ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 13
அத்தியாயம் – 13
“உன்னோட வீட்ல உள்ளவங்க கிட்ட சொல்லிட்டியாப்பா? அவங்க என்ன சொன்னாங்க?” என்று வீரமாணிக்கம் மிகுந்த ஆர்வத்துடன் வினவிட, ரன்வீர் ஒரு நிதானமான புன்னகையுடன், “இன்னும் சொல்லல தாத்தா, அவங்ககிட்ட இதைப் பத்திப் பேசிட்டு, உங்களைப் பார்க்க அவங்களைச் சீக்கிரமே அழைச்சிட்டு வர்றேன்,” என்று கூறினான், அவனது அந்தப் பொறுப்பான பதில் வீரமாணிக்கத்திற்கு மிகவும் திருப்தி அளித்தது.
“நல்லதுப்பா,” என்று தலையசைத்தவர், அருகிலேயே இமைக்காமல் தங்களையே பார்த்துக் கொண்டிருந்த பேத்தியைத் திரும்பிப் பார்த்து,..
”மாப்பிள்ளைக்குக் குடிக்க ஏதாவது கொண்டு வர சொல்லுமா மிருதுளா,” என்றார்.
Advertisement
தாத்தாவிற்கு ரன்வீரைத் தெரியும் என்றாலும், இவ்வளவு சீக்கிரம் அவர் அவனை மாப்பிள்ளை என்று அழைத்து, ஒரு நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டதைக் கண்டு மிருதுளா அப்படியே மலைத்துப்போய் நின்றாள்.
ரன்வீரின் வசீகரமும், அவனது அந்தத் தெளிவான பேச்சும் தன் தாத்தாவை இவ்வளவு சீக்கிரம் கட்டிப்போட்டுவிட்டதே என்று அவள் வியந்தாள்…
ரன்வீரோ… “இந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் வேண்டாம் தாத்தா, இனிமேதான் நான் அடிக்கடி வரப்போறேனே! எனக்கு வேணும்னா நானே கேட்டு வாங்கி சாப்பிட்டுக்கிறேன்,” என்று ஒரு குடும்ப உறுப்பினரைப் போலவே உரிமையோடு சொன்னவன்,
பிறகு அந்த வீட்டின் பழமையையும் அழகையும் ரசித்தபடி, “இந்த வீடு எப்போ கட்டுனது தாத்தா? உள்ளே நுழைஞ்சதுமே ரொம்பவே பாசிட்டிவ் வைப்ரேஷன் கொடுத்தது,” என்று அந்த வீட்டை நோட்டம் விட்டபடி வினவினான்.
Advertisement
”ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி கட்டப்பட்ட வீடுதான்ப்பா, இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் ஆல்ட்ரேஷன் பார்த்திருக்கேன்,” என்றவர், மிருதுளாவிடம் திரும்பி, “மிருதுளா… மாப்பிள்ளைக்கு வீட்டை ஒருமுறை சுத்தி காட்டுமா,” என்று அன்புடன் கட்டளையிட்டார்…
Advertisement
மிருதுளாவும் மெல்ல தலையசைத்து “சரிங்க தாத்தா…” என்றவள்,.. “வாங்க ரன்வீர்,” என்று அவனை அழைத்தாள்.
இருவரும் மாடிப் படிக்கட்டுகளில் ஏறும்போது, தாத்தாவின் பார்வையில் இருந்து மறைந்த அந்த நொடியில், ரன்வீர் சட்டென்று அவளது கையை பிடித்து ஒரு அழுத்தம் கொடுத்தவன்,. ”என்ன மேடம்… தாத்தா என்னை மாப்பிள்ளைன்னு சொன்னதும் அப்படியே ஷாக் ஆகி நிக்கிறீங்க? அவ்வளவு சீக்கிரம் நான் அவரை இம்ப்ரெஸ் பண்ணுவேன்னு நினைக்கலையா?” என்று அவன் அவளது காதோரம் கிசுகிசுக்க, முகம் சிவக்க அவனைப் பார்த்தவள்,.. “ம்ம்… தாத்தா மறுக்க மாட்டார்னு எனக்கு தெரியும், ஆனா சட்டுனு ஒரே நாள்ல இப்படி உரிமையா பேசுவார்னு நான் நினைக்கவே இல்ல, இப்போதான் மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு ரன்வீர்,” என்றாள் மிருதுளா. அவள் குரலில் இருந்த அந்த நிம்மதி ரன்வீரின் மனதையும் மென்மையாக்கியது.
அவளது கைகளை மெல்லப் பற்றி, அந்த மாடி வராண்டாவின் ஓரத்தில் நின்றபடி அவளைத் தன் பக்கம் திருப்பினான். அவனது லேசர் விழிகள் இப்போது அதிகாரத்தை விடுத்து, அளவற்ற அன்பை மட்டும் அவளிடம் காட்டின…
Advertisement
”உன் நிம்மதிதான் எனக்கு முக்கியம் மிருது, பிஸ்னஸ்ல எத்தனையோ பேரை நான் இம்ப்ரெஸ் பண்ணியிருக்கேன், ஆனா உன் தாத்தாவோட அந்த ‘மாப்பிள்ளை’ங்கிற ஒத்த வார்த்தை எனக்குக் கொடுத்த சந்தோஷம் இருக்கே… அது கோடி ரூபாய் லாபத்தை விட அதிகம்,” என்றான் நெகிழ்ச்சியாக..
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே நகர்ந்து, மிருதுளாவின் அறைக்கு அருகே வந்தனர், அந்த அறையின் கதவைப் பார்த்ததும் ரன்வீரின் முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை அரும்பியது.
”இதுதானே அந்த ரூம்? என்னை திருடனா மாத்தின அந்த மாய அறை?” என்று அவன் கிண்டலாகக் கேட்க, மிருதுளா சட்டென்று சிரித்துவிட்டாள்.
”ஆமா… இங்கதான் ஒரு ‘பெரிய மனுஷன்’ பால்கனி வழியா குதிச்சு வந்துட்டு, அப்புறம் என்கிட்டயே மாட்டிக்கிட்டு முழிச்சார்,” என்று அவள் பதிலுக்குக் கிண்டல் செய்தாள்…
அறைக்குள் நுழைந்த ரன்வீர், மிருதுளா தன்னை மிரட்டிய அந்தத் தருணங்களை எல்லாம் நினைத்துப் பார்த்துச் சிரித்தான்.
“அன்னைக்கு அந்த பால்கனி வழியா நான் உள்ள வரலன்னா, இன்னைக்கு உன் மனசுக்குள்ள நான் வந்திருக்கவே முடியாது மிருதுளா, அந்தத் திருடன்தான் இந்த ரன்வீருக்கு உன்னை அறிமுகம் செஞ்சு வச்சான்,” என்று கூறி அவளது கையைத் தன் இதழ்களோடு ஒற்றிக்கொண்டான்,
அந்த அறையின் அமைதியில் இருவருக்கும் இடையே ஒரு அழகான மௌனம் நிலவியது.
ரன்வீர் அவளைத் தன் அரவணைப்பிற்குள் இழுக்க, மிருதுளா அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள், அவனோ..
”இனிமே இந்த வீட்டுக்கு நான் திருடனா வர வேண்டிய அவசியம் இல்லைல? உரிமையுள்ள மாப்பிள்ளையா வரப்போறேன்,” என்று அவன் அவள் காதோரம் சொல்ல, மிருதுளா வெட்கத்தில் அவனது சட்டையை இறுகப் பற்றிக் கொண்டாள்.
கொஞ்ச நேரம் அந்த மோனநிலையில் ஒருவரை ஒருவர் தழுவி நின்றனர், மெல்லச் சுதாரித்துக் கொண்ட ரன்வீர் குறும்பு மின்னும் விழிகளோடு, “சரி… வீட்டைச் சுத்தி காட்டுறேன்னு சொல்லிட்டு வந்து, இப்படி ரூமுக்குள்ளேயே இருந்தா தாத்தா என்ன நினைப்பார்?” என்று வினவிட,.. ”அதுவும் சரிதான்! வாங்க… நான் உங்களுக்கு மத்த இடங்களையும் சுத்தி காட்டுறேன்,” என்று சிரித்துக்கொண்டே சொன்ன மிருதுளா, அந்த முதல் மாடியில் இருந்த பால்கனி, ஸ்டடி ரூம் என ஒவ்வொன்றாக அவனுக்கு விவரித்தாள்…
பிறகு இருவரும் படிக்கட்டு வழியாகக் கீழே இறங்கினர், வரவேற்பறை, டைனிங் ஹால் என ஒவ்வொன்றையும் ரசித்து பார்த்தபடி வந்தவன், அப்போது ஒரு மூடியிருந்த கதவைக் காட்டி, “இந்த ரூம்குள்ள மட்டும் நாம போகலையே?” என்றான் ரன்வீர் ஆர்வத்துடன்…
”இது தாத்தாவோட ரூம் ரன்வீர்… அவர் ரூமுக்குள்ள அவர் பர்மிஷன் இல்லாம யாரும் போகக் கூடாது, அவருக்கு அது பிடிக்காது,” என்று மிருதுளா சொல்லி முடிப்பதற்குள்ளேயே, “அதை ஏம்மா மாப்பிள்ளைகிட்ட சொல்லிக்கிட்டு? மாப்பிள்ளை ஆசைப்பட்டா காட்ட வேண்டியதுதானே!” என்று கம்பீரமான குரலில் கேட்டபடி அங்கே வந்த வீரமாணிக்கம்
”நீங்க உள்ளே வாங்க மாப்பிள்ளை!” என்று சொல்லியபடி, தனது அறைக்கதவைத் தள்ளித் திறந்து உள்ளே செல்ல, ரன்வீரும் ஒரு மரியாதையான புன்னகையோடு அவருக்குப் பின்னால் நுழைந்தான்…
அந்த அறைக்குள் நுழைந்ததும் ரன்வீர் ஒரு நிமிடம் பிரமித்துப் போனான், அது ஒரு சாதாரண படுக்கையறை போல இல்லை ஒரு சிறிய அருங்காட்சியகம் போல இருந்தது, சுவர்கள் முழுக்கப் பழைய காலத்துப் புகைப்படங்கள், வீரமாணிக்கம் பெற்ற விருதுகள், மற்றும் பழங்காலத்து மரச் சாமான்கள் என அந்த அறை ஒரு தனித் தேஜஸுடன் விளங்கியது.
”இந்த ரூம்லதான் என் வாழ்க்கையோட முக்கியமான முடிவுகளை எல்லாம் நான் எடுப்பேன் ரன்வீர், இன்னைக்கு என் பேத்தியோட வாழ்க்கை முடிவையும் இங்கேயே வச்சு உறுதி பண்றதுல எனக்குப் பெரிய சந்தோஷம்,” என்று வீரமாணிக்கம் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்ல,
ரன்வீர் அந்த அறையில் இருந்த ஒரு பழைய புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, “தாத்தா… இந்த போட்டோவுல இருக்கிறது நீங்களா? ரொம்ப கம்பீரமா இருக்கீங்க!” என்று கேட்க, வீரமாணிக்கம் உற்சாகமாகத் தனது இளமைக்காலக் கதைகளைச் சொல்லத் தொடங்கினார்…
மிருதுளா வாசலில் நின்றபடி, தன் தாத்தாவும் ரன்வீரும் இவ்வளவு சீக்கிரம் ஒரு தாத்தா பேரன் போல நெருக்கமாகிவிட்டதைக் கண்டு நெகிழ்ந்து போனாள், ரன்வீர் ஒரு பிசினஸ் மேனாக இல்லாமல், அந்தப் பெரியவரின் மனதை வென்ற ஒரு அன்பான பேரனாக அங்கே நின்று கொண்டிருந்தான்..
“இதென்ன இவ்வளவு பெரிய வார்ட்ரோப்?” என்று ரன்வீர் வியப்புடன் வினவினான், அவனது லேசர் விழிகள் அந்தப் பழங்காலத் தேக்கு மர அலமாரியை ஒருமுறை மேலோட்டமாக அளவெடுத்தன…
”அதுலதான் என்னோட முக்கியமான பத்திரங்கள் எல்லாம் இருக்குப்பா, என் காலத்து சொத்து விவரங்கள், பிசினஸ் ஆவணங்கள்னு எல்லாமே இதுலதான் ரொம்பப் பத்திரமா இருக்கும்,” என்று வீரமாணிக்கம் பெருமிதத்துடன் சொன்னார்.
அவர் சொல்லச் சொல்ல, ரன்வீரின் மனதுக்குள் ஒரு மின்னல் வெட்டியது. ‘அப்போ நான் தேடிக்கிட்டு இருக்க அந்த ஃபைலும் இங்கதான் இருக்கும் போலயே…’ என்று தன்னுள் நினைத்துக் கொள்ள, அந்த கணம் அவனது ஆழ்மனதில் ஏதோ ஒரு கணக்கு ஓடியது…
வீரமாணிக்கம் அவனது முகத்தையே உற்றுப் பார்த்துவிட்டு, “என்னப்பா யோசனை?” என்று வினவிட,.. ”அதெல்லாம் ஒன்னும் இல்ல தாத்தா… இவ்வளவு பெரிய வார்ட்ரோப்பை இப்போதைய மாடர்ன் வீடுகள்ல பார்க்க முடியாது, அதான் ஆச்சரியமா பார்த்தேன்,” என்று ரன்வீர் தன் முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் மிக இயல்பாக சமாளித்தான். அவனது அந்த லேசர் விழிகள் ஒரு நொடி அந்த வார்ட்ரோப்பின் பூட்டை அளவெடுத்துவிட்டு மீண்டன.
வீரமாணிக்கம் பெருமிதத்துடன் சிரித்துவிட்டு… “ஆமாப்பா, இது எங்க காலத்துத் தேக்கு மரம், இதுக்குள்ள என் குடும்பத்தோட கௌரவமும், பல வருஷத்து உழைப்பும் அடங்கியிருக்கு, முக்கியமான சொத்துப் பத்திரங்கள்ல இருந்து என்னோட தனிப்பட்ட டைரி வரைக்கும் எல்லாம் பத்திரமா இங்கதான் இருக்கும்,” என்றார் அவர் வாஞ்சையுடன் அந்த மரக்கதவைத் தொட்டுக்கொண்டே.
மிருதுளாவும் அவனது யோசனை நிறைந்த முகத்தை கண்டு, அவன் அருகே வந்து.. “என்ன ரன்வீர்… தாத்தா ரூமுக்கு வந்ததும் அப்படியே பிசினஸ்மேனா மாறிட்டீங்களா? எதையோ ஆழ்ந்து யோசிக்கிறீங்க?” என்று அவள் கிண்டலாகக் கேட்க, ரன்வீர் அவளைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகை செய்துவிட்டு.. ”இல்ல மிருதுளா… தாத்தாவோட இந்த அனுபவமான பேச்சைக் கேட்டுட்டு இருந்தேன்,” என்றான். ஆனால், அவனது மனதுக்குள் வேறு ஒரு கணக்கு ஓடிக்கொண்டிருந்தது.
“சரி வாங்க, இப்படியே பேசிக்கிட்டே இருந்தா எப்படி? சாப்பிடப் போலாமா?” என்று வீரமாணிக்கம் உற்சாகமாகப் பேசிக்கொண்டே அவர்களை டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றார், மேஜையில் விதவிதமான உணவுகள் மணக்க மணக்கக் காத்திருந்தன.
மிருதுளா ஒவ்வொன்றையும் ரன்வீருக்குப் பரிமாறினாள். “இது உங்களுக்குப் பிடிச்ச டிஷ் ரன்வீர், டேஸ்ட் பண்ணிப் பாருங்க,” என்று அவள் அன்புடன் சொல்ல, ரன்வீர் கலகலப்பாகப் பேசிக்கொண்டே சாப்பிடத் தொடங்கினான்.
அவனது பேச்சிலும் சிரிப்பிலும் எந்த மாற்றமும் தெரியவில்லை, ஆனால் அவனது விழிகள் அவ்வப்போது அந்த அறையின் திசையை நோக்கிச் சென்று திரும்பின…
மேலோட்டமாக அவன் ஒரு காதலனாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாலும், அவனது ஆழ்மனம் அந்த வார்ட்ரோப்பையே சுற்றி வந்தது. ‘அந்த ஒரு ஃபைல்… அது மட்டும் எப்படியாவது என் கைக்கு கிடைக்கனும், இப்போ அது என் கைக்கு எட்டற தூரத்துலதான் இருக்கு, சீக்கிரமே அந்த ஆவணத்தை எடுக்கணும்,’ என்று தனக்குள் உறுதிபூண்டான்.
சாப்பிட்டு முடித்ததும், ரன்வீர் கிளம்பத் தயாரானான். “ரொம்ப சந்தோஷம் தாத்தா, உங்களைச் சந்திச்சதுலயும், இந்த வீட்டோட பாசிட்டிவ் எனர்ஜியைப் பார்த்ததுலயும் எனக்கு ரொம்பத் திருப்தி,” என்றான்….
”எனக்கும் தான்ப்பா, இனிமே இது உன் வீடு மாதிரி. எப்போ வேணும்னாலும் வரலாம்,” என்று வீரமாணிக்கம் உரிமையோடு சொல்ல, ரன்வீர் ஒரு தந்திரமான புன்னகையை உதிர்த்தான்.
மிருதுளா அவனை வாசலில் விட வந்தாள். “என்ன ரன்வீர்… கிளம்பும்போது ஏதோ யோசனையாவே இருக்கீங்க?” என்று அவள் அவனது சட்டைக் காலரைச் சரி செய்தபடி கேட்க, அவளது கையைப் பிடித்து மென்மையாக அழுத்தியவன்,..
”அதெல்லாம் ஒன்னும் இல்ல மிருதுளா, உன் தாத்தா கொடுத்த இந்த மாப்பிள்ளை’ங்கிற அங்கீகாரத்தை எப்படித் தக்க வச்சுக்கிறதுன்னு தான் யோசிக்கிறேன்,” என்று அவன் சொல்ல, மிருதுளா வெட்கத்தில் சிரித்தாள்…
அதன் பிறகு அவளிடம் விடைபெற்றுக் கொண்டு ரன்வீர் தனது காரில் ஏறி அமர்ந்தான், கார் மெல்ல நகரத் தொடங்கியபோது, அவனது முகம் ஒரு பிஸ்னஸ் மேனுக்கே உரிய அந்தத் தீர்க்கமான மாறுதலை அடைந்தது. காதலையும் தாண்டி, தான் தேடி வந்த அந்த இலக்கை அடைய அவன் ஒரு புதிய திட்டத்தைத் தீட்டத் தொடங்கினான்…
