Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 11

அத்தியாயம் – 11

 

அவளது கரம் பற்றி அவன் தடுக்க, மிருதுளா சட்டென்று நின்று “என்ன?” என்பது போலப் புருவங்களை உயர்த்தித் திரும்பினாள், அந்த மாலை நேரத்துச் செவ்வானத்தின் ஒளி அவளது முகத்தில் விழுந்து ஒரு தேவதையைப் போல அவளைக் காட்டியது.

​”மறுபடியும் எப்போ மீட் பண்ணலாம்?” என்றான் ரன்வீர், அவனது குரலில் ஒரு தொழிலதிபனுக்குரிய அதிகாரத்தை விட, ஒரு சிறுவனின் ஆர்வமே அதிகம் தெரிந்தது, ஒரு நாள் பிரிவைக் கூட அவனால் தாங்க முடியாது என்பது போல அவனது விழிகள் அவளை உற்றுப் பார்த்தன…



Advertisement

​மிருதுளா ஒரு நிமிடம் யோசித்தாள், நேற்று வரை இவனைத் திருடன் என்று துரத்தியவள், இன்று இவனது சந்திப்பிற்காகத் தன் மனதிற்க்குள் ஒரு சிறு இடத்தைக் கொடுத்திருப்பதை அவளும்  உணர்ந்தாள்…

​”நீங்க எப்போ ஃப்ரீன்னு சொல்லுங்க… நாளைக்கே கூட மீட் பண்ணலாம்!” என்று இதழ் விரியப் புன்னகையுடன் அவள் சொல்ல, ரன்வீரின் இதழ்களும் அப்படியே விரிந்து, அவனது முகம் பிரகாசமானது…

​”நாளைக்கா? கண்டிப்பா! இதே இடமா… இல்ல வேற எங்கேயாவது போலாமா?” என்று அவன் உற்சாகமாகக் கேட்க, “கூட்டம் அதிகமா இல்லாத இடம் தானே உங்களுக்கு செட்டாகும்” என்று மிருதுளா சொன்னதைக் கேட்டவன், ஒரு நிமிடம் தன்  விழிகளைச் சுருக்கி யோசித்தான்,
​அவன் ஒரு பிசினஸ்மேன் என்பதால், பொது இடங்களில் அதிகம் தென்படுவது அவனது பாதுகாப்பிற்க்கும், அந்தரங்கத்திற்கும் அவ்வளவு உகந்தது அல்ல என்பதை அவள் புரிந்து வைத்திருப்பது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

Advertisement

​”சரி… அப்போ நாளைக்கு ஈவ்னிங் சிட்டில இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கிற அந்தப் பழைய லைப்ரரி கார்டன் ஓகேவா? அங்கே ரொம்ப அமைதியா இருக்கும், நமக்கும் நிறைய பேச டைம் கிடைக்கும்,” என்று ரன்வீர் அந்த இடத்தை முன்மொழிய, ​மிருதுளா மெல்லத் தலையசைத்து…  “ஓகே… நாளைக்கு அங்கே பார்க்கலாம்,” என்று சொல்லிவிட்டு தனது காரின் கதவைத் திறந்தாள்.

Advertisement

​ரன்வீர் அவளது கையை மெல்ல விடுவித்தாலும், அவனது பார்வை மட்டும் அவளை விட்டு நகரவே இல்லை. “மிருதுளா… ஒன்னு சொல்ல மறந்துட்டேன்,” என்றான் அவன் மெதுவான குரலில்.

​அவள் காரில் அமர்ந்தபடி, “என்ன?” என்பது போலத் நிமிர்ந்து பார்க்க,.. ​”இன்னைக்கு இந்த மீட்டிங்ல நீ ரன்வீரைத் தான் பார்த்திருக்க… ஆனா, உன்னைப் பார்க்க ஜன்னல் வழியா வர்ற அந்தத் திருடனை நான் ரொம்ப மிஸ் பண்றேன், அவனுக்கு உன் மேல ஒரு தனி உரிமை இருக்குன்னு அவன் நினைக்கிறான்,” என்று குறும்பு கலந்த தீவிரத்தோடு சொல்ல, மிருதுளாவிற்க்கு  சட்டென்று முகம் சிவந்தது…

​”ரொம்பப் பேசாதீங்க… கிளம்புங்க!” என்று செல்லமாகக் கோபம் கொண்டவள் காரை ஸ்டார்ட் செய்தாள், கார் நகரத் தொடங்கியதும், ரியர் வியூ மிரர் வழியாகப் பார்த்தபோது, ரன்வீர் அங்கே அப்படியே நின்று அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது,
​அவளது மனதிற்க்குள் ஒரு சிறு இனிய பாரம் ஏறியது. ‘யார் இவன்? இவ்வளவு சீக்கிரம் என் யோசனை முழுக்க இவனே ஆக்கிரமிக்கிறானே?’ என்று நினைத்தபடி காரைச் செலுத்தினாள் மிருதுளா…

Advertisement

​மறுபுறம், அவளது கார் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தவன், ஒரு நீண்ட பெருமூச்சை விட, அந்த கணம் அவனது போன் அதிர்ந்தது. எடுத்துப் பார்த்தவன் முகம் சட்டென்று ஒரு பிஸ்னஸ் மேக்னட்டுக்கே உரியக் கடுமைக்கு மாறியது…

மறுநாள் மாலை, ரன்வீர் சொன்ன அந்தப் பழைய லைப்ரரி கார்டன் அமைதியின் இருப்பிடமாகத் திகழ்ந்தது, பழங்காலக் கட்டிடக்கலையுடன் கூடிய அந்த நூலகத்தைச் சுற்றி, அடர்த்தியான மரங்களும் வண்ணமயமான மலர்களும் நிறைந்த அந்தத் தோட்டம், அவர்கள் இருவருக்கும் மட்டுமேயான ஒரு தனி உலகத்தைப் போல இருந்தது.

​மிருதுளா தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தபோது, ஒரு மரத்தடியில் இருந்த பெஞ்சில் தான் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான் ரன்வீர், அவளது காலடிச் சத்தம் கேட்டதும், தலைநிமிர்ந்து பார்த்த அவனின் லேசர் விழிகளில் அவளை கண்டதும்  சொல்லொண்ணா மகிழ்ச்சி அரும்பியது…

​”உனக்காகத்தான் காத்துட்டு இருந்தேன்,” என்று அவன் எழுந்து வரவேற்க, அவனது அந்த இயல்பான வரவேற்பு அவளுக்குள் ஒரு இதமான உணர்வைத் தந்தது,
​அன்று அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். பிசினஸ், லாபம், நஷ்டம் என்ற பேச்சுகளுக்கு அப்பால், தங்களுக்குப் பிடித்த புத்தகங்கள், ரசித்த இசை, சிறுவயது கனவுகள் எனப் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர், அந்த அமைதியான சூழலில், ரன்வீரின் ஒவ்வொரு சொல்லும் மிருதுளாவின் மனதிற்கு மிக நெருக்கமாகத் தெரிந்தது, ஒரு கட்டத்தில் பேச்சின் சுவாரஸ்யத்தில் ரன்வீர் மெல்ல அவளது கையைப் பற்றிட,
​முதலில் ஒரு கணம் அவள் திடுக்கிட்டாலும், அவனது பிடியை அவள் விலக்கவில்லை, அவனது கரத்தின் வெப்பம் அவளுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வைத் தந்தது, அந்த மாலை நேரத்துத் தென்றலில், இருவரும் கைகளைப் கோர்த்தபடி அந்தத் தோட்டத்தைச் சுற்றி வந்தனர்…

அதன்பிறகு வந்த நாட்களும் அவர்கள் இருவருக்குமே வசந்த காலங்களாகவே மாறின, ரன்வீர் ஒரு தொழிலதிபன் என்பதையும், மிருதுளா ஒரு தனிமை விரும்பியான பெண் என்பதையும் தாண்டி, அவர்கள் வெறும் ரன்வீர் மற்றும் மிருதுளாவாக மாறினர்.

தினமும் மாலையில் ஏதாவது ஒரு அமைதியான இடத்தில் அவர்கள் சந்திக்கத் தொடங்கினர், அவர்களின் பேச்சு இப்போது வெறும் வார்த்தைகளாக மட்டுமில்லாமல், மௌனங்களாகவும் பரிணமித்தது, எப்போதாவது கடற்கரையோரம் அமர்ந்து அலைகளைப் பார்த்தபடி, மணிக்கணக்கில் ஒருவர் கையை ஒருவர் பிணைத்தபடி அமைதியாக இருப்பார்கள்.

ரன்வீரின் குறும்புத்தனமான பேச்சுகளுக்கு மிருதுளா செல்லமாக அவனது கையைத் தட்டுவதும், அவன் அவளது கையை இன்னும் அழுத்தமாகப் பற்றிக்கொள்வதும் வாடிக்கையானது, மிருதுளாவிற்கு இப்போது ரன்வீர் இல்லாத ஒரு நாளைக் கற்பனை செய்யவே கடினமாக இருந்தது, அவனது அந்த விழிகளில் இருந்த தீர்க்கமும், அவளிடம் மட்டும் அவன் காட்டும் அந்த அளவற்ற மென்மையும் அவளை முழுமையாக அவனிடம் சரணடைய வைத்திருந்தது,
​அவளது அந்த மெல்லிய விரல்களைத் தனது அகன்ற கைகளுக்குள் பொதிந்து வைத்துக் கொள்ளும் போதெல்லாம், ‘என் உலகமே நீதான்’ என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தான்…

மிருதுளாவும் அந்த அன்பின் பிடியில் தன்னைத் தொலைக்கத் தயாராகவே இருந்தாள், தனிமையில் இருந்தவளுக்கு ரன்வீரின் சந்திப்பும், அவன் காட்டிய எதிர்பாராத அன்பும் ஒரு புதிய வசந்தத்தைத் தந்தது, இதுவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் தன்னை முடக்கிக் கொண்டிருந்தவள், இப்போது ரன்வீர் என்ற ஒற்றை மனிதனுக்காகத் தன் மனக் கதவுகளை மெல்லத் திறக்க ஆரம்பித்திருந்தாள்…

​நட்பில் ஆரம்பித்த அந்தப் பயணம், இப்போது சொல்லாமலேயே காதலாக மலரத் தொடங்கியிருந்தது, ஒவ்வொரு முறை ரன்வீர் அவளது கையைப் பற்றும்போதும், அந்தத் தீண்டலில் இருந்த ஒருவிதமான பாதுகாப்பு அவளை மெய்மறக்கச் செய்தது,
​அவளது அமைதியான உலகில், ரன்வீரின் விழிகள் ஒரு புதிய ஒளியைப் பாய்ச்சின, அவன் அருகில் இருக்கும்போது, அவளது கவலைகள் அனைத்தும் காணாமல் போயின…

எப்போதும் மௌனமாக இருந்த அவளது அந்தப் பெரிய வீட்டில், இப்போது ரன்வீரைப் பற்றிய நினைவுகளும் ரீங்காரமிட்டன,
அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளும் வார்த்தைகளை விட, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அந்தப் பார்வைகளிலேயே ஆயிரம் அர்த்தங்கள் புதைந்திருந்தன,
பிஸ்னஸ் உலகின் நெருக்கடிகளுக்கு நடுவிலும், ரன்வீர் அவளுக்காக ஒதுக்கும் அந்தச் சில மணிநேரங்கள் அவளுக்குப் பெரும் வரமாகத் தெரிந்தது,…

மிருதுளா இப்போது கண்ணாடி முன்னால் நின்று தன்னைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள், அவளது முகத்தில் முன்பிருந்த அந்த வாட்டம் மறைந்து, இப்போது ஒரு தேவதையின் பொலிவு கூடியிருந்தது, தன் முகத்தையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவள்,..  “இது தான் காதலா?” என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்ட கணம், ரன்வீரின் அந்த வசீகரமான புன்னகையை நினைத்து மீண்டும் ஒருமுறை வெட்கப்பட்டாள்…

​அவன் ஒரு பணம் படைத்தவன் என்பதோ, அவன் தன் அறைக்குள் ஒரு திருடனாக வந்தான் என்பதோ இப்போது அவளுக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை, அவளுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான் ரன்வீர் அவளை நேசிக்கிறான், அவளும் அவனை நேசிக்கத் தொடங்கிவிட்டாள்…

அன்று மாலை… சிட்டிற்கு வெளியே இருந்த ஒரு அமைதியான மலைச்சரிவில் தான் சந்தித்துக் கொண்டார்கள், அங்கே இருந்த ஒரு சிறிய ஏரியின் ஓரம், பழங்காலத்து மரப்பாலத்தின் மீது தான் இருவரும் அமர்ந்திருந்தனர்.

சூரியன் மெல்ல மலைகளுக்குப் பின்னால் மறையத் தொடங்கிட, வானம் ஊதா மற்றும் ஆரஞ்சு நிறக் கலவையில் ஒரு ஓவியமாக மாறியிருந்தது, ​அந்த நிசப்தமான சூழலில், ஏரி நீரின் சலசலப்பு மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.

ரன்வீர் வழக்கம்போல அவளது மென்மையான கரங்களைத் தனது வலிமையான கைகளுக்குள் பொதிந்து வைத்திருந்தான், அவன் எதுவும் கேட்கவில்லை, மாறாக அந்த அமைதியை ரசித்துக் கொண்டிருந்தான்…

​மிருதுளா மெல்லத் தலைசாய்த்து அவனது தோளில் சாய்ந்து கொண்டாள், அவனது தோள்களின் கதகதப்பு அவளுக்கு ஒரு பெரும் தைரியத்தைத் தந்திருக்க.. ​”ரன்வீர்…” என்று மெல்லிய குரலில் அழைத்தாள்.

“ம்ம்…” என்று சொன்னவனோ அவளது கையை இன்னும் அழுத்தமாகப் பற்றிக்கொள்ள, அவளோ.. ​”முதல்ல உங்களை ஒரு திருடன்னு நினைச்சு நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா? ஆனா இப்போ… அந்தத் திருடன் என் மனசையே திருடிட்டான் போல இருக்கு,” என்று சொல்லிவிட்டு அவள் மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்…

​அவனது அந்த ஊடுருவும் விழிகளில் ஒரு ஆர்வம் மின்னியது, அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதை அவன் உணரத் தொடங்கினான், ஆனால் அவளது வாயாலேயே அதைக் கேட்கக் காத்திருந்தான்…

“உங்களுக்கு என் மேல இருக்க லவ்வை பத்தி சொன்னீங்க, ஆனா ஆரம்பத்துல என்னால அதை அக்ஸப்ட் பண்ணிக்கவே முடியல ரன்வீர், உங்ககூட பிரண்டா கைகோர்க்கக் கூட நான் ரொம்ப யோசிச்சேன், மனசுக்குள்ள ஒருவித நெருடல் இருந்துகிட்டே இருந்தது. ஆனா இப்போ…” என்று அவள் இழுக்க, ரன்வீரின் இதயம் ஒரு நிமிடம் துடிப்பை நிறுத்தியது…

​”இப்போ என் மனசு முழுக்க நீங்க தான் ஆக்கிரமிச்சிருக்கீங்க ரன்வீர், தூக்கத்துல கூட உங்க முகம் தான் வருது, இந்தத் தனிமையில எனக்கு நீங்க கிடைச்சது ஒரு பெரிய வரம்,
எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு ரன்வீர், ஐ லவ் யூ, ஐ லவ் யூ ஸோ மச்” என்று ​அவள் சொல்லி முடித்ததும், ஒரு நிமிடம் அந்த இடமே ஸ்தம்பித்தது போல இருந்தது, ரன்வீரின் முகத்தில் ஒரு பேரானந்தம் தாண்டவமாடியது…

“ஹேய் நிஜமாவாவா” என்று அவன் பேரானத்துடன் வினவ, அவள் “ம்ம்” என்று தலையசைக்க, அவனோ சந்தோஷத்தில் திக்குமுக்காடி போய்விட்டான், அந்த கணம் தன் உணர்வுகளை அடக்க முடியாமல் அவளது கையைப் பற்றி மெல்லத் தன் இதழ்களோடு ஒற்றிக் கொண்டவன்.. ​”இதைக் கேட்கத்தான் மிருதுளா நான் இவ்வளவு நாள் காத்துட்டு இருந்தேன், உன்னை ஒரு திருடனாத் தேடி வந்த அந்தத் தருணம், என் வாழ்க்கையோட பொற்காலம்னு இப்போதான் புரியுது,” என்று அவன் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்ல, மிருதுளா மெல்ல அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்….

​அந்த மலையடிவாரத்து மாலை நேரத்தில், இருவரின் மனங்களும் ஒன்றிணைந்தன, இதுவரை தனிமையில் வாடிய மிருதுளாவின் வாழ்வில், ரன்வீர் ஒரு தீராத அன்பின் சாம்ராஜ்யமாக நிலைத்து நின்றான்…

அவளது அந்த இதமான காதல் வாக்குமூலத்திற்குப் பிறகு, ரன்வீர் மற்றும் மிருதுளாவின் உலகம் முழுவதுமாக மாறிப்போனது, இதுவரை இருந்த தயக்கங்கள் கரைந்து, ஒருவரை ஒருவர் ஆழமாக நேசிக்கும் இரு இதயங்களின் சங்கமம் அங்கே அரங்கேறியது…

​அடுத்த நாள் அதே மலைச்சரிவின் ஏரிக்கரையில், நிலவொளி மெல்ல எட்டிப்பார்க்கத் தொடங்கிய வேளையில்,  மிருதுளா அவனது மார்பில் சாய்ந்திருக்க, அவனது இதயத்துடிப்பு அவளது காதுகளில் ஒரு இனிய சங்கீதமாக ஒலித்தது…

சில நிமிட மணி நேர ​பேச்சுக்களுக்கு பிறகு மெல்லக் குனிந்து அவளது நெற்றியில் தனது இதழ்களை அவன் பதிக்க, அந்த முதல் செல்லத் தீண்டல் மிருதுளாவிற்குள் ஒரு மின்னலைப் பாய்ச்சியது போல் இருக்க, அவளது கண்கள் தானாகவே மூடிக்கொண்டன.

பின் அவளது கன்னங்களை மென்மையாக வருடி, அவளது முகத்தை ஏந்திக் கொண்டவவனின் அந்த லேசர் விழிகளில் இப்போது காதலின் தாகம் மட்டுமே மிஞ்சியிருந்தது, மெல்ல அவளது இதழ்களை நோக்கி அவன் நெருங்க, மிருதுளாவின் இதயம் தாறுமாறாகத் துடித்தது, அடுத்த நொடி, இருவரின் இதழ்களும் ஒரு மென்மையான இதழ் முத்தத்தில் சங்கமித்தன, அந்த ஒரு கணத்தில் காலம் உறைந்து போனது போல இருந்தது, இதுவரை அவள் அனுபவித்திராத ஒரு பரவச நிலை அவளை ஆட்கொண்டது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!