ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 16
அத்தியாயம் – 16
மிருதுளாவின் கண்ணீரை கண்டு தவித்துப் போனவன், “உனக்காகவும் தான் வந்தேன் மிருது, ஆனா…” என்று விளக்கமாக ஏதோ சொல்ல வர, அவளோ அதனை கேட்காமல், “அது தான் சொல்லிட்டீங்களே, உங்களுக்குத் தேவையான ஏதோ ஒரு ஃபைலுக்காகத் தான் வந்தேன்னு!” என்று தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கோபத்துடனும் வலியுடனும் கூறினாள்…
”மிருதுளா, முதல்ல நான் சொல்ல வரதை முழுசா கேளு,” அவன் தவிப்புடன் கூற,.. ”என்ன கேட்கணும்? அதுதான் கேட்டாச்சே! சோ, நீங்க அன்னைக்கு வந்தது உங்களுக்குத் தேவையான ஒரு பொருளுக்காக… அப்படின்னா இத்தனை நாட்களும் என்கிட்ட பழகினது எல்லாம் பொய், அப்படித்தானே?” உள்ளே வலித்தாலும் அவளால் தன் கோபத்தையும் அடக்க முடியவில்லை…
Advertisement
”அப்படியெல்லாம் இல்ல, தயவு செய்து பொறுமையா நான் சொல்றத கேளு,” என்று அவன் சொல்ல, அவளோ அவன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்ற விரக்தியில் அவனின் பேச்சைக் கேட்கப் பிடிக்காமல் சட்டென காரின் கதவைத் திறந்து கொண்டு வெளியே இறங்கினாள்…
”மிருதுளா! ஹேய் மிருது!” என்று அவனும் அவசரமாக காரின் கதவைத் திறந்து கொண்டு, வேகமாகச் சென்று கொண்டிருந்தவளின் முன்னால் போய் நின்று, “கோபப்படாம நான் சொல்றத கேளு,” என்று சொல்ல…
”இனி கேட்க எதுவும் இல்லை மிஸ்டர் ரன்வீர்! ரொம்ப மோசமா என்னை ஏமாத்தி இருக்கீங்க. ச்சே… நானும் எவ்வளவு முட்டாளா இருந்திருக்கேன்!” என்றவளுக்கு கண்ணீர் அருவியாய் வடிந்தது…
Advertisement
“நீ நினைக்கிற மாதிரி இல்ல மிருதுளா! நான் உன்னை காதலிச்சது, காதலிச்சிக்கிட்டு இருக்கிறது சத்தியமான உண்மை, அதனால தான் இப்போ எல்லாத்தையும் மறைக்காம உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன், துரோகம் பண்ணணும்னு நினைச்சிருந்தா நான் சொல்லாமலே அந்த ஃபைலைத் திருடிட்டுப் போயிருப்பேன்” என்று ரன்வீர் ஆவேசமாகத் தன் தரப்பு நியாயத்தைச் சொல்ல, அவளோ அதை எதையும் நம்ப மறுத்தாள்…
Advertisement
”இதுக்கு மேலயும் உன்னை நம்ப நான் ஒன்னும் பைத்தியக்காரி இல்ல, இப்போ என்கிட்ட இந்த உண்மையை சொல்றேன்னா அதுக்கும் உங்கிட்ட ஏதாவது பிளான் இருக்கும்,” என்று அவள் சொல்ல… அவனோ… ”எந்த ஒரு பிளானும் இல்ல, தயவு செய்து என்னை நம்பு, இது தான் நீ என் மேல வச்சிருக்க நம்பிக்கையா?” என்று அவன் ஆதங்கத்துடன் கேட்க…
”நம்பிக்கையைப் பேசுற தகுதி உனக்கு இல்ல! ஏதோ ஒரு நோக்கத்துக்காக ஒரு பொண்ணோட காதலை பயன்படுத்துறது எவ்வளவு பெரிய கேவலமான விஷயம்னு உனக்குத் தெரியுமா? அந்தப் பைலைத் திருடுறதுக்காகத் தான் நீ என் பின்னாடி வந்திருக்க… உனக்குத் தேவையானது அந்தப் பைல் தானே? அதை எடுத்துக்கிட்டு என் வாழ்க்கையை விட்டுப் போயிடு,” என்று அவள் ஆத்திரத்தில் கத்திட,
”மிருதுளா! என்னைப் பாருமா, அந்தப் பைலை விட நீதான் எனக்கு முக்கியம்னு புரிஞ்ச அப்புறம் தான் எல்லாத்தையும் சொன்னேன், நான் திருட வந்தவன் தான், ஆனா உன்கிட்ட துரோகியா வந்தவன் இல்ல,” என்று அவளது கைகளைப் பற்ற முயன்றான்.
அவளோ சட்டென்று பின்னால் நகர்ந்து.. ”கை வைக்காதிங்க மிஸ்டர் ரன்வீர்! அன்னைக்கு பால்கனி வழியா வந்தப்பவே உங்களைப் போலீஸ்ல பிடிச்சு கொடுத்திருக்கணும், தப்பு பண்ணிட்டேன்,” என்று அவள் கையைத் தட்டிவிட்டு விறுவிறுவென்று நடக்கத் தொடங்கிட, ரன்வீர் அங்கே ஒரு சிலையைப் போல உறைந்து நின்றான். அவனது அப்பட்டமான நேர்மை அவளுக்கொரு தந்திரமாகத் தெரிந்ததில் அவனது இதயம் சுக்குநூறாக உடைந்தது. இப்போது அவள் மிகவும் கோபமாக இருக்கிறாள், நிதானத்திற்கு வந்த பின்னர் பேசுவது தான் நல்லது என்று எண்ணி அவனும் அவளை மேலும் தொந்தரவு செய்யவில்லை…
Advertisement
தனது வீட்டிற்கு வந்து சேர்ந்த மிருதுளாவோ அறைக்குள் நுழைந்து தனது மெத்தையில் விழுந்து கேவி கேவி அழுதாள், தனிமையில் வாடி கிடந்தவளுக்கு ரன்வீரின் வருகைக்கு பிறகு தான் இந்த வாழ்க்கையே அர்த்தமுள்ளதாகத் தெரிந்தது, யாருமற்ற அனாதையாக உணர்ந்தபோது, தனக்காக ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையைத் தந்தது அவனது காதல் தான்.
ஆனால், அந்த காதலே ஒரு தேவையை அடிப்படையாகக் கொண்டுதான் தொடங்கியது என்பதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
‘நீங்க என்னை இப்படி ஏமாத்துவீங்கன்னு நான் நினைக்கவே இல்ல, ஏன் இப்படி பண்ணீங்க வீர்’ என்று எண்ணும்போதே அவள் இதயம் சுக்குநூறாக உடைந்தது, அவன் உண்மையைச் சொன்னது ஒருபுறம் அவனது நேர்மையைக் காட்டினாலும், ஆரம்பத்தில் அவள் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டாள் என்ற எண்ணம் அவளைக் குத்திக் கிழித்தது….
அன்றைய நாள் முழுக்க மிருதுளா தனது அறையை விட்டு வெளியே வரவே இல்லை. வீரமாணிக்கமும் விஷ்வா சொன்ன விஷயங்களால் குழப்பமடைந்து, பலவித சிந்தனைகளில் உழன்று கொண்டிருந்ததால் மிருதுளாவைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை…
அடுத்த நாளும் விடிந்தது, ஆனால் மிருதுளாவிற்கு நடந்ததை நினைக்க நினைக்க அழுகை தான் வந்தது, ரன்வீர் அவளுக்குப் பலமுறை போன் செய்தான், ஆனால் அவள் எதையுமே எடுக்கவில்லை, அவனது அழைப்புகள் ஒவ்வொன்றும் அவளுக்கு அவன் சொன்ன அந்த
பைல் ரகசியத்தையே நினைவுபடுத்தியது.
மீண்டும் மீண்டும் விடாமல் அழைத்தவனிடம், இனி பேச எதுவுமில்லை என்பது போல, “தயவு செய்து என்னை தொந்தரவு பண்ணாதீங்க” என்று ஒரு குறுஞ்செய்தியை மட்டும் அனுப்பிவிட்டு போனை அணைத்து வைத்தாள்…
அவளது மெசேஜைப் பார்த்த ரன்வீர் அங்கே துடித்துப் போனான். ‘நான் உன்னை உண்மையாத்தான் காதலிக்கிறேன் மிருது, உனக்கு அது புரியவே இல்லையா, அந்த உண்மையைச் சொன்னது உன்னை இழக்கக் கூடாதுன்றதுக்காகத்தான், ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோ’ என்று அவன் மனதிற்குள் கதறினாலும், அவளது கோபம் தணியும் வரை காத்திருப்பதே நல்லது என்று அமைதியானான்…
இந்நிலையில் அன்று விஷ்வா மீண்டும் தாத்தாவின் வீட்டிற்கு வந்திருந்தான், அன்று அவன் வைத்து விட்டு போன அந்த கேமரா மெமரி கார்டில் பதிவாகும் வகையில் இருந்ததால், அதை மொபைலில் நேரடியாக பார்க்க முடியாது, அந்த மெமரி கார்டை எடுத்து லேப்டாப் அல்லது வேறு சாதனத்தில் போட்டுப் பார்த்தால் மட்டுமே அதில் பதிவாகி இருப்பதை பார்க்க முடியும், அதை எடுக்கத்தான் அவன் இன்று வந்திருந்தான்…
மிருதுளா சோகத்தில் அவளது அறையிலேயே முடங்கிக் கிடக்க, வீரமாணிக்கமோ தோட்டத்தில் செடிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தார், வரும்போதே வாசலில் இருந்து அதனைத் தந்திரமாகக் கவனித்தவன், மெல்ல தாத்தாவின் அறைக்குள் யாருக்கும் சந்தேகம் வராதபடி நுழைந்தான்…
அந்த ரகசிய இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவிலிருந்து மெமரிகார்டை லாவகமாக உருவியவன், ஒருவேளை அந்த பாஸ்வேர்ட் அதில் சரியாகப் பதிவாகாமல் போயிருந்தால் என்ன செய்வது என்ற முன்னெச்சரிக்கையில், தன்னிடம் இருந்த இன்னொரு காலி மெமரிகார்டை அதில் பொருத்திவிட்டு நாசுக்காக வெளியே வந்தான்…
அவன் வெளியே வரும்போது, அவன் முகம் ஒரு வஞ்சக வெற்றிக் களிப்பில் இருந்தது.. ‘பாஸ்வேர்ட் மட்டும் இதுல ரெகார்ட் ஆகி இருந்தா அந்த லாக்கர்ல இருக்க மொத்த பணமும் எனக்கு தான்’ என்று எண்ணியவன், அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான், அந்த கணம் தான் தாத்தாவும் உள்ளே வந்திருந்தார்…
”அட விஷ்வா… என்னப்பா திடீர்னு வந்திருக்க?” என்று அவர் வினவ… “நீங்க என்ன முடிவு எடுத்திருக்கீங்கன்னு தெரிஞ்சிக்க தான் தாத்தா வந்தேன்,” என்றான் அவன் ஆவலோடு…
மெல்ல அவரும் சோபாவில் வந்து அமர்ந்தவர், சில நொடி அமைதிக்குப் பின், “நானும் யோசிச்சு பார்த்தேன் விஷ்வா, நீ சொல்றது தான் சரி,” என்று சொல்ல, அவன் முகத்திலோ தவுசன்ட் வாட்ஸ் பல்பு எரியும் அளவிற்குப் பிரகாசம்!
தாத்தாவைத் தாவி அணைத்துக் கொண்டவன், “தேங்க்ஸ் தாத்தா!” என்று கூறிட, புன்னகையுடன் அவன் தோளைத் தட்டிக் கொடுத்தவர், “எனக்கு என் பேரனோட சந்தோஷம் தான் முக்கியம்,” என்றார்…
அவரை விட்டுப் பிரிந்தவன், “மிருதுளா கிட்ட பேசிட்டீங்களா தாத்தா?” என்று வினவ… “இன்னும் பேசல, சீக்கிரம் பேசிடுறேன்,” என்றார் வீரமாணிக்கம்…
விஷ்வாவிற்கு இப்போது இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒருபுறம் அந்த லாக்கரிலுள்ள மொத்த பணமும் தன் கைவசம் வரப்போகிறது, மறுபுறம் தாத்தாவே மிருதுளாவைத் தனக்குக் கட்டி வைக்கச் சம்மதித்துவிட்டார்…
கொஞ்ச நேரம் அவருடன் அமர்ந்து உரையாடியவன்… ”சரி தாத்தா, நான் கிளம்புறேன், முக்கியமான வேலை ஒன்னு இருக்கு,” என்று கூறிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென்று வெளியேறினான், அவனது கையில் இருந்த அந்த மெமரி கார்டுதான் இப்போது அவனது மிகப்பெரிய ஆயுதம்…
தனது காருக்குள் அமர்ந்து லேப்டாப்பைத் திறந்த விஷ்வா மெமரிகார்டினை பொறுத்திட, அந்த வீடியோ ஓடத் தொடங்கியது. வீரமாணிக்கம் வார்ட்ரோப்பின் அருகே சென்று, அதனுள் இருந்த லாக்கரில் அந்த ரகசிய எண்களை ஒவ்வொன்றாக அழுத்தினார், விஷ்வா தன் லேப்டாப் திரையை ஜூம் செய்து உற்றுப் பார்த்தான்…
தெளிவாக, மிகத் தெளிவாக அந்தப் பாஸ்வேர்ட் எண்கள் அவன் கண்களில் பட்டன! ஒரு கணம் அவன் இதயம் வேகமாகத் துடித்தது, முகமெல்லாம் வஞ்சகச் சந்தோஷம் படர, எதையோ பெரியதாகச் சாதித்துவிட்ட வெற்றிப் பெருமிதம் அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது…
’இப்போதே… இப்போதே அந்த அறைக்குள் சென்று அந்த லாக்கரைத் திறக்க வேண்டும்! அங்கிருக்கும் பணக்கட்டுகளை என் வசமாக்கிக் கொள்ள வேண்டும்’ என்று அவனது கைகால்களெல்லாம் பரபரத்தன. அவனது பேராசை அவனைத் தூண்டியது…
ஆனால், சட்டென்று தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டவன்.. ‘வேண்டாம் விஷ்வா… இப்பதான் அங்கிருந்து கிளம்பி வந்திருக்கோம், மறுபடியும் உள்ளே போனா தாத்தாவுக்கு சந்தேகம் வரலாம், அவசரப்பட்டு காரியத்தைக் கெடுத்துக்கக் கூடாது, நாளைக்குத் தாத்தா வழக்கம்போலத் தோட்டத்துக்குப் போகும்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்று தன்னைத் தானே அடக்கிக்கொண்டு, ஒரு குரூரச் சிரிப்புடன் காரை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பினான்…
தாத்தாவிடம் கேட்டால் அவர் தாராளமாகப் பணம் கொடுப்பவர்தான் என்றாலும், விஷ்வாவிற்கு அந்தச் சிறிய தொகையில் எல்லாம் திருப்தி இல்லை, அவனது நோக்கம் அந்த வீட்டின் ஒரு சிறு பகுதி அல்ல, அந்த லாக்கரில் இருக்கும் மொத்தப் பணமும் தனக்கே வேண்டும் என்பதுதான். அந்த அளவிற்கு அவனது மனதிற்குள் பேராசை வேரூன்றி இருந்தது…
அதுமட்டுமில்லாமல், தாத்தாவிடம் இன்னும் என்னென்ன ரகசியச் சொத்துக்கள் இருக்கின்றன என்பதும் அவனுக்கு முழுமையாகத் தெரியாது, அதையெல்லாம் எப்படியாவது தெரிந்துகொண்டு, அத்தனையையும் தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வஞ்சக எண்ணம் அவனிடம் இருந்தது…
வீட்டில் பணம் திருட்டுப் போனாலும், செல்லப் பேரனான தன் மீது யாருக்கும் எந்தச் சந்தேகமும் வராது என்ற அதீத நம்பிக்கையில்தான் இத்தனை துரோகங்களையும் அவன் துணிந்து செய்து கொண்டிருந்தான், உண்மையில், பணத்திற்காக எந்தக் கொடூரமான செயலையும், ஏன் ஒரு கொலையைக்கூடச் செய்யத் தயங்காதவன் அவன். ஆனால், தன் பேரனின் இந்த நச்சுத்தன்மை கொண்ட மறுபக்கத்தை அறியாத வீரமாணிக்கம், அவனை மிகச்சிறந்த ஒரு நல்லவன் என்றே கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்…
விஷ்வா வீசிய பாச வலையில் சிக்கித் தவிக்கும் அவர், ஒருநாள் இதே பேரனின் கையால்தான் தன் உயிர் போகப் போகிறது என்ற கசப்பான உண்மையை அறியாமலேயே அவனைத் தன் இதயத்திற்கு நெருக்கமாக வைத்துக் கொண்டிருந்தார்…
