Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 40

அத்தியாயம் 40

 

மகேஸ்வரனுக்கு அறைக்குள் இருக்கவே முடியவில்லை. வெளியில் என்ன பேசிக் கொள்கிறார்கள் மனைவி இருக்கிறாளா நிஜமாகவே போய்விட்டாளா என அத்தனை கேள்வி ஓட, லதா அஞ்சலியுடன் அமைதியாய் அமர்ந்து தேநீரைப் பருகிக் கொண்டிருந்தார் அந்த நேரம்.

 



Advertisement

கேரளாவின் குறிப்பிட்ட பகுதியில் அவன் நண்பன் தன் தொழிலைத் தொடங்க இருப்பதாய் சொல்லி உதவிக் கேட்டிருக்க, அதை கவனித்து வரவே கிளம்பி இருந்தான் கீர்த்திஸ்வரன்.

 

அதை தான் மகனும் வீட்டைவிட்டு செல்ல இருப்பதை லதா கணவனிடம் பேசி இருக்க, மனைவி வீட்டை விட்டு வெளியே செல்கிறேன் என்ற போது கூட வராத பயம் மகன் செல்கிறான் என்றதும் உள்ளுக்குள் பதறியது.

Advertisement

 

Advertisement

யாரிடமாவது கேட்கலாம் என்றால் அத்தனை கத்தியும் ஒருவரும் அறைக்குள் அவரைப் பார்க்க செல்லவில்லை.

 

அலைபேசியை வேறு மதியமே ஹாலில் வைத்துவிட்டு வந்துவிட்டார். அதுவும் அருகில் இல்லாமல் எங்கே யாரும்மில்லாத வீட்டில் இருக்கிறோமோ என்று வேறு உள்ளுக்குள் ஒரு உதறல்.

Advertisement

 

இரவு ஒன்பது மணி வரை வீட்டிற்குள் ஒரு சத்தமும் கேட்கவில்லை. நிஜமாய் அது லதாவின் வேலையே தான். ஆனால் அது மகேஸ்வரனுக்கு தெரியாதே!.

 

தேவியைக் கூட பலமுறை அழைத்துப் பார்த்து, காலை தரையில் ஊன்றப் பார்க்க, நிற்க முடிந்ததே தவிர்த்து தனியே நடக்கவெல்லாம் சுத்தமாய் முடியவில்லை.

 

மகனுமா சென்றுவிட்டான் என தனிமையில் அத்தனை கவலை. ஆனால் அதில் துளியும் பாசம் தான் இல்லை மனைவி பிள்ளைகள் மீது.

 

ஒன்பது மணிக்கு பிறகு கையில் தட்டுடன் லதா வர, அவரைப் பார்த்தபின் தான் மூச்சே வந்தது மகேஸ்வரனுக்கு. ஆனாலும் கோபமான கோபம்.

 

“எவ்வளவு நேரமா கூப்பிடுறேன். எங்க போய் தொலைஞ்சிங்க எல்லாரும்? எங்க அவளை?” என அஞ்சலியையும் கேட்க,

 

“அவ துணி எல்லாம் எடுத்து வச்சுட்டு இருக்கா!” என்றதில் மீண்டும் அமைதியாகிவிட்டார் மகேஸ்வரன்.

 

“ஈஸ்வர்?”

 

“அவன் போய்ட்டான்!” என்று சொல்ல, கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது சமாளிக்க முடியாமல்.

 

“ஏன் இப்படி பண்றீங்க எல்லாருமா? ஒரு கல்யாணம் வேண்டாம்னு சொன்னதுக்கா?” என அதையும் குறைத்தே அவர் மதிப்பிட,

 

“அவ்வளவு தானே? ஒரு கல்யாணம் தானே? அதுக்கு சம்மதிச்சா tதான் என்ன உங்களுக்கு?” என்றார் லதாவும்.

 

“அது என்னோட பிரெஸ்டிஜ் லதா. என் ஒரே பையனோட கல்யாணம். சொசைட்டில எனக்குன்னு ஒரு பேரு இருக்கு!” 

 

“பல்லவியால என்ன கெட்டுப் போச்சு உங்க பேருக்கு? தங்கச்சி பொண்ணை கட்டி வைக்க இவ்வளவு கவலை. அவ்வளவு வஞ்சம். சரியான குள்ளநரி நீங்க!” என வசைபாட,

 

“இது தான் நேரம்னு நீ ரொம்ப பேசுற லதா. உனக்கு எல்லா விஷயமும் புரியாது!” என மகேஸ்வரன் குரலில் இப்பொழுது அத்தனை அமைதி.

 

“எனக்கு எதுவும் புரிய வேண்டாம். என் பையன் மனசு புரியுது. அது போதும். அதான் அவனே கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லிட்டானே. இனி சந்தோசமா இருங்க. நாங்களும் எங்கேயாவது போறோம்!” என்று லதா தான் எகிறிக் கொண்டு நின்றார்.

 

கொண்டு வந்த சாப்பாட்டைக் கொடுத்துவிட்டு அவர் சென்றுவிட, இன்னுமொரு இருபது நாள் இவர்கள் அமைதிய்யாய் இருந்தால் போதுமே என்று தான் இருந்தது மகேஸ்வரனுக்கு.

 

தான் யார் துணையுமின்றி எழுந்து நிற்க, நடக்க ஆரம்பித்துவிட்டால் போதும் மீண்டும் வீட்டை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடலாம் என அவர் நினைக்க, லதாவுமே அந்த கணக்கில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

 

லதாவும் இப்பொழுது சித்ரா வீட்டிற்கு சென்று பேச தயாராய் இருக்க, மகேஸ்வரன் ஒரு வார்த்தை சரி என்று சொல்லிவிட்டால் போதுமென்று அவரை கட்டம் கட்ட துவங்கி இருந்தார்.

 

இதில் அடுத்த நாள் கேரளா சென்றுவிட்ட ஈஸ்வர் அன்னைக்கு அழைத்து அன்றைய நிலவரத்தைக் கேட்க,

 

“இன்னும் ப்ரோஸஸ்ல தான் டா இருக்குது. நீ வீட்டை விட்டு போயிட்டதா நினைச்சுட்டு இருக்கார். நானும் பேக் எடுத்து வச்சிருக்கேன். மதியம் வரை தான் அவருக்கு நேரம். அப்புறம் பாரு!” என்று சொல்ல, சரி தான் என்று வைத்துவிட்டான்.

 

அன்று மாலையே அங்கிருந்து கிளம்பி அடுத்த நாள் காலை வீட்டிற்கு வந்து சேர வேண்டும். அன்னையிடம் இருந்து மூன்று மணி வரை எந்த தகவலும் வரவில்லை.

 

சரி என்று நண்பன் அழைத்ததும் அவனுடன் அங்கிருக்கும் கோவிலில் சென்று தரிசனம் செய்து ஓரிடத்தில் அமர்ந்திருக்க, மனம் அமைதியாய் இருந்தது.

 

சித்ரா சொல்லிய அன்று இருந்த பதட்டம் அடுத்த நாள் பல்லவியைப் பார்த்து வந்ததுமே குறைந்திருக்க, என்னவோ தனக்கு சாதகமாய் தான் அனைத்தும் நல்லபடியாய் நடக்கும் என நம்பிக்கை கொண்டிருந்தான்.

 

இப்பொழுது சாமி கும்பிட்டு ஓரிடத்தில் அவன் அமர்ந்திருக்க, நண்பன் ஈஸ்வருக்காக பிரசாதம் வாங்க சென்றிருந்தான்.

 

அலைபேசி அழைப்பில் அதை கையில் எடுத்துப் பார்க்க, இதோ பல்லவியிடம் இருந்து அழைப்பு.

 

பார்த்ததும் ஈஸ்வர் முகத்தை நிறைத்தது புன்னகை. நிஜமாய் அவளைப் போல ஒருவரை இதுவரைக் கண்டதில்லையாய் மனம் எண்ணங்களை சுமந்து அழைப்பைப் பார்த்து அமர்ந்திருந்தான்.

 

அவள் அழைப்பு எல்லாம் வித்தியாசமான கிட்டத்தட்ட கொஞ்சம் சங்கடமான சூழ்நிலைகளில் தான். அதுவும் அவனே எதிர்பாராத தருணங்களில் தான்.

 

முதலில் தந்தை அவளிடம் பேசி பிரச்சனையான போது இனி அவளிடம் தான் பேசவே முடியாது என நினைத்திருக்க, அவளாய் அழைத்து தனக்கு, அது கல்லூரி உதவிக்காக எனினும் அழைத்தாள் தானே!.

 

இரண்டாவதாய் அவளைப் பெண் பார்க்க வருவதாய் அவள் அன்னை சொல்லியதைக் கேட்டு இவன் இடிந்து போயிருந்த சமயம். அதுவும் அவளாய் அழைத்து அது எதற்காக என்றாலும் அந்த நேரம் அவள் அழைப்பு தான் இவனை அவளிடம் பேசியே ஆக வேண்டுமாய் இழுத்து சென்றது.

 

இதோ இப்பொழுது! தன் காதலை சொல்லி அடுத்து என்ன என்ற எண்ணங்களில் தான் சுழன்று கொண்டிருக்கும் நேரம். இப்பொழுதும் எதற்காக இருக்கும் என சுத்தமாய் அவனிடம் ஒரு யூகம் கூட இல்லை. 

 

ஆனால் நிச்சயமாய் பெரிதாய் எதையும் காரணம் கொண்டு அவள் அழைத்திருப்பாள் எனவும் நினைக்க வரவில்லை அவனுக்கு. அதற்காக தன்மேல் ஈடுபாடு வந்திருக்குமோ என்றும் சுத்தமாய் எண்ணிவிடவே முடியாது.

 

எண்ணங்களில் அவன் இருக்கும் போதே தானாய் அழைப்பை ஏற்றும் விட்டான்.

 

“சொல்லு பல்லவி?” என அத்தனை சாதாரண சாதுவான குரலில் ஈஸ்வர் கேட்க, இன்னும் சந்தேகம் வழுக்க தயங்கி அமைதியாய் இருந்தாள் பல்லவி.

 

“ஹெலோ!” 

 

“நான் தான் சார்!” என்று சலிப்பாய் கூறி,

 

“நேத்து நான் உங்களை மீட் பண்ணினேனா?” என்று பல்லவி கேட்க, அத்தனை சிரிப்பையும் உதடுகளை மடக்கி அடக்கினான் கீர்த்திஸ்வரன்.

 

“கெட்ட கனவா இருந்தா நல்லாருக்கும்னு இருந்துச்சு. ஆனா உண்மை தான் இல்ல!” என்றாள்.

 

“ஹ்ம் உண்மை தான். வேணும்னா சொல்லு. நாளைக்கு வந்து பிராப்பரா ப்ரொபோஸ் பண்றேன்!” என்றவனை இன்னுமே நம்ப முடியவில்லை.

 

“சார்! உங்களுக்கு இன்னும் நிதர்சனம் புரியல. இது ஒரு ஈர்ப்பு. அது புரியாம பேசிட்டு இருக்கீங்க நினைக்கிறேன். இதெல்லாம் செட் ஆகாது. அதுவும் லதாம்மாகிட்ட வேற சொல்லிருக்கீங்க!” என்றவளுக்கு ஒரு மாதிரியாய் ஆயாசமும் கவலையும் என அதை யாரிடம் பகிர என தெரியாமல் புலம்ப ஆளின்றி அவனுக்கே அழைத்திருந்தாள்.

 

“இருக்கட்டுமே! இன்ஃபாக்சுவேஷன்ல இருந்திருக்கலாம். இப்ப அதையெல்லாம் தாண்டி லவ்வை எப்பவோ கண்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன் நான்!” என்று ஈஸ்வர் சொல்ல, உதடுகள் பிதுங்கியது பல்லவிக்கு.

 

“நீ என்னை கன்வின்ஸ் பண்ண பார்க்காத. நீ கன்வின்ஸ் ஆகிக்கோ. அதுவும் இந்த ஒரே ஒரு சான்ஸ் தான் உன் லதாம்மா கூட நீ டச்ல இருக்குறதுக்கு!”

 

“என் வீக்னெஸ் இது தான்னு நினைச்சு நீங்க யூஸ் பண்ணிக்க பாக்குறீங்க. உங்களுக்கு என்னை பிடிச்சதெல்லாம் வெறும்…” 

 

“எதையும் யாரையும் யூஸ் பண்ணி தான் உன்கிட்ட நான் வரணும்னு இல்ல பல்லவி. அண்ட் நான் ஒன்னும் டீன்ஏஜ் இல்ல புரியாம யோசிக்காம பேசுறதுக்கு. நீ கூட மெச்சூர்டு தான். ஆனா என் விஷயத்துல மட்டும் அப்படி யோசிக்க மாட்டுற!” என்றவன்,

 

“நான் உன் பின்னாடி எப்பவாச்சும் சுத்தி உன்னை டார்ச்சர் பண்ணினேனா? இல்ல வேலை வெட்டி இல்லாம உன்னை கல்யாணம் பண்ணிட்டு கூட்டிட்டு வந்து டார்ச்சர் பண்ண போறேனா? இத்தனை வயசுல என் வாழ்க்கைக்கான அடுத்த ஸ்டேஜ்ல சரியான ஒரு முடிவை எடுத்திருக்கேன். அதுவும் அம்மா சம்மதத்தோட. முறையா பேமிலியா வந்து தான் பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ணி கல்யாணம் பண்ணிக்க போறேன். வேற என்ன?” என்று கேட்டவனிடம் வாய் திறக்க முடியவில்லை.

 

ஆனாலும் அவன் தந்தை பேசியது? அது உள்ளே முள்ளாய் குத்திக் கொண்டே இருந்தது.

 

“சரி நீ சொல்லு! எதுக்காக என்னை நீ கல்யாணம் பண்ணிக்க கூடாது? என் அப்பா மாதிரி ஸ்டேட்டஸ் தான் ரீசன்னு சொல்லாத. கல்யாணம் பண்ணி வீட்டோட மாப்பிள்ளையா வரவும் தயாரா தான் இருக்கேன். என்ன! கூட என் அம்மாவ்வும் தங்கச்சியும் வருவாங்க!” என்று சொல்ல, பக்கென்று ஆனது பல்லவிக்கு.

 

“என் அப்பா அன்னைக்கு பேசினதையும் சொல்லாத. அது எனக்கு தெரியாம நடந்தது. இனி நடந்தா சொல்லு…” என்றதும் அவள் முறைக்க, அது தெரியாமலேயே,

 

“தனிக்குடித்தனம் போய்டலாம். அம்மா தங்கச்சியோட. ஏன்னா நீ தான் சொல்லியிருக்க. அஞ்சலியை எப்பவும் தனியா விட்டுடவே கூடாதுனு. நான் அவளுக்கு அண்ணன் இல்லையா!” என்று பேச, மூச்சு வாங்கியது கேட்டவளுக்கு.

 

எப்பொழுதும் இவள் தான் இத்தனை அதிகம் அவனிடம் பேசுவாள். அவன் எண்ணி எண்ணி தான் வார்த்தைகளை கொடுப்பான். இன்று தலைகீழாய் நடக்க, திகைத்து தான் நின்றாள் பல்லவி.

 

எதற்கு அழைத்தோம் என்று நினைக்க வைத்துவிட்டான்.

 

“இப்ப கூட நம்ம கல்யாணத்துக்கு தான் கேரளால இருக்குற அம்மன் கோவிலுக்கு ஸ்பெஷல் தரிசனதுக்கு வந்திருக்கேன்!” என்றவன் தன் நண்பன் தன் அருகே வருவதைக் கண்டு எழுந்து கொண்டான்.

 

“ஓகே பிரண்ட் வர்றான். இப்ப கிளம்பனும். வேற எதுவும் சொல்லனுமா பல்லவி?” என்று கேட்க, எதுவும் பேச தோன்றவில்லை அவளுக்கு.

 

“ரொம்ப யோசிக்காத. அத்தைகிட்ட கூட அம்மா பேசிப்பாங்க. அப்புறம் நானும் கூட பேசுவேன். ஸ்டடிஸை முடிக்கப் பாரு. மத்ததெல்லாம் தானா நடக்கட்டும்!” என்று சொல்லி,

 

“புரியுது தானே?” என்று கேட்க, மௌனம் தான் அவளிடம்.

 

அவனை காயப்படுத்த என்னவோ மனம் வரவே இல்லை. அதற்காக அவன் மேல் காதலோ தனிப்பட்ட அன்போ எல்லாம் இல்லவே இல்லை. 

 

“சரி டென்ஷன் எடுத்துக்காத டா. நான் அப்புறம் பேசுறேன்” என்றவன் அவள் பதில் சொல்லாத போதும் புன்னகையுடனே வைத்துவிட்டு நகர்ந்தான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!