Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 40

அத்தியாயம் – 40

 

“என்னடா ஆச்சு? இவ்வளவு காலையிலேயே உட்கார்ந்து ஏன் இப்படி மூக்கு முட்ட குடிச்சிட்டு இருக்க? வாட்ச்மேன் போன் பண்ணி, ‘வீட்டுக்குள்ள பொருட்கள் எல்லாம் உடையுற சத்தம் கேட்குது, ஐயா ரொம்ப கோபமா வந்திருக்கார்’னு பதற்றமா சொல்லவும், வேலையை போட்டபடி போட்டுட்டு ஓடி வந்தேன், என்ன தான்டா ஆச்சு? கொஞ்ச நாள் எல்லாமே நல்லா தானே போயிட்டு இருந்தது!” என்று நிதின் கேட்க, ரன்வீர் எதற்கும் பதில் சொல்லவில்லை, குடித்தான்… குடித்தான்… குடித்துக்கொண்டே தான் இருந்தான்..

​”மிருதுளா என்னடா சொன்னா?” நிதின் அந்தப் பெயரை உச்சரித்த அடுத்த கணம், ரன்வீர் கையில் இருந்த பாட்டிலை ஆவேசமாகத் தூக்கி எறிய, அதுவோ ஒரு பெரும் சத்தத்துடன் சுவரில் பட்டுத் தெறித்து கண்ணாடித் துண்டுகளாக சிதறிட, அந்தச் சத்தத்தில் நிதினின் காதே ஒரு நிமிடம் செவிடாகிப் போனது போன்ற உணர்வு…



Advertisement

​”அவ பேரை என் முன்னாடி சொல்லாத!” என்று கர்ஜித்த ரன்வீர், தன் தலையைத் தாங்கியபடி சோபாவில் சரிய, தன் நண்பனின் இந்த நிலையை வருத்தத்துடன் பார்த்த நிதின், அவன் அருகில் வந்து அமர்ந்து, “இன்னும் அவ உன்னை புரிஞ்சுக்கலையா ரன்வீர்?” என்று மென்மையாக வினவினான்…

​ரன்வீர் பதில் பேசவில்லை. ஆனால், அவனது மூடியிருந்த கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கன்னங்களை நனைத்தது, கல்லைப் போன்ற மனதுடைய தன் நண்பன் உடைந்து அழுவதைப் பார்த்து பதறிப்போன நிதின்,..
​”டேய்… என்னடா? எதுக்காக கண்கலங்குற?” என்று கேட்க,..
“அவ என்னை என்ன வார்த்தை சொல்லிட்டா தெரியுமாடா?” என்று உடைந்த குரலில் கேட்டவன்,
​”என்னை ‘பொறுக்கி’னு சொல்லிட்டாடா… என் மேல இருந்த கொஞ்ச மரியாதையும் போயிருச்சுன்னு என் முகத்துக்கு நேரா சொல்றா, அவளுக்காக நான் படுற இந்தத் தவிப்பு அவளுக்கு ஒரு நாடகமா தெரியுதாம், நேத்து நைட்டு அவளை நான் பலவந்தம் பண்ணிட்டதா நினைக்கிறா நிதின், என் காதலையே அவ அசிங்கப்படுத்திட்டாடா!” என்று சொல்லிவிட்டு ஒரு சிறு பிள்ளையைப் போல விம்மி அழத் தொடங்கினான்…

​நிதினுக்கு அதிர்ச்சியாக இருந்தது, ரன்வீர் போன்ற ஒரு கர்வமுள்ள மனிதன், ஒரு பெண்ணின் சொல்லுக்காக இப்படிச் சிதைந்து போவான் என்று அவன் எதிர்பார்க்கவேவில்லை.

Advertisement

​”அவ கோபத்துல ஏதாவது சொல்லியிருப்பாடா, அவ  மனசுக்குள்ள ஒரு போராட்டமே நடந்துட்டு இருக்கு, அவ கண்ணு முன்னாடி நடந்த அந்த விஷயங்கள் அவளைத் திசைதிருப்புது,” என்று நிதின் சமாதானம் செய்ய முயல, ​”இல்லடா,.. அவ கண்ணுல என்னைப் பார்த்தப்போ ஒரு வெறுப்பு தெரிஞ்சது பாரு… அது என்னை அப்படியே கொன்னுடுச்சு, அவ தாத்தாவை நான் கொன்னேன்னு அவ முழுசா நம்புறா, நான் எவ்ளோ விளக்கம் சொன்னாலும் அவ கேட்கத் தயாரா இல்ல, பல உண்மைகளை சொல்லியும் அவளுக்கு என் மேல துளியும் நம்பிக்கை வரலைனா, அப்புறம் இந்த வாழ்க்கைக்கு என்னடா அர்த்தம்?” என்று வேதனையோடு கேட்டான்.

Advertisement

அந்த கணம் அவன் மிகவும் ஸ்ட்ரைன்​ செய்ததினால் அவனது காயம்பட்ட கையிலிருந்து பேண்டேஜை மீறி ரத்தம் கசிந்தது, அதனை கண்டு பதறி போனவன்.. “கைக்கு என்னடா ஆச்சு, ரத்தம் அதிகமா போகுது பாரு, வா ஹாஸ்பிடல் போலாம்,” என்று அவனை எழ வைக்க முயல,
“வலிக்குதுடா நிதின்… ஆனா கையில இல்ல, இங்க வலிக்குது,” என்று தன் நெஞ்சை சுட்டி காட்டியவன்,.. “அந்த விஷ்வா பண்ண சதி எல்லாம் அவளுக்குப் புரிய மாட்டேங்குது, அவன் எவ்வளவு கேவலமானவன்னு அவளுக்கும் தெரியும்டா, ஆனாலும் அவ அவனை தான் நம்புறா, என்னை ஒரு பர்சன்ட் கூட நம்பலடா, அவ என்னை நம்ப மாட்டேங்குறாளேன்னு அவ்வளவு வலிக்குது, பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு” ​ஆத்திரமும் வேதனையும் கலந்த நிலையில் மீண்டும் மதுபாட்டிலை கையில் எடுத்தவனைத் தடுத்த நிதின், “இப்போ நீ குடிக்கிறது தீர்வாகாது ரன்வீர், ஏதாச்சும் பண்ணலாம், கண்டிப்பா ஏதாவது வழி இருக்கும்” என்று ஏதேதோ கூறி அவனை சமாதானம் செய்தவன், அவன் கைக்கு மருந்திட ஆரம்பித்தான்,..

​மறுபுறம் வீட்டில், ரன்வீர் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்த மிருதுளாவின் காதுகளில் அவன் சொன்ன வார்த்தைகளும், அவன் கோபத்தில் உடைத்த ஜாடியின் சத்தமும் தான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தன, அதே கணம் அவளது உள்ளமும் எதையோ இழந்துவிட்ட தவிப்பில் தத்தளித்துக் கொண்டிருந்தது…

அன்று இரவு ரன்வீர் வீட்டிற்கு வரவில்லை, அவன் வராதது அவளுக்கு நிம்மதியைத் தந்திருக்க வேண்டும், ஆனால் அவளால் நிம்மதி கொள்ள முடியவில்லை. அவன் எங்கிருக்கிறான், என்ன செய்து கொண்டிருக்கிறான் என்ற கேள்விகள் தான் அவளை வாட்டின, படுக்கையில் புரண்டு கொண்டிருந்தவள், இரவு வெகு நேரத்திற்குப் பிறகுதான் கண்ணயர்ந்தாள்.

Advertisement

​அடுத்த நாள் அதிகாலையிலேயே ரன்வீர் வீட்டிற்கு வந்துவிட்டான், காலை உணவின் போது குடும்பத்தோடு அமர்ந்து வழக்கம் போல் கலகலப்பாக உணவுண்டான், ​மிருதுளா அவனுக்கு மிக அருகில்தான் அமர்ந்திருந்தாள், ஆனால் அவன் அவளிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை, அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவனது அந்த மௌனம் அவளுக்கு ஏனோ புரியாத ஒரு வலியைத் தந்தது, நேற்று வரை அவளிடம் உரிமையோடும், ஆதிக்கத்தோடும் பேசியவன், இன்று அவளை ஒரு அந்நியப் பொருளைப் போல நடத்துவதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

​’இப்போ ஏன் என் மனசு இப்படித் தவிக்குது? அவன் பேசலைன்னா எனக்கு சந்தோஷம் தானே வரணும்?’ என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டவளுக்கு, தனக்கு என்ன வேண்டும் என்பதே புரியவில்லை,…

​நாட்கள் நதியாய் ஓடி ஒன்றரை மாதங்களும் கடந்திருந்தன, இந்த இடைப்பட்ட நாட்களில் ரன்வீர் அவளிடம் பேசுவதை அறவே குறைத்துக் கொண்டான், மற்றவர்களின் முன்னிலையில் மட்டும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பட்டும் படாமலும் பேசிக் கொள்வான், அவனது இந்த அந்நியப்பட்டத் தன்மை அவளுக்குள் ஒரு மெல்லிய வலியை உருவாக்கினாலும் அவனிடம் போய் ‘ஏன் என்னிடம் பேச மாட்டேன் என்கிறீர்கள்?’ என்று கேட்டு போய் நிற்கவில்லை,..

இப்படிபட்ட நிலையில் ​அன்று காலை விடிந்ததில் இருந்தே மிருதுளாவிற்கு கடுமையான தலைசுற்றலும், விடாத வாந்தியுமாக வாட்டியது. கடந்த இரண்டு நாட்களாகவும் ஒருவிதமான சோர்வு அவளை ஆட்கொண்டிருக்க..  ‘எதுவும் ஒத்துக்காத உணவைச் சாப்பிடவில்லையே, அப்புறம் ஏன் இப்படி படுத்துது?’ என்று குழம்பியவள், அன்று சமையலறைக்கு வந்த போது மெல்ல சுமதியிடம் தன் உபாதைகளைப் பற்றிக் கூறிட,..
அவளைத் தீர்க்கமாகப் பார்த்த சுமதி…  “எத்தனை நாட்களாக இப்படி இருக்கு மிருதுளா?” என்று கேட்டுவிட்டு, மெல்ல அவளது மாதவிடாய் தேதியைப் பற்றியும் விசாரிக்க, அப்போதுதான் அவளுக்கும் அந்த விஷயம் உறைத்தது. அவளது மாதவிடாய் தேதி கடந்து பத்து நாட்கள் ஆகிவிட்டன, பொதுவாக அவளுக்குத் தேதிகள் தள்ளிப்போனதும் இல்லை.

​அந்த நொடி… ஒருவிதப் பதற்றமும், சொல்லத் தெரியாத பரவசமும் அவளுள் ஊடுருவியது. ரன்வீருடன் இணைந்த அந்த ஒற்றை இரவு அவளது நினைவில் வந்து போனது.

​”மிருதுளா… உன்கிட்ட தான் கேட்கிறேன், நீ எப்போ கடைசியா டேட் ஆன?” என்று சுமதி ஆர்வமாய் மீண்டும் வினவ, அவள் மெல்லிய குரலில், “அது வந்து அத்த… பத்து நாள் தள்ளிப் போயிருக்கு, ஆனா எனக்கு பீரியட்ஸ் வர்ற மாதிரி வலியும் இருக்கு” என்றாள் தயக்கத்துடன்.

​”அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லைம்மா… சில பேருக்குத் தொடக்கத்தில் அப்படித்தான் இருக்கும், நீ முதல்ல வீட்ல கிட் வச்சுச் செக் பண்ணிப் பாரு, மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்,” என்று உற்சாகமாக சொன்ன சுமதி, உடனே வேலைக்காரப் பெண்ணை அழைத்து கர்ப்பம் சோதிக்கும் கிட் வாங்கி வர சொல்லிவிட்டு, மிருதுளாவை அவளது அறைக்கு அனுப்பி வைத்தார்…

கர்ப்பத்தை சோதிக்கும் கிட் மிருதுளாவின் கையில் தான் இருந்தது,  உற்சாகமாக இருந்தாலும் ஒருவித பதட்டமும் அவளுக்குள் இருக்க, மூச்சை ஆழமாக இழுத்து விட்டுக்கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தவள், சில நிமிடங்களுக்குப் பிறகு  வெளியே வந்தபோது, அவளது முகம் அப்படி மலர்ந்து போயிருந்தது…

​ஆம், அந்த சோதனை கருவியில் தெரிந்த இரண்டு சிவப்பு கோடுகள் அவள் கர்ப்பத்தை உறுதிப்படுத்தியிருந்தன, எந்த ஒரு பெண்ணுக்கும் தான் ஒரு உயிரை சுமக்கிறோம் என்ற செய்தி சொல்ல முடியாத பேரின்பத்தைக் கொடுக்கும், மிருதுளாவிற்கும் அப்படித்தான் இருந்தது, தன் வயிற்றை மெல்ல வருடிப் பார்த்தவளின் இதழ்களில் புன்னகை அரும்பியது, விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

​’இதை என் வீர் கிட்ட முதல்ல சொல்லணும்!’ என்று அவள் மனம் துள்ளிக் குதிக்க, அந்த ஒரு நொடியில் அவர்களுக்குள் இருந்த பிணக்குகள், மௌனங்கள் எல்லாம் காற்றில் கரைந்து போயின. உடனே போனை கையில் எடுத்து ரன்வீரின் எண்ணிற்கு அழைக்கப் போனவள், அடுத்த கணமே அப்படியே உறைந்து நின்றாள்.

அந்தக் கணம் அவளது மனக்கண்ணில் அவள் தாத்தாவின் கடைசி நொடிகள் நிழற்படம் போல ஓடின, தன் தாத்தாவின் கழுத்தை ரன்வீர் கயிற்றால் நெறிப்பது போன்ற ஒரு பிம்பம் அவள் கண்முன் வந்து போக, அதிர்ச்சியில் அவளது கைபேசி தரையில் விழுந்தது…

​அவளது ஆழ்மனது ரன்வீர் நல்லவன் என்று சொல்லத் துடித்தாலும், அவள் அன்று பார்த்த காட்சி அவனை ஒரு குற்றவாளியாகவே சித்தரிக்க, அதே தருணத்தில் தான் ரன்வீர் அறைக்குள் நுழைந்தான், சித்தி சுமதி மூலமாக மிருதுளா கர்ப்பத்தை உறுதி செய்யும் கருவியைப் பயன்படுத்தப் போகிறாள் என்பதைத் தெரிந்து கொண்டு, ஒரு பெரும் எதிர்பார்ப்புடன் வந்திருந்தவன்,.. “மி.. மிருதுளா என்னாச்சு” என்று வினவ,.. அவனை வெறித்தவளோ.. “என்ன என்னாச்சு” என்றாள்…

அவனுக்கு சற்று எரிச்சல் எட்டி பார்த்தாலும், அதை காட்டாமல் அடக்கி கொண்டு, ஏதோ கேட்க வந்தவன், ​அவள் கையில் இருந்த அந்த சோதனைக் கருவியைக் கண்டு.. “அதை என்கிட்ட கொடு” என்று ஆர்வமாக வினவினான்.

​”எதுக்கு?” என்று அவள் அவனைக் காட்டமாகப் பார்க்க, “ப்ச்… கொடு மிருதுளா” என்று அவளது கையிலிருந்து அந்தக் கருவியை பிடுங்கிப் பார்த்தவன், அதில் தெரிந்த அந்த இரண்டு சிவப்பு கோடுகளைக் கண்டு முகம் ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தைப் போலப் பிரகாசித்தது…

​”மிருதுளா… நான் அப்பாவாகப் போறேனா?” என்று தாள முடியாத சந்தோஷத்துடன் அவன் கேட்க, அவளோ எந்த சலனமும் இல்லாமல் அவனை வெறித்துப் பார்த்துவிட்டு… ​”ம்ம்…” என்று மட்டும் தலையசைத்தவள், ​”என்ன கொடுமை பார்த்தீங்களா ரன்வீர்? என் குழந்தை ஒரு கொலைகாரனை அப்பான்னு கூப்பிடப் போகுது! இந்த உலகத்துக்கு வெளியே வந்து அது என்னவெல்லாம் கஷ்டப்படப் போகுதோ? அப்படியொரு கஷ்டத்தையெல்லாம் அனுபவிக்கிறதுக்கு இந்தக் குழந்தை உருவாகாமலேயே இருந்திருக்கலாம்!” என்று சொல்லி முடித்த அவளின் அந்த வார்த்தைகள், ரன்வீரின் முகத்தில் இருந்த அத்தனை சந்தோஷத்தையும் ஒரே விநாடியில் துடைத்து எறிந்தன, வானத்தில் பறந்து கொண்டிருந்தவனைப் பாதாளத்தில் தள்ளியது போல இருந்தது அவளது பேச்சு, தான் தந்தை ஆகப்போகிறோம் என்ற அந்த அழகான தருணத்தில், அதை ஒரு கொடுமை என்றும், தான் ஒரு கொலைகாரன் என்றும் அவள் சொன்னதைக் கேட்டு துடித்துப் போய்விட்டான் அவன்..

​அவனது கைகள் நடுங்கின. “எ.. என்ன வார்த்தை சொல்லிட்ட? இந்தக் குழந்தை நம்ம காதலோட அடையாளம்னு நினைச்சு நான் சந்தோஷப்பட்டேன். ஆனா நீ… இதை ஒரு சாபமா நினைக்கிறியா? என் குழந்தை என்னை அப்பான்னு கூப்பிடுறது உனக்கு அவ்வளவு அசிங்கமா இருக்கா?” என்று அவன் உடைந்த குரலில் கேட்க, அவளது மௌனம் அவனை மேலும் ரணமாக்கியது.

கோபமும் வேதனையும் ஒருசேர முட்ட, அந்தக் கருவியை மேஜை மேல் வைத்துவிட்டு அவளைச் சிவந்த விழிகளுடன் வெறித்தவன்.. ​”போதும்… எல்லாம் போதும்! இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது,” என்று இடிமுழக்க குரலில் சொன்னவன், “ஐம் லீவிங்” என்றான்.

​அவன் சொல்வது புரியாமல் மிருதுளா அவனை ஏறிட்டுப் பார்க்க.. அவனோ… ​”நம்மளால இனி ஒன்னா வாழ முடியாது, நான் செத்தா கூட நீ என்னைப்பற்றிப் புரிஞ்சுக்க மாட்ட. பெட்டர் நான் உன்னை விட்டு விலகிப் போறதுதான், உனக்கும் நிம்மதி, எனக்கும் நிம்மதி,” என்று அவன் விரக்தியின் உச்சத்துக்கே சென்று சொல்ல,

அவளுக்கோ அதிர்ச்சி, அவன் ஏதோ விபரீதமான முடிவை எடுத்து விட்டான் என்பதை உணர்ந்து, அவனை தடுக்கும் பொருட்டாய்,.. “உங்க குடும்பம்…” என்று ஏதோ சொல்ல வந்த அவளைப் பேச விடாமல் தடுத்தவன்.. ​”என் குடும்பத்தை எப்படி சமாளிக்கணும்னு எனக்குத் தெரியும், அதைப்பத்தி நீ எதுவும் கவலை பட தேவையில்லை,” என்று கர்ஜித்தவன், அவள் அருகில் வந்து அவளது விழிகளை நேருக்கு நேர் பார்த்து.. “இதுக்கு அப்புறம் உன் முகத்தை நான் பார்க்கவே கூடாதுன்னு அந்தத் தெய்வத்துகிட்ட வேண்டிக்கிறேன். நீயும் அதையே வேண்டிக்கோ. இன்னையோட நம்ம உறவு, காதல், பந்தம் எல்லாமே முடிஞ்சு போச்சு!”
​அவன் சொல்லி முடித்த அந்த விநாடி, அந்த அறையே நிசப்தத்தில் ஆழ்ந்தது…

அவளோ ஏதோ பேச எண்ணினாள், ஆனால் எதுவோ ஒன்று தடுத்தது, அவனோ மேலும்… “ஆனா ஒன்னு… நீ இந்த வீட்லதான் இருந்தாகணும் என் குழந்தை என் வீட்லதான் வளரணும், அதை யாராலயும் மாத்த முடியாது” என்று அழுத்தமாக உரைத்தவன்,.. “எ… என் குழந்தையைப் பத்திரமா பார்த்துக்கோ,” என்று தழுதழுத்த குரலில் சொல்லிவிட்டு, பின்னால்கூடத் திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென அறையை விட்டு வெளியேறிவிட, மிருதுளா அங்கேயே நிலைகுலைந்து அமர்ந்தாள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!