “புருஷன் அடிச்சதை பெருசா சொல்றவங்க பிள்ளையை விட்டுட்டு வந்ததில் துளி கூட வேதனையோ கவலையோப் படலையே…இன்னொன்னு பிள்ளையையும் விட்டு வர்ற அளவுக்கு அவ்வளவு என்ன பிடிவாதம் அவங்களுக்கு”என்று வினா அம்புகளை தொடுத்து விட்டு போய் விட்டாள்.

    ஆழியனுக்கும் அதே சிந்தனை இருக்கத் தான் செய்தது. ஒரு வேளை பிள்ளையை விட‌ மறுத்து அவ்வளவு அடித்து விட்டார்களோ என்று யோசித்தவன் ஹரிஹரனுக்கு அழைத்து விட்டான்.

    ஆழியனின் அழைப்பில் உண்மையில் நெகிழ்ந்த ஹரிஹரன் நடந்ததை விவரித்தான்.

    ஆழியனின் முகம் கோபத்தில் சிவந்தது.

    ….. தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!