Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராக்கினாய் பெண்ணே – 26

அத்தியாயம் – 26

 

யோசனையுடனே காரில் அமர்ந்திருந்த மிருதுளா, மெல்ல காரை ஸ்டார்ட் செய்து வீட்டை நோக்கிப் பயணித்தாள், ஹாலில் யாரும் இல்லாததால், அவள் சத்தமின்றித் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்…

ஆனால், அவள் மனதிற்குள் மட்டும் நிசப்தம் நிலவவில்லை, ரன்வீரை மதுவோடு பார்த்த அந்த நிகழ்வு அவளை மிகவும் இம்சித்தது. ‘சிகரெட் மட்டும் எப்போதாவது பிடிப்பேன், ஆனால் ட்ரிங்க் அடிக்கும் பழக்கமெல்லாம் இல்லை’ என்று அவளிடம் சொன்னவன், இப்போது மது அருந்துவதை அவளால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை…



Advertisement

​’இந்த விஷயத்திலும் பொய் தான் சொல்லி இருக்கிறானா? இவன் சொல்லும் எதில்தான் உண்மை இருக்கிறது?’ என்று நினைக்கும்போது அவள் ரத்தமெல்லாம் கொதித்தது, அவனைப் பற்றிய ஒவ்வொரு பிம்பமும் அவளுக்குள் சிதைந்து கொண்டிருந்தது…

​சற்று நேரத்தில் சம்யுக்தாவும் வீடு வந்து சேர்ந்தாள், நிதின் அவளை வாசலோடு விட்டு விட்டு சென்றிருக்க, அவள் நேராகத் தேடி வந்தது மிருதுளாவைத் தான், தன் மீது அண்ணி மிகுந்த கோபத்தில் இருப்பாள் என்பதை அறிந்திருந்த சம்யு, மிகுந்த தயக்கத்துடன் மிருதுளாவின் அறைக்கதவைத் தள்ளி, ​மௌனமாய் கட்டிலில் அமர்ந்து எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மிருதுளாவிடம் மெல்லச் சென்றவள், “என் மேல கோபமா அண்ணி?” என்று மிக மெதுவான குரலில் கேட்டாள்…

மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு அவளை நோக்கியவளோ, “கோபம் இருக்குதான், எதுக்கு இப்படி பண்ண சம்யு?” என்று வினவ, “ஸாரி அண்ணி… நீங்களும் அண்ணாவும் சந்திச்சுக்கிட்டா பேசிப் பிராப்ளத்தை சால்வ் பண்ணிப்பீங்கன்னு நினைச்சேன், அதான்…” என்று இழுத்தாள் சம்யு. தங்களுக்கு நல்லது செய்ய நினைத்த அந்தச் சிறுபெண்ணின் மீது இதற்கு மேல் கோபம் கொள்ள முடியவில்லை மிருதுளாவால்…

Advertisement

​ஆனால், அவள் மனதில் குடைந்து கொண்டிருந்த அந்தக் கேள்வி அவளை அறியாமல் வெளியே வந்தது. “சரி இதை விடு… உன் அண்ணனுக்கு டிரிங்க் பண்ற பழக்கமெல்லாம் இருக்கா?” என்று வினவிட,.. அவளோ… ​”ஐயோ! சத்தியமா இல்ல அண்ணி, அண்ணாக்கு அந்தப் பழக்கமே கிடையாது, பெரிய பிசினஸ் பார்ட்டிக்கு போனா கூடத் தொடவே மாட்டாராம், ஆனா… இப்போ கொஞ்ச நாளாத்தான் குடிக்க ஆரம்பிச்சு இருக்காருன்னு நிதின் கூட வருத்தப்பட்டாரு,” என்று சம்யு சொல்ல, மிருதுளாவிற்குள் ஒரு மின்னல் வெட்டியது போல வலி உருவானது…

Advertisement

​தன்னால் தான் அவன் குடிக்க ஆரம்பித்து விட்டானோ என்ற குற்ற உணர்வு மெல்ல அவளைத் துளைக்க ஆரம்பித்தது, அவள் அவனை வெறுத்தாள் தான், கொலைகாரன் என்று சாடினாள் தான், அவன் காதலையும் ஏளனம் செய்தாள், இத்தனைக்கும் இடையிலும் அவன் அவளைப் பாதுகாப்பாகத் தன் குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு, தனியாக அந்த வீட்டில் மதுவோடு தன்னைத் தானே அழித்துக் கொள்கிறானே என்ற எண்ணம் உள்ளுக்குள் வலிக்க வைத்தது

​”ஏன் அண்ணி இப்படிக் கேக்குறீங்க? அண்ணா அங்க குடிச்சிட்டு இருந்ததைப் பார்த்ததும் உங்களுக்கு வருத்தமா இருந்ததா?” என்று சம்யு மெல்ல அவளது முகத்தைப் பார்த்துக் கேட்க, பதில் சொல்ல முடியாமல் திணறியவள்… பின்… ​”வருத்தமெல்லாம் இல்ல சம்யு… ஆனா ஒருத்தன் அவனோட ஹெல்த்தை அவனே கெடுத்துக்குறது தப்பில்லையா?” என்று மழுப்பினாள் மிருதுளா…

​”அவருக்கு உங்க மேல அவ்ளோ பைத்தியம் அண்ணி, நீங்க பேசாம இருக்கிறது தான் அவருக்குப் பெரிய தண்டனை, ப்ளீஸ் அண்ணி… அண்ணாவை மன்னிச்சு ஏத்துக்கக் கூட வேணாம், ஒருவாட்டி அவர்கிட்ட மனசு விட்டுப் பேசுங்களேன்,” என்று சம்யு கெஞ்ச, மிருதுளாவிடம் மௌனம் மட்டுமே நீடித்தது…

Advertisement

​அவளது அறிவு ‘அவன் ஒரு குற்றவாளி’ என்று எச்சரித்தாலும், இதயம் அந்த மதுக்கோப்பையோடு அமர்ந்திருந்த ரன்வீரின் சோகமான முகத்தை நினைத்துத் துடித்தது, அவன் குடிப்பதற்குக் காரணம் தான் தான் என்பது தெரிந்த பிறகு, அவளால் நிம்மதியாகவும் இருக்க முடியவில்லை…

வெகுநேரம் ரன்வீரைப் பற்றியே தான் நினைத்துக் கொண்டிருந்தாள், அவனது தற்போதைய நிலை அவளுக்குள் ஒரு மெல்லிய கவலையை ஏற்படுத்தியிருந்தது, ஆனால், அடுத்த கணமே அவளது தாத்தாவின் முகம் நினைவுக்கு வந்து போக, அந்த எண்ணங்களை வலுக்கட்டாயமாக உதறித் தள்ளிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தாள்…

​மிருதுளாவிற்கு சமையலில் இதுவரை பெரிய ஆர்வம் இருந்ததில்லை. ஆனால், இப்பொழுதெல்லாம் தன் மனதைக் கட்டுப்படுத்த சமையலில் தான் கவனத்தைத் திருப்பி இருக்கிறாள், இரவு உணவிற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க, அவளும் சமையலறைக்குள் சென்று அதில் ஐக்கியமாகிக் கொண்டாள்…

​சுமதியும் சில பணிப்பெண்களும் அங்கே வேலையில் மூழ்கியிருக்க, சுமதியோடு சகஜமாகப் பேசிக்கொண்டே காய்கறிகளை நறுக்கத் தொடங்கினாள் மிருதுளா. பேச்சின் ஊடே அவளது கைவேலைகளும் லாவகமாக நடந்தன…

​இன்று இரவு உணவிற்குச் சைட் டிஷ்ஷாக குருமா செய்ய முடிவெடுத்தனர். “அத்தை, இன்னைக்கு நான் குருமா செய்யட்டுமா, நான் சரியா பண்ணுறனான்னு நீங்க செக் மட்டும் பண்ணுங்க,” என்று மிருதுளா சொல்ல, சுமதி மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்…

​யாருடைய துணையும் இன்றி, மசாலாக்களைச் சரியான பதத்தில் அரைத்து, பொறுமையாக அவள் செய்த அந்த குருமா சமையலறை முழுவதையும் வாசனையாலேயே ஆக்கிரமித்தது…

​சமைத்து முடித்ததும் அதனைச் சுவைத்துப் பார்த்த சுமதி… “அடேங்கப்பா! மிருதுளா… நிஜமாவே இது நீ செஞ்சதுதானா? ரொம்ப சுவையா இருக்குமா!” என்று அவர் பாராட்ட, மிருதுளாவின் இதழ்கள் மெல்ல விரிந்தன…. வெகுநாட்களுக்குப் பிறகு அவளது மனபாரம் குறைந்து, ஒரு மெல்லிய சந்தோஷம் அவளுக்குள் எட்டிப் பார்த்தது…

​அதன் பிறகு இரவு உணவிற்கான நேரம் வந்தது, அனைவரும் டைனிங் டேபிளில் கூட, சமைத்த உணவுப் பதார்த்தங்கள் அனைத்தும் டேபிளில் வாசனையுடன் பரப்பப்பட்டிருந்தன, சுமதியும் மிருதுளாவும் தான் அனைவருக்கும் பரிமாறினர்…

​தனக்கு வைக்கப்பட்ட சப்பாத்தியோடு குருமாவைச் சுவைத்த சமுத்திரவேல், வியப்புடன் தன் மனைவியைப் பார்த்து.. “என்ன சுமதி, இன்னைக்குக் குருமா ரொம்ப விசேஷமா இருக்கு?” என்று கேட்க, சுமதி பெருமையுடன் சிரித்துக்கொண்டே, “இன்னைக்கு நம்ம வீட்டு மருமகளோட கைவண்ணம்,” என்றார்…

​”அட உண்மையாவா? ரொம்ப அருமையா இருக்குமா!” என்று சமுத்திரவேல் மிருதுளாவை மனதாரப் பாராட்ட, அவளும் ஒரு கணம் தயங்கிப் பின் மெலிதாகப் புன்னகைத்தாள்…

​”அண்ணி செம போங்க! நான் கூட உங்களுக்கு எங்க அக்கா மாதிரி சுடு தண்ணி கூட வைக்கத் தெரியாதுன்னு நினைச்சேன், ஆனா நீங்க வேற லெவல்!” என்று வினோத் கிண்டலாகக் கூற, “டேய்! சைடு கேப்புல என்னையா வாறுற?” என்று தம்பியைச் செல்லமாகத் திட்டிய சம்யுக்தா, “அண்ணி… நானும் உங்களுக்குக் குக் பண்ணத் தெரியும்னு எதிர்பார்க்கவே இல்ல, நிஜமாவே சூப்பரா இருக்கு,” என்றாள் சம்யுவும் ஆச்சரியத்துடன்…

​அனைவரின் பாராட்டுகளும் மிருதுளாவை அந்த குடும்பத்தின் ஒரு அங்கமாக உணரச் செய்தன.

“எல்லாரும் மிருதுளாவை பாராட்டுறாங்க, நீங்க மட்டும் என்ன அண்ணி அமைதியா இருக்கீங்க?” என்று சமுத்திரவேல் தன் அண்ணி காயத்ரியிடம் வினவ, ​”நீங்க எல்லாரும் தான் என் வார்த்தைகளையும் சேர்த்து எடுத்துக்கிட்டீங்களே,” என்று அமைதியாகப் புன்னகைத்த காயத்ரி, மிருதுளாவை நோக்கி…
​”என் மருமக கைக்குச் சீக்கிரமே தங்க வளையல் செஞ்சு போடுறேன்,” என்று கூற, அந்த வார்த்தைகளில் இருந்த உரிமையும் பாசமும் மிருதுளாவை ஒரு நிமிடம் நெகிழச் செய்தது, தன் தாயை இழந்த பிறகு இப்படியொரு அரவணைப்பை அவள் உணர்வது இதுவே முதல் முறை.

​ஆனால், அந்தப் பாசமான சூழலிலும் ஒரு சிறு உறுத்தல் அவளுக்குள் இருந்துக் கொண்டே இருந்தது,… ‘இந்தக் குடும்பம் என் மேல இவ்வளவு அன்பு வைத்திருக்கிறது, ஆனால் இதற்கெல்லாம் காரணமானவன் மட்டும்…?’ ரன்வீரின் முகம் மீண்டும் ஒருமுறை அவள் நினைவில் வந்து போனது…

சாப்பிட்டு முடித்ததும், வினோத் மற்றும் சம்யுக்தாவுடன் தோட்டத்தில் அமர்ந்திருந்தாள் மிருதுளா, சில்லென்ற காற்று வீசிக் கொண்டிருக்க, வானில் நிலவு பிரகாசமாகத் தெரிந்தது, அவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் ரன்வீரின் பேச்சும் இடையில் வர, வினோத் ஏக்கத்துடன்… ​”ரன்வீர் அண்ணாவும் இப்போ இங்க இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்ல?” என்றவன் சற்று இடைவெளி விட்டு.. “கொஞ்ச நாள் முன்னாடி அண்ணா என்கிட்ட சொன்னாரு, ‘என் கல்யாணத்துக்கு அப்புறம் நாம எல்லாரும் ஒன்னா இருக்கலாம், நானும் இங்கேயே வந்து தங்கிடுறேன்’னு. ஆனா இப்போவும் அவர் வரல,” என்று கூற, மிருதுளாவிற்கு அது பெரும் பாரமாக இருந்தது…

​தன்னால் தான் இவர்கள் எல்லோரும் இவ்வளவு ஏக்கம் கொண்டு வருத்தம் கொள்கிறார்களோ என்ற குற்றவுணர்வு அவளைத் துளைத்தது, அந்த ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு புள்ளியில் நின்று கொண்டிருக்கிறது, அந்தப் புள்ளி தான் தான் என்பது அவளுக்குப் புரிய, எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தாள், அவளது கண்கள் கலங்கி இருந்தன,  ஒரு பக்கம் தாத்தாவின் மரணம் குறித்த சந்தேகம், மறுபக்கம் இந்தக் குடும்பத்தின் தூய்மையான அன்பு. இரண்டுக்கும் நடுவே அவள் ஊசலாடிக் கொண்டிருந்தாள்…

நாட்கள் மெல்ல நகர்ந்தன… மிருதுளாவும் அந்த வீட்டோடு மிகவும் நெருங்கிப் போய்விட்டாள், அந்த வீட்டின் ஒவ்வொருவரின் அன்பில் அவள் தன்னை அறியாமல் கரைந்து போயிருந்தாள், முதலில் சிறைக்குள் பிடிபட்டிருக்கிறோம் என்ற நினைத்தவளுக்கு இப்போது  ஒரு பாதுகாப்பான அரண் போலத் தோன்றியது…

​காயத்ரியின் அன்னைக்கு நிகரான அரவணைப்பு, சுமதியின் தோழமையான பேச்சு, வினோத் மற்றும் சம்யுக்தாவின் விடாத குறும்புத்தனங்கள் என அனைத்தும் அவளது காயங்களுக்கு மருந்தாக அமைந்தன, அவர்கள் காட்டிய பாசத்தில், ரன்வீர் மீதிருந்த அவளது கடும் கோபம் இப்போது ஒருவிதத் தவிப்பாகவும், மௌனமான தேடலாகவும் மாறியிருந்தது…

அவர்களோடு சேர்த்து சமுத்திரவேலின் நிதானமான பாசமும் அவளை வெகுவாகக் கவர்ந்தது, அவர் ஒருபோதும் அவளை வற்புறுத்தியதோ, அதிகாரத் தோரணையில் பேசியதோ இல்லை, தன் மகனிடம் காட்டும் அதே கண்டிப்பையும், மகளிடம் காட்டும் அதே வாஞ்சையையும் சரிசமமாக அவளிடமும் காட்டினார்…

​”மிருதுளா… ஏதாவது வேணும்னா தயங்காம கேளுமா, இது உன்னோட வீடு” என்று அவர் அவ்வப்போது சொல்லும் ஒற்றை வார்த்தையில் ஒரு தந்தையின் பாதுகாப்பு உணர்வை அவள் கண்டாள், ரன்வீரின் சிறிய தந்தை என்பதைத் தாண்டி, அவளது சொந்த அப்பாவை போலவே அவரும் மாறிப்போயிருந்தார், தன் மகனுக்காக அவளிடம் பரிந்து பேசாமல், அவளது மனநிலை உணர்ந்து அவர் காட்டிய அந்தப் பக்குவம், மிருதுளாவிற்கு அவர் மீது பெரும் மரியாதையை உண்டாக்கியது…

இப்படி போய்க்கொண்டிருந்த நிலையில் அன்று தோட்டத்திற்கு வந்த நேரம் காயத்ரி மட்டும் தனியாக அமர்ந்திருந்தார், அவர் முகத்திலேயே கவலை தெரிந்தது, மெல்ல அவரருகில் வந்தவள், “அத்தை…” என்று அழைக்க, ஏதோ யோசனையில் இருந்தவர் அவளது அழைப்பில் சுயத்திற்கு வந்து, “ஹாங்… வாமா, உட்காரு,” என்று சொல்ல, அவளும் அவருக்கு அருகில் இருந்த இன்னொரு நாற்காலியில் அமர்ந்தாள்…

​”என்னாச்சு அத்த? உங்க முகமே சரியில்லாம இருக்கு,” அவள் வினவ, லேசாக புன்னகைத்தவரோ, “அதெல்லாம் ஒன்னுமில்ல மிருதுளா,” என்று சொல்ல, “என்கிட்ட சொல்ல வேண்டாம்னா நான் கேட்க மாட்டேன் அத்த,” என்றாள் அவர் மழுப்புவதை கண்டு…

​”சொல்லக் கூடாதுன்னுலாம் இல்லைமா,” என்றவர், “என் கணவரோட ஞாபகம் வந்துடுச்சு,” என்று சொல்ல, அவர் கரத்தில் அழுத்தம் கொடுத்து ஆறுதலாகப் பற்றிக் கொண்டவள், “மாமாவை போட்டோல பார்த்தேன், ரொம்ப ஸ்ட்ராங்கான பர்சன்னு தெரியுது, ரொம்ப ஃபிட்டா இருந்தாரு. என்னாச்சு அத்த அவருக்கு? உடம்பு சரியில்லாம போயிடுச்சா?” என்று வினவ…

​”இல்லமா… இந்த வயசுலயும் அவர் நோயெதுவும் இல்லாம ஹெல்தியா தான் இருந்தாரு,” என்று சொல்ல, “அப்புறம் எப்படி?” அவள் கேட்க, “ஆக்சிடென்ட்,” என்றதும் அவளுக்கு அதிர்ச்சி!

​”எப்படி அத்தை ஆச்சு?” அவள் வினவ… ​”அதெல்லாம் விடுமா,.. ஆனா அவர் போனதும் எங்க எல்லாரையும் விட ரன்வீர் தான் ரொம்ப உடைஞ்சு போயிட்டான், இந்த வீட்டுக்கு கூட அவன் வரதில்ல, அப்போதான் அவன் படிப்பு முடிஞ்சு தொழில்ல கால் பதிச்சிருந்த நேரம், அவர் போனதும் இந்த வீட்டை விட்டே மொத்தமா விலகிப் போயிட்டான்,” என்று சொன்னவர்…

​”நானும் எத்தனையோ முறை போய் கூப்பிட்டுப் பார்த்தேன். ‘உன் அப்பாக்கு அப்புறம் நீ தான்டா எனக்கு ஆறுதலா, துணையா இருக்கணும். நீயும் இல்லைனா நான் என்ன பண்ணுவேன்?’னு அழுதேன், அப்புறம் எனக்காக ஒரு ரெண்டு மணி நேரம் மட்டும் என்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு போவான். ‘அப்பா இல்லாம இங்க என்னால இருக்கவே முடியலமா’ன்னு கண்ணீர் விடுவான், மனசெல்லாம் என்னவோ பண்ணும்…”

​”அப்புறம் வருடங்கள் கடக்க கடக்க, தொழில்ல மொத்தமா மூழ்கிப் போனதால கொஞ்சம் கொஞ்சமா அதை விட்டு வெளியே வந்தான், ஆனா வீட்டுக்கு வர்றது ரொம்ப கம்மி தான். ‘எப்போ தான்டா எங்க கூடவே வந்து இருக்கப் போற?’ன்னு ஆதங்கத்தோட கேட்பேன், அப்போதான் ஒரு நாள் உன்னைக் காதலிக்கிற விஷயத்தைப் பத்தி சொன்னான், ‘என் கல்யாணத்துக்கு அப்புறம் நான் நம்ம வீட்டுக்கே வந்திடுவேன்மா’ன்னு சொன்னான். நாங்களும் ரொம்ப சந்தோஷப்பட்டோம், ரொம்ப ஆசையா இருந்தோம், ஆனா இப்போ என்னென்னமோ நடந்து போச்சு.” என்று வருத்தமான பெருமூச்சுடன் நிறுத்தினார்…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!