ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 17
அத்தியாயம் – 17
அன்றைய பொழுதும் அப்படியே கழிந்தது, அடுத்த நாள் விடியலில் மிருதுளா இன்று ஒரு தெளிவான மனநிலைக்கு வந்திருந்தாள். ரன்வீரிடம் பேசி, ‘அது என்ன பைல்? அது எதற்காக உங்களுக்குத் தேவைப்படுகிறது?’ என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள நினைத்தவள், அவனை மன்னிக்கும் மனநிலைக்கு மட்டும் இன்னும் வரவில்லை, அவன் தன்னைத் திட்டமிட்டு ஏமாற்றியதை அவளது காதலால் ஜீரணிக்கவே இயலவில்லை…
வீரமாணிக்கமும் மிருதுளாவிடம் விஷ்வாவைப் பற்றிப் பேசுவதற்காகத்தான் காத்திருந்தார். ஆனால் மனதிற்குள் ஏதோ ஒரு தயக்கமும் உறுத்தலும் இருந்த காரணத்தினால் தான் நேற்றைய நாளில் கூட அவளிடம் எதையும் பேசாமல் தள்ளிப் போட்டார்…
மிருதுளா ஒரு முடிவிற்கு வந்திருந்தாலும், அவளுக்கே வழியச் சென்று ரன்வீரிடம் பேசப் பிடிக்கவில்லை. ‘அவனே போன் செய்யும்போது கேட்டுக் கொள்ளலாம்’ என்று காத்திருந்தாள். ஆனால், அவளது எதிர்பார்ப்பிற்கு மாறாக அன்று அவன் ஒரு போன் கால் கூட செய்யவில்லை, அவனது இந்த மௌனம் அவளுக்கு இன்னும் எரிச்சலையும் வலியையும் கொடுத்தது…
Advertisement
மாலை நேரமும் ஆரம்பித்துவிட்டது, விஷ்வா மிகவும் எச்சரிக்கையுடன் வீட்டினுள் நுழைந்தான், வேலையாட்கள் யாவரும் அவ்வளவாக அங்கே தென்படவில்லை, சமையலறையில் மட்டும் ஒரு பெண் வேலை செய்துகொண்டிருந்தாள். வரும்போதே தோட்டத்தையும் கவனித்தான், அங்கும் வீரமாணிக்கம் இருப்பது போலத் தெரியவில்லை. ‘ஒருவேளை அவர் அறையிலேயே இருந்தால் இன்றைய பிளான் சொதப்பி விடுமே’ எனும் முணுமுணுப்புடன் மெல்ல அறைக்குள் நுழைந்தவனுக்கு, அந்த அறை காலியாக இருப்பதை கண்டதும் இதழில் வெற்றிப் புன்னகை படர்ந்தது…
தாத்தா அறையில் இல்லை என்று நினைத்துக் கொண்டு, தான் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த கள்ளச் சாவியை வைத்து அந்தத் தேக்கு மர அலமாரியைத் திறந்தான். பிறகு, லேப்டாப்பில் பார்த்த அந்த ரகசியப் பாஸ்வேர்டு எண்களைப் போட்டு லாக்கரையும் திறக்க, அதுவும் “க்ளிக்” என்ற சத்தத்துடன் திறந்துகொள்ள, அதனுள் அடுக்கடுக்காக இருந்த கட்டுக்கட்டான பணத்தைக் கண்டதுமே அவனது கண்கள் பேராசையில் விரிந்தன…
“இவ்வளவு பணமா! இது அத்தனையும் இப்போ எனக்குத்தான்” என்று எண்ணியவன், பணத்தை அள்ளித் தன் பையில் திணிக்கத் தொடங்கினான், அப்போதுதான் அவனது பார்வை அந்தப் பணக்கட்டுகளுக்கு மேல் செல்ஃபில் இருந்த அந்த ஆவணங்கள் மீது விழுந்தது…
Advertisement
அவன் கைகள் நடுங்க அந்தப் பைலை மெல்லத் திறந்து பார்த்த விஷ்வாவிற்கு ஒரு கணம் மூச்சே நின்றுவிட்டது, பல கோடி மதிப்புள்ள சென்னை நகரின் மையப்பகுதியில் இருக்கும் ஒரு பிரம்மாண்டமான வீடு தாத்தாவின் பெயரில் இருந்தது, அதுமட்டுமல்லாமல், அதே போல இன்னும் பல முக்கிய இடங்களில் இருக்கும் சொத்துக்கள் அடங்கிய பத்திரங்களும் அங்கே அடுக்கப்பட்டிருந்தன…
Advertisement
மேலும் புரட்டிப் பார்த்தவனுக்குப் பேரதிர்ச்சியாக, மிருதுளாவிற்கு அவள் தாய் தந்தை கொடுத்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துப்பத்திரங்களும் அங்கேயே இருக்க, அதைப் பார்த்தவன் அப்படியே மலைத்துப் போனான். தாத்தாவிடம் இவ்வளவு சொத்துக்கள் இருக்கும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை…
இந்த சொத்துக்கள் எல்லாம் அவனுக்குக் கிடைத்தால், அவன் தான் இந்த ஊரிலேயே மிகப்பெரிய செல்வந்தன்! அவனது கண்கள் பேராசையில் சிவந்தன…
“இந்தச் சொத்து மட்டும் என் கைக்கு வந்தா… நான் தான் ராஜா! இந்தத் தாத்தா எதுக்கு இதையெல்லாம் ஒளிச்சு வச்சிருக்காரு?” என்று பற்களைக் கடித்தவன், அந்தப் பத்திரங்களையும், பணத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர முற்பட்டான், அவனது முகம் இப்போது ஒரு மனிதனுடையதாக இல்லை, பணவெறி பிடித்த ஒரு மிருகத்தின் முகமாக மாறியிருந்தது…
Advertisement
பேக்கை மூடிவிட்டு அவன் திரும்பிய நேரம் திடுக்கிட்டுப் போனான், காரணம் தாத்தா அறையில் உள்ள ஆபிஸ் அறையில் தான் இருந்திருப்பார் போலும், ஏதோ ஒரு சத்தம் கேட்டு வெளியே வந்தவர் தன் பேரன் செய்து கொண்டிருக்கும் வேலையைக் கண்டு திகைத்துப் போனார்…
அவரின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன, தான் உயிராக நினைத்த பேரன், திருடன் போல லாக்கரைத் திறந்து பணத்தையும் சொத்துப்பத்திரங்களையும் பையில் திணித்துக் கொண்டிருப்பதை அவரால் நம்பவே முடியவில்லை.
“விஷ்வா… என்னப்பா இது? என்ன காரியம் பண்ணிட்டு இருக்க?” என்று அவர் குரல் நடுங்கக் கேட்டிட, ஒரு நிமிடம் விஷ்வாவிற்கு உடல் நடுங்கியது. ஆனால், அடுத்த நொடியே அவனது பேராசை அந்தப் பயத்தை மறைத்தது.
மாட்டிக் கொண்டோம் என்ற எண்ணம் வந்ததும், அவனது முகத்தில் இருந்த அந்தப் போலியான பாச முகமூடி கழன்று விழுந்தது…
”தாத்தா… நீங்க ரூம்ல இல்லன்னு நினைச்சேன், ஆபிஸ் ரூம்ல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” என்று அவன் மிகவும் சாதாரணமான குரலில் அதே சமயம் ஒருவிதக் குரூரத்துடன் கேட்டான்…
”விஷ்வா! நீ திருடுறியா? உனக்கு என்ன வேணும்னாலும் நான் கொடுத்திருப்பேனேடா! எதுக்காக இப்படித் துரோகம் பண்ற? அந்தப் பையை முதல்ல கீழ வை,” என்று வீரமாணிக்கம் அதிகாரத்துடன் முன்னேறிட, விஷ்வா பின்வாங்கவில்லை. மாறாக, பையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு.. “கொடுத்திருப்பீங்களா? கேட்டா இந்த சொத்தையெல்லாம் என் பேர்ல எழுதி வச்சிருப்பீங்களா? கண்டிப்பா மாட்டீங்க! அந்த மிருதுளாவுக்குத் தான் எல்லாத்தையும் கொடுக்கணும்னு பிளான் பண்ணி வச்சிருக்கீங்க, எனக்கும் விவரம் தெரியும் தாத்தா,” என்று அவன் சீறினான்.
வீரமாணிக்கம் அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டார். “இல்ல விஷ்வா… நீ தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்க, அது மட்டும் இல்லாம உன் மேல நான் வச்சிருந்த நம்பிக்கையை இப்படி உடைச்சிட்டியேடா!” என்று ஆவேசமாக நெருங்க, கொஞ்சமும் யோசிக்காமல் அவன் அவரை தள்ளி விட, அவர் அங்கிருந்த சோபாவில் போய் பொத்தென்று விழுந்தார்,..
அவர் அதிர்ந்து அவனை பார்க்க, அவனோ… “உங்க நம்பிக்கை எனக்குத் தேவையில்லை தாத்தா, எனக்குத் தேவையானது இந்த பணம் மட்டும்தான், இப்போ சொத்து பத்திரமும் என் கைக்கு வந்திருச்சு, அதையும் கூடிய சீக்கிரமே என் பேர்ல மாத்திக்ருகிருவேன்,” என்று கூறிவிட்டு வஞ்சகமாகச் சிரிக்க, அந்த கணம் தாத்தா சுதாரித்துக்கொண்டு அருகில் இருந்த போனை எடுக்க முயல, விஷ்வா பாய்ந்து சென்று அவரது கையைப் பற்றினான். அவனது பிடியில் இருந்த குரூரம் வீரமாணிக்கத்தை நிலைகுலையச் செய்தது…
“துரோகி நாயே! உன்னை இதையெல்லாம் எடுத்துட்டுப் போக விட்டுடுவேனா? என் கண்ணு முன்னாடியே திருடுறியா?” என்று ஆவேசமாகக் கத்திய வீரமாணிக்கம், தன் பலம் கொண்ட மட்டும் விஷ்வாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்…
அந்த எதிர்பாராத அடியில் விஷ்வாவின் தலை ஒருபுறம் சரிந்தது, அந்த கணம் வலியை விடவும், தன் திட்டம் அம்பலமான கோபமே அவனுக்குள் எரிமலையாய் வெடித்தது.
”இந்த வயசுலயும் உனக்கு இவ்வளவு திமிரா?” என்று பற்களைக் கடித்தவன், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த ஒரு பலமான கயிற்றை எடுத்து வீரமாணிக்கத்தின் கழுத்தைச் சுற்றிப் போட்டுப் பின்னால் இருந்து ஓங்கி இறுக்கினான்…
அந்தப் பெரியவர் சற்றும் இதனை எதிர்பார்க்கவில்லை. மூச்சுக்குழாய் நசுக்கப்பட, “வி… விஷ்வா…” என்று கூட சொல்ல முடியாமல் அவர் தொண்டை அடைத்தது, அவர் தன் கைகளால் கயிற்றைத் தளர்த்தப் போராடினார். கால்கள் தரையில் தாளம் போடத் துடித்தன. கண்கள் பிதுங்கி, முகம் சிவந்து, ரத்த நாளங்கள் புடைக்க அந்தப் பெரியவர் துடிதுடித்துப் போனார்.
ஆனால், விஷ்வாவின் கைகளில் இப்போது ஒரு மிருகத்தின் பலம் இருந்தது. “நீ செத்தாதான் இந்த சொத்தெல்லாம் என் கைக்கு வரும்னா, அதுவே நடக்கட்டும்!” என்று குரூரமாகச் சீறியபடி கயிற்றை இன்னும் வெறித்தனமாக இறுக்கினான் விஷ்வா.
தாத்தாவின் உயிர் பிரிந்த அந்தத் துரதிர்ஷ்டவசமான வினாடியில்தான் ரன்வீர் அந்த அறைக்குள் நுழைந்தான், மிருதுளாவை எப்படியாவது நேரில் பார்த்துப் பேசி உண்மையை விளக்கிவிடலாம் என்று வந்தவன், தாத்தாவின் அறைக்குள் கேட்ட சத்தத்தைக் கேட்டுப் பதறியபடி அங்கே வந்தான். ஆனால், அங்கே அவன் கண்ட காட்சி அவனது நரம்புகளைத் தறிக்கச் செய்தது. விஷ்வா செய்திருக்கும் அந்த பயங்கரமான செயலைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனவன், அடுத்த நொடி, ஆவேசமாகப் பாய்ந்து விஷ்வாவை ஓங்கித் தள்ளிவிட்டு, மூச்சற்றுக்கிடந்த வீரமாணிக்கத்தை நெருங்கி, அவரது கழுத்தில் இறுகியிருந்த அந்தக் கயிற்றை உருவ முயன்றான்.
“தாத்தா… தாத்தா… கண்ணைத் திறங்க!” என்று அவன் பதறிட, அவரோ சுயநினைவின்றி கிடந்தார்.
இதற்கிடையில் ரன்வீரை சற்றும் எதிர்பார்க்காத விஷ்வாவோ சட்டென்று சுதாரித்துக் கொண்டான். வெளியே யாரோ வரும் அரவம் கேட்கவே, தன் மீதிருந்த பழியைத் திசைதிருப்ப எண்ணி, கீழே இருந்து வேகமாக எழுந்து கொண்டவன், “ஐயோ தாத்தா! என் தாத்தாவை விட்டுடுடா கொலைகாரப் பாவி! யாராவது ஓடி வாங்க… என் தாத்தாவைக் கொல்லப் பார்க்கிறான்!” என்று ஓங்கி கூச்சல் போட்டான்…
சரியாக அந்தத் தருணத்தில் தான் மிருதுளா பதறியடித்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள், அவள் கண்டது… தன் தாத்தா அசைவற்று கிடக்க, அவர் கழுத்தில் இருந்த கயிற்றோடு ரன்வீர் நின்றிருப்பதையும் விஷ்வா அழுதுகொண்டே கத்துவதையும் தான்!
கண்கள் விரிந்து, இதயம் துடிக்க நின்ற மிருதுளாவுக்கு, ரன்வீர் திருடன் என்று தெரிந்த பழைய காயத்தோடு, இப்போது அவன் தன் தாத்தாவையே கொன்றுவிட்டான் என்ற அதிர்ச்சியும் சேர்ந்து அவளை நிலைகுலையச் செய்தது…
நாக்கு வெளியே தள்ளிய நிலையில் உணர்வற்றுப் போய்க் கிடந்த தாத்தாவை “தாத்தா!” எனும் பெரும் கூவலுடன் நெருங்கியவள், பேச்சு மூச்சின்றி கிடந்தவரைக் கண்டு கதறி அழுதாள்.
”யாராவது ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணுங்க…” என்று அவள் பதற்றத்தில் கத்த, அங்கிருந்த ரன்வீர் கனத்த குரலில், “ஹி இஸ் டெட்… அவர் உயிர் பிரிஞ்சிருச்சு மிருதுளா,” என்றான்…
அந்த வார்த்தைகள் அவளது இதயத்தில் ஈட்டியாய் பாய்ந்தன. “இல்ல… இல்ல… தாத்தா என்னை விட்டுப் போக மாட்டாரு!” என்று அவரை அணைத்துக் கொண்டு இன்னும் சத்தமாகக் கதறி அழுதாள். அவளது தாய் தந்தைக்குப் பிறகு இந்த உலகில் அவளுக்கென்று இருந்த ஒரே சொந்தம், ஒரே ஆதரவு அவர்தானே! இன்று அவரும் அவளைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டார் என்பதை அவளால் தாங்கவே முடியவில்லை…
சரியாக அந்த நேரத்தில் தான் விஷ்வா தன் அடுத்த நாடகத்தைத் தொடங்கினான். “எல்லாம் இவனால தான் மிருதுளா! நான் உள்ள வரும்போது இவன் தான் தாத்தா கழுத்துல கயிறை போட்டு இறுக்கிட்டு இருந்தான், நான் எவ்வளவோ தடுத்தும் இவன் கேக்கல… பணத்துக்காக என் தாத்தாவையே கொன்னுட்டான் இந்த பாவி!” என்று ரன்வீரை நோக்கிக் கை காட்டிட, மிருதுளா மெல்லத் தன் தலையை நிமிர்த்தி ரன்வீரைப் பார்த்தாள். அவளது கண்களில் தாங்க முடியாத வலியும், அதே சமயம் கட்டுக்கடங்காத ஆத்திரமும் இருந்தது. ஏற்கனவே ரன்வீர் திருட வந்தவன் என்ற உண்மை தெரிந்திருந்ததால், விஷ்வா சொல்லும் பழி இப்போது அவளுக்கு உண்மையாகவே பட்டது…
ரன்வீரோ, “மிருதுளா… நான் சொல்றதை கேளு… நான் வரும்போதே அவர் இப்படித்தான் இருந்தாரு, விஷ்வா தான்…” என்று சொல்ல வர, அதற்குள் விஷ்வா குறுக்கிட்டு, “இன்னும் பொய் சொல்றியா? இதோ பாரு, இவன் பேக்ல தான் திருடின பணமும் பத்திரமும் இருக்கு,” என்று தான் திருடிய பையை ரன்வீர் பக்கம் தள்ளிவிட்டு பழியை முழுமையாக அவன் மேல் போட்டான்…
ரன்வீர் தான் தாத்தாவின் மிக அருகில் நின்று, அவர் கழுத்தில் இறுக்கியிருந்த அந்தக் கயிற்றைப் பற்றி இழுத்துக் கொண்டிருந்தான், அவளது கண்களுக்கு அது ரன்வீர் தாத்தாவைக் கொல்ல முயன்ற காட்சியாகவே தெரிந்தது. ஏற்கனவே ரன்வீர் ஃபைலைத் தேடித்தான் தன் வீட்டிற்குள் நுழைந்தான் என்ற உண்மை அவளுக்குத் தெரிந்திருக்க, இப்போது இந்தச் சூழலும் அந்த ஆதாரமும் அவளை ரன்வீருக்கு எதிராக முழுமையாகத் திருப்பிவிட்டது…
கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்கக்கூடத் தோன்றாமல், தவிப்புடன் தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பார்த்த ரன்வீரை நோக்கித் திரும்பியவள், “அந்தப் ஃபைலுக்காக… என் தாத்தாவையே கொன்னுட்டீங்களா ரன்வீர்?” என்று ஆவேசமாகக் கேட்டாள்.
அவளது குரலில் இருந்த அந்த நடுக்கமும், ஏமாற்றமும் ரன்வீரின் இதயத்தையே கிழிப்பது போல் இருந்தது, “மிருதுளா… நான் சொல்றதைக் கேளு… நான் வரும்போதே…” என்று விளக்க முற்பட, அதற்குள் விஷ்வா குறுக்கிட்டு, “இன்னும் என்னடா விளக்கம்? என் கண்ணு முன்னாடி கயித்தை இறுக்கிட்டு, இப்போ நாடகமாடுறியா?” என்று நாடகமாடியவன்… ”மிருதுளா, இவனை சும்மா விடக்கூடாது” என்று விஷ்வா கூச்சலிட, மிருதுளாவின் கண்கள் சிவந்திருந்தன. ரன்வீரின் கண்களில் தெரிந்த அந்தத் தவிப்பை அவளது கோபம் மறைத்துவிட்டது…
எதை எதையோ யோசித்து ஒரு தெளிவான மனநிலைக்கு வந்திருந்த மிருதுளாவுக்கு, இப்போது ரன்வீரின் மேல் இருந்த அந்த சிறு நம்பிக்கையும் கருகிப்போய் சாம்பலானது, தன் தாத்தாவின் உயிரற்ற உடலைப் பார்த்துக் கதறியவளுக்கு, ரன்வீர் இப்போது ஒரு காதலனாகத் தெரியவில்லை, தன் வாழ்வைச் சிதைத்த ஒரு கொடூரமான கொலைகாரனாகவே தெரிந்தான்…
