ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 14
அத்தியாயம் – 14
அடுத்த நாள் மாலை, வழக்கமாக சந்திக்கும் அந்த அமைதியான ஏரிக்கரைக்கு ரன்வீரும் மிருதுளாவும் வந்திருந்தனர்,.. ”உங்க வீட்ல எல்லாரும் என்ன சொன்னாங்க ரன்வீர்? பேசிட்டீங்களா?” என்று அவள் ஆர்வத்துடன் வினவிட…
ரன்வீர் ஒரு நிமிடம் தயங்கிவிட்டு, “இல்ல மிருதுளா… வீட்ல சித்தப்பாக்கு கொஞ்சம் உடம்பு முடியல, அதனால வீட்ல எல்லாரும் கொஞ்சம் வருத்தத்துல இருக்காங்க, இந்த சூழல்ல இதைப் பத்திப் பேசுறது சரியா இருக்காதுன்னு தோணுது, இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணலாம்னு நினைக்கிறேன்,” என்று நிதானமாக சொல்ல,
அவளும் அவனது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, “அதுவும் சரிதான் ரன்வீர், இப்போ உங்க சித்தப்பா எப்படி இருக்கார்?” என்று அக்கறையுடன் அவரது நலனை விசாரித்துத் தெரிந்து கொண்டாள்.
அந்தத் தருணத்தில், மிருதுளாவின் போனுக்கு ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வரவே.. “ஒரு நிமிஷம் ரன்வீர்,” என்று அவனிடம் கூறிவிட்டு, யார் என்று யோசித்தபடி அழைப்பை ஏற்றவள், மறுமுனையில் விஷ்வாவின் குரலைக் கேட்டதுமே அவளுக்கு ஆத்திரம் தலைக்கேறியது…
Advertisement
”பொறுக்கி!” என்று சத்தமாகத் திட்டிவிட்டு, அழைப்பைத் துண்டித்தவள், ஆத்திரத்தில் போனை காரின் டேஷ்போர்டில் தூக்கி எறிந்தாள், அவளது இந்தத் திடீர் மாற்றத்தைக் கவனித்த ரன்வீர், அவளது கண்களை ஊடுருவிப் பார்த்து, “என்னாச்சு? யார் போன்ல?” என்று தீர்க்கமாகக் கேட்டான்…
ஆவேசப்பட்ட பின்பு தான் அவசரபட்டுவிட்டோம் என்பது புரிய,.. அவனை சமாளிக்கும் பொருட்டாய்… “அ… அதெல்லாம் ஒன்னும் இல்ல ரன்வீர், சும்மா ஒரு ராங் கால்,” என்றாள்..
ஆனால் ரன்வீர் விடுவதாக இல்லை, அவனது அந்த லேசர் விழிகள் அவளது பொய்க்கதையை எளிதில் கண்டுகொண்டன. “நான் உன்னை வாட்ச் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன் மிருதுளா, நீ எதையோ என்கிட்ட மறைக்கிற, போன்ல அடிக்கடி யாரோ உன்னை டிஸ்டர்ப் பண்ற மாதிரி தெரியுது, என்ன பிரச்சனைன்னு என்கிட்ட சொல்லு,” என்று கண்டிப்பான குரலில் கேட்டிட, மிருதுளாவும் வேறு வழியின்றி, “அது வந்து…” என்று ஆரம்பித்து, விஷ்வா அவளுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும் விஷயத்தை பற்றி கூறி முடித்தவள்… “புது நம்பர்ல இருந்து கால் வரவும் தான் தெரியாம எடுத்துட்டேன், இன்னைக்கும் அவன் தான் போன் பண்ணியிருக்கான்,” என்று கூற,
இதைக் கேட்டதும் ரன்வீரின் முகம் கோபத்தில் சிவந்தது…
Advertisement
“இதைப்பத்தி ஏன் என்கிட்ட நீ முன்னாடியே சொல்லல? அவனை என்ன பண்றேன் பாரு!” என்று அவன் ஆவேசமாக… ”ஐயோ… வேண்டாம் ரன்வீர்! அவன் மேல தாத்தாவுக்கு நிறைய பாசம் இருக்கு, அவருக்காகத் தான் நான் அமைதியா இருக்கேன், இதெல்லாம் அவருக்குத் தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவார்,” என்று அவள் கூற…
Advertisement
”தாத்தாகிட்ட இதைப்பத்தி நீ முன்னாடியே சொல்லி இருந்தா, அவரே இந்நேரம் அவனை ஒரு வழி பண்ணியிருப்பார், சரியான பைத்தியக்காரி நீ!” என்று கோபத்துடன் திட்டிட,.. ”சரி விடுங்க… நானே மெல்ல தாத்தாகிட்ட சொல்றேன், அவன்கிட்ட நீங்க எந்த வம்பும் பண்ண வேண்டாம், ப்ளீஸ்,” என்று கெஞ்சும் குரலில் கூறி, மிகவும் கஷ்டப்பட்டுத்தான் அவனை அமைதிப்படுத்தினாள். ரன்வீர் அமைதியானாலும், அவனது மனதிற்க்குள் விஷ்வாவிற்கு ஒரு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணம் உறுதியாகப் பதிந்தது…
********
அன்று மீண்டும் மிருதுளாவின் வீட்டிற்குத்தான் வந்திருந்தான் ரன்வீர், அவனது சித்தப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதை மிருதுளா மூலம் அறிந்த வீரமாணிக்கம், அவனிடம் மிகுந்த அக்கறையோடு விசாரிக்கவும் மறக்கவில்லை, ரன்வீரின் குடும்பத்தின் மீதான அவரது அக்கறை இருவருக்கும் இடையிலான பிணைப்பை இன்னும் அதிகமாக்கியது.
Advertisement
பேச்சின் நடுவே ரன்வீர்… “எப்போ பாரு வீட்டுக்குள்ளேயே இருக்கீங்களே தாத்தா… உங்களுக்கு வெளியே போகணும்னு ஆசை இல்லையா?” என்று வினவ, “அதெல்லாம் இல்லப்பா, எனக்கு என் ரூம்லயே இருக்கத்தான் ரொம்ப இஷ்டம்,” என்றார் ஒருவித அமைதியுடன்.
உடனே மிருதுளாவும் குறுக்கிட்டு, “ஆமா ரன்வீர்… மாசத்துல ரெண்டு மூணு நாள்தான் அவர் ரூமை விட்டே வெளியே வருவார், எனக்கும் அதுல ரொம்ப வருத்தம்,” என்று தன் ஆதங்கத்தைக் கூறிட,
ரன்வீர் விடாமல், “வீட்டுக்குள்ள இருக்கவே போர் அடிச்சிடும், நீங்க ரூம்குள்ளேயே இருப்பீங்களா? ஏன் தாத்தா அப்படி?” என்று வினவ, “அதெல்லாம் அப்படித்தான்பா எனக்கு அதுதான் நிம்மதியா இருக்கு,” என்றார் அவர் மழுப்பலாக…
ஆனால் ரன்வீரின் அந்த லேசர் விழிகள் அவர் எதையோ மறைப்பதைச் சரியாகக் கணித்துவிட்டன. “இல்ல தாத்தா… ஏதோ இருக்குனு தோணுது, மறைக்காம சொல்லுங்க,” என்று அவன் அழுத்தமாகக் கேட்க, வீரமாணிக்கம் மெல்லச் சிரித்துவிட்டு.. ”நீ ரொம்ப ஷார்ப்” என்று கூறிவிட்டு,.. இப்போது சீரியஸாக,.. “என் ரூம்ல இருக்கிற ஆவணங்கள் ரொம்ப முக்கியமானது, அதைப் பாதுகாக்கத்தான் நான் பெரும்பாலும் ரூம் உள்ளேயே இருக்கேன்,” என்று ரகசியத்தை உடைக்க, அருகில் இருந்த மிருதுளாவிற்கு அதைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது.
”அப்படி என்ன ஆவணங்கள் அங்கே இருக்கு தாத்தா?” என்று மிருதுளா மிகுந்த ஆர்வத்துடன் கேட்க, “இப்போ சொல்ல முடியாதுமா, ஆனா சீக்கிரமே சொல்லுவேன், எனக்கு அப்புறம் அதை நீதான் பாதுகாக்கணும்,” என்று வீரமாணிக்கம் ஒரு பெரிய பொறுப்பை அவளிடம் ஒப்படைப்பது போல் கூறினார்.
மிருதுளாவிற்கு தாத்தா எதைப்பற்றிப் பேசுகிறார் என்று ஒன்றும் புரியவில்லை, ஆனால் ரன்வீருக்கு மட்டும் எல்லாம் நன்கு புரிந்தது.
நாட்கள் இப்படியே மெல்ல நகர, அன்று விஷ்வா திடீரென்று மிருதுளாவின் வீட்டிற்கு வந்திருந்தான், அவனை வாசலில் கண்ட அந்த நொடியே மிருதுளாவின் முகம் கடும் கோபத்தைத் தத்தெடுத்துக் கொண்டது, அவனது வருகை அவளுக்கு அறவே பிடிக்கவில்லை என்பது அவளது சிவந்த கண்களிலேயே தெரிந்தது.
அவனோ எதற்கும் கலங்காமல், ஒரு ஏளனச் சிரிப்புடன், “எப்படி பேபி இருக்க? உன்னைப் பார்த்தே ரொம்ப நாளாச்சுல!” என்று குழைந்த குரலில் வினவிட,
விஷ்வாவின் அந்தப் பேச்சைக் கேட்டதும் மிருதுளாவிற்கு ஆத்திரம் பொங்கியது.
“உனக்குக் கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா இப்படிப் பேசுறதுக்கு?” என்று அவள் ஆவேசமாகக் கேட்க,
அதற்கு விஷ்வா அலட்சியமாகத் தோளைக் குலுக்கிவிட்டு, “இல்லையே… உன்கிட்ட வெட்கப்பட்டு எதையுமே பண்ண முடியாதே பேபி!” என்று விஷமத்தனமாகச் சொன்னான்.
அவனது ஒவ்வொரு வார்த்தையும் அவளை மேலும் எரிச்சலூட்டியது.
”ச்சீ பொறுக்கி!” என்று அருவருப்புடன் திட்டியவள், மேற்கொண்டு அவனிடம் பேச விரும்பாமல் அங்கிருந்து விறுவிறுவெனத் தனது அறைக்கு சென்றுவிட்டாள்…
விஷ்வா இன்று வந்திருப்பது அவளைச் சீண்டுவதற்காக மட்டுமல்ல, வீரமாணிக்கத்திடம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்பதற்காகத்தான், அதனால் அவளை மேலும் தொந்தரவு செய்யாமல், நேராகத் தாத்தாவின் அறையை நோக்கி தான் சென்றான்…
”தாத்தா!” என்று வாய் நிறைய அழைத்தபடி விஷ்வா அறையினுள் நுழைய, “அட விஷ்வா, வாப்பா உள்ளே வா!” என்று அவனை உற்சாகமாக வரவேற்றார் வீரமாணிக்கம்.
அவனை பார்த்ததும் வீரமாணிக்கத்தின் முகம் மலர்ந்தது, தன் குடும்பத்தின் முதல் ஆண் வாரிசு என்பதால், விஷ்வாவின் மேல் அவருக்கு எப்போதும் ஒரு தனி பாசம் உண்டு.
”என்னப்பா… இந்த பக்கம் ஆளையே காணோம்? பிஸ்னஸ் எல்லாம் எப்படிப் போகுது?” என்று அவர் அக்கறையாக வினவ, விஷ்வா அங்கே இருந்த அந்தப் பெரிய வார்ட்ரோப்பை ஒருமுறை நோட்டம் விட்டுவிட்டு அவர் அருகில் அமர்ந்தவன்,.. “எல்லாம் நல்லாப் போகுது தாத்தா, உங்களைப் பார்த்துப் பேசி ரொம்ப நாளாச்சு, அதான் பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்,” என்று விஷ்வா கூற, தன் பேரன் தன்னைத் தேடி வந்திருப்பதை எண்ணி வீரமாணிக்கம் நெகிழ்ந்து போனார், அந்த வயதான காலத்தில் உறவுகளின் வருகை அவருக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது…
அவனது தொழிலைப் பற்றி ஒவ்வொன்றாகக் கேட்டுத் தெரிந்துகொண்டவர், “அப்புறம்… கல்யாண தேதியெல்லாம் குறிச்சாச்சா விஷ்வா? வீட்ல என்ன சொல்றாங்க?” என்று ஆர்வத்துடன் வினவிட.. அவனோ ”அதைப் பத்திலாம் எனக்குத் தெரியல தாத்தா,” என்று எந்தவித ஆர்வமும் இல்லாமல் பதிலளிக்க, வீரமாணிக்கத்திற்குச் சற்றே குழப்பம் ஏற்பட்டது.
”என்னாச்சுப்பா? ஒரு சந்தோஷமே இல்லாமப் பேசுற? ஏதாவது பிரச்சனையா?” என்று அவர் கவலையுடன் வினவ, விஷ்வா சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தவன் போல… “இப்போ உங்ககிட்ட ஒரு உதவி கேட்டுத்தான் நான் வந்திருக்கேன் தாத்தா” என்றான்…
”உதவியா? என்ன உதவிப்பா?” அவர் வினவ,.. ”உங்களுக்கே தெரியும் தாத்தா… அப்பாவோட பிஸ்னஸைதான் இப்போ வரை நான் கவனிச்சுக்கிட்டு இருக்கேன், ஆனா, என்னோட பேஷன் தனியா ஒரு கம்பெனி ஆரம்பிச்சு முன்னேறணும்ங்கிறதுதான், அப்பாகிட்ட ஒவ்வொன்னுக்கும் கணக்கு வழக்கு சொல்லிக்கிட்டு இருக்க முடியல, அதனால சொந்தமா ஒரு சின்னத் தொழில் தொடங்கலாம்னு நினைக்கிறேன். அதுக்கு எனக்கு ஒரு 12 லட்சம் தேவைப்படுது, நீங்க கொடுத்தீங்கன்னா, தொழிலை நிலைநிறுத்தினதும் சீக்கிரமே திருப்பிக் கொடுத்துடுவேன்,” என்று மிகவும் பணிவாகச் சொல்ல, வீரமாணிக்கம் யோசனையில் ஆழ்ந்தார்…
அவர் யோசிப்பதைப் பார்த்த விஷ்வா, சட்டென்று ஒரு நல்லவன் போல வேடமிட்டு, “என்னாச்சு தாத்தா? உங்களுக்கு விருப்பம் இல்லைனா நான் கம்பல் பண்ண மாட்டேன், அப்பாக்கிட்ட கேட்க எனக்கு விருப்பம் இல்ல, உங்ககிட்ட கேட்கலாம்னு தோணுச்சு, கேட்டேன் அவ்வளவுதான்,” என்று முகத்தைத் தொங்கப்போட்டுக் கொள்ள, அவனது அந்தப் பேச்சில் இளகிப்போன வீரமாணிக்கம், “அதெல்லாம் இல்லப்பா! என் பேரனுக்குக் கொடுக்காம நான் வேற யாருக்குக் கொடுக்கப் போறேன்? உன்னோட முன்னேற்றத்துக்காக நான் செய்ய மாட்டேனா?” என்று கூறிவிட்டு, மெல்ல எழுந்து அந்தத் தேக்கு மர வார்ட்ரோப்பை நோக்கிச் சென்றார்.
அவர் எழுந்து சென்ற அந்தச் சில நொடிகளைத் தனக்கு சாதகமான சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்ட விஷ்வா, ஏற்கனவே தீட்டியிருந்த கச்சிதமான திட்டத்தின்படி, அவர் கவனிக்காத வண்ணம் மெல்லச் சத்தமில்லாமல் எழுந்து, அந்த அலமாரிக்கு நேர் எதிரே ஒரு ரகசியக் கேமராவைத் துரிதமாகப் பொருத்தினான், பின்னாளில் அந்த வார்ட்ரோப்பைத் திறக்க அந்தப் பதிவு அவனுக்குத் தேவைப்பட்டது, அடுத்த கணமே ஒன்றும் தெரியாதவன் போலத் திரும்பி வந்து அமர்ந்து கொள்ள,
அலமாரிக்கு அருகில் சென்ற வீரமாணிக்கம், லாக்கரைத் திறக்கும் முன் ஒரு பாதுகாப்பு உணர்வோடு மெல்லத் திரும்பி விஷ்வாவைப் பார்த்தார்.
விஷ்வா மிகவும் சாமர்த்தியமாகத் தன் பார்வையைத் தனது செல்போனில் செலுத்தியபடி, ஏதோ ஒரு முக்கியமான வேலையில் இருப்பது போலக் காட்டிக் கொண்டான்.
அவனது பார்வை தன் மீது இல்லை என்பதையும், அவன் போனில் பிஸியாக இருப்பதையும் உறுதி செய்து கொண்ட பின்னரே, வீரமாணிக்கம் அந்த ரகசியப் பாஸ்வேர்டை அழுத்தி லாக்கரைத் திறந்தவர், அதனுள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுகளிலிருந்து 12 லட்சத்தை எடுத்துவிட்டு, மீண்டும் மிக கவனமாக லாக் செய்தார்..
பணத்தை எடுத்துக் கொண்டு விஷ்வாவின் அருகில் வந்தவர், “இந்தாப்பா விஷ்வா… உன் தொழிலுக்கு இது ஒரு நல்ல ஆரம்பமா இருக்கட்டும்,” என்று கூறிப் பணத்தை நீட்டிட,.. ”ரொம்ப நன்றி தாத்தா! என் மேல நீங்க வச்சிருக்க நம்பிக்கையைக் காப்பாத்துவேன்,” என்று போலிப் புன்னகையுடன் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டான் விஷ்வா…
