ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 33
அத்தியாயம் – 33
ரன்வீரும் மிருதுளாவும் உடை மாற்றி விட்டு வந்த நேரம், சம்யுக்தா மட்டும் ஹாலில் இருந்தாள், அவர்கள் இருவரையும் பார்த்தவள், “அண்ணா, அண்ணி… எல்லாரும் சாப்பிட்டாச்சு, ஒரு குட்டித் தூக்கம் போடவும் போயிட்டாங்க, எனக்கும் நல்லாத் தூக்கம் வருது, நானும் போறேன், நீங்க ரெண்டு பேரும் நிதானமா சாப்பிடுங்க,” என்று ஒரு குறும்பான புன்னகையுடன் சொல்லிவிட்டு அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டாள் சம்யுக்தா…
மிருதுளாவிற்குத் தான் இப்போது சங்கடமாக இருந்தது, அவனுடன் இப்போது தனியாக அமர்ந்து சாப்பிட வேண்டுமா என்ற தயக்கம் அவளைத் தொற்றிக்கொண்டது…
Advertisement
நீச்சல் குளத்தில் ஈரத்தோடு பார்த்ததற்கும், இப்போது ஒரு சாதாரணப் புடவையில் தலைமுடியைக் கொண்டையிட்டு நிற்பதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது, இருப்பினும், அந்த எளிமையிலும் அவள் அவன் விழிகளை ஈர்க்கத் தவறவில்லை, அவளோடு நெருக்கமாக இருந்த அந்தத் தருணத்தின் தாக்கம் இன்னும் அவனுக்குள் குறையவுமில்லை, அவனது உடலும் மனமும் மீண்டும் அவளது அருகாமைக்காகவே ஏங்கியது…
இருப்பினும், அவள் சங்கடப்படுவதைக் கண்ட ரன்வீர் தன்னைச் சமன் செய்துகொண்டு, “என் கூட உட்கார்ந்து சாப்பிடுறதுல உனக்குத் தயக்கம் எதுவும் இல்லையே?” என்று நிதானமாக வினவிட,.. அவள் அதற்குப் பதில் பேசாமல், “ம்ம்…” என்று மட்டும் முணுமுணுத்துவிட்டு டைனிங் டேபிளில் வந்து அமர, அவனும் அவளுக்கு எதிரே வந்து அமர்ந்துகொண்டான்…
ஹாட்பேக்கில் இருந்த உணவை எடுத்துத் தனக்கும் அவனுக்கும் பரிமாறியவள், மௌனமாகச் சாப்பிடத் தொடங்கினாள், அவனும் சாப்பிடத் தொடங்கினாலும், அவனது கவனம் உணவை விட அவள் மீதே அதிகமாக இருந்தது…
Advertisement
அங்கு ஓடிக்கொண்டிருந்த ஃபேனின் சத்தத்தைத் தவிர, அங்கே வேறு சத்தமில்லை, மிருதுளா உணவில் கவனமாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும், அவனது பார்வை தன் மீது இருப்பதை உணர்ந்து உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருந்தாள்…
Advertisement
”ஏன்… சாப்பாடு நல்லா இல்லையா? என்று ரன்வீர் மௌனத்தைக் கலைக்க, “அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு,” என்று சுருக்கமாக முடித்தாள்…
”அப்போ ஏன் தட்டுலயே கோலம் போட்டுக்கிட்டு இருக்க?” என்று அவன் அவளை வம்புக்கு இழுக்க, “அதெல்லாம் ஒன்னும் இல்ல,” என்றவள் எடுத்து ஒரு வாய் சாப்பிட்டாள், ஆனால் ஏனோ உணவு தொண்டையில் இறங்கவே இல்லை, உடலெல்லாம் ஒருவிதமான வெப்பம் ஏறியது போல ஒரு பிரம்மை.
ஆம் அவன் பார்வையே அவளைச் சூடாக்கிக் கொண்டிருந்தது, அவள் அவ்வளவு பலவீனமானவளும் இல்லை, எத்தனையோ முறை அவனை எதிர்த்து நின்றிருக்கிறாள், ஆனால் இன்று, நீச்சல் குளத்தில் ஏற்பட்ட நெருக்கத்திற்குப் பிறகு, அவள் உடலில் புதுவிதமான உணர்வுகள் மல்லுக்கட்டின, அவனது கரம் தீண்டிய இடங்கள் எல்லாம் இன்னும் ஒருவிதத் துடிப்போடு இருப்பதை உணர்ந்தவள்,
சாப்பிடுவதைக் கைவிட்டு, கையில் இருந்த பருக்கைகளை மெல்ல உருட்டியபடி அமர்ந்திருந்தாள்.
Advertisement
ரன்வீர் அவளது ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்துக் கொண்டு தான் இருந்தான், அவளது சங்கடம் அவனுக்குப் புரிந்தாலும், அதை ரசிப்பதே அவனுக்குப் பெரும் சுகமாக இருந்தது…
”மிருதுளா…” என்று அவன் மெல்லிய குரலில் அழைக்க, அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்கவில்லை.
”ம்ம்…” என்று மட்டும் சொன்னாள்..
”சாப்பிடறதுல கவனம் இல்லைன்னு தெரியுது, என்ன யோசனை? இன்னும் அந்த ஸ்விம்மிங் பூல்லயே தான் உன் மனசு இருக்கு போல” என்று அவன் குறும்பாகக் கேட்க, அதிர்ந்து போய் அவனைப் பார்த்தவள்.. ”அ… அதெல்லாம் ஒன்னும் இல்ல, சும்மா எதையாவது உளறாதீங்க” என்று பதறியவள், அவசர அவசரமாகத் தண்ணீரை எடுத்துக் குடித்தாள்…
”உன் முகம் எல்லாம் சிவந்து போயிருக்கு, வெட்கமா?” என்று அவன் விடாமல் அவளது விழிகளைத் தன் வசப்படுத்த முயல, மிருதுளாவிற்க்கு அங்கிருந்து ஓடி விடலாம் போல இருந்தது, அவனது குரலில் இருக்கும் அந்த ஈர்ப்பு, அவளது பிடிவாதத்தை மெல்ல மெல்லக் கரைத்துக் கொண்டிருந்தது…
அந்தக் கணம், அவன் பார்வையில் ஒரு சோற்றுப் பருக்கை அவளது உதட்டோரம் ஒட்டியிருப்பது வேறு விழ, அவனது கை தானாக நீண்டு அவளது முகத்தை நோக்கிச் சென்றது.
அவன் கைகள் நெருங்குவதைக் கண்டு மிருதுளா விழி விரித்து சிலையாக, ரன்வீரின் கட்டைவிரலோ மிக மென்மையாக அவளது உதட்டின் ஓரத்தில் படிந்திருந்த அந்தப் பருக்கையைத் துடைத்து எடுத்தது. அவனது விரல் நுனி அவளது மென்மையான இதழ்களைத் தற்செயலாகத் தீண்டிய அந்த ஒரு நொடி, அவள் உடலில் மின்சாரம் பாய்ந்தது போன்றதொரு சிலிர்ப்பு…
அவனோ அவளின் சிலிர்ப்பை உணர்ந்தது போல அதோடு கையை எடுக்காமல், அவளது இதழினை மெல்லத் தன் பெருவிரல் கொண்டு வருடிட, அந்த சிலிர்ப்பில் விழிகளை மூடிக் கொண்டவளுக்கோ உடலில் பலவித உணர்வுகள் அலைமோதின, அவனது ஒவ்வொரு அசைவும் அவளது பிடிவாதத்தை அடித்துச் செல்லும் ஒரு காட்டாறு போல இருந்தது…
அவனுக்கும் அவள் தன் தொடுதலுக்குச் சிலிர்த்துப் போவதால், உடலில் பல ரசாயன மாற்றங்கள் எல்லாம் உண்டாகின. அவளது மென்மையும், அவனது ஸ்பரிசத்தில் அவள் காட்டும் அந்தத் தவிப்பும் அவனை மேலும் நிலைகுலையச் செய்ய, மெல்ல அவளது கன்னத்தைப் பற்றித் தன் விரல் நுனிகளால் வருடினான், அந்த மென்மையான வருடலில் அவள் உடல் மேலும் சிலிர்த்தது…
தன்னையே மறந்த நிலையில் இருந்தவள், அவனது உஷ்ணமான மூச்சுக்காற்று தன் முகத்தில் படுவதை உணர்ந்தாள், அவனோ இன்னும் மிக நெருக்கமாகக் குனிந்து, அவளது நெற்றியில் தன் இதழ்களை மெதுவாகப் பதித்திட, அந்த ஒரு நொடி, மிருதுளாவிற்க்கு உலகமே நின்றுவிட்டது போன்ற ஒரு உணர்வு…
அவனது இதழ்களின் உஷ்ணம் அவளது நெற்றியில் படர, அவள் இதுவரை கட்டி வைத்திருந்த மன உறுதி எனும் அணையும் மெல்ல உடையத் தொடங்கிட, அவள் கைகள் தாமாக அவனது சட்டையை இறுகப் பற்றிக் கொண்டன. அந்த நடுக்கம், அந்தத் தவிப்பு… எல்லாமே அவள் அவனிடம் சொல்ல நினைத்த ஆயிரம் வார்த்தைகளுக்கு மாற்றாக அமைந்தன, அவனது சட்டையின் காலர் அவளது விரல்களின் பிடியில் சுருங்கியது, அவனது நெருக்கம் அவளுக்கு ஒருவித அச்சத்தையும், அதே சமயம் ஒரு புரியாத பாதுகாப்பையும் கொடுத்தது…
அவள் சட்டையை இழுத்துப் பிடித்த வேகத்தில், ரன்வீர் இன்னும் அவளுக்கு மிக நெருக்கமாக இழுக்கப்பட்டான், அவனது மார்பு அவளது தோள்களில் உரச, அவனது இதயம் துடிக்கும் வேகம் அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது…
”மிருது…” என்று அவன் இதழ்கள் முணுமுணுத்தபடி அவளது கன்னத்தினருகே நகர, அவளோ தன் முகத்தை அவனது தோளில் புதைத்துக் கொண்டு.. “வீர்…” என்று குரல் தழுதழுக்கக் கூறினாலும், அவனது சட்டையைத் தளர்த்த அவளது கைகளுக்கு மனமில்லை…
அவளும் தன் அருகாமைக்கு ஆசைப்படுகிறாள் என்பது அவனது ஸ்பரிசத்தில் அவளுக்கு ஏற்படும் மாற்றங்களிலேயே தெளிவாகப் புரிந்தது, அவள் காட்டும் இந்த சின்னஞ்சிறு தடுமாற்றம் அவனுக்குள் ஒரு பெரும் தாபத்தை கிளறிவிட்டது…
அவனது கரம் அவளது இடையில் மெல்ல ஊர்ந்து பிடியை இறுக்க, அவனது இதழ்கள் அவளது காது மடலை மென்மையாக உரசிட, அந்த நொடி, ஒரு மின்னல் தாக்கியது போலச் சிலிர்த்து அடங்கியது பெண்ணவளின் உடல், அவனது மூச்சுக்காற்றின் வெப்பம் அவள் கழுத்துப் பகுதியில் படர, அவளது பிடி அவனது சட்டையில் இன்னும் வலுத்தது, விழிகளைத் திறக்கக்கூடத் திராணியின்றி, அந்த இன்பமான அவஸ்தையில் அவள் தன்னை மறந்தாள்…
அவனது கரம் அவளது இடையிலிருந்து மெல்ல முதுகிற்கு நகர, அவளை இன்னும் தன்னோடு பிணைத்துக் கொண்டது அவன் கரங்கள், அந்த வெறிச்சோடிய மதிய வேளையில், டைனிங் ஹாலின் நிசப்தத்தை அவர்களின் வேகமான சுவாசக் காற்றும், துடிக்கும் இதயங்களின் சத்தங்களும் மட்டுமே நிரப்பின…
தன் கட்டுப்பாட்டை இழந்தவன், மெல்ல அவள் கன்னத்தைப் பற்றி அவள் இதழ்களை நோக்கி குனிய, அந்த நொடி,.. அவளது மூளை ‘மிருதுளா… நீ என்ன செய்கிறாய்?’ என்று பலமாக எச்சரிக்க, விழித்துக்கொண்டாள் பெண்ணவள்,..
’நீ செய்வது தவறு, அவன் உன் தாத்தாவைக் கொன்றவன்’ என்ற அந்த கசப்பான உண்மை இடியாக அவளது மூளைக்குள் இறங்கிட, அந்த எச்சரிக்கையில் திடுக்கிட்டுச் சட்டென்று விழிகளைத் திறந்தாள் பெண்ணவள்,..
அவளது கண்களில் தெரிந்த அந்தத் திடீர் மாற்றமும், கலங்கிய விழிகளும் ரன்வீரை நிலைகுலையச் செய்ய.. ஒரு நிமிடம் பின்வாங்கியவன்.., “மிருதுளா… என்னாச்சு?” என்று பதற்றமாக வினவினான்…
அவளோ தழுதழுத்த குரலில், உடலெங்கும் நடுக்கம் பரவ, “நீ… நீ ஒரு கொலைகாரன்! என் தாத்தாவையே கொன்னவன்! உன் பக்கத்துல நான் எப்படி இப்படி இருந்தேன்…” என்று ஆத்திரத்தோடும் வலியோடும் கேட்டிட, அந்த வார்த்தைகள் ஈட்டி போல ரன்வீரின் இதயத்தைத் தைத்தன…
சட்டென்று அவளை விட்டு விலகியவனின் கண்களில் ஒரு கணம் மின்னிய அந்தத் துயரமும், அடிபட்ட பார்வையும் மிருதுளாவை என்னவோ செய்தாலும், அவளது வலி அந்த பரிதாபத்தை மறைத்தது…
அவளை அடிபட்ட பார்வை பார்த்தவன், அடுத்தகணம் விறுவிறுவென்று அந்த வீட்டை விட்டே வெளியேறிவிட்டான்.
ஹாலில் ஓடிக்கொண்டிருந்த ஃபேனின் சத்தம் மட்டும் இப்போது அந்த அறையை ஆக்கிரமித்திருந்தது, மிருதுளா அங்கேயே அமர்ந்து தன் முகத்தை கரங்களில் புதைத்துக்கொண்டு விம்மி அழத் தொடங்கினாள், காதலுக்கும், கோபத்திற்கும் இடையே அவள் மனம் ஒரு போர்க்களமாக மாறியிருந்தது…
வெளியே காரின் ஸ்டார்ட் ஆகும் சத்தம் கேட்ட பின்னர் தான் அவள் தலை நிமிர்ந்தாள், ரன்வீர் வேகமாக காரை எடுத்துக்கொண்டு வெளியேறுவது அவளுக்குப் புரிந்தது, அவளது அந்த வார்த்தைகள், அதுவரை அவர்கள் உருவாக்கிய அந்த மெல்லிய நெருக்கத்தை ஒரே நொடியில் சுக்குநூறாக உடைத்திருந்தது…
அதன் பின்னரும் அந்த இடத்திலேயே அமர்ந்து குலுங்கி குலுங்கி அழுதாள், அவனிடம் அப்படிப் பேசியிருக்கக் கூடாதோ என்று அவள் மனம் பிசைந்தது, அவன் கடைசியாகத் தன்னைப் பார்த்துவிட்டுப் போன அந்தப் பார்வை… அதில் தெரிந்த வலி அவளுக்கு உயிர் வரை சென்று வதைத்தது…
தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றவள், கட்டிலில் முகம் புதைத்து நீண்ட நேரம் அழுதுகொண்டே இருந்தாள், இத்தனை நாட்கள் அவனை விட்டு ஒதுங்கித் தான் இருந்தாள், அவனைப் பலமுறை ‘கொலைகாரன்’ என்று சொல்லியும் இருக்கிறாள். ஆனால் ஏனோ, இந்த முறை அந்த வார்த்தையைச் சொல்லும்போது அவள் மனமே அவளைக் குற்றவாளியாகச் சுட்டியது…
நீச்சல் குளத்தில் அவன் காட்டிய அந்த அக்கறை, சாப்பிட அமர்ந்தபோது அவன் பார்வையில் தெரிந்த அந்தத் தவிப்பு, அவளது இதழோரம் ஒட்டியிருந்த பருக்கையைத் துடைத்த அந்த மென்மை… இவை அனைத்தும் அவள் மூளை சொன்ன உண்மையை விட மேலானதாகத் தோன்றியது…
”ஏன் நான் இப்படி இருக்கேன்? ஒரு பக்கம் அவன் மேல இருக்கிற கோபம், இன்னொரு பக்கம் அவனோட அன்பு… ரெண்டுக்கும் நடுவுல நான் சிதைஞ்சு போறேனே!” என்று அழுது கொண்டே புலம்பினாள்…
சாயங்காலமாகியும் ரன்வீர் வீட்டிற்குத் திரும்பவில்லை, வெளியே வானம் இருட்டிக் கொண்டு வர, மதிய நேரத்து அந்த அழகான தருணம் இப்போது ஒரு கசப்பான கனவாக மாறி அவளை வதைத்தது. அவன் எங்கே சென்றிருப்பான்? என்ற கவலை அவளையும் மீறி மேலெழுந்தது…
