Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 25

அத்தியாயம் – 25

 

தன் தாயிடம் அனுமதி வாங்கி வந்த சம்யு, “அம்மா பர்மிஷன் தந்துட்டாங்க, போலாமா அண்ணி?” என்று உற்சாகமாக வினவ, “ம்ம் போலாம்” என்றாள் மிருதுளா…

​”அண்ணி, உங்களுக்கு கார் டிரைவ் பண்ண தெரியும்னு அண்ணா சொல்லியிருக்காரு, ஸோ நீங்களே டிரைவ் பண்ணிடுங்க” என்றவாறு கார் சாவியை அவளிடம் கொடுக்க, “ஏன் உனக்குத் தெரியாதா சம்யு?” என்றாள் மிருதுளா..



Advertisement

​”ம்ஹும் தெரியாது, அதுவும் இல்லாம கார் டிரைவ் பண்ணுறதுனா எனக்கு ரொம்ப பயம், ஸ்கூட்டி வேணும்னா ஓட்டத் தெரியும்” என்று அவள் சொல்ல, “பயந்தா எப்படி? கத்துக்கிட்டா நமக்கு ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்ல” என்று கேட்டபடி மிருதுளா டிரைவிங் சீட்டில் அமர, சம்யுவும் அவளுக்கு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தாள்…

​”இதையே தான் அண்ணாவும் சொன்னாரு, ஆனா என்ன பண்ணுறது? என்னால என் பயத்தைக் கண்ட்ரோல் பண்ண முடியல” என்றவளிடம், “சரி இப்ப எங்கே போறது?” என்றாள் மிருதுளா வண்டியை ஸ்டார்ட் செய்தபடி…

​”நீங்க போங்க, நான் வழி சொல்றேன்” என்று சம்யுக்தா சொல்ல, அவளும் அவள் சொன்ன வழியில் நிதானமாகச் சென்றாள். ஓரிரு நிமிடங்களில் ஒரு பிரம்மாண்டமான மாளிகையின் முன்பு தான் வண்டி நின்றது, மிருதுளாவிற்கு அது யாருடைய வீடு என்பது தெரியாததால் ஹாரன் அடிக்க, அந்தப் பெரிய இரும்பு கேட்டும் தானாகத் திறந்து கொண்டது…

Advertisement

​காரை உள்ளே நுழைத்துப் போர்டிகோவில் அவள் வண்டியை நிறுத்த, “வாங்க அண்ணி” என்று சொல்லிவிட்டுத் துள்ளலாக இறங்கிக் கொண்டாள் சம்யு…

Advertisement

​”என்ன இவ்ளோ பெரிய வீடா இருக்கு? இங்க தான் நீ காதலிக்கிறவர் இருக்காரா?” என்று மிருதுளா ஆச்சரியமாக வினவ, “ஆமா அண்ணி” என்றாள் சம்யு ஒருவித மர்மப் புன்னகையுடன்.

​”வீட்டுக்கே பார்க்க வந்திருக்க?” என்று அவள் மீண்டும் வினவ, “நான் தான் சொன்னேன்ல அண்ணி, அவருக்கு அம்மா அப்பான்னு யாரும் கிடையாது, அவர் ஃபிரண்டோட இந்த வீட்ல தான் இருக்காரு” என்று சம்யு சொல்ல, “நாம இங்க தனியா வரது தப்பில்லையா?” என்றாள் மிருதுளா தயக்கத்துடன்…

​”அதெல்லாம் ஒரு தப்பும் இல்ல, நீங்க வாங்க” என்றவாறு அவள் கரம் பிடித்து அந்த வீட்டின் பிரம்மாண்ட கதவின் அருகில் வந்தவளிடம்.., “வீட்டுக்கு வர்றதுலாம் எனக்கு என்னவோ சரியா படல சம்யு,” என்று தயக்கத்துடன் சொல்ல, “பயப்படாதீங்க அண்ணி,” என்றவளோ அந்த கதவை பலமாகத் தள்ள, அதுவும் பாரமின்றித் திறந்து கொண்டது…

Advertisement

​மிகப்பெரிய வரவேற்பறையில் எவரும் இல்லை. “என்ன யாரையும் காணோம்?” என்று மிருதுளா வினவ, “உள்ளே போய் பார்க்கலாம் அண்ணி,” என்ற சம்யுவோ அவள் கரம் பிடித்துத் தொடர்ந்து அழைத்துச் சென்றாள். மிருதுளாவிற்குத்தான் இது சரியான இடம் தானா என்ற பயம் நெஞ்சுக்குள் முட்டிக்கொண்டு இருந்தது…

சம்யுக்தாவுடன் ​அந்த வரவேற்பறையைத் தாண்டி ஹாலிற்கு வந்த மிருதுளா, அங்கிருந்த விசாலமான சோபாவில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த ரன்வீரை அதிர்ந்து பார்க்க, சம்யுவும் அதிர்ந்துதான் போனாள்…

​அண்ணனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்றுதான் சொல்லாமல் அவளை அழைத்து வந்திருந்தாள் சம்யு. ஆனால் அவனோ, வெறும் ஷார்ட்ஸும் பெனியனும் அணிந்து, கையில் மதுக் கோப்பையுடன் அமர்ந்திருக்கவும் மிருதுளாவை மெல்லத் திரும்பிப் பார்த்தவளுக்கு, அவள் முகத்தில் தென்பட்ட கோபம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது…

​அவர்கள் இருவரையும் அங்கு எதிர்பார்க்காத ரன்வீரோ எந்த அதிர்ச்சியும் அடையவில்லை, தன்னைச் சாடுவது போல முறைத்துக் கொண்டிருந்த மிருதுளாவைத் தான் அவனும் நிதானமாகப் பார்த்துக் கொண்டிருந்தான், அவளது பார்வையில் இருந்த வெறுப்பும், கோபமும் அவனது மதுவின் போதையை விட அதிக சூட்டை அவனுக்குள் கிளப்பியது…

​”அண்ணா…” என்று சம்யு இழுக்க, ரன்வீர் கையில் இருந்த கோப்பையை மெல்ல மேஜையில் வைத்துவிட்டு… ​”நீ எதுக்கு இங்க வந்திருக்க சம்யு? அதுவும் இவளை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த?” அவன் குரல் வழக்கத்தை விடக் கொஞ்சம் அதிகக் கனமாக ஒலித்தது…

​மிருதுளா அங்கிருந்து உடனே திரும்பிச் செல்ல முயல, ரன்வீர் சட்டென்று எழுந்து நின்று “அதான் வந்தாச்சுல்ல… அப்புறம் என்ன அவசரம்? உட்கார்ந்துட்டுப் போ” என்றான்…

​அவனது அந்தத் தோற்றம்  கலைந்த தலைமுடி, கையில் மது, முகம் முழுக்க படர்ந்திருந்த அந்த இறுக்கம் அனைத்தும் மிருதுளாவிற்குள் கோபத்தை மட்டுமே மூட்டியது,..

அவனிடம் பேச பிடிக்காமல் ​”சம்யு… கிளம்பலாம் வா,” என்று மிருதுளா சம்யுக்தாவின் கையைப் பிடிக்க, ரன்வீர் குறுக்கே வந்து… ​”நான் தான் உட்காரச் சொன்னேன்ல… என் வீட்டுக்கு விருந்தாளியா வந்தவங்களை அப்படியே அனுப்பி வைக்க மாட்டேன்,” என்று அவன் சொல்ல, மிருதுளாவின் கண்கள் கோபத்தில் சிவந்தன. அவனது மது வாசனை அவளுக்கு அருவருப்பைத் தந்தது…

“உன் விருந்தோம்பல் ஒன்னும் எனக்குத் தேவையில்லை” என்று சீறியவள், சம்யுக்தாவைப் பார்த்து, “நீ காதலிக்கிறவரைப் பார்க்கத் தானே கூப்பிட்டு வந்த சம்யு? எங்கே அவரு?” என்று கோபமாக வினவினாள்…

​அவளோ, “ஸாரி அண்ணி, ப்ளீஸ் கோபப்படாதீங்க” என்று சொல்ல, “நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு!” அவள் பொய் சொல்லி அழைத்து விட்டாளோ என்ற கோபத்தில் மிருதுளா மீண்டும் அதிகாரமாகக் கேட்க,  சம்யுக்தா தயங்கியபடி ஓரிடத்தில் கைகாட்ட, மிருதுளா அந்தத் திசையில் திரும்பினாள், அங்கே நிதின் தான் நின்று கொண்டிருந்தான்…

​”அவரும் நானும் தான் லவ் பண்ணுறோம், அண்ணனோட ஃபிரண்ட் தான் அவரு,” என்று சம்யுக்தா உண்மையைப் போட்டு உடைக்க, மிருதுளா ஒரு கணம் அதிர்ந்தாலும் அடுத்த நொடியே கோபம் அவளை ஆட்கொண்டது…

இருப்பினும் அதையெல்லாம் சம்யுவிடம் காட்டாமல்… “என்னால இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது, நீ பேசுறதுனா பேசிட்டு வா, நான் கிளம்புறேன்,” என்றவாறே விறுவிறுவென்று வாசலை நோக்கி நடந்தாள்.

​மிருதுளா போவதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சம்யுக்தா, மெல்லத் திரும்பித் தன் அண்ணனை பார்த்தவள்… “போய் தடுக்கலாமேண்ணா? அண்ணி எவ்ளோ கோபமா போறாங்க பாருங்க,” என்று ஆதங்கத்துடன் சொல்ல, ரன்வீரிடமிருந்தோ ஒரு விரக்தியான புன்னகை மட்டுமே வெளிப்பட்டது…

​சோபாவில் சாய்ந்தவன், “அவ கேட்க மாட்டா சம்யு… அவளுக்கு என் மேல இருக்குறது கோபம் மட்டும் இல்ல, தீராத வெறுப்பு, அது ஆறாத வரைக்கும் நான் எதை செஞ்சாலும் அவளுக்குத் தப்பாதான் தெரியும், போகட்டும் விடு,” என்றான் கரகரப்பான குரலில்…

“சரி நீங்க எதுக்கு இந்நேரத்துல உட்கார்ந்து ட்ரிங் பண்ணிட்டு இருக்கீங்க? நிதின் என்ன இதெல்லாம், நீங்க சொல்ல மாட்டீங்களா?” என்று அவள் நிதினை முறைக்க, “நான் சொன்னா மட்டும் உன் அண்ணன் கேட்டுடுவானாக்கும்?” என்று சலித்துக் கொண்ட நிதின்… ​”வரதைப் பத்தி என்கிட்டயாச்சும் சொல்லி இருக்கலாமே சம்யு! மிருதுளா வர்ற டைம்ல அவனை இப்படிக் குடிக்க விடாம தடுத்திருப்பேனே,” என்று அவன் சொல்ல, “சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு வந்தேன், எல்லாம் வீணா போச்சு,” என்று சோர்வுடன் சோபாவில் அமர்ந்த சம்யுக்தா.. “அந்தக் கருமத்தை அங்கிட்டுத் தூக்கிப் போடுங்கண்ணா,” என்று ரன்வீர் கையிலிருந்த மதுபாட்டிலைக் காட்டிச் சொல்ல, அவனும் ஒரு சிறு புன்னகையுடன் அதனை ஓரமாகக் கீழே வைத்தான்…

​”நான் பண்ண வேலையால அண்ணி கோபமா போயிட்டாங்க, நீங்க டிரிங்க் பண்ணுறத பார்த்து உங்களையும் தப்பா நினைச்சிருப்பாங்க இல்ல அண்ணா?” என்று சம்யுக்தா வருத்தத்துடன் கேட்க, “இல்லைனா மட்டும் அவ தப்பா நினைக்க மாட்டா பாரு,” என்று சலிப்புடன் சொன்னான் ரன்வீர்…

​அவன் பார்வையில் ஒரு விதமான வலி வந்து போனது, தான் எதை செய்தாலும் அவளுக்குத் தவறாகவே படுகிறது என்பதில் அவனுக்கு ஒரு கசப்பான உண்மை புரிந்திருந்தது…

​”இதை விடு.. வீட்ல என்னாச்சு? எல்லார் கூடவும் அடாப்ட் ஆகிட்டாளா?” என்று ரன்வீர் மெல்ல விசாரிக்க, சம்யுவின் முகம் மலர்ந்தது…

​”ம்ம்.. எங்க எல்லார் கிட்டயும் ரொம்ப அன்பா இருக்காங்க அண்ணா, குட் கேரக்டர்! அம்மாவுக்கு அண்ணியை ரொம்ப பிடிச்சிருக்கு, உங்க செலக்ஷன் இதுலயும் தப்பாகல, எனக்கும் அண்ணியை ரொம்ப பிடிச்சிருக்கு,” என்று சொன்னவள், சற்று இடைவெளி விட்டு, “உங்க கூடவும் வாழ ஆரம்பிச்சிட்டாங்கன்னா எல்லாருக்கும் சந்தோஷம்… அது எப்போ தான் நடக்குமோ?” என்று கவலையோடு கேட்டாள்…

​அவள் குரலில் இருந்த ஆதங்கம் அங்கிருந்த நிதினையும் பாதித்தது. சம்யுவின் தோளைத் தட்டி ஆறுதல் படுத்தியவாறு, “நடக்கும்… ஃபீல் பண்ணாத. இப்போதைக்கு மிருதுளா வீட்ல இருக்குற எல்லாரையும் நம்ப ஆரம்பிச்சிருக்கால்ல? அதுவே ஒரு பெரிய வெற்றி தான், மெல்ல மெல்ல ரன்வீர் மேலயும் அவளுக்கு நம்பிக்கை வரும்,” என்றான்…

​ரன்வீர் எதுவும் பேசவில்லை, அமைதியாக சோபாவில் சாய்ந்தான், அவனது ஆழ்ந்த கவலை சம்யுவிற்கும் நிதினுக்கும் நன்றாகவே புரிந்தது, மிருதுளா மீது அவன் வைத்திருக்கும் காதலால் தானே அவளுக்காகவே விலகி வந்திருக்கிறான்,..

​”வீட்டுக்கு எப்போ வருவீங்கண்ணா? தூரமா இருந்தா அண்ணி இன்னும் விலகித்தான் இருப்பாங்கனு தோணுது, பக்கத்துல இருந்தா  பேசிப் புரிய வைக்க முடியும் தானே” என்று சம்யுக்தா ஆதங்கத்தோடு கேட்க..

​”இதைதான் நானும் இவன்கிட்ட சொல்லிட்டே இருக்கேன், ஆனா கேட்க மாட்டேங்குறான்,” என்று நிதினும் தன் பங்கிற்கு வழிமொழிந்தான்…

​”ஏன் அண்ணா?” என்று சம்யு மீண்டும் வினவ, நிதானமாக அவளைப் பார்த்தவன்… ​”இப்போதானே அவ வீட்ல உள்ளவங்களோட அட்டாச் ஆகிருக்கா… நான் இப்போ அங்க வந்தா அவளுக்கு பழைய கோபமும் பயமும் தான் வரும், அது மறுபடியும் அவளைத் தனிமைப்படுத்திடும், கொஞ்ச நாள் போகட்டும், அவ முழுசா நம்ம குடும்பத்தோட ஒன்றட்டும்… அப்புறம் நான் வர்றேன்,” என்றான் ரன்வீர்…

​தன் வருகை அவளது நிம்மதியைக் குலைத்துவிடக் கூடாது என்பதில் அவன் காட்டிய அந்த அக்கறை சம்யுவை நெகிழச் செய்தது.

“சீக்கிரம் வாங்கண்ணா… அம்மாவும் சித்தப்பாகிட்ட உங்களைப் பத்தி தான் புலம்பிக்கிட்டே இருக்காங்க,” என்று சொல்ல, ரன்வீர் மெல்ல “ம்ம்…” என்று தலையசைத்தான்.

​அதன் பிறகு இன்னும் கொஞ்ச நேரம் தன் அருமைத் தமையனுடன் உரையாடிய சம்யுக்தா, நிதினுடன் அங்கிருந்து கிளம்பினாள், அவர்கள் இருவரும் காரில் செல்லும் போது ரன்வீரை பற்றி தான் பேசிக் கொண்டு சென்றனர்…

​மறுபுறம், கோபமாக காரை எடுத்துச் சென்ற மிருதுளா, பாதி வழியிலேயே காரை நிறுத்தினாள், அவளது ஆத்திரம் இப்போது மெல்ல வடிந்து, ஒருவித வெறுமை அவளைச் சூழ்ந்தது, ரன்வீரின் குடும்பத்தினர் காட்டிய அந்தத் தூய்மையான அன்பிற்கும், ரன்வீர் அந்தத் தனிமையான வீட்டில் மதுவோடும் விரக்தியோடும் அமர்ந்திருந்த கோலத்திற்கும் இடையில் அவளது மனம் ஊசலாடியது…

​அவன் ஏன் இவ்வளவு பெரிய வீட்டில் தனியாகக் கிடக்கிறான்? அவன் நினைத்திருந்தால் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித் தன்னை அங்கேயே வைத்திருக்கலாமே? ஏன் அப்படி செய்யவில்லை? என்ற கேள்விகளுக்கெல்லாம் அவளிடம் பதில் தான் இல்லை….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!