Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 28

அத்தியாயம் – 28

 

இரவு உணவிற்குப் பின்பு குடும்பத்தோடு கொஞ்ச நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் ரன்வீர், நேரம் கடந்து கொண்டிருக்க, “ரொம்ப நேரமாச்சுப்பா, நீ போய் ரெஸ்ட் எடு, காலையில பேசிக்கலாம்,” என்று காயத்ரி சொல்ல, அவனும் தனது அறையை நோக்கி நடந்தான்…

​மிருதுளா ஏற்கனவே அறைக்குச் சென்றிருக்க, அவனுக்கு அறைக்குள் செல்லவே ஒருவிதத் தயக்கம் ஏற்பட்டது, அது அவனுடைய அறைதான் என்றாலும், அங்கே மிருதுளா இருக்கும் சூழலில் உள்ளே நுழைய அவனது கால்கள் பின்வாங்கின, கதவருகே ஒரு நிமிடம் நின்றவன், பின் தன்னைச் சமன்படுத்திக் கொண்டு மெல்ல உள்ளே நுழைய,
​மிருதுளா படுக்கையில் அமர்ந்து ஏதோ ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்திருந்தாள்…



Advertisement

ரன்வீர் அறைக்குள் நுழைந்ததை உணர்ந்ததும் அவள் நிமிர்ந்து பார்க்க, அவனும் அவளை தான் பார்த்தான், இருவருக்கும் இடையே ஒரு மெல்லிய மௌனம் நிலவியது.

​சற்று நேர மௌனத்திற்குப் பிறகு தொண்டையைச் செருமிக் கொண்ட ரன்வீர், “இந்த வீட்ல நாம ஒரே ரூமைத்தான் ஷேர் பண்ணியாகணும்,” என்று சொல்ல, “தெரிஞ்சு தானே கூப்பிட்டு வந்தேன்,” என்று கறாராகப் பதிலளித்தவள், அதற்கு மேல் எதுவும் பேசாமல் படுக்கையின் ஒரு ஓரத்தின் விளிம்பிற்குச் சென்று முதுகைக் காட்டி திரும்பிப் படுத்துக் கொண்டாள்…

​அவளது முதுகையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்தவன், பின் இரவு உடைக்கு மாறி வந்து படுக்கையின் மறுபக்கம் அமர்ந்தவாறு…  “என்னால சோஃபால எல்லாம் கம்ஃபர்டபுளா தூங்க முடியாது,” என்று நிதர்சனத்தைச் சொல்ல, முதுகைக் காட்டியவாறே படுத்திருந்தவளோ, “ஓகே.. பட் என் பக்கத்துல நெருங்க ட்ரை பண்ணா கூட, அப்புறம் நடக்குறதே வேற!” என்று எச்சரிக்கும் குரலில் சொன்னாள்…

Advertisement

​”அதுதான் தெரியுமே… டோன்ட் வொர்ரி, நான் என் எல்லையை மீற மாட்டேன்,” என்று அமைதியாக சொல்லிவிட்டு அவனும் படுத்துக் கொள்ள, அறைக்குள் ஏசியின் சத்தத்தைத் தவிர வேறு சத்தமே இல்லை, திருமணத்திற்குப் பின் அவர்கள் இருவரும் ஒரே அறையில் இருப்பது இதுவே முதல் முறை, அவள் மீது அவனுக்கு முழு உரிமை இருந்தாலும், அதனை எடுத்துக்கொள்ளும் நிலையில் இப்போது சூழல் இல்லை…

Advertisement

​அவளைக் காதலித்த நாட்களில், அவளோடு எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று ஆயிரம் கனவுகளைக் கண்டு வைத்திருந்தான், ஆனால் இப்போதோ, அவள் மிக அருகில் இருந்தும் அவளிடம் உரிமையாகப் பேசவும் முடியவில்லை, அவளைத் தொடவும் முடியவில்லை. ‘என்ன வாழ்க்கை இது?’ என்றுதான் அவனுக்குத் தோன்றியது…

​விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருந்தவனுக்குத் தூக்கமே வரவில்லை, பழைய நினைவுகளும், இப்போது அவள் காட்டும் வெறுப்பும் அவன் மனதைக் கசக்கிப் பிழிந்தன, தன் காதலி தன் மனைவியாக தன் அருகில் இருக்கும்போது, ஒரு அந்நியனைப் போல அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட பெரிய கொடுமை வேறென்ன இருக்க முடியும்?

​பக்கவாட்டில் திரும்பிப் படுத்திருந்த மிருதுளாவின் அசைவற்ற உருவத்தையே பார்த்துக் கொண்டிருந்தான், அவள் தூங்கிவிட்டாளா அல்லது அவனைப் போலவே இதய பாரத்துடன் விழித்துக் கொண்டிருக்கிறாளா என்று அவனுக்குத் தெரியவில்லை, அந்த மௌனம் அவர்களுக்கு இடையே ஒரு பெரிய பள்ளத்தாக்கை உருவாக்கிக் கொண்டிருந்தது…

Advertisement

யோசித்தபடியே படுத்திருந்தவன் வெகு நேரத்திற்குப் பிறகுதான் தூங்கினான், ஆனால் காலையில் அவன் தான் முதலில் விழித்தான், மிருதுளா இன்னமும் உறங்கிக் கொண்டுதான் இருந்தாள், இப்போது அவள் அவனை நோக்கித் திரும்பிப் படுத்திருந்ததால், அவளது முகத்தை அவனால் தெளிவாகப் பார்க்க முடிந்தது…

​தூக்கத்தில் அவளது முகம் மிக அமைதியாகவும், எந்தப் புகாரும் அற்ற ஒரு குழந்தையைப் போலவும் இருந்தது, விழித்திருக்கும்போது அவளது கண்களில் தெரியும் அந்த வெறுப்பும் அனலும் இப்போது இல்லை, கலைந்திருந்த அவளது கேசமும், அந்த அதிகாலை வெளிச்சத்தில் ஜொலித்த அவளது முகமும் ரன்வீரை ஒரு கணம் மெய்மறக்கச் செய்தது…

​அவளறியாமல் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில் பல உணர்வுகள் அலைமோதின. ‘இந்த முகத்தில் மீண்டும் எப்போது அந்தப் பழைய புன்னகையைப் பார்ப்பேன்?’ என்று ஏங்கியவன், அவள் அருகில் இருந்தும் தொட முடியாத தூரத்தில் இருப்பது அவனுக்கு ஒரு சுகமான வலியைக் கொடுத்தது…

​அவள் விழிப்பதற்கு முன் அங்கிருந்து நகர்ந்துவிட வேண்டும் என்று நினைத்தவன், மெல்ல படுக்கையை விட்டு எழுந்தான். ஆனால், அவனது கண்கள் மட்டும் அவளிடமிருந்து விலக மறுத்தன…

தலையை உலுக்கித் தன்னைச் சமன்படுத்திக் கொண்டு, குளியலறைக்குள் நுழைந்து முகம் கழுவிவிட்டு வந்தவன், பின் ஜாகிங் செல்வதற்காகத் தயாராகிவிட்டு அறையை விட்டு வெளியேறிவிட்டான்…

​அவன் போன கொஞ்ச நேரத்திற்குப் பிறகுதான் மிருதுளாவிற்குத் தூக்கம் கலைந்தது, இரவு அவன் அருகிலேயே படுத்திருந்ததால் அவளுக்கும் உறக்கமே வரவில்லை, அவன் கட்டிய கணவனாக இருந்தாலும், அவள் வெறுக்கும் ஒருவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வது அவளுக்கு மிகுந்த அசௌகரியத்தை கொடுத்தது, மனப்போராட்டங்களுக்கு நடுவே நீண்ட நேரத்திற்குப் பிறகுதான் அவளது கண்கள் அயர்ந்திருந்தன.

​இப்போது விழித்துப் பார்த்தபோது அருகில் அவன் இல்லாதது அவளுக்குப் பெரிய நிம்மதியைத் தந்தது. ‘அவன் வருவதற்குள் நாமும் தயாராகி அறையை விட்டுச் சென்றுவிடலாம்’ என்ற எண்ணத்தில், தனது உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்…

​குளித்து முடித்துவிட்டு வெளியே வந்தவள், கண்ணாடியின் முன் நின்று தன்னைச் சீர்செய்து கொண்டாள், அந்த அறையில் இருந்த ரன்வீரின் பொருட்கள் ஒவ்வொன்றும் அவளுக்கு ஏதோ ஒரு கசப்பான நினைவையே நினைவுபடுத்தின, ஆனாலும், இந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக இந்தச் சிறையைச் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டு ​கீழே சென்றபோது, வீடே சுறுசுறுப்பாக இருந்தது, சமையலறையில் காயத்ரி மகனுக்காக ஏதோ செய்து கொண்டிருக்க, வாசலில் ரன்வீர் ஜாகிங் முடித்துவிட்டு வியர்வை சொட்டச் சொட்ட உள்ளே வந்து கொண்டிருந்தான். அந்த கணம் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள, அந்த அதிகாலைப் பொழுதில் மீண்டும் ஒரு மௌனப் போர் அங்கே ஆரம்பமானது…

ஆனால் எல்லாம் சில கணங்கள் மட்டுமே, அவள் எவ்வித சலனமும் காட்டாமல் அவனை ஒரு அந்நியனைப் போலக் கடந்து சென்றுவிட, அவனும் ஒரு பெருமூச்சோடு தனது அறைக்குச் சென்றான்…

​அவன் குளித்து முடித்துவிட்டுப் புத்துணர்ச்சியுடன் கீழே வந்த நேரம், சமுத்திரவேல் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார், நேராக அவரிடம் சென்று, “குட் மார்னிங் சித்தப்பா” என்று சொல்ல,.. ​அவனது அன்பான காலை வணக்கத்தைக் கேட்ட சமுத்திரவேல், செய்தித்தாளிலிருந்து கண்களை உயர்த்தி மகனைப் பார்த்தார், அவர் முகத்தில் ஒரு நிம்மதியான புன்னகை அரும்பியது…

“குட் மார்னிங் ரன்வீர்! வாப்பா, இப்படி வந்து உட்காரு,” என்று அருகில் இருந்த இடத்தைக் காட்ட, ரன்வீரும் அவரோடு வந்து அமர்ந்தான்…

“நைட் நல்லா தூங்குனியா?” என்று அவர் அக்கறையாக வினவ, ரன்வீர் மெல்லத் தலை நிமிர்ந்து தங்களுக்கு காபி கொண்டு வந்த மிருதுளாவைப் பார்த்தான்…

​”ம்ம்.. நல்லா தூங்கினேன் சித்தப்பா… ரொம்ப நாளைக்கு அப்புறம் நிம்மதியா தூங்கினேன்” என்று அவன் சொன்ன வார்த்தை சித்தப்பாவை நோக்கி இருந்தாலும், அதன் அர்த்தம் அங்கிருந்த மிருதுளாவிற்கு மட்டுமே புரிந்தது…

​அவள் எதுவும் பேசாமல் அமைதியாக சமுத்திரவேலுக்குக் காபியைக் கொடுத்தவள், சமுத்திரவேலுக்காக மட்டுமே ரன்வீருக்கும் கொடுக்க.. அவனும், “தேங்க்ஸ்,” என்று புன்னகையுடன் வாங்கிக் கொண்டான்..

​அந்த நேரம் சுமதி அங்கே வந்து அமர, “அத்த உங்களுக்கு காபி,” என்றாள் மிருதுளா…

​”நான் குடிச்சிட்டேன்மா, நீ தான் இன்னும் குடிக்கல, நீ எடுத்துக்கோ,” என்று சொல்ல, அவளும் மறுக்க முடியாமல் மீதமிருந்த காபியை எடுத்து அங்கேயே அமர்ந்து பருகத் தொடங்கிட, ரன்வீரின் பார்வை நொடிக்கு ஒருமுறை அவள் மீதுதான் வந்து நின்றது, அதனைத் தற்செயலாகக் கவனித்த மிருதுளாவிற்கோ கடுப்புத் தலைக்கேறியது, பெரியவர்களின் முன்னிலையில் எதுவும் பேச முடியாததால், மனதிற்குள்ளேயே அவனைத் திட்டியபடி அமைதியாக இருந்தாள்…

​அந்தக் கணம்… “என்ன சுமதி, நீ வந்துட்ட? அண்ணி எங்கே?” என்று சமுத்திரவேல் வினவிட… ​”நம்ம ரன்வீர்க்காக அக்கா தடபுடலா சமைச்சுட்டு இருக்காங்க, நான் ஏதாவது உதவி பண்ணுறேன்னு சொன்னேன், ஆனா வேண்டாம் நீ போ, நான் பார்த்துக்கிறேன்னு சொல்லி அனுப்பி வச்சிட்டாங்க,” என்று சுமதி சொல்ல, “அப்போ இன்னைக்கு ஒரு புடி புடிக்க வேண்டியதுதான்,” என்று சமுத்திரவேல் புன்னகையுடன் கூறினார்.

​”உண்மைதாங்க, அக்காவோட சமையல்னா எனக்கும் ரொம்ப இஷ்டம், அதனால நானும் வந்துட்டேன்,” என்றார் சுமதி உற்சாகமாக…

​தன் காபியை உறிஞ்சியபடியே, சுமதியிடமும் தன் சித்தப்பாவிடமும் இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தாலும், அவனது கவனம் முழுக்கக் காபியை விடத் தீவிரமாக மிருதுளாவின் ஒவ்வொரு அசைவிலும் தான் இருந்தது, அவள் காபிக் கோப்பையைப் பிடித்திருக்கும் விதம், அவள் பார்வையைத் தவிர்க்கும் வேகம் என அனைத்தையும் அவன் ரசித்துக் கொண்டிருக்க, அதற்கு மேல் அங்கே இருக்கப் பிடிக்காமல், சட்டென்று எழுந்து சமையலறை நோக்கி விரைந்துவிட்டாள் மிருதுளா, அவனது அந்த ஊடுருவும் பார்வை அவளுக்குள் ஒருவிதத் தடுமாற்றத்தையும் எரிச்சலையும் உருவாக்கியது…

​அதன் பிறகுதான் சம்யுக்தாவும் வினோத்தும் தூக்கக் கலக்கம் நீங்கி அங்கே வந்தனர், நீண்ட நாட்களுக்குப் பிறகு காலை நேரத்தில் அனைவரும் கூடி இருக்க, இருவருக்கும் உற்சாகம் கரைபுரண்டது. “அண்ணா, இன்னைக்கு என்ன பிளான்? ஆபீஸ் போறிங்களா? இல்லனா நாங்க லீவ் போட்டுடட்டுமா வெளியே போயிட்டு வரலாம்?” என்று வினோத் கூற,..  ​”லீவ் போடுறதுல மட்டும் என் தம்பி எப்பவும் ரெடியா இருப்பானே!” என்று ரன்வீர் அவனைக் கலாய்க்க, அசடு வழிந்த வினோத்தோ, “ஃபர்ஸ்ட் இயர்லயே ரொம்ப பிரஷரா இருக்குண்ணா, எப்படித்தான் நீங்கெல்லாம் படிச்சீங்களோ தெரியல,” என்று சலிப்புடன் கூறினான்…

​”கான்சன்ட்ரேட் பண்ணி புரிஞ்சி படிக்க ஆரம்பிச்சனா உனக்கும் கஷ்டமா இருக்காது, அதுதான் நான் வந்துட்டேன்ல, இனி உனக்கு நான் சொல்லித்தரேன்,” என்று ரன்வீர் சொல்ல…

​”ஐயையோ! எனக்கு டியூஷன் எடுக்கப் போறீங்களா?” என்று வினோத் அதிர்ச்சியில் அலற, ரன்வீர் அதைப்பார்த்து வாய்விட்டுச் சிரித்தான்…

​”உனக்கெல்லாம் டியூஷன் எடுக்க முடியுமா வினோ? எடுத்தா எனக்கே தலை வலியோடு சேர்ந்து தொண்டை வலியும் வந்துடும். அண்ணா, நீங்க அந்த விஷப் பரீட்சையில எல்லாம் இறங்கிடாதீங்க,” என்று சம்யுக்தா கிண்டலாகச் சொல்ல, அந்த இடமே சிரிப்பொலியால் நிறைந்தது…

சமையலறையிலிருந்த மிருதுளாவிற்கும் ரன்வீர் சிரிக்கும் சத்தம் கேட்டது, இத்தனை நாட்களுக்குப் பிறகு அவனது இயல்பான சிரிப்பொலியைக் கேட்டதும், அவளையும் அறியாமல் அவள் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது, அதனை அருகில் இருந்த காயத்ரி கவனித்துவிட்டாலும், அவள் சங்கடப்படக்கூடாது என்பதற்காக எதுவும் கேட்டுக்கொள்ளாமல் மனதிற்குள் மகிழ்ந்து கொண்டார்…

​சமையல் அனைத்தும் முடிந்ததும், டைனிங் டேபிளில் உணவுகள் அனைத்தும் தயாராக அடுக்கப்பட்டன, நீண்ட இடைவேளைக்குப் பிறகு அந்தக் குடும்பமே மேஜையைச் சுற்றி உற்சாகமாகக் கூடியது, மிருதுளாவும் சுமதியும் தான் அனைவருக்கும் நின்று பரிமாறினர்…

​”ரன்வீருக்கு அக்கா செஞ்ச பொங்கல்னா ரொம்ப பிடிக்கும், அவனுக்குக் கொஞ்சம் அதிகமாவே வைமா மிருதுளா,” என்று சுமதி சொல்ல, மிருதுளா ஒரு கணம் தயங்கியவள், பின் வேறு வழியின்றி அவனது தட்டை நெருங்கி பொங்கலைப் பரிமாறினாள்…

​அவள் பரிமாறும்போது, ரன்வீரின் பார்வை அவள் முகத்தையே நிலைகுத்திப் பார்த்தது, அவனது அந்த நெருக்கமான பார்வையும் அருகாமையும் அவளுக்குள் ஒருவிதத் தடுமாற்றத்தை ஏற்படுத்தின, எப்படியாவது உணவைப் பரிமாறிவிட்டு அவனிடமிருந்து தள்ளி நிற்க அவள் முயல, ​ஆனால் அவனோ, அவள் தன்னை விட்டு விலகிச் சென்றுவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்ததினால்.. “சட்னி கொஞ்சம் வையேன்… இட்லி ஒன்னு வையேன்… காரச் சட்னி கொஞ்சம்,” என்று ஒவ்வொன்றாகக் கேட்டுக்கொண்டே இருந்து அவளைத் தள்ளிச் செல்ல விடாமல் அங்கேயே நிற்க வைத்தான், அனைவரின் முன்னிலையில் அவனை முறைக்கக்கூட முடியாமல், வேறு வழியின்றி அவன் கேட்ட அனைத்தையும் மிருதுளா செய்து கொண்டிருந்தாள்…

​அவர்கள் இருவரின் இந்த சேட்டையைக் கவனித்துக் கொண்டிருந்த சம்யுக்தா, “அண்ணி! பேசாம அண்ணன் பக்கத்திலேயே உட்கார்ந்திடுங்க… உங்களுக்குப் பரிமாற ஈஸியா இருக்கும்,” என்று குறும்பாக கிண்டல் செய்ய, ​உடனே காயத்ரியும் அதைப் பிடித்துக்கொண்டு, “ஆமாமா… அப்படியே நீயும் உட்கார்ந்து சாப்பிடு” என்று சொல்ல, மிருதுளா தர்மசங்கடத்தில் நெளிந்தாள்…

​ரன்வீரோ தன் தங்கையைப் பாராட்டுவது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு, மிருதுளாவிற்காகத் தன் பக்கத்தில் இருந்த நாற்காலியைச் சற்றே இழுத்து விட்டு.  “உட்காரு” என்று சொல்ல, அந்த அன்பான அதிகாரத்திற்குப் பணியத் தெரியாமல், அதே சமயம் பெரியவர்களின் பேச்சைத் தட்ட முடியாமல் மிருதுளா மெல்ல அவன் அருகில் அமர்ந்தாள்…

​அந்தத் தருணம், அவனது உடலின் வெப்பத்தை அவளால் உணர முடிந்தது, பல நாட்களுக்குப் பிறகு இத்தனை நெருக்கமாக அவன் அருகில் அமர்ந்திருப்பது, அவளது கோபத்தையும் தாண்டி ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பை அவளுக்குள் ஏற்படுத்தியது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!