ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 34
அத்தியாயம் – 34
வானம் இருட்டியும் விட்டது, அந்த நேரம் அறையின் கதவு தட்டப்பட, சட்டென்று எழுந்து அமர்ந்தவள் தன் கலைந்த கூந்தலைச் சரிசெய்து, முகத்தைத் துடைத்துவிட்டுப் போய் கதவைத் திறக்க, வாசலில் சுமதி தான் நின்று கொண்டிருந்தார்…
”தூங்கிட்டு இருந்தியாமா?” அவர் கனிவாக வினவ, “அதெல்லாம் இல்ல அத்த, சொல்லுங்க,” என்றாள் மிருதுளா தன் குரலில் இருக்கும் நடுக்கத்தை மறைக்கப் போராடியபடி…
Advertisement
”ரன்வீர் கிளம்பிட்டானாமா? வெளியே அவன் கார் இல்லையே,” என்று அவர் வினவ, “அ… அது…” என்று ஒரு கணம் இழுத்தவள், “அவருக்கு ஏதோ முக்கியமான வேலை வந்துடுச்சுன்னு சொன்னாரு அத்த, அதான் அவசரமா கிளம்பிட்டாரு,” என்று பொய் தான் சொன்னாள்…
”ஓ… அப்படியாமா? சரி சரி. ரொம்ப நேரமா உள்ளயே இருக்க… டீ ரெடியா இருக்கு, கொண்டு வரவா?” என்று அவர் கேட்க, “வேண்டாம் அத்த, நானே வர்றேன்,” என்று அவள் சொல்லவும் அவர் புன்னகையோடு சென்றுவிட,
மிருதுளாவிற்கோ மனமெல்லாம் தவித்துக் கொண்டிருந்தது…
முகத்தைக் கழுவிவிட்டு வெளியே வந்தவளுக்கு, ஹாலில் சம்யுக்தாவும் வினோத்தும் பேசிக்கொண்டிருந்தது வேறு அவளது குற்றவுணர்வை இன்னும் அதிகமாக்கியது…
Advertisement
”நைட் வரைக்கும் அண்ணன் இங்க இருக்கேன்னு சொல்லிட்டு, சொல்லாம கொள்ளாம இப்படிப் போயிட்டாரே! அண்ணன் கூட சேர்ந்து இன்டோர் கேம்ஸ் விளையாடலாம்னு நான் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா?” என்று சம்யுக்தா வருத்தத்தோடு சொல்லிக் கொண்டிருக்க,.. ”இருந்தாலும் அண்ணன் இப்படிப் பண்ணி இருக்கக் கூடாது, நான் இனிமே அவர் கிட்ட பேசவே போறதில்ல,” என்றான் வினோத் கோபமாக…
Advertisement
அவர்கள் பேசுவதைக் கேட்கக் கேட்க மிருதுளாவின் இதயம் கனத்து போனது, ரன்வீர் அவர்களின் மீது எவ்வளவு அன்பு வைத்திருப்பான் என்பதும், அவர்களை விட்டுவிட்டு அவன் இப்படிப் போயிருக்கிறான் என்றால் அவளது அந்த வார்த்தைகள் அவனை எந்த அளவிற்க்கு சிதைத்திருக்கும் என்பதும் அவளுக்குப் புரிந்தது…
அவன் ஒரு ‘கொலைகாரன்’ என்று அவள் சொன்னபோது அவனது கண்களில் தெரிந்த அந்த வலி… அது ஒரு குற்றவாளியின் வலி போலத் தெரியவில்லை, மாறாகத் தான் நேசிக்கும் பெண்ணிடமிருந்து வந்த அநீதியான சொல்லால் ஏற்பட்ட காயமாகத் தெரிந்தது…
அவள் மெல்ல அங்கு வர, அவளைப் பார்த்ததும் சம்யுக்தா, “அண்ணி! அண்ணன் ஏன் இப்படிப் போனாரு? உங்ககிட்டயாவது சொல்லிட்டுப் போனாரா?” என்று கேட்க, மிருதுளா பதில் சொல்ல முடியாமல் மௌனமாக நின்றாள்…
மிருதுளாவின் வாடிய முகத்தை கவனித்த காயத்ரிக்கு, அவர்களுக்குள் ஏதோ நடந்திருப்பது புரிந்தது. அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல், “நைட் ஆகிடுச்சு, எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல நாமளும் கிளம்பிடுவோம்லமா… எதுக்கு இப்போ புலம்பிக்கிட்டு இருக்க? உன் அண்ணனுக்கு ஏதோ அவசர வேலை வந்திருக்கும், இல்லைனா அவன் இப்படிப் பாதியில கிளம்புவானா? இன்னைக்கு மதியம் வரைக்கும் உங்ககூடவும் நல்லா நேரம் செலவழிச்சான் தானே,” என்று பிள்ளைகளைச் சமாதானப்படுத்தினார்…
Advertisement
சம்யு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாலும், அம்மாவின் பேச்சில் கொஞ்சம் சமாதானமானாள், அதன் பிறகு டீ, பலகாரங்கள் முடித்துவிட்டு, கிளம்ப வேண்டிய பொருட்களைத் தயார் செய்தவர்கள், தங்கள் பயணத்தைத் தொடங்கினர்…
மிருதுளாவிற்குத்தான் மனமெல்லாம் ரன்வீரின் நினைவாகவே இருந்தது, காரின் ஜன்னல் ஓரம் அமர்ந்து வேடிக்கை பார்த்தாலும், அவளது கண்கள் அந்த இருளில் ரன்வீரின் காரைத் தான் தேடின. அவனது அந்த அடிபட்ட பார்வை அவளுக்குள் ரணமாகக் குடைந்தது…
வீடு வந்து சேரும் வரை அவளது விரல்கள் போனில் அவனது எண்ணை அழுத்துவதும், பின் தயங்கித் தவிர்ப்பதுமாகவே இருந்தது. இரவு 8 மணி தாண்டியிருந்தது. வீட்டை அடைந்ததும், ரன்வீரின் கார் அங்கே நிற்கிறதா என்று ஆவலோடு பார்த்தாள், ஆனால், அவனது கார் அங்கே இல்லை.
அனைவரும் வீட்டிற்குள் நுழைய, ஒருவித வெறுமை அவளை வரவேற்றது. “மிருதுளா, நீ போய் முகத்தை அலம்பிட்டு ரெஸ்ட் எடுமா, நான் டின்னர் ரெடி பண்ணிடுறேன்,” என்று சுமதி சொல்ல, அவள் மௌனமாகத் தன் அறைக்குச் சென்றாள்…
அறையினுள் நுழைந்ததும் அவளுக்குள் இருந்த தவிப்பு அவளை மெல்லக் கொல்லத் தொடங்கிட, இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் ரன்வீரின் எண்ணிற்குப் போன் செய்துவிட்டாள். ஆனால், அதுவோ சுவிட்ச் ஆஃப் என்று வந்தது. அவனது அலைபேசி அணைக்கப்பட்டிருப்பது அவளது கவலையை இன்னும் அதிகமாக்கியது, மனம் மேலும் ரணமாக, அப்படியே படுக்கையில் விழுந்து படுத்துக்கொண்டாள், கண்ணீர் அது பாட்டிற்கு அவளது கன்னங்களை நனைத்துத் தலையணையில் இறங்கியது…
நேரங்கள் கடக்க, இரவுச் சாப்பாட்டிற்காக அவளை அழைத்தனர், அவளுக்குப் போகவே மனமில்லை என்றாலும், பெரியவர்கள் வருத்தப்படுவார்கள் என்பதற்காகத் தயக்கத்துடன் கீழே சென்றாள். சுமதி பரிமாற, தொண்டைக்குள் இறங்காத உணவை வலுக்கட்டாயமாகத் திணித்துவிட்டு, ஒரு வழியாக அறைக்கு வந்துவிட்டாள், கீழே யாரும் ரன்வீரைப் பற்றித் துருவித் துருவிக் கேட்காதது அவளுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது, அவளும் எத்தனை பொய்தான் சொல்லி சமாளிப்பது?
அறைக்கு வந்து கதவைத் தாழிட்டவள், ஜன்னல் அருகே நின்று சாலையையே பார்த்துக் கொண்டிருந்தாள், தெரு விளக்குகளின் வெளிச்சத்தில் ஒவ்வொரு முறை கார் சத்தம் கேட்கும் போதும், அது அவனது காராக இருக்காதா என்று மனம் ஏங்கியது…
மணிகள் கடந்து கொண்டே போக, படுக்கையில் வந்து படுத்தவள் எப்போது எப்படி உறங்கினாள் என்றே தெரியவில்லை, அழுகையும் தவிப்பும் அவளை அத்தனை தூரம் களைப்படையச் செய்திருந்தது, ஜன்னல் வழியே நுழைந்து முகத்தில் பட்ட அதிகாலைச் சூரிய ஒளியில் தான் மெல்ல விழிகளைத் திறந்தாள் மிருதுளா…
பக்கவாட்டில் திரும்பியவள், அங்கே ரன்வீர் அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டாள், அவன் எப்போது வந்தான்? எப்படி வந்தான்? எதுவுமே அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், அவன் நலமாகத் தன் அருகிலேயே இருப்பதை உணர்ந்த அந்த நொடி, அவள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி தாண்டவமாடியது…
இரவு முழுக்க அவன் என்ன ஆனானோ என்ற பயத்தில் துடித்த அவளுக்கு, அவன் அருகாமை ஒரு பெரிய நிம்மதியைக் கொடுத்தது, ஆனந்தத்தில் அவளது கரம் தன்னிச்சையாக அவனது கலைந்திருந்த கேசத்தை வருடச் சென்றது. அவன் மீது அவளுக்கு இருந்த காதல் அந்த ஒரு கணத்தில் மேலோங்கி நின்றது…
ஆனால், அவளது விரல்கள் அவனது கேசத்தைத் தீண்டப் போன அந்தத் துல்லியமான விநாடியில், அவளது தாத்தாவின் முகம் நிழலாடியது, அவரது கடைசி நிமிடம் கண் முன்னே வந்து போக, சட்டென்று மின்னல் தாக்கியது போல் தன் கரத்தை இழுத்துக் கொண்டாள்…
அவளது இதயம் இப்போது இரண்டு பாதிகளாகப் பிளந்தது, இரவு முழுக்க அவனைப் பார்க்காமல் தவித்தவள், இதயம் அவன் ஒரு கொலைகாரன் என்று மீண்டும் எச்சரிக்கத் தொடங்கியதும் அந்த தவிப்பெல்லாம் காணாமல் போய்விட்டது.
அவளைப் பொறுத்தவரை, அவள் கண்ணால் கண்ட சில காட்சிகளும், சூழ்நிலைகளும் அவள் தாத்தாவைக் கொன்றது ரன்வீர் தான் என்று ஆணித்தரமாக நம்ப வைத்திருந்தன, அவனது நியாயங்களை நம்பினால், அது தன் தாத்தாவிற்குச் செய்யும் துரோகம் என்றே அவள் மனம் எண்ணியது…
அவன் விழிப்பதற்குள் அங்கிருந்து விலகிவிட வேண்டும் என்று நினைத்தவள், அடுத்த கணம் படுக்கையை விட்டுச் சட்டென்று எழுந்து சென்றாள். அவன் அருகில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் தன் லட்சியமும், கோபமும் கரைந்து போவதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை…
குளியலறைக்குள் நுழைந்து கொண்டவள், கதவில் சாய்ந்தபடி நின்றாள். ‘ஏன்… ஏன் இப்படியெல்லாம் நடந்தது, அவன் ஏன் அப்படி பண்ணான், அவன் என் தாத்தாவை கொன்னவன்னு தெரிஞ்சும் அவன்கிட்ட என் மனசு ஏன் இப்படித் தோத்துப்போகுது?’ என்று அவளது உள்மனம் கதறியது…
அதே நேரம் ரன்வீரும் கண்விழித்தான், அவள் தன்னை தொட வந்து விட்டு எழுந்து சென்று விட்டது மேலும் வலியை கொடுத்தது, தூங்காமல் கண்மூடி படுத்திருந்தவன் அனைத்தையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான், அவள் தன்னை வெறுப்பதை விட, தன்னை ஒரு குற்றவாளியாகப் பார்ப்பதுதான் அவனை அதிகம் ரணப்படுத்தியது…
குளித்துவிட்டு உடை மாற்றி கீழே வந்த மிருதுளா, சமையலறையில் சுமதியுடன் வேலைகளில் மூழ்கித் தன்னைத் திசைதிருப்ப முயன்றாள், அப்போது மாடியிலிருந்து இறங்கி வந்த ரன்வீர், யாரிடமும் பேசாமல் நேராக வாசல் கதவை நோக்கி நடந்தான்…
”ரன்வீர்! சாப்பிடாம எங்கப்பா போற?” என்று சுமதி குரல் கொடுக்க, அவன் வாசலிலேயே நின்றான். ஆனால் திரும்பவில்லை.
மிருதுளா கையில் இருந்த தட்டை இறுகப் பற்றியபடி, அவன் என்ன சொல்லப் போகிறான் என்று ஆவலோடும் பயத்தோடும் கவனித்துக் கொண்டிருந்தாள்…
”வேலை இருக்கு சித்தி.. நைட் வர லேட் ஆகும், எனக்காக காத்திருக்க வேண்டாம்,” என்று அவன் சொல்லிய வார்த்தைகள் சுமதிக்காக இருந்தாலும், அவனது பார்வை நிலத்தில் பதிந்து மிருதுளாவின் காலடியோரம் வந்து விழுந்து மறைந்தது…
அவன் சென்ற பிறகு, சுமதி மிருதுளாவைப் பார்த்து, “என்னம்மா ஆச்சு இவனுக்கு? ஒரு மாதிரியாவே இருக்கான்… நீயாவது அவன்கிட்ட பேசி என்னன்னு கேக்கக் கூடாதா?” என்று கேட்க, மிருதுளா பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தாள்…
அன்றைய நாள் அவளுக்கு மிகுந்த வெறுமையுடனேயே கடந்தது. “இன்று இரவு வீட்டிற்கு வர மாட்டேன்” என்று ரன்வீரிடமிருந்து வந்த ஒற்றைக் குறுஞ்செய்தி அவளது இதயத்தில் மேலும் ஒரு பாரத்தை ஏற்றியது, அந்த செய்தியைக் கண்டு பெருமூச்சு விட்டவள், குடும்பத்தாரிடம் வழக்கம் போல் “வேலை விஷயமா வெளியூர் போயிருக்கனால நைட் வர முடியாதுன்னு சொல்லி இருக்கார்” என்று பொய் சொல்லி சமாளிக்க, பெரியவர்கள் அதை நம்பினாலும் அவர்களின் மனது ஆறவில்லை…
அடுத்த நாளும் அதே போல் ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு அவன் வரவே இல்லை, காயத்ரி மிகுந்த கவலையோடு இருக்க, இன்னொரு பக்கம் வினோத்தும் சம்யுக்தாவும் அவன் இல்லாத குறையைப் பற்றிப் புலம்பிக் கொண்டே இருந்தனர். ரன்வீர் அந்த வீட்டில் இருந்த போது நிலவிய அந்த மகிழ்ச்சி மொத்தமாக அந்த வீட்டை விட்டுப் போயிருந்தது…
சமுத்திரவேலும் சுமதியும் வாய்விட்டுப் புலம்பவில்லை என்றாலும், அவர்களின் கவலை முகத்திலேயே அப்பட்டமாகத் தெரிந்தது, அந்த வீட்டின் அமைதி அவளைக் குற்ற உணர்ச்சியால் வதைத்தது. தன் ஒருவளின் வார்த்தையால் அந்த வீட்டின் ஒட்டுமொத்த சந்தோஷமே காணாமல் போவதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை…
இனி மௌனமாக இருந்தால் எதுவும் மாறாது என்பதை உணர்ந்தவள், தன் ஈகோவையும் கோபத்தையும் ஒரு நிமிடம் தள்ளி வைத்துவிட்டு, அவனைத் தேடி செல்ல முடிவெடுத்தாள்…
கிளம்பும் போது கண்ணாடி முன் நின்றவள், தன் கழுத்தில் இருக்கும் தாலியை ஒரு கணம் தொட்டுப் பார்த்தாள். ‘நீ என் தாத்தாவைக் கொன்னவன்னு என் அறிவு சொல்லுது… ஆனா நீ இல்லாத இந்த வீடு நரகமா இருக்குன்னு என் மனசு சொல்லுது வீர். இந்தத் தவிப்புக்கு என்ன அர்த்தம்?’ என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டாள்.
விறுவிறுவென்று கீழே இறங்கியவள், “அத்த, நான் ஒரு சின்ன வேலையா வெளிய போயிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு, ரன்வீரின் பேலஸ் நோக்கி பயணமானாள்…
